ஆன்மீகக் கட்டுரை : எது முக்கியம்

fishing-02

பதினாறாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்று ‘எச்சரிக்கைச் சின்னம்’ என்று பொருள்படும் ஒரு ஓவியம். திதியோன் என்னும் ஓவியர் வரைந்த அந்த சித்திரத்தில் ஒரு மனிதன் மூன்று கைகளுடன் நிற்பது போல வரையப்பட்டிருக்கிறது. அவனுடைய ஒரு கை இளமையாகவும், இன்னொரு கை நடுத்தர வயதுடைய ஒரு மனிதருடைய கை போலவும், இன்னொரு கை வயதானவருடைய கை போலவும் வரையப்பட்டிருக்கிறது.

இளமையான கை எதிர்காலத்தையும், நடுத்தரக் கை நிகழ்காலத்தையும், வயதான கை இறந்தகாலத்தையும் சுட்டுவது போல அந்த ஓவியம் இருக்க அதனடியில் இலத்தீன் மொழியில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. ‘கடந்தகால அனுபவங்களின் விளைவாக மனிதன் நிகழ்காலத்தில் கவனமான வாழ்க்கை வாழ்கிறான், எதிர்காலத்தில் அப்படிப்பட்ட தவறுகள் எதையும் செய்துவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையுடன்.

சாதாரண மனிதனுடைய வாழ்க்கை இது தான். கடந்த காலத்தின் அனுபவங்கள், எதிர்காலத்தை உருவாக்குகின்றன. நிகழ்காலத்தின் அனுபவங்கள் கடந்த காலத்திலிருந்தே பெறப்படுகின்றன.

கிறிஸ்தவனுடைய வாழ்க்கை சற்று வித்தியாசப் படுகிறது. அவனுடைய நிகழ்காலமும், எதிர்காலமும் இறைவனின் வார்த்தைகளால் தான் கட்டமைக்கப்படுகின்றன. அப்படிக் கட்டமைக்கப்படுவது தான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை. நமது வாழ்க்கையின் அனுபவங்கள் இயேசுவின் வாழ்க்கையிலிருந்து கிடைக்கின்றன. நாம் எப்படி வாழவேண்டும் என்பதை இயேசுவின் வார்த்தைகளும், வாழ்க்கையும் நிர்ணயிக்க வேண்டும். அதுவே உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை.

ஒரு குழந்தை நடந்து செல்லும் போது தடுமாறி விழும் வாய்ப்புகள் அதிகம். அந்த தடுமாறும் அனுபவத்திலிருந்து அது மீண்டும் எழும் அனுபவத்தைப் பெற்றுக் கொள்கிறது. தடுமாறி விழும் குழந்தை தந்தையை நோக்கிக் கைகளை நீட்டுகிறது. நமது தடுமாற்றங்களின் போது நாம் இயேசுவை நோக்கிக் கைகளை நீட்டுகிறோம். விழுந்து விட்டோமே எனும் கோபத்தில் தந்தையை நோக்கிக் கை நீட்டாமல் முரண்டு பிடிக்கும் குழந்தை எழுவதில்லை. ஆன்மீக வாழ்விலும் அப்படியே !

இறந்தகாலம் நம்முடைய ஞாபக நிறுத்தங்களில் விட்டுச் சென்ற சோகத்தின் மூட்டைகளை நகர்த்தி வைத்துவிட்டு அடுத்த அடி எடுத்து வைப்பதே சிறந்த வாழ்க்கை. கடந்த காலத்தின் குற்ற உணர்வுகள் நிகழ்காலத்திலும் நம்முடைய மனக் கிளைகளில் அமர்ந்து கொண்டு அலகுபதிக்குமானால், எதிர்காலம் என்பது காயங்களோடு தான் தொடரும். மாறாக, கடந்த காலத்தின் காயச் சுவடுகளை அழித்துவிட்டு புதிய மனிதனாகப் பிறப்பதும், மீண்டும் அந்த பாவச் சுவடுகளில் பாதம் பதிப்பதில்லை என்னும் உறுதியான மனமும் தான் நம்முடைய வாழ்க்கையை வளமானதாக்க முடியும்.

பேதுரு இயேசுவை மறுதலித்தார். இயேசு ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தும் மூன்று முறை மறுதலித்தார். அவருடைய கடந்த காலம் அவரை இயேசுவை மறுதலித்தவன் என்னும் காயத்துடன் நிகழ்காலத்துக்குத் தள்ள, நிகழ்காலத்தில் இயேசுவின் மன்னிப்பு அவருக்குக் கிடைக்கிறது. அதன்பின்பு அவருடைய பணிவாழ்வில் பழைய குற்ற உணர்ச்சியோ, தடுமாற்றங்களோ இல்லை. காரணம் பழைய பேதுரு தன்னுடைய மனத் துருக்களை அகற்றிவிட்டார். எதிர்காலம் அவரை கிறிஸ்துவத்தின் அடிக்கல்லாக்கிக் கொண்டது.

யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். அந்தப் பிழையிலிருந்து வெளியேற அவன் இயேசுவை நோக்கிக் கைகளை நீட்டியிருந்தால் அவனுடைய வாழ்க்கையே மாறியிருக்கும். ஆனால் அவன் நீட்டவில்லை. அவன் அந்தப் பிழையின் சுழியில் சிக்கி குற்ற உணர்விலும், எதிர்கால நம்பிக்கையின்மையிலும் தற்கொலை செய்து கொண்டான். யூதாஸும், பேதுருவும் விழுந்தவர்கள். ஆனால் ஒருவர் அருவி போல, விழுந்த இடத்திலிருந்து வேகமெடுத்து ஓட ஆரம்பித்தார். இன்னொருவர் நெருப்பில் விழுந்த பனித்துளி போல காணாமல் போய்விட்டார்.

குற்றங்களை அறிக்கை செய்வதும், மன்னிப்புக் கேட்பதும் தொடர்ந்து நடப்பதும் தானே கிறிஸ்தவத்தின் படிப்பினை. பாவமில்லாத மனிதன் இல்லை. அப்படிச் சொல்பவன் பொய்யன். பொய் சொல்வது பாவம் ! “பாவம் தவிர மற்றனைத்திலும் நம்மைப் போல வாழ்ந்த இயேசு” மட்டுமே பாவத்துக்கு விதி விலக்கு. அப்படியானால் என்ன பிரச்சினை ? பாவி என்பதை அறிக்கையிட்டு பாவத்தை விட்டு விலகி நடக்க ஏன் முயலக் கூடாது ?

முக்கியமான சிக்கல் பொருளாதார ஆசை சார்ந்து வருகிறது. இயேசுவைப் பின்செல்பவன் தன் முதுகில் உலக ஆசைகளைச் சுமந்து செல்ல முடியாது. கடவுளுக்கும், செல்வத்துக்கும் ஊழியம் செய்ய எவனாலும் ஆகாது. இரு தலைவனுக்கு ஊழியம் செய்தால் ஒருவனை வெறுத்து மற்றவனை அணைத்துக் கொள்வான். உலக செல்வத்தை நேசித்தால், கடவுளை வெறுத்தாகவேண்டும் என்பதே அதன் பொருள். காரணம் உலக செல்வம் ஒருவனை கடவுளின் போதனைகளை விட்டுத் தூரமாய் தள்ளி விடும். ‘உனக்குள்ளதையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு’ என இயேசு சொல்வதன் உள் அர்த்தம் இது தான். உனக்கு செல்வ மோகம் இருந்தால் நீ கடவுளை விட்டு விலகியே இருப்பாய் !

ஜஸ்டின் பெரிய தொழிலதிபர். பணத்தைப் பெருக்கும் வித்தை கற்றவர். அவருடைய தேடல் பணத்தைப் பற்றியே இருந்தது. தன்னுடைய மனைவி பிள்ளைகளைக் கவனிக்கும் பொறுப்பை அவர் மறந்தார். வீட்டில் அவ்வப்போது வந்து செல்லும் விருந்தாளியாகிப் போனது அவருடைய வாழ்க்கை. வீட்டையே மறந்தவர் ஆலயத்துக்கா வருவார் ? ஆலயம் அவருக்கு அவசியமற்றதாகிவிட்டது. அல்லது நேரமிருக்கும்போது மட்டும் தலைகாட்டும் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டது.

நாட்கள் நகர்ந்தன. சேர்ந்து கொண்டிருந்த செல்வங்கள் ஒருநாள் அவருக்கு ஞானோதயத்தைக் கொடுத்தன. செலவழிந்து கொண்டிருந்த சந்தோஷத்தைப் பற்றி ! இழந்து கொண்டிருந்த நிம்மதியைப் பற்றி. கடைசியில் அவர் கத்தினார். ‘போதுமப்பா… போதும்’. சுவாசம் இல்லாத உடலுக்கு வைரக் கிரீடங்கள் எதற்கு ? எது முதன்மையானது ? எது முக்கியமானது ? அவருடைய மனம் கேள்விகளை எழுப்பியது.

சேகரிப்பது அல்ல வாழ்க்கை. வாழ்வில் நூறு வருடங்களைச் சேர்க்க முடியுமா ? நம்முடைய உயரத்தில் நான்கு அடியைக் கூட்ட முடியுமா ? நாளைக் காலைவரை உயிருடன் இருப்பேன் என உத்தரவாதம் தர முடியுமா ?. கைகள் இல்லாத மனிதனுக்கு மோதிரச் சேகரிப்பு எதற்கு ? சொந்தங்கள் இல்லாத மனிதனுக்குச் சொத்துக்கள் எதற்கு ?

கேள்விகளின் உள்ளே கேள்விகள் வெடித்து எல்லா இடங்களிலும் புரியாமைகளும் இயலாமைகளும் நிறைந்தன. அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. முக்கியமற்றதாய் தள்ளப்பட்டிருந்த ஆலயத்தை நோக்கி ஓடினார். மண்டியிட்டு அழுதார். அவருடைய சோகங்கள் எல்லாம் அந்தக் கண்ணீரில் கரைந்து வழியத் துவங்கின.

ஆண்டவா… என்னை இதோ உமது பாதத்தில் போடுகிறேன் என்னுடைய இழந்துபோன வாழ்வைத் தந்தருளும். அவருடைய மனம் வேண்டியது. மெல்ல மெல்ல அமைதி அவருடைய மனதை நிறைத்தது. தவிர்த்திருந்த குடும்ப உறவுகளைத் தாவியணைத்தார். மாற்றத்தைக் கண்ட மனைவி மகிழ்ந்தார். அவருடைய வருவாய் குறைந்தது. ஆனால் மகிழ்ச்சி நிரம்பி வழியத் துவங்கியது.

ஆலயம் அவருக்கு முதல் வீடானது, வீடு அவருக்கு இரண்டாவது ஆலயமானது. பணத்தின் தேடலில் ஓடிய அவருடைய வாழ்க்கை இறைவனைக் கண்டு இளைப்பாறத் துவங்கியது.

இறைவன் சொல்லும் வழி இதுதான். ‘போதும்’ என்று எப்போது சொல்லப் போகிறீர்கள். அழிந்து போகும் வாழ்வுக்காக அலைவதையே வாழ்க்கையாக்கிக் கொள்ளாமல் இறைவனை முதலிடத்தில் எப்போது நிறுத்தப் போகிறீர்கள் ? செல்வந்தனாய் இருந்தாலும் சரி, ஏழையாய் இருந்தாலும் சரி பணத்துக்கான ஆவல் அதிகரித்தால் அது வாழ்க்கையை பின்னங்காலால் உதைத்துத் தள்ளும்.

நாய்க்குட்டி காலுக்கு அருகே விளையாடிக் கொண்டிருக்கிறது. கையிலிருக்கும் பந்தை தூரமாக எறிகிறோம். நாய்க்குட்டி ஓடிப் போய் அதைக் கவ்விக் கொண்டு வந்து நம்முடைய கைகளில் தருகிறது. மீண்டும் எறிகிறோம், மீண்டும் நாய்க்குட்டி அதைக் கொண்டு வந்து தருகிறது. செயல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எறிவதும் பெறுவதுமாக. வட்டத்துக்குள் சிக்கிக் கொண்ட கடிகாரமுள் போல வெளியேறாத செயல். என்ன பயன் ?

நாட்கள் தோறும் ஒரே மாதிரியான செயல்கள். அவை வாரங்களாகி, மாதங்களாகி, வருடங்களாகி பின் தலைமுறைகளாகின்றன. வட்டத்துக்குள் சிக்கிக் கொண்ட வாழ்க்கை. உணவு, உடை, உறைவிடம் என்னும் அத்தியாவசியத் தேவைகளுக்கான தேடல்களில் துவங்கி, அத்தியாவசியங்கள் ஆடம்பரமானவையாக இருக்கவேண்டும் என்னும் நிலைகளில் தாவி ஓடிக் கொண்டே நேரத்தை எறிவதும், சிலவற்றைப் பெறுவதும் என்னும் அதே வாழ்க்கை. வலைக்குள் சிக்கிக் கொண்ட பூச்சியைப் போல ! என்ன பயன் ?

வாழ்வில் சாதிக்கவேண்டும் என்று ஓடி ஓடி உழைத்து, பங்களாக்களையும், வாகனங்களையும், நிலபுலன்களையும் தன்னுடைய வருமானக் கணக்கில் வரவு வைத்துக் கொண்ட தொழிலதிபர்களும் ஓய்வு பெறும் வேளையில் தங்களிடமே இந்தக் கேள்வியைக் கேட்பதுண்டு. என்ன பயன் ?. மரணம் இனிமேல் சொல்லிக் கொள்ளாமல் வந்து நிற்கும் விருந்தாளியைப் போல எந்த நேரம் வேண்டுமானாலும் வந்து கதவைத் தட்டலாம். அழைக்கும்போது போயாகவேண்டும். தவிர்க்க முடியாத அழைப்பு அது. அப்போது ஒருகணம் திரும்பிப் பார்த்தால் மீண்டும் மீண்டும் மனதுக்குள் ஒலிக்கும் கேள்வி இதுவாகத் தான் இருக்க முடியும். என்ன பயன் ? என்ன பயன் ?

வாழ்க்கை துயரங்களில் தோட்டமாகவும், இயலாமைகளின் விளைநிலமாகவும், குற்ற உணர்வுகளின் கூட்டமாகவும் பலருக்குக் காட்சியளிக்கும். அவர்கள் இறைவனை விட்டுவிட்டு தங்களை மையமாக்கிக் கொண்டவர்கள். அவர்களிடம் செல்வம் இருக்கும், ஆனால் மகிழ்ச்சி இருக்காது. ஆனால் இறைவனை வாழ்வின் ஆதாரமாக்கிக் கொண்டவர்களுக்கோ எதுவும் இல்லாவிடினும் மகிழ்ச்சி குறைவு படுவதில்லை.

நின்று நிதானிப்போம். நமது முதன்மைத் தேடல் எதில் இருக்கிறது. இறைவனைத் தேடுவதிலா, பொருளாதாரம் தேடுவதிலா ? இறைவனை நோக்கி நமது கண்களைத் திருப்புவோம். இதுவரை ஓடிய வாழ்க்கையின் குற்ற உணர்வு வேண்டாம். இது தான் நமது வாழ்வின் முதல் வினாடி எனக் கொள்வோம். இந்த வினாடியில் இருந்து இறைவனை நேசிக்கத் துவங்குவோம்.

நமது வாழ்விலும் சோகங்கள் வடுக்களை வரைவது இயல்பு. ‘இனிமேல் பாவம் செய்யாதே’ என்னும் இயேசுவின் வார்த்தைகளையே நம்முடைய எதிர்கால வழிப்பயணத்துக்கான வெளிச்ச விளக்காக ஏந்திக் கொள்ளவேண்டும். இயேசுவுக்கே சோதனைகள் வந்தன. முறியடித்தார். சோதனைகள் வந்துவிட்டனவே என்ற குற்ற உணர்ச்சி அவரைப் பணிசெய்வதிலிருந்து விலக்கிவிடவில்லை.

நம்முடைய வாழ்க்கையிலும் நாம் செய்த பாவங்களை இறைவனிடம் சமர்ப்பித்து மன்னிப்பைப் பெறுவோம். அந்த குற்ற உணர்ச்சிகள் நம்மைக் கொன்றுவிடாதபடி இறைமகனில் இணைந்திருப்போம்.

இறைவனைப் பற்றிக் கொண்டால்
வாழ்க்கை
பூக்களின் தோட்டமாகும்,
விட்டு விட்டால்
வலிகளின் கூட்டமாகும்.

சேவியர்

நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ இதழ்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s