பால்யங்கள் சுவாரஸ்யங்களால் நிரம்பியது. பால்யங்களின் படியில் சிதறிக் கிடக்கும் கதைகள் உறைந்து போன காலங்களுக்குள்ளும் வெப்பத்தைப் பாய்ச்சும் வீரியம் கொண்டவை. பால்யங்களின் வீதியைக் கடந்து வெகு காலமாகி விட்டாலும் எல்லாருடைய மனதிலும் நிச்சயம் பால்ய நினைவுகள் நிழலாடிக் கொண்டே இருக்கும்.
கிராமங்களில் பால்யம் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். காரணம் வேறொன்றுமில்லை. வாழ்க்கை நிர்ப்பந்தங்கள் அவர்களுடைய வேர்களைப் பிடுங்கி நகரத்தின் வீதிகளில் நடும்போது, பால்யத்தின் பச்சைய நினைவுகள் அவர்களுக்கு இளைப்பாறும் சக்தியைக் கொடுக்கின்றன. நகரத்து பால்யம் வாய்க்கப் பெற்றவர்கள் தங்களுக்கென தனி உலகத்தைப் படைத்துக் கொள்கிறார்கள். நடுவயது தாண்டிய வருடங்களின் பாய்ச்சல் அவர்களை ஒருவேளை கிராமங்களின் கடைசிப் பக்கத்தில் உட்கார வைக்கும். அவர்களோ செல்போன் சிக்னல் சென்னையில் தான் கிடைக்கும் என அலுத்துக் கொள்வார்கள்.
இரண்டு வயதிற்குள் ஒரு குழந்தை உருவாக்கிக் கொள்ளும் சுவையும், உணவுப் பழக்கமும் அவர்களுடைய இறுதி காலம் வரை தொடரும் என்கின்றனர் மருத்துவர்கள். ரசனைகளும் பெரும்பாலும் அப்படியே. விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை. ஆனால் விதி விலக்குகளையே விதிகளாக்கி விடுவது ரசனைத் துரோகம் இல்லையா ?
எப்போதேனும் சில்லெனும் காற்று வீசும் நகரத்தில் எப்போதும் பேருந்துகள் சக்கரங்களைத் தேய்த்துக் கொண்டிருக்கின்றன. எப்போதுமே சில்லென காற்று வீசும் கிராமங்களில் எப்போதேனும் பேருந்துகள் சக்கரங்களைத் தேய்க்கின்றன.. சக்கரங்களில் சிக்கிக் கிழியாத காற்று கிராமத்தின் வீதிகளில் அரட்டையடித்துக் கொண்டே திரிகிறது. நகரங்களில் புழுதிகளுக்கு இடையே பதுங்கி, ஆம்புலன்ஸ்களிலும் அடிபட்டு, மூச்சுத் திணறி நடக்கும் காற்றுக்கு அடிக்கடி மாரடைப்பு வந்து விடுகிறது.
எனது ரசனைகள் கிராமத்தின் வயல் வரப்புகளில் நண்டுகளைப் போல ஓடித் திரிகின்றன. சர்ப்பக் குளத்தில் பல்டியடித்துக் குளிக்கும் படிக்கட்டுகளில் பாசியாய்ப் படிந்திருக்கின்றன. பட்டன் பிய்ந்து போன காக்கி நிக்கருக்கு செயினிலிருந்து ஊக்கு எடுத்துத் தரும் பாட்டியின் நினைவுகளுடன் தான் அவை இன்னும் பயணிக்கின்றன.
அப்போதெல்லாம் தொலைக்காட்சி என்பது அந்தஸ்தின் உச்சம். பணக்காரத்தனத்தின் அடையாள அட்டை. எப்போதேனும் பக்கத்து வீட்டு சன்னல் வழியே எட்டிப் பார்க்கும் தருணங்களில் கருப்பு வெள்ளை திரைப்படப் பாடல்களும் மெய்மறக்கச் செய்யும். எங்கள் வீட்டின் அடையாளம் மர்பி ரேடியோ. தொலைக்காட்சி நுழைவதற்கான மின்சாரமே அப்போது நுழைந்திருக்கவில்லை.
ரஜினி. எனது சிறுவயதுச் சிந்தனைகளில் சினிமா என்றால் ரஜினி என்று மட்டுமே அர்த்தம். பள்ளிக்கூடங்களில் படிக்கும் காலத்தில் ரஜினியின் திரைப்பட போஸ்டர்கள் பார்ப்பதே சினிமா பார்ப்பதாய் சிலிர்ப்பைத் தரும். பாட்டு ஃபைட்டு சூப்பர் எனும் போஸ்டரின் பின் குறிப்பைப் படித்து விட்டால் தூக்கம் தொலையும். செய்தித் தாள்களில் வருகின்ற பெட்டிச் செய்திகளை வெட்டி எடுத்து கலுங்கில் அமர்ந்து விவாதம் நடத்துகையில் ஏதோ பிரபஞ்ச ஆனந்தம் கூடவே வந்தமரும். ரஜினி ரசிகன், நம் ரஜினி, சூப்பர் ஸ்டார் ரஜினி என ரஜினி பெயர் தாங்கி வரும் வியாபார யுத்திகளில் விழுந்து நான் சேமித்து வைத்த புத்தகங்களில் அப்பாவின் உழைப்பின் வாசனை இன்னும் கசிகிறது.
சினிமா பார்ப்பது என்பது அதிகபட்ட தவறு என்பதே எனது காலத்தின் வழக்கு. அந்தத் தவறை ரஜினியின் திரைப்படங்கள் செய்ய வைத்த தருணங்கள் ஏராளம். கமலுக்கெல்லாம் நடிக்கத் தெரியுமா என்று வாக்குவாதம் செய்த நிமிடங்கள் இன்னும் மனதுக்குள் சிரிப்பையும், நினைவுகளையும் தலையாட்ட வைக்கின்றன.
சாதி, மதம், இனம், மொழி, நுண் அரசியல் இத்யாதி, இத்யாதி போன்ற விஷயங்களெல்லாம் எட்டாத காலங்கள் அவை. அந்தக் காலத்தில் ரஜினி என் மனதில் நுழைந்ததற்கு அவரும் என்னைப் போல கருப்பு என்பது மட்டுமே ஒரு காரணமாய் இருக்க வாய்ப்பில்லை. நாம் செய்ய இயலாதவற்றைச் செய்யும் பிம்பங்கள் தானே சின்ன வயதின் நமது பிரமிப்புகள் !
பல மைல் தூரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டு மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டரில் ரஜினி படம் பார்த்த அனுபவங்கள் அலாதியானவை. சினிமா பார்க்கும் போது சீக்கிரம் வீடு போக வேண்டும், வீட்டில் கண்டு பிடித்து விடுவார்களோ எனும் அச்ச உணர்வே சினிமாவை விட அதிகமாய் மனசுக்குள் காட்சியாய் விரியும்.
இப்போது, நினைத்த நேரத்தில் விரல் சொடுக்கலில் ஒரு படம் பார்த்து விட முடியும் எனும் வாய்ப்புகள் வாய்க்கப் பெற்றாலும் அன்றைய அரை குறை சினிமா தந்த ஆனந்தம் கிடைப்பதில்லை. மீறுதல்களின் வழியே கிடைக்கும் நிமிடங்களில் தான் சாதனைகளின் கணங்கள் கண்ணயர்ந்து கிடக்கின்றன.
இன்றைக்கு ரசனைகளின் எல்லைகள் விரிவடைந்திருக்கின்றன. உலக சினிமாவின் அறிமுகவும் பிரியமும் அழுத்தமாய் மனதுக்குள் தடம் பதித்திருக்கிறது. நல்ல சினிமாக்கள் எது என்பதில் மாற்றுக் கருத்துகள் மின்னி மறைந்து கொண்டே இருக்கின்றன. எனினும் ரஜினி திரைப்படம் வருகிறது எனும் செய்திகள் தோன்றும் போது மனசுக்குள் நினைவுகளின் மணியோசை சத்தமாகவே ஒலிக்கிறது. பால்யத்தின் வரப்புகளில் இதயமும், மனசும் வழுக்கி ஓடுகிறது. பால்யத்தை மீட்டெடுக்கும் வயதின் ஓட்டமாக இருக்கலாம். அல்லது உறைந்து கிடக்கின்ற ரசனைப் பனிமலையில் சொட்டுச் சொட்டாய் வடியும் எரிமலைத் துளிகளாக இருக்கலாம்.
எதேச்சையாய் நினைவுக்குள் வந்தது எப்போதோ எனது பிளாகில் நான் எழுதிய ஒரு கவிதை http://xavi.wordpress.com/2006/06/15/rajini/
கருப்பு என்பதை
இளைஞர்களின்
தேசிய நிறமாக்கிய
நெருப்பு இவன்.
எனும் வரிகளை வாசிக்கும் போது சிரித்துக் கொள்கிறேன். கவிதைகளில் எதேச்சையாய் வந்து விழும் அடையாளங்கள் கிளைகளில் முளைக்கும் பூக்களல்ல.
வேர்களில் விளையும் பூக்கள்.
You must be logged in to post a comment.