கோச்சடையான் – விமர்சனம்

கோச்சடையான்
———————-

 

kochadaiyaan-3v

கோச்சடையான்
———-

நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பம் என அழகு தமிழில் அழைக்கப்படும் மோஷன் கேப்சரிங் டெக்னாலஜியில் வெளியாகும் முதல் இந்தியப் படம் எனும் ஒரு மைல் கல்லுடன் இந்தத் திரைப்படம் அறிமுகமாகிறது !

அதென்ன நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பம் ? ஹாலிவுட்டில் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் தொழில் நுட்பம் தான். திரைப்படம் முழுவதுமோ, அல்லது தேவைப்படும் காட்சிகளிலோ அதை இயக்குனர்கள் பயன்படுத்துகின்றனர். ஃபேன்டஸி வகை திரைப்படங்கள், அறிவியல் புனைவுகள், கற்பனை உலகங்கள் இவற்றையெல்லாம் திரையில் கொண்டு வர ஹாலிவுட் நம்பியிருப்பது இந்த பெர்ஃபாமன்ஸ் கேப்சரிங், அல்லது மோஷன் கேப்சரிங் தொழில் நுட்பத்தைத் தான். போலார் எக்ஸ்பிரஸ், லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், டின் டின், பியோல்ஃப், அவதார், ஹாபிட் போன்றவையெல்லாம் நமக்குப் பரிச்சயமான உதாரணங்கள்.

அந்த நுட்பத்தை நம்பிக்கையுடன் தமிழ்த் திரையுலகிற்கு இழுத்து வந்திருப்பதற்காகவே சவுந்தர்யா குழுவினருக்கு பாராட்டுகளை வழங்கலாம். காலம் காலமாக திரைப்படங்கள் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கின்றன, அந்த வகையில் இப்போதைய இந்த தொழில் நுட்பமும் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் யாரும் நிராகரித்து விட முடியாது எனும் இடத்தை இப்போது எட்டிப் பிடித்திருக்கிறது.

சரி, கோச்சடையான் எப்படி ?

இல்லாத ஒன்றைப் பிரமாண்டமாகக் காட்டுவதில் தான் இந்த தொழிநுட்பம் தனது கைவரிசையைக் காட்டும். ஒரு அவதார் போல பண்டோராவை உருவாக்க வேறு என்ன வழி ? அந்த சிந்தனையை மனதில் கொண்டு தான் இப்படி ஒரு வரலாற்றுக் கதையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். மாபெரும் கோட்டை கொத்தளங்கள், மிகப்பெரிய படைக்களங்கள், சாகசங்கள், மின்னல் வேக செயல்பாடுகள் என புகுந்து விளையாடத் தோதான ஒரு கட்சிதமான கதைக் களம்.

கதையொன்றும் புதிதில்லை. தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றி, தந்தையைக் கொன்றவனைப் பழிவாங்கும் ஒரு மகனின் கதை தான். அதை கே.எஸ். ரவிக்குமார் தனக்கே உரிய மசாலாக்களுடன், திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தை தனது குரலினால் தாங்கியிருக்கிறார் ரஜினிகாந்த். தனது டிஜிடல் உருவத்துக்கு துடிக்கும் குரலினால் உயிர் கொடுத்து ரசிகர்களை படத்தோடு ஒன்றிப் போக வைத்திருக்கிறார். முடிந்த வரை ரஜினியின் மேனரிசங்கள், ஸ்டைல், அசையும் தலைமுடி என ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்திருக்கிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு மாய உலகம் என்பதை மறந்து அதனுள் நுழைந்து பயணிக்க இவையெல்லாம் ரொம்பவே உதவுகிறது.

ரஜினி, நாசர், ஷோபனா, நாசர் தவிர மற்ற கதாபாத்திரங்களின் உருவங்கள் முழுமையடையாமல் இருப்பது படத்தின் முக்கியமான குறைகளில் ஒன்றாகச் சொல்லலாம். சரத்குமார், ரஜினியின் தங்கையாக வரும் ருக்மணி இவர்களையெல்லாம் அடையாளம் கண்டு கொள்ளவே மாமாங்கம் ஆகிவிடுகிறது. நினைவில் வாழும் நாகேஷை திரையில் உலவ விட்டிருப்பதும், அதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் குரலும் அருமை ! தீபிகா படுகோன் பார்பி டால் மாதிரி அங்கும் இங்கும் அசைந்து திரிகிறார். அதிரடியாய் ஒரு சண்டையும் இடுகிறார்.

ரஜினிக்கு அடுத்தபடியாக, படத்தைத் தூக்கி நிறுத்தும் மிக முக்கியமான இன்னொரு விஷயம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. போர்களிலும், பாடல்களிலும், கடல்பயணங்களிலும், மழையிலும், பஞ்ச் வசனங்களிலும் ரஹ்மானின் இசை நம்மை கட்டிப் போட்டு விடுகிறது.

பளிச் பளிச்சென வருகின்ற வசனங்கள் படத்துக்கு வலுசேர்க்கின்றன. கே.எஸ்.ரவிகுமாரிடம் கதை- திரைகதை – வசனம் பொறுப்பை ஒப்படைத்தது இந்தப் படத்துக்கு ஒரு நல்ல தேர்வு என்பதை நிரூபித்து விடுகிறார். வேகமான முதல் பாதியும், படு வேகமான முதல் பாதியும் என அவருடைய டிரேட்மார்க் பாணியில் கதை சொல்லியிருக்கிறார்.

தொழில்நுட்பம் ? ம்ம்…. 100 ஆண்டு கால இந்தியத் திரைப்படத்திற்கு புது வரவு என்பதால் வரவேற்கலாம். ஆனால் பதினைந்து ரூபாய்க்கு லேட்டஸ்ட் ஹாலிவுட் திரைப்படங்கள் கிடைக்கும் இன்றைய சூழலில் சர்வதேச ஒப்பீடுகளையே சாமானிய ரசிகனும் செய்கிறான். அந்த வகையில் கோச்சடையான் இன்னும் பல ஆண்டுகள் தொழில்நுட்பத்தில் பின் தங்கியிருப்பது போல ஒரு உணர்வு. முப்பரிமாண தெளிவு பல இடங்களில் குறைவுபடுகிறது.

ஆனாலும் தைரியமாக எடுத்து வைக்கப்பட்ட முதல் சுவடு இது என்பதையும், பலருடைய கேலி கிண்டலையும் தாண்டி இது வசீகரிக்கிறது என்பதையும் சொல்லித் தான் ஆகவேண்டும்.

கோச்சடையான், வீச்சுடையான் !

ஆன்மீகம் : உயிர்ப்பு : உயிர்த்தெழவேண்டிய சிந்தனைகள்.

jesus2

இப்படி ஒரு காட்சியை சிந்தித்துப் பாருங்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டு, உயிர்விட்டு அடக்கம் செய்யப்படுகிறார். அவ்வளவு தான் இயேசுவின் வாழ்க்கை. இயேசுவின் வாழ்க்கை அத்துடன் நிறைவடைந்திருந்தால் இன்றைக்கு கிறிஸ்தவம் இருந்திருக்காது. இயேசுவின் சீடர்களெல்லாரும் பழைய வலைகளை தூசுதட்டிக் கொண்டு கடலில் இறங்கியிருப்பார்கள். மூணு வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டோம்பா இன்னும் கொஞ்சம் சம்பாதிச்சிருக்கலாம் என சிலர் முணுமுணுத்திருப்பார்கள்.

“பாவம், ஒரு நல்ல மனுஷன். இருந்த காலத்துல எல்லாருக்கும் உதவி செஞ்சாரு” என கூட்டம் கூடி ஒரு நாலு வருஷம் அவரைப் பற்றி அனுதாபப்பட்டிருப்பார்கள். செவி வழிக் கதைகளாக ஒரு தலைமுறை இயேசுவை நினைவில் வைத்திருந்திருக்கும். அதிகபட்சமாய், இயேசு ஒரு இறைவாக்கினர் எனும் பட்டியலுக்குள் அடைபட்டு வரலாறாக மாறியிருப்பார் ! அவ்வளவு தான்.
ஆனால், உயிர்ப்பு தான் இயேசுவைக் கடவுளின் மகனாக அங்கீகாரம் செய்தது. சீடர்களின் பயத்தையும், நடுக்கத்தையும் துரத்தியது. மானிட மகனின் விண்ணேற்புக்கும், தூய ஆவியானவரின் இறங்குதலுக்கும் அடிப்படையாய் அமைந்தது ! இயேசு வாழ்ந்த போது தயாராக்கிய சீடர்களை, பிரிந்த போது பணிக்கான உறுதியேற்கச் செய்ததும் இயேசுவின் உயிர்ப்பு தான்.

கிறிஸ்தவ விழாக்களில் மிகவும் அற்புதமான விழா என்றால் அது உயிர்ப்பு தான். அது தான் அற்புதங்களின் மீதான நமது நம்பிக்கையையும், இயேசுவின் இரண்டாம் வருகையின் மீதான எதிர்பார்ப்பையும் வலுப்பெறச் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை ! உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் ஆன்மீக நதியே அந்த விழாவின் சிறப்பாக இருக்க வேண்டும். மற்றபடி மட்டன் பிரியாணியும், கோழியும் சாப்பிடும் நாளாக அந்த நாள் மாறிப் போனால் அந்த விழாவுக்கும் மற்ற மதத்தினர் கொண்டாடும் பட்டாசு விழாக்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்கப் போவதில்லை.

“நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” ( யோ : 9:5 ) என்ற இயேசு, உலகை விட்டு விடைபெறுவதன் மூலம் “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” ( மத் 5 : 14 ) என்று அந்த ஒளியை கிறிஸ்தவர்களுக்கு வழங்குகிறார். இயேசு உலகில் இருக்கையில் தான் இந்த உலகின் ஒளியாய் இருந்தார். அவர் பிரிந்தபின் அந்த ஒளியாய்த் திகழவேண்டியது இயேசுவை நம்பும் நாம் என்பதே இறையியல் உண்மையாகும். நமது வாழ்க்கை இயேசுவைப் போல ஒளிவிடவேண்டும், உலகிற்கு ஒளியாய் மாற வேண்டும் என்பது இயேசுவின் உயிர்ப்பு சொல்லும் முதன்மைச் செய்தியாகும் !

‘உயிர்ப்பும் உயிரும் நானே எனில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்’ எனும் இயேசுவின் வார்த்தைகள் செயலாற்றம் பெற்ற தினமாக உயிர்ப்பு நாள் நமக்கு முன்னால் நிற்கிறது. ஒரு புறம் இயேசு இந்த நாளில் உயிர்க்கவில்லை, இயேசுவின் உயிர்ப்பை ஒரு விழாவாக முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கொண்டாடவில்லை, இயேசுவின் உயிர்ப்பு உண்மையில் ‘பாகான்’ விழாவின் கிறிஸ்தவ வடிவம் என்றெல்லாம் விவிலிய ஆய்வுகள் சொல்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டியும், இயேசு உயிர்த்தார், நமக்காக, நமது விசுவாச வலிமைக்காக எனும் உண்மையைக் கண்டு கொள்வது உயிர்ப்பு சொல்லும் இன்னொரு சிந்தனையாகும் !

மரணம் வலி மிகுந்தது. துயரமானது. மரணத்தின் மீதான அச்சம் கொடுமையானது. நமது மரணத்தை விட நாம் நேசிப்பவர்களின் மரணத்தையே நாம் அதிகம் வெறுக்கிறோம். அதனால் தான் கடவுள் ஆபிரகாமின் விசுவாசத்தை உறுதிப்படுத்த “ஈசாக்கின்” உயிரைப் பலியாகக் கேட்டு சோதித்தார். மரணம் எனும் பயத்தையும், மரணம் எனும் அதிர்ச்சியையும் கடந்து செல்வதற்கு நமது ஆன்மீக விசுவாசம் வலுவடைய வேண்டும் அல்லவா ? அந்த வலிமையைத் தான் மரணத்தை வென்ற இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தருகிறது. இந்த உலகைத் தாண்டிய ஒரு எதிர்நோக்கு, இந்த உலகைத் தாண்டிய ஒரு வாழ்க்கை அதுவே நமக்கு உற்சாகத்தையும், மரணத்தைக் கண்டு அஞ்சாத மனதையும் தருகிறது.

அதே வேளையில் அந்த வாழ்க்கையில் நுழைவதற்கான நுழைவுச் சீட்டை வாங்கத் தவறி விடக் கூடாது. விண்ணக வாழ்வுக்கான நுழைவுச் சீட்டு பூமியில் மட்டுமே வினியோகிக்கப்படும். அதை விண்ணக வாயிலில் பிளாக்கில் வாங்கி விட முடியாது. திரியேக நாதரின் மீதான ஆழமான நம்பிக்கையும், அந்த விசுவாசத்தைச் செயல்களில் பிரதிபலிக்கும் வாழ்க்கையும் தான் அதைப் பெற்றுத் தரும். புவி வாழ்க்கை ஒரு டிரெய்லர் போல. உண்மையான கிறிஸ்தவனின் வாழ்க்கை என்பது விண்ணக வாழ்க்கை தான். அந்த வாழ்க்கையில் நுழைவதற்கான செயல்களை இந்த வாழ்க்கையில் செய்ய வேண்டும். அந்த தீராத தாகத்தை உயிர்ப்பு நமக்கு தரவேண்டும்.

இயேசுவின் வாழ்வும், சிலுவை மரணமும், உயிர்ப்பும் நமக்குச் சொல்லும் இன்னொரு முக்கியமான சிந்தனை மன்னிப்பைப் பற்றியது ! நமது வாழ்வின் தேடல்கள் மறுமை சார்ந்தவையாய் இருக்க முக்கியமான தேவை மன்னிப்பு. நமது போராட்டங்கள் மனிதர்களோடு இராமல், சாத்தானோடு இருக்க வேண்டும். மன்னிப்பு என்பதை தனது மரணத்தின் முந்தைய வினாடி வரை இயேசு செயலாற்றிக் காட்டினார். நமக்குள் விரோதத்தின் சிந்தனைகள் இறந்து, மன்னிப்பின் மகத்துவம் உயிர்த்தெழ வேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டியது உயிர்ப்புக் காலத்தின் முக்கியமான தேவை !

“மறு பிறப்பு’ எனும் கிறிஸ்துவுக்குள் பிறக்கும் அனுபவம் நாம் கிறிஸ்தவத்தில் நுழைகையில் உருவாகிறது. பலருடைய வாழ்க்கை அத்துடன் நின்று விடுகிறது. விதை முளைத்து செடியாகி, பின் அப்படியே நின்று விடுவதைப் போல. மறு உயிர்ப்பு அனுபவம் நமக்கு முக்கியமான தேவை. இயேசுவோடு சேர்ந்து நாமும் இறந்து, அவரோடு சேர்ந்து உயிர்க்கையில் அவருடைய சாயலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதாமுக்குக் கடவுள் தனது சாயலைக் கொடுத்தார். நாம் கடவுளின் சாயலை, பாவத்தை மரணமடையச் செய்து பரமனில் உயிர்ப்பதன் மூலம், பெற்றுக் கொள்ளவேண்டும். சிலுவையில் இயேசு நமது பாவங்களுக்காக இறந்தார் எனில், நாம் இன்னும் பாவத்தைச் சாகடிக்காமல் இருந்தால் மீட்பு எப்படி பிறக்க முடியும் ? பாவங்களைக் கொன்று, உயிர்த்து எழுவதில் தான் நமது உயிர்ப்பு விழா அர்த்தப்படும்.

இயேசுவைச் சிலுவையில் அறைந்தவர்கள் யார் என்று கேட்டால் ஒரு பட்டியல் போட முடியும். யூதாஸ், அன்னா, கயபா, படை வீரர்கள் என அந்தப் பட்டியல் நீளும் ! உண்மையில் அவர்களின் பிம்பங்களாகத் தானே நாம் வாழ்கிறோம் ? இயேசு சொன்னதை இயேசுவின் காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் நம்பவில்லை. அதை தேவ தூஷணம் என்றார்கள். இயேசு சொன்னதை நாமும் இன்று நம்புவதில்லை. நம்பியிருந்தால் அவருடைய வார்த்தைகளைக் கடைபிடித்திருப்போம். என்னை நம்புபவன் அதை செயலில் காட்டவேண்டும் என்று தானே இயேசுவே போதித்தார். நாம் செயல்படாத விசுவாசத்தைக் கொண்டிருக்கும் வரை தொடர்ந்து இயேசுவைச் சிலுவையில் தானே அறைகிறோம் !

பாஸ்டில் ஆலயத்தில், 1520ம் ஆண்டு மார்டின் லூதர் கிங் அவர்கள் ஆற்றிய உரை அற்புதமானது ! “சர்ப்பத்தின் தலை நசுக்கப்பட்டது என நீங்கள் நம்பினால், உங்களுக்காக அது நசுக்கப்பட்டது என்பது உண்மையாகிவிடும். இந்த விதையால் மனுக்குலம் மகிழும் என நீங்கள் நம்பினால், நீங்களும் சேர்ந்தே அந்த மகிழ்ச்சியில் இணைகிறீர்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக சர்ப்பத்தின் தலையை நசுக்கித் தான் மீட்படைய வேண்டும் எனும் கட்டாயம் இருந்திருந்தால் அது மிகவும் கடினமானதாகவும், ஏன் இயலாத ஒன்றாகவும் மாறியிருக்கக் கூடும். ஆனால் இப்போதோ கிறிஸ்துவால் அது மிகவும் எளிதாகியிருக்கிறது. நாம் அனைவரும் உண்மையாகவே கிறிஸ்துவை இன்னும் ஆழமாய் அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் கிறிஸ்துவோடு உயிர்த்தெழவேண்டும். அப்போது கிறிஸ்து தந்தையில் மகிமையடைந்தது போல, நாம் கிறிஸ்துவில் மகிமையடைவோம் !” – என்றது அவரது உரை !

உயிர்ப்பு தான் சாத்தானின் அத்தனை கொடுக்கையும் உடைத்து, இயேசுவை நமது திருச்சபையின் தலைவராக்கியது. உயிர்ப்பு தான் மரணத்தின் மீதான வெற்றியைத் தந்திருக்கிறது. உயிர்ப்பு தான் இயேசு மீண்டும் தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து வருவார் என்பதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது. உயிர்ப்பு தான் கிறிஸ்தவர்களை கிறிஸ்துவின் பிள்ளைகளாகவும், கிறிஸ்தவ ஆன்மீகத்தின் வீரர்களாகவும் உருவாக்கியிருக்கிறது.

எத்தனையோ ஆண்டுகள் உயிர்ப்பு தினத்தைக் கொண்டாடியிருப்போம். எல்லா ஆண்டும் நாம் கொண்டாடுவது இயேசுவின் உயிர்ப்பைத் தான். நமது உயிர்ப்பைப் பற்றிய சிந்தனை நமக்கு இருப்பதில்லை. காரணம், நமது பாவத்தைப் பற்றிய புரிதலோ, விழிப்புணர்வோ நம்மிடம் இருப்பதில்லை. இந்த ஆண்டாவது அந்தப் புரிதலுடன் கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாடுவோம்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சகோதரர் ஸ்பர்ஜன் ஒரு அழகான காட்சியைச் சொல்கிறார். கிறிஸ்துவைப் போல அவருடைய தூய்மையான வாழ்வுக்குள் நுழைவதைப் பற்றிய காட்சி அது. புனித வாழ்க்கையை நோக்கிய பயணத்தின் அதி முக்கியத் தேவை !

ஒரு நதியில் சில்லென தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவர் அதில் கையை வைத்துப் பார்த்து “அய்யோ.. குளிரில் விறைத்துப் போகிறேன்” என்கிறார். இன்னொருவர் காலை வைத்துப் பார்த்து, “ஐயோ நடு நடுங்குகிறேன்” என்கிறார். இன்னொருவர் ஓடிவந்து முழுதாய் நதியில் குதித்து நீச்சலடிக்கிறார், “வாவ்… ரொம்ப உற்சாகமாய் இருக்கிறது” என்கிறார். கிறிஸ்துவின் புதிய வாழ்க்கைக்குள் நுழையும் அனுபவம் இப்படித் தான் இருக்க வேண்டும். முழுமையாய் அர்ப்பணித்து விடுதல். பாவமற்ற வாழ்க்கையைக் கண்டு பயப்படுவதோ, தயங்குவதோ நம்மை புதிய வாழ்க்கைக்குள் வழி நடத்தாது. சந்தேகங்கள், பயங்கள், தயக்கங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு முழுமையாய்க் குதிப்பதே மிக முக்கியம் !

இந்த உயிர்ப்பு தினத்தில் நாம் நமது உயிர்ப்பையும் சிந்திப்போம், இயேசுவின் உயிர்ப்பை மட்டுமல்ல !
அனைவருக்கும், உயிர்ப்பின் நல் வாழ்த்துகள்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ இதழ்..

கிறிஸ்தவம் : தபசுகாலம் சொல்வதென்ன ?

 

lent-40-days

 

நண்பனிடம் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னான், ‘எனக்குப் பிடிக்கவே புடிக்காத ஒரு காலகட்டம் இந்தத் தவக்காலம் தான்’. “ஏன் அப்டி சொல்றே?” என்று திருப்பிக் கேட்டேன். “இல்ல, இந்த நாப்பது நாளும் வீட்ல கோழியும் அறுக்க மாட்டாங்க, மீனும் வாங்க மாட்டாங்க. ஈஸ்டருக்குத் தான் இனிமே நான்வெஜ் ! இந்த நாற்பது நாளும் நமக்கு தவக்காலம், கோழிகளுக்கு நல்லகாலம் ! ” என்று சிரித்தான்.

தவக்காலம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய்த் தொடுகிறது. லெந்து நாட்களின் முழுமையான புரிதல் பெரும்பாலானவர்களிடம் இல்லை. அது துயரத்துடன் கடந்து போகவேண்டிய ஒரு காலகட்டம் என்றே பலரும் நினைக்கிறார்கள். கிறிஸ்தவத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இந்தத் தவக்காலத்தை ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள்.

ஒரு பிரிவினர், இந்தக் காலகட்டத்தை கெட்டபழக்கங்களுக்குத் தற்காலிகத் தடை போடும் காலமாகப் பார்க்கிறார்கள். தம் அடிக்கிறவங்களும், தண்ணி அடிக்கிறவங்களும் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு நாற்பது நாட்கள் அதை விட்டு விலகியிருப்பார்கள். அசைவத்தை ஒரு கட்டு கட்டுபவர்கள் இந்தக் காலகட்டத்தில் கீரை தின்று முழி பிதுங்குவார்கள். வாரத்துக்கு இரண்டு தடவை ஆலயத்துக்குப் போவார்கள். முடிந்தால் ஏழைகளுக்குக் கொஞ்சம் நல்ல விஷயங்களைச் செய்வார்கள்.

ஒறுத்தல் முயற்சி என்று இதைப் பெயரிட்டு அழைக்கிறார்கள். “உங்களுக்கு ரொம்பப் புடிச்ச ஒரு விஷயத்தைக் கடவுளுக்காக விட்டு விடுங்கள்” என்பதே அவர்களுடைய சிந்தனையில் அடிப்படை. சாப்பாடு, சினிமா, என்று இருந்த பிடித்த விஷயங்கள் இன்றைக்கு மாறி விட்டது. வீடியோ கேம்ஸ், அனிமேஷன் மூவீஸ், எஸ்.எம்.எஸ், இன்டர்நெட் என விருப்பங்கள் மாறிவிட்டன. எனவே நிஜமாகவே மக்கள் ‘அடுத்த நாப்பது நாள் நான் வெட்டியா எஸ்.எம்.எஸ் அனுப்பவே மாட்டேன்’ என்றெல்லாம் உறுதி மொழி எடுத்துக் கொள்கிறார்கள்.

நோன்பு அதாவது உபவாசம் இருப்பது இந்தக் காலகட்டத்தில் ஒரு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். சிலருக்கு அது வெள்ளிக்கிழமை. சிலருக்கு ஞாயிறு. இன்னும் சிலருக்கு அதெல்லாம் முடியாத சமாச்சாரம்.  ‘எனக்கு சாப்டலேன்னா தலைவலி வந்துடும்’, ‘எப்பவும் டிராவல்ல இருக்கிறதனால சாப்டாம இருக்க முடியல’ என்று சில சால்ஜாப்புகள் அவர்களுடைய கைவசம் எப்போதும் இருக்கும். இந்த நோம்பு காலம் புதிய ஏற்பாட்டில், இயேசுவின் மறைவை ஒட்டி முளைத்த விஷயம் அல்ல. எஸ்தர், தானியேல், யோபு ஆகிய நூல்களில் இத்தகைய நாற்பது நாள் நோன்பு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது இயேசுவின் மறைவுக்குப் பின்பு கண்டு பிடிக்கப்பட்ட ஒன்று அல்ல, பழைய வழக்கத்தின் தொடர்ச்சியே.

தவக்காலம் சாம்பல் புதனில் துவங்கி, உயிர்ப்பில் முடிவடைகிறது என்பது நமக்குத் தெரிந்தது தான். கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் அதி முக்கியமான நிகழ்வு உயிர்ப்பு தான். இயேசுவின் உயிர்ப்பு தான் அவரை ‘இறைவாக்கினர்’ எனும் நிலமையிலிருந்து ‘இறைமகன்’ எனும் நிலைக்கு மாற்றி நமது விசுவாசத்தை ஆழப்படுத்தியது. கிறிஸ்தவர்கள் அதை பல வேளைகளில் உணர்வதில்லை. நமது வீடுகளிலோ, காலன்டர்களிலோ இருக்கின்ற இயேசுவின் படங்களில் ‘இயேசு உயிர்த்து எழுகின்ற’ காட்சி இருக்குமா என்றால் சந்தேகமே. பெரும்பாலும் சிலுவையில் அறையப்பட்டு தொங்கும் ஒரு பாவப்பட்ட முகமோ, கதவைத் தட்டும் இயேசுவோ தான் கண்களுக்குத் தட்டுப்படுவார்.

தவக்காலத்தின் பின்னணி ரொம்ப சுவாரஸ்யமானது. இந்த சாம்பல் புதன் தினம் கிபி 900 களில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், முதலில் இது சாம்பல் தினம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாறு சொல்கிறது. ஆரம்ப காலத்தில் தவக்காலம் என்பது நாற்பது மணி நேரமாக இருந்திருக்கிறது. இது இயேசுவின் பாடுகள் மற்றும் கல்லறையில் அவர் இருந்த காலத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது. மூன்றாம் நூற்றாண்டில் இது ஆறு நாட்கள் என மாற்றப்பட்டு, கிபி 800களில் 40 நாட்களாக மாற்றப்பட்டது.

சாம்பல் புதனுக்கும், உயிர்ப்புக்கும் இடையே இருக்கும் 40 நாட்களில் ஓய்வுநாட்கள், அதாவது ஞாயிற்றுக் கிழமைகள், கணக்கில் வராது என்பதை நாம் அறிவோம். இந்த நாற்பது எனும் கணக்கு இயேசுவின் நாற்பது நாள் வனாந்தர அனுபவத்தில் நாம் நுழையும் முயற்சி என விவிலிய அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

சாம்பல் புதனுக்கு முன்னால் இருக்கிறதே ஒரு செவ்வாய்க்கிழமை. இதற்கும் உலகின் சில பாகங்களில் ஒரு முக்கியத்துவம் உண்டு. பிரான்சில் இந்த நாளை “மார்டி கிராஸ்” என்று அழைக்கிறார்கள். ஜெர்மானியர்கள் இந்த நாளை “ஃபாஸ்சிங்” என்று குறிப்பிடுகிறார்கள். பொதுவான பெயராக “ஷ்ரோவ் செவ்வாய்” என இந்த நாள் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் என்ன செய்வார்கள் தெரியுமா ? எவ்வளவு சாப்பிட முடியுமோ, அவ்வளவு சாப்பிட்டு ரொம்ப சந்தோசமாக இந்த நாளைக் கொண்டாடுவார்களாம்.

தவக்காலம் என்பது ஒரு அடையாளத்தின் நாளாகிப் போய்விட்டதோ எனும் கவலை எழுவது இயல்பே. தவக்காலம் இயேசுவின் பாடுகளைச் சிந்தித்து அழுவதற்கான காலமோ, அல்லது அந்த சோகத்தை முகத்தில் பூசிக்கொண்டு திரிவதற்கான காலமோ அல்ல. நமது பாவங்களைக் குறித்து சிந்தித்து அதிலிருந்து மனம் திரும்பி வெளியே வருவதற்கு தூய ஆவியின் உதவியை நாடும் காலம். இயேசுவே சொல்கிறார், “எனக்காக அழவேண்டாம், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்று ! மீட்பு என்பது குடும்பம் குடும்பமாகவும் வரலாம். எனவே ஒட்டு மொத்த குடும்பத்துக்காகவே செபிக்கவும், அழவும் நாம் அழைக்கப்படுகிறோம். நோவாவின் காலத்தில் நேர்ந்ததும் அதுவே. நோவா மட்டும் பேழையில் நுழையவில்லை, அவரோடு அவருடைய குடும்பத்தினரையும் கடவுள் காப்பாற்றினார்..

மனம் திரும்புதலே தவக்காலத்தின் அடிப்படை. அதற்கு முதலில் எதிலிருந்து மனதைத் திருப்ப வேண்டும் எனும் புரிதல் அவசியம். மிக முக்கியமாக பாவத்திலிருந்து நாம் திரும்ப வேண்டும். நாம் என்னதான் நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தாலும் “மீண்டும் பிறக்கும்” அனுபவம் இல்லையேல் மீட்பு இல்லை என்கிறார் இயேசு. “ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் அவன் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான். யோ:3:3″ ஒளியில் வாழும் வாழ்க்கையே கிறிஸ்து சொன்ன வாழ்க்கை. இருளில் இருப்பவர்கள் இருள் சார்ந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள். அது பாவம் சூழ்ந்த வாழ்க்கை. வெளிச்சத்தை விரும்புபவர்கள் இறைவனின் திருமுன் வருவார்கள். இந்த தவக்காலம் முதலில் நமக்குச் சொல்லித் தருவது நம்முடைய பாவ வாழ்க்கையை விட்டு விட்டு மனம் திரும்பவேண்டும் எனும் முடிவை எடுப்பது தான்.

நீங்கள் செய்த ஒரு கொலைக்காக உங்கள் தந்தை ஜெயிலுக்குப் போகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். தந்தையை ஜெயிலில் அடித்து உதைத்து தூக்குத் தண்டனை கொடுக்கிறார்கள். அவருடைய துயரத்தையும் மரணத்தையும் நினைத்து அழுது கொண்டே நீங்கள் மீண்டும் மீண்டும் சட்ட விரோத செயல்கள் செய்து கொண்டிருந்தால் அதன் பயன் என்ன ? தந்தை உங்களைக் காப்பாற்ற உயிர்விட்டதன் பயன் என்ன ? உங்களுடைய செயல்கள் உங்களை ஒரு நாள் நிச்சயம் அழிவுக்குக் கொண்டு செல்லும் இல்லையா ? இதையே இயேசுவின் வாழ்க்கை நமக்குச் சொல்லித் தருகிறது. நமது பாவங்களுக்காக அவர் உயிரை விட்டார். நாமோ தொடர்ந்து பாவம் செய்கிறோம், தண்டனைக்கான நியாயத் தீர்ப்பு நாளை நாம் மறந்தே போய்விடுகிறோம்.

அதை நினைவில் கொள்வதற்கான அழைப்பாக நாம் இந்த தவக்காலத்தை மனதில் கொள்ளலாம். நமக்கு நன்றாகத் தெரிந்த பாவங்களிலிருந்து விடுதலை பெற முதலில் இறைவனின் உதவியை நாடவேண்டும். சிற்றின்பம், கோபம் போன்ற பாவங்கள் இயேசு நேரடியாகவே கண்டித்தவை. அவற்றிலிருந்து வெளியே வரும்போது நம்மிடமிருக்கும் அடுத்த நிலை பாவங்கள் தெரியத் துவங்கும். அதையும் விடடு விடவேண்டும். இப்படி படிப்படியாக ஒவ்வொரு பாவமாக விட்டு விடும் போது நாம் இயேசு வாழ்ந்த வாழ்க்கையை நோக்கி நகர்கிறோம் என்று பொருள். இயங்காமல் இருக்கும் காஸ்ட்லி காரை விட ஓடிக்கொண்டிருக்கும் மாட்டு வண்டியே மேலானது ! ஒவ்வொரு படியாக, ஒவ்வொரு பாவமாக நாம் விட்டு விடுதலே புனிதத்தை நோக்கிய வாழ்க்கையின் முதல் படி.

இயேசு மனிதனாய் வந்ததன் நோக்கமே அது தான். ஆதாம் மனுக்குலத்தின் முதல் துளி. ஆதாம் ஏவாளுடன் பாவமும் துவங்கியது. காயின் பாவத்தின் அடுத்த நிலைக்குச் சென்றான். மனுக்குலம் படிப்படியாய் இருளடைந்தது. ஆங்காங்கே தோன்றிய வெளிச்ச விதைகள் தவிர எங்கும் கும்மிருட்டு. அந்த இருட்டை அழித்து மீண்டும் ஒரு தூய வாழ்க்கைக்கான வாய்ப்பையும், வழியையும் நமக்கு உருவாக்கித் தந்தது தான் இயேசு செய்த பணி. நாம் இயேசுவின் வார்த்தைகளையும், வாழ்க்கையையும் இறுக்கிப் பிடிக்க வேண்டும். ஒவ்வொரு செயலிலும் அவருடைய வாசனை வீச வேண்டும். அதுவே அற்புதமான கிறிஸ்தவ அனுபவம்.

பாவம் எனும் மிகப்பெரிய இருட்டைக் கடந்தால் நமக்கு அடுத்தடுத்த வழிகள் புலப்படும். ‘தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியம் செய்ய உங்களால் ஆகாது” எனும் இயேசுவின் போதனை உலக செல்வங்களிலிருந்து நாம் மீட்படைய அழைப்பு விடுக்கிறது. நியாயப் பிரமாணங்களைக் கோடிட்டுக் காட்டி எளியவர்களை வஞ்சித்த பரிசேயர்கள் இயேசுவால் புறக்கணிக்கப்பட்டனர். சட்டங்களிலிருந்து விடுதலை பெற்று அன்பில் நிலைபெற அது நமக்கு அழைப்பு விடுக்கிறது. ‘பயப்படாதீர்கள்’ எனும் இயேசுவின் போதனை விசுவாசத்தை இறுகப்பற்றிக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறது. அனைத்தையும் பகிர்ந்து ஏழைகளுக்குக் கொடுக்கச் சொன்ன இயேசுவின் போதனை சுயநலத்தை வெறுக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது.

இந்த அர்த்தங்களைப் பற்றிக் கொள்வதே தவக்காலத்தில் நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம். அதைத் தாண்டிய அடையாளங்கள் இரண்டாம் பட்சமே. இதையே பைபிளும் நமக்குப் போதிக்கிறது. உதாரணமாக கிறிஸ்துவின் பிறந்த நாளையோ, லெந்து நாட்களையோ இயேசுவின் அப்போஸ்தலர்கள் கொண்டாடவில்லை. அதைக் குறித்த நிகழ்வுகளோ, முக்கிய குறிப்புகளோ முதல் நூற்றாண்டிலும் காணப்படவில்லை. கிபி 325ல் நெசியா கவுன்சில் தான் லெந்து நாட்களை அங்கீகரித்தது! நாமும் லெந்து நாட்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதே முக்கியம், அடையாளங்களை அல்ல.

எத்தனையோ தபசுகாலங்கள் வந்து போய்விட்டன. எத்தனையோ தபசு காலங்களை நாம் அனுசரித்து முடித்தும் விட்டோம். கடந்த தபசு நாளுக்கும், இந்த நாளுக்கும் இடையே நாம் எவ்வளவு தூரம் பாவத்தை விட்டு விலகியிருக்கிறோம். எவ்வளவு தூரம் இயேசுவை நெருங்கியிருக்கிறோம் என்பதைக் கொஞ்சம் ஆய்வு செய்வோம். நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் ஒரு படியேனும் முன்னேற்றம் இல்லையேல் நமது தபசு காலங்கள் உண்மையில் வீணானவையே !

இந்த தபசுகாலத்திலாவது ஒரு உறுதி மொழி எடுப்போம். நமக்குத் தெரிந்த பாவங்களை விலக்குவோம். இருட்டுக்குள் இருக்கும் வரை நமது பாவங்கள் நமக்குத் தெரிவதில்லை. நாம் ஒவ்வொரு பாவத்தை விலக்கும் போதும் இயேசுவின் ஒளி நம்மீது கொஞ்சம் அதிகமாய்ப் பாயும். அது நமது அடுத்தடுத்த பாவங்களை நமக்கு அடையாளம் காட்டும். அவற்றையும் நாம் இறைவனின் அருளால் கடப்போம். இப்படியே தொடர்ந்து இயேசுவோடு நடப்போம். அதுவே ஆன்மீக வளர்ச்சி. அதுவே இயேசு விரும்பிய மாற்றம்.

மனமாற்றம் என்பது உணவையோ, உடையையோ மாற்றுவதல்ல, மனதை முழுமையாய் இறைவன் பக்கமாய்த் திருப்புவதே.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.

கிறிஸ்தவம் : தரமான வாழ்வே, வரமான வாழ்வு

 

qw

வெண்டக்காயை உடைச்சுப் பாத்து வாங்கு, முருங்கக் காயை முறுக்கிப் பாத்து வாங்கு என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். சந்தையில் பொருட்கள் வாங்கும் போது இதையெல்லாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. வாங்கும் காய்கறி தரமான காய்கறியாய் இருக்க வேண்டும் எனும் ஆர்வம் தான் அதன் காரணம். எந்த விதத்திலும் ஏமாந்து விடக் கூடாது என்பதில் கழுகுக் கவனம் நம்மிடம் இருக்கும். புழு விழுந்த கத்தரிக்கா ஒரு மூட்டை வாங்குவதை விட நல்ல கத்தரிக்கா கால் கிலோ வாங்கணும் என்பது தானே நமது அக்மார்க் திட்டம்.

இன்னும் ஒரு படி மேலே போய் புடவைக் கடையில் போய் பார்த்தால் தெரியும், நூலை இழுத்துப் பார்த்து, ஓரத்தைக் கசக்கிப் பார்த்து, ‘ஏங்க இது ஒரிஜினல் தானா’ என நாலு தடவை கடைக்காரரை இம்சைப்படுத்தி, மலை போன்ற புடவைக் குவியல்களிடையே ஒன்றை எடுக்க பெண்கள் நடத்தும் தேடல். நொந்து நூடூல்ஸாகிப் போகும் கணவர்களுக்கென்றே கடைகளின் ஓரமாய் ஒரு சோபா போட்டிருப்பார்கள். அந்த சோபாக்களில் அமர்ந்து கணவர்கள் விடும் குறட்டைக்குக் காரணம், பெண்களின் தரமான புடவைத் தேடல் தான்.

இதே சிந்தனை தான் எந்த ஒரு பொருளை வாங்கும் போதும் இருக்கும். தங்கமோ, நிலமோ, உடையோ எதுவானாலும், தரமானதையே தேடுவோம். இதே சிந்தனை தான் நமது கிறிஸ்தவ வாழ்க்கையிலும் இருக்க வேண்டும். அதையே இயேசு விரும்புகிறார். தரமான கிறிஸ்தவ வாழ்க்கை, நம்முடைய தினசரி வாழ்க்கையில் வெளிப்படவேண்டும்.

இயேசு தன்னோட காலத்தில் ஆயிரக்கணக்கான ஆட்கள் தன் பின்னால் வரணும் என்று நினைக்கவில்லை. போற இடமெல்லாம் போஸ்டர் ஒட்டவேண்டும் என்றோ, கட் அவுட் வைத்து கௌரவிக்க வேண்டுமென்றோ அவர் ஆசைப்படவில்லை. ஒரு சின்ன குழு. அதை ரொம்ப நல்ல குழுவாக உருவாக்க வேண்டும், என்பது தான் அவருடைய சிந்தனை. அதனால் தான் வெறும் பன்னிரண்டு பேருடன் அவருடைய பணியின் அஸ்திவாரத்தை உருவாக்கினார். அவர்களுக்கு பணிவைப் போதித்தார், துணிவைப் போதித்தார், விசுவாசத்தைப் போதித்தார். இன்றைக்கு கிறிஸ்தவம் இத்தனை பெரிய அளவில் விரிவடைந்திருக்கக் காரணம் அந்த சின்னக் குழு தான். அவர்களுக்குள் இருந்து செயலாற்றிய தூய ஆவியானவரும், விசுவாசமும் தான்.

இன்றைக்கு நாடுகள் கடந்து, தேசங்களின் எல்லைகள் தாண்டி பயணம் செய்கிறோம். இயேசுவின் பயண எல்லை வெறும் 200 மைல் சுற்றளவு தான் என்கின்றனர் விவிலிய ஆய்வாளர்கள். எவ்வளவு தூரம் பயணம் செய்தேன், எத்தனை இலட்சம் மக்களை சந்தித்தேன் எனும் புள்ளி விவரங்களை இயேசு விரும்பவில்லை. பயணத்திலும் அர்த்தமான பயணத்தையே விரும்பினார். கிலோ மீட்டர்களால் தன்னுடைய பயணத்தை அவர் குறித்து வைக்கவில்லை.

இயேசுவின் போதனைகள் கூட ‘அளவு’ எனும் புற எல்லையைத் தாண்டி, புனிதம் எனும் அக எல்லையையே குறி வைத்தது. அதில் தான் இறை வாழ்வின் உயர்ந்த தரம் அடங்கியிருக்கிறது. இயேசுவின் போதனைகள் சட்டங்களாக இல்லாமல் போனதன் காரணம் அது தான். சட்டங்கள் இருந்தால் வேற வழியில்லாமல் அதைக் கடை பிடிப்பவர்களாகத் தான் மக்கள் இருப்பார்கள். பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என்றொரு சட்டம் இருப்பதால் பிறருடைய பொருட்களை விட்டு வைக்கிறோம். ஆனால் பிறர் மீதான அன்பினால் நாம் அப்படி இருப்பதே உயரிய வாழ்க்கை ! அதனால் தான் இயேசு சொன்னார், “பாத்திரத்தின் வெளிப்பக்கத்தை சுத்தம் செய்வதல்ல, உள் பக்கத்தை சுத்தம் செய்வதே அவசியம்” என்று.

நல்ல இதயம் என்பது தரமான வாழ்க்கையின் அடிப்படை. தூய்மையான மனம், தூய்மையான சிந்தனை, இவை இருந்தால் நமது செயல்களும் நல்ல செயல்களாகத் தான் இருக்கும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லுவார்கள். அகத்தின் அழகு மட்டுமல்ல, அகத்தின் அழுக்கும் முகத்தில் தெரியும். என்னதான் தங்கத்தால வேலி கட்டி, சர்க்கரைத் தண்ணி ஊத்தி வளத்தினாலும் மாமரத்தில் மாதுளம் பழம் காய்க்கப் போவதில்லை. உள்ளே உள்ள தன்மை தான் செயலில் வெளிப்படும். எனவே தான் மனம் சார்ந்த போதனைகளை இயேசு முதன்மைப் படுத்தினார்..

ஆலயத்தில் இரண்டு காசு போட்ட விதவையை இயேசு பாராட்டியதன் காரணம் அது தானே ! அள்ளி அள்ளிக் கொடுப்பதல்ல முக்கியம். ஆனந்தத்தோடு கொடுப்பதே முக்கியம். பத்தில் ஒரு பங்கு கொடு – என்பது சட்டம். அதற்காக பத்தில் ஒரு பங்கு கொடுப்பவர்களெல்லாம் ஆனந்தத்தோடு கொடுப்பார்கள் என்று சொல்லமுடியுமா ? எவ்வளவு கொடுக்கிறியோ அதை மகிழ்ச்சியோடு கொடு. என்பது தான் இயேசுவின் போதனை. இன்னும் சொல்லப் போனால் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல முக்கியம், எப்படிப்பட்ட மனநிலையில குடுக்கிறோம் என்பது தான் முக்கியம், என்கிறார் இயேசு.

ஒருவன் கொலை செய்யாமலோ, பாலியல் தவறு செய்யாமலோ, களவு செய்யாமலோ இருப்பதற்குக் “காரணம்” என்ன என்பதையே இயேசு நோக்கினார். நீ வெறும் சட்டத்துக்காக இதையெல்லாம் செய்தால் அதனால் எந்த பயனும் இல்லை. ஆனால் கடவுளின் மீதான அன்பினால் இதையெல்லாம் செய்தால் உனக்கு நிச்சயம் பலன் உண்டு. காரணம் அது தான் உன்னுடைய உண்மையான மனதை வெளிப்படுத்துகிறது. அதனால் தான் இயேசுவின் போதனை பத்து கட்டளைகளாக வரவில்லை. அன்பின் இரண்டு கிளைகளாக வந்தது. இறைவனை நேசி, மனிதனை நேசி ! அவ்வளவு தான்.

கொலை செய்யாதே, விபச்சாரம் செய்யாதே, களவு செய்யாதே என்றெல்லாம் இயேசு போதிக்கவில்லை. அதன் அடுத்த நிலைக்குச் சென்றார். கொலை அல்ல, கொலைக்குக் காரணமான கோபம் கூட உன்னிடம் இருக்க வேண்டாம் என்றார். விபச்சாரம் செய்யாமல் இருப்பதல்ல, அடுத்த பெண்ணை இச்சையுடன் நோக்குவதையே நிறுத்து என்றார். களவு செய்யாமல் இருப்பதல்ல, அடுத்தவனை உன்னைப் போல நினை என்றார். இயேசு வேர்களை விசாரித்தார். தூய்மையின் அடுத்தடுத்த நிலைகள் என்பது நமக்கு உள்ளே இறங்குவது. புனிதப் பயணம் என்பது நாம் செல்வதல்ல, நமக்குள் செல்வது.

நோன்பு இருக்கணுமா, இரு. ஆனால் வேறு யாருக்கும் சொல்லாதே. செபம் செய், ரொம்ப நல்லது. ஆனால் அறைக்குள் போய் கதவைப் பூட்டிக் கொண்டு செபம் செய். ஓவரா பிதற்றத் தேவையில்லை, ரொம்ப நேரம் பேசத் தேவையில்லை. சுருக்கமா சொன்னாலே போதும். அது நல்ல ஆத்மார்த்தமான பிரார்த்தனையாய் இருக்கணும். அவ்வளவு தான். இயேசுவின் போதனைகள் உண்மையானவை. தரத்தின் உச்சத்தைத் தொட்ட எளிமையான போதனைகள்.

மோசேயின் சட்டங்களை பல இடங்களில் இயேசு மீறி புதிய வழிகாட்டுதலை மக்களுக்கு வழங்கியதன் காரணம் மக்களின் வாழ்க்கையை தரமானதாக மாற்றுவதற்குத் தான். மணமுறிவு என்பதை சகட்டு மேனிக்கு நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் இயேசு என்ன சொன்னார் ? ஆதியில் கடவுள் ஆணும் பெண்ணுமாகத் தான் படைத்தார். எனவே மண முறிவு என்பதை பாலியல் குற்றம் எனும் ஒரு காரணம் தவிர வேறு எதற்காகவும் பண்ண வேண்டாம் என்றார். ‘உங்கள் கடின உள்ளத்தின் காரணமாகத் தான்’ மோசே அப்படி ஒரு போதனையைத் தந்தார் என்று சொல்வதன் மூலம் இயேசுவின் சிந்தனை நமக்கு பளிச் என தெரிகிறது இல்லையா ?

விபச்சாரப் பாவத்தில் பிடிபட்ட பெண்ணையும் மோசேயின் கட்டளையைக் காட்டி கற்களோடு விரட்டியது கும்பல். இயேசு சட்டங்களைப் பேசவில்லை. ஆதாரங்களைக் கேட்கவில்லை. சமூகத்திலிருந்து இந்தப் பிரச்சினையை அடியோடு அகற்றுவேன் என புரட்சி செய்யவில்லை. கூட்டத்தினரின் உள் மனதோடு பேசச் சொன்னார். ‘உங்களில் பாவம் செய்யாதவன்’ முதல் கல்லை எறியட்டும் என்றார்.

இப்படி இயேசுவின் வாழ்க்கை முழுவதுமே, தரமான வாழ்க்கைக்கான தேடலாகத் தான் இருந்தது. போதனைகள் அர்த்தமுள்ளவையாக மட்டுமே இருந்தது. இயேசுவைப் பின்பற்றும் நாமும் நிச்சயம் செய்ய வேண்டிய ஒரே விஷயம் இது. தரமான வாழ்க்கையைத் தேடி ஓட வேண்டியது ! போலித்தனமான வாழ்க்கையை விட்டு விலக வேண்டியது. ஆத்மார்த்தமான ஒரு அன்னியோன்யத்தை இயேசுவோடு உருவாக்கிக் கொள்ள வேண்டியது.

அதற்கு செய்ய வேண்டிய முதல் காரியம், பிறர் என்ன நினைப்பார்கள் எனும் சிந்தனைகளை விலக்க வேண்டியது. ரொம்ப நேரம் செபம் செய்யாட்டா மக்கள் என்ன நினைப்பாங்க ? நோன்பு இருக்கேன்னு சொல்லாட்டா என்ன நினைப்பாங்க ? ஏழைகளுக்கு தர்மம் பண்ணாம போன நம்ம இமேஜ் போயிடுமோ ? கோயிலுக்கு பணம் கொடுக்காட்டா நம்ம பேரு போயிடுமோ ? இப்படிப்பட்ட பிறர் சார்ந்த சிந்தனைகளை ஒதுக்க வேண்டியது வெகு அவசியம்.

ஆன்மீகம் நமக்கும் இயேசுவுக்குமான அன்பைச் சொல்லும் பாதை. அதில் இயேசு என்ன சொல்கிறார், என்ன எதிர்பார்க்கிறார் என்பதே முக்கியம். பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதல்ல. அப்படித் தான் ஏரோது பயந்தான். விருந்தினர்கள் என்ன நினைப்பார்களோ என நினைத்து திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டினான். பிலாத்து, எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லேப்பா என கைகளைக் கழுவினான்.

அந்த பயம் இல்லாதவர்கள் இயேசுவை வாழ்ந்து காட்டினார்கள். அதிகாரிகளின் முன்னால் “உயிர்த்த இயேசுவுக்கு நாங்கள் சாட்சிகள்” என்றனர். சிலுவையில் என்னை தலைகீழாய் அறையுங்கள் பிளீஸ் என கேட்டு வாங்கி மரணத்தைப் பெற்றனர். அவையெல்லாம் தரமான விசுவாசத்தின் சான்றுகளாய் இருந்தன.

நாமும் நமது வாழ்க்கையை ஒரு அவசரப் பரிசீலனைக்கு உட்படுத்துவோம். நமது செயல்களெல்லாம் ஒவ்வொரு நாளும் ஆழ்மன அன்பின் வெளிப்பாடாக இருக்கட்டும் என நினைப்போம். உள்ளத்தில் உள்ளதையே வாய் பேசும், எனவே உள்ளத்தை தூர் வாருவோம்.

தரமான வாழ்க்கையே வரமான வாழ்க்கை என்பதை உணர்வோம். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்

சேவியர்

எநன்றி :

கிறிஸ்தவம் : திரித்துவமும், மருத்துவமும்.

angel

விவிலியப் பாடசாலையில் பயிலும் ஐந்துவயதான மகள் தன் தந்தையைப் பார்த்துக் கேட்டாள்.

‘அப்பா…. தேவதைகள் தூங்குமா ?’.

‘தூங்கும் என்று தான் நினைக்கிறேன்’ தந்தை சொன்னார்.

‘அப்படியானால் அவர்கள் எப்படி இரவு உடை அணிந்து கொள்வார்கள் ? சிறகுகள் தடுக்காதா ?’ மகள் கேட்டாள். தந்தை சிரித்துக் கொண்டார்..

பைபிளை நோக்கி நீட்டப்படும் பல கேள்விகள் இப்படித்தான் இருக்கின்றன. விவிலியத்தின் மையக்கருத்தாக நிலைவாழ்வு என்பதும், மீட்பு என்பதும் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க பலர் தங்கள் அறியாமையினால் வறட்டுக் கேள்விகளைக் கேட்டுக் கொள்கிறார்கள். கிறிஸ்தவத்துக்கு வெளியே இருக்கும் மக்கள் மட்டும் தான் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பார்கள் என்றில்லை. வெளியே ஒலிக்கும் இத்தகையக் கேள்விகள் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவர்களிடமும் வரவேற்பைப் பெற ஆரம்பித்து விடுகிறது. ‘ஆமா, அந்த கேள்வியிலும் ஒரு லாஜிக் இருக்கு இல்லையா” என பேசுகிறார்கள். அவர்கள் தங்களுடைய கேள்விக்கான விடையைத் தேடி விவிலியத்தைப் புரட்டினால் பதில்களைத் தூய ஆவியானவர் அவர்களுக்குக் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் பலரும் அப்படிச் செய்வதில்லை. நமக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. பைபிளைப் படிப்பதை விட அதிக நேரம் பைபிள் குறித்த நூல்களைப் படிக்கச் செலவிடுவோம். அது ஒரு விளக்க உரையாய் இருக்கலாம், அல்லது ஒரு விவிலிய ஆராய்ச்சியாய் இருக்கலாம், அல்லது புதிய ஒரு கோட்பாடோ, கொள்கையோ எதுவாகவும் இருக்கலாம்.

வார்த்தை தேவனாயிருந்தது. அந்த தேவனை நாம் தினமும் தரிசிக்க முடிகிறது. நமது வாழ்க்கையின் வழிகாட்டியாக வேதாகமம் நமக்கு இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வோர் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடைகள் பைபிளில் இருக்கின்றன.

காலம் காலமாக நம்மிடையே நாம் எழுப்பும் கேள்விகளில் முக்கியமானதாக மருத்துவம் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் மருந்து உட்கொள்ளலாமா ? இல்லை நம்பிக்கை மட்டுமே நம்மை நலமாக்குமா ? இந்தக் கேள்விக்கு உண்மையான பதில், குணமளித்தல் இறைவனிடமிருந்து வருகிறது என்பதே. அந்த இறைவன் மருந்தை நிராகரித்தாரா, வரவேற்றாரா என்பதை வைத்து நம்முடைய வழியை சரிபார்த்துக் கொள்ள முடியும். மருந்தை உட்கொண்டாலும் குணமளிப்பவர் கடவுளெனில் ஏன் மருந்து உட்கொள்ள வேண்டும் ? காரணம், அதுவே இறைவன் நமக்காக வகுத்த வாழ்க்கை முறை – என்பது தான்.

“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை” என்கிறார் இயேசு. பிணியாளிகளுக்கு வைத்தியன் தேவை என்பதை இயேசு தனது போதனையின் மூலம் மிகத் தெளிவாகவே அறிவுறுத்துகிறார். பார்வையற்றவனின் கண்களில் சேற்றைப் பூசுவது கூட மருத்துவத்தின் அங்கீகாரம் என்றே விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

விவிலிய ஆசிரியர் லூக்கா ஒரு மருத்துவராக இருந்திருக்கலாம் எனும் நம்பிக்கை பல ஆய்வாளர்களுக்கு உண்டு. காரணம் அவருடைய எழுத்துகளில் தெரியும் விவிலிய வாசனை. பிளாக் எம் சி எனும் விவிலிய ஆய்வாளர் அந்தக் கூற்றை மறுக்கிறார். மறுப்பதற்கு அவர் சொல்லும் காரணம் சுவாரஸ்யமானது. “அந்தக் காலத்தில் இருந்த சாதாரண நபர்களுக்கே லூக்கா வுக்கு இருந்த அளவுக்கு மருத்துவ அறிவு உண்டு” என்பது தான். அத்தகைய மருத்துவ அறிவோடு வாழ்ந்த இயேசுவின் சீடர்கள் இயேசுவின் போதனைகளை மாற்றியிருக்க வாய்ப்பே இல்லை. மருத்துவம் தேவையில்லை என்பது இயேசுவின் போதனையாய் இருந்திருந்தால் தூய ஆவியானவர் வேதாகமத்தில் அதைத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

மோசேக்கு இருந்த மருத்துவ அறிவுக்கும், வழிகாட்டலுக்கும் இன்றைய பிரபல மருத்துவர்களே வியப்பு கலந்த வரவேற்பைக் கொடுக்கிறார்கள். தொழுநோயாளிகளின் ஆடைகளை தீயினால் சுட்டெரிக்க வேண்டும் ( லேவியர் – 13 : 52 ) என மோசே கட்டளையிட்டிருந்தார். நவீன மருத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா ? தொழுநோய் மனித உடலை விட்டு வெளியே வந்து தூசிலோ, ஆடையிலோ மூன்று வாரங்களோ, அதற்கு அதிகமான வாரங்களோ உயிர்ப்புடன் இருக்குமாம் ! மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தின் உயர் நிலையை மோசே அறிந்திருக்கிறார் என்பது வியப்பு. அது இறைவன் மூலமாகவே வந்திருக்கும் என்பதில் வியப்பில்லை ! அதே போலத் தான் மோசேயின் தூய்மை குறித்த போதனைகளும். கடந்த நூறு ஆண்டுகளில் விஞ்ஞானம் கண்டறிந்தவற்றை மோசே 3500 ஆண்டுகளுக்கு முன்பே போதித்திருந்தார் என்பது ஆச்சரியம் தான் இல்லையா ?

யாக்கோபு 5 : 14 – 15 தான் மருந்து கூடாது என்பவர்கள் பெரும்பாலும் முன் வைக்கும் விவிலிய வசனம். விசுவாசமுள்ள செபம் பிணியாளியை இரட்சிக்கும் எனும் வசனம் நமக்கு ஊக்கமூட்டுகிறது. மீன்டும் மீண்டும் செபிக்கத் தூண்டுகிறது. ஆனால் வசனங்களை வசனங்களுடன் ஒப்புமைப்படுத்தி வாசிப்பதே சிறந்தது. மருத்துவத்தை விட மேலாக இறைவிசுவாசத்தை வைப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் மருத்துவத்தை நிராகரித்து விசுவாசத்தைப் பற்றிக் கொள்வது என்பது, இயேசுவின் ஒரு வசனத்தைப் பற்றிக் கொண்டு அவருடைய பல வசனங்களை நிராகரிப்பதற்கு சமம்.

இறைவன் எங்குமே மருத்துவம் வேண்டாம் என்று சொல்லவில்லை, இன்னும் சொல்லப் போனால் தேவைக்கேற்ற மருத்துவத்தையே அவர் பரிந்துரைக்கிறார். மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து ( நீதி 17: 22 – பொ.மொ ) என நலமளிக்கும் மருந்தையும், ஆனந்தமான மனதையும் விவிலியம் ஒப்பிட்டுப் பேசுகிறது. மகிழ்வார்ந்த மனம் இறைவனின் விருப்பம் என ஒத்துக் கொள்ளும் நாம், நலமளிக்கும் மருந்தையும் ஒத்துக் கொள்ளவேண்டும் இல்லையா ?

எசேக்கியேலுக்கு எசாயா பரிந்துரைத்த மருத்துவ முறையும் நினைவில் கொள்ளத் தக்கதே. “எசேக்கியா நலமடைய, ஒரு அத்திப் பழ அடையைக் கொண்டு வந்து பிளவையின் மேல் வைத்துக் கட்டுங்கள்” என சொல்லியிருந்தார். ( ஏசாயா 38 : 22 ). ஏசாயாவை விட விசுவாசத்தில் ஆழமானவர்கள் என்று நம்மைக் கருதிக் கொள்ள முடியுமா ? அவர் மருத்துவ வழியையும், இறைவனின் மீதான நம்பிக்கையையும் ஒரு சேர மனதில் கொண்டிருந்தாரே ! எரேமியாவை எடுத்துக் கொள்ளுங்கள். “அங்கே மருத்துவர் இல்லையா? அப்படியானால், என் மகளாகிய மக்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?” ( எரேமியா 8 :22 ) என்கிறாரே எரேமியா. அவருடைய விசுவாசத்தைக் கேள்வி கேட்க முடியுமா ?

“தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின் பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து” 1 திமோ 5 :23 என்கிறார் பவுல். விசுவாசத்தின் பிம்பமாய் இருக்கும் பவுல் இறைவனின் விருப்பத்தை மீறி சொல்வார் என்று வாதிட முடியுமா ?

சரி, அப்படியே லாஜிக்கல் பேர்வழிகளாகவே நாம் இருக்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். நம்மிடம் பணம் குறைவாக இருக்கும்போது பணத்துக்காக பணம் வைத்திருக்கும் நல்ல மனம் படைத்த ஒருவரை நாடிப் போய் கேட்பதுண்டு. அது போலவே உடல் நலம் குறைவாக இருக்கும் போது உடல் நலக் குறையைத் தீர்க்க உதவுவார்களோ அவர்களிடம் செல்வது தானே முறை. பணத் தேவை வரும்போதோ, உணவுத் தேவை வரும்போதோ பெரும்பாலும் கடவுள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவார் எனும் ‘மாஜிகல்’ களை நாம் சார்ந்திருப்பதில்லை. ஆனால் உடல் நலத்தில் மட்டும் ஏன் ஒரு மேஜிகலை எதிர்பார்க்க வேண்டும் ? எந்த ஒரு சூழலானாலும் இறைவன் தானே செயலாற்றுகிறார்.

இயேசுவை ஆலய உச்சிக்குக் கூட்டிச் சென்ற சாத்தான், “இங்கிருந்து கீழே குதி, தூதர்கள் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்” என்று சொன்னபோது இயேசு குதிக்கவில்லை. படிகள் இருக்கும் ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே இறங்கி வர படிகளைப் பயன்படுத்துவதே தேவையானது என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. ஒருவேளை படிகளே இல்லாத கட்டிடமெனில் இயேசு குதித்திருக்கக் கூடும், தந்தையவர்கள் இயேசுவை நிச்சயம் தாங்கியிருப்பார். அமேசான் காடுகளில் நீங்கள் அகப்பட்டால், அங்கே உங்களுக்காய் கடவுள் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லையென்றால், அங்கே மருந்துகளைப் பயன்படுத்த முடியாது. அந்த சூழல்களில் இறைவனே நேரடித் துணை. மற்றபடி எங்கெல்லாம் இறைவன் நமக்காக உதவிகளை ஆயத்தப்படுத்தியிருக்கிறாரோ, அங்கெல்லாம் அவற்றைப் பயன்படுத்துவதே சரியானது.

ஒரு சிங்கம் ஒருவனைத் துரத்திக் கொண்டு வந்தது. அவனோ அசையாமல் நின்றான். ஓடு, ஓடு வீட்டுக்குள் புகுந்து கொள் என எல்லோரும் கத்தினார்கள். அவனோ, கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என நடுவழியில் நின்றான். சிங்கம் அவனைக் கொன்றது. இறந்தவன் கடவுளிடம் சென்றான். கடவுளே நீங்கள் ஏன் என்னைக் காப்பாற்றவில்லை என முறையிட்டான். அவரோ, நான் உன்னைக் காப்பாற்ற கடுமையாக முயன்றேன். பல பேருடைய வாய் வழியாக, “ஓடு ஓடு” என உன்னை அவசரப் படுத்தினேன். நீ தான் என்னைக் கண்டுகொள்ளவில்லை என்று சொன்னாராம். கடவுள் நமக்காக வழிகளை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் போது, நமது விருப்பப்படி தான் கடவுள் நம்மைக் குணப்படுத்த வேண்டும் என அவரைக் கட்டாயப்படுத்த முடியுமா ?

மனிதன் கடவுளாக முடியாது. ஆனால் மனிதர்கள் மேல் நம்பிக்கை வைக்க முடியாது என்று சொல்ல முடியுமா ? அப்படிச் சொல்பவர்கள் வேலை தேடித் திரியும்போது மனிதர்களைச் சார்ந்திருப்பதில்லையா ? வீடு கட்டும் போது ? பயணங்களில் ? திருமணத்தில் ? இன்னும் பலவற்றில் பிறரைச் சார்ந்திருப்பதில்லையா அப்படியெனில் மருத்துவ விஷயத்தில் மட்டும் ஏன் வித்தியாசமான கோட்பாடைக் கடைபிடிக்க வேண்டும் ?

கடைசியாக மிக முக்கியமான ஒன்று. கிறிஸ்தவத்தின் அடைப்படை இறைவன் மீதான விசுவாசமே. அந்த விசுவாசம் இல்லாத மருத்துவம் வீணானதே. தொடாதே என்று பலமுறை எச்சரித்தும் தீயை நோக்கி விரலை நீட்டும் மழலையைப் போல, ‘நம்பிக்கை வை’ என்னிடம் என்று பலமுறை கடவுள் சொல்லியும் நாம் அவர் மேல் வைக்கும் நம்பிக்கையை பல நேரங்களில் பலவீனப்பட விட்டு விடுகிறோம்.

இயேசு வாழ்ந்த காலத்தில் பலரைக் குணப்படுத்தினார், பிறவியிலேயே பார்வையற்றவன், பல்லாண்டுகாலமாக தொழுநோயாய் இருந்தவன் என நீளும் பட்டியல் நாம் அறிந்ததே. அவர்களுடைய குணமடைந்த நிகழ்வை நாம் உற்றுப் பார்த்தால் குணமடைந்தவர்கள் இயேசுவின் மீது நல்ல நம்பிக்கை கொண்டிருந்ததை அறியலாம். ‘உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கியது’ என்று இயேசு பலமுறை சொல்கிறார். நம்பிக்கையில்லாவிடில் நீ அதிசயங்களைக் காணமுடியாது என்று தெள்ளத் தெளிவாக எச்சரிக்கையும் விடுக்கிறார். பேதுரு இயேசுவை நம்பியபோது கடல்மீது நடந்தார். அந்த நம்பிக்கை தளர்ந்தவுடன் தண்ணீரில் மூழ்கினார்.

இந்த நம்பிக்கை நமக்குள் அடிப்படையாய் இருக்க வேண்டியது அவசியம். அதன் மேல், இறைமகன் நமக்குத் தந்திருக்கும் அறிவையும், ஞானத்தையும் பயன்படுத்த வேண்டும். விவிலியம் முழுக்க இறைவனின் பண்புகளும் அவருடைய சித்தமும் தெரிகிறது. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என ஏராளம் பைபிளின் விசுவாச மாந்தர்கள் தங்கள் இறை விசுவாசத்தையும், மருத்துவப் பார்வையையும் தந்திருக்கின்றனர்.

தூய ஆவியானவரின் துணையுடன் நாம் விவிலியத்தை வாசிக்கும் போது நமக்கு உண்மைகள் புலப்படும். பைபிள் நாம் வெளியே செல்லும்போது சட்டென வாசித்துப் பார்க்கும் ஒரு மேஜிகல் நூல் அல்ல. பைபிள் வாசிக்காம போன ஆக்ஸிடன்ட் ஆயிடுமோ, எக்ஸாம் பெயில் ஆயிடுவோமோ, போற காரியம் வெளங்காதோ என்பதற்காக வாசிக்கும் ‘மிரட்டும்’ நூல் அல்ல. அது வாழ்வின் அடிப்படை நூல் என்பதை மனதில் கொள்வோம். வார்த்தைகளின் வெளிச்சத்தில் வாழ்க்கையை அமைப்போம். இறைமகனின் வழியில் பயணம் தொடர்வோம்.

வீணான கேள்விகள் கேட்டு வாழ்வை வீணாக்காமல்
இறைவனில் இணைந்து வாழ்வை வளமாக்குவோம்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்

கிறிஸ்தவம் : ஆன்மீக சுதந்திரம்

jesus12

 

சுதந்திரம் வேண்டுமா அடிமைத்தனம் வேண்டுமா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ? இந்தக் கேள்வியே மடத்தனமானது என்று தானே சொல்வீர்கள் ? அப்படி ஒரு பதிலைச் சொல்வதே சுதந்திரத்தின் அடையாளம் தான் இல்லையா ?. அடிமையாய் இருப்பதை யாரும் விரும்புவதில்லை. உலகெங்கும் நடக்கும் உரிமைப் போராட்டங்கள் இதைத் தான் நமக்குச் சொல்லித் தருகின்றன. சமீபத்தில், சிங்களர்களின் அடக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என தமிழ் ஈழ மக்கள் போராடியதும், இதற்காகத் தான். சுதந்திரம் எனும் வார்த்தையே அடக்குமுறைவாதிகளுக்கு அலர்ஜி. அதனால் தான், சுதந்திர சிறகுகளை நறுக்க மனிதாபிமானமற்ற படுகொலைகளை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்தியாவும் சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் இருந்தது. 1947 ஆகஸ்ட் 15 என்பது நமக்கெல்லாம் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஆனால் அந்த விடுதலையைப் பெறுவதற்கு இந்திய மண் தியாகம் செய்த உயிர்களும், தாங்கிய வலிகளும் சொல்லி முடிக்க முடியாதவை. இன்றைய இந்தியா, சட்டத்தின் பார்வையில் சுதந்திரமடைந்து விட்டது, ஆனால் அது இன்னும் சாதி, ஊழல், மதம் எனும் வேறு பல எஜமானர்களுக்குக் கீழே கைகட்டி அடிமையாய் நிற்கிறது.

இயேசு ஒற்றை வரியில் இதை மிக மிக அழகாக வெளிப்படுத்தினார். “பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ( யோவான் 8 : 34 பொ.மொ ) என்றார் அவர்.. ஆன்மீக அளவில் நாம் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம் என்பதை பளிச் என சொல்ல இதை விடப் பெரிய வசனம் தேவையில்லை. எந்த அதிகார சக்தி நமது செயல்களை நிர்ணயிக்கிறதோ அந்த சக்தியே நமக்கு எஜமான். எந்த சக்தியின் கட்டளைகளின் படி நாம் நடக்கிறோமோ அந்த சக்திக்குத் தான் நாம் அடிமைகளாய் இருக்கிறோம்.

நாம் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறோமா அல்லது இயேசுவுக்குள் சுதந்திரமாய் இருக்கிறோமா என்பதை அறிவது வெகு சுலபம். நமது ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் அலசினாலே அந்தக் கேள்விக்கான பதில் நமக்குக் கிடைத்து விடும். காலையில் எழும்புகிறோம் பைபிள் வாசிப்பதும், ஜெபிப்பதும் நமக்கு முதன்மையாய் இருக்கிறதா ? அல்லது சுடச் சுட டீ குடித்து, டிவியில் நியூஸ் பார்ப்பது நமக்கு முக்கியமானதாய் இருக்கிறதா ?

அலுவலக அவசரத்தில் நம்மை எது வழிநடத்துகிறது ? கோபமா ? இயேசுவின் வழிகாட்டுதலான புன்னகை கலந்த சாந்தமா ? கோபத்தில் கத்தி, எரிச்சலில் சுற்றிக் கொண்டிருப்பீர்களென்றால் நீங்கள் கோபத்துக்கு அடிமையாய் இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். கோபம் உங்களை வழிநடத்துகிறது என்பது தான் அதன் பொருள். கோபம் கொள்வது பாவம் என்பது நாம் அறிந்ததே. தம் சகோதரர் சகோதரியிடம் சினம் கொள்பவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் ( மத் : 5 – 22 ) என்கிறார் இயேசு.

அலுவலகம் செல்லும் வழியில் வசீகரமான இளம்பெண்ணைப் பார்க்கிறீர்கள், உங்கள் பார்வை பாவம் செய்கிறதா ? அல்லது கண்ணியமாய்க் கடந்து போகிறதா ? கணினியில் வேலை செய்கிறீர்கள், சிற்றின்ப வழிகாட்டுதலுக்கான பக்கங்களில் உங்கள் மனம் உங்களை அழைத்துச் செல்கிறதா ? நண்பர்களோடு உரையாடுகிறீர்கள் உங்கள் உரையாடலில் பாலியல் நகைச்சுவைகள் பந்திவைக்கின்றனவா ? இதற்கான பதிலில் அடங்கியிருக்கிறது உங்கள் மனம் சுதந்திரமாய் இருக்கிறதா இல்லை சிற்றின்பத்துக்கு அடிமையாய் இருக்கிறதா என்பது.

இப்படியே ஒவ்வொரு செயலையும் இயேசுவின் வாழ்க்கையோடும், வார்த்தையோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் நமது ஆன்மீகத்தின் பாதையும், நமது போலித்தனத்தின் உண்மையும் வெளிப்படத் துவங்கும். பெரும்பாலானவர்களுக்கு ஒரு நாள் கூட தேவையில்லை. ஒரு சில மணி நேரங்களே போதுமானது. நியாயப் படுத்தல்கள் இல்லாத அலசல் இருந்தால் நமது வாழ்க்கையின் உண்மை நிலையை உணர்ந்து கொள்வது வெகு எளிது.

அப்படி என்னதான் உண்மை ? நாம் ஆன்மீக சுதந்திரம் அடையவில்லை எனும் மறுக்க முடியாத உண்மை. எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய இயலாது. ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு கொள்வார் ( மத் 6 : 24 ) என்றார் இயேசு. எவனும் ஒரே நேரத்தில் சுதந்திரமாகவும் அடிமையாகவும் இருக்க முடியாது என்பதே இறைமகன் சொல்லும் உண்மை. உலக செல்வங்கள் நமது செயல்களை நிர்ணயிக்கும்போது, கடவுளை வெறுக்கிறோம் ! செல்வத்தை நேசிப்பவன், கடவுளை வெறுக்கிறான். கடவுளை நேசிப்பவன் செல்வத்தைப் புறக்கணிக்கிறான். இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் அன்பு செய்வதோ, அன்பைப் பகிர்ந்தளிப்பதோ இயலாத காரியம் என்பதே வேதாகமம் சொல்லும் உண்மை !

அதற்காக செல்வங்களே இருக்கக் கூடாதென்பதல்ல, அதை அன்பு செய்யக் கூடாது, அதை நோக்கி ஓடக் கூடாது, அதை முதலிடத்தில் வைத்துப் பயணம் செய்யக் கூடாது என்பதே புரிந்து கொள்ளவேண்டிய உண்மையாகும். அதனால் தான் “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவையெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் ( மத் 6 : 33 ) என்கிறார் இயேசு.

பெரும்பாலும் நமது சுதந்திரம் என்பது ஒரு அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு இன்னொரு அடிமைத்தளத்திற்குள் புகுவதிலேயே இருக்கிறது ! கோபத்திலிருந்து விடுபட்டுக் காமத்திற்கு அடிமைத்தனமாகி விடுகிறது மனசு. காமத்திலிருந்து விடுபட்டு பணத்தாசையில் அடைபடுகிறது. பணத்தாசையிலிருது விடுபட்டு புகழ் போதையில் புகுந்து விடுகிறது. புகைத்தலை நிறுத்தி விட்டுப் பான்பராக் போடும் இளைஞனைப் போல நமது ஆன்மீக அடிமைத்தனம் தளங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறதே தவிர விடுபடுவதில்லை.

உண்மையான சுதந்திரம் என்பது நாம் பாவத்திலிருந்து முழுமையாய் விலகி இயேசுவின் வழியில் தொடர்வதில் இருக்கிறது. இது இடுக்கமான வாயில். இதில் நுழைவது கடினம். “இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே ( மத் 7: 13-14 ) .

இந்த இடுக்கமான வாயில் வழியே நுழைபவர்களை வழி நடத்திச் செல்ல தூய ஆவியானவர் தயாராய் இருக்கிறார். காரணம் அந்த நெருக்கமான பாதையில் நாம் சந்திக்கும் உலக நெருக்கங்கள் ஏராளமாய் இருக்கும். அவற்றோடான யுத்தத்துக்கு இறை வழிகாட்டுதல் வெகு அவசியம். இறையோடு நாம் இருக்கும் போது, யானை மீதிருக்கும் சிற்றெறும்பு போல நமக்கும் யானை பலம் கிடைத்து விடுகிறது. யுத்தம் இல்லாமல் சுதந்திரம் கிடைப்பதில்லை. ஆன்மீக சுதந்திரத்துக்கும் யுத்தம் அவசியமாகிறது. அது சஞ்சல மனதோடு நாம் செய்யும் யுத்தம்.

“மனம் ஆர்வமுடையது தான், ஆனால் உடல் வலுவற்றது ( மத் 26 : 41 பொ.மொ ) ! அது பாவத்திற்குள் எளிதில் புகுந்து விடும். காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகைப் போல அது இலக்கில்லாமல் ஓடும். ‘இந்த ஒரு முறை மட்டும்’ என பாவம் ஆசை வார்த்தைகளோடு காத்திருக்கும். அந்த வழியில் செல்பவர்கள் ஏராளம். அதனால் அந்த வழியைக் கண்டுபிடிப்பது வெகு சுலபம். ஆட்டு மந்தை போல கணக்கில்லாமல் முன்னால் மக்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.

அந்த வழி நமக்கு வேண்டாம், ஒரு முறை கூட வேண்டாம். ஆன்மீகத் தூய்மையே வேண்டும் என்பவர்கள் அபூர்வம். அழிந்து கொண்டிருக்கும் அபூர்வ விலங்குகளைப் போல அவர்களைக் கண்டுபிடிப்பதே பெரும் கடினம். அதனால் தான் அவர்கள் செல்லும் வழியைக் கண்டுபிடிப்பதும் கடினமானதாய் இருக்கிறது.

பாவம் வாசலில் உங்களைப் பல்லக்கு வைத்து அழைத்துச் செல்லும், தூய்மையோ அமைதியான, எளிமையான பாதையாய் உங்களுக்கு முன் இருக்கும். அதில் வசீகரம் இருப்பதில்லை, ஆனால் அதில் பயணிப்பவர்களுக்குத் தான் அதன் சுகமும், இன்பமும் தெரியும். தன்னை வெறுத்து, தன் சிலுவையைச் சுமந்து கொள்ளாதவனால் அந்தப் பாதையில் நடக்க முடியாது. தனது சிலுவை என்பது தனது உலக விருப்பங்கள் அறையப்பட்ட சிலுவை என்பதே நிஜம்.

இந்திய சுதந்திரத்துக்காய் நாம் மகிழ்ச்சியடையும் இதே நேரத்தில் பாவ அடிமைத்தனத்துக்காக கண்ணீர் விடாவிட்டால் நமது கிறிஸ்தவ வாழ்க்கை அர்த்தமற்றதாய்ப் போய்விடும். இயேசுவுக்குள் சுதந்திரமாய் வாழவேண்டும் எனும் அதீத ஆர்வமும், இடைவிடாத போராட்டமுமே நம்மை சுதந்திரத்துக்குள் இட்டுச் செல்லும்.

என்னதான் சொன்னாலும் நான், அடிமையாய் தான் இருப்பேன் என அடம்பிடித்தால், இயேசுவுக்கு மட்டுமே அடிமையாய் இருப்பதென முடிவெடுப்போம்.அந்த அடிமைத்தனமே உண்மையான சுதந்திரம்.

தேசத்தின் விடுதலையைக் கொண்டாடுவோம்
தேகத்தின் விடுதலைக்காய் மன்றாடுவோம்

சேவியர்.

 

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்

ஆன்மீகம் : நீதியையே நாடுவோம்

jesus_new_robe_man
இன்றைய சமூகம் பலவீனங்களின் மொத்த உருவமாய் இருக்கிறது. மனிதர்கள் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள். மனித நேயம் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாகிவிட்டது. சுயநலங்களின் சுருக்குப் பைகளுக்குள் மனிதர்கள் தங்களை இறுக்கி முடிந்து விட்டனர். அதனால்தான் அரையடி நிலத்தை விட மனித உயிர் மலினமாகிவிட்டது. பீடிக்காகக் கூட படுகொலைகள் நடக்கின்றன. வலிமையற்ற முதியவர்களும், பெண்களும் கூட நகைகளுக்காக வன்முறைத் தாக்குதலுக்கு பலியாகின்றனர். பாலியல் அத்துமீறல்கள் புற்றுநோயாய் சமூகத்தில் புரையோடிவிட்டது.

சம நிலையற்ற சமூகம் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே ராக்கெட் விட்டால் கூட எட்டமுடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டது. அதனால் தான் பட்டினியால் உயிர்விடும் மனிதர்கள் இருக்கும் ஊரிலேயே, ஓவர் சாப்பாட்டினால் உயிரிழக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். உணவுக்காக ஓடும் மக்கள் இருக்கும் தெருவிலேயே உணவு செரிப்பதற்காக ஓடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.

சமநிலையற்ற சமூகம் தான் வன்முறைகளும், சமூக விரோத செயல்களும் உருவாகக் காரணமாயிருக்கிறது. நீதி, நியாயம் எனும் இரும்புக் கோட்டையை கரன்சித் தாள்களே வளைத்து விடுகின்றன. நீதியைக் கூட நிதியே நிர்ணயம் செய்யும் சமூகத்தில் ஏழைகளின் குரல்வளையில் திகிலும், நம்பிக்கையின்மையுமே தேங்கிக் கிடக்கிறது.

என்னதான் தீர்வு ? அதிகார வர்க்கத்தின் வீட்டுத் தோட்டத்தில் நீதி நாய்க்குட்டியைப் போல வாலாட்டும் தேசத்தில் எளியவன் எப்போது தான் நீதி பெறுவது ? செல்வந்தர்களின் செல்லப் பிராணியாய் நீதி குழைகின்ற நாட்டில் ஏழைகள் எப்போது தான் ஏறி வருவது ? என்னதான் தீர்வு ? சிறைகளை நிரப்பும் போராட்டமா ? அல்லது சிறைகளை உடைக்கும் போராட்டமா ?

விவிலியம் நம்மை போராட அழைக்கிறதா ? ஒரு அதிகார மையத்தை உருவாக்கி சமூகத்தின் நீதியை நிர்ணயிக்க அழைப்பு விடுக்கிறதா ?

கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசு தர விரும்பிய நீதியையும், இயேசு சொல்ல விரும்பிய நீதியின் விளக்கங்களையும் புரிந்து கொள்ள வேண்டியது  மிகவும் அவசியமாகிறது.

நீதியின் மேல் பசி தாகமுள்ளோர் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள் என்றும், நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்ஜியம் அவர்களுடையது என்றும் இயேசு சொல்கிறார் ( மத் : 5 – 6, 5-10 ). நீதியைக் குறித்த பார்வை நமக்கு இருக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார் என்பதையே அவருடைய வார்த்தைகள் நமக்குத் தெரியப்படுத்துகின்றன.

ஆனால் இயேசு சொன்ன நீதி என்பது உலக நீதியிலிருந்து வேறுபடுகிறது என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

சட்டங்களினால் மனித வாழ்க்கையைக் கட்டமைத்து, அந்த சட்டங்களை விட்டு விலகுபவர்களை கடுமையாகத் தண்டிக்கும் வழக்கம் உலக நியதி. அதைத் தான் பரிசேயர்களும் செய்தார்கள். அவர்கள் ஏழை மக்கள் மேல் கடுமையான நுகத்தைத் திணித்தார்கள். ஏழைகளின் இயலாமைகளைவிட தங்கள் சட்டங்களே மேல் என்றார்கள். எக்கேடு கெட்டாயினும் சட்டத்தை நிறைவேற்று என்றார்கள்.

“சட்டங்கள் இருப்பது  மனிதர்களுக்காக, மனிதர்கள் இருப்பது சட்டங்களுக்காக அல்ல” என்பதே இயேசுவின் போதனை. அதுவே இயேசு சொன்ன நீதி. அதனால் தான் அவர் (மத்தேயு 5:20) வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் – என அழுத்தமாய்ச் சொன்னார்.

இயேசுவின் அந்த போதனையின் அற்புத உதாரணமாய் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணின் நிகழ்வைக் கூறலாம். சட்டங்கள் அந்தப் பெண்ணுக்கு எதிராக இருந்தன. ஆனால் இயேசு வழங்கிய நீதியோ சட்டங்களின் அடிப்படையில் இருக்கவில்லை. அது அன்பின் அடிப்படையிலேயே இருந்தது. “உங்களில் பாவம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்” என இயேசு சொல்லி அந்தப் பெண்ணை சட்டத்தின் கல்லெறிக்குத் தப்புவிக்கிறார். சட்டத்தின் பார்வையில் அங்கே நீதி மறுக்கப்பட்டது, ஆனால் இயேசுவின் பார்வையில் அங்கே தான் நீதி நிலைநாட்டப்பட்டது ! மரணிக்கச் செய்வதல்ல, மன்னிக்கச் செய்வதே நீதி என்பது அவருடைய புதிய போதனையாய் இருந்தது.

உலகத்தின் நீதி, தவறிழைப்பவர்களை சிறைகளில் தள்ளுவதில் இருக்கிறது. சிறையில் தள்ளப்படாமல் விடும்போது நீதி மறுக்கப்பட்டதாய் உலகம் கொதித்துப் போய்விடுகிறது. “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என அன்று கத்தியவர்களைப் போல, “தூக்கில் போடும், தூக்கில் போடும்” என இன்றும் குரல்கள் ஓயாமல் ஒலிக்கின்றன. இயேசுவின் நீதியோ, “சிறையில் இருப்பவர்களைச் சந்திப்பதில் இருந்தது”. சிறையில் இருப்பவர்களைச் சந்திப்பவர்கள் விண்ணக வாழ்வுக்குச் செல்வோரின் கூட்டத்தில் சேரும் வாய்ப்பு அதிகம். “நான் சிறையில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்” என்றாரல்லவா இயேசு !

திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்தவர்களுடைய உவமை எல்லோருக்கும் தெரியும். அதில் இயேசு நீதியின் இன்னொரு பரிமாணத்தையே நமக்குக் காட்டி விடுகிறார். விடியற்காலையில் தோட்டத்தில் வேலை செய்ய நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் என வேலைக்கு ஆட்களை அமர்த்துகிறார் உரிமையாளர். அவர்கள் மகிழ்வுடன் வேலைக்குச் செல்கின்றனர்.

காலை 9 மணி, மதியம் 12 மணி என இரண்டு தடவை வழியில் காண்போரை வேலைக்கு அனுப்பி “வேலை செய்யுங்கள் நேர்மையானதை உங்களுக்குக் கொடுப்பேன்” என அவர்களை அனுப்புகிறார். தங்களுக்குக் கிடைக்கப் போகின்ற கூலி என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. “நேர்மையானது கிடைக்கும்” என்பது மட்டுமே அவர்களுக்குச் சொல்லப்பட்ட செய்தி. மாலை 5 மணிக்கும் சிலரை திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்புகிறார், அவர்களிடம் கூலி தருவேன் என்று கூட அவர் சொல்லவில்லை. அவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஏதேனும் கிடைத்தால் வாங்கிக் கொள்ளலாம் என்பது மட்டுமே அவர்களுடைய சிந்தனை.

மாலை 6 மணிக்கு கூலி கொடுக்கும் நிகழ்வு. கடைசியாக வந்தவர்கள் ஒரு மணி நேரம் உழைத்தவர்கள். அவர்களுக்கு ஒரு நாளுக்குரிய ஒரு தெனாரியம் கூலி வழங்கப்பட்டது. அவர்கள் வியப்புடனும் மகிழ்வுடனும் விடைபெற்றிருப்பார்கள். முதலில் வந்தவர்கள் கடைசியில் வந்தவர்களை விட 12 மடங்கு அதிகம் உழைத்தவர்கள். 12 தெனாரியம் கிடைக்கும் என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் ஒரே ஒரு தெனாரியம் தான் கிடைத்தது. அவர்கள் தலைவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.

தலைவரோ, ” தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்” என்கிறார்.

உலக நீதி என்பது, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தெனாரியம் என்றால் பன்னிரண்டு மணி நேரத்துக்கு பன்னிரண்டு தெனாரியம் என கணக்கிடும். கடவுளோ உள்ளத்தைப் பார்ப்பவர். அவர் வேலைக்கேற்ற கூலியைக் கொடுப்பவர் அல்ல, தேவைக்கேற்ற கூலியைக் கொடுப்பவர். தகுதியானதைத் தகுதியானவர்களுக்குத் தருவதே உலக நீதி, தகுதியற்றவர்களுக்கும் தருவதே இயேசுவின் நியதி. அதனால் தான் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழை பொழியச் செய்கிறார். தகுதியற்ற நமக்கும் மீட்பைத் தருகிறார். அழைத்தலுக்குச் செவிகொடுத்து உழைப்பவர் அனைவரையும் அவர் சமமாய் நடத்துகிறார்.

கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் எனும் பழங்கால நீதியின் நவீன வடிவமே சட்டங்கள். இயேசு அதைத் தலைகீழாய் மாற்றுகிறார். மன்னிப்பையே முன்னிறுத்துகிறார்.. மறுகன்னத்தைக் காட்டும் பொறுமையையும், தாழ்மையையுமே பிரதானப்படுத்துகிறார். மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் கொடுக்கச் சொல்கிறார். அதாவது கிளைகளில் விளையும் பழங்களைச் சரிசெய்ய வேண்டுமெனில் வேர்களையே விசாரிக்க வேண்டும் என்கிறார். கண்ணுக்குக் கண் என்றும், பல்லுக்குப் பல் என்றும் திரிந்தால் உலகம் முழுதும் பிடுங்கப்பட்ட கண்களும், பறிக்கப்பட்ட பற்களுமே நிரம்பும். அதுவல்ல இயேசுவின் நீதி. மன்னிப்பின் மூலம் விளைகின்ற ஆரோக்கியமான உறவே இயேசுவின் நீதி. உறவின் உன்னத வடிவமாக சிலுவையில் தொங்கியதே இயேசுவின் நீதி ! எனவே தான் நண்பர்களை நேசிப்பதல்ல பெரிது, எதிரிகளையும் நேசிப்பதையே விரும்பு என்கிறார்.

இயேசுவின் நீதி என்பது போராட்டத்தில் இருக்கவில்லை. தன்னைத் தான் போராடி வெற்றி கொள்வதில் இருந்தது. தனது பலவீனங்களை இயேசுவின் பலத்தோடு இணைத்துக் கொண்டு செய்யும் போராட்டமாய் அது இருந்தது. எனவே தான் திராட்சைச் செடியாகிய அவருடன் கிளைகளாக நாம் இணைந்தே இருப்பது அவசியமாகிறது. “ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை” என எப்போதும் வழுவாமல் வாழும் வழியை அந்த நிலையே நமக்குக் காட்ட முடியும்.

இயேசுவின் நீதி சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் அரவணைப்பதில் இருந்தது. தீண்டத் தகாதவர்களாய் இருந்த தொழுநோயாளிகளை அரவணைத்தார், பலவீனரான பெண்களை பணியில் அனுமதித்தார், குழந்தைகளைக் கூட அன்பாய் அரவணைத்தார். சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு எதிராக அவருடைய செயல்பாடுகள் புதிய நீதியை புரிய வைத்தன.

இயேசுவின் நீதி சமூக சாதீய ஏற்றத் தாழ்வுகளை தகர்த்தது. சமாரியப் பெண்ணைத் தேடிச் சென்று மீட்பை வழங்கினார் இயேசு. ஒதுக்கியும், அவமானப்படுத்தியும் வைக்கப்பட்ட விலைமாதர்களையும், பாவிகளையும், வரிவசூலிப்பவர்களையும் சரிசமமாய்ப் பாவித்து சமத்துவ சமூகத்தின் புதிய வழியைக் காட்டினார். அதே நேரத்தில் போலித்தனப் பரிசேயர்களையும், மதத் தலைவர்களையும், ஆளும் வர்க்கத்தையும் வளைந்து கொடுக்காமல் எச்சரித்தார்.

இயேசுவின் நீதி விடுதலை வழங்குவதில் இருந்தது. உலகம் பார்க்கும் விடுதலை அல்ல, பாவத்திலிருந்தும், சாத்தானின் கட்டுகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுவிப்பதில் அவருடைய நீதி இருந்தது.

நீதிமான்களையல்ல, பாவிகளையே தேடி வந்தேன் என இயேசு சொல்வது நீதிமான்களுக்கு எதிரானதல்ல. தன்னை நீதிமான்கள் என காட்டிக் கொண்ட பரிசேயர்கர்களுக்கு எதிரானது. போலித்தனமான பரிசேயத் தனத்துக்கு எதிரானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இறுதி அழைப்பின் போது, “நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைத் தனியே பிரிப்பேன்” என்கிறார் இயேசு. நீதியான வாழ்க்கையையே நம்மிடமிருந்து அவர் எதிர்பார்க்கிறார் என்பதன் தெளிவான அழைப்பு அதுவே..

எனது அரசு இந்த உலகைச் சார்ந்ததல்ல என்கிறார் இயேசு. எனவே இயேசுவின் நீதியும் இந்த உலகைச் சார்ந்ததாய் இருக்கப் போவதில்லை. இயேசுவின் நீதி, அன்பின் நீதி. அன்பை மனதில் தேக்கி அதன் பாய்ச்சலில் சமூகத்தைக் கழுவ நினைத்த நீதி. இன்றைய உலகின் தேவையும் அந்த நீதியே ! நீதிக்காகக் குரல் கொடுக்க நாம் எழும்புகையில் இந்த சிந்தனைகள் நமக்குள் எழட்டும். நாம் நீதி என எதை நினைக்கிறோம் ? இயேசுவின் பார்வையில் நீதியானதையா ? இல்லை உலகின் பார்வையில் நீதியானதையா ? எனும் கேள்வி அணையாமல் எரியட்டும்.

உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை இயேசுவின் பார்வையில் நீதியானதையே செய்யும். அது சகோதரனுக்கு எதிராய் வழக்குப் பதிவு செய்வதில்லை. ஏழையின் விண்ணப்பங்களை நிராகரித்து நகர்வதில்லை. அரையடி நிலத்துக்காய் அடித்துக் கொள்வதில்லை. யாவரையும் சமமாய்ப் பாவிக்கும் உன்னத நிலையை நோக்கிப் பயணிக்கும். தனி வாழ்க்கையில் தூய்மையையும், பணிவையுமே நேசிக்கும் என்பது மனதில் நிலைக்கட்டும்.

நீதி என்பது உலகப் போராட்டமல்ல,
அது, அன்பின் நீரோட்டம்.

சேவியர்.

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.

ஆன்மீகம் : முதுமை, இறைவனின் வரம்

Old
சமீபத்தில் ஒரு நபர் தன்னுடைய முதியோர் இல்ல விசிட் அனுபவம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டார். அவர் சொன்னது இது தான்.

“அந்த முதியோர் இல்லத்துக்குப் போனேன். அங்கே நடக்கிற விஷயங்களெல்லாம் மனசை ரொம்ப கஷ்டப்படுத்துது. ஒரு பாட்டி கிட்டே பேசிட்டிருந்தேன். ஒரு நல்ல கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவங்க. அவங்க பேசினதைக் கேட்டப்புறம் மனசு ரொம்ப ரொம்ப பாரமாகிப் போச்சு” என்றவர் அந்த பாட்டி சொன்ன கதையை அப்படியே விவரித்தார்.

நாங்க நல்ல வசதியான குடும்பம். ஒரே பையன் தான். அவன நல்லா படிக்க வெச்சேன். அவனுக்கு ஒரு நல்ல கம்பெனில வேலயும் கிட்டிச்சு. அப்புறம் நல்லா சம்பாதிக்கிற பெண்ணைப் பாத்து கல்யாணம் கெட்டி வெச்சேன். ஒரு கொழந்த பொறந்துச்சு. அதுக்கப்புறம் பொண்டாட்டியோட பேச்சைக் கேட்டுட்டு என்னை இங்கே கொண்டு வந்து விட்டான். விடும்போ, கவலப்படாதீங்கம்மா, நான் வாரத்துக்கு ஒருக்க வந்து பாப்பேன். ஒண்ணாந்தேதி பணம் அனுப்பி குடுப்பேன்னெல்லாம் சொன்னான். நான் இங்க வந்து நாலு வருஷம் ஆச்சு. ஒருவாட்டி கூட எட்டிப் பாக்கல. கொண்டு விட்ட அன்னிக்கு போனவன் தான். என்னிக்காவது ஒருவாட்டியாச்சும் சாகறதுக்கு முன்னாடி அவன் வருவானா ன்னு பாத்துட்டு இருக்கேன். சொல்லி முடிக்கும் முன் அவருடைய குரல் தழுதழுக்க, கண்ணீர் பொல பொலவென ஓடியது.

இன்றைய சமூகம் முதியோர்களை எந்த நிலமையில் வைத்திருக்கிறது என்பதை நினைக்கும் போது மனது வலிக்கிறது. நகர்ப்புறங்களில் முதியோர் பராமரிப்பு இல்லங்கள் பெருகி வருகின்றன. மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் செலுத்தினால் உங்கள் வீட்டில் இருக்கும் முதியோர்களை அவர்கள் பராமரிக்கிறார்கள். எவ்வளவு பணம் மாசம் தோறும் கட்ட முடியுமோ அதற்குத் தக்கபடி பராமரிக்கின்ற பல வகையான இல்லங்கள் உண்டு.

அவர்களுக்கு தங்க இடம் கிடைக்கும். சாப்பிட உணவு கிடைக்கும். படிக்க நியூஸ் பேப்பர் கிடைக்கும். தொலைக்காட்சி இருக்கும். ஆனால் அங்கே தனது பிள்ளைகளின் அருகாமை இருக்காது. பேரன் பேத்திகளுடன் விளையாடும் ஆனந்த அனுபவம் இருக்காது. பாசமாய் தன்னைப் பார்த்துக் கொள்ளும் சொந்தங்கள் இருக்காது ! ஒருவேளை மகன் பணம் அனுப்பாவிட்டால், அவ்வளவு தான். நடுத்தெருவிலோ, அல்லது மிக இழிவான நிலையிலோ அவர்களுடைய வாழ்க்கை இடம் மாறும்.

குடும்ப உறவுகளில் நிகழும் பலவீனம் பதட்டப்பட வைக்கிறது. பெற்றோர் பாரமானவர்கள் எனும் சிந்தனை இன்றைய இளைய தலைமுறையினரிடம் கிளைவிட்டிருக்கிறது. பெற்றோரைப் பராமரிப்பதை மிகப்பெரிய தியாகமாகப் பார்க்கும் மக்கள் உண்டு. பெற்றோரை உதறி விட்டு எந்த விதமான குற்ற உணர்வும் இல்லாமல் நடக்கின்ற மனிதர்களும் உண்டு. பெற்றோர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் அவர்கள் சீக்கிரம் இறந்து போய்விடட்டும் என வேண்டிக்கொள்ளும் மனிதர்கள் ஏராளம் உண்டு. இவையெல்லாம் கிறிஸ்தவக் குடும்பங்களிலேயே உண்டு என்பது தான் வேதனையின் உச்சம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் நடந்த நிகழ்ச்சி பத்திரிகைகளில் அதிர்ச்சியாய் அலசப்பட்டது. அமெரிக்காவில் இருந்த மகன் ஊருக்கு வந்தான். அன்னையிடம் மிக அன்பாய் பழகினான். சில வாரங்கள் தங்கினான். தனது பிள்ளையைப் பார்த்துக் கொள்ள அமெரிக்கா வரவேண்டும் என அழைத்தான். அன்னை சிலிர்த்தாள். சொத்துகளையெல்லாம் விற்று பணத்தை வங்கியில் போட்டு விட்டு அம்மாவுடன் விமான நிலையம் சென்றான். விமான நிலைய இருக்கை ஒன்றில் அவளை அமரவைத்து விட்டு நழுவி அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏறி அவன் பயணமானான். அமெரிக்கா செல்ல பாஸ்போர்ட் வேண்டும் என்பதைக் கூட அறியாத அந்த அப்பாவித் தாய் விமான நிலையத்தில் அனாதையாய் விடப்பட்டாள். இருந்த சொத்துகளையெல்லாம் உறிஞ்சி எடுத்த மகன் அதுகுறித்த எந்த ஒரு குற்ற உணர்வும் இன்றி அமெரிக்காவில் வாழ்க்கை நடத்துகிறான்.

ஒரு காலத்தில் முதியவர்கள் என்றால் அதிகபட்ச மரியாதையுடன் பார்க்கப் பட்டார்கள். “ஐயா’ என்று சொல்லி எழுந்து கைகட்டி நிற்பார்கள். ஒரு குடும்பத்தின் மூத்தவர் சொல்லும் வார்த்தைக்கு மறு பேச்சு இருக்காது. அவருக்காக ஒட்டு மொத்த வீடும் கட்டுப்படும். உறவுச் சிக்கல்கள், குடும்பச் சண்டைகள் எல்லாமே அவர் சொன்னால் சரியாகிவிடும். இன்றைக்கு நிலமை தலை கீழ்.

பணம் கையில் இருந்தால் பெற்றோரை மதிக்கத் தேவையில்லை, அவர்களைச் சார்ந்திருக்கத் தேவையில்லை எனும் எண்ணம் பிள்ளைகளுக்கு வந்து விடுகிறது. அந்த சிந்தனை அப்படியே அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கும் பரவி அவர்களுடைய மனதிலும் முதியவர்களைப் பராமரிக்கத் தேவையில்லை, மதிக்கத் தேவையில்லை எனும் கலாச்சாரப் பிழை உருவாகி விடுகிறது.

நரை திரண்டவருக்குமுன் எழுந்து நில். முதிர்ந்தவர் முகத்தை மதித்து நட: உன் கடவுளுக்கு அஞ்சி வாழ்: நானே ஆண்டவர்! – ( லேவியர் 19 : 32, பொது மொழிபெயர்ப்பு) என்கிறது பைபிள். இறைவனுக்கு அஞ்சுதல் என்பது பெரியவர்களை கனம்பண்ணுவதில் இருக்கிறது என்பதே இறைவனுடைய போதனையாகும். பெற்றோரைக் கனம் பண்ண வேண்டும் எனும் போதனையை இயேசுவும் வலியுறுத்துகிறார். பெற்றோரைக் கவனிப்பதற்குப் பதில் கடவுளுக்குக் காணிக்கை செலுத்தும் பரிசேயத்தனத்தை அவர் சாடுவதையும் நாம் விவிலியத்தில் பார்க்கிறோம். முதியவர்கள் மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரியவர்கள் என்கிறது விவிலியம்.

அப்பொழுது அரசன் ரெகபெயாம் தன் தந்தை சாலமோன் உயிரோடிருக்கையில் அரசவையில் பணியாற்றிய முதியோரிடம் இம் மக்களுக்கு என்ன மறுமொழி கூறலாம்? உங்கள் கருத்தென்ன? என்று ஆலோசனை கேட்டான் ( 1; இராஜாக்கள் 12 : 6 ). விவிலியத்தில் முதியவர்களிடம் ஆலோசனை கேட்கும் வழக்கத்தைப் பல இடங்களில் காணலாம். புதிய ஏற்பாட்டில் கூட சகோதரனைத் திருத்த மூப்பர்களின் ஆலோசனை கேட்கும் போதனைகளைக் காண முடியும். விவிலியம் முதுமையை ஆலோசனை சொல்லும் ஒரு அனுபவ வயதாகப் பார்க்கிறது !

ஆபிரகாமின் வாழ்க்கையானாலும் சரி, மோசேயின் வாழ்க்கையானாலும் சரி, அல்லது நோவாவின் வாழ்க்கையானாலும் சரி, விவிலியம் முதியவர்களை வலிமை மிக்கவர்களாகவே படம் பிடிக்கிறது. நரைத்த தாடியுடன் கையில் தடியுடன் நிற்கும் மோசே நமக்குக் கம்பீரமாகக் காட்சியளிப்பதன் காரணம் இது தான். உடல் அளவிலும், மன அளவிலும் அவர்கள் வலிமையுடையவர்களாக முன்னிறுத்தப்படுகிறார்கள். விவிலியம் முதுமையை வலிமையின் சின்னமாகப் பார்க்கிறது.

“உங்கள் முதுமைவரைக்கும் நான் அப்படியே இருப்பேன்: நரை வயதுவரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்: உங்களை உருவாக்கிய நானே உங்களைத் தாங்குவேன்: நானே உங்களைச் சுமப்பேன்: நானே விடுவிப்பேன்” ( ஏசாயா 46:4 ). கடவுளின் பராமரிப்பும், ஆசீர்வாதங்களும் இளமையோடு நின்று விடுவதில்லை. அவருடைய தொடர் பராமரிப்பு கடைசி காலம் வரைத் தொடர்கிறது. ஆபிரகாமுக்கு முதிர் வயதில் குழந்தையைக் கொடுத்து இறைவன் ஆசீர்வதித்தார். விவிலியம் முதுமையை ஆசீர்வாதத்தின் காலமாகப் பார்க்கிறது.

தொடக்க காலத்தின் மனிதனின் ஆயுள் 900 ஆண்டுகள் வரையும் பிறகு 120 ஆண்டுகளாகவும் மாறியதை விவிலியம் நமக்குச் சொல்கிறது. இன்றைக்கு மனிதனுடைய ஆயுள் என்பது 70-80 வயது எனும் எல்லைக்குள் வந்து நிற்கிறது. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட (யாத்திராகம் 20: 12 ). என்கிறது இறை வார்த்தை. நமது ஆயுள் நீடிக்கப்பட வேண்டுமெனில் நாம் நமது பெற்றோரை மதித்துப் பாதுகாக்க வேண்டியது அவசியம். விவிலியம் பெற்றோரை ஆயுள் நல்குபவர்களாகப் பார்க்கிறது.

அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர் ( சங் 92 : 14 ), முதிர் வயது என்பது மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் தேவையற்ற பருவம் அல்ல. அது இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட, கனி தரும் பருவம். விவிலியம் முதுமையை பசுமையும், செழுமையும் நிறைந்து கனிதரும் பருவமாய்ப் பார்க்கிறது.

இப்படி விவிலியம் முதுமையை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்கும் போது கிறிஸ்தவர்களாகிய நாமும் அத்தகைய உயரிய இடத்தை அவர்களுக்குத் தருவது மிகவும் அவசியமாகிறது. இன்றைய இளமை நாளைய முதுமை. இன்றைய முதுமை நேற்றைய இளமை. முதுமை என்பது இறைவன் ஒருவரை ஆசீர்வதித்து அவருடைய ஆயுளை முதுமை வரை நீடித்திருக்கிறார் என்பதன் ஆனந்த அடையாளமே.

முதியோரிடம் கடுமையாய் இராதே. அவர்களைத் தந்தையராக மதித்து ஊக்குவி. இளைஞர்களைத் தம்பிகளாகவும், வயது முதிர்ந்த பெண்களை அன்னையராகவும், இளம் பெண்களைத் தூய்மை நிறைந்த மனத்தோடு தங்கையராகவும் கருதி அறிவுரை கூறு ( 1 திமோ 5 : 1,2 ) என்கிறது பைபிள். முதியோரிடம் கடுமையாய் நடந்து கொள்வது இறைவனின் கட்டளையை நேரடியாக மீறுவதற்குச் சமம். நாம் மீறுகிறோமா ?

பெற்ற தந்தைக்குச் செவிகொடு: உன் தாய் முதுமை அடையும்போது அவளை இழிவாக எண்ணாதே ( நீ.மொ 23 : 22 ). பெற்ற தந்தைக்குச் செவிகொடுப்பதும், அன்னையை முதுமை வயதில் இழிவாகவோ, சுமையாகவோ எண்ணாமல் இருப்பதும் இறைவன் நமக்குத் தந்திருக்கும் கட்டளைகள். செயல்படுத்துகிறோமா ?

தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர். அவர்கள் விசுவாசமற்றோரைவிடத் தாழ்ந்தோராவர். ( 1 திமோ 5 : 8 ) எனும் பைபிள் வசனம், நாம் குடும்பத்தினரைக் கவனிக்க வேண்டும், அவர்களை சிறப்பாக ஆதரிக்க வேண்டும் என்கிறது. நாம் குடும்பத்தினரைக் கவனிக்கிறோமா, பெற்றோரைப் பராமரிக்கிறோமா ?

இந்த நாளில் முதுமையைக் குறித்த நமது பார்வையைக் கொஞ்சம் மாற்றுவோம். முதியவர்கள் நமது அனுதாபத்துக்கு உரியவர்கள் அல்ல. நமது அன்புக்கு உரியவர்கள். அவர்களுக்காக நாம் செய்யும் செயல்கள் தியாகத்தின் பிரதிபலிப்புகளல்ல, அன்பின் பிரதிபலிப்புகள் என்பதில் தெளிவு வேண்டும். அத்தகைய மனதை தூய ஆவியானவரின் துணையுடன் நாம் உருவாக்க வேண்டும்.

முதியவர்களுடன் உரையாடுவது, அவர்களை அடிக்கடி சந்திப்பது, வெளியே அழைத்துச் செல்வது, அவர்களுடைய கதைகளைக் கேட்பது, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது, அவர்களை அதிகபட்ச மரியாதையுடன் நடத்துவது, அவர்களுடைய கேள்விகளில் எரிச்சல் அடையாமல் இருப்பது, அவர்களுக்கு புதிய புதிய விஷயங்களை விளக்குவது, ஆன்மீக உரையாடல்களில் ஈடுபடுவது என அவர்களை முழுமையாய் உங்கள் வாழ்வின் பாகமாக மாற்றுங்கள். அதுவே முதியவர்களுக்கு மரியாதை அளிப்பதாகும். அதுவே விவிலியம் எதிர்பார்க்கும் வாழ்க்கையாகும்.

முதியவர்கள் நமது வாழ்வின் வரம், இதயம் தளும்பத் தளும்ப நேசிப்போம்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.

ஆன்மீகம் : சிறுவர்களின் உலகம்

jesus-with-children-0401

முதியவர்களைக் குறித்த சிந்தனையின் தொடர்ச்சியாக சிறுவர்களைக் குறித்து சிந்திப்பது ஆனந்தமாக இருக்கிறது. காரணம் விவிலியத்தில் சிறுவர்கள் சிறப்புக் கதா நாயகர்கள். அவர்களுக்கு இறைமகன் இயேசுவும், விவிலியமும் அளித்திருக்கும் முக்கியத்துவம் வியப்பூட்டுவது.

அதற்கு முன் இன்றைய தேசத்தில் சிறுவர்களின் நிலமை எப்படி இருக்கிறது என்பதை எட்டிப் பார்ப்போமா ?

உலக அளவில் அதிக குழந்தைகள், சிறுவர்களைக் கொண்டிருக்கும் நாடு எது தெரியுமா ? சந்தேகமே வேண்டாம். இந்தியாவே தான். சுமார் 40 கோடி பேர் இருக்கின்றனர். பெருமைப் பட அவசரப் படாதீர்கள். அவர்களில், சுமார் இரண்டு கோடி சிறுவர் சிறுமியர் இந்தியத் தெருக்களில் வாழ்கிறார்கள். அதாவது ஆதரவுக்கோ, அடைக்கலம் கொடுக்கவோ யாரும் இல்லாமல் தெருவே துணை என திரிகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடி.

கல்வி குறித்தும், தொழில் நுட்ப வளர்ச்சி குறித்தும், உலக மயமாதல் குறித்தும் நாம் அதிகம் அலசிக் காயப் போடுகிறோம். இன்றைய சூழலில் கல்வி வாசனையே இல்லாமல் வளரும் சிறுவர்கள் இந்தியாவில் மட்டும் சுமார் ஆறு கோடி பேர் ! ஆறு வயதுக்கும், பதினான்கு வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களை ஒட்டு மொத்தமாகப் பட்டியலிட்டால் அவர்களில் சரி பாதி பேருக்கு குறைந்த பட்சத் தேவையான ஆரம்பக் கல்வி கூட கிடைப்பதில்லை !

கல்வி இருக்கட்டும், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள் ? அந்த விஷயத்தில் இன்னும் மோசம் நமது நாட்டில் போதுமான அளவு இல்லை. இல்லை, இல்லவே இல்லை ! என்பதே அக்மார்க் நிஜம். ஆண்டு தோறும் சுமார் இரண்டே முக்கால் கோடி குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களில் சுமார் 20 இலட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு ஆண்டுக்குள்ளாகவே இறந்து விடுகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை ! தினமும் சுமார் ஏழாயிரம் குழந்தைகள் டயரியா போன்ற சாதாரண நோய்களினால் இறந்து போகிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய செய்தி.

ஊட்டச்சத்து குறைவான நிலை இந்தியாவின் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று. உலகிலேயே எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகள் இந்தியாவில் தான் மிக அதிகம் எனும் துயர சாதனையும் நம்மிடம் தான் இருக்கிறது. ஆண்டு தோறும் சுமார் 75 இலட்சம் குழந்தைகள் குறைவான உடல் எடையுடன் தான் பிறக்கின்றனர். உலக அளவில் ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் சுமார் 14 கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களில் சுமார் 6 கோடி பேர் இருப்பது இந்தியாவில் !

பெண்குழந்தைகளைப் பற்றிச் சொல்ல வேண்டாம். காலம் காலமாகவே நசுக்கப்படும் பெண்களின் நிலமை முழுதும் மாறிவிடவில்லை. சமூகம், குடும்பம் என பல இடங்களில் புறக்கணிப்புகளைப் பெறுவது இன்னும் நின்றபாடில்லை. சுமார் 20 சதவீதம் பெண் குழந்தை மரணங்கள் பாலியல் கொடுமையினால் நேர்வதாய் சொல்கிறது புள்ளி விவரம் ஒன்று. பெரும்பாலான பாலியல் தொந்தரவுகள் தெரிந்த குடும்ப உறவினர்களால் நேர்கிறது என்பது பகீரடிக்கும் உண்மை.

சமூகப் புறக்கணிப்பைப் பற்றிப் பேசும்போது குழந்தைத் தொழிலாளர் நிலை பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. சுமார் ஒன்றே முக்கால் கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் இருக்கின்றனராம். உலக அளவிலேயே இந்த விஷயத்தில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.

“பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்; மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில் ( சங்கீதம் 127 3 : பொது மொழிபெயர்ப்பு) என்கிறது விவிலியம். ஆண்டவர் அருள்கின்ற செல்வத்தை நாம் இன்று எந்த நிலையில் வைத்திருக்கிறோம் என்பதை நினைக்கும் போது மனம் பதை பதைக்கிறது இல்லையா ?

விவிலியத்தில் குழந்தைகளும், சிறுவர்களும் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள் ( ஆதி 1 :28 ) என கடவுள் மனிதனுக்கு முதல் கட்டளையைக் கொடுத்து குழந்தைகளின் மண்ணுலக வருகையை ஆசீர்வதிக்கிறார். அதனால் தான், கடவுளின் கொடையாக இருக்கிறார்கள் அவர்கள்.

இறைவனின் வரங்களைப் பாழாக்காமல் இருக்க வேண்டியது நம்மிடம் தரப்பட்டிருக்கும் முதல் கடமை. குழந்தைகளை நல்வழியில் வளர்க்க வேண்டிய கடமையும் பெற்றோருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அது ஆன்மீகம் தொடங்கி, வாழ்க்கைப் பாடம் வரை நீள்கிறது.

“நான் உனக்குக் கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும். நீ அவற்றை உன் பிள்ளைகளின் உள்ளத்தில் பதியுமாறு சொல். உன் வீட்டில் இருக்கும்போதும், உன் வழிப்பயணத்தின்போதும், நீ படுக்கும்போது, எழும்போதும் அவற்றைப் பற்றிப் பேசு. ( உபா 6 : 7 பொ.மொ) என்கிறது விவிலியம். அது ஒரு வகையில் ஆன்மீக அறிவைச் சுட்டிக் காட்டுகிறது. இன்னொரு வகையில் குழந்தையின் கல்வியின் முதல் கடமை பெற்றோரைச் சார்ந்திருக்கிறது என்பதை விளக்குகிறது.

நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு: முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார் ( நீமொ 22 : 6 ) – எனும் இறை வசனம் அதை நமக்கு இன்னும் தெள்ளத் தெளிவாக விளக்குகிறது ! அப்படியே பிள்ளைகள் பக்கத்திலும் திரும்பி “பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி: உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே என்கிறது நீதிமொழிகள்.

குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்கள் தவறு செய்யும் போது அடிப்பது என்றே பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு முன் எது சரியானது என்பதை குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். அது தான் முதல் தேவை. நமக்குத் தோன்றுவது போல நம் குழந்தைகளை நாம் வளர்த்த முடியாது. “என் புள்ளையை நான் அடிப்பேன் அதைக் கேக்க யாருக்கும் உரிமை இல்லை” என சொல்ல முடியாது. காரணம் குழந்தைகள் நம்மிடம் தரப்பட்டிருப்பவர்கள். கடவுளின் கொடைகள். நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. இறைவனுக்கே சொந்தமானவர்கள். நம்மிடம் தரப்பட்டிருக்கும் குழந்தைகளை அவர் விருப்பப்படி வளர்க்க வேண்டியது மட்டுமே நாம் செய்ய வேண்டிய பணி.

தந்தையரே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள். மாறாக அவர்களை ஆண்டவருக்கேற்ற முறையில் கண்டித்துத் திருத்தி, அறிவு புகட்டி வளர்த்துவாருங்கள் ( எபேசியர் 6 : 4 ) எனும் விவிலிய வாக்கு நமக்கு கல்வியை எப்படிப் போதிக்க வேண்டும் எனும் வழி முறையைக் கூட காட்டுகிறது !குழந்தைகளை நல்ல முறையில் வளர்ப்பது நற்செயல் என்கிறது தீமோத்தேயு முதலாம் நூல்.

“பிள்ளைகளே, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். ஆண்டவரின் அடியாருக்கு இதுவே ஏற்புடையது. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட என்பதே வாக்குறுதியை உள்ளடக்கிய முதலாவது கட்டளை ( எபேசியர் 6 1 – 3 ) எனும் இறை வார்த்தைகள் குழந்தைகளுக்கும் தந்தையருக்கும் இடையே இருக்க வேண்டிய உறவை விளக்குகிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக, இயேசு குழந்தைகளை எப்படியெல்லாம் நேசித்தார்,, குழந்தைத் தன்மையை எப்படியெல்லாம் சிலிர்ப்புடன் அணுகினார் என்பது புதிய ஆன்மீகப் புரிதல்களைத் தருகிறது.

விண்ணக வாழ்க்கைக்குள் நுழைய வேண்டுமெனில் சிறுவர்களாகவும், குழந்தைகளாகவும் மாற வேண்டியதன் தேவையை எடுத்துரைக்கிறார். “சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று அவர்களைச் சிலர் அவரிடம் கொண்டுவந்தனர். சீடரோ அவர்களை அதட்டினர். இயேசு இதைக் கண்டு, கோபம் கொண்டு, ‘ சிறு பிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார் ( மார்க் 10 : 13 – 15 )

சிறு பிள்ளைகள் இயேசுவின் மிகப்பெரிய பிரியத்துக்குரியவர்களாக இருக்கின்றனர். இயேசு கோபமடையும் சந்தர்ப்பங்கள் மிகவும் அபூர்வம். தந்தையின் இல்லம் சந்தை போல மாறி, அதன் அர்த்தத்தை இழந்தபோது கோபமடைந்தார். இப்போது குழந்தைகளைத் தடுப்பதைக் கண்டு கோபமடைகிறார். காரணம் விண்ணரசு சிறு பிள்ளைகளைப் போல மாறுவோருக்கானது என்கிறார் இயேசு.

“நீ வளரவே மாட்டியா ?” என திட்டுவது தான் நமது இயல்பு. நீ சின்னப் பிள்ளையைப் போல மாற மாட்டாயா ? என்று கேட்பது இறைமகன் இயேசுவின் இயல்பு !

“நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.” ( மத்தேயு 18 : 3-5 ) எனும் இறை வார்த்தைகளில் இயேசு சிறு பிள்ளைகள் சார்ந்த மூன்று விஷயங்களை வலியுறுத்துகிறார்.

முதலாவது, குழந்தையைப் போல மாறுவது. சிறு பிள்ளைகள் எப்போதுமே தந்தையைச் சார்ந்தே இருப்பவர்கள். தந்தையின் கையைப் பிடித்து நடக்கும் போது உலகில் தன்னை யாரும் எதுவும் செய்து விட முடியாது எனும் அசைக்க முடியாத நம்பிக்கை குழந்தைக்கு இருக்கும். அதே போல இறைவனைச் சார்ந்தே இருக்கும் மனநிலை சிறு பிள்ளையாய் மாறுவதன் முதல் நிலை. சார்ந்து இருத்தல், இயேசுவின் அருளை தினம் தினம் பெற்று, அன்றன்றைக்குரிய செயல்களில் வாழ்வது. ஒவ்வொரு நாளும் புதுக் கிருபை நமக்குக் கடவுள் தருகிறார் என்கிறது விவிலியம். முழுமையாய் இறைவனைச் சார்ந்து இருக்கும் குழந்தை மனநிலை அதைப் பெற்றுக் கொள்கிறது.

இரண்டாவது, குழந்தையைப் போல தன்னைத் தாழ்த்திக் கொள்ளுவது. குழந்தை மனநிலை என்பது பெருமையை விரும்பித் திரிவதில்லை. தோல்விகளையும், அவமானங்களையும் தாமரை இலைமேல் விழும் நீரைப் போலவே பாவிக்கும். தாழ்மை கிறிஸ்தவத்தின் அடிப்படை. தாழ்மையை இழந்தபோது சாத்தான் உருவானான், விண்ணகத்திலிருந்து வெளியேற்றப்பட்டான். இயேசுவோ சீடர்களின் பாதங்களைக் கூட பரவசத்தோடு கழுவும் பணிவைக் கொண்டிருந்தார். அத்தகைய தாழ்மையைக் கொள்வது குழந்தை மனநிலை. ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள் கொடுத்து ஐயாயிரம் பேருக்கு உணவளிக்க இயேசுவின் பணியில் இணைந்தவன் ஒரு சிறுவன். அவனுடைய பெயர் கூட விவிலியத்தில் இல்லை ! நாமானை நலமாக்கத் துணை நின்ற சிறுமியின் பெயரும் விவிலியத்தில் இல்லை. சிறுவர்கள் தாழ்மையின் சின்னங்கள். அவர்கள் பெயருக்காக எதையும் செய்வதில்லை.

மூன்றாவது, சிறுபிள்ளையை இயேசுவின் பெயரால் ஏற்றுக் கொள்தல். வெறுமனே ஏற்றுக் கொள்தலல்ல. குழந்தைகளை ஏற்றுக் கொள்ளும்போது அதை இயேசுவின் பெயரால் ஏற்றுக் கொள்ளும் போது நாம் இறைவனை மகிமைப்படுத்துகிறோம். நாளைகளைக் குறித்த கவலையற்ற சிறுவர்கள் அன்றைய தினத்தை முழுமையாய் இறைவனோடு வாழ்தலின் சின்னங்கள். அவர்கள் தூய்மையானவர்கள். அத்தகைய தூய உள்ளத்தோர் விண்ணரசின் சொந்தக்காரர்கள் என்பதை இயேசு தனது மலைப்பொழிவில் உறுதிப்படுத்துகிறார்.

குழந்தையாய் மாறுவதும், குழந்தைகளை ஏற்றுக் கொள்வதும் நமக்கு தரப்பட்டிருக்கும் ஆன்மீகக் கட்டளைகள். குழந்தைகளுக்கு இடறல் உண்டாக்குபவர்களுக்கோ மிகப்பெரிய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்” எனும் இயேசுவின் வார்த்தைகளின் வீரியம் அச்சமூட்டுகிறது. சிறியவர்களுக்கு எந்த விதத்திலும் இடஞ்சலாக இருக்கக் கூடாது என்பதே இயேசு சொல்லும் அழுத்தமான பாடம்.

சிறுவர்கள் நமது வாழ்வின் மிக முக்கியமானவர்கள். அவர்களை சிறந்த ஆன்மீக வெளிச்சத்தில் வளர்த்த வேண்டியது நமது கடமையாகும். நமது சமூகத்தில் இருக்கின்ற சிறுவர்களை நேசிப்போம், வழிகாட்டுவோம், ஏற்றுக் கொள்வோம். அவர்களை எந்த விதத்திலும் தவறான வழிக்கு அழைத்துச் செல்லாதிருப்போம்.

சிறு பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கத் தானே இதுவரை அவசரம் காட்டினோம், இனிமேல் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளவும் துவங்குவோம்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.

ஆன்மீகம் : கிறிஸ்மஸ் – வார்த்தை மனிதனானார்.

christmas

1952ம் ஆண்டு. கொரியா சிவில் யுத்தத்தின் பிடியில் அகப்பட்டிருந்த நேரம். ஒரு கிறிஸ்மஸ் இரவில் அமெரிக்கக் கர்ப்பிணிப் பெண் ஒருத்தி உதவிக்காகக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். அசரடிக்கும் குளிர், விறைக்கும் தேகம், உதவிக்கு யாரும் வரவில்லை. வழியே சென்றவர்களும், “எங்கே உன் அமெரிக்கப் புருஷன் ?” என ஏளனமாய் விரட்டி விட்டனர்.

பக்கத்து ஊரில் ஒரு மிஷனரி உண்டு என்பதை அறிந்திருந்த அந்தப் பெண் அந்த ஊரை நோக்கி நகரத் துவங்கினாள். முடியவில்லை பிரசவ நேரம். ஒரு பாலத்தின் அடியில் சென்று ஒதுங்கினாள். அங்கே அவளுக்குப் பிரசவம் நடந்தது. குழந்தையைத் தன்னந் தனியனாய்ப் பெற்றெடுத்த அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பனி பொழிந்து கொண்டிருந்தது. அந்தப் பெண் தனது துணிகளையெல்லாம் கழற்றி அந்தக் குழந்தையைப் பொதிந்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள்.

மறு நாள் காலையில் அந்த வழியாக மிஷனரிகள் வந்தபோது ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டனர். குரல் வந்த திசையில் சென்று பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி. உறைந்து போன நிலையில் இறந்து கிடந்த தாயின் கரங்களில் ஒரு ஆண் குழந்தை. குழந்தை காப்பாற்றப்பட்டான். பையன் காப்பகத்தில் வளர்ந்தான். தனது பத்தாவது வயதில் அவனிடம் அந்த உண்மையை காப்பகத்தினர் சொன்னார்கள்.

அதற்கு அடுத்தநாள் காலையில் படுக்கையில் அந்தப் பையனைக் காணவில்லை. அவனை அவர்கள் தேடினார்கள். அதே பாலத்தின் அடியில் அவனைக் கண்டார்கள். கண்டவர்கள் அதிர்ந்து போனார்கள். தனது ஆடைகளையெல்லாம் களைந்து விட்டு, விறைக்கும் குளிரில் இருந்த அந்தப் பையன் அழுது கொண்டே “இந்தக் குளிரையெல்லாம் நீ எனக்காகத் தாங்கினாயாம்மா” என நடுங்கிக் கொண்டே அழுதான். பார்த்தவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.

தாயின் அன்பு அளவிட முடியாதது. அந்தத் தாய் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன் என சொன்ன இயேசுவின் அன்பு அனைத்திலும் உயர்ந்தது. இதே போன்ற நிராகரிப்பு, இதே போன்ற குளிர், ஒரு தாயின் தவிப்பு, ஒரு தொழுவம் தொழுகை பெற்ற வரலாறு, எல்லாம் நாம் அறிந்தது தானே !

கிறிஸ்மஸ் விழாவை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமெனில் “அன்பு” எனலாம். மனுக்குலத்தின் மேல் கடவுள் கொண்ட அன்பு !

“மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” ( மத் 4.4  ) என்கிறது விவிலியம். அத்தகைய வார்த்தை மனிதனாக அவதாரம் எடுத்த நாளைத் தான் கிறிஸ்தவம் கிறிஸ்து பிறப்பு என்கிறது !

கிறிஸ்மஸ் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் பத்து விஷயங்களைப் பட்டியலிட்டுப் பாருங்கள் ? வண்ண வண்ண நட்சத்திரங்கள், கிறிஸ்மஸ் மரம், குடில், கிறிஸ்மஸ் தாத்தா, கிறிஸ்மஸ் வாழ்த்து, புத்தாடை, நல்ல சாப்பாடு, அலங்காரம், அப்புறம் ஆலய திருப்பலி, இயேசுவின் பிறப்பு ! அவ்வளவு தானே ?

விழாக்கள் எல்லாமே இப்போது ஒரு வியாபார தளங்களாகி விட்டன. எந்த விழாவை எடுத்துக்கொண்டாலும் சரி, எப்படிடா ஏமாந்தவன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்றே புதுப் புது விஷயங்களுடன் கடை விரிக்கும். தீபாவளி போன்ற விழாக்களுக்கு எரிந்து தீரும் பட்டாசுகள் பல கோடி ரூபாய்களை அழித்து முடிக்கும். கிறிஸ்மஸ் போன்ற விழாக்கள் சாக்லேட், ஆடைகள், அலங்காரங்கள் என பல விஷயங்களைக் காட்டி பொருளாதாரத்தின் பல்லைப் பிடுங்கும்.

உஷாராகிக் கொள்வது ரொம்ப நல்லது, ரொம்ப முக்கியமானது !

அலங்காரங்களே தேவையில்லையா ? மகிழ்ச்சியாய் எல்லோரும் இருக்க வேண்டாமா என மனசு குரல் கொடுக்கிறதா ? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மகிழ்ச்சிக்கும், நீங்கள் தேவையில்லாமல் செலவிடும் பல்வேறு விஷயங்களுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது !

கிறிஸ்தவ வாழ்க்கையின் அடிப்படையாய் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல் என்றால் நான் இதைத் தான் சொல்வேன். உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும், “இயேசு என் இடத்தில் இருந்தால் என்ன செய்வார் ?” எனும் கேள்வியைக் கொண்டே தீர்மானியுங்கள். வாழ்க்கை ரொம்பவே அர்த்தமுள்ளதாகி விடும்.

சரி, இயேசுவின் பிறப்பையே கொஞ்சம் பார்க்கலாமே ! இந்த பிரபஞ்சத்திலேயே ‘தான் எங்கே எப்படிப் பிறக்க வேண்டும்’ என தீர்மானித்துப் பிறந்த ஒரே ஒரு நபர் இயேசு மட்டுமே ! அப்படிப்பட்ட இயேசு எப்படி அவதரித்தார் ? அவருடைய வம்சாவழிப் பட்டியலில் பாவிகளுக்கு இடம். அவர் நினைத்திருந்தால் குற்றமே இல்லாத ஒரு பரம்பரையில் வந்திருக்க முடியாதா ?

அவருடைய பிறப்பு விலங்குகளுடைய கொட்டிலில். ஏன், அவர் நினைத்திருந்தால் மாளிகையில் அரசனின் மகனாய் அவதரித்திருக்க முடியாதா ?

அவர் பிறப்பு அறிவிக்கப் பட்டது சமூக அமைப்பின் கடைநிலையில் இருக்கும் இடையர்களுக்கு ! ஏன் மாளிகையில் பட்டாடைவாசிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்க முடியாதா ?
அவர் பிறந்த இடத்தில் அலங்காரம் இருந்ததா ? அலங்கோலம் தானே இருந்தது ! அவரைச் சுற்றிப் புத்தாடை இருந்ததா கந்தல் இருந்ததா ? அவருக்கு சாக்லேட் பந்தி நடந்ததா ?

இப்படி இயேசுவின் உண்மையான பிறப்பு நிகழ்வு எப்படி நடந்தது என்பதையும், ஏன் நடந்தது என்பதையும் மனதில் அசைபோடாமல் கிறிஸ்மஸ் விழா கொண்டாடுவதில் அர்த்தமே இல்லை.

இந்த கிறிஸ்மஸ் தினத்தில் நமது மையமாக இருக்க வேண்டிய முதல் நபர் இயேசு என்பதை முதல் தீர்மானமாகக் கொள்வோம். அந்தத் தீர்மானம் தான் நமது அடுத்தடுத்த செயல்களைத் தீர்மானிக்கச் செய்யும். இந்த கிறிஸ்மஸ் தினத்தில் செய்ய வேண்டிவற்றின் ஒரு டாப் 10 லிஸ்ட் போட்டுப் பார்க்கலாமா ?

1.        கிறிஸ்மஸ் ஒரு பகிர்வின் நாளாக மலரட்டும். உங்கள் குடும்பத்தில், நட்பு வட்டாரத்தில், உறவு வட்டாரத்தில் நீங்கள் வெறுக்கும் நபர் இருக்கிறாரா என்பதைக் கொஞ்சம் அலசிப் பாருங்கள். அத்தனை எளிதில் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த நபருடன் நிச்சயமாகப் பேசுங்கள். தொலைபேசுங்கள், கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லுங்கள். முடிந்தால் அவருடைய வீட்டுக்கே சென்று பேசுங்கள். ‘நான் ஏன் அவன் கிட்டே பேசணும் ?” எனும் ஈகோவைக் கழற்றாமல் இயேசுவை அணியவே முடியாது ! ஒருவருக்கு நீங்கள் அளிக்கும் மன்னிப்பு, உங்களையே விடுதலையாக்கும்.

2.        மகிழ்ச்சியை இறைவனை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளால் உருவாக்குங்கள். குழுவாக அமர்ந்து பாடல்கள் பாடுவது, உரையாடுவது என எந்த நிகழ்ச்சியாக வேண்டுமானாலும் அது இருக்கலாம். குழந்தைகள் இருக்கும் வீடெனில் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் விழாவையும், அதன் அர்த்தத்தையும் விளக்குங்கள். அவர்களுக்குக் கதைகள் சொல்லி கிறிஸ்மஸைச் சிறப்பானதாக்குங்கள்.

3.        உங்களுக்குச் சொந்தமல்லாத, பக்கத்து வீட்டு நபர் யாரோ ஒருவரை இந்த விழாநாள் மகிழ்வில் இணைத்துக் கொள்ளுங்கள். அவருடன் ஒரு புதிய உறவை உருவாக்குங்கள். அவருக்கு கிறிஸ்துவை அறிமுகப் படுத்தி வையுங்கள். அந்த நபருக்கு ஏதேனும் முக்கியமான தேவைகள் இருந்தால் அதை நிறைவேற்றிக் கொடுப்பதன் மூலம் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியை அர்த்தப் படுத்துங்கள்.

4.        ஏதோ ஒரு நல்ல விஷயத்தை இந்த நாளில் நிச்சயம் செய்யுங்கள். ஒரு முதியோர் இல்லத்தில் சென்று அவர்களுடன் கிறிஸ்துப் பிறப்பு மகிழ்ச்சியைப் பகிர்வதாகவோ, ஒரு மருத்துவமனை சென்று நோயாளியை சந்திப்பதாகவோ, ஒரு அனாதை இல்லத்துக்கு உணவு கொடுப்பதாகவோ, உங்கள் மனதில் எழும் இது போன்ற ஏதோ ஒரு நிகழ்வை நிச்சயம் செய்யுங்கள். உங்கள் பெயரை எந்த இடத்திலும் முன்னிலைப் படுத்தாமல் இயேசுவை முன்னிலைப்படுத்தியே அவற்றைச் செய்யுங்கள்.

5.         குடும்ப உறவை வலுவாக்கும் ஒரு நாளாக இதைக் கொண்டாடுங்கள். பார்க், சினிமா, பூங்கா, இத்யாதிகளைத் தவிர்த்து வீட்டில் அனைவரும் ஒன்றாய் இருந்து கொண்டாடுவதே சிறந்தது. தேவையற்ற பார்ட்டி அழைப்புகள், கொண்டாட்ட அழைப்புகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள். குடும்ப உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்களிடையே வாழ்த்துக் கடிதங்கள் எழுதிப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

6.         பரிசுகள் கொடுக்கிறீர்களெனில் அது ஆத்மார்த்தமானதாய் இருக்கட்டும். அதிக விலையுள்ள பொருட்கள் தான் நல்லது என்பதெல்லாம் மாயை. உங்கள் கைப்பட எழுதப்படும் ஒரு வாழ்த்து மடலை விட உயர்ந்த வாழ்த்து அட்டைகள் கிடையாது. ஒரு நபரைச் சென்று பார்த்து ஒரு அன்பான புன்னகையைக் கொடுப்பது எவ்வளவு உயர்ந்த பரிசு என்பதை உணர்கிறோமா ? விதவையின் காணிக்கை இரண்டு காசு தான், ஆனால் கொடுத்த மனநிலை தானே கடவுளால் அங்கீகரிக்கப்பட்டது !

7.          கடவுள் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழையைப் பொழிகிறவர். தீர்ப்பும், முடிவும் அவர் கையில். எல்லோரிலும் இறைவனின் பிம்பத்தைக் காண்பதே ஆன்மீக வளர் நிலை. விழா நாட்கள் மதச் சண்டைகள், சச்சரவுகள், சிக்கல்கள் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம். இல்லையேல் கிறிஸ்மஸ் கொண்டாடுவது மாபெரும் பரிசேயத் தனம் ஆகிவிடும்.

8.         உங்களை அன்பு செய்பவர்களுக்கே நீங்கள் அன்பு செய்வதில் பயன் இல்லை. உங்களை அன்பு செய்யாதவர்கள், உங்களை அறியாதவர்கள், உங்கள் விரோதிகள் என எல்லோருக்காகவும் ஜெபியுங்கள்.

9.        அன்பு, அமைதி, மகிழ்ச்சி, நிறைவு எனும் நல்ல விஷயங்களே கிறிஸ்மஸ் விழாவில் நிரம்பியிருக்க வேண்டியவை. அவற்றை மனதில் நிரப்புங்கள். கோபம், எரிச்சல் போன்றவற்றை அழித்து விட இந்த ஆண்டு தூய ஆவியின் துணையை நாடுங்கள்.

10.  “உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக” எனும் வாசகங்களை உள்வாங்கி கிறிஸ்மஸ் தினத்தை வீணடிக்காதிருக்க வேண்டியது மிக முக்கியம். உங்கள் கிறிஸ்மஸ் விழா பொழிவிழக்க அது ஒன்றே போதும், எனவே அதை விட்டு ஒதுங்கியே இருங்கள்.

கிறிஸ்மஸ் விழா அன்பின் விழா. அன்பைப் பகிர்தல் மூலம் இயேசுவைப் பிரதிபலிக்கும் விழா. அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் கெவின் கோல்மென் எனும் பதின்மூன்று வயது சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு மூளையில் புற்று நோய். கடந்த அக்டோபர் மாதம் அவனைச் சோதித்த டாக்டர்கள் அவன் இன்னும் ஓரிரு வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பான் என்றார்கள்.

பெற்றோர் மௌனமாய்க் கதறினார்கள். பையனோ, தனக்கு கிறிஸ்மஸ் நிகழ்ச்சிகளைப் பார்க்க வேண்டும், அதற்காகவே காத்திருக்கிறேன் என்று பெற்றோரிடம் சொன்னான். ஊரில் உள்ள மக்கள் அதை கேள்விப்பட்டார்கள். எல்லோரும் ஒன்று பட்டார்கள். பையனுடைய ஆசையை நிறைவேற்ற ஒட்டு மொத்த ஊருமே ஒன்று சேர்ந்தது. அக்டோபர் மாதத்திலேயே ஊரை முழுதும் அலங்கரித்து, பஜனை பாடல்கள் பாடி, கிறிஸ்மஸ் மரங்கள் வைத்து, கிறிஸ்மஸ் தாத்தாவை வரவைத்து ஒரு நிஜ கிறிஸ்மஸ் சீசனையே உருவாக்கி விட்டார்கள்.

பையனின் வீட்டுக்குச் சென்று வாழ்த்துகள் கூறி, கேரல் பாடல்கள் பாட அவன் மகிழ்ந்தான். பெற்றோர் நெகிழ்ந்தனர். தனது பையனின் ஆசையை நிறைவேற்ற ஊரே ஓன்று திரண்டதில் கண்ணீர் விட்டனர். அந்தப் பையன் நிம்மதியாய் உணர்ந்தான். இரண்டு வாரங்களுக்குப் பின் கடந்த மாதம் அந்தப் பையன் இறந்தான். அன்பின் இன்னொரு பரிமாணத்தை அறிந்தவனாக. கிறிஸ்மஸ் விழா அன்பின் விழா என்பதன் செயல் வடிவம் அங்கே நிகழ்ந்தது.

ஒவ்வொரு நாளும் நமக்குள் இயேசு பிறக்கும் அனுபவம் எழ வேண்டும், அதுவே உண்மையான கிறிஸ்மஸ். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் கட்டாயமான ஆன்மீக நிகழ்வல்ல. பைபிளில் எங்கும் இயேசுவின் பிறந்த நாள் பற்றிய குறிப்பு இல்லை. ஆதிக் கிறிஸ்தவர்கள் அதைக் கொண்டாடிய வரலாறு இல்லை. இயேசுவின் அன்னை மரியாள் அந்த பிறந்த தினத்தைப் பற்றி அப்போஸ்தலர்களிடம் பேசியதாகவும் குறிப்புகள் இல்லை. இயேசு அதை நமக்கு ஒரு கடமையாகத் தரவில்லை என்பது மிகவும் தெளிவாகிறது.

எனவே, இயேசு பிறப்பு விழாவை ஒரு கட்டாயத்துக்காகக் கொண்டாடாமல் இயேசுவின் அன்பைப் பிறருக்குப் பகிர்ந்தளிக்கும் ஒரு இனிய அனுபவமாகக் கொண்டாடுவதே சாலச் சிறந்தது. அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துகள்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.