இன்றைய சமூகம் பலவீனங்களின் மொத்த உருவமாய் இருக்கிறது. மனிதர்கள் உதாசீனப்படுத்தப்படுகிறார்கள். மனித நேயம் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாகிவிட்டது. சுயநலங்களின் சுருக்குப் பைகளுக்குள் மனிதர்கள் தங்களை இறுக்கி முடிந்து விட்டனர். அதனால்தான் அரையடி நிலத்தை விட மனித உயிர் மலினமாகிவிட்டது. பீடிக்காகக் கூட படுகொலைகள் நடக்கின்றன. வலிமையற்ற முதியவர்களும், பெண்களும் கூட நகைகளுக்காக வன்முறைத் தாக்குதலுக்கு பலியாகின்றனர். பாலியல் அத்துமீறல்கள் புற்றுநோயாய் சமூகத்தில் புரையோடிவிட்டது.
சம நிலையற்ற சமூகம் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே ராக்கெட் விட்டால் கூட எட்டமுடியாத இடைவெளியை உருவாக்கிவிட்டது. அதனால் தான் பட்டினியால் உயிர்விடும் மனிதர்கள் இருக்கும் ஊரிலேயே, ஓவர் சாப்பாட்டினால் உயிரிழக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். உணவுக்காக ஓடும் மக்கள் இருக்கும் தெருவிலேயே உணவு செரிப்பதற்காக ஓடும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
சமநிலையற்ற சமூகம் தான் வன்முறைகளும், சமூக விரோத செயல்களும் உருவாகக் காரணமாயிருக்கிறது. நீதி, நியாயம் எனும் இரும்புக் கோட்டையை கரன்சித் தாள்களே வளைத்து விடுகின்றன. நீதியைக் கூட நிதியே நிர்ணயம் செய்யும் சமூகத்தில் ஏழைகளின் குரல்வளையில் திகிலும், நம்பிக்கையின்மையுமே தேங்கிக் கிடக்கிறது.
என்னதான் தீர்வு ? அதிகார வர்க்கத்தின் வீட்டுத் தோட்டத்தில் நீதி நாய்க்குட்டியைப் போல வாலாட்டும் தேசத்தில் எளியவன் எப்போது தான் நீதி பெறுவது ? செல்வந்தர்களின் செல்லப் பிராணியாய் நீதி குழைகின்ற நாட்டில் ஏழைகள் எப்போது தான் ஏறி வருவது ? என்னதான் தீர்வு ? சிறைகளை நிரப்பும் போராட்டமா ? அல்லது சிறைகளை உடைக்கும் போராட்டமா ?
விவிலியம் நம்மை போராட அழைக்கிறதா ? ஒரு அதிகார மையத்தை உருவாக்கி சமூகத்தின் நீதியை நிர்ணயிக்க அழைப்பு விடுக்கிறதா ?
கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசு தர விரும்பிய நீதியையும், இயேசு சொல்ல விரும்பிய நீதியின் விளக்கங்களையும் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
நீதியின் மேல் பசி தாகமுள்ளோர் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள் என்றும், நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் பரலோகராஜ்ஜியம் அவர்களுடையது என்றும் இயேசு சொல்கிறார் ( மத் : 5 – 6, 5-10 ). நீதியைக் குறித்த பார்வை நமக்கு இருக்க வேண்டும் என இயேசு விரும்புகிறார் என்பதையே அவருடைய வார்த்தைகள் நமக்குத் தெரியப்படுத்துகின்றன.
ஆனால் இயேசு சொன்ன நீதி என்பது உலக நீதியிலிருந்து வேறுபடுகிறது என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும்.
சட்டங்களினால் மனித வாழ்க்கையைக் கட்டமைத்து, அந்த சட்டங்களை விட்டு விலகுபவர்களை கடுமையாகத் தண்டிக்கும் வழக்கம் உலக நியதி. அதைத் தான் பரிசேயர்களும் செய்தார்கள். அவர்கள் ஏழை மக்கள் மேல் கடுமையான நுகத்தைத் திணித்தார்கள். ஏழைகளின் இயலாமைகளைவிட தங்கள் சட்டங்களே மேல் என்றார்கள். எக்கேடு கெட்டாயினும் சட்டத்தை நிறைவேற்று என்றார்கள்.
“சட்டங்கள் இருப்பது மனிதர்களுக்காக, மனிதர்கள் இருப்பது சட்டங்களுக்காக அல்ல” என்பதே இயேசுவின் போதனை. அதுவே இயேசு சொன்ன நீதி. அதனால் தான் அவர் (மத்தேயு 5:20) வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் – என அழுத்தமாய்ச் சொன்னார்.
இயேசுவின் அந்த போதனையின் அற்புத உதாரணமாய் விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணின் நிகழ்வைக் கூறலாம். சட்டங்கள் அந்தப் பெண்ணுக்கு எதிராக இருந்தன. ஆனால் இயேசு வழங்கிய நீதியோ சட்டங்களின் அடிப்படையில் இருக்கவில்லை. அது அன்பின் அடிப்படையிலேயே இருந்தது. “உங்களில் பாவம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும்” என இயேசு சொல்லி அந்தப் பெண்ணை சட்டத்தின் கல்லெறிக்குத் தப்புவிக்கிறார். சட்டத்தின் பார்வையில் அங்கே நீதி மறுக்கப்பட்டது, ஆனால் இயேசுவின் பார்வையில் அங்கே தான் நீதி நிலைநாட்டப்பட்டது ! மரணிக்கச் செய்வதல்ல, மன்னிக்கச் செய்வதே நீதி என்பது அவருடைய புதிய போதனையாய் இருந்தது.
உலகத்தின் நீதி, தவறிழைப்பவர்களை சிறைகளில் தள்ளுவதில் இருக்கிறது. சிறையில் தள்ளப்படாமல் விடும்போது நீதி மறுக்கப்பட்டதாய் உலகம் கொதித்துப் போய்விடுகிறது. “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என அன்று கத்தியவர்களைப் போல, “தூக்கில் போடும், தூக்கில் போடும்” என இன்றும் குரல்கள் ஓயாமல் ஒலிக்கின்றன. இயேசுவின் நீதியோ, “சிறையில் இருப்பவர்களைச் சந்திப்பதில் இருந்தது”. சிறையில் இருப்பவர்களைச் சந்திப்பவர்கள் விண்ணக வாழ்வுக்குச் செல்வோரின் கூட்டத்தில் சேரும் வாய்ப்பு அதிகம். “நான் சிறையில் இருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள்” என்றாரல்லவா இயேசு !
திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்தவர்களுடைய உவமை எல்லோருக்கும் தெரியும். அதில் இயேசு நீதியின் இன்னொரு பரிமாணத்தையே நமக்குக் காட்டி விடுகிறார். விடியற்காலையில் தோட்டத்தில் வேலை செய்ய நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் என வேலைக்கு ஆட்களை அமர்த்துகிறார் உரிமையாளர். அவர்கள் மகிழ்வுடன் வேலைக்குச் செல்கின்றனர்.
காலை 9 மணி, மதியம் 12 மணி என இரண்டு தடவை வழியில் காண்போரை வேலைக்கு அனுப்பி “வேலை செய்யுங்கள் நேர்மையானதை உங்களுக்குக் கொடுப்பேன்” என அவர்களை அனுப்புகிறார். தங்களுக்குக் கிடைக்கப் போகின்ற கூலி என்ன என்பது அவர்களுக்குத் தெரியாது. “நேர்மையானது கிடைக்கும்” என்பது மட்டுமே அவர்களுக்குச் சொல்லப்பட்ட செய்தி. மாலை 5 மணிக்கும் சிலரை திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்புகிறார், அவர்களிடம் கூலி தருவேன் என்று கூட அவர் சொல்லவில்லை. அவர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஏதேனும் கிடைத்தால் வாங்கிக் கொள்ளலாம் என்பது மட்டுமே அவர்களுடைய சிந்தனை.
மாலை 6 மணிக்கு கூலி கொடுக்கும் நிகழ்வு. கடைசியாக வந்தவர்கள் ஒரு மணி நேரம் உழைத்தவர்கள். அவர்களுக்கு ஒரு நாளுக்குரிய ஒரு தெனாரியம் கூலி வழங்கப்பட்டது. அவர்கள் வியப்புடனும் மகிழ்வுடனும் விடைபெற்றிருப்பார்கள். முதலில் வந்தவர்கள் கடைசியில் வந்தவர்களை விட 12 மடங்கு அதிகம் உழைத்தவர்கள். 12 தெனாரியம் கிடைக்கும் என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் ஒரே ஒரு தெனாரியம் தான் கிடைத்தது. அவர்கள் தலைவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள்.
தலைவரோ, ” தோழரே, நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை. நீர் என்னிடம் ஒரு தெனாரியம் கூலிக்கு ஒத்துக் கொள்ளவில்லையா? உமக்குரியதைப் பெற்றுக் கொண்டு போய்விடும். உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்” என்கிறார்.
உலக நீதி என்பது, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தெனாரியம் என்றால் பன்னிரண்டு மணி நேரத்துக்கு பன்னிரண்டு தெனாரியம் என கணக்கிடும். கடவுளோ உள்ளத்தைப் பார்ப்பவர். அவர் வேலைக்கேற்ற கூலியைக் கொடுப்பவர் அல்ல, தேவைக்கேற்ற கூலியைக் கொடுப்பவர். தகுதியானதைத் தகுதியானவர்களுக்குத் தருவதே உலக நீதி, தகுதியற்றவர்களுக்கும் தருவதே இயேசுவின் நியதி. அதனால் தான் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழை பொழியச் செய்கிறார். தகுதியற்ற நமக்கும் மீட்பைத் தருகிறார். அழைத்தலுக்குச் செவிகொடுத்து உழைப்பவர் அனைவரையும் அவர் சமமாய் நடத்துகிறார்.
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் எனும் பழங்கால நீதியின் நவீன வடிவமே சட்டங்கள். இயேசு அதைத் தலைகீழாய் மாற்றுகிறார். மன்னிப்பையே முன்னிறுத்துகிறார்.. மறுகன்னத்தைக் காட்டும் பொறுமையையும், தாழ்மையையுமே பிரதானப்படுத்துகிறார். மேலாடையைப் பறிப்பவனுக்கு, உள்ளாடையையும் கொடுக்கச் சொல்கிறார். அதாவது கிளைகளில் விளையும் பழங்களைச் சரிசெய்ய வேண்டுமெனில் வேர்களையே விசாரிக்க வேண்டும் என்கிறார். கண்ணுக்குக் கண் என்றும், பல்லுக்குப் பல் என்றும் திரிந்தால் உலகம் முழுதும் பிடுங்கப்பட்ட கண்களும், பறிக்கப்பட்ட பற்களுமே நிரம்பும். அதுவல்ல இயேசுவின் நீதி. மன்னிப்பின் மூலம் விளைகின்ற ஆரோக்கியமான உறவே இயேசுவின் நீதி. உறவின் உன்னத வடிவமாக சிலுவையில் தொங்கியதே இயேசுவின் நீதி ! எனவே தான் நண்பர்களை நேசிப்பதல்ல பெரிது, எதிரிகளையும் நேசிப்பதையே விரும்பு என்கிறார்.
இயேசுவின் நீதி என்பது போராட்டத்தில் இருக்கவில்லை. தன்னைத் தான் போராடி வெற்றி கொள்வதில் இருந்தது. தனது பலவீனங்களை இயேசுவின் பலத்தோடு இணைத்துக் கொண்டு செய்யும் போராட்டமாய் அது இருந்தது. எனவே தான் திராட்சைச் செடியாகிய அவருடன் கிளைகளாக நாம் இணைந்தே இருப்பது அவசியமாகிறது. “ஆம் என்றால் ஆம், இல்லை என்றால் இல்லை” என எப்போதும் வழுவாமல் வாழும் வழியை அந்த நிலையே நமக்குக் காட்ட முடியும்.
இயேசுவின் நீதி சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் அரவணைப்பதில் இருந்தது. தீண்டத் தகாதவர்களாய் இருந்த தொழுநோயாளிகளை அரவணைத்தார், பலவீனரான பெண்களை பணியில் அனுமதித்தார், குழந்தைகளைக் கூட அன்பாய் அரவணைத்தார். சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு எதிராக அவருடைய செயல்பாடுகள் புதிய நீதியை புரிய வைத்தன.
இயேசுவின் நீதி சமூக சாதீய ஏற்றத் தாழ்வுகளை தகர்த்தது. சமாரியப் பெண்ணைத் தேடிச் சென்று மீட்பை வழங்கினார் இயேசு. ஒதுக்கியும், அவமானப்படுத்தியும் வைக்கப்பட்ட விலைமாதர்களையும், பாவிகளையும், வரிவசூலிப்பவர்களையும் சரிசமமாய்ப் பாவித்து சமத்துவ சமூகத்தின் புதிய வழியைக் காட்டினார். அதே நேரத்தில் போலித்தனப் பரிசேயர்களையும், மதத் தலைவர்களையும், ஆளும் வர்க்கத்தையும் வளைந்து கொடுக்காமல் எச்சரித்தார்.
இயேசுவின் நீதி விடுதலை வழங்குவதில் இருந்தது. உலகம் பார்க்கும் விடுதலை அல்ல, பாவத்திலிருந்தும், சாத்தானின் கட்டுகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுவிப்பதில் அவருடைய நீதி இருந்தது.
நீதிமான்களையல்ல, பாவிகளையே தேடி வந்தேன் என இயேசு சொல்வது நீதிமான்களுக்கு எதிரானதல்ல. தன்னை நீதிமான்கள் என காட்டிக் கொண்ட பரிசேயர்கர்களுக்கு எதிரானது. போலித்தனமான பரிசேயத் தனத்துக்கு எதிரானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இறுதி அழைப்பின் போது, “நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைத் தனியே பிரிப்பேன்” என்கிறார் இயேசு. நீதியான வாழ்க்கையையே நம்மிடமிருந்து அவர் எதிர்பார்க்கிறார் என்பதன் தெளிவான அழைப்பு அதுவே..
எனது அரசு இந்த உலகைச் சார்ந்ததல்ல என்கிறார் இயேசு. எனவே இயேசுவின் நீதியும் இந்த உலகைச் சார்ந்ததாய் இருக்கப் போவதில்லை. இயேசுவின் நீதி, அன்பின் நீதி. அன்பை மனதில் தேக்கி அதன் பாய்ச்சலில் சமூகத்தைக் கழுவ நினைத்த நீதி. இன்றைய உலகின் தேவையும் அந்த நீதியே ! நீதிக்காகக் குரல் கொடுக்க நாம் எழும்புகையில் இந்த சிந்தனைகள் நமக்குள் எழட்டும். நாம் நீதி என எதை நினைக்கிறோம் ? இயேசுவின் பார்வையில் நீதியானதையா ? இல்லை உலகின் பார்வையில் நீதியானதையா ? எனும் கேள்வி அணையாமல் எரியட்டும்.
உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை இயேசுவின் பார்வையில் நீதியானதையே செய்யும். அது சகோதரனுக்கு எதிராய் வழக்குப் பதிவு செய்வதில்லை. ஏழையின் விண்ணப்பங்களை நிராகரித்து நகர்வதில்லை. அரையடி நிலத்துக்காய் அடித்துக் கொள்வதில்லை. யாவரையும் சமமாய்ப் பாவிக்கும் உன்னத நிலையை நோக்கிப் பயணிக்கும். தனி வாழ்க்கையில் தூய்மையையும், பணிவையுமே நேசிக்கும் என்பது மனதில் நிலைக்கட்டும்.
நீதி என்பது உலகப் போராட்டமல்ல,
அது, அன்பின் நீரோட்டம்.
ஃ
சேவியர்.
நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்.
You must be logged in to post a comment.