குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 5

எதிர்பாரா இனிமைகள் இருக்கட்டும் !

kvr5

வசந்திக்கும், ஆனந்த்க்கும் கல்யாணம் ஆகி ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. இருவரும் கடந்த சில நாட்களாக ஒழுங்காகப் பேசிக்கொள்வதில்லை. ஆனந்த் அலுவலக வேலை என காலையிலேயே கிளம்பி, இராத்திரி தான் வருகிறார். இடைப்பட்ட நேரங்களிலும் அதிகம் போன் செய்வதில்லை.

வேலை வேலைன்னு வேலையையே கட்டிகிட்டு அழுங்க ! என வசந்தி எரிச்சல் பட, என் வேலையோட கஷ்டம் உனக்கெங்கே புரியப்போகிறது என ஆனந்த் திருப்பி எரிச்சல் பட, உறவில் சின்ன விரிசல். வசந்தி தன் தோழியரிடம் இதைப்பற்றிப் புலம்ப அவர்கள் ஆளாளுக்கு தூபம் போட்டார்கள். அவருக்கு வேற ஏதாச்சும் லவ் இருக்குமோ, அலுவலகத்துல கனெக்‌ஷன் இருக்குமோ, உன்னைப் பிடிக்காம போயிருக்குமோ என ஏராளம் “மோ, மோ, மோ” என பேசி அவளுடைய நிம்மதியையே கெடுத்து விட்டார்கள். இறுக்கம் இருவருக்கும் இடையே இருந்த விரிசலை பெரிதாக்கிக் கொண்டே இருந்தது.

அந்த நாள் வந்தது !! இதுக்கும் மேல பொறுக்க முடியாது, ரெண்டுல ஒண்ணு பாத்துடணும். சும்மா விடப் போறதில்லை. அவரு வரட்டும் என வசந்தி காத்திருந்தாள். மாலையில் ஆனந்த் வந்தான். தனது கோபத்தைக் கொட்ட வேண்டுமென எழுந்த வசந்தி அவனை ஏறிட்டுப் பார்த்தாள். ஆனந்த் புன்னகைத்துக் கொண்டே கையில் இருந்த ஒரு சின்ன பார்சலை அவளிடம் நீட்டினான்.

என்னங்க இது ?

கடைக்குப் போயிருந்தேன், இந்த வாட்சைப் பாத்தேன். உன் கைக்கு சூப்பரா இருக்கும்ன்னு தோணுச்சு அதான் வாங்கினேன்.

எனக்கா ?

உனக்கில்லாம வேற யாருக்கு நான் வாங்க போறேன்டா ? ஆனந்த் குரலில் நேசம் குழைத்தான்.

ரொம்ப நல்லாயிருக்கு.

தேங்க்ஸ். உங்கிட்டே ஒரு கிரீம் கலர் சாரி இருக்கில்ல, மயில் படம் எல்லாம் பார்டர்ல வருமே, உனக்கு எடுப்பா இருக்குமே ஒரு சாரி, அதுக்கு இந்த வாட்ச் ரொம்ப நல்லா இருக்கும்.

ஆனந்த் சொல்ல வசந்தி கண்கலங்கினாள். அவரை இறுக்கமாய் தழுவிக் கொண்டாள்.

சாரிங்க.. கொஞ்ச நாளாவே, நாம சரியா பேசல. மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.

ஆமா.. நான் தான் சாரி சொல்லணும். வேலை டென்ஷன்ல வீட்டையே கவனிக்க முடியாம ஆயிடுச்சு. இனிமே அதெல்லாம் கம்மி பண்ணிக்கணும். ம்ம்ம்… சரி வா.. வெளியே போய் ஒரு காஃபி சாப்டு வரலாம். ஆனந்த் சொல்ல, இது வரை இருந்த மன இறுக்கம், பிணக்கு, விரிசல் எல்லாம் சட்டென மறைய மகிழ்ச்சியுடன் உள்ளறைக்குப் போனாள் வசந்தி. சில்மிஷ விரல்களோடு ஆனந்தும் அவளைப் பின் தொடர்ந்தான்.

சின்னச் சின்ன இனிய ஆச்சரியங்கள் தான் குடும்ப வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கிறது. இதை அனுபவசாலிகள் சட்டென ஒத்துக் கொள்வார்கள். புரியாதவர்களுக்கு ஒரு புதிராக இருக்கும். வசந்தி எதிர்பாராத நேரத்தில் ஆனந்த் கொடுத்த அந்த சின்னப் பரிசு ஒரு கசப்பான சூழலை சட்டென இனிப்பாக மாற்றியது. தாம்பத்ய வாழ்க்கையின் சூட்சுமம் இது தான்.

கல்யாணத்துக்கு முன்னாடி இந்த கிரியேட்டிவ் விஷயங்கள் காதலர்களுக்கு உச்சத்தில் இருக்கும். என்ன பரிசு கொடுக்கலாம். எப்படி நம்ம ஆளை இம்ப்ரஸ் பண்ணலாம் என ரூம் போட்டு யோசிப்பார்கள். அதுக்குத் தக்கபடி நிறைய பரிசுகள், எதிர்பாராத இனிய நிகழ்வுகள் என அசத்துவார்கள்.

காதலி, காதலன் சார்ந்த எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார்கள். “நம்ம ஆளு இருமின நாள் இது”, ‘என் ஆளு குப்புறப் படுத்து தலை நிமிர்ந்த நாள் இது’ என சர்வ தினங்களையும் மனசில் கல்வெட்டாக வைத்திருப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் எத்தனை மணி, எந்த நிமிடத்தில், என்ன நடந்தது என்பதைக் கூட மனசில் கொத்தி வைப்பார்கள். அதனால் தான் காதல் காலம் எல்லாருக்குமே ஒரு உற்சாகத்தின் அருவியாய் ஓடிக் கொண்டே இருக்கும்.

கல்யாணம் ஆச்சுன்னா எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடும். பிறந்த நாளே கூட மறந்த நாளாகிப் போகும். “முன்னாடியெல்லாம் நம்மாளுக்கு நம்ம மேல கரிசனை அதிகம். இப்பல்லாம் நாம முக்கியமில்லாம போயிட்டோம்” என கணவனும், மனைவியும் கவலை கொள்ள ஆரம்பித்து விடுவார்கள் ! அதற்கு என்ன செய்யவேண்டுமெனும் கேள்விக்கு, ‘பிறந்த நாள், திருமண நாள் இவற்றையெல்லாம் நினைவில் வைத்து பரிசு கொடுக்க வேண்டும், வாழ்த்து சொல்ல வேண்டும்’ என நீங்கள் சொன்னால் நீங்கள் சாதாரண தம்பதி ! அதைக் கூட சொல்லவில்லையென்றால், நீங்கள் கிளீன் போல்ட் கேஸ், என்பது வேறு விஷயம். ஆனால் அதைத் தாண்டி நிறைய இருக்கிறது !

எதிர்பாராத இனிய ஆச்சரியங்கள். அது தான் ரொம்ப முக்கியம். அது பல விதங்களிலும் இருக்கலாம். உங்களுடைய ரசனை, வசதி, விருப்பம் என பல விஷயங்களின் அடிப்படையில் இந்த ஆச்சரியங்கள் உருவாகும் என்பது தான் சுவாரஸ்யம்.

ஒரு சனிக்கிழமையோ, ஓய்வாய் இருக்கும் ஒரு நாளிலோ ஒரு சின்ன விசிட் அடியுங்கள். கொஞ்சம் தூரத்தில் ஏதோ ஒரு பீச் ரெசார்ட், அல்லது ஒரு மலையோர கெஸ்ட் ஹவுஸ் போன்ற இடங்கள் ரொம்ப சவுகரியம். ஏற்கனவே எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து வைத்து விட்டு, மனைவியை அழைத்துக் கொண்டு ஒரு டிரிப் போய் வாருங்கள் ! மீண்டும் ஒரு ரொமான்டிக் பயணம் ஆரம்பிக்கும்.

ஒரு நாள் காலையில் உங்கள் மனைவி எழும்பும் முன்பே எழுந்து பிரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணி விட்டு மனைவியை எழுப்பிப் பாருங்கள். ஒரு சேஞ்சுக்காக நான் உனக்கு சமைச்சு வெச்சிருக்கேன், சாப்பிட்டு பாரு என ஒரு ஆச்சரியம் கொடுங்கள். உங்களுடைய சமையலின் ருசி எப்படி என்பதல்ல முக்கியம். உங்களுடைய கரிசனை மனைவியை நெகிழச் செய்யும் !

ஷாப்பிங் போறது மனைவிகளோட சர்வதேசக் குணம். அதுல யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியே வரும்போது ஒரு சின்ன பர்ஸ், ஒரு டி ஷர்ட், ஏதோ ஒண்ணு வாங்கி கணவனுக்குக் கொடுங்கள். உங்க பர்ஸ் பழசாச்சுல்ல, அதான் வாங்கினேன், நல்லாயிருக்கா என கேளுங்கள். அட, நம்ம மனைவிக்கு நம்ம மேல எவ்வளவு கரிசனை என நினைப்பார் கணவன். முக்கியமாக கணவனின் விருப்பம் என்ன, அவனுடைய தேவை என்ன என்பதை அறிந்து வைத்திருந்தால் இது உங்களுக்கு ரொம்பவே உதவியா இருக்கும் !

ஒரு குட்டிக் கவிதை, ஒரு சின்ன லவ் லெட்டர், ஒரு சின்ன மின்னஞ்சல் படம், உங்கள் காதலைச் சொல்ல, உங்கள் அன்பைப் பகிர்ந்து கொள்ள. இப்படி ஏதாவது யோசித்துச் செய்யுங்கள். “நீ என் வாழ்க்கையில் வந்தது இறைவனின் வரம். என் கடின நேரங்களில் உன் அன்பை நினைக்கும் போது தான் மனம் லேசாகிறது” என உங்கள் ஆத்மார்த்த அன்பை வெளிப்படுத்துங்கள். நிச்சயம் உறவு மேம்படும்.

ஒரு நாள் மதிய வேளையிலோ, மாலை வேளையிலோ உங்கள் துணையின் அலுவலகத்துக்கு விசிட் அடியுங்கள். அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கோ, காஃபி ஷாப்புக்கோ போய் கொஞ்ச நேரம் செலவிடுங்கள். “சும்மா உன் கூட கொஞ்சம் நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணணும் போல இருந்துச்சு, அதான் வந்தேன்” என சொல்லுங்கள். இருக்கின்ற மன வருத்தங்களெல்லாம் போயே போச்சு !

ஒரு மாலை வேளையில், அல்லது மதிய வேளையில் உங்கள் மனைவியுடன் அமர்ந்து ஒரு நல்ல ரொமான்டிக் மூவி பாருங்கள். நல்ல டிவிடி வாங்கி வந்து பாருங்கள். கொறிப்பதற்கு உங்கள் மனைவியின் ஃபேவரிட் ஐட்டம் ஒன்றை தயாராக்கி வைத்திருக்க வேண்டியது தான் ஹைலைட். அருகருகே அமர்ந்து சிரித்துக் கொண்டே, பாருங்கள், காதல் தழைக்கும் !

சில சில்மிஷ விளையாட்டுகள், வரவேற்பறை சமையலறை என பழைய காதலுடன் நெருக்கமாய் இருக்கும் தருணங்கள் என மூச்சுக் காற்றை வெப்பமாக்குங்கள். காதல் தாவரம் மூச்சுக் காற்றில் சடசடவென வளரும், மோகத் தீயில் அது மொட்டுகளை சட்டென மலர்த்தும். எதிலும் போலித் தனம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பது ரொம்ப முக்கியம்.

உங்களுடைய செல்போன், டேப்லெட்ஸ், லேப்டாப்ஸ், புக்ஸ் எல்லாவற்றையும் ஒரு நாள் மறந்து விட்டு சும்மா வீட்டு முற்றத்தில் அமர்ந்து பேசுங்கள். பழைய கதைகளை, அலுவலக சுவாரஸ்யங்களை, பேசுவதும் கேட்பதும் இனிமையான தருணங்கள். அவை காதலை வளரவைக்கும் நிமிடங்கள்.

கட்டிப்புடி வைத்தியம் ரொம்ப நல்லது ! போயிட்டு வரேன்னு சொல்றதானாலும் சரி, காலைல குட்மார்ணிங் சொல்றதுன்னாலும் சரி, ஒரு 2 நிமிட கட்டிப்புடி வைத்தியம் மனசை லேசாக்கும், உறவை ஸ்ட்ராங்காக்கும் என்பது உண்மை !

உங்கள் வாழ்க்கைத் துணைவருடைய பழைய புகைப்படங்கள் கொஞ்சம் எடுத்து ஒரு ஆல்பமாகவோ, ஒரு கொலாட்ஜ் ஆகவோ செய்து ஒரு நாள் அவரிடம் கொடுங்கள். “பழைய நாட்களெல்லாம் ஞாபகம் வந்துச்சு அதான் இதைப் பண்ணினேன்” என்று. சுவாரஸ்யமாகவும், இனிமையாகவும் இருக்கும் !

கணவனுக்கோ, மனைவிக்கோ இருக்கக் கூடிய நட்பு வட்டாரத்தை மதியுங்கள். ஒரு நாள் திடீரென, நண்பர்களைப் போய் பாருங்க, அவங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணுங்க என அனுமதி கொடுங்கள். அடுத்தவர் விருப்பங்களுக்குக் கொடுக்கும் மரியாதை ஒரு இனிய ஆச்சரியம் !

தொழில் நுட்பமும், சமூக வலைத்தளங்களும் சுழற்றியடிக்கும் சூழலில் அவற்றையெல்லாம் கூட உங்கள் காதல் வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதில் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது. ஒரு குட்டி எஸ்.எம்.எஸ், ஒரு ஃபேஸ்புக் செய்தி, ஒரு மின்னஞ்சல் காதல் என உங்கள் சிந்தனைக் குதிரையை வரிக்குதிரையாக வலம் வரச் செய்யுங்கள். காதல் வானில் வானவில்களுக்குப் பஞ்சமே இருக்காது !

மீண்டும் ஒரு முறை ஞாபகப் படுத்துகிறேன், சின்னச் சின்ன ஆச்சரியங்கள், பெரிய பெரிய ஆனந்தங்களின் அடிப்படை. அனைத்தையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யவேண்டும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள்

 

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 4

நமக்கே நமக்கான நேரங்கள்

couple

வெயில் சுட்டெரிக்கும் மத்தியான நேரம் பீச் பக்கம் போனால் பார்க்க முடியும் வெயிலுக்கே சவால் விடும் காதலர்களை. சூரியபகவானே டென்ஷன் ஆகிற அளவுக்கு அவரை அலட்சியப் படுத்தி காதலில் கலந்திருப்பார்கள் காதலர்கள். திருமணம் முடியும் வரை, அல்லது காதல் முறியும் வரை இந்த நெருக்கமும், பிணைப்பும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருக்கும். கொஞ்சம் நேரம் கிடைச்சா கூட அந்த சைக்கிள் கேப்பில் சந்திக்கவும், பேசவும், தனிமையாய் நேரம் செலவிடவும் காதலர்களின் மனம் தவியாய்த் தவிக்கும். இந்தத் தவிப்பு தான் காதல் எனும் செடிக்கு உரமும், தண்ணீரும், காற்றும் சர்வ சங்கதிகளும்.

திருமணம் ஆனபின் லைசன்ஸ்ட் காதலர்களாக ஆசை அறுபது, மோகம் முப்பது என ஒரு தொன்னூறு நாள் உலகம் சுற்றியபின் ஒரு சோர்வும், சின்ன இடைவெளியும் உருவாகிவிடும். இந்த இடைவெளியும் நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே செல்லும். திருமண பந்தங்களின் சிக்கல்களின் ஆணிவேர் இது தான் என்பதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம். திருமணம் வரை வாழ்ந்த வாழ்க்கைக்கும், திருமணத்துக்குப் பின்னான வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. காதலை மட்டுமே வளர்க்கும் பணி திருமணம் வரை ! காதலோடு சேர்ந்து குடும்பத்தையும் வளர்க்கும் பணி அதன் பின்பானது !

ஒரு சினிமா டிரைலர் பாக்கறீங்க. பரபரப்பா, சுறு சுறுப்பா, கண்ணுக்கு வசீகரமா, பிரமிப்பா இருக்கு இல்லையா. டிரைலர் உருவாக்கும் எதிர்பார்ப்பை எல்லா சினிமாவும் பூர்த்தி செஞ்சிருக்கா ? இல்லை ! பூர்த்தி செய்திருந்தால் எல்லாமே சூப்பர் ஹிட் படங்களாத் தானே இருக்கணும் ? பல சினிமாக்கள் அந்த டிரைலர் தந்த எதிர்பார்ப்பை ஈடு செய்ய முடியாமல் தோல்வியடைகிறது. சில படங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து வெற்றிப் படமாகுது. சில படங்கள் எதிர்பார்ப்புகளையெல்லாம் தவிடு பொடியாக்கி பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகுது.

திருமண வாழ்க்கையும் இப்படித் தான். ஏகப்பட்ட எதிர்பார்ப்பை வளர்த்து கொண்டால் ஏமாற்றங்கள் பரிசாய்க் கிடைக்கலாம். டிரைலருக்கு ஓவரா செலவு செஞ்சா படம் முழுக்க நீங்க அதையே எதிர்பார்த்து ஏமாந்து போகலாம். இங்கே தேவையானது இரண்டு விஷயம். ஒன்று, அளவான எதிர்பார்ப்பு. இரண்டு, தொடர்ச்சியான அன்பு !

திருமணத்துக்கு முன்பு எப்படி நீங்கள் இருவரும் நேரம் செலவிட்டீர்களோ அதே போல, அல்லது அதை விட அதிகமாக நேரம் செலவிடுவதில் இருக்கிறது உங்களுடைய திருமண வாழ்க்கையின் வெற்றி. திருமணம் முடிந்த பின் ஒரு குழந்தை பிறக்கும் வரை கூட செலவிட நேரம் நிறைய இருக்கும். ஆனால் ஒரிரு குழந்தைகளும் பிறந்தபின் எப்படி ? அதெல்லாம் முடியாத காரியம் என சட்டென ஒரு முடிவெடுப்பதை விட, அதை சாத்தியப்படுத்துவது எப்படி என்பதைக் கொஞ்சம் யோசியுங்கள்.

திருமண வாழ்க்கையின் வெற்றி என்பது கணவன் மனைவி இருவருக்கும் இடையேயான புரிதலிலும், நெருக்கத்திலும் தான் இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சொந்தக்காரங்க, வருமானம், குழந்தைகள், வேலை, பொழுதுபோக்கு, இத்யாதி இத்யாதி எல்லாமே இரண்டாம் பட்சம் தான் ! முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடும் ! இந்தப் பிணைப்பை இறுக்கமாக்க என்ன செய்யவேண்டும் ? சிம்பிள் ! அதிக நேரம் கணவன் மனைவி, தனிமையில் நேரம் செலவிட வேண்டும் !

அவ்வப்போது கணவன் மனைவி இருவருமாக வெளியே போவது ஒரு வழிமுறை. குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் போதோ, அல்லது ஒரு நாள் குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டு விட்டோ, அல்லது நண்பர்கள் வீட்டில் விட்டு விட்டோ, கணவனும் மனைவியும் தனியாக அவர்களுக்குப் பிடித்த ஒரு இடத்துக்குப் போய் மனம் விட்டுப் பேசுவது உறவை உற்சாகமாய் வைத்திருக்கும். ஒருவேளை வெளியே செல்ல வாய்ப்பே இல்லாவிட்டால் கூட குழந்தைகள் தூங்கிய பின் நிலவொளியில் அமர்ந்து கதைகள் பேசலாம் ! அந்த உரையாடலில் வேலை, நாளை செய்ய வேண்டிய பணிகள், பிரச்சினைகள் போன்றவற்றை ஒதுக்கி வைத்து விட்டு சுவாரஸ்யமான விஷயங்களையோ காதல் காலத்தின் நினைவுகளையோ அசைபோடுங்கள். வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.

பெரிய பெரிய விஷயங்களில் குடும்ப வாழ்க்கையின் வெற்றி இல்லை. அது ரொம்ப ரொம்ப சின்ன விஷயங்களில் தான் இருக்கிறது. உதாரணமா, உங்கள் மனைவி சமையல் செய்து கொண்டிருக்கும் போது, “மணம் சூப்பரா இருக்கே”, ” ஏதாச்சும் ஹெல்ப் வேணுமா ?”, என ஒரு சின்ன புன்னகையுடன் மனைவியின் அருகில் சிறிது நேரம் இருப்பதே நீங்கள் அவரை மதிக்கிறீர்கள், அவரை அன்பு செய்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டி விடும். ஒரு சின்ன புன்னகை, ஒரு சின்ன கண்ணசைவு, ஒரு சின்ன நிகழ்வுப் பகிர்வு எல்லாமே உறவின் இறுக்கத்தைத் துளித் துளியாய் அதிகரிக்கும் !

ரெண்டு பேருக்குமே பிடிச்ச மாதிரி ஒரு ஹாபி கண்டு பிடிங்க, அல்லது மியூசிக், ஓவியம், இப்படி ஏதாச்சும் எக்ஸ்ட்ரா கிளாஸ் கண்டு பிடிங்க, இருவரும் சேர்ந்து நேரம் செலவிடவும் நெருக்கத்தை அதிகரிக்கவும் இது ரொம்ப ரொம்ப உதவும். ஒண்ணும் இல்லேன்னா அடிக்கடி ரெண்டு பேரும் வெளியே போய் காப்பியாவது குடிச்சிட்டு வாங்க ! அந்த அரைமணி நேர அருகாமை கூட அன்பை வளமாக்க உதவும்.

திருமணமாகி நாட்கள், மாதங்கள், வருடங்கள் செல்லச் செல்ல தம்பதியர்கள் சோர்வாகும் ஒரு விஷயம் தாம்பத்யம். அதுவும் குழந்தைகள் பிறந்தபின் அந்த சிந்தனை ஓரமாய் ஒதுக்கி வைக்கப்படும். தாம்பத்யம் என்பது தம்பதியரை இறுக்கமாக்கும் என்பதும், மன அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கும் என்பதும் உளவியல் உண்மைகள். எனவே குடும்ப வாழ்க்கையின் ஒரு முக்கியமான அம்சமாக அதை எப்போதுமே மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மிஷெல் வெய்னர் பிரபலமான “டைவர்ஸ் பஸ்டிங்” எனும் நூலின் ஆசிரியர். “திருமணங்கள் ஏன் டைவர்சில் முடிவடைகின்றன” எனும் கேள்வியை அவரிடம் கேட்டார்கள். அவர் சொன்ன பதில் ஆச்சரியமூட்டுகிறது. “திருமணங்கள் டைவர்ஸ் ஆவதற்கு ஏதோ மிகப்பெரிய காரணங்கள் இருப்பது போல எல்லோரும் நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. டைவர்ஸ்களுக்கு மிக மிக முக்கியமான காரணம் கணவனும், மனைவியும், தேவையான அளவு நேரம் ஒதுக்காதது தான். திருமணமான பின் அவர்களுக்கு வேலை, குழந்தைகள், ஹாபி, தனிப்பட்ட விருப்பங்கள், போன்ற இத்யாதிகள் முதலிடத்தை அபகரித்துக் கொள்கின்றன. அதனால் கணவன் மனைவிக்கு இடையேயான தனிப்பட்ட நேரங்கள் களவாடப்பட்டு விடுகின்றன. அதுவே பெரும்பாலான டைவர்ஸ்களுக்கான காரணம்”

குழந்தைகள் முக்கியம் தான். ஆனால் உங்களுடைய குழந்தைகள் உங்கள் வாழ்வில் வருவதற்கு முன்பே வந்தவர் உங்கள் வாழ்க்கைத் துணை என்பதை நினைவில் கொள்ளுங்கள். குழந்தைகள் உங்களை விட்டுத் திருமணமாகிப் பிரிந்து போனபின்பும் உங்களுடன் இருக்கப் போவது உங்கள் வாழ்க்கைத் துணை தான். அவருடன் தனிப்பட்ட முறையிலான அன்யோன்ய நேரம் செலவழித்தல் மிகவும் முக்கியம். எப்போதுமே தனியே நேரம் செலவிட முடியாது, ஆனால் எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் நீங்கள் சேர்ந்து நேரம் செலவிடலாம்.

சில விஷயங்களை நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். உதாரணமாக, ஒரு மாலை வேளையில் நீங்களும் உங்கள் பார்ட்னரும் தனித்திருக்கும் சூழல் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். அந்த நேரட்த்தில் ஏதோ ஒரு நாலு பொண்டாட்டிக் காரனுடைய சீரியலைப் பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். அல்லது டோனி அடிக்கப் போகும் ஹெலிகாப்டர் ஷாட்டுக்காக இமைக்காமல் டிவியை விழுங்க வேண்டாம். டிவியை ஆஃப் செய்து விடுங்கள். கையில் ஆறாவது விரல் போல செல்போனை ஒட்டி வைக்காதீங்க. மாற்றி வைக்க முடியாமல் இருக்க செல் போன் ஒன்றும் பச்சை குத்திய விஷயம் அல்ல. அதை தூரமாய்ப் போடுங்கள். எந்த விதமான இடஞ்சல்களும் இல்லாமல் பேசுங்கள், சிரியுங்கள், ஏதாச்சும் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

வீட்ல ஒரு வேலை செய்ய மாட்டேங்கறே, இதெல்லாம் நான் தான் செய்யணுமா, எல்லாரும் சேந்து செஞ்சா தான் வீடு நீட்டா இருக்கும் – போன்ற பல்லவிகளெல்லாம் உண்மையில் கணவன் மனைவியிடையே போதுமான அளவு தனிப்பட்ட நேரம் செலவிடவில்லை என்பதன் விளைவுகள் தான். உன்னால தான் நேரம் செலவிட முடியல – போன்ற பரஸ்பர குற்றச்சாட்டுகள் உண்மையில் அர்த்தமற்றவை. அவற்றை அப்படியே மூட்டை கட்டி மூலையில் எறிந்து விட்டு கிடைக்கும் நேரத்தை இயல்பாகச் செலவிடுங்கள்.

இன்றைக்கு தம்பதியர் சேர்ந்தே இருந்தாலும் அவர்களைப் பிரிப்பது தொழில் நுட்பம். அதே போல பிரிந்தே இருந்தாலும் இணைந்தே இருக்கும் உணர்வைத் தருவதும் அது தான். அதை எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு வேணும். இருவரும் தூர தூரமாக இருக்கும்போது செல்பேசலாம், சேட்டிங் செய்யலாம். ஆனால் ஒரே வீட்டில் இருக்கும்போது உங்களுடைய ஃபேஸ்புக், டுவிட்டர், செல்போன், கேம்ஸ் இத்யாதிகளையெல்லாம் மூடி வைத்து விடுங்கள்.

கடைசியாக ஒன்று ! குடும்பம் என்பதை ஒரு மரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். கணவனும் மனைவியும் அதன் வேரும் நிலமும் போல ! வேர்கள் மண்ணில் இறுக்கமாகப் பற்றியிருப்பதே மரத்தின் அடிப்படைத் தேவை. வெளியே கிளைகள் விரியலாம்,பூக்கள் மலரலாம், கனிகள் தொங்கலாம், பறவைகள் வந்து வந்து போகலாம். எல்லாமே எந்த அளவுக்கு மண்ணும் வேரும் இறுக்கமாய், நெருக்கமாய் இருக்கின்றன என்பதில் தான் இருக்கிறது. வேர் தனது பிடிப்பை விட்டு விட்டு கிளைக்கும், பறவைக்கும், மலருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளியேறினால், ஒட்டு மொத்த மரமே சரிந்து விடும் அபாயம் உண்டு !

குடும்ப வாழ்க்கை வளமாக அமைய வேண்டுமா ? வேராகவும், மண்ணாகவும் கணவன் மனைவி இருக்க வேண்டும். அதற்கு “உங்களுக்கே உங்களுக்கான” தனிப்பட்ட நேரங்கள் மிக மிக அவசியம்

சேவியர்

 

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 3

மரியாதை கலந்த அங்கீகாரம்

 

kvr3

 

மரியாதை என்றதும் பதற வேண்டாம். மரியாதை என்பதற்கு சமூகம் ஏகப்பட்ட அர்த்தங்களை வைத்திருக்கிறது. சிலருக்கு சாஷ்டாங்கமாய்க் காலில் விழுவது தான் மரியாதை. சிலருக்கு ஒரு சின்னப் புன்னகை கூட மரியாதை தான். சிலருக்கு வார்த்தைகள், சிலருக்கு வணக்கம், சிலருக்கு சின்னச் சின்ன செயல்களின் வெளிப்பாடுகள். மரியாதை என்பது மனித இனத்தின் தனித் தன்மை. அது கணவன் மனைவியரிடேயும் இருக்க வேண்டியது முக்கியம்.

அதற்காக ஏதோ ஐயா, அம்மா என்று அழைத்து மரியாதை செய்ய வேணுமா என டென்ஷனாகாதீர்கள். பொதுவாகவே திருமணம் முடிந்தவுடன் கணவனும் மனைவியும் ஒரே வீட்டில் வாழ்க்கையைத் துவங்குவார்கள். அப்புறம் இவர் தனக்கானவர்,, இவள் தனக்கானவள் எனும் எண்ணம் மனதுக்குள் ஆழமாகப் பதிந்து விடும். இது நல்ல விஷயம் தான். ஒரே ஒரு சிக்கலைத் தவிர. அதாவது கணவனோ மனைவியோ என்னதான் செய்தாலும், “இது அவருடைய கடமை”, “இது அவளுடைய கடமை” என மனம் நினைக்கத் துவங்கி விடுவது தான்.

அந்த சிந்தனை மனதில் இருக்கும்போ ஒரு செயலுக்கான மரியாதையைக் கொடுக்க நினைக்க மாட்டோம். அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள். ஒரு பாராட்டோ, அங்கீகாரமோ, செயலுக்கான மரியாதையோ கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள் ? மரியாதை தெரியாத மனுஷங்க கூட மாரடிக்க வேண்டியிருக்கு என புலம்புவீர்கள் தானே ! ஒரு ஆராய்ச்சி முடிவு சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. ஏன் மக்கள் அடிக்கடி தங்களுடைய வேலையை மாற்றிக் கொள்கிறார்கள் ? என்பது தான் ஆய்வுத் தலைப்பு. நல்ல பணம் கிடைக்கிறதனால வேலையை மாற்றுவது தான் நமக்குத் தோன்றும் பதில். உண்மை அப்படியில்லையாம். “செய்ற வேலைக்கான மரியாதை கிடைக்கல” என்பது தான் முக்கியமான காரணமாம் !

அத்தகைய சிந்தனை உறவுகளிடையேயும் நிச்சயம் எழத் தான் செய்யும். மென்மையாக ! உங்களுடைய சட்டையை ஒரு நாள் உங்கள் நண்பனோ, சகோதரனோ அயர்ண் பண்ணிக் கொடுத்தால் ரொம்ப நன்றி சொல்கிறீர்கள். அதே வேலையைத் தினமும் உங்கள் மனைவி செய்தாலும் நீங்கள் நன்றி சொல்லாமல், அல்லது அதை “மனைவி செய்ய வேண்டிய கடமை” போல நினைத்துக் கொள்கிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அங்கே தான் இந்த சிக்கலின் முதல் சுவடு பதிகிறது. அதற்காக அலுவலகத்தில் சொல்வது போல “டியர் மனைவி” என ஆரம்பித்து ஒரு நீளமான மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. ஒரு புன்னகை, ஒரு அரவணைப்பு, ஒரு நன்றி வார்த்தை, ஒரு பாராட்டு.. இப்படி சின்னச் சின்ன விஷயம் தான் ! அதைக் கவனமுடன் செய்ய ஆரம்பிப்பதில் இருக்கிறது வாழ்க்கையின் வெற்றி !

வார்த்தைகளை விட, நமது செயல்களில், நமது நடவடிக்கைகளில் அந்த மரியாதை வெளிப்படுவது இன்னும் அதிக பயன் தரும். உதாரணமாக, மனைவி சமையல் செய்து வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த சமையலுக்கான மரியாதை என்ன தெரியுமா ? ஆர்வத்துடனும், பொறுமையுடனும் அதை ருசித்துச் சாப்பிடுவது தான். ஹோட்டலுக்குச் செல்லும் போது உணவுகளின் ருசியைப் பாருங்கள். விலையைப் பாருங்கள். இல்லங்களில் சாப்பிடும்போது சாப்பாடு தயாரித்தவரின் மனதையும், உழைப்பையும், அன்பையும் பாருங்கள். அதுவே முக்கியமானது ! உப்பு இல்லை, காரம் இல்லை என்று சொல்லி உணவை நிராகரிப்பவர்களும், விலக்கி வைப்பவர்களும் அதிகபட்ச அவமரியாதையைச் செய்கிறார்கள் !

இன்னொரு முக்கியமான விஷயம் பேச்சு ! மரியாதை இல்லாத பேச்சு ரொம்ப ரொம்பத் தப்பு. குறிப்பாக பிறர் முன்னிலையில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது ஒருமையில் அழைத்துப் பேசுவது, அதிகாரத் தொனியில் பேசுவது, எரிச்சலுடன் பேசுவது, இளக்காரமாய்ப் பேசுவது, மரியாதை குறைவாய் பேசுவது போன்றவையெல்லாம் ரொம்பவே தவறான விஷயங்கள். கணவன் தானே, மனைவி தானே என நீங்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால் அவர்களும் இந்தச் சமூகத்தில் ஒரு தனி மனிதர், அவருக்கும் உணர்வுகள், சுயமரியாதை உண்டு என்பதை மனதில் கொண்டிருங்கள்.

ஒரு விஷயத்தை முடிவு செய்து விட்டு உங்கள் வாழ்க்கைத் துணையிடம் சொல்வதற்கும், வாழ்க்கைத் துணையுடன் இணைந்து பேசி ஒரு விஷயத்தை முடிவு செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ‘ஆமா, எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு சொல்ல வந்துட்டாங்க” எனும் சலிப்பு உறவுக்கு நல்லதல்ல. வெறும் தகவல் சொல்லும் ஒரு மனிதராகவோ, உங்கள் கட்டளைகளை ஏற்று நடக்கும் ஒரு மனிதராகவோ மட்டும் அவரைப் பார்க்கவே பார்க்காதீர்கள். அது அவரை அவமரியாதை செய்வதற்குச் சமம். இருவரும் சேர்ந்து ஒரு விஷயத்தைப் பேசி முடிவெடுப்பதே நல்லது.

கிராமப் புறங்களில் வசிப்பவர்களுக்குத் தெரியும். ராத்திரி முழுக்க குடித்து விட்டுச் சண்டை போடும் கணவனைக் கூட விட்டுக் கொடுக்காமல் பேசுவாள் மனைவி. வீட்டில் எப்போதுமே அடங்காப் பிடாரியாய் பிடரி சிலிர்க்கும் மனைவியைக் கூட பொது இடத்தில் அன்பானவள் என பறைசாற்றுவான் கணவன். வேறு யாரேனும் தனது வாழ்க்கைத் துணையை தரக்குறைவாய் பேச அனுமதிக்க மாட்டார்கள். இது ஒருவகையில் கணவன் மனைவியிடையே இருக்கின்ற மனவருத்தங்களைத் தாண்டி ஒருவரை மற்றவர் மதிக்கும் மனப்பான்மை என்று எடுத்துக் கொள்ளலாம்.

கணவன் மனைவியராய் இருந்தால் கூட ஒவ்வொருவருக்குமான சில தனித் தனி விருப்பங்கள் இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள். பெரும்பாலான தம்பதியர் சண்டையிட்டுக்கொள்ளும் விஷயம் இது தான். அல்லது இது தான் மன வருத்தங்களை தோற்றுவிக்கும் ஒரு மிகப்பெரிய காரணியாய் இருக்கிறது. உதாரணமாக, உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு குறிப்பிட்ட தலைவரைப் பிடிக்கலாம், நடிகரைப் பிடிக்கலாம், ஆன்மீக வழிகாட்டியைப் பிடிக்கலாம், அல்லது ஒரு ஸ்பெஷல் ஹாபி இருக்கலாம். அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என அதற்கான அங்கீகாரத்தையும் மரியாதையையும் கொடுங்கள். உங்களுக்குப் பிடிக்கும் விஷயம் தான் உங்கள் கணவருக்கோ, மனைவிக்கோ பிடிக்க வேண்டும் என முரண்டு பிடிக்காதீர்கள். இருவருக்குமான தனிப்பட்ட சில விஷயங்கள் இருப்பதில் தவறில்லை. அது ஒட்டு மொத்த குடும்ப உறவைப் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே கவனிக்க வேண்டிய விஷயம்.

கண்ணை மூடிக்கொண்டு “இதெல்லாம் தப்புப்பா” என சொல்லும் ஒரு விஷயம் கை நீட்டி அடிப்பது, அல்லது மனம் காயப்படுத்தும் படி பேசுவது. ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் என்றெல்லாம் இல்லாமல் இதில் சமத்துவம் வீசுகிறது. கையால் அடிக்கும் அடி வலிப்பதில்ல்லை, ஆனால் அடித்துவிட்டாரே எனும் நினைப்பு தான் வலிகொடுக்கிறது. சொல்லும் சொல்லும் அப்படியே. என்னைப் புரிந்து கொண்ட இந்த மனுஷி இப்படிச் சொல்லிட்டாளே என்பது தான் வலிகொடுக்கும். அது உங்கள் வாழ்க்கைத் துணைக்கான மரியாதையை நீங்கள் தர மறுக்கின்ற தருணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம். நம்பிக்கை ! உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் தரமுடிந்த அதிகபட்ச மரியாதை அவரை முழுமையாய் நம்புவது. அதே போல, அந்த நம்பிக்கைக்கு உரியவராய் நீங்கள் இருப்பது பதில் மரியாதை ! இது மட்டும் அழுத்தமாய் இருந்தாலே போதும். வாழ்க்கை ஆனந்தமாய் ஓடும். நள்ளிரவில் வாழ்க்கைத் துணையின் செல்போனை நோண்டுவது, டைரியை புரட்டுவது, கணினியை ஆராய்வது போன்ற இத்யாதிகளெல்லாம் நீர்த்துப் போன நம்பிக்கையின் அடையாளங்கள்.

சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நன்றி சொல்வது அடுத்தவர் செய்யும் விஷயங்களை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதன் அடையாளம். அது எலக்ட்ரிக் பில் கட்டுவதாக இருக்கலாம், உங்கள் துணியை அயர்ன் பண்ணுவதாக இருக்கலாம், ஒரு கப் காபி கொண்டு தருவதாகக் கூட இருக்கலாம். புன்னகையுடன் கூடின மனமார்ந்த நன்றி அந்தச் செயலை அர்த்தப்படுத்தும். புருஷன் பொண்டாட்டிக்குள்ள என்ன நன்றியெல்லாம் சொல்லிகிட்டு என்பதெல்லாம் பழைய பஞ்சாங்கம். நீங்கள் முயன்று பாருங்கள், மாற்றம் நிச்சயம் உங்களுக்கே தெரியும்.

விட்டுக் கொடுத்தல் கூட அடுத்த நபரையோ, அல்லது அந்த உறவையோ நீங்கள் மரியாதை செலுத்துகிறீர்கள் என்பதன் வெளிப்பாடு தான். ஒருவேளை உங்கள் மனைவி அவருடைய அம்மாவிடம் ரெண்டு மணி நேரம் போனில் பேசுகிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அப்படி என்னதான் பேசறீங்க ? என கேட்காமல் இருப்பது நல்லது. ஒருவேளை கேட்டு, உங்கள் மனைவி சொல்லத் தயங்கினால் அதை அப்படியே விட்டு விடுங்கள். துருவித் துருவி கேட்பதோ, வீணான அனுமானங்களுக்குள் இறங்கி உங்கள் தலையைக் குழப்பிக் கொள்வதோ தேவையற்ற விஷயம் !

“உங்கள் மனைவி ஏதாச்சும் ஒரு நல்ல முடிவெடுத்தா பாராட்டுங்க. தப்பான முடிவெடுத்தா சைலன்டா இருங்க” என்கிறார் ஒரு வல்லுநர். நல்ல முடிவுகளுக்குப் பாராட்டுக் கொடுத்துக் கொண்டே இருந்தால், தப்பான முடிவு எடுக்கும்போ அவங்களுக்கே புரியும். ‘இந்த விஷயத்துக்குப் பாராட்டு வரல, அப்படின்னா இது சரியில்லை’ என அவருடைய உள்மனசே காட்டிக் கொடுக்கும். பாராட்டு என்பது மரியாதையின் ஒரு பகுதி என்பதை நான் சொல்லத் தேவையில்லை !

மரியாதை பரிமாறப்படாத இடங்களில் உறவுகள் நிலைப்பதில்லை. அலுவலகத்தில் போய் மரியாதை குறைவாய் ஒரு மாதம் நடந்து பாருங்கள். உங்களுடைய வேலையே போய் விடலாம். நண்பர் கூட்டத்தில் போய் மரியாதை வழங்காமல் ஒரு சில மாதங்கள் இருந்து பாருங்கள். நட்புகளெல்லாம் காணாமல் போய்விடும். உங்கள் சொந்தக்காரர் வீட்டுக்குப் போய் மரியாதை இல்லாமல் சில நாட்கள் தங்கிப் பாருங்கள், அந்த உறவு அதோடு முறிந்து போய்விடும். இப்படி எல்லா இடங்களிலும் மரியாதை கொடுப்பதும், வாங்குவதும் தேவைப்படும் போது, ஏன் குடும்பத்தில் மட்டும் அது தேவையற்ற ஒன்று என நினைக்கிறீர்கள் ?

இருக்கும் போது வாழ்க்கைத் துணையின் அருமை பெருமைகள் பலருக்கும் புரிவதில்லை. இழந்தபின் புலம்புவதில் பயனும் இல்லை. ” நீ இல்லேன்னா என்னால இதெல்லாம் சாதிச்சிருக்கவே முடியாது”, ” நீ இல்லேன்னா லைஃபே வெறுத்துப் போயிருக்கும்”, ” நீ எனக்குக் கிடைச்சது கடவுள் வரம்” என்றெல்லாம் உங்கள் வாழ்க்கைத் துணையிடம் என்றேனும் சொல்லியிருக்கிறீர்களா ? மனதிலாவது நினைத்திருக்கிறீர்களா ? ஏன் என்றாவது யோசித்திருக்கிறீர்களா ? அன்பாகப் பேசுங்கள். அன்பான பேச்சு வாழ்க்கையை ஆழப்படுத்தும் ! உங்கள் வாழ்க்கைத் துணைவருக்காக பிரார்த்தியுங்கள். அது உங்களுடைய அன்பின் வெளிப்பாடு.

கடைசியாக ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். மாற்றம் உங்களிடமிருந்து தான் துவங்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து துவங்கவேண்டும் என நினைப்பது நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான மரியாதையைக் கொடுக்கவில்லை என்பதன் அடையாளமே !

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 2

வித்தியாசங்களே வலிமையானவை !

kvr2

சின்ன வயதில் நிறைய பாட்டிக் கதைகள் கேட்டிருப்போம். அரசகுமாரியின் உயிரை ஏழு மலை, ஏழு கடல் தாண்டி ஒரு குகையில் கிளியின் உடலில் ஒளித்து வைத்திருப்பான் அரக்கன். அந்த அரக்கனைக் கொன்று இளவரசியை மீட்பான் இளவரசன். பிரம்ம பிரயர்த்தனத்துடன் இளவரசன் நடத்தும் வீர தீரப் போராட்டங்கள் மெய் சிலிர்க்க வைக்கும். குடும்ப வாழ்க்கையும் இத்தகைய ஒரு மிகப்பெரிய சவாலான, கஷ்டமான, போராட்டமான விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல. பெரிய பெரிய போர்களிலல்ல, சின்னச் சின்ன விஷயங்களில் தான் குடும்ப வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.

ஒரு மிகப்பெரிய தேரின் வலிமை சின்ன அச்சாணியில் இருக்கிறது. இந்த காலத்தில் தேரும் அச்சாணியும் மறந்து போயிருக்கும். வேண்டுமானால் ஒரு காரின் பயணம் அதன் உள்ளே உலவும் சில துளி பெட்ரோலில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். என்ன தான் ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து போஸ் ஸ்பீக்கர் வாங்கி மாட்டினாலும், பெட்ரோல் இல்லாத வண்டி ஓடாது. எனவே இது சின்ன விஷயம் தானே, முதல்ல பெரிய விஷயங்களைக் கவனிப்போம் என்று இருந்து விடக் கூடாது. அடிப்படை விஷயங்களில் கவனம் தேவை !

ரசனையும் அப்படிப்பட்ட ஒரு சின்ன விஷயம் தான். ஆனா குடும்பத்தில் எத்தனை பெரிய கீறலை வேண்டுமானாலும் அது உருவாக்கிவிடும். ரசனைகளை மதியுங்கள், இது முதல் தேவை ! அதாவது உங்க மனைவிக்கு ஓவியத்துல ஆர்வம் ன்னு வெச்சுக்கோங்க, அதை முதலில் மதியுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும். உங்களுக்கு ஓவியம்ன்னாலே அலர்ஜியா இருக்கலாம். அதுக்காக உங்க மனைவிகிட்டே போய், இதெல்லாம் ஒரு ரசனையா ? வெளங்கினாப்ல தான் என்றெல்லாம் எரிச்சல் மூட்டாதீர்கள்.

அதே போல தான் உங்கள் கணவருக்கு ஒருவேளை சிக்ஸ் பேக்ஸ் மோகம் இருக்கலாம். அதுக்காக டெய்லி காலையிலேயே தெருத்தெருவா ஓடிட்டே இருக்காரு, இல்லேன்னா ஜிம்ல போய் ஆஜராயிடராருன்னா அதை மதியுங்கள். ஆமா இவரு சிக்ஸ் பேக்ஸ் வெச்சா அப்படியே காசு கொட்டும் பாருங்க, சிஸ்க்த் சென்ஸை யூஸ் பண்ணுங்கப்பா என கடுப்படிக்காதீங்க. ஒவ்வொருவருக்குமான விருப்பங்களும், எதிர்பார்ப்புகளும் தனித்தனியானவை. தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனி மரம் தான்னு சொல்லுவாங்க இல்லையா அது மாதிரி. அடுத்தவர் ரசனையை மதிப்பது முதல் தேவை.

இரண்டாவது, அந்த ரசனைக்கு உங்களால் முடிந்த அளவுக்கு ஊக்கம் ஊட்டுவது. ஓவியக்கார மனைவிக்கு நீங்கள் ஓவியம் சார்ந்த ஏதாவது பரிசுகள் வாங்கிக் கொடுக்கலாம். பொருட்கள் வாங்கிக் குடுக்கலாம். “ஹேய்… அடுத்த வாரம் ஒரு ஓவியக் கண்காட்சி நடக்குது. சேலத்துல. டீட்டெயில்ஸ் எல்லாம் கேட்டு வெச்சுட்டேன். நாம ரெண்டு பேரும் போயிட்டு வரலாமே” என்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுங்கள். புரியாத ஓவியம் பற்றி உங்கள் மனைவி ஒரு லெக்சர் அடித்தால் பொறுமையாய் கேளுங்கள். காதுல ரத்தம் வருது கொஞ்சம் வாயை மூடறியா என சொல்லாதீங்க. ஒவ்வொருவருக்கும் அவரவர் ரசனைகளைப் பகிர்ந்து கொள்வதில் அலாதி இன்பம் இருக்கும் என்பது சர்வதேச உண்மை.

கொஞ்சம் ரிவர்ஸ் கியர் அடித்து உங்களுக்குத் திருமணமான அந்த ஹனிமூன் காலத்துக்குப் போய்ப் பாருங்கள். அல்லது திகட்டத் திகட்டக் காதலித்த காலத்துக்குப் போய்ப் பாருங்கள். “ம்ம்.. அப்புறம்” என்பதையே மூன்று மணி நேரம் மெய்மறந்து கேட்டிருப்பீங்க தானே ? என்ன சமையல், என்ன சாப்பாடு, காலைல பல் விளக்கிட்டியா ? இட்லிக்கு சட்னியா சாம்பாரா என்றெல்லாம் போனில் பேலன்ஸ் தீர்ந்து, அப்படியே பேட்டரியும் தீரும் வரை பேசித் தீர்த்திருப்பீர்கள் தானே ! அப்போ காதுல ரத்தம் வரலையா ? சோ, கொஞ்சம் ரிலாக்ஸ்! அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்பதற்குத் தேவை காதோ, பொறுமையோ அல்ல, அன்பு !

என்ன தான் கட்டம் கட்டி, தாயம் உருட்டி, குண்ட்லியில் பொருத்தம் பார்த்தாலும் ரசனைப் பொருத்தம் பெரும்பாலானவர்களுக்கு செட் ஆகாது. அப்படிப்பட்ட வெவ்வேறு ரசனைகளுடைய இரண்டு பேர் சேர்ந்து வாழும் இடம் தான் குடும்பம். என்னோட ரசனைதான் உனக்கு இருக்கணும், அல்லது என்னோட ரசனைகள் தான் உனக்கும் பிடிக்கணும் என ஒருவர் முரண்டு பிடித்தால் குடும்பத்தில் சிக்கலின் கண்ணி வெடி வெச்சாச்சுன்னு அர்த்தம். ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களிலும் இருவரும் வேறுபடலாம், அடுத்தவர் ரசனைகளை மதிக்கும்போது இருவருமே ஒன்றித்துப் போய்விடுவது வெகு சாத்தியம். இரயில் தண்டவாளத்தின் இரண்டு பாளங்களைப் போல ! முட்டிக் கொள்ளாமல் மோதிக்கொள்ளாமல், அதே நேரம் இணைந்து பயணிப்பதே வாழ்வின் வெற்றி.

ஒரு டி.வி பாப்பதில் இருந்தே அந்த ரசனை வேறுபாட்டை நீங்க பாப்பீங்க. அஞ்சு நாள் டெஸ்ட் மேச்சை ஃபெவிகால் போட்டு ஒட்டினமாதிரி பாத்துட்டே இருப்பீங்க, ஏங்க அந்த தென்றல் சீரியலை கொஞ்சம் போடுங்களேன் ன்னு மனைவி கேட்டா, “ஆமா.. இந்த சீரியல்ஸ் தான் சீரியல் கில்லர்ஸ். இதனாலதான் குடும்பங்கள் கெட்டுப் போவுது. கலாச்சாரம் பாழாகுது. ” என சட்டென ரிமோட்டையே மைக்கா மாற்றி பேச ஆரம்பிக்காதீங்க. சரி நீ பாரு என புன்னகையுடன் ரிமோட் கொடுப்பதில் இருக்கிறது உங்கள் அன்பின் வெளிப்பாடு.

புடிச்ச நடிகன், புடிச்ச நடிகை, புடிச்ச பாடல், புடிச்ச எழுத்தாளர், புடிச்ச நிறம், புடிச்ச டிரஸ் என இந்த புடிச்ச விஷயங்கள் ரெண்டு பேருக்கும் ஒண்ணா இருக்கணும்ன்னு அவசியமே இல்லை. ஆனால் அடுத்தவங்களுக்குப் புடிச்ச விஷயத்தை ஓவரா விமர்சிக்காமல் இருக்கப் பழகணும். அஜித் – விஜய், ரஹ்மான் – இளையராஜா என எதிர் எதிர் ரசனைகள் வீட்ல இருக்கிறது ரொம்ப ரொம்ப சகஜம், ஆனால் அதெல்லாம் தனிமனித சின்னச் சின்ன விருப்பங்கள், ரசனைகள் என்று புரிந்து கொள்ளவேண்டும்.

ஒருவேளை ஒரு ரசனை குடும்பத்தின் நிம்மதியையோ, எதிர்காலத்தையோ பாதிக்குமெனில் அதை கணவன் மனைவி இருவரும் பொறுமையாய், தகவல்களுடன் விவாதித்துக் கொள்வதே நல்லது. உதாரணமா, “திருடுறது எனக்கு ஒரு ஹாபி” என கணவன் சொன்னால் “அப்படியா.. சூப்பர், வாங்க திருடலாம்” என மனைவி சொல்லக் கூடாது ! அத்தகைய விபரீத சூழல்கள் தவிர்த்த விஷயங்களில் இருவருமே வேறுபட்ட சிந்தனைகளுடன் இணைந்து பயணிக்க வேண்டியதும் அவசியம்.

அடுத்த நபருடைய விருப்பங்கள், வேலைகள், பணிகள், செயல்கள், ரசனைகள் குறித்துப் பேசுவது, விசாரிப்பது எல்லாம் ரொம்ப நல்ல விஷயம். “உன்னோட டிராயிங் ரொம்ப நல்லா இருந்துச்சு. போன வாரம் ஒரு டிராயிங் பண்ணிட்டிருந்தியே என்னாச்சு” போன்ற சின்னச் சின்ன விசாரிப்புகள் உறவை வலுப்படுத்தும். ஓ, நீ மியூசிக் போட்டுட்டு இருக்கியா, நான் டி வி வால்யூம் கம்மி பண்ணிக்கிறேன் என்பன போன்ற கரிசனைகள் முக்கியம்.

கணவனுக்கும் மனைவிக்கும் ஒரே போன்ற ரசனைகள் அமைந்தால் சிக்கல்கள் பெருமளவில் குறைந்து விடும். ஆனால் அது அமைவது கடினம். அப்படியே அமைந்தாலும் சிக்கல்கள் எழாது என்று சொல்வதற்கில்லை. “நீ என்ன கவிதை எழுதியிருக்கே, நான் எழுதினது தான் கவிதை” என கவித் தம்பதியர் சண்டை போட சாத்தியம் இருக்கு தானே !

ஒருவருடைய விருப்பத்தைப் பற்றி இன்னொருவர் பேசும்போது அது உப்பு சப்பற்ற விசாரிப்பாய் இல்லாமல் ஒரு நல்ல ஆரோக்கியமான விவாதம் அல்லது விமர்சனமாய் இருப்பது ரொம்ப நல்லது. “நீ குடுத்த காஃபி நல்லா இருந்துச்சு என்று சொல்லும் முன்னாடி, குடிச்சது காபியா டீயா என்பது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். ஓவியத்துல எனக்குத் தெரிஞ்சு மாளவிகா ஷருகாய் தான் பெஸ்ட் என்று சொல்லும் முன் மாளவிகா ஓவியல் அல்ல நாட்டியம் சார்ந்தவர் என்பதாவது தெரிஞ்சிருந்தா நல்லது. கொஞ்சம் கொஞ்சம் விஷயங்களைப் புரிந்துகொண்டு, தெரிந்து கொண்டு பேசுவது உறவின் இறுக்கத்தை நிச்சயம் அதிகரிக்கும்.

ரசனைகள் தனித்தனியே இருந்தாலும் அவற்றை இருவருமே பகிர்ந்து கொள்ளும்போதும், அதைக்ககுறித்து சிலாகிக்கும் போதும், அது குறித்துப் பேசும்போதும் கணவன் மனைவி உரையாடல் அதிகரிக்கும். அது உறவை வலுப்படுத்தும். இன்னும் சொல்லப்போனால் வேறு வேறு ரசனைகள் உங்களை ரொம்பவே இறுக்கமாக்க உதவும் ! உங்கள் தனிப்பட்ட ஹாபிக்கள் உங்களுடைய குடும்ப நேரத்தை திருடிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களுடைய கடமை !

ஒருவேளை கணவன் மனைவிக்கு ஆன்மீகத்தில் கூட வேறுபட்ட சிந்தனைகள் நம்பிக்கைகள் இருக்கலாம். அது உங்களுக்கு கொஞ்சம் கூட உடன்பாடற்ற ஒரு விஷயமாய் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழல்களில் அந்த விஷயத்தைக் குறித்து ஆக்ரோஷமாய் விவாதிப்பது, குத்திப் பேசிக் காயப்படுத்துவது போன்றவற்றை நிச்சயம் விலக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கை உங்களுடைய ஆன்மீகத்தின் வெளிச்சத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொள்ளுங்கள்.

கிரிக்கெட்டில் ஒரு அணி தோற்கும்போதெல்லாம் கேப்டனோ, பயிற்சியாளரோ ஒரு வாக்கியத்தைச் சொல்வார்கள். “வி ஆர் கோயிங் டு ஃபோகஸ் ஆன் த பேஸிக்ஸ்” !! எளிய உண்மை அது ! அடிப்படையான சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்துவது தான் அணியின் வெற்றிக்கும், குடும்பத்தின் வெற்றிக்கும் தேவை. அவை இல்லாமல் பெரிய பெரிய விஷயங்கள் சாத்தியமில்லை. தொலைவில் இருக்கும் சிகரத்தை அடைய, பாதத்துக்கு முன்னால் இருக்கும் பள்ளத்தை முதலில் சரி செய்ய வேண்டும். காலில் முள் தைத்தவன் பாதமெங்கும் வலி என்பான். முள்ளை அகற்றிவிட்டால் வலி நீங்கி வழி பிறக்கும்.

சுருக்கமாக, தம்பதியரின் ரசனை என்பது தனிப்பட்ட விஷயம். அதை மதியுங்கள். ஊக்குவியுங்கள். அதைப் பற்றிப் பேசுங்கள். அது குறித்த ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உறவு வலுப்படும்

*

 

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 1

நேரம் !!!!

 

kvr1

நம்பினால் நம்புங்கள், கணவன் மனைவியரிடையே உள்ள பிரச்சினைகளின் மையம் இந்த விஷயம் தான். “எனக்காக அவரு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறாரு” !

ஆண்களுடைய விருப்பங்களும் பெண்களுடைய விருப்பங்களும் தனித்தனியானவை. ஆண்களுக்கு கிரிக்கெட் மோகம் இருக்கும் போது, பெண்களுக்கு சீரியல் மோகம் இருக்கும். ஆண்கள் தூங்கி ஓய்வெடுக்க விரும்பும் போது பெண்கள் பேசிக்கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் அலர்ஜியாய் இருக்கும். பெண்களுக்கோ அது தான் எனர்ஜியாய் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கின்ற ரசனைகள் ஒரு கூரையின் கீழ் வந்து சேர்வது தானே குடும்பம் ! இந்த இடத்தில் ரசனைகள் முட்டிக் கொள்ளாமல் எப்படி இணைந்து பயணிக்கின்றன என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

“அவருக்கென்ன, ஆபீஸே கதின்னு கட்டிகிட்டு அழுவாரு”  என மனைவி புலம்பினால் உடனே எகிறிக் குதிக்காதீங்க. ஒரு நிமிடம் அப்படியே நின்று நிதானித்துப் பாருங்கள். உண்மையில் எனது நேரத்தில் எத்தனை சதவீதம் வேலைக்காய் அல்லது வேலை சார்ந்த விஷயங்களுக்காய் செலவிடுகிறேன். அந்தப் பட்டியல் உண்மையானதாய் இருக்கணும். நீங்க வீட்டில் உட்கார்ந்து செல்போனில் ரெண்டு மணி நேரம் ஆபீஸ் விஷயங்களை அரட்டையடிக்கிறது கூட இந்த பட்டியல்ல தான் வரணும். !

இப்போ அப்படியே மனைவியர் ஒரு நிமிஷம் யோசிங்க. உங்களுடைய நேரத்தில் கணவனுக்காக ஸ்பெஷலாய் நீங்கள் ஒதுக்கும் நேரம் எவ்வளவு ? சீரியல் பார்ப்பது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, குழந்தைகளைக் கவனிப்பது எனும் விஷயங்களைத் தாண்டியும் நீங்கள் கணவனோடு நேரம் செலவிடுகிறீர்களா என்பது ஒரு குட்டிக் கேள்வி.

எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம் ஒன்றுண்டு ! செலவிடும் நேரம் “குவாலிடி டைம்” ஆக இருக்க வேண்டும். அரை மணி நேரம் ரெண்டு பேரும் பேச உக்கார்ந்து குற்றம் சொல்ல ஆரம்பித்தால் எல்லாம் போச்சு. கிடைக்கிற அந்த அரை மணி நேரத்தை எப்படி ஒரு அற்புத நேரமாய் செலவிடுகிறீர்கள் என்பதில் ரொம்பவே கவனமாய் இருங்கள். ஒரு ஐந்து நிமிட உரையாடல் கூட உங்களுடைய ஒரு நாளை ஆனந்தமாக வைத்திருக்க முடியும். ஒரு நிமிட சண்டை கூட உங்களுடைய ஒரு வார கால நிம்மதியை புதைகுழிக்குள் போட்டு மிதிக்கவும் முடியும்.

கணவனும் மனைவியும் மாறி மாறிக் குற்றம் சொல்லத் தொடங்கினால், தோற்றுப் போவது கணவனுமல்ல, மனைவியுமல்ல, தாம்பத்யம் தான். ஒரு ஸ்பெஷல் நேரத்துக்காக ஒரு சீரியலை கட் செய்வதோ, ஐ.பி.எல் மேட்சை ஆஃப் பண்ணி வைப்பதோ தாம்பத்யத்தைத் தழைக்க வைக்கும் !

ரெண்டு பேருக்குமே ஒரு குறிப்பிட்ட நேரம் ஃபிரீயா இருக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் ஒருவர் அட்ஜஸ்ட் செய்து கொள்வது நல்ல பழக்கம். அது ஏதோ ஒரு தியாகம் மாதிரி, “உனக்காக என் வேலையை விட்டுட்டு வந்திருக்கேன். இப்போ பேசு” என சொன்னால் எல்லாம் போச்சு. விட்டுக் கொடுத்தலின் முக்கிய அம்சமே, தான் விட்டுக் கொடுத்தது அடுத்த நபருக்குத் தெரியாமல் இருப்பது தான். அதில் தான் உண்மையான அன்பு ஒளிந்து  இருக்கிறது !

அதை விட்டு விட்டு, “நான் பிரியா இருக்கும்போ நீ பிஸியாயிடறே, நான் பிஸியா இருக்கும்போ நீ ஃபிரீ ஆயிடறே” அப்புறம் எப்போ பேசறதாம் ? என புலம்புவதிலும் அர்த்தம் இல்லை.

கணவன் மனைவி இணைந்து அதிக நேரத்தைச் செலவிட்டால் அந்த குடும்பங்கள் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குடும்ப இயலின் பால பாடம் ! அத்தகைய தம்பதியருக்கு வருகின்ற சிக்கல்களெல்லாம் விரைவிலேயே மறைந்து விடுகின்றன. சந்தேகம் இருந்தால் உங்கள் தாத்தா, பாட்டிகளிடம் கேட்டுப் பாருங்கள். எப்போதும் சுற்றிச் சுற்றி வரும் அன்யோன்யமும், சேர்ந்தே ஊட்டி, உண்டு, சிரித்துக் களிக்கும் மாலைப் பொழுதுகளும் தங்களையறியாமலேயே குடும்ப வாழ்க்கையை எத்தனை ஆரோக்கியப் படுத்தியிருக்கின்றன என்பதை !
கணவன் மனைவி சேர்ந்து செலவிட எப்படி டைம் கண்டு பிடிப்பது ? அல்லது நேரத்தை எப்படி உருவாக்குவது ? அதற்கு சில வழி முறைகள் உண்டு.

1. இருவருக்குமே பிடித்தமான ஒரு பொதுவான ஹாபி, அல்லது விருப்பத்தை வைத்துக் கொள்ளுங்கள். சேர்ந்து நேரம் செலவிட இது ஒரு அற்புதமான வழி. அது விடிகாலை ஜாகிங் ஆனாலும் சரி, தோட்டத்தைப் பராமரித்தல் ஆனாலும் சரி, அல்லது இசை, நடனம் எதுவானாலும் சரி, இணைந்தே பயணிக்கும் ஒரு ஹாபி இருவரையும் வெகுவாக இணைக்கும். சேர்ந்து செலவிடும் நேரத்தை உருவாக்கிக் கொடுக்கும் !

2. ஏதோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை இருவரும் பேசுவதற்காய் ஒதுக்குங்கள். அது காலையில் காஃபி போடும் நேரமானாலும் சரி, மாலையில் ஓய்வாய் இருக்கும் நேரமானாலும் சரி. உங்கள் வேலைக்குத் தக்கபடி ஒரு நேரத்தை ஒதுக்கிப் பாருங்கள். அந்த நேரத்தை உங்கள் மனம் திறந்த பகிர்தலுக்காய் ஒதுக்குங்கள். நிச்சயம் உறவு வலுப்படும்.

3. இணைந்தே பிரார்த்தனை செய்கிறீர்களா ? உங்கள் வாழ்க்கை வலுப்படும் என்பதில் ஐயமில்லை. இறைவனுக்கு முதலிடம் தரும் இல்லங்களில் ஈகோ விலகி விடுகிறது, விட்டுக் கொடுத்தலும், மன்னித்தலும் தவழ்கிறது அதனால் குடும்ப உறவு ஆழமும், அர்த்தமும் அடைகிறது. இணைந்தே பிரார்த்தனை செய்வதும், அடுத்தவருக்காய் பிரார்த்தனை செய்வதும் உறவை வலுப்படச் செய்யும் விஷயங்கள்.

4. மனைவியோ, கணவனோ ஒரு வேலை செய்யும் போது அந்த வேலையைப் பகிர்ந்து செய்யுங்கள். அப்போது ஒரே இடத்தில் ஒரே வேலையைச் செய்யும் போது இருவருமே இணைந்து கொஞ்சம் நேரத்தைச் செலவிடும் சூழல் தோன்றும். அது வேலையைத் தாண்டி சுவாரஸ்யத்தை அதிகரிக்கும் !

5. எல்லா வேலையையும் செய்து முடிச்சப்புறம் தான் குடும்பம், எனும் அக்மார்க் மடத்தனத்தைச் செய்யவே செய்யாதீர்கள். உங்கள் பட்டியலில் குடும்பத்துக்காக நேரம் செலவிடுதல் டாப் 2 க்குள் நிச்சயம் இருக்கட்டும்.

6. இது தொழில்நுட்ப யுகம், சோசியல் நெட்வர்க் காலம். உங்கள் போனிலும், கம்ப்யூட்டரிலும் உள்ள இணையத்தை எட்டிப் பார்க்காமல் இருந்தாலே போதும் கொஞ்சம் நேரத்தை நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணைக்காக உருவாக்கி விட முடியும் ! சந்தேகம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள்.

7. மாலையில் செய்ய வேண்டிய சில வேலைகளை விடியற்காலையில் முடித்து விட முடியுமா என பாருங்கள். அந்த நேரத்தில் நீங்கள் முக்கியமான சில அலுவல்களை முடித்தால் மாலை நேரம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும், குடும்பத்தினருடன் பேசவும் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தரும்.

8. யார் என்ன கேட்டாலும், “ஓகே…” என தலையாட்டும் பழக்கத்தைக் கடாசுங்கள். குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தை தேவையற்ற கமிட்மென்ட்களுக்காக கை கழுவி விடாதீர்கள். மிக முக்கியமான விஷயங்கள் தவிர மற்றவையெல்லாம் “சாரி.. நோ…” எனும் உங்கள் பதிலுடன் விடைபெறட்டும் !

9. தனியே செலவிடும் நேரங்களை சும்மா சினிமா பாக்கவோ, சீரியல் பாக்கவோ செலவிடாதீர்கள். அது ஒருவகையில் தோப்பிலே இருந்தாலும் ஒவ்வொரு மரமும் தனிமரம் தான் – கதை தான். அதை விட, சேர்ந்து நடப்பது, பேசுவது, ஒரு புதிர் விளையாட்டு விளையாடுவது, கேரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவது என செலவிட முயலுங்கள்.

10. மனைவிகள் அன்பானவர்கள். நீங்கள் அவர்களுடன் பேசிக்கொண்டே இருக்காவிட்டால் கூட வீட்டில் இருக்கிறீர்கள் எனும் உணர்வே அவர்களுக்கு நிம்மதியையும், பாதுகாப்பையும், நிறைவையும் தருவதுண்டு. எனவே தேவையற்ற நண்பர் சகவாசங்களைக் குறைத்து வார இறுதிகளிலெல்லாம் வீட்டிலேயே இருங்கள்.

டைம் இல்லை என்பதெல்லாம் அக்மார்க் பொய். எல்லோருக்கும் 24 மணி நேரம் தான் உண்டு. அதை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பது தான் முக்கியம். அதில் எவ்வளவு மணி நேரம் உங்கள் மனைவிக்காகவோ, கணவனுக்காகவோ ஆனந்தமாய்ச் செலவிடுகிறீர்கள் என்பது தான் கேள்வி !

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், அழுத்தமாக. உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நேரம் ஒதுக்குங்கள், அது ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை.