சுதந்திரம் வேண்டுமா அடிமைத்தனம் வேண்டுமா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள் ? இந்தக் கேள்வியே மடத்தனமானது என்று தானே சொல்வீர்கள் ? அப்படி ஒரு பதிலைச் சொல்வதே சுதந்திரத்தின் அடையாளம் தான் இல்லையா ?. அடிமையாய் இருப்பதை யாரும் விரும்புவதில்லை. உலகெங்கும் நடக்கும் உரிமைப் போராட்டங்கள் இதைத் தான் நமக்குச் சொல்லித் தருகின்றன. சமீபத்தில், சிங்களர்களின் அடக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என தமிழ் ஈழ மக்கள் போராடியதும், இதற்காகத் தான். சுதந்திரம் எனும் வார்த்தையே அடக்குமுறைவாதிகளுக்கு அலர்ஜி. அதனால் தான், சுதந்திர சிறகுகளை நறுக்க மனிதாபிமானமற்ற படுகொலைகளை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
இந்தியாவும் சில நூற்றாண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் இருந்தது. 1947 ஆகஸ்ட் 15 என்பது நமக்கெல்லாம் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். ஆனால் அந்த விடுதலையைப் பெறுவதற்கு இந்திய மண் தியாகம் செய்த உயிர்களும், தாங்கிய வலிகளும் சொல்லி முடிக்க முடியாதவை. இன்றைய இந்தியா, சட்டத்தின் பார்வையில் சுதந்திரமடைந்து விட்டது, ஆனால் அது இன்னும் சாதி, ஊழல், மதம் எனும் வேறு பல எஜமானர்களுக்குக் கீழே கைகட்டி அடிமையாய் நிற்கிறது.
இயேசு ஒற்றை வரியில் இதை மிக மிக அழகாக வெளிப்படுத்தினார். “பாவம் செய்யும் எவரும் பாவத்துக்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ( யோவான் 8 : 34 பொ.மொ ) என்றார் அவர்.. ஆன்மீக அளவில் நாம் இன்னும் அடிமைகளாகவே இருக்கிறோம் என்பதை பளிச் என சொல்ல இதை விடப் பெரிய வசனம் தேவையில்லை. எந்த அதிகார சக்தி நமது செயல்களை நிர்ணயிக்கிறதோ அந்த சக்தியே நமக்கு எஜமான். எந்த சக்தியின் கட்டளைகளின் படி நாம் நடக்கிறோமோ அந்த சக்திக்குத் தான் நாம் அடிமைகளாய் இருக்கிறோம்.
நாம் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறோமா அல்லது இயேசுவுக்குள் சுதந்திரமாய் இருக்கிறோமா என்பதை அறிவது வெகு சுலபம். நமது ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் அலசினாலே அந்தக் கேள்விக்கான பதில் நமக்குக் கிடைத்து விடும். காலையில் எழும்புகிறோம் பைபிள் வாசிப்பதும், ஜெபிப்பதும் நமக்கு முதன்மையாய் இருக்கிறதா ? அல்லது சுடச் சுட டீ குடித்து, டிவியில் நியூஸ் பார்ப்பது நமக்கு முக்கியமானதாய் இருக்கிறதா ?
அலுவலக அவசரத்தில் நம்மை எது வழிநடத்துகிறது ? கோபமா ? இயேசுவின் வழிகாட்டுதலான புன்னகை கலந்த சாந்தமா ? கோபத்தில் கத்தி, எரிச்சலில் சுற்றிக் கொண்டிருப்பீர்களென்றால் நீங்கள் கோபத்துக்கு அடிமையாய் இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். கோபம் உங்களை வழிநடத்துகிறது என்பது தான் அதன் பொருள். கோபம் கொள்வது பாவம் என்பது நாம் அறிந்ததே. தம் சகோதரர் சகோதரியிடம் சினம் கொள்பவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார் ( மத் : 5 – 22 ) என்கிறார் இயேசு.
அலுவலகம் செல்லும் வழியில் வசீகரமான இளம்பெண்ணைப் பார்க்கிறீர்கள், உங்கள் பார்வை பாவம் செய்கிறதா ? அல்லது கண்ணியமாய்க் கடந்து போகிறதா ? கணினியில் வேலை செய்கிறீர்கள், சிற்றின்ப வழிகாட்டுதலுக்கான பக்கங்களில் உங்கள் மனம் உங்களை அழைத்துச் செல்கிறதா ? நண்பர்களோடு உரையாடுகிறீர்கள் உங்கள் உரையாடலில் பாலியல் நகைச்சுவைகள் பந்திவைக்கின்றனவா ? இதற்கான பதிலில் அடங்கியிருக்கிறது உங்கள் மனம் சுதந்திரமாய் இருக்கிறதா இல்லை சிற்றின்பத்துக்கு அடிமையாய் இருக்கிறதா என்பது.
இப்படியே ஒவ்வொரு செயலையும் இயேசுவின் வாழ்க்கையோடும், வார்த்தையோடும் ஒப்பிட்டுப் பார்த்தால் நமது ஆன்மீகத்தின் பாதையும், நமது போலித்தனத்தின் உண்மையும் வெளிப்படத் துவங்கும். பெரும்பாலானவர்களுக்கு ஒரு நாள் கூட தேவையில்லை. ஒரு சில மணி நேரங்களே போதுமானது. நியாயப் படுத்தல்கள் இல்லாத அலசல் இருந்தால் நமது வாழ்க்கையின் உண்மை நிலையை உணர்ந்து கொள்வது வெகு எளிது.
அப்படி என்னதான் உண்மை ? நாம் ஆன்மீக சுதந்திரம் அடையவில்லை எனும் மறுக்க முடியாத உண்மை. எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய இயலாது. ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு கொள்வார் ( மத் 6 : 24 ) என்றார் இயேசு. எவனும் ஒரே நேரத்தில் சுதந்திரமாகவும் அடிமையாகவும் இருக்க முடியாது என்பதே இறைமகன் சொல்லும் உண்மை. உலக செல்வங்கள் நமது செயல்களை நிர்ணயிக்கும்போது, கடவுளை வெறுக்கிறோம் ! செல்வத்தை நேசிப்பவன், கடவுளை வெறுக்கிறான். கடவுளை நேசிப்பவன் செல்வத்தைப் புறக்கணிக்கிறான். இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் அன்பு செய்வதோ, அன்பைப் பகிர்ந்தளிப்பதோ இயலாத காரியம் என்பதே வேதாகமம் சொல்லும் உண்மை !
அதற்காக செல்வங்களே இருக்கக் கூடாதென்பதல்ல, அதை அன்பு செய்யக் கூடாது, அதை நோக்கி ஓடக் கூடாது, அதை முதலிடத்தில் வைத்துப் பயணம் செய்யக் கூடாது என்பதே புரிந்து கொள்ளவேண்டிய உண்மையாகும். அதனால் தான் “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவையெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும் ( மத் 6 : 33 ) என்கிறார் இயேசு.
பெரும்பாலும் நமது சுதந்திரம் என்பது ஒரு அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டு இன்னொரு அடிமைத்தளத்திற்குள் புகுவதிலேயே இருக்கிறது ! கோபத்திலிருந்து விடுபட்டுக் காமத்திற்கு அடிமைத்தனமாகி விடுகிறது மனசு. காமத்திலிருந்து விடுபட்டு பணத்தாசையில் அடைபடுகிறது. பணத்தாசையிலிருது விடுபட்டு புகழ் போதையில் புகுந்து விடுகிறது. புகைத்தலை நிறுத்தி விட்டுப் பான்பராக் போடும் இளைஞனைப் போல நமது ஆன்மீக அடிமைத்தனம் தளங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறதே தவிர விடுபடுவதில்லை.
உண்மையான சுதந்திரம் என்பது நாம் பாவத்திலிருந்து முழுமையாய் விலகி இயேசுவின் வழியில் தொடர்வதில் இருக்கிறது. இது இடுக்கமான வாயில். இதில் நுழைவது கடினம். “இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே ( மத் 7: 13-14 ) .
இந்த இடுக்கமான வாயில் வழியே நுழைபவர்களை வழி நடத்திச் செல்ல தூய ஆவியானவர் தயாராய் இருக்கிறார். காரணம் அந்த நெருக்கமான பாதையில் நாம் சந்திக்கும் உலக நெருக்கங்கள் ஏராளமாய் இருக்கும். அவற்றோடான யுத்தத்துக்கு இறை வழிகாட்டுதல் வெகு அவசியம். இறையோடு நாம் இருக்கும் போது, யானை மீதிருக்கும் சிற்றெறும்பு போல நமக்கும் யானை பலம் கிடைத்து விடுகிறது. யுத்தம் இல்லாமல் சுதந்திரம் கிடைப்பதில்லை. ஆன்மீக சுதந்திரத்துக்கும் யுத்தம் அவசியமாகிறது. அது சஞ்சல மனதோடு நாம் செய்யும் யுத்தம்.
“மனம் ஆர்வமுடையது தான், ஆனால் உடல் வலுவற்றது ( மத் 26 : 41 பொ.மொ ) ! அது பாவத்திற்குள் எளிதில் புகுந்து விடும். காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகைப் போல அது இலக்கில்லாமல் ஓடும். ‘இந்த ஒரு முறை மட்டும்’ என பாவம் ஆசை வார்த்தைகளோடு காத்திருக்கும். அந்த வழியில் செல்பவர்கள் ஏராளம். அதனால் அந்த வழியைக் கண்டுபிடிப்பது வெகு சுலபம். ஆட்டு மந்தை போல கணக்கில்லாமல் முன்னால் மக்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.
அந்த வழி நமக்கு வேண்டாம், ஒரு முறை கூட வேண்டாம். ஆன்மீகத் தூய்மையே வேண்டும் என்பவர்கள் அபூர்வம். அழிந்து கொண்டிருக்கும் அபூர்வ விலங்குகளைப் போல அவர்களைக் கண்டுபிடிப்பதே பெரும் கடினம். அதனால் தான் அவர்கள் செல்லும் வழியைக் கண்டுபிடிப்பதும் கடினமானதாய் இருக்கிறது.
பாவம் வாசலில் உங்களைப் பல்லக்கு வைத்து அழைத்துச் செல்லும், தூய்மையோ அமைதியான, எளிமையான பாதையாய் உங்களுக்கு முன் இருக்கும். அதில் வசீகரம் இருப்பதில்லை, ஆனால் அதில் பயணிப்பவர்களுக்குத் தான் அதன் சுகமும், இன்பமும் தெரியும். தன்னை வெறுத்து, தன் சிலுவையைச் சுமந்து கொள்ளாதவனால் அந்தப் பாதையில் நடக்க முடியாது. தனது சிலுவை என்பது தனது உலக விருப்பங்கள் அறையப்பட்ட சிலுவை என்பதே நிஜம்.
இந்திய சுதந்திரத்துக்காய் நாம் மகிழ்ச்சியடையும் இதே நேரத்தில் பாவ அடிமைத்தனத்துக்காக கண்ணீர் விடாவிட்டால் நமது கிறிஸ்தவ வாழ்க்கை அர்த்தமற்றதாய்ப் போய்விடும். இயேசுவுக்குள் சுதந்திரமாய் வாழவேண்டும் எனும் அதீத ஆர்வமும், இடைவிடாத போராட்டமுமே நம்மை சுதந்திரத்துக்குள் இட்டுச் செல்லும்.
என்னதான் சொன்னாலும் நான், அடிமையாய் தான் இருப்பேன் என அடம்பிடித்தால், இயேசுவுக்கு மட்டுமே அடிமையாய் இருப்பதென முடிவெடுப்போம்.அந்த அடிமைத்தனமே உண்மையான சுதந்திரம்.
தேசத்தின் விடுதலையைக் கொண்டாடுவோம்
தேகத்தின் விடுதலைக்காய் மன்றாடுவோம்
ஃ
சேவியர்.
நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்