ஆண் ஒருவரின் உடலில் இருந்து உயிரைத் தனியே எடுத்தால் அவன் பிணமாவான். பெண் ஒருத்தியின் உடலிலிருந்து உயிரைப் பிரித்து எடுத்தால் அவள் தாயாவாள் !
தாய் எனும் உறவு, எந்த விதமான மகத்துவத்தோடும் ஒப்பிட முடியாத உறவு. தன்னலத்தின் ஒரு சிறு துரும்பு கூட இல்லாத தூய்மையைச் சொல்ல வேண்டுமெனில் தாயன்பைத் தான் சொல்ல வேண்டும். எல்லோருடைய மனதிலும் அம்மாவைப் பற்றிய பிம்பங்களும், பிரமிப்புகளும், நினைவுகளில் நீங்காமல் இருக்கும். பெரும்பாலான நினைவுகளை புரட்டிப் பார்த்தால் அவை பால்ய காலத்து நினைவுகளாகவே இருக்கும்.
மழலைக் காலம் தான் அன்னைக்கும், குழந்தைக்கும் இடையேயான தூய்மையான உறவின் முகவுரையை எழுதுகிறது. இறைவனின் படைப்பில் குறை என்று எதுவுமே இல்லை. பச்சைக் குழந்தை பால்குடிக்கத் துவங்கும் போது அந்தக் குழந்தையால் சுமார் 15 இன்ச் தூரம் தான் பார்க்க முடியுமாம். அது ஒரு தாயின் மார்புக்கும், முகத்துக்கும் இடைப்பட்ட தூரம். பாலும், பாசமும் ஒரே நேரத்தில் குழந்தை அருந்த இறைவன் செய்த விந்தை இது என்றால் மிகையில்லை.
“தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்” என்கிறது பைபிள். இறைவனின் அன்பை ஒப்பீடு செய்ய ஒரு தாயின் அன்பை இறைவனே தேர்ந்தெடுக்கிறார் என்றால், அவர் தாயன்பை உலகின் உன்னத அன்பாய் நிலைநாட்டியிருக்கிறார் என்பது தானே பொருள்.
அன்னையைப் பற்றிப் பேசும்போது ஒரு பிரபலமான யூதப் பழமொழியைச் சொல்வார்கள். “கடவுளால் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இருக்க முடியாது என்பதனால் தான் அன்னையைப் படைத்தார்” என்று ! கடவுளின் பிரதிபலிப்பாகவும், பிம்பமாகவுமே அன்னை நமக்கெல்லாம் தரப்பட்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
இந்த உலகம் தொழில்நுட்பத்தினாலோ, அழகினாலோ, வளங்களினாலோ கட்டி எழுப்பப்படவில்லை. அது அன்பினால் கட்டி எழுப்பப் படுகிறது. அன்பை நீக்கி விட்டுப் பார்த்தால் உலகம் வெறுமையின் கூடாரமே ! ஒரு மனிதனின் வாழ்நாளை அலசி ஆராய்ந்து பாருங்கள். அவன் நல்ல மனிதனாய் வாழ்கிறானா இல்லையா என்பதை அவன் தனது தாயை நேசிக்கிறானா இல்லையா என்பதை வைத்து அளவிடலாம். தாயை நேசிக்காத மனிதனால் மற்ற எதையும் ஆத்மார்த்தமாய் நேசிக்க முடியாது. தாயின் நேசத்தைப் பெறாதவர்களே பிற்காலத்தின் நிம்மதியற்ற, வரையறயற்ற, ஒழுங்கீனமான வாழ்க்கைக்குள் செல்கின்றனர். அன்னை தான் ஒரு குழந்தைக்கு சரியான வழியையும், வாழ்வையும் காட்ட முடியும்.
உங்கள் பெற்றோர் மீது அன்பும், மரியாதையும் வையுங்கள். அவர்களை முதிர் வயதிலும் பாதுகாத்து நேசியுங்கள். என்கிறது இஸ்லாமிய புனித நூல் குரான். ஒரு தாய் குழந்தையை நேசிக்கும் அதே நேசத்தில் தேசத்தையும் நேசியுங்கள் என்கிறார் புத்தர். கணக்கற்ற தெய்வங்களை அன்னையாய் பாவித்து அன்னைக்கு அதிகபட்ச மரியாதை செலுத்துகிறது இந்து மதம். தாயை நேசிக்க வேண்டாமெனச் சொல்லும் மதங்கள் இல்லை ! தாயின்றிப் பிறந்த மனிதர்களும் இல்லை.
உலகையெல்லாம் உருக உருக நேசித்து விட்டு, தனது தாயை முதியோர் இல்லம் அனுப்புபவர்கள் போலித்தனத்தின் பிம்பங்கள். அவர்கள் வெள்ளியடிக்கப்பட கல்லறைகள். வெறும் பெருமைக்காகத் திரிபவர்கள். அவர்கள் அன்பின் அரிச்சுவடி கூடத் தெரியாதவர்கள். இன்று உலகெங்கும் முதியோர் இல்லங்கள் புற்றீசல் போலக் கிளம்பி விட்டன. மாதம் தோறும் பணத்தைக் கட்டி கால்நடைகளைப் பராமரிக்க குத்தகைக்கு விடுவதைப் போல மனிதர்கள் செயல்படுகிறார்கள்.
தன் குழந்தையை அரை நொடி கூட இடுப்பை விட்டு இறக்கிவிட மனமில்லாமல் சுமந்து சுமந்து மகிழ்வார்கள் அன்னையர். நிலவைக் காட்டியும், நிலத்தைக் காட்டியும் சோறூட்டுவார்கள். இடுப்பில் சுமந்து கொண்டு மைல்கணக்காய் நடந்து திரிவார்கள். வினாடி நேரமும் விடாமல் நெஞ்சில் சுமந்து திரிவார்கள். அத்தகைய அன்னையரைக் கடைசியில் மகன் முதியோர் இல்லங்களில் தள்ளி விடுகிறான்.
முதியோர் இல்லங்களின் மூலைகளில் தன் மகனின் வருகைக்காக காத்திருந்து காத்திருந்து ஒரு முறை கூட எட்டிப் பார்க்காத மகனின் நினைவுகளுடன் ஏக்கத்தில் இறந்து போகும் அன்னையர் ஏராளம் ஏராளம். முதுமை என்பது இறைவனின் ஆசீர்வாதத்தின் அடையாளம். முதுமை வரை வாழ்கின்ற பெற்றோரைக் கொண்டிருப்போர் வாழ்க்கையில் அதீத அன்பை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள். அத்தகைய முதுமைப் பெற்றோரை ஒரு குழந்தையைப் போல பாதுகாப்பதில் இருக்கிறது மனிதத்தின் அழகிய வெளிப்பாடு.
இறைவனின் பிம்பங்களான அன்னையர், தாங்கள் உயிராய் நேசித்த பிள்ளைகளாலே உடைபடும் நிலையைக் காண்கையில் விழிகள் மட்டுமல்ல விரல்களும் கூட கண்ணீர் விட்டுக் கதறும். அன்னையைத் தனது இறுதி மூச்சு வரை அன்பில் சுமக்காத மனிதன், வாழ்வதில் அர்த்தமே இல்லை. ஒரு மனிதனால் உணரக் கூடிய அதிகபட்ச வலியைத் தாங்கி குழந்தையைப் பெறுகிறாள் அன்னை. அந்த வலியைத் தாங்கிய அன்னை அதை விட அதிக வலியை அனுபவிப்பது குழந்தைகள் அவர்களை உதாசீனப்படுத்தும் போது தான்.
கண்டதும் காதல் என்பார்கள், காணாமலேயே வருகின்ற அளவற்ற காதல் அன்னையிடம் தான் உருவாகும். தனது வயிற்றில் சுமக்கும் கருவின் உருவம் தெரியாமலேயே அதில் உயிரை வைத்து உருவாக்க அன்னையால் மட்டுமே முடியும். அதனால் தான் தாய் இரண்டாம் இறைவனாகிறாள். குழந்தையின் முதல் அழுகையில் மட்டும் ஆனந்தமடைந்து, அடுத்தடுத்த அழுகைகளில் கூடவே அழும் அதிசய உள்ளமாகிறாள்.
வாழ்வின் உன்னதத் தருணங்களை இரண்டு இடங்களில் தான் அனுபவிக்க முடியும். ஒன்று உங்கள் அன்னையின் அருகாமையில், இரண்டு, உங்கள் குழந்தைகளின் அருகாமையில். இரண்டுமே தாயன்பு தவழும் இடங்கள்.
தாயன்புக்கு ஈடாக எதைச் சொல்ல முடியும் ? கவிஞர் கலீல் ஜிப்ரானின் வார்த்தைகள் கவிதையாய் விழுகின்றன. ” அன்னை தான் எல்லாமே ! கவலைகளின் ஆறுதல். துயர நேரத்தின் நம்பிக்கை. பலவீனத்தை நிரப்பும் பலம். அன்பின் துவக்கம், இரக்கமும் மன்னிப்பும் உறையுமிடம். அன்னையை இழப்பவர்கள் ‘ஆசீர்வதிக்கும், பாதுகாக்கும்’ தூய ஆன்மாவை இழந்து விடுகிறார்கள்.”
தாய் இறைவனின் பிம்பம். சின்ன சொர்க்கத்தை வீடுகளில் இறக்கி வைக்கும் கடவுளின் பிரதிநிதி. அன்னையை நேசிக்கத் தெரியாதவர்கள் வாழ்க்கையை வாசிக்கத் தெரியாதவர்கள். மனிதர் என்று அவர்களை அழைக்க மறுதலித்து விடுங்கள்.
அன்னையை நேசிப்போம். நிஜத்தில் வாழ்த்தாலும், நினைவில் வாழ்ந்தாலும்.
ஃ
சேவியர்
Thanks : Vettimani, Germany
Pingback: இறைவன் படைப்பில் தாய். | SEASONSNIDUR