காதலின்றி அமையாது உலகு.

imagesCALNHQ4U

காதல் எனும் வார்த்தைக்கு இருக்கும் வசீகரம் வேறெந்த வார்த்தைக்கும் இல்லை. மதங்களின் மதில் சுவர்களோ, சாதிகளின் சதுப்பு நிலங்களோ, இனங்களின் தினவுகளோ, மொழிகளின் வாள்வீச்சுகளோ காதலை வெட்டி எறிய முடிவதில்லை. வெட்டி எறிய காதல் என்பது காய்கறியல்ல, அது காற்று ! காற்றை வெட்டித் துண்டுகளாக்கும் கத்தியை மானுடம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை !

உலகின் எந்த இலக்கியங்களும் தோன்றும் முன் தமிழில் காதல் தோன்றிவிட்டது. பண்டைய இலக்கியங்களில் காதல் ஏக்கங்களாலும், தீண்டல்களாலும், வீரத்தின் சாரல்களாலும் நனைந்து கிடந்தது. அறத்தையும், மறத்தையும் உயிரெனக் கொண்டிருந்த தமிழரின் வாழ்க்கை காதல் எனும் சரட்டினால் கட்டிப் பிணைக்கப்பட்டிருந்தது ! அதைத் தான் அகம் பாடுகிறது.

இன்றைய காதலர்கள் தங்கள் காதலியரின் கண்களை டிஜிடல் ஓவியம் என்கின்றனர். சற்றே முந்தைய காதலர்கள் கண்களில் பூக்களைப் பார்த்தார்கள், மீன்களைப் பார்த்தார்கள். அதற்கும் முந்தைய காலத்தில் வேலைப் பார்த்தார்கள், வில்லைப் பார்த்தார்கள். எப்படியோ காலம் காலமாக பெண்களின் கண்களை அவர்கள் பார்க்கத் தவறவில்லை என்பது மட்டும் நமக்குப் புரிகிறது.

காதலின் கண்கள் புதைகுழிகள். அந்தக் கண்களில் இதயம் புதையுண்டு போகிறது. புதையுண்ட அந்தக் கண்களிலிருந்து நேரடியாக இதயத்தில் இறங்கிக் கொள்கின்றனர் காதலர்கள். சிலருக்கு அந்தக் கண்கள் பனிமலைகளாகின்றன, சிலருக்கு எரிமலைகளாகின்றன, சிலருக்கு ஆழ்கடலாகவும், சிலருக்கு தற்கொலை முனைகளாகவும் காட்சியளிக்கின்றன. எப்படியோ, காலம் காலமாக அந்தக் கண்களில் குதிக்க மட்டும் யாரும் தயங்குவதேயில்லை.

இன்றைக்கு காதல் என்பது ஒரு பொதுப்பெயராகிவிட்டது. அந்தக் காதல் எனும் உன்னதத்தின் மேலும் கீழும் ஒரு அடைமொழியை அமரவைத்து காதலின் அமரத்துவத்தை கேலிக்குரியதாக்கி விட்டது சமூகம். கள்ளக் காதல், போலிக் காதல், திருட்டுக் காதல் என்பதெல்லாம் காதலுக்கான அவமானங்கள். மோகத்தின் முனகல்களையும், மெத்தைத் தாகத்தின் பானங்களையும் காதல் எனும் குடுவைக்குள் அடைப்பதில் நியாயம் இல்லை என்பதை உண்மைக் காதலர்கள் ஒத்துக் கொள்வார்கள்.

உண்மைக் காதலில் காமத்தின் சாரல் உண்டு. ஆனால் அது அடைமழையாக மாறிக் கரைகளைக் கரைத்து விடுவதில்லை. காதல் என்பது கடலைத் தேடும் நதியைப் போன்றது. காமம் என்பது நதியைத் தேடிக் கரைதாண்டி ஓடும் கடலைப் போன்றது. நதி கடலில் கலப்பது இயல்பு, அது இரண்டறக் கலத்தல். கடல் கரைதாண்டுவது அழிவின் அழைப்பு. சுனாமியின் மிரட்டல்.

உண்மையான காதல் எப்போதுமே காதலர்களை வெற்றிகளை நோக்கியே பயணிக்க வைக்கும். வெற்றித் திலகமிட்டு போர்களம் அனுப்பும் சங்கக் காதலியர் அம்புகளுக்குள் தங்கள் அன்பைத் தோய்த்து அனுப்புகிறார்கள். அந்த ஊக்கம் அவர்களுக்கு புறமுதுகிடாத புஜங்களைப் பரிசளிக்கிறது. காதலியருக்காக தீயவற்றை விட்டு விடுவதும், நல்லவற்றைப் பற்றிக் கொள்வதுமாக உண்மைக் காதல் வசீகரிக்கும்.

தமிழரின் வாழ்வோடும், அடையாளத்தோடும், கலாச்சாரத்தோடும் காதல் செம்புலப் பெயல்நீர் போல் கலந்தே இருந்தது என்பதே வரலாறு. காதல் ரசம் சொட்டும் சிலைகளும், இலக்கியங்களும் அதன் சாட்சிகள். வேலன்டைன்ஸ் டே என்பது மேனாட்டு இறக்குமதி, காதல் விழா என்பது போலித்தனம் என கூச்சலிடுபவர்கள் உண்மையில் தமிழரின் வரலாறு அறியாதவர்கள்.

காதல் விழாவை இருபத்து எட்டு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடிய மன்னன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன். காமன் விழா என அவன் அந்த விழாவை காதலர்களுக்காகக் கொண்டாடினான். உலகின் முதல் காதல் விழா இதுவாகத் தான் இருக்க வேண்டும்.

காதல் விழாவை நடத்துவதற்கு மன்னன் கட்டளைகளைப் பிறப்பிப்பதை மணிமேகலையும் கூறுகிறது. மக்கள் காதலில் களித்திருக்கட்டும், பிரிவினைகள் மறந்து ஆனந்தமாய் இருக்கட்டும், நல்ல பூங்காக்களில் அவர்கள் இருக்கட்டும், காதலர்க்கு இடையூறு வராமல் இருக்க காவல் ஏற்பாடுகளையும் செய்யுங்கள் என்கிறார் மன்னன்.

இப்படி காதல் விழாக்களை முதலில் முன்னின்று நடத்தியது தமிழ் இனமே என்பதை காதலுடன் சொல்லும் அத்தனை தகுதியும் நமக்கு உண்டு. ஆனால் அது ஏதோ இறக்குமதி விழா என்பது போல சாயம் பூசுபவர்களையும், அதை வியாபார உத்திக்காகப் பயன்படுத்தும் வணிக மூளைகளையும் காதலர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காதல் என்பது காற்றைப் போன்றது, அது எல்லா நுரையீரல்களின் கதவுகளையும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தட்டுகிறது. சிலர் அந்தச் சத்தத்தைக் கேட்பதில்லை. சிலர் கேட்டாலும் நிராகரித்து விடுகிறார்கள். சிலர் கேட்காத சத்தத்தைக் கூட கேட்டதாய்க் கருதிக் கொள்கிறார்கள். சிலர் அந்த மெல்லிய சத்தத்தைக் கேட்டு கதவைத் திறந்து காதலை உள்ளிழுக்கிறார்கள். எது எப்படியோ காற்று நுரையீரலையும், காதல் இதயங்களையும் தட்டுவதை நிறுத்துவதே இல்லை.

காதல் என்பது பூவைப் போன்றது. காதலியரை பூவோடு ஒப்பீடு செய்யாத காதலர்கள் இருக்க மாட்டார்கள். மலரினும் மெல்லிய இதழ்கள் காதலியின் உதடுகள் என்பவர்களே காதலில் கரைகிறார்கள். பூக்கள் பூக்காமல் இருப்பதில்லை. சில பூக்கள் பூஜையறைக்குச் செல்கின்றன, சில கூந்தல்களில் குடியேறுகின்றன, சில கவனிக்கப்படாமல் கருகிவிடுகின்றன. எது எப்படியோ பூக்கள் பூப்பதை நிறுத்துவதேயில்லை.

காற்றின் வெற்றி அதன் இருப்பில் தான் இருக்கிறது. அதை நாம் பார்க்கவில்லை என்பதாலோ, சுவாசிக்கவில்லை என்பதாலோ அது தோல்வியடைந்ததாய் அர்த்தமில்லை. பூவின் வெற்றி பூப்பதில் இருக்கிறது. பறிக்கவில்லை என்பதாலோ, சூடவில்லை என்பதாலோ பூ தோற்று விட்டதாய் அர்த்தமில்லை ! அது தான் காதலின் சிறப்பு ! காதல் தோன்றுவதே காதலின் வெற்றி !

காற்றின் அலைகளில் இசையாய்த் திரியும் ஒலி இழைகளை வானொலியின் சரியான அலைவரிசை இழுத்து எடுப்பது போல, காதலின் வாசனையை சரியான நாசிகள் நுகர்ந்து கொண்கின்றன. அவை பின்னர் கரம் கோத்து, உயிர்கோத்துக் கொள்கின்றன.

காதலியுங்கள் ! காதல் என்பது ஒரு நந்தவனம் போன்றது. காதலில் நடப்பவர்கள் நந்தவனத்தில் நடக்கிறார்கள். ஒரு முறை நடந்த திருப்தி இதயத்தின் தாழ்வாரங்களில் எப்போதும் சிறகடித்துக் கொண்டே இருக்கும். அது வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி.

காதலியுங்கள் ! காதல் என்பது வழியில் தென்படும் பூக்களையெல்லாம் முட்டிச் செல்லும் வண்டு அல்ல. ஒற்றைப் பூவை மட்டுமே தாங்கிப் பிடிக்கும் தண்டு. நீயின்றி நானில்லை எனும் நிலமையில் இணைந்திருக்கும் நிலை.

காதலியுங்கள் ! காதல் உங்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும். உங்கள் உயிர் உங்கள் உடலை விட்டு வெளியேறி உங்களை இன்னோர் உயிராய் மாற்றி வைக்கும். கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை இந்தக் காதலில் மட்டுமே சாத்தியம். நீங்கள் யார் என்பதையும் உங்கள் பலங்கள், பலவீனங்கள் அனைத்தையும் அதுதான் உங்களுக்குக் கற்றுத் தரும்.

காதலியுங்கள் ! காதல் வாழ்க்கையை அழகாக்கும். வாழ்க்கையை அர்த்தப்படுத்தும். வாழ்க்கையை வலுவாக்கும். அது பாதங்களுக்குக் கீழே பனித்துளியாக உங்கள் பயணங்களை கவிதையாக்கும். வெட்கத்தின் மூச்சுகளுடன் கனவுகளை காவியமாக்கும்.

காதலியுங்கள். காதல் என்றால் என்ன என்பதை அறிந்தபின் காதலியுங்கள். சீண்டலின் சிற்றின்பங்களும், மோகத்தின் முனகல்களும், மெத்தைத் தேடலின் முனைப்புகளும், விலக்கப்பட்ட கனிகளின் சுவைகளும் காதல் என கற்பித்துக் கொள்ளாதீர்கள்.

அரளிப்பூவுக்கு மல்லி என பெயர்சூட்டிக் கொள்ளலாம். ஆனால், அரளிப்பூவில் மல்லியின் வாசத்தை நுகர்வது இயலாது.

காதலிப்போருக்கும், காதலிக்கப் படுவோருக்கும், இனிய காதல் வாழ்த்துகள்.

சேவியர்
வெற்றிமணி, ஜெர்மனி

சிறுகதை : ஒரு குரலின் கதை

Nina Davuluri

 

கிசுகிசுப்பாய் காதில் ஒலித்த குரலில் திடுக்கிட்டு விழித்தாள் மாலதி.

மிகவும் தெளிவாகக் கேட்டது அந்தக் குரல். உள்ளுக்குள் பயமும், பதட்டமும் சூழ்ந்து கொள்ள படுக்கையில் அமர்ந்து சுற்று முற்றும் உற்றுப் பார்த்தாள். யாரும் இல்லை. சில நாட்களாகவே இந்தக் குரல் மாலதியை நிலைகுலைய வைத்துக் கொண்டிருக்கிறது.

சுற்றிலும் நிலவும் அமானுஷ்ய அமைதியைக் கிழித்துக் கொண்டு சுவரில் தொங்கிய கடிகாரம் டிக்..டிக் என தனது இதயத் துடிப்பை அறைக்கு அறிவித்துக் கொண்டிருந்தது. மாலதி நிமிர்ந்து கடிகாரத்தைப் பார்த்தாள் மணி இரண்டு.

அது விக்கி காதலுடன் பரிசளித்த கடிகாரம். உள்ளுக்குள் இரண்டு இதயங்கள் ஒன்றுக்கொன்று கைகோர்த்துக் கொள்ள இரண்டு பறவைகள் இருபுறமும் நின்று வேடிக்கை பார்ப்பது போன்ற ஒரு அழகிய கடிகாரம். அந்தக் கடிகாரத்தைப் பார்த்தால் மாலதியின் மனதுக்குள் காட்சிகள் கவிதைகளாய் விரியும். ஆனால் இப்போது அந்தக் கடிகாரத்தின் சத்தமே ஒருவித திகிலை ஏற்படுத்துகிறது.

மெல்லிய இருட்டில் சுவரைத் துழாவி சுவிட்சைப் போட்டாள். அறுசுவை உணவைக் கண்ட ஏழையின் விழிகளைப் போல அறை சட்டென இருட்டைத் துரத்தி வெளிச்சத்துக்குள் வந்தது.

கதவு சரியாக மூடியிருக்கிறதா என ஒருமுறை இழுத்துப் பார்த்தாள். சன்னலருகே வந்து திரையை மெல்லமாய் விலக்கி வெளியே பார்த்தாள். எட்டாவது மாடியில் இருக்கிறோம் என்பதை வெளியே, விளக்குகளை அணைக்காமல் தூங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா உணர்த்தியது.

கீழே வெகு தூரத்தில் சீராகக் கத்தரிக்கப்பட்ட புல்லும், வரிசையாய் நடப்பட்டு அளவாய் வெட்டப்பட்டிருந்த செடிகளும் அந்த சிறு சாலையில் நின்றிருந்த மின்விளக்கு வெளிச்சத்தில் கொஞ்சமாய் தெரிந்தன. மாலை நேரங்களில் உற்சாகத்தை ஊற்றித் தரும் அந்த தோட்டம், இப்போது ஏதோ மர்மங்களின் கூட்டம் போல தோன்றியது மாலதிக்கு. ஒரே இடம், ஒரே காட்சி ஆனாலும் சூழலைப் பொறுத்து அதன் தன்மை மாறுபடுகிறதே என உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள்.

மாலதியின் இதயத் துடிப்பு இன்னும் சீரடையவில்லை. சுற்றிலும் பார்த்தாள். படுக்கை கசங்கிப் போய், தலையணை கட்டிலை விட்டு விழுந்து விடலாமா என யோசித்துக் கொண்டிருந்தது. அந்தக் குளிரிலும் நெற்றியில் மெலிதாய் வியர்ப்பதாய் உணர்ந்தாள் மாலதி.

விளக்கை அணைக்காமல் படுக்கையில் இரண்டு தலையணைகளை சாய்வாய் வைத்து சாய்ந்து அமர்ந்தாள்.

இப்போது இந்தியாவில் மணி என்ன ? மதியம் பன்னிரண்டரை தானே விக்கியிடம் பேசலாமா ? இந்த நேரத்தில் தூங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்பானோ ? மாலதியின் மனதுக்குள் கேள்விகள் உருண்டன.

நேற்று முந்தினமும் இப்படித் தான் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்தபோது விக்கி பதட்டமடைந்தான். அவன் எப்போதுமே இப்படித் தான். முதலில் பதட்டப்படுவான், பிறகு கோபப்படுவான், பிறகு அட்வைஸ் செய்ய ஆரம்பித்து விடுவான்.

அவனுடைய கோபத்தைக் கூட ரசிக்கலாம், ஆனால் அவன் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டால் அவ்வளவு தான். நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருப்பான். தேவையில்லாமல் எதையாவது நினைக்காதே. நல்லா மெடிடேட் பண்ணு. தூங்கும் போ சூடா ஒரு கப் பால் குடி .. இப்படி ஏதாவது இண்டர் நெட்ல படிக்கிறதை எல்லாம் சொல்லிக் கொண்டே இருப்பான்.

பேச்சு.. பேச்சு பேச்சு.. இது தான் விக்கியின் வாழ்வின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. அதுதான் மாலதி விக்கியின் மேல் காதல் வயப்படவும் காரணமாய் இருந்தது.

அலுவலகத்தின் காண்டீனில் தான் முதன் முதலில் விக்கியைப் பார்த்தாள். சட்டென மனதுக்குள் மின்னல் அடிக்கவுமில்லை, மழை பொழியவும் இல்லை. கவிஞர்கள் பேனா உதறி எழுதும் பரவசம் ஏதும் பற்றிக் கொள்ளவும் இல்லை.

“இவன் என்னோட பிரண்ட் விக்கி” என தோழி கல்பனா அறிமுகப் படுத்திய போது “ஹாய்.. “ என மெல்லமாய் குரல்களைப் பரிமாறிக் கொண்டதோடு சரி.

அதன் பின் தனியே காண்டீனுக்குள் வர நேர்ந்த ஒரு நாள் அவனாகவே வந்து எதிரே அமர்ந்தான்.

‘ஹாய்… நீங்க கல்பனாவோட பிரண்ட் தானே… சாரி… பர்காட் யவர் நேம்… “ இழுத்தான்.

“மாலதி” மாலதி மெதுவாய் புன்னகைத்தாள்.

“உட்காரலாமா ? இல்லே யாருக்காச்சும் வெயிட் பண்றீங்களா ?” கேள்வி கேட்டு மாலதி பதில் சொல்லும் முன் அவனே முந்திக் கொண்டான்.

“கேட்காமலேயே வந்து உட்கார்ந்துட்டு, சாப்பிடவும் ஆரம்பிச்சுட்டு .. உட்காரலாமான்னு கேக்கறியே.. உட்காரக் கூடாதுன்னா எழுந்து போயிடவா போறே… “ அப்படித் தானே யோசிக்கிறீங்க. சிரித்தான் விக்கி.

“இல்லை இல்லை….” மாலதி சிரிப்புடன் மறுத்தாள்.

“அப்புறம் ? நீங்க எந்த புராஜக்ட் ல இருக்கீங்க ?..” விக்கி ஆரம்பித்தான்.

“நான் நேஷனல் ஹெல்த் புராஜக்ட் ல டெஸ்டிங் டீம்ல இருக்கேன்..”

“ஓ.. போச்சுடா… நான் அதே புராஜக்ட் – ல டெவலப்மெண்ட் டீம் ல இருக்கேன். இனிமே நாம அடிக்கடி சண்டை போட வேண்டியது தான். வேற வழியே இல்லை” விக்கி சரளமாய் பேசத் துவங்கினான்.

சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டே இருந்தவன் சட்டென எழுந்து “சாரி…. கொஞ்சம் வேலை இருக்கு..

அடுத்த முறை சந்திப்போமா மாதவி…” என புன்னகைத்தான்.

“நான் மாதவி இல்லை.. மாலதி..” மாலதி சிரித்தாள். அவனும் சிரித்துக் கொண்டே ஒரு சின்ன “சாரி…” சொல்லி விடைபெற்றான்.

அவன் விடை பெறவும் கல்பனா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

‘என்ன மாலதி… பையன் உன்னையே சுத்தி சுத்தி வரான் போல..” கல்பனா கண்ணடித்தாள்.

“இல்லையே… எதேச்சையா சந்திச்சுகிட்டோம்…” மாலதி தோள் குலுக்கினாள்.

“எனக்கென்னவோ அப்படித் தெரியலடி.. மூச்சுக்கு முன்னூறு தரம் மாலதி மாலதி ன்னு உன்னைப் பத்தி கேட்டுக் கேட்டு என் உயிரை வாங்கறான்…” கல்பனா சொல்ல மாலதி விழிகளை விரித்தாள்.

“அடப்பாவி… ஒண்ணுமே தெரியாதது மாதிரி.. சாரி பேரு மறந்துட்டேன் என்றெல்லாம் கதையடித்தானே… வேண்டுமென்றே தான் விளையாடுகிறாயா ” :மாலதி உள்ளுக்குள் சிரித்தாள்.

அந்தச் சந்திப்பு அடிக்கடி நடந்தது.

எதேச்சையாய் நடக்கும் சந்திப்புகள் கூட விக்கி திட்டமிட்டே நடத்துவதாக மாலதி நினைத்தாள்.

பேசிக்கொள்ளவும், கேட்டுக் கொள்ளவும் ஒரு நண்பன் இருப்பது யாருக்குத் தான் பிடிக்காது.

இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள்.

நெருங்கிய நட்புகள் காதலில் முடிவதை இன்று நேற்றா பார்க்கிறோம் ? இருவருமே காதல் பறவைகளானார்கள்.

“உன்னோட வாழ்க்கை இலட்சியம் என்னன்னு நினைக்கிறே ? “ ஒரு மாலைப் பொழுதில் மாலதி கேட்டாள்

“உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறது தான் இப்போதைய இலட்சியம். அதன்பிறகு உள்ள இலட்சியங்களைச் சொன்னால் நீ தேவையில்லாமல் வெட்கப்படுவாய்..” கொக்கி வைத்துக் கண்ணடித்தான் விக்கி.

மாலதி இமைகளிலும் வெட்கப் பட்டாள்.

சரி.. உன்னோட இலட்சியம் என்ன ? விக்கி கேட்டான்.

அமெரிக்கா போணும்… நாம இரண்டு பேரும் கொஞ்ச வருஷம் அங்கே இருக்கணும். அது தான் என்னோட ஒரே இலட்சியம் – மாலதி சொல்ல விக்கி சிரித்தான்.

அடிப்பாவி.. இதையெல்லாம் ஒரு இலட்சியம்ன்னு சொல்றே ?

இல்ல விக்கி. இது என்னோட மனசுல ரொம்ப வருஷமா இருக்கிற ஒரு வெறி. நானும் அமெரிக்கா போயி வரணும். வந்து சிலர் கிட்டே நான் யாருன்னு காட்டவேண்டியிருக்கு.

– மாலதி சீரியஸாய் சொன்னாள். அவள் மனதுக்குள் ஏதோ நினைவுகள் ஓடுவதாய் விக்கி உணர்ந்து
சிரித்தான்.

சரி.. சரி… டென்ஷன் ஆகாதே. நீ கண்டிப்பா அமெரிக்கா போகலாம்.

நாட்களும் வாரங்களும் மாதங்களும் ஓடின…

இருவருடைய காதலும் வீடுகளுக்குத் தெரிவிக்கப் பட்டது.

கைநிறைய சம்பாதிக்கும் பெண்ணை பையன் வீட்டாருக்கும், கைநிறைய சம்பாதிக்கும் பையனை பெண் வீட்டாருக்கும் பிடித்துப் போய் விட்டது.

ஏதோ முன் ஜென்ம புண்ணியமாக இருக்கலாம். இருவருக்கும் சாதி வேற்றுமையோ, சாதக வேற்றுமையோ ஏதும் இல்லை. இல்லையேல் கம்ப்யூட்டர் காலம் கூட இவர்கள் காதலை கைகழுவியிருக்கக் கூடும்.

காதல் திருமணத்தில் முடிந்தது. திரைப்படங்களில் வரும் கடைசிக் காட்சி போல ஒரு “சுபம்” போடப்பட்டதாய் இரண்டு வீட்டு பெருசுகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

“விக்கி… நாள் தள்ளிட்டே போகுது… நான் பிரக்னண்ட் ஆயிட்டேனா தெரியல” திருமணம் முடிந்து சில மாதங்கள் கடந்த ஒரு காலைப் பொழுதில் விக்கியின் காது கடித்தாள் அவள்.

“வாவ்… என்ன சொல்றே ? நிஜமாவா ? அதுக்குள்ள என்னை அப்பாவாக்கிட்டியா ? நீ அம்மாவாயிட்டியா ? அடிப்பாவி… “ விக்கி குறும்பு கலந்த ஆனந்தம் கொப்பளிக்க கண்விரித்தான்.

சரி.. வா… இன்னிக்கே ஆஸ்பிட்டல் போயி கன்ஃபம் பண்ணிக்கலாம். விக்கி பரபரத்தான்.

மக்கு.. இதுக்கெல்லாமா ஆஸ்பிட்டல் போவாங்க. மெடிக்கல் ஸ்டோர்ல போயி ஒரு பிரக்னன்ஸி டெஸ்டர் வாங்கிக்கலாம். அதை வெச்சே கண்டுபிடிச்சுடலாம். கன்ஃபம் ஆச்சுன்னா ஆஸ்பிட்டல் போகலாம். மாலதி
உற்சாகமும் வெட்கமும் கலந்து சொன்னாள்.

அதுவும் உறுதியாகி விட்டது.

விக்கிக்கு ஆனந்தம் பிடிபடவில்லை. மாலதியும் சிலிர்த்தாள். இருவரும் கோயிலுக்கும், ஹோட்டலுக்கும், ஆஸ்பிட்டலுக்கும் கைகோர்த்து அலைந்தனர்.

இந்த ஆனந்தத்தின் எதிரே ஒரு சாத்தானாய் வந்து நின்றது அந்த அறிவிப்பு.

“மாலதி… உனக்கு அமெரிக்கா போக வாய்ப்பு வந்திருக்கு…” மானேஜர் கூப்பிட்டு சொன்னார்.

மாலதி உற்சாகத்தில் குதித்தாள். ஆஹா.. அமெரிக்காவா ? வாழ்க்கை இலட்சியமாயிற்றே…

“எப்போ போகணும் சார்.. எவ்ளோ நாளைக்கு ?” மாலதி பரபரப்பாய் கேட்டாள்.

“உடனே போகணும், நீ ஓ.க்கே சொன்னால் எல். 1 விசா பிராசஸ் பண்றேன். குறைந்த பட்சம் ஆறு மாதம் அங்கே இருக்க வேண்டும்.” அவர் சொல்லச் சொல்ல மாலதி உற்சாகமானாள்.

“கண்டிப்பா போறேன் சார்” மாலதி பரவசமானாள்.

அதே உற்சாகத்தை உடனடியாக விக்கியிடம் போனில் கொட்டியபோது விக்கிக்கு தேள் கொட்டியது போல இருந்தது.

“என்ன மாலதி ? அமெரிக்காவா ? யூ ஆர் பிரக்னண்ட்.. நீ இப்போ டிராவல் பண்ணக் கூடாது தெரியாதா ? ஏன் ஒத்துகிட்டே ?” விக்கி பதட்டப்பட்டான்.

மாலதிக்கு சுருக்கென்றது. அப்போது தான், தான் கர்ப்பமாய் இருக்கிறோம் என்பதும், முதல் மூன்று மாதங்கள் விமானப் பயணம் செல்லக் கூடாது என்பதும் உறைத்தது.

“என்ன மாலதி… மானேஜர் கிட்டே முடியாதுன்னு சொல்லிடு. அடுத்த தடவை போகலாம்ன்னு சொல்லு…” விக்கி அவசரமாய் சொன்னான்.

மாலதி மறுமுனையில் அமைதியானாள். அவளுடைய மனம் குழம்பியது. முதன் முறையாக தான் கர்ப்பமடைந்திருப்பதற்காக வருந்தினாள். ஏதோ ஓர் தேவையற்ற சுமை தனது வயிற்றில் வந்து தங்கி
தனது வாழ்க்கை இலட்சியத்தை முடக்கி வைத்ததாக உணர்ந்தாள்.

அவளுடைய மனக்கண்ணில் தான் அமெரிக்கா செல்வதும், நண்பர்கள், உறவினர்கள் முன்னால் பெருமையடிப்பதும் என கனவுகள் மாறி மாறி வந்தன.

“மாலதி… மாலதி….” மறுமுனையில் விக்கி அழைத்துக் கொண்டிருந்தான்.

“மாலதி… வீட்டுக்கு வந்தப்புறம் பேசிக்கலாம். இப்போ அதைப்பற்றியெல்லாம் ஒண்ணும் நினைக்காதே. வீட்ல வந்து எல்லாத்தையும் பொறுமையா யோசிக்கலாம்” விக்கி சொல்ல மெதுவாய் உம் கொட்டினாள்
மாலதி.

ஆனால் அவளுக்குள் ஒரு உறுதி உருவாகியிருந்தது.

“இந்தக் கர்ப்பத்தைக் கலைத்தேயாக வேண்டும்”

***

“அம்மா… ஏம்மா என்னைக் கொன்னீங்க”

மீண்டும் கிசுகிசுப்பாய் காதில் குரல் ஒலிக்க மாலதி சட்டென விழித்தாள். அறை வெளிச்சத்தால் நிரம்பியிருந்தது. கடிகாரம் நான்கு மணி என்றது.

மாலதி அமெரிக்காவுக்கு வந்து இரண்டு வாரங்களாகின்றன. இந்த இரண்டு வாரங்களும் இப்படித்தான்.

குழந்தையின் குரல் ஒன்று அவளை உலுக்கி எழுப்புவதும், இரவில் தூக்கம் வராமல் புரண்டு படுப்பதும் அவளது வாடிக்கையாகிவிட்டன.

இடையிடையே தூங்கிப் போனாலும் கனவில் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக ஓடி வந்தனர். இவள் ஆசையாய
தூக்கினால் நழுவி கீழே விழுந்தனர். விழும் குழந்தைகளும் முடிவு காண முடியாத அகல பாதாளத்தை நோக்கி அலறிக்கொண்டு விழுந்து கொண்டே இருந்தனர்.

ஒரு கனவில் தலைவிரி கோலமாய் ஓர் தாய் தனக்கு பத்து ஆண்டுகளாய் குழந்தையே இல்லை எனவும், உன்னை மாதிரி கொலைகாரிக்குத் தான் குழந்தை உருவாகுது எனக்கு ஆகலையே எனவும் அவளைப்
பிடித்து உலுக்கினாள்.

ஒரு கனவில் விக்கி குழந்தை ஒன்றுடன் ஆசையாய் விளையாடிக் கொண்டிருக்கையில் இவள் கத்தியுடன் வந்து குழந்தையைக் கொல்லப் போனாள்”

எல்லா கனவுகளும் திடுக்கிடலுடன் கூடிய விழிப்பையும், பின் தூக்கம் அற்ற இரவையுமே அவளுக்குக் கொடுத்தன.

கையை நீட்டி மெத்தையின் அடியில் வைத்திருந்த செல்போனை எடுத்தாள். விக்கி மறு முனையில் பதட்டமானான்.

“என்ன மாலதி.. தூங்கலையா.. இன்னிக்கும் கனவா ?”

“ஆமா விக்கி இந்த மன அழுத்தத்தை என்னால தாங்க முடியும்ன்னு தோணலை. உடனே எனக்கு இந்தியா வரணும். உங்க எல்லாரையும் பாக்கணும்… மாலதி விசும்பினாள் “

“கவலைப்படாதே மாலதி. நானும் அமெரிக்கா வர முயற்சி பண்ணிட்டிருக்கேன். கொஞ்சம் பொறுமையா இரு. நடந்ததையே நினைச்சு சும்மா சும்மா குற்ற உணர்ச்சியை வளத்துக்காதே. நடந்தது நடந்துபோச்சு.. அதைப் பற்றி யோசிக்காதே. எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ” விக்கியின் சமாதானங்கள் மாலதியை சாந்தப்படுத்தவில்லை.

அவளுடைய மனதுக்குள் தான் ஒரு கொலைகாரி என்பது போன்ற சிந்தனை ஆழமாய் படிந்து விட்டிருந்தது. ஆனந்தமான ஒரு வாழ்க்கையை வெறும் பந்தாவுக்காக அழித்துவிட்டது போல
தோன்றியது அவளுக்கு.

எது முக்கியம் என்பதை வெகு தாமதமாய் உணர்வது போலவும், விக்கியையும், இரண்டு குடும்ப பெரியவர்களையும் தேவையற்ற கவலைக்குள் அமிழ்த்தியது போலவும் உணர்ந்தாள்.

“மாலதி… இதுல பயப்பட ஒண்ணும் இல்லை. நீ செய்ததுல தப்பு ஏதும் இல்லேன்னு நீ நம்பினாலே போதும். நீ இங்கே வந்தப்புறம் நாம ஒரு நல்ல டாக்டரைப் பார்த்து பேசலாம். எல்லாம்
சரியாயிடும்… “ மறுமுனையில் விக்கி பேசிக் கொண்டிருந்தான்.

மாலதியின் கண்கள் சன்னலையே வெறித்துக் கொண்டிருந்தன. மனதுக்குள் மீண்டும் மீண்டும் விக்கிரமாதித்யனின் வேதாளமாய் குற்ற உணர்ச்சி தொங்கியது.

என்னை மன்னித்துவிடு விக்கி… இந்த குற்ற உணர்ச்சியுடன் இனிமேல் என்னால் வாழமுடியாது.

மனதுக்குள் மாலதி திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டு செல்போனை அணைத்தாள்.

நேராகச் சென்று சன்னலைத் திறந்தாள்.

தூரத்தில் எந்தத் துயரத்தையும் முதலில் பார்த்துவிடும் முனைப்புடன் சூரியன் சிவப்பாய் எழுந்தான்.

 

 

சேவியர்

இறைவன் படைப்பில் தாய்.

qw

ஆண் ஒருவரின் உடலில் இருந்து உயிரைத் தனியே எடுத்தால் அவன் பிணமாவான். பெண் ஒருத்தியின் உடலிலிருந்து உயிரைப் பிரித்து எடுத்தால் அவள் தாயாவாள் !

தாய் எனும் உறவு, எந்த விதமான மகத்துவத்தோடும் ஒப்பிட முடியாத உறவு. தன்னலத்தின் ஒரு சிறு துரும்பு கூட இல்லாத தூய்மையைச் சொல்ல வேண்டுமெனில் தாயன்பைத் தான் சொல்ல வேண்டும். எல்லோருடைய மனதிலும் அம்மாவைப் பற்றிய பிம்பங்களும், பிரமிப்புகளும், நினைவுகளில் நீங்காமல் இருக்கும். பெரும்பாலான நினைவுகளை புரட்டிப் பார்த்தால் அவை பால்ய காலத்து நினைவுகளாகவே இருக்கும்.

மழலைக் காலம் தான் அன்னைக்கும், குழந்தைக்கும் இடையேயான தூய்மையான உறவின் முகவுரையை எழுதுகிறது. இறைவனின் படைப்பில் குறை என்று எதுவுமே இல்லை. பச்சைக் குழந்தை பால்குடிக்கத் துவங்கும் போது அந்தக் குழந்தையால் சுமார் 15 இன்ச் தூரம் தான் பார்க்க முடியுமாம். அது ஒரு தாயின் மார்புக்கும், முகத்துக்கும் இடைப்பட்ட தூரம். பாலும், பாசமும் ஒரே நேரத்தில் குழந்தை அருந்த இறைவன் செய்த விந்தை இது என்றால் மிகையில்லை.

“தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்” என்கிறது பைபிள். இறைவனின் அன்பை ஒப்பீடு செய்ய ஒரு தாயின் அன்பை இறைவனே தேர்ந்தெடுக்கிறார் என்றால், அவர் தாயன்பை உலகின் உன்னத அன்பாய் நிலைநாட்டியிருக்கிறார் என்பது தானே பொருள்.

அன்னையைப் பற்றிப் பேசும்போது ஒரு பிரபலமான யூதப் பழமொழியைச் சொல்வார்கள். “கடவுளால் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இருக்க முடியாது என்பதனால் தான் அன்னையைப் படைத்தார்” என்று ! கடவுளின் பிரதிபலிப்பாகவும், பிம்பமாகவுமே அன்னை நமக்கெல்லாம் தரப்பட்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

இந்த உலகம் தொழில்நுட்பத்தினாலோ, அழகினாலோ, வளங்களினாலோ கட்டி எழுப்பப்படவில்லை. அது அன்பினால் கட்டி எழுப்பப் படுகிறது. அன்பை நீக்கி விட்டுப் பார்த்தால் உலகம் வெறுமையின் கூடாரமே ! ஒரு மனிதனின் வாழ்நாளை அலசி ஆராய்ந்து பாருங்கள். அவன் நல்ல மனிதனாய் வாழ்கிறானா இல்லையா என்பதை அவன் தனது தாயை நேசிக்கிறானா இல்லையா என்பதை வைத்து அளவிடலாம். தாயை நேசிக்காத மனிதனால் மற்ற எதையும் ஆத்மார்த்தமாய் நேசிக்க முடியாது. தாயின் நேசத்தைப் பெறாதவர்களே பிற்காலத்தின் நிம்மதியற்ற, வரையறயற்ற, ஒழுங்கீனமான வாழ்க்கைக்குள் செல்கின்றனர். அன்னை தான் ஒரு குழந்தைக்கு சரியான வழியையும், வாழ்வையும் காட்ட முடியும்.

உங்கள் பெற்றோர் மீது அன்பும், மரியாதையும் வையுங்கள். அவர்களை முதிர் வயதிலும் பாதுகாத்து நேசியுங்கள். என்கிறது இஸ்லாமிய புனித நூல் குரான். ஒரு தாய் குழந்தையை நேசிக்கும் அதே நேசத்தில் தேசத்தையும் நேசியுங்கள் என்கிறார் புத்தர். கணக்கற்ற தெய்வங்களை அன்னையாய் பாவித்து அன்னைக்கு அதிகபட்ச மரியாதை செலுத்துகிறது இந்து மதம். தாயை நேசிக்க வேண்டாமெனச் சொல்லும் மதங்கள் இல்லை ! தாயின்றிப் பிறந்த மனிதர்களும் இல்லை.

உலகையெல்லாம் உருக உருக நேசித்து விட்டு, தனது தாயை முதியோர் இல்லம் அனுப்புபவர்கள் போலித்தனத்தின் பிம்பங்கள். அவர்கள் வெள்ளியடிக்கப்பட கல்லறைகள். வெறும் பெருமைக்காகத் திரிபவர்கள். அவர்கள் அன்பின் அரிச்சுவடி கூடத் தெரியாதவர்கள். இன்று உலகெங்கும் முதியோர் இல்லங்கள் புற்றீசல் போலக் கிளம்பி விட்டன. மாதம் தோறும் பணத்தைக் கட்டி கால்நடைகளைப் பராமரிக்க குத்தகைக்கு விடுவதைப் போல மனிதர்கள் செயல்படுகிறார்கள்.

தன் குழந்தையை அரை நொடி கூட இடுப்பை விட்டு இறக்கிவிட மனமில்லாமல் சுமந்து சுமந்து மகிழ்வார்கள் அன்னையர். நிலவைக் காட்டியும், நிலத்தைக் காட்டியும் சோறூட்டுவார்கள். இடுப்பில் சுமந்து கொண்டு மைல்கணக்காய் நடந்து திரிவார்கள். வினாடி நேரமும் விடாமல் நெஞ்சில் சுமந்து திரிவார்கள். அத்தகைய அன்னையரைக் கடைசியில் மகன் முதியோர் இல்லங்களில் தள்ளி விடுகிறான்.

முதியோர் இல்லங்களின் மூலைகளில் தன் மகனின் வருகைக்காக காத்திருந்து காத்திருந்து ஒரு முறை கூட எட்டிப் பார்க்காத மகனின் நினைவுகளுடன் ஏக்கத்தில் இறந்து போகும் அன்னையர் ஏராளம் ஏராளம். முதுமை என்பது இறைவனின் ஆசீர்வாதத்தின் அடையாளம். முதுமை வரை வாழ்கின்ற பெற்றோரைக் கொண்டிருப்போர் வாழ்க்கையில் அதீத அன்பை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள். அத்தகைய முதுமைப் பெற்றோரை ஒரு குழந்தையைப் போல பாதுகாப்பதில் இருக்கிறது மனிதத்தின் அழகிய வெளிப்பாடு.

இறைவனின் பிம்பங்களான அன்னையர், தாங்கள் உயிராய் நேசித்த பிள்ளைகளாலே உடைபடும் நிலையைக் காண்கையில் விழிகள் மட்டுமல்ல விரல்களும் கூட கண்ணீர் விட்டுக் கதறும். அன்னையைத் தனது இறுதி மூச்சு வரை அன்பில் சுமக்காத மனிதன், வாழ்வதில் அர்த்தமே இல்லை. ஒரு மனிதனால் உணரக் கூடிய அதிகபட்ச வலியைத் தாங்கி குழந்தையைப் பெறுகிறாள் அன்னை. அந்த வலியைத் தாங்கிய அன்னை அதை விட அதிக வலியை அனுபவிப்பது குழந்தைகள் அவர்களை உதாசீனப்படுத்தும் போது தான்.

கண்டதும் காதல் என்பார்கள், காணாமலேயே வருகின்ற அளவற்ற காதல் அன்னையிடம் தான் உருவாகும். தனது வயிற்றில் சுமக்கும் கருவின் உருவம் தெரியாமலேயே அதில் உயிரை வைத்து உருவாக்க அன்னையால் மட்டுமே முடியும். அதனால் தான் தாய் இரண்டாம் இறைவனாகிறாள். குழந்தையின் முதல் அழுகையில் மட்டும் ஆனந்தமடைந்து, அடுத்தடுத்த அழுகைகளில் கூடவே அழும் அதிசய உள்ளமாகிறாள்.

வாழ்வின் உன்னதத் தருணங்களை இரண்டு இடங்களில் தான் அனுபவிக்க முடியும். ஒன்று உங்கள் அன்னையின் அருகாமையில், இரண்டு, உங்கள் குழந்தைகளின் அருகாமையில். இரண்டுமே தாயன்பு தவழும் இடங்கள்.

தாயன்புக்கு ஈடாக எதைச் சொல்ல முடியும் ? கவிஞர் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகள் கவிதையாய் விழுகின்றன. ” அன்னை தான் எல்லாமே ! கவலைகளின் ஆறுதல். துயர நேரத்தின் நம்பிக்கை. பலவீனத்தை நிரப்பும் பலம். அன்பின் துவக்கம், இரக்கமும் மன்னிப்பும் உறையுமிடம். அன்னையை இழப்பவர்கள் ‘ஆசீர்வதிக்கும், பாதுகாக்கும்’ தூய ஆன்மாவை இழந்து விடுகிறார்கள்.”

தாய் இறைவனின் பிம்பம். சின்ன சொர்க்கத்தை வீடுகளில் இறக்கி வைக்கும் கடவுளின் பிரதிநிதி. அன்னையை நேசிக்கத் தெரியாதவர்கள் வாழ்க்கையை வாசிக்கத் தெரியாதவர்கள். மனிதர் என்று அவர்களை அழைக்க மறுதலித்து விடுங்கள்.

அன்னையை நேசிப்போம். நிஜத்தில் வாழ்த்தாலும், நினைவில் வாழ்ந்தாலும்.

சேவியர்

 Thanks : Vettimani, Germany

மனோரமா இயர் புக் : Top 10 கணினி இதழ்கள்

கணினி இதழ்கள் :

 

 

 

 

 

 

கணினி யுகம் ஆரம்பமான காலத்திலிருந்து பல்வேறு கணினி இதழ்கள் வெளியாகத் துவங்கின. இன்று உலகெங்கும் நூற்றுக்கணக்கான கணினி ஸ்பெஷல் இதழ்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. பழைய மற்றும் புதிய சில கணினி இதழ்களின் அறிமுகம் இது.

1. பி.சி மேகசின் ( PC Magazine )

1982ம் ஆண்டிலிருந்தே வெளிவரும் கம்ப்யூட்டர் பத்திரிகை எனும் பெயர் இதற்கு உண்டு. 2009ம் ஆண்டு வரை அச்சு இதழாக வந்து கொண்டிருந்த இந்த இதழ் இப்போது இணைய இதழாக உருமாறியிருக்கிறது. www.pcmag.com என்பது இதன் இணைய தள முகவரி. நவீன தொழில்நுட்பங்களின் அறிமுகம், மென்பொருள் வன்பொருள் குறித்த புதிய தகவல்கள், விமர்சனங்கள். மற்றும் வல்லுனர்களின் கட்டுரைகள் இதில் இடம்பெறுகிறது.

2. பைட் ( BYTE  )

கணினி உதயமான காலத்தில் முதலில் கால்பதித்த வெகு சில கணினி பத்திரிகைகளில் முக்கியமானது பைட். வாசிப்புக்குக் கொஞ்சம் கடினமான முழுக்க முழுக்க தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய பத்திரிகை இது. 1975ல் முதல் பதிப்பு வெளியானது. பல்வேறு மாற்றங்களுடன் 2011 வரை இதன் பெயர் இருப்பில் இருந்தது. தற்போது அது  http://www.informationweek.com/personal-tech/ எனும் தளத்துடன் இணைந்து இரண்டறக் கலந்து விட்டது.

3. பி.சி வேல்ட் (PC World )

சர்வதேச அளவில் பிரபலமான இன்னொரு கணினி பத்திரிகை பிசிவேர்ல்ட். 1982ல் முதல் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மிகவும் வெற்றிகரமான இந்தப் பத்திரிகை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விருதுகளையும் அள்ளியிருக்கிறது. 2006ல் உலக அளவிலேயே அதிக அளவில் அச்சாகும் கணினிப் பத்திரிகை எனும் பெயருடன் 7. 5 இலட்சம் பிரதிகள் வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது அது டிஜிடல் முகத்துக்குத் தாவி http://www.pcworld.com/ என இணையத்தில் முகம் காட்டுகிறது.

4. கம்ப்யூட்டர் வேர்ல்ட் ( Computer World )

1967ல் இருந்தே ஒரு கணினி இதழ் வெளியாகிறதெனில் அது இது தான். உலகின் முதல் கணினிப் பத்திரிகை என்பார்கள். மிகவும் பிரபலமான இந்த இதழ் மாதம் இருமுறையாக மலர்கிறது.  இதன் வடிவங்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெளியாகின்றன. அச்சு, இணையம் என இரண்டு முகம் காட்டும் இந்த இதழை www.computerworld.com எனும் தளத்தில் சந்திக்கலாம்.

5. கிரியேட்டிவ் கம்ப்யூட்டிங் ( Creative Computing )

பழங்கால கணினி இதழ்களின் பட்டியலில் இதற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. 1974 முதல் 1985 வரை இந்த இதழ் வெளியானது. புரோகிராம்களின் சோர்ஸ் கோட்-ஐ க் கொடுத்து அதை பயன்பாட்டாளர்கள் தங்கள் கணினியில் எழுதிப் பார்க்க வழி செய்தது இதன் சிறப்பு அம்சமாக இருந்தது. ஆனாலும் காலப் போக்கில் அதன் புகழ் மங்க நிறுவனம் இழுத்து மூடப்பட்டது !

6. வயர்ட் ( Wired )

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிரபலமான கணினி பத்திரிகை வயர்ட். மென் வடிவிலும், அச்சு வடிவிலும் இந்தப் பத்திரிகை மிகப் பிரபலம். 1993ம் ஆண்டு துவக்கம் முதல் இந்த மாத இதழ் வெளியாகிக் கொண்டிருக்கிறது. www.wired.com எனும் இணைய தளத்தில் இதைக் காணலாம். இன்றைய பிரபல கணினிப் பத்திரிகைகளில் இதற்குத் தனி இடம் உண்டு.

7. மேக்ஸிமம் பி.சி Maximum PC

பூட் எனும் பெயரில் அறிமுகமாகி பிரபலமாய் இருக்கும் பத்திரிகை மேக்ஸிமம் பி.சி. http://www.maximumpc.com/ எனும் இணைய தளம் இந்தப் பத்திரிகைக்குரியது. தொழில்நுட்ப விஷயங்கள், பொருட்களின் தரமதிப்பீடு, தொழில்நுட்ப அலசல், வன்பொருட்களின் புதிய வருகை,என பல தரப்பட்ட விஷயங்களைக் கலந்து கட்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை இது !

8. மேக் வேர்ல்ட் MacWorld

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் பத்திரிகைகள் நிறைய உண்டு. அதில் மிகப் பிரபலமான பத்திரிகை இது. 1984ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இயங்கி வருகிறது. மேக் லைஃப் எனும் பத்திரிகை இதன் போட்டியாளர் இடத்தில் இருக்கிறது. ஆனால் அதை விட இரண்டு மடங்கு அதிக சர்குலேஷனுடன் மேக்வேர்ல்ட் இயங்கி வருவது குறிப்பிடத் தக்கது. http://www.macworld.com என்பது இதன் இணைய தள முகவரி.

9. ஸ்மார்ட் கம்ப்யூட்டிங் Smart Computing

விமர்சகர்களின் தரவரிசையில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கும் இதழ் ஸ்மார்ட் கம்ப்யூட்டிங். புதிய தொழில்நுட்ப விஷயங்களை வசீகரமான வகையில் தருவதில் ஸ்மார்ட் கம்ப்யூட்டிங் இதழ் சிறப்பிடம் பிடிக்கிறது. http://www.smartcomputing.com/ என்பது இதற்கான இணைய தளம்.

10 பி.சி கேமர் PC Gamer

கணினி விளையாட்டுகளுக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் பத்திரிகைகள் ஏராளம் உண்டு. அதில் மிக முக்கியமானது பி.சி கேமர் எனும் மாத இதழ். 1993ன் இறுதியில் வெளியாகத் துவங்கிய பத்திரிகை இது. பல்வேறு நாடுகளில் இதன் வடிவங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. http://www.pcgamer.com/ என்பது இதன் இணையதள முகவரி.

 

 

ஃபாஸ்ட் ஃபுட் திருமணங்கள்.

 cricket-girls-beer-gallery7

 

 

 

 

திருமணங்கள் ஆயிரம் காலத்துப் பயிர்”, “வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்” என்பதெல்லாம் ஏறக்குறைய வழக்கொழிந்து விடும் நிலமையில் தொங்கிக் கொண்டிருக்கும் பழமொழிகள். 

முன்பெல்லாம் ஒரு கல்யாணம் முடிவானால் ஊருக்கே அது ஒரு திருவிழாச் செய்தி. இரு வீட்டாரும் சந்தித்துப் பேசுவதில் துவங்கி, ஒவ்வொரு விஷயமாய் இரண்டு வீட்டுப் பெற்றோர்களும், பெரியோர்களும் பார்த்துப் பார்த்துச் செய்வார்கள். எத் தரப்புக்கும் எந்தக் குறையும் வந்து விடக் கூடாதென்பதில் ஊர்ப் பெரியவர்கள் ரொம்பவே கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பார்கள்.

யாராவது வாய்தவறி ஏதாவது சொல்லி விட்டால் உடனே பெரியவர்கள் முன்னின்றி அதை சமரசம் செய்து வைப்பார்கள். “வாழப் போறவங்க மன நிறைவோட போணும்” என ரொம்பவே பிராக்டிகலான ஒரு பதிலையும் சொல்வார்கள்.

பெண்பார்க்கப் போவது வெட்கத்தை முற்றத்தில் தெளித்துக் கோலம் போடும் ஒரு ஆனந்த அனுபவம். நிச்சயம் குறிக்கும் நாள் அந்த வெட்கத்தை வீட்டு வரவேற்பறைக்கு நீட்டிக்கும் காலம். அதன் பின் சேலை எடுப்பது, வளையல் கொடுப்பது, இத்யாதி இத்யாதி என திருமணம் ஒரு சுவாரஸ்யமான அனுபவமாய் விரியும்.

அப்போதெல்லாம் திருமணம் பெரும்பாலும் முற்றங்களில் தானே நடக்கும். வாழை மரத்தை வெட்டித் தோரணம் கட்டுவதில் துவங்கி நடக்கின்ற களேபரங்கள் ஒரு தித்திக்கும் திருவிழாக் கோலம். திருமணத்துக்கு முந்திய நாளிலேயே வீடு முழுக்க சுற்றமும், சமையல் தடபுடல்களும், சிரிப்புச் சத்தங்களும், கிண்டல் கேலிகளும் என உறவின் இன்னொரு படலமே அங்கே அரங்கேறும். பனை மர உச்சியில் கட்டப்பட்டிருக்கும் ஊதுகுழல் ஒலிபெருக்கியில் சர்வ நிச்சயமாய் டி.எம்.எஸ் பாடிக்கொண்டிருப்பார், அல்லது கட்டபொம்மன் கர்ஜித்துக் கொண்டிருப்பார்.

“மணமகளே மருமகளே வா” எனும் பாடல் ஒலிக்காத கல்யாணங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை இல்லவே இல்லை. மைக் செட் காரர் வந்திறங்கிய உடனே கேட்கும் முதல் கேள்வியே அது தான். “லேய்.. மங்களப்பாட்டு, கட்டப்பொம்மன் கதைவசனம் எல்லாம் இருக்காலே.. ” !!!

திருமணத்தன்று பெற்றோர் நெகிழ்விலும், மகிழ்விலும், அழுகையிலும் தான் இருப்பார்கள். கால்நூற்றாண்டு காலம் தன் கால்களைச் சுற்றிச் சுற்றி வந்த மகளுக்கு கால்க்கட்டு போட்டு அனுப்பி வைக்கிறோமே ! அவள் அந்த வீட்டில் நன்றாக இருப்பாளா ? எல்லோரும் அவளை நல்ல முறையில் கவனித்துக் கொள்வார்களா ? பொத்திப் பொத்தி வளர்த்த மகளை, கட்டிக் காப்பார்களா, கண்கலங்க வைப்பார்களா ? என மனசு இடைவிடாமல் அடித்துக் கொள்ளும்.

கண்ணீர் விட்டு அழாமல், பெற்றோரின் பாதங்களைத் தொழாமல் எந்தப் பெண்ணும் திருமணத்தைச் சந்தித்ததேயில்லை என்பதே பழைய நிலமை. திருமணமாகி சில மாதங்கள் கழிந்து புது வீட்டில் பெண் மகிழ்ச்சியாய் இருக்கிறாள் என்பதைக் கண்டறிந்தபின்பே பெற்றோர் கொஞ்சம் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுப்பார்கள். அந்தக் கணம் வரை அட்வைஸ் மழையும், பாசப் பயணங்களும், பதட்டங்களுமாக அவர்களுடைய தினங்கள் கழியும். இதெல்லாம் இப்போது மருவி மருவி, அருவிக் கரையில் கிடக்கும் கூழாங்கற்கள் போல வடிவம் மாறி விட்டது.

“அம்மா.. எனக்கு இந்தப் பொண்ணைப் புடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். என்ன சொல்றீங்க ?” எனக் கேட்கும் பிள்ளைகள் நல்ல பிள்ளைகள் எனும் பட்டியலில் சேர்கிறார்கள். காரணம், அந்த அளவுக்கு கூட பெற்றோரின் ஈடுபாட்டை இளைஞர்கள் இப்போதெல்லாம் நாடுவதில்லை. “அம்மா… இந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன். அடுத்த மாசம் முகூர்த்தம் வருது.” என்பது தான் பெரும்பாலான இன்றைய இளசுகளின் திருமண ஆயத்தம்.

“பொண்ணு எப்படிடே ?” எனக் கேட்கும் தந்தையர்களுக்கு சரியான பதில் பல நேரங்களிலும் கிடைக்காது. “பொண்ணைப் பாக்காம ஓ.கே சொல்லுவேனா ?”, “பொண்ணு வீட்லயும் பேசிட்டேன். அவங்களுக்கும் ஓ.கே தான்”, “பொண்ணை எனக்கு ஆறு மாசமா தெரியும் ஃபேஸ்புக் பிரண்ட்”, “என் ஃப்ரண்டுக்குத் தெரிஞ்ச பொண்ணு”, “மேட்ரிமோனில பாத்தேன்”, ” பொண்ணு என் கூட தான் வர்க் பண்ணுது.. நல்ல பொண்ணு தான்” இப்படி ஏதோ ஒற்றை இரட்டை வரி தான் பெரும்பாலான பதில்கள்.

ஆன்லைனில் ஆள் பார்த்து, அப்படியே ஸ்கைப்பில் பேசி, அம்மாக்களிடம் விஷயத்தைச் சொல்லி விட்டு, நண்பர்களுடன் கலந்தாலோசித்து ஒரு திருமணத்தை முடிவு செய்கிறார்கள் இளசுகள். மண்டபம், சாப்பாடு, அழைப்பிதழ், ஆடைகள், நகை என என்ன தேவையோ அவற்றையெல்லாம் போன், மின்னஞ்சல், ஆன்லைன், என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.

கலந்து கொள்ள வருகின்ற விருந்தினர்களில் ஒருவர். அல்லது விருந்தினர்களில் முக்கியமானவர் எனும் இடம் தான் பெற்றோருக்கு. “மாம்.. இதான் பொண்ணோட அம்மா, இது பொண்ணோட சித்தி” என மண்டபத்திலேயே கூட அறிமுகம் நடக்கும் நிகழ்வுகளும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணம்.

பார்த்துப் பார்த்துச் சமைக்கும் சாப்பாட்டைச் சாப்பிடும் வயிறுகள் நன்றாக ஜீரணமாகின்றன. ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளோ பெரும்பாலும் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதனால் தான் பழைய காலத்துத் திருமண பந்தங்களைப் போல இந்தக் காலத்தில் இல்லை. விவாகரத்துகளின் எண்ணிக்கை சகட்டு மேனிக்கு உயர்ந்து கொண்டே போகிறது. “சமைக்க மாட்டேங்கறா, அவன் ஹைட் கம்மியா தெரியறான்” என்றெல்லாம் காரணம் காட்டி மணமுறிவுகள் தினம் தோறும் நடந்து கொண்டே இருக்கின்றன.

“இட்ஸ் பார்ட் ஆஃப் லைஃப்” என விவாகரத்துகளை எடுத்துக்கொள்ளும் இளைய தலைமுறை அச்சப்பட வைக்கிறது. சிக்கல்கள் இல்லாத குடும்ப உறவுகள் இல்லை. அப்படிப்பட்ட சிக்கல்களை எப்பாடு பட்டாவது தீர்த்து வைப்பது தான் பழைய வழக்கம். இருவரும் பேசி, இரண்டு வீட்டாரும் பேசி, குடும்பத்தினர் பேசி சிக்கல்களைச் சரிசெய்வார்கள். ஒரு விவாகரத்து அத்தி பூத்தாற்போல நடந்தாலே அந்த ஊருக்குள் அது ஒரு அதிர்ச்சிச் செய்தியாய் தான் உலாவரும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் எனும் திருமணங்கள் நிலைப்பதில்லை. அதற்காக இளைஞர்கள் எதையும் முடிவு எடுக்கக் கூடாதென்பதல்ல. காதலிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. தனது மணப் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. ஆனால் அதை பெற்றோரின் மனம் காயப்படாத அளவுக்கு செய்ய வேண்டும் என்பது மட்டுமே நான் சொல்லும் விஷயம்.

“இந்தப் பெண்ணை புடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களா” எனுமளவுக்கேனும் இளைஞர்கள் இருப்பதே ஆரோக்கியமானது. ஒரு திருமணம் என்பது சடங்கல்ல, அது வாழ்வின் மிகப்பெரிய அனுபவம். ஆனந்தங்கள் பந்தி வைக்கும் இடம். அதைப் பார்த்துப் பார்த்துச் செய்வதிலும், அதை நிகழ்த்தி முடித்து நிம்மதி கொள்வதிலும் தான் பெற்றோரின் ஆனந்தம் நிலைக்கும். அந்த ஆனந்தத்தை பெற்றோருக்கும் தரும் பிள்ளைகள் கடவுளின் வரங்கள்.

‘நீங்கதாம்பா எல்லாம் பாத்துக்கணும். நீங்க சொல்றது படி செய்யறேன்” ன்னு என் பையன் சொல்லிட்டான் என ஒரு தந்தை சொல்லும் போது அவருடைய கண்களைக் கவனியுங்கள். அந்தக் கண்ணில் இருக்கும் கர்வமும், பாசமும், பெருமிதமும், ஈரமும் ஒரு வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தரும். அத்தகைய அனுபவத்தைக் கொடுக்காத ஒரு திருமணத்தினால் என்ன பயன் இருக்கப் போகிறது.

மணப் பெண்ணும், மணப் பையனும் ஏற்கனவே சந்தித்துக் கொள்ளாத திருமணங்கள் இப்போது இல்லை. அதில் தவறேதும் இல்லை. ஆனால் பெற்றோருடன் இணைந்து செய்யும் திருமண ஏற்பாடுகள் மிகவும் அவசியம். அது தான் ஒரு புதிய குடும்ப உறவுக்கு தன்னம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும், பரவசப் பகிர்தலையும் நல்க முடியும்.

பறவை எச்சம் போல விழுந்த இடத்தில் முளைப்பதல்ல திருமணப் பயிர்கள். அது சரியான நிலத்தைத் தேர்வு செய்து, பக்குவப்படுத்தி, விதைத் தேர்வு செய்து, நல்ல நாளில் விதைத்து, பாசனத்தைக் கவனித்து, புழு பூச்சிகள் அரிக்காமல் பாதுகாத்து, சரியான காலத்தில் விளைச்சல் இருக்கிறதா என சோதித்து இப்படி படிப்படியாய் செய்ய வேண்டிய விஷயம். அத்தகைய திட்டமிட்ட, வலுவான குடும்ப உறவை உருவாக்க பெற்றோரின் ஆசீரும், அருகாமையும், வழிகாட்டுதலும், உதவியும் நிச்சயம் தேவை.

இன்றைய இளைஞன் நாளைய தந்தை. இன்றைய இளைஞி நாளைய அன்னை. இப்போது நீங்கள் எதைக் கட்டுகிறீர்களோ, அது தான் நாளை உங்களுக்காகவும் கட்டப்படும். திருமணம் ஆனந்தத்தின் அடையாளம். பெற்றோரின் கண்ணீர்த் துளிகளின் மேல் கட்டப்பட்டால் அது எப்போதுமே வேர்பிடிக்கப் போவதில்லை !

– சேவியர்

எல்லைகள் கடந்த மனித நேயம்

k1

 

 

இந்த பூமியின் இயற்கை முழுவதும் ஏதோ ஒரு அழகிய வகையில் இணைந்தே கிடக்கிறது. கால் நனைக்கும் கடலின் முதல் துளியையும் உலகின் மறுகோடியில் கிடக்கும் கடைசித் துளியையும் ஏதோ ஒரு ஈர இழை தான் இணைத்துக் கட்டுகிறது. உலகின் ஒரு துருவத்தையும், மறு துருவத்தையும் காற்றின் ஏதோ ஓர் கயிறு தான் இறுக்கிக் கட்டுகிறது. நம் தலைக்கு மேல் விரியும் வானமும் தேசங்களுக்கு மேல் கரம்கோத்தே கிடக்கிறது. பிரிந்தே இருந்தாலும், இணைந்தே இருக்கும் வித்தை கற்றிருக்கிறது இயற்கை. ஆனால் மனிதர்களோ இணைந்தே இருந்தாலும் மனதால் பிரிந்தே இருக்கிறார்கள் !

மனிதர்களும் பிரிந்தே இருந்தாலும் இணைந்தே இருக்கும் வல்லமை பெற்றிருந்தால் வாழ்க்கை அர்த்தப்படும். அந்தப் பிணைப்பை நல்கும் ஒரே ஒரு ஆயுதம் அன்பு தான் !  ஒரு இதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பு, மற்ற இதயங்களுக்குள் சாரலடித்துச் சிரிக்கும் போது மனித வாழ்க்கை அழகாகிறது. ஆனால் அந்த ஊற்றை உள்ளுக்குள்ளேயே புதைத்து வைக்கும் போது சுயநலச் சுருக்குப் பைகளாய் மனித வாழ்க்கை சுருங்கி விடுகிறது !

தன்னலச் சுவர்களை உடைத்துக் கடக்கும் மனித விரல்கள் மனித நேயத்தை அணிந்து கொள்கின்றன. அந்த மனித நேயம் தேவையான வாசல்களைத் தேடிச்சென்று உறவைப் பகிரும் உன்னத வேலையைச் செய்கிறது. நோயாளிகளின் படுக்கைகளின் அருகே ஆறுதல் கரங்களாய் மாறுகிறது. வறுமையின் வயிறுகளில் சோற்றுப் பருக்கைகளாய் உருமாறுகிறது. பாரம் சுமக்கும் தொழிலாளியின் தோள்களாய் மாறுகிறது. தேவையென நீளும் கரங்களின் உள்ளங்கைகளில் பொருளாதார பரிசுகளாக மாறிப் போகிறது. தன்னலத் தடையுடைக்கும் நதிகள் அன்பின் அருவிகளாக அவதாரம் எடுக்கின்றன.

மதங்கள் மனிதநேயத்தை தங்கள் அடித்தளமாய் அமைத்திருக்கின்றன. ஆனால் அவற்றின் மேல்  மதங்களின் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பாசி போலப் படிந்து படிந்து உண்மையான அடிப்படையை உலகமே மறந்து கொண்டிருக்கிறது. சடங்குகளின் துகிலுரித்து உண்மையின் நிர்வாணத்தைக் கண்டுகொள்ளும் ஞானம் பலருக்கும் இருப்பதில்லை. அவர்கள் சாரலில் நனைந்து அதையே பெருமழையென புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாண்டுவதும் இல்லை, உண்மையைத் தீன்டுவதும் இல்லை. மதக் கலவரங்களின் வேர்கள் இத்தகைய போலித்தனங்களின் மேல் பற்றி படர்ந்திருக்கின்றன.

இதயத்தில் மனித நேயம் இருக்க வேண்டியது மானுடத்தின் கட்டாயத் தேவை. அதற்கு வேர்களை விசாரிக்கும் வலிமை வேண்டும். மரங்களின் இயல்புகளைப் பொறுத்தே அதன் கனிகளும் அமையும். மாமரத்தின் கிளைகளில் ஆப்பிள் பழங்கள் விளைவதில்லை. ஆனால் போலித்தனமான மனிதர்களோ பட்டுப் போன கிளைகளில் கூட பழங்களை ஒட்டவைத்து நடக்கிறார்கள். வெளிப்படையான சில செயல்களால் தங்களை புனிதர்களாய்க் காட்டும் சுய விளம்பரதாரர்கள் அவர்கள். அவர்கள் மனிதநேயம் உள்ளவர்கள் போல நடிக்கும் வித்தைக்காரர்கள்.

உண்மையான மனிதம் வேர்களில் நிலவும். அதன் கனிகள் அதற்கேற்ப விளையும். ஒட்டவைக்கும் பழங்கள் அங்கே இருப்பதில்லை. மொட்டவிழ்ந்த பழங்களே விளையும். கனிகளால் மரங்கள் அடையாளப்படும். கனிகளால் தோட்டங்கள் அர்த்தப்படும். போலித்தனமில்லா ஒரு பழத்தோட்டம் விழிகளில் விரியும். உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் அன்பு இத்தகையதே ! அது இயல்பிலேயே கனிகொடுக்கும் மரமாக செழித்து வளர்க்கிறது !

மனிதநேயம், கர்வத்தைக் கழற்றி வைக்கும். நான் பெரியவன் எனும் சிந்தனைகளின் படிகளில் மனித நேயம் நடை பழகுவதில்லை. எனவே தான் ஏற்றத்தாழ்வுகளைச் சிந்திக்கும் மனங்கள் மனித நேயத்தை விட்டு வெகுதூரத்தில் கூடாரம் கட்டிக் குடியிருக்கின்றன. கர்வமற்ற மனது தான் மனிதனை மனிதனாய்ப் பார்க்கும். தூணிலும் துரும்பிலும் கடவுளைப் பார்ப்பதை விட, காணும் மனிதர்களில் இறைவனைப் பார்க்கும் ! அப்போது சக மனிதனை நேசிக்கவும், மதிக்கவும், அன்புடன் அரவணைக்கவும் அதற்கு சிக்கல் எழுவதேயில்லை.

மனித நேயம் உலகெங்கும் இருக்க வேண்டிய மனித இயல்பு. அது மட்டும் வாய்த்துவிடின் மதங்களின் சண்டைகளோ, இனப் பாகுபாடுகளோ உலகில் உருவாவதில்லை. சண்டைகளின் வரவு, இறைவனை அறியாததன் விளைவு. மனித நேயம் இல்லாததன் செயல் வடிவமே வன்முறை ! 

உங்களிடம் மனித நேயம் இருக்கிறதா ? ஒரு அவசர பரிசோதனை செய்து பாருங்கள். உங்கள் மேலதிகாரிக்கும் கொடுக்கும் மரியாதையையும் அன்பையும் உங்கள் உடன் பணியாளருக்குக் கொடுக்கிறீர்களா ? உங்கள் நண்பருக்குக் கொடுக்கும் அன்பை உங்கள் சமையல் காரருக்குக் கொடுக்கிறீர்களா ? உங்கள் பிள்ளைகளைப் போலவே தெருவோர ஏழையின் அழுக்குக் குழந்தையை அரவணைக்கிறீர்களா ? மனித நேயத்தின் சிதைந்து போன சிதிலங்கள் உங்கள் விழிகளுக்கு முன்னால் புதிய விடைகளை எழுதும்.

இன்னும் கேள்விகள் எழலாம். சகமனிதனின் வெற்றி உங்களை மகிழவைக்கிறதா ? ஆனந்தமாய் ஆடிப் பாட வைக்கிறதா ? அவனுக்குக் கிடைக்கும் வசதிகளும், பெருமையும் உங்களை ஆனந்தமடையச் செய்கிறதா ? இல்லை எரிச்சலின் உச்சியில் எறிகிறதா ? அடுத்தவனின் தோல்வியில் நீங்கள் உடைந்து போய் அழுகிறீர்களா ? இல்லை அவை வெறும் வேடிக்கைக் கதையாகி வெறுமனே செல்கிறதா ? சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கேள்விகளின் விடைகளில் இருக்கிறது உங்கள் மனிதநேயத்தின் எல்லைகளும், ஆழங்களும் ! உங்கள் விடைகளின் அடிப்படையில் உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ளுங்கள். 

வாழ்க்கை மிகவும் அழகானது. இணைந்தே வாழ்வதற்காய் நமக்குக் கிடைத்திருப்பது தான் இந்த வாழ்க்கை. எனவே அன்பினால் உலகைத் தீண்டுவோம். நேசத்தால் உயிர்களைத் தொடுவோம். கோபத்தில் எல்லைகளையும், பொறாமையின் தடைகளையும் உடைத்தே எறிவோம்.

அன்பின்றி அமையாது உலகு !
அதுவே அணையாத ஆன்மீக விளக்கு !

சேவியர்

வெற்றிமணி – ஜெர்மனி

 

 

 

Video

TBB’s New Song , பாடல் : பூம் பூம்

பாடல்     : பூம் பூம்
இசை     : சஞ்சே
பாடல் வரிகள்   : சேவியர் & சஜித் ( ஆங்கிலம் )
குரல்கள்     : எம்.சி ஜீவா, சஜித், டாட்டூ த ராப்பர்.

தயாரிப்பு : TBB Entertainment, London.

பாடல் :

மினு மினு விழியில மிஸ்ஸானேன்
மன்மதக் கலையில பாஸானேன்
கனவில கனவில கிஸ்ஸானேன்
உன்னாலே யூகே டு மதுர – பூம் !

அடிக்கடி இடையில தூசானேன்
தக தக அழகில புஸ்ஸானேன்
உனதிரு இதழில ஜூஸானேன்
யூகே டு மதுர பூம் பூம்

கள்ளூறும் மேனியடி
கதகளி ஆடுமடி
பாத்தாலே போதையேறும்
சோமபானக் கிண்ணமடி

கஞ்சாவும் தோக்குமடி கண்ண பாத்தா – அடி
மூச்சுக்கே மூச்சு முட்டும் முன்ன பாத்தா

விளையாட வா – கொஞ்சம்
கொள்ளையிட வா – உன்
மேனியிலே ஆயகலை கற்றுத் தர வா.

முத்தமிட வா – ஒரு
குத்தமில்ல வா – அட
அச்ச மட நாணமெல்லாம் அழகில்லை வா

ஆங்கிலம்

லட்டான தேகம்
கட்டான மேகம்
எட்டியே நின்னா
கிட்டாது வேகம்

தட்டித் தட்டித் தானே செய்வாங்க சிற்பம்
தட்டாமநீ நின்னா கிட்டாது சொர்க்கம்

பெட்டைம் ஸ்டோரி
கிக்கான சாரி
மூன்லைட் மேனி
வித்தையை காமி

பொத்திப் பொத்தி வெச்சா தாங்காது மேகம்
கட்டிலிலே காலுரெண்டும் தூங்காத நாகம்

TBB – பைரவன் – முகிலே முகிலே

பாடல்     : முகிலே முகிலே
இசை     : சஞ்சே
பாடல் வரிகள்   : சேவியர்
குரல்கள்     : ரோகினி, எம்.சி ஜீவா

ஆல்பம் :  பைரவன் 
http://www.tamilbadboy.com/bhairavan.zip

தயாரிப்பு : TBB Entertainment, London.

 பெண்

முகிலே முகிலே
உனைப்போல் எனை
மிதக்கச் செய்வாயா ?

மழையே மழையே
உனைப்போல் எனை
குதிக்கச் செய்வாயா

அடடா மனம் ஓடுதே
கடிவாளம் உடைத் தோடுதே
அடடா உயிர் தேடுதே
மெய்மறந்தேனே
பெண்

கரையைத் தாண்டும் நதியின் விரலாய்
உடலைத் தாண்டி உயிரோடும்
தரையைத் தீண்டும் பறவை இறகாய்
சத்தம் இன்றி சாய்ந்தோடும்

அடடா காற்றிலே
சிலை யார் செய்ததோ
வருடும் கைகளை
யார் கொடுத்ததோ
மெதுவாய் மெதுவாய் முத்தம் தருதோ

ஆண் :

உன் தேகம் கால் கொண்ட நிலவா
உன் பாதம் பூமிக்கு வரமா
உன் கூந்தல் விரல் நீட்டும் இரவா
நீ தேவ இனமா

எல்லோருக்குள்ளும் உறையும் குளம்

asdasdasdasd

குளம் குறித்த கனவுகளும், நினைவுகளும் இல்லாதவர்கள் குளத்தோடான பரிச்சயம் இல்லாதவர்கள். அதிலும் குறிப்பாக பால்யகாலத்தில் கிராமத்துக் குளங்களில் பல்டியடித்தவர்களுக்குள் எப்போதும் உறைந்து கிடக்கும் அந்த கனாக் காணும் குளங்கள். எங்கே சென்றாலும் அவர்கள் அதை ஒரு நினைவுக் குமிழியாகச் சுமந்து திரிகிறார்கள். அவ்வப்போது கிடைக்கும் அழகிய தருணங்களில் அவர்கள் அந்த நினைவுக் குமிழியைத் திறந்து குளத்தின் வாசனையை ஆழமாய் உள்ளிழுக்கின்றனர். இன்னும் சிலர் குளத்தை ஒரு பாயாய்ச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள். வேனிற்காலத்தின் வியர்வை அருவிகளுக்கிடையே குளத்தின் ஞாபகத்தை உதறி விரித்து அதில் ஈரத் துளிகளை இழுத்தெடுக்க முயல்கின்றனர்.

குளங்கள் வேறெதையும் அறிவதில்லை. தனக்குள் குதிக்கும் மழலைகளின் கால்களுக்கு அவை ஈரக் கம்பளத்தை விரித்துச் சிரிக்கின்றன. கரையோரங்களில் சிப்பிகளுக்குச் சகதி வீடுகளை சம்பாதித்துக் கொடுக்கின்றன. கலுங்கின் இடையிடையே நீக்கோலிகளுக்குப் புகலிடம் கொடுக்கின்றன. ஈரச் சகதிகளின் ஓரங்களில் கெண்டை மீன்களை ஒளித்து வைத்து வேடிக்கை காட்டுகின்றன.. குளம் ஒரு அன்னை. தனக்குள் நுழையும் அத்தனை பேருக்கும் பாரபட்சமின்றி ஒரே ஈரத்தைத் தான் பகிர்ந்தளிக்கிறாள். தனது அகலமான கைகளை விரித்து, கோழி தன் குஞ்சுகளை சிறகுகளுக்குள் அடைகாப்பது போல அரவணைத்துக் கொள்கிறாள்.

எனது பால்யத்தின் கிளைகளில் நினைவுகளின் குருவிகள் சிறகுலர்த்துகின்றன. அவை சிலிர்க்கும் இறகுகளிலிருந்து பல குளங்கள் தெறித்து விழுகின்றன. சர்ப்பக் குளம் எனது பால்யத்தின் பாதங்களுக்கு ள் இன்னும் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அந்தக் குளத்தின் கலுங்கில் அமர்ந்திருக்கின்றன ஏராளம் கதைகள். யாரேனும் கேட்பார்களோ எனும் எதிர்பார்ப்பைத் தேக்கி வைத்து அவை காத்திருக்கின்றன. நிராகரிக்கப்படும் தருணங்களில் அந்தக் கதைகள் குளத்தில் குதித்து தற்கொலைக்கும் முயல்கின்றன. ஆனால் குளம் மீண்டும் அவற்றைக் கரையேற்றித் ஈரத்தால் தலைதுவட்டி அமர வைக்கிறது.

கோனார் எருமைகளை ஓட்டியபடி நுழையும் சாய்வான படிக்கட்டொன்று அந்தக் குளத்தில் உண்டு. எருமைகள் அவருக்குத் தோழன். ஆறறிவுள்ள மனிதர்களிடமிருந்து வருகின்ற நிறமாற்றங்கள் ஐந்தறிவு விலங்குகளுக்கு இருப்பதில்லை. அவருக்கு எருமையின் நிறம் கறுப்பு அவ்வளவே. வைக்கோலைச் சுருட்டி அவற்றின் முதுகில் படிந்திருக்கும் அழுக்கை அவர் அழுத்தமாய்த் தேய்க்கும் போது ஒரு மசாஜ் சென்டரில் மயங்கிக் கிடக்கும் நிலையில் எருமைகள் கிடக்கும். எருமை மாடென்று யாரேனும் அவரைத் திட்டினால் ஒருவேளை அது அவரைப் பொறுத்தவரை இனிமையான பாராட்டாய் காதுகளில் நுழையக் கூடும். குளிப்பாட்டி முடித்து ஒவ்வொரு எருமையாய் கரையில் ஏற்றி, மூக்கணாங்கயிறைச் சுருட்டி அவற்றின் முதுகில் வைத்தால் அவை அசையாமல் நிற்கும் !

சங்கேத வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியது விலங்குகளாய்த் தான் இருக்க முடியும். கயிறைச் சுருட்டி முதுகில் வைத்தால் அசையாமல் நிற்கும் எருமைகள், அதே கயிறை முதுகிலிருந்து எடுத்து விட்டால் நடக்கத் துவங்கிவிடுகின்றன. விலங்குகள் மனிதர்களின் தோழர்களல்ல, சொந்தங்கள். கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்து கால்நடைகளை வளர்ப்பதில்லை கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள். அவர்களுக்கு பால்கொடுக்காத மாடும், சம்பாதிக்காத மகனும் ஒரே மாதிரி தான். வருமானம் வரவில்லையென வழியனுப்பி வைப்பதில்லை. முடிந்தபட்டும் பாசத்தைப் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

குளங்கள் ரகசியங்களைத் தனக்குள்ளே புதைத்து வைக்கின்றன. குளங்களுக்குள் இறங்கும் மனிதர்களின் குலங்களை அவை பார்ப்பதில்லை. குணங்களை அவை வெளியே சொல்வதில்லை. மத்தியான வேளைகளில், ஆளரவமற்ற குளக்கரையில் ரகசியத் தவறுகள் செய்யும் அவசரக் காதலர்களை அது நாட்டாமை முன் கொண்டு நிறுத்துவதில்லை. சலனமற்ற முதுகுடன் அவை அமைதியாய் இருக்கின்றன. அவ்வப்போது அவற்றின் நீர் வளையங்கள் மட்டும் ஒரு வெட்கத்தின் வீணை இசையாய் மௌனத்துடன் அலைந்து அடங்குகிறது.

வண்ணான் தனது அழுக்கு மூட்டையை அவிழ்த்து வைக்கும் பகுதி ஒன்று சர்ப்பக் குளத்தில் உண்டு. அவனுடைய வறுமையின் ஓசை அந்தக் கற்களில் ஆக்ரோஷமாய் வந்து மோதும் துணிகளின் வாயிலிருந்து பீறிட்டுக் கிளம்பும். அவன் ஊரின் அழுக்கைக் கழுவி முடித்து கனமான மூட்டையுடன் கரையேறுவான். அவனுடைய பிய்ந்து போன கைகளின் துணுக்குகளை மவுனமாய் ஏந்தியபடி குளம் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்.

பால்யத்தின் பரவசம் குளங்களே. அவற்றின் முதுகில் ஏறி நீச்சல் அடித்து மறுகரையில் ஒதுங்குகையில் சாம்ராஜ்யத்தைப் பிடித்த சக்கரவர்த்தியாய் மனதுக்குள் ஒரு வீரவாளும், கிரீடமும் உருண்டு வரும். அதன் கரையோரங்களில் டவல்களால் குட்டிக் குட்டி மீன்களைப் பிடிக்கும் போது அவை  குளத்திலிருந்து தப்பி மனதில் நீந்தத் துவங்கும். சிப்பிகளைத் தேடிக் கண்டுபிடிப்பது தனிக் கலை. ஒரு இடத்தில் ஒரு சிப்பி அகப்பட்டால் அதைச் சுற்றி அடுக்கடுக்காய், மண்ணுக்குள் சிப்பிகளின் பேரணியே ஒளிந்திருக்கும் வாய்ப்பு உண்டு என்பது பாடம். அள்ளி அள்ளி அதைப் பைகளில் சேமிக்கும் போது சாதனையாளனாய் மனம் சந்தோசப்படும்.

எல்லா நினைவுகளையும் குளம் தனது தண்ணீரின் மேலும், படிக்கட்டுகளிலும், கலுங்கிலும், கரையோர மரங்களிலும் எழுதி வைக்கிறது. தண்ணீர் உலரும்போது கதைகள் மண்ணுக்குள் இளைப்பாறுகின்றன. வெயிலில் உடைந்து கிடக்கும் குளத்தின் இடுக்குகளில் அவை அடுத்த நீரின் வருகைக்காய்க் காத்திருக்கின்றன. மீண்டும் தண்ணீர் வரும்போது விதையிலிருந்து சட்டென வெளிக்கிளம்பும் ஒரு அமானுஷ்ய மரம் போல மீண்டும் தண்ணீரின் மேல் அசைவாடத் துவங்குகின்றன.

குளங்கள் பால்யத்தின் போதிமரங்கள். அவை நிம்மதியின் ஞானத்தை மனதுக்குள் ஊற்றி நிறைக்கின்றன. காலம் மனிதனை குளங்களை விட்டு நகரங்களை நோக்கித் தகரப் பேருந்துகளில் அடக்கி அனுப்புகிறது. அவன் தனது நினைவுகளில் மட்டுமே அடைகாக்கும் குளத்துடன் பயணிக்கிறான். அந்தக் குளம் அடிக்கடி அவனது கனவில் குஞ்சுகளைப் பொரிக்கிறது.

வருடங்களின் விரட்டல்களுக்குக் பின்னும் குளம் நமது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும். பால்யகாலத்தில் கடல்போலத் தோன்றும் குளம் இப்போது சின்னதாகச் சிரிக்கும். அதன் கரையோரங்களில் நடக்கையில் காற்றில் அலையும் கால்நூற்றாண்டுக்கு முந்தைய சிரிப்புச் சத்தங்களைப் பொறுக்கி எடுக்க முடியும். அவை இப்போதும் குளத்தைச் சுற்றியே அலைந்து கொண்டிருக்கும். சொல்லிய சொல்லும், சிரித்த சிரிப்பும், அழுத அழுகையும் காற்றின் அலைவரிசையை விட்டு எங்கும் விலகிவிடுவதில்லை. அவை ஒலி இழைகளாகக் காற்றில் அலைந்து கொண்டே இருக்கின்றன. அதைச் சரியான அலைவரிசையில் இழுத்தெடுக்க நமது மனம் ஒரு வானொலியாய் அவ்வப்போது மாறும். உணர்வுகளின் ஒத்த அலைவரிசையில் அவை தெள்ளத் தெளிவாகக் கேட்கின்றன..

நகரங்களின் அவசர வாழ்க்கையில் குளங்கள் இருப்பதில்லை. இருக்கின்ற குளங்களும் காங்கிரீட் கால்களுக்குள்ளே நசுங்கி, மகாபலிபோல மண்ணுக்குள் மண்ணாகிப் போய்விடுகின்றன. குளங்களுக்கு மேல் விரிகின்ற பூமியின் அடுக்குமாடி பிரமிப்புகள் தங்கள் கொண்டையிலோ, பின் முற்றத்திலோ நீச்சல் குளங்களைப் பொரிக்கின்றன. மணல் இல்லாத, மீன்களும், சிப்பிகளும் இல்லாத, குளிக்கும் எருமைகளும், வெளுக்கும் வண்ணானும் தொலைந்து போன நீச்சல் குளங்கள் பிளாஸ்டிக் பூக்களைப் போல பல்லிளிக்கின்றன. அறைகளில் குளித்தபின்பே வாசனைகளற்ற அந்தக் குளங்களில், குளிக்க வருகின்றனர் அந்தஸ்தின் பிள்ளைகள். குளோரின் போர்த்திய தண்ணீரின் எரிச்சலில் இருந்து தப்பிக்க கண்கள் கண்ணாடி முகமூடிகளுடன் இமைக்கின்றன. குளத்தை விட்டுக் கரையேறியபின்னும் ஷவர்களில் குளித்து விட்டு தான் வெளியேறுகின்றனர் மக்கள்.

நடுத்தர நகரவாசிகளுக்கு குளங்கள் பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் அடைபட்டுவிட்டன. கைப்பிடி உடைந்து போன பிளாஸ்டிக் பாத்திரங்களில் அவர்கள் குளங்களை அள்ளி அள்ளிக் குளித்துக் கொள்கிறார்கள். அவை உதட்டுக் கதவுகளைத் தாண்டி உள்ளே நுழைகையில் உப்புக் கரிக்கின்றன. இன்னும் சிலருக்கு துளித்துளியாய் ஷவர்களின் மெல்லிய துளைகள் வழியாக விழுந்து கொண்டே இருக்கிறது கிராமத்துப் பால்யத்தில் அவரவர் நீந்தி விளையாடிய குளம்.

ஏதேனும் ஒரு கதையில், “ஒரு ஊரில் ஒரு குளம் இருந்தது” என வாசிக்கும்போது எல்லோரின் மனதிலும் சட்டென மின்னி வரும் குளங்களே அவர்களுக்குள் உறைந்து கிடக்கும் குளம். குளங்கள் வற்றுவதுண்டு, ஆனால் அவை அழிவதில்லை. ஒவ்வோர் மனிதனின் நினைவுப் பிரதேசத்தின் மன விளிம்புகளிலும் இன்னும் நீர்வளையங்களை உருவாக்கிக் கொண்டே அமைதியாய் இருக்கிறது.

ரஜினி நினைவுகள்.

aaa

 

பால்யங்கள் சுவாரஸ்யங்களால் நிரம்பியது. பால்யங்களின் படியில் சிதறிக் கிடக்கும் கதைகள் உறைந்து போன காலங்களுக்குள்ளும் வெப்பத்தைப் பாய்ச்சும் வீரியம் கொண்டவை. பால்யங்களின் வீதியைக் கடந்து வெகு காலமாகி விட்டாலும் எல்லாருடைய மனதிலும் நிச்சயம் பால்ய நினைவுகள் நிழலாடிக் கொண்டே இருக்கும்.

கிராமங்களில் பால்யம் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். காரணம் வேறொன்றுமில்லை. வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் அவர்களுடைய வேர்களைப் பிடுங்கி நகரத்தின் வீதிகளில் நடும்போது, பால்யத்தின் பச்சைய நினைவுகள் அவர்களுக்கு இளைப்பாறும் சக்தியைக் கொடுக்கின்றன. நகரத்து பால்யம் வாய்க்கப் பெற்றவர்கள் தங்களுக்கென தனி உலகத்தைப் படைத்துக் கொள்கிறார்கள். நடுவயது தாண்டிய வருடங்களின் பாய்ச்சல் அவர்களை ஒருவேளை கிராமங்களின் கடைசிப் பக்கத்தில் உட்கார வைக்கும். அவர்களோ செல்போன் சிக்னல் சென்னையில் தான் கிடைக்கும் என அலுத்துக் கொள்வார்கள்.

இரண்டு வயதிற்குள் ஒரு குழந்தை உருவாக்கிக் கொள்ளும் சுவையும், உணவுப் பழக்கமும் அவர்களுடைய இறுதி காலம் வரை தொடரும் என்கின்றனர் மருத்துவர்கள். ரசனைகளும் பெரும்பாலும் அப்படியே. விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. ஆனால் விதி விலக்குகளையே விதிகளாக்கி விடுவது ரசனைத் துரோகம் இல்லையா ?

எப்போதேனும் சில்லெனும் காற்று வீசும் நகரத்தில் எப்போதும் பேருந்துகள் சக்கரங்களைத் தேய்த்துக் கொண்டிருக்கின்றன. எப்போதுமே சில்லென காற்று வீசும் கிராமங்களில் எப்போதேனும் பேருந்துகள் சக்கரங்களைத் தேய்க்கின்றன.. சக்கரங்களில் சிக்கிக் கிழியாத காற்று கிராமத்தின் வீதிகளில் அரட்டையடித்துக் கொண்டே திரிகிறது. நகரங்களில் புழுதிகளுக்கு இடையே பதுங்கி, ஆம்புலன்ஸ்களிலும் அடிபட்டு, மூச்சுத் திணறி நடக்கும் காற்றுக்கு அடிக்கடி மாரடைப்பு வந்து விடுகிறது.

எனது ரசனைகள் கிராமத்தின் வயல் வரப்புகளில் நண்டுகளைப் போல ஓடித் திரிகின்றன. சர்ப்பக் குளத்தில் பல்டியடித்துக் குளிக்கும் படிக்கட்டுகளில் பாசியாய்ப் படிந்திருக்கின்றன. பட்டன் பிய்ந்து போன காக்கி நிக்கருக்கு செயினிலிருந்து ஊக்கு எடுத்துத் தரும் பாட்டியின் நினைவுகளுடன் தான் அவை இன்னும் பயணிக்கின்றன.

அப்போதெல்லாம் தொலைக்காட்சி என்பது அந்தஸ்தின் உச்சம். பணக்காரத்தனத்தின் அடையாள அட்டை. எப்போதேனும் பக்கத்து வீட்டு சன்னல் வழியே எட்டிப் பார்க்கும் தருணங்களில் கருப்பு வெள்ளை திரைப்படப் பாடல்களும் மெய்மறக்கச் செய்யும். எங்கள் வீட்டின் அடையாளம் மர்பி ரேடியோ. தொலைக்காட்சி நுழைவதற்கான மின்சாரமே அப்போது நுழைந்திருக்கவில்லை.

ரஜினி. எனது சிறுவயதுச் சிந்தனைகளில் சினிமா என்றால் ரஜினி என்று மட்டுமே அர்த்தம். பள்ளிக்கூடங்களில் படிக்கும் காலத்தில் ரஜினியின் திரைப்பட போஸ்டர்கள் பார்ப்பதே சினிமா பார்ப்பதாய் சிலிர்ப்பைத் தரும். பாட்டு ஃபைட்டு சூப்பர் எனும் போஸ்டரின் பின் குறிப்பைப் படித்து விட்டால் தூக்கம் தொலையும். செய்தித் தாள்களில் வருகின்ற பெட்டிச் செய்திகளை வெட்டி எடுத்து கலுங்கில் அமர்ந்து விவாதம் நடத்துகையில் ஏதோ பிரபஞ்ச ஆனந்தம் கூடவே வந்தமரும். ரஜினி ரசிகன், நம் ரஜினி, சூப்பர் ஸ்டார் ரஜினி என ரஜினி பெயர் தாங்கி வரும் வியாபார யுத்திகளில் விழுந்து நான் சேமித்து வைத்த புத்தகங்களில் அப்பாவின் உழைப்பின் வாசனை இன்னும் கசிகிறது.

சினிமா பார்ப்பது என்பது அதிகபட்ட தவறு என்பதே எனது காலத்தின் வழக்கு. அந்தத் தவறை ரஜினியின் திரைப்படங்கள் செய்ய வைத்த தருணங்கள் ஏராளம். கமலுக்கெல்லாம் நடிக்கத் தெரியுமா என்று வாக்குவாதம் செய்த நிமிடங்கள் இன்னும் மனதுக்குள் சிரிப்பையும், நினைவுகளையும் தலையாட்ட வைக்கின்றன.

சாதி, மதம், இனம், மொழி, நுண் அரசியல் இத்யாதி, இத்யாதி போன்ற விஷயங்களெல்லாம் எட்டாத காலங்கள் அவை. அந்தக் காலத்தில் ரஜினி என் மனதில் நுழைந்ததற்கு அவரும் என்னைப் போல கருப்பு என்பது மட்டுமே ஒரு காரணமாய் இருக்க வாய்ப்பில்லை. நாம் செய்ய இயலாதவற்றைச் செய்யும் பிம்பங்கள் தானே சின்ன வயதின் நமது பிரமிப்புகள் !

பல மைல் தூரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டரில் ரஜினி படம் பார்த்த அனுபவங்கள் அலாதியானவை. சினிமா பார்க்கும் போது சீக்கிரம் வீடு போக வேண்டும், வீட்டில் கண்டு பிடித்து விடுவார்களோ எனும் அச்ச உணர்வே சினிமாவை விட அதிகமாய் மனசுக்குள் காட்சியாய் விரியும்.

இப்போது, நினைத்த நேரத்தில் விரல் சொடுக்கலில் ஒரு படம் பார்த்து விட முடியும் எனும் வாய்ப்புகள் வாய்க்கப் பெற்றாலும் அன்றைய அரை குறை சினிமா தந்த ஆனந்தம் கிடைப்பதில்லை. மீறுதல்களின் வழியே கிடைக்கும் நிமிடங்களில் தான் சாதனைகளின் கணங்கள் கண்ணயர்ந்து கிடக்கின்றன.

இன்றைக்கு ரசனைகளின் எல்லைகள் விரிவடைந்திருக்கின்றன. உலக சினிமாவின் அறிமுகவும் பிரியமும் அழுத்தமாய் மனதுக்குள் தடம் பதித்திருக்கிறது. நல்ல சினிமாக்கள் எது என்பதில் மாற்றுக் கருத்துகள் மின்னி மறைந்து கொண்டே இருக்கின்றன. எனினும் ரஜினி திரைப்படம் வருகிறது எனும் செய்திகள் தோன்றும் போது மனசுக்குள் நினைவுகளின் மணியோசை சத்தமாகவே ஒலிக்கிறது. பால்யத்தின் வரப்புகளில் இதயமும், மனசும் வழுக்கி ஓடுகிறது. பால்யத்தை மீட்டெடுக்கும் வயதின் ஓட்டமாக இருக்கலாம். அல்லது உறைந்து கிடக்கின்ற ரசனைப் பனிமலையில் சொட்டுச் சொட்டாய் வடியும் எரிமலைத் துளிகளாக இருக்கலாம்.

எதேச்சையாய் நினைவுக்குள் வந்தது எப்போதோ எனது பிளாகில் நான் எழுதிய ஒரு கவிதை http://xavi.wordpress.com/2006/06/15/rajini/

கருப்பு என்பதை
இளைஞர்களின்
தேசிய நிறமாக்கிய
நெருப்பு இவன்.

எனும் வரிகளை வாசிக்கும் போது சிரித்துக் கொள்கிறேன். கவிதைகளில் எதேச்சையாய் வந்து விழும் அடையாளங்கள் கிளைகளில் முளைக்கும் பூக்களல்ல.
வேர்களில் விளையும் பூக்கள்.