பொறுமை கடலினும் பெரிது.

 

பொறுமையுடையவன் எதைச் சாதிக்க வேண்டுமென நினைக்கிறானோ அதைச் சாதிப்பான் – பெஞ்சமின் ஃப்ராங்கிளின்.

ஒரு விதையை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறது. அதற்கு நீரூற்றுகிறோம். காத்திருக்கிறோம். அது மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது. கிளைகள் உருவாகின்றன. பூக்கள் உருவாகின்றன. கடைசியில் கனிதருகிறது !

இந்த பயணம் நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் பெரியது ! பொறுமையுடன் காத்திருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். பொறுமை கசப்பானது. ஆனால் அது தருகின்ற கனியோ ரொம்ப இனிப்பானது என்பார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில்.

ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்கும் போது வெற்றி உடனடி சாத்தியம் ஆவதில்லை. வேர் பிடிக்காமல் முளைக்கின்ற செடிகள் நிலைப்பதும் இல்லை. நதிகள் நடந்து கொண்டே இருக்கும். அதன் பாதையில் வசந்தங்களையும், துயரங்களையும் சந்திக்கும். அருவிகளில் விழும், தடைகளில் எழும், மௌனமாய் அழும் ஆனாலும் அதன் இலட்சியம் கடைசியில் நிறைவேறும். அதுவரை அதன் பயணம் பொறுமையாய் நடந்து கொண்டே இருக்கும்.

இந்த பொறுமைக்கு முதல் தேவை நம்பிக்கை. விடியும் எனும் நம்பிக்கையே இரவில் நம்மை நிம்மதியாய் தூங்க வைக்கிறது. முடியும் எனும் நம்பிக்கையே பயணங்களுக்கு நம்மைத் தூண்டுகிறது. நம்முடைய பொறுமை நம்பிக்கை இழக்கும் போது “பொன் முட்டையிடும் வாத்தை வெட்டிக் கொன்ற முட்டாளாய்” செயல்படத் துவங்குவோம்.

பொறுமை தனது பயணத்தை நிறுத்தும்போது தோல்வி நம்மை நோக்கி நடைபோடத் துவங்கும்.

பொறுமையின் உதாரணமாக சீனாவின் மூங்கில் செடியைச் சொல்வார்கள். சீன மூங்கிலைப் பயிரிட்டு தண்ணீர் ஊற்றுவார்கள். பருவங்கள் போகும் ஆனால் செடி வளரவே வளராது. ஒரு இன்ச் அளவு கூட வளராமல் அடம்பிடித்து அப்படியே இருக்கும். முழுசாய் நான்கு வருடங்கள் செடி அப்படியே இருக்கும். செடிக்குத் தண்ணீர் ஊற்றுபவர் பொறுமையுடன் அதை பராமரிக்க வேண்டும். நான்கு ஆண்டுகளாய் அவருக்கு சிலாகிக்கவோ, மகிழ்ச்சி கொண்டாடவோ எதுவுமே இருப்பதில்லை.

ஆனால் அதற்கு அடுத்த பருவத்தில் எல்லோரும் வியக்கும் வண்ணம் அந்த மூங்கில் வளரத் துவங்கும். அதுவும் எப்படி ? சட சடவெனும் அசுர வளர்ச்சி. ஒரே ஆண்டில் அது எட்டிப் பிடிக்கும் உயரம் எவ்வளவு தெரியுமா ? 80 அடிகள். நான்கு ஆண்டுகாலமாக அமைதியாக இருந்த செடி, எப்படி ஐந்தாவது ஆண்டில் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை எட்டுகிறது ?

ஆராய்ந்து பார்த்தால் ஆச்சரியம் தரும் ஒரு ரகசியம் இதில் இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். இயற்கையின் அற்புதம் என்றோ, கடவுள் படைப்பின் மகத்துவம் என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளுங்கள். முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில் நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன், என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரிக்கும். அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை !

பொறுமை உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. அவசரப் பட்டு முளைத்து, சடசடவென வீழ்ந்து விடாமல், நமது அடித்தளத்தை வலுவாக்கிக் கொள்ள பொறுமை நம்மைத் தூண்டுகிறது. தண்ணீரின் ஆழம் தெரியாமல் குதிப்பதோ, மலையின் ஆழம் தெரியாமல் ஏறச் செல்வதோ ஆபத்தில் முடியும் ! பாதியிலேயே பொறுமையைக் கழற்றி விட்டுவிடுபவர்கள் வெற்றியின் பதக்கங்களை அணிந்து கொள்வதில்லை.

அவசரம் நமக்கு சிப்பிகளைத் தரலாம், ஆனால் பொறுமையே முத்துகளைத் தரமுடியும். “நேரமும் பொறுமையுமே போராளிகளின் பலம்” எனும் லியோ டால்ஸ்டாயின் தத்துவ முத்து பொய் சொல்வதில்லை ! ஒருவனுடைய திறமைகளை வெற்றிகளாக உருமாற்றித் தருவது பொறுமையே ! பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு ! அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும் துடுப்பாய் பயன் தரும் !

பொறுமையான முயற்சியே வெற்றியின் அடிநாதம் என்பதை எல்லா சாதனையாளர்களும் ஒத்துக் கொள்வார்கள். யாருக்கும் வெற்றி என்பது கிறிஸ்மஸ் தாத்தாவின் பரிசுப் பொருள் போல வந்து சேர்வதில்லை.

வெற்றிக்கு 99 சதவீதம் பொறுமையான உழைப்பும், ஒரு சதவீதம் உந்துதலும் இருக்க வேண்டும் என்கிறார் ஐன்ஸ்டீன் ! வெற்றியையும், வெற்றியைக் கொண்டாடும் மனநிலையையும், ஆழமான குடும்ப உறவையும் தருகின்ற பொறுமை கடலினும் பெரிது தான் !

15 comments on “பொறுமை கடலினும் பெரிது.

  1. அற்புதமான உண்மையான கருத்துப் பரிமாறல்….!
    அழகான வசனநடை….!!
    வாழ்த்துக்கள் சேவி !!!

    Like

  2. வணக்கம்…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_20.html) சென்று பார்க்கவும்… நன்றி…

    Like

  3. Thala … Super !!!! arumai!!! Kalakitinga!!!
    Sorry ippo than padithen ….ivalo porumaiya padichi iruka koduthu 🙂
    Anyways unga katuraigal thirukural mathiri eppo venalum padikalam…
    Vazthukal!!

    Like

  4. அருமையான பதிவு . பொறுமை எல்லா மனித குணங்களிலும் உத்தம குணம்

    Like

  5. Pingback: பொறுமை : கருத்துவிளக்க முறையில் வள்ளுவரும் கபீரும் | இனம்

  6. Pingback: பொறுமை : கருத்துவிளக்க முறையில் வள்ளுவரும் கபீரும் | Inam

  7. Pingback: பொறுமை : கருத்துவிளக்க முறையில் வள்ளுவரும் கபீரும் – Inam

  8. பொருமை கடலினும் பெரிது – அருமையிலும் அருமை.

    Like

Leave a comment