கணினி இதழ்கள் :
கணினி யுகம் ஆரம்பமான காலத்திலிருந்து பல்வேறு கணினி இதழ்கள் வெளியாகத் துவங்கின. இன்று உலகெங்கும் நூற்றுக்கணக்கான கணினி ஸ்பெஷல் இதழ்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. பழைய மற்றும் புதிய சில கணினி இதழ்களின் அறிமுகம் இது.
1. பி.சி மேகசின் ( PC Magazine )
1982ம் ஆண்டிலிருந்தே வெளிவரும் கம்ப்யூட்டர் பத்திரிகை எனும் பெயர் இதற்கு உண்டு. 2009ம் ஆண்டு வரை அச்சு இதழாக வந்து கொண்டிருந்த இந்த இதழ் இப்போது இணைய இதழாக உருமாறியிருக்கிறது. www.pcmag.com என்பது இதன் இணைய தள முகவரி. நவீன தொழில்நுட்பங்களின் அறிமுகம், மென்பொருள் வன்பொருள் குறித்த புதிய தகவல்கள், விமர்சனங்கள். மற்றும் வல்லுனர்களின் கட்டுரைகள் இதில் இடம்பெறுகிறது.
2. பைட் ( BYTE )
கணினி உதயமான காலத்தில் முதலில் கால்பதித்த வெகு சில கணினி பத்திரிகைகளில் முக்கியமானது பைட். வாசிப்புக்குக் கொஞ்சம் கடினமான முழுக்க முழுக்க தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய பத்திரிகை இது. 1975ல் முதல் பதிப்பு வெளியானது. பல்வேறு மாற்றங்களுடன் 2011 வரை இதன் பெயர் இருப்பில் இருந்தது. தற்போது அது http://www.informationweek.com/personal-tech/ எனும் தளத்துடன் இணைந்து இரண்டறக் கலந்து விட்டது.
3. பி.சி வேல்ட் (PC World )
சர்வதேச அளவில் பிரபலமான இன்னொரு கணினி பத்திரிகை பிசிவேர்ல்ட். 1982ல் முதல் பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மிகவும் வெற்றிகரமான இந்தப் பத்திரிகை பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விருதுகளையும் அள்ளியிருக்கிறது. 2006ல் உலக அளவிலேயே அதிக அளவில் அச்சாகும் கணினிப் பத்திரிகை எனும் பெயருடன் 7. 5 இலட்சம் பிரதிகள் வெளியாகிக் கொண்டிருந்தது. தற்போது அது டிஜிடல் முகத்துக்குத் தாவி http://www.pcworld.com/ என இணையத்தில் முகம் காட்டுகிறது.
4. கம்ப்யூட்டர் வேர்ல்ட் ( Computer World )
1967ல் இருந்தே ஒரு கணினி இதழ் வெளியாகிறதெனில் அது இது தான். உலகின் முதல் கணினிப் பத்திரிகை என்பார்கள். மிகவும் பிரபலமான இந்த இதழ் மாதம் இருமுறையாக மலர்கிறது. இதன் வடிவங்கள் உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் வெளியாகின்றன. அச்சு, இணையம் என இரண்டு முகம் காட்டும் இந்த இதழை www.computerworld.com எனும் தளத்தில் சந்திக்கலாம்.
5. கிரியேட்டிவ் கம்ப்யூட்டிங் ( Creative Computing )
பழங்கால கணினி இதழ்களின் பட்டியலில் இதற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. 1974 முதல் 1985 வரை இந்த இதழ் வெளியானது. புரோகிராம்களின் சோர்ஸ் கோட்-ஐ க் கொடுத்து அதை பயன்பாட்டாளர்கள் தங்கள் கணினியில் எழுதிப் பார்க்க வழி செய்தது இதன் சிறப்பு அம்சமாக இருந்தது. ஆனாலும் காலப் போக்கில் அதன் புகழ் மங்க நிறுவனம் இழுத்து மூடப்பட்டது !
6. வயர்ட் ( Wired )
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பிரபலமான கணினி பத்திரிகை வயர்ட். மென் வடிவிலும், அச்சு வடிவிலும் இந்தப் பத்திரிகை மிகப் பிரபலம். 1993ம் ஆண்டு துவக்கம் முதல் இந்த மாத இதழ் வெளியாகிக் கொண்டிருக்கிறது. www.wired.com எனும் இணைய தளத்தில் இதைக் காணலாம். இன்றைய பிரபல கணினிப் பத்திரிகைகளில் இதற்குத் தனி இடம் உண்டு.
7. மேக்ஸிமம் பி.சி Maximum PC
பூட் எனும் பெயரில் அறிமுகமாகி பிரபலமாய் இருக்கும் பத்திரிகை மேக்ஸிமம் பி.சி. http://www.maximumpc.com/ எனும் இணைய தளம் இந்தப் பத்திரிகைக்குரியது. தொழில்நுட்ப விஷயங்கள், பொருட்களின் தரமதிப்பீடு, தொழில்நுட்ப அலசல், வன்பொருட்களின் புதிய வருகை,என பல தரப்பட்ட விஷயங்களைக் கலந்து கட்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை இது !
8. மேக் வேர்ல்ட் MacWorld
ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் பத்திரிகைகள் நிறைய உண்டு. அதில் மிகப் பிரபலமான பத்திரிகை இது. 1984ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இயங்கி வருகிறது. மேக் லைஃப் எனும் பத்திரிகை இதன் போட்டியாளர் இடத்தில் இருக்கிறது. ஆனால் அதை விட இரண்டு மடங்கு அதிக சர்குலேஷனுடன் மேக்வேர்ல்ட் இயங்கி வருவது குறிப்பிடத் தக்கது. http://www.macworld.com என்பது இதன் இணைய தள முகவரி.
9. ஸ்மார்ட் கம்ப்யூட்டிங் Smart Computing
விமர்சகர்களின் தரவரிசையில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கும் இதழ் ஸ்மார்ட் கம்ப்யூட்டிங். புதிய தொழில்நுட்ப விஷயங்களை வசீகரமான வகையில் தருவதில் ஸ்மார்ட் கம்ப்யூட்டிங் இதழ் சிறப்பிடம் பிடிக்கிறது. http://www.smartcomputing.com/ என்பது இதற்கான இணைய தளம்.
10 பி.சி கேமர் PC Gamer
கணினி விளையாட்டுகளுக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் பத்திரிகைகள் ஏராளம் உண்டு. அதில் மிக முக்கியமானது பி.சி கேமர் எனும் மாத இதழ். 1993ன் இறுதியில் வெளியாகத் துவங்கிய பத்திரிகை இது. பல்வேறு நாடுகளில் இதன் வடிவங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. http://www.pcgamer.com/ என்பது இதன் இணையதள முகவரி.
You must be logged in to post a comment.