இப்படி ஒரு காட்சியை சிந்தித்துப் பாருங்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்டு, உயிர்விட்டு அடக்கம் செய்யப்படுகிறார். அவ்வளவு தான் இயேசுவின் வாழ்க்கை. இயேசுவின் வாழ்க்கை அத்துடன் நிறைவடைந்திருந்தால் இன்றைக்கு கிறிஸ்தவம் இருந்திருக்காது. இயேசுவின் சீடர்களெல்லாரும் பழைய வலைகளை தூசுதட்டிக் கொண்டு கடலில் இறங்கியிருப்பார்கள். மூணு வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டோம்பா இன்னும் கொஞ்சம் சம்பாதிச்சிருக்கலாம் என சிலர் முணுமுணுத்திருப்பார்கள்.
“பாவம், ஒரு நல்ல மனுஷன். இருந்த காலத்துல எல்லாருக்கும் உதவி செஞ்சாரு” என கூட்டம் கூடி ஒரு நாலு வருஷம் அவரைப் பற்றி அனுதாபப்பட்டிருப்பார்கள். செவி வழிக் கதைகளாக ஒரு தலைமுறை இயேசுவை நினைவில் வைத்திருந்திருக்கும். அதிகபட்சமாய், இயேசு ஒரு இறைவாக்கினர் எனும் பட்டியலுக்குள் அடைபட்டு வரலாறாக மாறியிருப்பார் ! அவ்வளவு தான்.
ஆனால், உயிர்ப்பு தான் இயேசுவைக் கடவுளின் மகனாக அங்கீகாரம் செய்தது. சீடர்களின் பயத்தையும், நடுக்கத்தையும் துரத்தியது. மானிட மகனின் விண்ணேற்புக்கும், தூய ஆவியானவரின் இறங்குதலுக்கும் அடிப்படையாய் அமைந்தது ! இயேசு வாழ்ந்த போது தயாராக்கிய சீடர்களை, பிரிந்த போது பணிக்கான உறுதியேற்கச் செய்ததும் இயேசுவின் உயிர்ப்பு தான்.
கிறிஸ்தவ விழாக்களில் மிகவும் அற்புதமான விழா என்றால் அது உயிர்ப்பு தான். அது தான் அற்புதங்களின் மீதான நமது நம்பிக்கையையும், இயேசுவின் இரண்டாம் வருகையின் மீதான எதிர்பார்ப்பையும் வலுப்பெறச் செய்கிறது என்பதில் சந்தேகமில்லை ! உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் ஆன்மீக நதியே அந்த விழாவின் சிறப்பாக இருக்க வேண்டும். மற்றபடி மட்டன் பிரியாணியும், கோழியும் சாப்பிடும் நாளாக அந்த நாள் மாறிப் போனால் அந்த விழாவுக்கும் மற்ற மதத்தினர் கொண்டாடும் பட்டாசு விழாக்களுக்கும் எந்த வேறுபாடும் இருக்கப் போவதில்லை.
“நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்” ( யோ : 9:5 ) என்ற இயேசு, உலகை விட்டு விடைபெறுவதன் மூலம் “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” ( மத் 5 : 14 ) என்று அந்த ஒளியை கிறிஸ்தவர்களுக்கு வழங்குகிறார். இயேசு உலகில் இருக்கையில் தான் இந்த உலகின் ஒளியாய் இருந்தார். அவர் பிரிந்தபின் அந்த ஒளியாய்த் திகழவேண்டியது இயேசுவை நம்பும் நாம் என்பதே இறையியல் உண்மையாகும். நமது வாழ்க்கை இயேசுவைப் போல ஒளிவிடவேண்டும், உலகிற்கு ஒளியாய் மாற வேண்டும் என்பது இயேசுவின் உயிர்ப்பு சொல்லும் முதன்மைச் செய்தியாகும் !
‘உயிர்ப்பும் உயிரும் நானே எனில் விசுவாசம் கொள்பவன் இறப்பினும் வாழ்வான்’ எனும் இயேசுவின் வார்த்தைகள் செயலாற்றம் பெற்ற தினமாக உயிர்ப்பு நாள் நமக்கு முன்னால் நிற்கிறது. ஒரு புறம் இயேசு இந்த நாளில் உயிர்க்கவில்லை, இயேசுவின் உயிர்ப்பை ஒரு விழாவாக முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கொண்டாடவில்லை, இயேசுவின் உயிர்ப்பு உண்மையில் ‘பாகான்’ விழாவின் கிறிஸ்தவ வடிவம் என்றெல்லாம் விவிலிய ஆய்வுகள் சொல்கின்றன. அவற்றையெல்லாம் தாண்டியும், இயேசு உயிர்த்தார், நமக்காக, நமது விசுவாச வலிமைக்காக எனும் உண்மையைக் கண்டு கொள்வது உயிர்ப்பு சொல்லும் இன்னொரு சிந்தனையாகும் !
மரணம் வலி மிகுந்தது. துயரமானது. மரணத்தின் மீதான அச்சம் கொடுமையானது. நமது மரணத்தை விட நாம் நேசிப்பவர்களின் மரணத்தையே நாம் அதிகம் வெறுக்கிறோம். அதனால் தான் கடவுள் ஆபிரகாமின் விசுவாசத்தை உறுதிப்படுத்த “ஈசாக்கின்” உயிரைப் பலியாகக் கேட்டு சோதித்தார். மரணம் எனும் பயத்தையும், மரணம் எனும் அதிர்ச்சியையும் கடந்து செல்வதற்கு நமது ஆன்மீக விசுவாசம் வலுவடைய வேண்டும் அல்லவா ? அந்த வலிமையைத் தான் மரணத்தை வென்ற இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தருகிறது. இந்த உலகைத் தாண்டிய ஒரு எதிர்நோக்கு, இந்த உலகைத் தாண்டிய ஒரு வாழ்க்கை அதுவே நமக்கு உற்சாகத்தையும், மரணத்தைக் கண்டு அஞ்சாத மனதையும் தருகிறது.
அதே வேளையில் அந்த வாழ்க்கையில் நுழைவதற்கான நுழைவுச் சீட்டை வாங்கத் தவறி விடக் கூடாது. விண்ணக வாழ்வுக்கான நுழைவுச் சீட்டு பூமியில் மட்டுமே வினியோகிக்கப்படும். அதை விண்ணக வாயிலில் பிளாக்கில் வாங்கி விட முடியாது. திரியேக நாதரின் மீதான ஆழமான நம்பிக்கையும், அந்த விசுவாசத்தைச் செயல்களில் பிரதிபலிக்கும் வாழ்க்கையும் தான் அதைப் பெற்றுத் தரும். புவி வாழ்க்கை ஒரு டிரெய்லர் போல. உண்மையான கிறிஸ்தவனின் வாழ்க்கை என்பது விண்ணக வாழ்க்கை தான். அந்த வாழ்க்கையில் நுழைவதற்கான செயல்களை இந்த வாழ்க்கையில் செய்ய வேண்டும். அந்த தீராத தாகத்தை உயிர்ப்பு நமக்கு தரவேண்டும்.
இயேசுவின் வாழ்வும், சிலுவை மரணமும், உயிர்ப்பும் நமக்குச் சொல்லும் இன்னொரு முக்கியமான சிந்தனை மன்னிப்பைப் பற்றியது ! நமது வாழ்வின் தேடல்கள் மறுமை சார்ந்தவையாய் இருக்க முக்கியமான தேவை மன்னிப்பு. நமது போராட்டங்கள் மனிதர்களோடு இராமல், சாத்தானோடு இருக்க வேண்டும். மன்னிப்பு என்பதை தனது மரணத்தின் முந்தைய வினாடி வரை இயேசு செயலாற்றிக் காட்டினார். நமக்குள் விரோதத்தின் சிந்தனைகள் இறந்து, மன்னிப்பின் மகத்துவம் உயிர்த்தெழ வேண்டும் என்பதை மனதில் கொள்ளவேண்டியது உயிர்ப்புக் காலத்தின் முக்கியமான தேவை !
“மறு பிறப்பு’ எனும் கிறிஸ்துவுக்குள் பிறக்கும் அனுபவம் நாம் கிறிஸ்தவத்தில் நுழைகையில் உருவாகிறது. பலருடைய வாழ்க்கை அத்துடன் நின்று விடுகிறது. விதை முளைத்து செடியாகி, பின் அப்படியே நின்று விடுவதைப் போல. மறு உயிர்ப்பு அனுபவம் நமக்கு முக்கியமான தேவை. இயேசுவோடு சேர்ந்து நாமும் இறந்து, அவரோடு சேர்ந்து உயிர்க்கையில் அவருடைய சாயலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதாமுக்குக் கடவுள் தனது சாயலைக் கொடுத்தார். நாம் கடவுளின் சாயலை, பாவத்தை மரணமடையச் செய்து பரமனில் உயிர்ப்பதன் மூலம், பெற்றுக் கொள்ளவேண்டும். சிலுவையில் இயேசு நமது பாவங்களுக்காக இறந்தார் எனில், நாம் இன்னும் பாவத்தைச் சாகடிக்காமல் இருந்தால் மீட்பு எப்படி பிறக்க முடியும் ? பாவங்களைக் கொன்று, உயிர்த்து எழுவதில் தான் நமது உயிர்ப்பு விழா அர்த்தப்படும்.
இயேசுவைச் சிலுவையில் அறைந்தவர்கள் யார் என்று கேட்டால் ஒரு பட்டியல் போட முடியும். யூதாஸ், அன்னா, கயபா, படை வீரர்கள் என அந்தப் பட்டியல் நீளும் ! உண்மையில் அவர்களின் பிம்பங்களாகத் தானே நாம் வாழ்கிறோம் ? இயேசு சொன்னதை இயேசுவின் காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் நம்பவில்லை. அதை தேவ தூஷணம் என்றார்கள். இயேசு சொன்னதை நாமும் இன்று நம்புவதில்லை. நம்பியிருந்தால் அவருடைய வார்த்தைகளைக் கடைபிடித்திருப்போம். என்னை நம்புபவன் அதை செயலில் காட்டவேண்டும் என்று தானே இயேசுவே போதித்தார். நாம் செயல்படாத விசுவாசத்தைக் கொண்டிருக்கும் வரை தொடர்ந்து இயேசுவைச் சிலுவையில் தானே அறைகிறோம் !
பாஸ்டில் ஆலயத்தில், 1520ம் ஆண்டு மார்டின் லூதர் கிங் அவர்கள் ஆற்றிய உரை அற்புதமானது ! “சர்ப்பத்தின் தலை நசுக்கப்பட்டது என நீங்கள் நம்பினால், உங்களுக்காக அது நசுக்கப்பட்டது என்பது உண்மையாகிவிடும். இந்த விதையால் மனுக்குலம் மகிழும் என நீங்கள் நம்பினால், நீங்களும் சேர்ந்தே அந்த மகிழ்ச்சியில் இணைகிறீர்கள். ஒவ்வொருவரும் தனித்தனியாக சர்ப்பத்தின் தலையை நசுக்கித் தான் மீட்படைய வேண்டும் எனும் கட்டாயம் இருந்திருந்தால் அது மிகவும் கடினமானதாகவும், ஏன் இயலாத ஒன்றாகவும் மாறியிருக்கக் கூடும். ஆனால் இப்போதோ கிறிஸ்துவால் அது மிகவும் எளிதாகியிருக்கிறது. நாம் அனைவரும் உண்மையாகவே கிறிஸ்துவை இன்னும் ஆழமாய் அறிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் கிறிஸ்துவோடு உயிர்த்தெழவேண்டும். அப்போது கிறிஸ்து தந்தையில் மகிமையடைந்தது போல, நாம் கிறிஸ்துவில் மகிமையடைவோம் !” – என்றது அவரது உரை !
உயிர்ப்பு தான் சாத்தானின் அத்தனை கொடுக்கையும் உடைத்து, இயேசுவை நமது திருச்சபையின் தலைவராக்கியது. உயிர்ப்பு தான் மரணத்தின் மீதான வெற்றியைத் தந்திருக்கிறது. உயிர்ப்பு தான் இயேசு மீண்டும் தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து வருவார் என்பதை ஊர்ஜிதப்படுத்தியிருக்கிறது. உயிர்ப்பு தான் கிறிஸ்தவர்களை கிறிஸ்துவின் பிள்ளைகளாகவும், கிறிஸ்தவ ஆன்மீகத்தின் வீரர்களாகவும் உருவாக்கியிருக்கிறது.
எத்தனையோ ஆண்டுகள் உயிர்ப்பு தினத்தைக் கொண்டாடியிருப்போம். எல்லா ஆண்டும் நாம் கொண்டாடுவது இயேசுவின் உயிர்ப்பைத் தான். நமது உயிர்ப்பைப் பற்றிய சிந்தனை நமக்கு இருப்பதில்லை. காரணம், நமது பாவத்தைப் பற்றிய புரிதலோ, விழிப்புணர்வோ நம்மிடம் இருப்பதில்லை. இந்த ஆண்டாவது அந்தப் புரிதலுடன் கிறிஸ்துவின் உயிர்ப்பைக் கொண்டாடுவோம்.
பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சகோதரர் ஸ்பர்ஜன் ஒரு அழகான காட்சியைச் சொல்கிறார். கிறிஸ்துவைப் போல அவருடைய தூய்மையான வாழ்வுக்குள் நுழைவதைப் பற்றிய காட்சி அது. புனித வாழ்க்கையை நோக்கிய பயணத்தின் அதி முக்கியத் தேவை !
ஒரு நதியில் சில்லென தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவர் அதில் கையை வைத்துப் பார்த்து “அய்யோ.. குளிரில் விறைத்துப் போகிறேன்” என்கிறார். இன்னொருவர் காலை வைத்துப் பார்த்து, “ஐயோ நடு நடுங்குகிறேன்” என்கிறார். இன்னொருவர் ஓடிவந்து முழுதாய் நதியில் குதித்து நீச்சலடிக்கிறார், “வாவ்… ரொம்ப உற்சாகமாய் இருக்கிறது” என்கிறார். கிறிஸ்துவின் புதிய வாழ்க்கைக்குள் நுழையும் அனுபவம் இப்படித் தான் இருக்க வேண்டும். முழுமையாய் அர்ப்பணித்து விடுதல். பாவமற்ற வாழ்க்கையைக் கண்டு பயப்படுவதோ, தயங்குவதோ நம்மை புதிய வாழ்க்கைக்குள் வழி நடத்தாது. சந்தேகங்கள், பயங்கள், தயக்கங்கள் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு முழுமையாய்க் குதிப்பதே மிக முக்கியம் !
இந்த உயிர்ப்பு தினத்தில் நாம் நமது உயிர்ப்பையும் சிந்திப்போம், இயேசுவின் உயிர்ப்பை மட்டுமல்ல !
அனைவருக்கும், உயிர்ப்பின் நல் வாழ்த்துகள்.
ஃ
சேவியர்
நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ இதழ்..
You must be logged in to post a comment.