ஆன்மீகக் கட்டுரை : வலப்புறமாக வலையைப் போடுங்கள்

right side

 

உலகம் எப்போதுமே தொழில் நுட்பத்தின் அடுத்தடுத்தப் படிகளை நோக்கி ஓடிக் கொண்டே தான் இருக்கிறது. கால்களில் தகவல்களைக் கட்டிக் கொண்டு புறாக்கள் பறந்த காலம் போய், இப்போது எஸ்.எம்.எஸ், வாட்ஸப், வைபர் என தகவல்களே பறக்கின்றன.

இன்லென்ட் லெட்டர் வாங்கி அதன் ஓரங்களில் கூட எறும்பு ஊர்வது போல தகவல் எழுதி ஒட்டிய காலங்கள் ஞாபகமிருக்கிறதா ? இப்போது மின்னஞ்சல் யுகம் மின்னல் வேகத்தில் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இப்போது ஃபேஸ் புக் போன்ற சமூக வலைத் தளங்கள்.

ரயில் ஸ்னேகம் என்பது மறைந்து எல்லார் கைகளிலும் குட்டிக் குட்டியாய் ஸ்மார்ட் போன்கள். இயற்கையை ரசிப்பதையும், கூட இருப்பவர்களுடன் பேசுவதையும் இன்றைய தலை முறை அறவே தவிர்க்கிறது. ஒரு டேப்லெட், அல்லது ஸ்மார்ட் போன் அதுதான் அவர்களுடைய டிஜிடல் நிழலான நட்பு !

இணையத்தையும், இன்றைய வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்க முடியாது. பிறந்த குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் முதல், ஸ்கூல் அட்மிஷன், காலேஜ் அட்மிஷன், வரன் பார்த்தல், வங்கி, போன்பில், எலக்டிரிபில், ஷாப்பிங் இத்யாதி என எல்லா விஷயங்களும் இணையத்தில் தான் அரங்கேறுகின்றன. எனவே தான் கிறிஸ்தவமும், நற்செய்தி அறிவித்தலும் கூட இன்னொரு பரிமாணத்துக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது.

“பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகல விதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள்.” ( மத் 13 : 34 ) என்கிறார் இயேசு. இணைய வலையைக் கையாளும் போதும் நாம் இந்த அடிப்படை விஷயத்தை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இணைய வலை உலகத்திலுள்ள பல விதமான தகவல்களை அள்ளிக் கொண்டு வருகிறது. அதிலிருந்து நல்லவற்றை மனதில் நிறைத்து, தீயனவற்றை மண்ணில் புதைத்தோமானால் இந்த வலை நமக்குக் கவலை தருவதில்லை !

கால மாற்றத்துக்கு ஏற்ப மனித வாழ்க்கை மாறிக் கொண்டே தான் இருக்கிறது. மாற்றங்கள் நம்மை பயப்படுத்துகின்றன. அதனால் தான் மாற்றம் வந்தவுடன் அது தீமையானது எனும் பதட்டம் நம்மை ஆட்கொள்கிறது. அச்சு ஊடகம் வந்த போது கையெழுத்துப் படிவங்கள் கவலைப்பட்டிருக்கலாம். வானொலி வந்த போது பொது மேடைகள் புலம்பியிருக்கலாம். தொலைக்காட்சி வந்த போது வானொலி அழுதிருக்கலாம். கணினி வந்தபோது தொழிலாளர்கள் கலங்கியிருக்கலாம். ஒன்றிலிருந்து இன்னொன்று புறப்படுவது புதிதல்ல. அதன் மீதான எதிர்ப்புகளும் புதிதல்ல. காலப்போக்கில் அவை இன்றியமையான ஒன்றாக மாறிவிடுவது தான் வழக்கம்.

சமூக வலைத்தளங்கள் இன்றைக்கு மாபெரும் வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் மக்களை ஒற்றைப் புள்ளியில் இணைக்கும் ஊடகம் தான் சமூக வலைத்தளங்கள். பேருந்துகளிலும், ரயில் நிலையங்களிலும் மாதக்கணக்கில் வினியோகிக்கும் “ஆன்மீகக் குறுஞ்செய்திகளை” வலைத்தளங்கள் வினாடி நேரத்தில் எடுத்துச் செல்கின்றன. அதுவும் உலகின் கடைக்கோடியில் இருக்கும் மனிதன் வரை !

“நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை” என்கிறது ஆபகூக் 2 : 2 . நற்செய்தியை ஊடகங்களில் எழுதுவது இறைவனின் அழைத்தல்களில் ஒன்று என்றே அதைப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.

சமூக வலைத்தளங்களை எப்படிப் பயன்படுத்தலாம் ? எனும் கேள்வி இன்றைக்கு நம் முன்னால் நீட்டப்படுகிறது.

1. கிறிஸ்துவின் உறுப்புகளான கிறிஸ்தவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்கும் பணியை சமூக வலைத்தளங்கள் செய்ய முடியும். குடை என்பது ‘தென்னிந்தியத் திருச்சபை’ எனும் பெரிய குடையாகவும் இருக்கலாம். ஒரு சின்னத் திருச்சபை எனும் குட்டிக் குடையாகவும் இருக்கலாம். அந்த விர்ச்சுவல் குடையின் கீழ் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைக்க முடியும்.

2. கிறிஸ்துவின் போதனைகளை, வழிகாட்டுதல்களை சமூக வலைத்தளங்களில் பகிர முடியும். இது. நமது ஐக்கியமும், கிறிஸ்தவ உரையாடல்களும் சர்ச் எனும் ஒரு கட்டிட வளாகத்தை விட்டு சமூகம் எனும் ஒரு வலைத்தள உலகிற்குள் நம்மை இடம் பெயர வைக்கும். ஒரு வகையில் எல்லா நாளும் கிறிஸ்தவ சமூகத்தின் ஐக்கியத்துடன் உலவ இது பயனளிக்கும்.

3. ஒரு சமூக மாற்றத்துக்கான ஒருங்கிணைப்புக்கு இந்த சமூக வலைத்தளங்கள் உதவும். கிறிஸ்தவ சமூகத்தின் சிந்தனை என்ன என்பதை பிற மதத்தினருக்கும் அறியவைக்க ஒரு வாய்ப்பாய் மாறும். அது தேர்தல் நேர சிந்தனைப் பரிமாற்றமாகவோ, சமூக சிக்கல்கள் தொடர்பான சிந்தனையாகவோ இருக்கலாம்.

4. ஆலய நிகழ்வுகள், நற்செய்தி விழாக்கள், கூட்டங்கள் போன்ற செய்திகளை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளும் தளமாகவும், செபித்தல் போன்ற நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள் ஒட்டும் இணையச் சுவராகவும் சமூக வலைத்தளங்கள் இருக்கலாம்.

5. வீடியோக்கள் மூலமாக நற்செய்தி அறிவித்தல் மிக முக்கியமான பணி. அழிந்து போகும் நிலையிலிருக்கும் பழைய அபூர்வ இறை செய்திகளை டிஜிடல் மயமாக்குதல் இன்னொரு பணி, இப்படி ஒரு பாலமாகவும் சமூக வலைத்தளங்கள் செயல்படலாம்.

சுருக்கமாக இயேசுவின் அன்பை நவீன தொழில் நுட்ப இழைகள் மூலமாக பகிர்ந்து கொள்தல் என்பது சமூக வலைத்தளங்கள் மீதான நமது பார்வையாய் இருக்கலாம்.

மேலை நாடுகளில் சமூக வலைத்தளங்களை ஆலயங்கள் முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றன. சின்ன சபைகள் முதல், போப்பாண்டவர் போன்ற மதத் தலைவர்கள் வரை சமூக ஊடகங்களில் நற்செய்திப் பணி ஆற்றுகின்றனர். அமெரிக்காவில் சுமார் 74% சபைகள் ஃபேஸ்புக்கில் தளம் வைத்திருக்கின்றன. சுமார் 70 சதவீதம் போதகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் செய்திகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

எந்த விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு எனும் நியூட்டனின் விதியைப் போல இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபத்துகளும் கணக்கிலடங்காதவை. சமூக வலைத்தளங்களே உறவு முறிவுகளின் முக்கிய காரணம் என இங்கிலாந்து ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. சமூக வலைத்தளங்களில் உலவுவதால் ஊழியர்களின் 23% நேரம் வீணடிக்கப் படுவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. இளைஞர்களும், சிறுவர்களும் இணையத்திற்கு அடிமையாய் இருப்பதாக பல புள்ளிவிவரங்கள் பயமுறுத்துகின்றன. பாவத்துக்குள் மக்களை இழுக்கும் கண்ணிகள் எக்கச்சக்கம் இணையத்தில் இருப்பதாக கட்டுரைகள் கலங்க வைக்கின்றன.

பழம் நறுக்க உதவும் கத்தி, மனிதனைக் காயப்படுத்தவும் செய்யும் என்பதைப் போல, இணையம் எனும் எல்லா பக்கமும் கருக்குள்ள வாளானது கவனமாகக் கையாளப்படாவிட்டால் நம்மைக் காயப்படுத்தி விடும் என்பதில் சந்தேகமில்லை. அதற்காக இணையத்தை ஒதுக்கி வைப்பது என்பது, தண்ணீருக்குப் பயந்து குளிக்காமலே இருப்பது போன்று அபத்தமானது !

சில சின்னக் கேள்விகளின் மூலம் நமது பாதை சரியா என்பதை உறுதி செய்து விட முடியும். அதற்கேற்ப நமது பயன்பாட்டை வகைப்படுத்திக் கொள்ள இது உதவும்.

1. இணையப் பயன்பாட்டு நேரம் நமது விவிலிய வாசிப்பு, தனி ஜெபம் போன்றவற்றுக்கு தடையாய் இருக்கிறதா ? அல்லது பைபிளை விட அதிக நேரம் நாம் இணையத்தைப் பயன்படுத்துகிறோமா ?

2. இணையத்தில் நல்ல கட்டுரைகள், கதைகள், விளையாட்டுச் செய்திகள் போன்றவற்றை வாசிப்பதாய் சிலர் சொல்வதுண்டு. அவை நம்மை பாவத்துக்கு இட்டுச் செல்லாவிட்டால் கூட,, நமது ஆன்மீகத்தின் கூர்மையைச் சிதைத்து விடும். நான்கு மணி நேரம் கிரிக்கெட் பார்த்து விட்டு 4 நிமிடம் பைபிள் வாசித்து திருப்தியடைகிறோமா ?

3. இணையத்தில் வேண்டுமென்றே நமது நம்பிக்கைகளைக் கேலி செய்தும், விசாரணைக்குள்ளாக்கியும் குதர்க்கக் கேள்விகள் வீசப்படுவதுண்டு. ஆன்மீக வளர்ச்சிக்கான உரையாடல்கள் நல்லவை. ஆனால் வெறுமனே நமது நேரத்தை வீணடிக்கும் சண்டைகளைத் தவிர்க்க வேண்டும். “எபேசியர் 6 : 12 சொல்வது போல, “மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல” நமது போராட்டம் ! பாவத்தோடு மட்டும் இருக்கட்டும். அதைத் தாண்டி நாம் டென்ஷனாகிறோமா ?

4. ஒருவரைத் திட்டவோ, பழிவாங்கவோ, காயப்படுத்தவோ நமது வலைத்தளத்தைப் பயன்படுத்துகிறோமா ?

5. குடும்ப உறவுகளோடு, நண்பர்களோடு, அயலாரோடான நேருக்கு நேரான அன்புப் பகிர்தலையும் சந்தித்தல்களையும் சமூக வலைத்தளப் பயன்பாடு தடுக்கிறதா ?

இது போன்ற சில சின்னச் சின்னக் கேள்விகளைக் கேளுங்கள். ஆம் எனும் பதில் இருக்கும் பட்சத்தில் உடனடியாக உஷாராகி விடுவது அவசியம்.

பணம் ஒரு சிறந்த வேலைக்காரன், ஆனால் மோசமான முதலாளி என்பார்கள். பணத்தை வேலைக்காரனாக மட்டும் வைத்திருந்தால் அது மிகுந்த பயன் தரும். அது நம்மை ஆட்சி செய்ய அனுமதித்தால் மாபெரும் சிக்கல் எழும். அதே போல் தான் இணையமும். அதை நமது பணியாளனாக வைத்திருந்தால் நன்மை ! அது நம்மை அடிமைப்படுத்த அனுமதித்தால் அழிவு தான். அதில் நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

நற்செய்தியைப் பொறுத்தவரையில், எதைச் சொல்கிறோம், எப்படிச் சொல்கிறோம் என்பதே முக்கியம். எதன் மூலமாகச் சொல்கிறோம் என்பது காலம் தோறும் மாறிக் கொண்டே இருக்கலாம். கடவுள் மேகத் தூணில் இருந்து பேசினார், இடி முழக்கமாய்ப் பேசினார், எரியும் முட் செடியில் பேசினார், கழுதையின் குரலாய்ப் பேசினார், கனவுகளில் பேசினார், காட்சிகளில் பேசினார், இன்று அவர் இணையத்தின் மூலமாகவும் பேசுவார் என்பதில் சந்தேகமில்லை !

தொழில் நுட்பத்தால் நாம் இணையத்தோடு இணையலாம். இறைவனின் வார்த்தைகளால் மட்டுமே இதயங்களோடு இணைய முடியும் என்பதே சமூக வலைத்தளப் பயன்பாட்டில் நமது முடிவாய் இருக்க வேண்டும். இணையத்தின் அலையடிக்கும் கரையில் ஒதுங்காமல், “ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்” எனும் இயேசுவின் வார்த்தைப்படி, ஆன்மீக ஆழத்தில் இணைய வலையை விரிப்போம். அப்போது தான் “வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்” எனும் இயேசுவின் வார்த்தை நிஜமாகும்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ இதழ்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s