பைபிள் மாந்தர்கள் 61 (தினத்தந்தி) எரேமியா

“கடவுள் சொல்கிறார்… ஞானி தன் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம்! வலிமை மிக்கவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமைப் பாராட்ட வேண்டாம்! செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப் பெருமைப் பாராட்ட வேண்டாம்.” ‍ எரேமியா ( 9:23 )

பைபிளில் வரும் இறைவாக்கினர்களில் எரேமியா மிகவும் முக்கியமானவர். எபிரேய மொழியில் இவரது நூல் “யர்மியாஹூ” என அழைக்கப்படுகிறது. கடவுள் உயர்த்துகிறார் என்பது இதன் பொருள். இந்த நூல் கிமு 580ல் எழுதி முடிக்கப்பட்டதாய் வரலாறு கூறுகிறது.

பென்யமின் நாட்டுக் குருக்களில் ஒருவரான இலிக்கியா என்பவரின் மகன் தான் இந்த எரேமியா. எருசலேமிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அனத்தோத் என்பது தான் இவருடைய பிறந்த ஊர்.

யூதாவின் பதினாறாவது மன்னனாகிய யோசியா ஆட்சிப் பொறுப்பேற்று பதிமூன்று ஆண்டுகள் கடந்திருந்த போது எரேமியாவின் பணி வாழ்க்கை ஆரம்பமானது. எரேமியா மிகவும் மென்மையான மனம் படைத்தவர். ஆனால் கடவுள் இவருக்கு இட்ட பணியோ, கடுமையான கடவுளின் எச்சரிக்கைகளையும், அழிவின் முன்னறிவிப்புகளையும் மக்களுக்கு எடுத்துக் கூறுவது. திருமணம் செய்யக் கூடாது, அடுத்தவர்களுடைய மகிழ்ச்சியிலோ துக்கத்திலோ ஒன்றிணையக் கூடாது என கடவுள் அவருக்கு சிறப்புக் கட்டளையிட்டபடியால், தனிமையாகவே வாழ்ந்தார்.

ஒவ்வொருவரும் அவரவர் பாவத்தை அவரவரே தீர்க்க வேண்டும். மீட்பின் அனுபவம் தனித்தனி நபர்களுக்கே இருக்க வேண்டும் என்பதை  “எல்லாரும் அவரவர் தம் தீச்செயலின் பொருட்டே சாவர். புளித்த திராட்சைப் பழம் தின்பவனுக்குத்தான் பல் கூசும்” என்று அப்போதே கடவுள் எரேமியாவின் வாயிலாக அழகாகச் சொன்னார். மக்கள் மேல் அதிக அக்கறையும், பாசமும், நெகிழ்வும் கொண்டிருந்ததால் இவர் அழுகையில் தீர்க்கத்தரிசி என அழைக்கப்பட்டார்.

நாட்டு ம‌க்க‌ள் உண்மையான‌ ம‌ன‌ந்திரும்ப‌லைக் கொண்டிருக்க‌ வேண்டும் என‌வும், இல்லையேல் அழிவு அவ‌ர்க‌ளை வ‌ந்து சேரும் என்ப‌தையும் இவ‌ர் தீர்க்க‌த்த‌ரிச‌ன‌மாய் மீண்டும் மீண்டும் கூறினார்.

எரேமியா நூல் பைபிளில் மிக‌வும் முக்கிய‌மான‌ ஒரு நூல். இதை எரேமியா சொல்ல‌ச் சொல்ல‌, அவ‌ருடைய‌ உத‌வியாள‌ர் பாரூக் எழுதினார். பாரூக் ஒரு அருமையான மனிதர். செல்வம் மிகுந்தவர். அரசவையோடு நல்ல நெருக்கமான தொடர்பில் இருந்தவர். விரும்பினால் எத்தனை உயரிய அரச பதவியையும் அடைந்து விடும் வாய்ப்பும் அவருக்கு இருந்தது. ஆனால் அதையெல்லாம் உதாசீனம் செய்து விட்டு எரேமியாவுடன் சேர்ந்து இறை பணிசெய்வதையே விரும்பினார்.

எரேமியா மூலம் எழும் இறைவனின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் மனிதனாகவும் பாரூக் இருந்தார். இதனால் மன்னர் யோயாக்கீமின் கோபப் பார்வைக்குள் விழுந்தார். ம‌ன்ன‌ன் பாரூக்கைச் சிறையில் அடைத்து, அவர் எழுதியிருந்தவற்றையெல்லாம் அழித்தான். ஆனாலும் க‌ட‌வுளின் ஆவியான‌வ‌ர் அந்த‌ நூலை ம‌றுப‌டியும் முத‌லில் இருந்து எழுத‌ வைத்தார்.

“நீ ஒரு நார்ப்ப‌ட்டாலான‌ ஒரு க‌ச்சையை வாங்கிக் கொள்” க‌ட‌வுள் சொல்ல‌ எரேமியா அப்ப‌டியே செய்தார்.

“இந்த‌ க‌ச்சையை ந‌னைக்காதே, உன் இடையிலேயே இருக்க‌ட்டும்” க‌ட‌வுள் சொல்ல‌, எரேமியா ஒத்துக் கொண்டார்.

“ச‌ரி, இப்போது அந்த‌ க‌ச்சையை எடுத்துக் கொண்டு போய் பேராத்து ஆற்றின் பாறை இடுக்கில் ம‌றைத்து வை” எனும் குர‌ல் வ‌ந்த‌போது அப்ப‌டியே செய்தார். நாட்க‌ள் கட‌ந்த‌ன‌. ஒருநாள் க‌ட‌வுள் மீண்டும் கூப்பிட்டார்.

“இப்போது அந்த‌ க‌ச்சையை எடுத்து வா”. எரேமியா சென்று அதை எடுத்துப் பார்த்தார். அது நைந்து உப‌யோக‌மில்லாம‌ல் இருந்த‌து.

“இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன்.என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப்பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்” என்றார் க‌ட‌வுள். இப்ப‌டி ப‌ல்வேறு அழ‌கிய‌ உவ‌மைக‌ள் எரேமியாவின் நூலில் காண‌க் கிடைக்கின்ற‌ன‌.

இயேசு கிறிஸ்துவைப் ப‌ற்றிய‌ இறைவாக்கு உரைத்ததில் இவ‌ர் ஏசாயா வைப் போல‌வே புக‌ழ் பெற்றார். ந‌ல்ல‌ மேய்ப்ப‌ராக‌வும், தாவீதின் கிளையாக‌வும் இவ‌ர் இயேசு கிறிஸ்துவைத் த‌ன‌து இறைவாக்கினால் முன்மொழிந்தார்.

கிறிஸ்தவ இறைவாக்கினர்களின் வரிசையில் மிகவும் வலுவானவராக வாழ்ந்த எரேமியா கல்லெறிந்து கொல்லப்பட்டார் எனவும், எகிப்திலிருந்து பாபிலோன் சென்று அங்கே மரணித்திருக்கலாம் எனவும் இரு விதமான கருத்துகள் நிலவுகின்றன.

“என்னிடம் மன்றாடு: உனக்கு நான் செவிசாய்ப்பேன்: நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன்” என‌ எரேமியா வ‌ழியாய் க‌ட‌வுள் பேசினார்.

ந‌மது உலகத் தேவைகளுக்காகவும், ஆன்மீகத் தேவைகளுக்காகவும்  இறைவனையே முழுக்க முழுக்க‌ சார்ந்திருப்போம். இறைய‌ர‌சின் ம‌றை பொருட்க‌ளை ந‌ம‌க்கு விள‌க்கி, ந‌ம‌து வாழ்க்கையை இறைவ‌னுக்கு ஏற்புடைய‌தாக‌ மாற்ற‌ அவ‌ர் ந‌ம‌க்கு அருள் செய்வார்.

பைபிள் மாந்தர்கள் 60 (தினத்தந்தி) யோபு

ஊசு எனும் நாட்டில் ஆனந்தமாகவும் செல்வச் செழிப்போடும் வாழ்ந்து வந்தான் நீதிமானும், பக்திமானுமான யோபு. ஏழு மகன்கள், மூன்று மகள்கள், ஏழாயிரம் ஆடுகள், மூவாயிரம் ஒட்டகங்கள், ஐநூறு ஏர் காளைகள், ஐநூறு பெண் கழுதைகள், ஏகப்பட்ட வேலைக்காரர்கள் என பெரிய செல்வந்தராய் இருந்தார்.

சாத்தான் கடவுள் முன் வந்து நின்றான்.

‘எங்கிருந்து வருகிறாய்’ கடவுள் கேட்டார்.

‘உலகைச் சுற்றி உலவி வருகிறேன்’ .

‘பார்த்தாயா .. என் ஊழியன் யோபுவைப் பார்த்தாயா. எத்தனை நீதிமான், இவனைப் போல உலகில் வேறு யாருமே இல்லை’

‘சும்மாவா ? அவனுக்கு எல்லா செல்வ‌மும் கொடுத்திருக்கிறீர், அவ‌ற்றை பெருக‌ச் செய்கிறீர், பாதுகாக்கிறீர். அத‌னால் அவ‌ன் இப்ப‌டி இருக்கிறான். அவ‌ற்றை அழித்துப் பாரும். உம்மை அவ‌ன் ப‌ழிப்பான்’

‘ச‌ரி.. அவ‌னுக்குரிய‌தெல்லாம் உன் கையில். ஆனால் அவ‌னை ம‌ட்டும் ஒன்றும் செய்யாதே’ கட‌வுள் சொல்ல‌ சாத்தான் புற‌ப்ப‌ட்டான்.

அப்போது யோபு த‌னியே இருந்தார். அவ‌ர‌து பிள்ளைக‌ள் எல்லோரும் மூத்த‌ ம‌க‌ன் வீட்டில் உண‌வ‌ருந்தி ம‌கிழ்ச்சியாய் இருந்த‌ன‌ர்.

அப்போது ஒருவ‌ன் ஓடி வ‌ந்தான். ‘ஐயா.. ந‌ம‌து எருதுக‌ளையும், க‌ழுதைக‌ளையும் எதிரிக‌ள் கைப்ப‌ற்றின‌ர். வேலையாட்க‌ளைக் கொன்று விட்ட‌னர், நான் மட்டுமே தப்பினேன் என்றான்.

அப்போது இன்னொருவ‌ன் ஓடி வ‌ந்தான்,’ ஐயா..க‌ட‌வுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து ஆடுக‌ளையும் வேலையாட்க‌ளையும் சுட்டெரித்து விட்ட‌து, நான் ம‌ட்டுமே த‌ப்பினேன்’ என்றான்.

‘த‌லைவ‌ரே.. ஒட்ட‌க‌ங்க‌ளைக் க‌ல்தேய‌ர் கைப்ப‌ற்றி விட்ட‌ன‌ர். ஊழிய‌ர்க‌ளைக் கொன்ற‌ன‌ர். நான் ம‌ட்டுமே த‌ப்பினேன்’ என்றான் ஓடி வந்த வேறொருவன்.

அப்போது இன்னொருவ‌ன் ஓடி வ‌ந்து, ‘ த‌லைவ‌ரே. பெரும் பாலைக்காற்று திடீரென‌ வீசிய‌தில் உம‌து புத‌ல்வ‌ரும், புத‌ல்விய‌ரும் இருந்த‌ வீடு விழுந்து அழிந்த‌து. எல்லோரும் மாண்ட‌ன‌ர். நான் ம‌ட்டுமே த‌ப்பினேன்’ என்றான்.

அடுத்தடுத்து வந்த இடி போன்ற செய்திகளால் யோபு அதிர்ந்தார். யோபு அதிர்ந்தார்.க‌ல‌ங்கினார். ஆடைக‌ளைக் கிழித்துக் கொண்டார்.

” என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியானாய் யான் வந்தேன்: அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்: ஆண்டவர் அளித்தார்: ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக” என்றார். க‌ட‌வுளைப் ப‌ழிக்க‌வேயில்லை.

ஆண்ட‌வ‌ர் சாத்தானிட‌ம் ‘பார்த்தாயா யோபுவை’ என்றார்.

‘இதென்ன பெரிய இழப்பு. அவ‌னுடைய‌ எலும்பு, ச‌தை மீது கையை வைத்துப் பாரும். அவ‌ன் உம்மைப் ப‌ழித்துரைப்ப‌து உறுதி’ சாத்தான் சொன்னன்.

‘அப்ப‌டியே செய். அவ‌ன் உயிரை தொடாதே’க‌ட‌வுள் அனும‌தித்தார்.

சாத்தான் யோபுவுக்கு உச்ச‌ந்த‌லை முத‌ல் உள்ள‌ங்கால்வ‌ரை எரியும் புண்க‌ளைக் கொடுத்தான். ஓடொன்றை எடுத்து த‌ம்மைச் சொறிந்து கொண்டே சாம்ப‌லில் உட்கார்ந்தார் யோபு.

யோபுவின் நில‌மையைப் பார்த்து யோபுவின் ம‌னைவிக்கே பொறுக்க‌வில்லை.

‘இன்னுமா மாசின்மையில் இருக்கிறாய். க‌ட‌வுளைப் ப‌ழித்து மடிந்து போவும்’ என்றாள்.

யோபுவோ, ‘க‌ட‌வுளிட‌மிருந்து ந‌ன்மையைப் பெற்ற‌ நாம், தீமையைப் பெற‌க் கூடாதா’ என்றார். க‌ட‌வுளைப் ப‌ழிக்க‌வேயில்லை.

அப்போது அவ‌ருடைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் மூன்று பேர் அவ‌ரைக் காண‌ வ‌ந்த‌ன‌ர்.

அந்த‌ மூன்று ந‌ப‌ர்க‌ளும் யோபுவின் ந‌ம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் வார்த்தைக‌ளைப் பேசினார்க‌ள். அவ‌ருடைய‌ நில‌மைக்குக் கார‌ண‌ம் பாவ‌மாய் இருக்குமோ என‌ பேசினார்க‌ள். யோபு த‌ன‌து பிற‌ந்த‌ நாளைப் ப‌ழித்தார். ஆனாலும் க‌ட‌வுளை அவ‌ர் ப‌ழிக்க‌வோ, இழிவாய்ப் பேச‌வோ இல்லை.

ஆனால் க‌ட‌வுளை நோக்கி க‌சிந்துருகி ம‌ன்றாடினார்.

“உம் கையினின்று என்னைத் தப்புவிப்பவர் ஒருவருமில்லை. என்னை வனைந்து வடிவமைத்து உண்டாக்கின உம் கைகள்: இருப்பினும், நீரே என்னை அழிக்கின்றீர். தயைகூர்ந்து நினைத்துப் பாரும்! களிமண்போல் என்னை வனைந்தீர்: அந்த மண்ணுக்கே என்னைத் திரும்பச் செய்வீரோ? பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா? தயிர்போல் என்னை நீர் உறைக்கவில்லையா” என‌ க‌த‌றினார்.

க‌ட‌வுள் யோபுவை மீண்டும் ஆசீர்வ‌தித்தார். முன்பு இருந்த‌தை விட‌ இர‌ண்டு ம‌ட‌ங்கு செல்வ‌த்தை அவ‌ருக்கு அளித்தார். அவ‌ருக்கு ஏழு புத‌ல்வ‌ர்க‌ளும் மூன்று புத‌ல்விய‌ரும் பிற‌ந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் உல‌க‌ அழ‌கிய‌ர் போல‌ இருந்த‌ன‌ர்.

க‌ட‌வுள் அவ‌ருடைய‌ ஆயுளையும் நீட்டித்தார். அத‌ன் பின்பு யோபு நூற்று நாற்ப‌து ஆண்டுக‌ள் வாழ்ந்து த‌ன‌து நான்காம் த‌லைமுறைவ‌ரை க‌ண்டுக‌ளித்தார்.

ம‌ன‌த‌ள‌வில் தூய்மையாய் இருத்த‌ல், பொருளாசை இல்லாம‌ல் இருத்த‌ல், இறைவ‌னை இறுதிவ‌ரை உறுதியாய்ப் ப‌ற்றிக் கொண்டிருத்த‌ல் போன்ற‌வ‌ற்றை யோபுவின் வாழ்க்கை ந‌ம‌க்கு க‌ற்றுத் த‌ருகிற‌து.

“சாத்தான் உல‌கைச் சுற்றிக் கொண்டிருப்பான், ந‌ம்மைப் ப‌ற்றி முழுமையாய் அறிந்திருப்பான் என்ப‌வை ந‌ம‌க்கு எச்ச‌ரிக்கையைக் க‌ற்றுத் த‌ருகின்ற‌ன‌. எனினும், க‌ட‌வுளின் அனும‌தியின்றி இறைம‌க்க‌ளை சாத்தான் எதுவும் செய்து விட‌ முடியாது என்ப‌தும், ந‌ம‌து தாங்கும் திற‌மைக்கேற்ப‌வே கடவுள் ந‌ம்மைச் சோதிப்பார் என்ப‌தும் ந‌ம‌க்கு அதீத‌ ஊக்க‌ம் த‌ருகிற‌து !

*

பைபிள் மாந்தர்கள் 59 (தினத்தந்தி) எஸ்தர்

  1. எஸ்தர்

மன்னர் அகஸ்வேர் சூசான் தலைநகரில் இருந்தார். தன் குறுநில மன்னர்கள், உயர் அதிகாரிகள்,பாரசீகத் தலைவர்கள் அனைவரையும் அழைத்து நூற்று எண்பது நாட்கள் விருந்து வைத்தார். பின்னர் ஒருவாரம் பொதுமக்களுக்கும் விருந்து வைத்தார்.

“அரசி வஸ்தியை அலங்காரம் செய்து அழைத்து வாருங்கள். மக்கள் அவள் எழிலைக் காணட்டும்” மன்னன் ஆணையிட்டான்.

வஸ்தி மறுத்தாள். அரசன் திகைத்தான்.

‘அரசே.. உமது கட்டளையை உமது மனைவி நிறைவேற்றாவிட்டால் நாட்டில் வாழும் எந்தப் பெண்ணுமே தங்கள் கணவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். வஸ்தியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணமுடியுங்கள். நாட்டில் பெண்கள் எல்லாம் கணவனின் சொல்படி வாழவேண்டும் என கட்டளையிடுங்கள்” தலைவர்கள் சொல்ல, மன்னன் அப்படியே செய்தான்.

நாட்டில் உள்ள அனைத்து கன்னிப் பெண்களும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருத்தி எஸ்தர். எஸ்தர் ஒரு யூதப் பெண். அரண்மனையில் வேலை செய்யும் அவருடைய பெரியப்பா மகன் மொர்தக்காய் என்பவரிடம் வளர்ந்து வந்தாள்.

கன்னிப் பெண்கள் எல்லாரும் ஆறுமாதகாலம் வெள்ளைப் போளத்தாலும், ஆறு மாதகாலம் நறுமணப் பொருட்களாலும் என ஒரு வருடம் அழகுபடுத்தப் பட்டனர்.

அதன் பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக மன்னரின் அந்தப்புரத்திற்குச் செல்வார்கள். மன்னருக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ அவர் அரசியாவார் என்பதே வழிமுறை. எஸ்தரின் முறை வந்தது. எஸ்தரை மன்னனுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. எனவே அவரை மனைவியாக்கிக் கொண்டார்.

ஒருமுறை மன்னரைக் கொல்ல இரண்டு பேர் முயன்றனர். அதைக் கண்டுபிடித்த மொர்தக்காய் அந்த செய்தியை எஸ்தரிடம் சொன்னார். எஸ்தர் மன்னரிடம் சொன்னார். கொலைசெய்ய முயன்றவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். “மன்னரின் உயிரைப் பாதுகாத்தார் மொர்தக்காய்” என அரண்மனைக் குறிப்பேட்டில் எழுதப்பட்டது.

அகஸ்வேர் மன்னன் தனது பணியாளர் ஆகாகியனான ஆமானை அனைத்து அதிகாரிகளுக்கும் மேலான பதவியில் வைத்தார். அவனுக்கு எல்லாரும் வணக்கம் செலுத்துவார்கள், மொர்தக்காயைத் தவிர !

மொர்தக்காய் யூதன் என்பது ஆமானுக்குத் தெரிய வந்தது. இப்போது அவனது எதிரி மொர்தக்காய் என்பது மட்டுமல்லாமல், யூதர்கள் என்றானது.

எனவே நாட்டிலுள்ள யூதர்களையெல்லாம் கொல்ல ஒரு நாள் குறித்து அதை அனைத்து மாநிலங்களின் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தான். செய்தி மொர்தக்காய்க்குத் தெரிந்தது. அவர் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு கடவுளிடம் வேண்டினார்.

எஸ்தர் அரசியிடம் மொர்தக்காய் விஷயத்தைச் சொன்னார். எஸ்தர் கலங்கினார். ஆனாலும் மன்னர் அழைக்காமல் மன்னரின் முன்னால் செல்ல முடியாது என்பதால், யூத மக்கள் அனைவரையும் மூன்று நாள் நோன்பு இருந்து கடவுளிடம் மன்றாடச் சொன்னாள்.

மூன்று நாளுக்குப் பின் எஸ்தர் தைரியமாய் மன்னரின் முன்னால் சென்று நின்றாள்.

‘என்ன வேண்டும்’ மன்னர் கேட்டார்.

” நான் ஏற்பாடு செய்திருக்கும் விருந்துக்கு மன்னரும் ஆமானும் வரவேண்டும் அப்போது  விண்ணப்பத்தைச் சொல்வேன்” எஸ்தர் சொல்ல, மன்னர் ஒத்துக்கொண்டார்.

முதல் நாள் விருந்து முடிந்தது. அடுத்த நாளும் விருந்துக்கு வாருங்கள். என்ன வேண்டும் என்பதை நான் அப்போது சொல்வேன் என்றாள் எஸ்தர். விருந்து முடிந்து வெளியே போன ஆமானை மொர்த்தக்காய் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை.

கோபத்தில் வீடு சென்ற அவனிடம், மனைவி ஒரு குரூர யோசனையைச்  சொன்னாள். அதன் படி மொர்தக்காயைத் தூக்கிலிட ஐம்பது அடி உயரத்தில் ஒரு தூக்கு மரத்தை ஆமான் தயாராக்கினான்.

அன்று இரவு மன்னர் தூக்கம் வராமல் குறிப்பேடு நூலை வாசிக்கத் துவங்கினார். அப்போது மொர்தக்காயின் பெயர் அவருடைய கண்களில் தட்டுப்பட்டது. தன் உயிரைக் காப்பாற்றிய மொர்தக்காய்க்கு மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். மன்னர் ஆமானை அழைத்தார்.

‘நான் ஒருவருக்கு மரியாதை செலுத்த வேண்டும். என்ன செய்யலாம்’

தன்னைத் தான் மரியாதை செலுத்தப் போகிறார் என நினைத்த ஆமான், ” கிரீடம் சூட்டி, மன்னரின் ஆடை உடுத்து, நகர்வலம் கொண்டு வரவேண்டும்” என்றார்.

‘அருமையான யோசனை. அதை மொர்த்தக்காய்க்குச் செய்”‘ என்றார் மன்னர். ஆமான் அதிர்ந்தான். வேறுவழியில்லாமல் அப்படியே செய்தான். மொர்த்தக்காயைப் பார்த்து எல்லோரும் பயப்பட ஆரம்பித்தனர்.

இரண்டாம் நாள் விருந்தில் களித்திருந்த மன்னர் எஸ்தரிடம், ‘இப்போது கேள் என்ன வேண்டும்’ என்று கேட்டார். எஸ்தர் தழுதழுக்கும் குரலில், ‘என்னையும் என் இனத்தையும் கொல்ல நினைக்கிறான் ஒருவன். எனக்கு உயிர்ப்பிச்சை அளியுங்கள்’ என்றாள்.

யாரது ? மன்னன் கோபத்தில் கத்தினார். “இதோ இந்த ஆமான் தான்” என்றாள் அரசி. ஆமான் திடுக்கிட்டான்.

மன்னனின் கோபம் ஆமான் மேல் திரும்பியது. ஆமானைக் கொல்ல‌ ஆணையிட்டார். மொர்தக்காய்க்காக  தயாராக்கி வைத்த தூக்கிலேயே அவன் தொங்கவிடப்பட்டான்.

எஸ்தரின் மூலம் யூத இனம் அழிவிலிருந்து தப்பியது.

பைபிள் மாந்தர்கள் 58 (தினத்தந்தி) நெகேமியா

மன்னர் அர்த்தசஸ்தா அரண்மனையில், மன்னனுக்கு திராட்சை ரசத்தை கிண்ணத்தில் வார்த்துக் கொடுக்கும் வேலை நெகேமியாவுக்கு. அந்த நாட்களில் ‘பானம் பரிமாறுவோர்’ எனும் பணி மிக முக்கியமான பணி.

ஒருநாள் நெகேமியா மன்னரிடம் திராட்சை ரசம் இருந்த கோப்பையை நீட்டினார். நெகேமியாவின் மனம் துயரமடைந்திருந்தது. அதற்கு ஒரு காரணம் உண்டு. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் நெகேமியா. அவருடைய சகோதரர்கள் சிலர் அவரைக் காண வந்திருந்தார்கள். அவர்களிடம் தனது நாடும் மக்களும் எப்படி இருக்கிறார்கள் என நெகேமியா விசாரித்தார். அப்போது அவர்கள் சொன்ன செய்தி தான் அவரை மிகவும் கலக்கமடையச் செய்திருந்தது.

யூதா நாட்டில் இஸ்ரேல் மக்கள் மிகவும் சிறுமைப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர். அவ‌ர்க‌ள் மிக‌வும் புனித‌மாக‌க் க‌ருதும் எருச‌லேமின் ம‌தில் சுவ‌ர் த‌க‌ர்க்க‌ப்ப‌ட்டிருந்த‌து. வாயிற்க‌த‌வுக‌ள் தீக்கிரையாக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. இந்த‌ச் செய்தி தான் நெகேமியாவின் துயர‌த்துக்குக் கார‌ண‌ம். இர‌வெல்லாம் அவ‌ர் க‌ட‌வுளிட‌ம் அழுது புல‌ம்பி ம‌ன்றாடியிருந்தார்.

நெகேமியாவின் முக‌வாட்ட‌ம் ம‌ன்ன‌ருக்குச் ச‌ட்டென‌ புரிந்த‌து.

‘நெகேமியா.. என்னாச்சு ? ஏன் முக‌வாட்ட‌மாய் இருக்கிறாய். பார்த்தால் நோய் மாதிரி தெரிய‌வில்லை. ஏதேனும் ம‌ன‌க் க‌ஷ்ட‌மா ?’ ம‌ன்ன‌ர் கேட்டார்.

“மன்னரே! நீர் நீடூழி வாழ்க! என் மூதாதையரின் கல்லறைகள் இருக்கும் நகர் பாழ்பட்டுக் கிடக்கும்போது, அதன் வாயில்கள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கும் போது, என் முகம் எப்படி வாடாமல் இருக்கும்” நெகேமியா சொன்னார்.

‘உன‌க்கு என்ன‌ வேண்டும் ?’

‘நீர் த‌ய‌வு காட்டினால், அந்த‌ ந‌க‌ரைக் க‌ட்டியெழுப்ப‌ என்னை அனுப்பும்’

‘எத்த‌னை நாட்க‌ளில் திரும்ப‌ வ‌ருவாய் ?” ம‌ன்ன‌ரும், அருகே இருந்த‌ அர‌சியும் கேட்ட‌ன‌ர். நெகேமியா சொன்னார்.

“ச‌ரி…”

“ம‌ன்ன‌ரே… என‌க்கு தேவையான‌ ம‌ர‌ங்க‌ளைக் கொடுத்து உத‌வும். நான் செல்லும் போது என்னை த‌டைசெய்யாம‌ல் இருக்க‌ ஆளுந‌ர்க‌ளுக்கு ம‌ட‌லையும் த‌ந்த‌ருளும்’

‘ச‌ரி.. அப்ப‌டியே ஆக‌ட்டும்’

நெகேமியா ம‌ன‌ம் ம‌கிழ்ந்தார். ம‌ன்ன‌ருக்கு ந‌ன்றி கூறி புற‌ப்ப‌ட்டார். எருச‌லேம் ந‌க‌ருக்கு வ‌ந்தார். அங்குள்ள‌ ம‌க்க‌ளைச் ச‌ந்தித்து ம‌திலைக் க‌ட்டியெழுப்பும் வேலைக்காய் அவ‌ர்க‌ளை த‌யார்ப‌டுத்தினார் நெகேமியா.

அர‌ச‌ அலுவ‌ல‌ர்க‌ள் நெகேமியாவைக் கிண்ட‌ல் செய்த‌ன‌ர். “க‌ல‌க‌ம் செய்ய‌த் திட்ட‌மிடுகிறீர்க‌ளோ?” என‌ மிர‌ட்டின‌ர்.

‘இல்லை.. இங்கே ம‌தில் சுவ‌ர் தான் க‌ட்ட‌ப் போகிறோம்’

ம‌தில் சுவ‌ர் க‌ட்டும் ப‌ணி ஆர‌ம்ப‌மான‌து. ம‌க்க‌ள் த‌ங்க‌ளுடைய‌ முழு உழைப்பையும் கொடுத்து வேலை செய்த‌னர். அதிகாலை முத‌ல் ந‌ள்ளிர‌வு வ‌ரை வேலை சுறுசுறுப்பாய் ந‌ட‌ந்த‌து.

ஓரோனிய‌னான‌ ச‌ன்ப‌லாற்று மற்றும் அம்மோனியனான தோபியா இருவரும் கடும் எரிச்சலடைந்தார்கள்.

“இவ‌ர்க‌ளென்ன‌ ம‌திலைக் க‌ட்டி விடுவார்க‌ளா ? அத‌ற்கு நான் விட்டு விடுவேனா ?’ சன்பலாற்று கொக்கரித்தான்.

‘அப்ப‌டியே அவ‌ர்க‌ள் க‌ட்டினாலும் அத‌ன் மேல் ஒரு ந‌ரி ஏறிப் போனால் கூட‌ இடிந்து விழும் ச‌ன்ப‌லாற்று.. ” சிரித்தான் தோபியா.

இந்த‌ எதிர்ப்புக‌ளைக் க‌ண்டு நெகேமியா பின் வாங்க‌வில்லை. ம‌க்க‌ளை மீண்டும் ஊக்க‌ப்ப‌டுத்தினார். உயிருக்கு ஆப‌த்து என்று தெரிந்திருந்தும் ம‌க்க‌ள் இறை ப‌ணியிலிருந்து பின் வாங்க‌வில்லை. யூத‌ர்க‌ள் எந்நேர‌மும் தாக்க‌ப்ப‌ட‌லாம் எனும் நிலை இருந்த‌து.

மக்கள் ஒருகையில் ஆயுத‌த்தை வைத்துக் கொண்டு ம‌றுகையால் வேலை செய்த‌ன‌ர். இன்னும் சில‌ர் இடையில் வாளைச் சொருகி வைத்து விட்டு வேலை செய்த‌ன‌ர்.

ம‌க்க‌ளிடையே வ‌றுமை ப‌ர‌விய‌து. அதைப் ப‌ய‌ன்ப‌டுத்தி அநியாய‌ வ‌ட்டி வாங்குவோர், அட‌மான‌மாய் வீடுக‌ளை வாங்கிவிட்டு தானிய‌ங்க‌ளை அளிப்போர் அதிக‌ரித்த‌ன‌ர். நெகேமியா ம‌ன‌ம் வ‌ருந்தினார். ‘ந‌ம‌க்குள்ளே இப்ப‌டி இருந்தால் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ந‌ம்மைப் ப‌ற்றியும், ந‌ம‌து ஆண்ட‌வ‌ரைப் ப‌ற்றியும் ஏள‌ன‌ம் செய்வார்க‌ள்’ என‌ அவ‌ர்க‌ளைக் க‌ண்டித்து திருத்தினார்.

ச‌ன்ப‌லாற்று வேலையை நிறுத்த‌வும், நெகேமியாவைக் கொல்ல‌வும் ப‌ல‌ ச‌தித் திட்ட‌ங்க‌ளை தீட்டினார். ஆனால் க‌ட‌வுளின் அருள் நெகேமியாவோடு இருந்த‌தால் அந்த‌ அனைத்து திட்ட‌ங்க‌ளிலும் அவ‌னுக்கு தோல்வியே மிஞ்சிய‌து.

ம‌தில் ப‌ர‌ப‌ர‌ப்பாய் வ‌ள‌ர்ந்து, ஐம்ப‌த்து இர‌ண்டு நாட்க‌ளிலேயே நிறைவ‌டைந்த‌து. மாபெரும் விஸ்வ‌ரூப‌ ம‌தில் வெறும் ஐம்ப‌த்து இர‌ண்டு நாட்க‌ளில் க‌ட்டி முடிக்க‌ப்ப‌ட்ட‌தைக் க‌ண்ட‌ எதிரிக‌ள் வெல‌வெல‌த்துப் போயின‌ர். இது நிச்ச‌ய‌ம் க‌ட‌வுளின் அருள் தான் என‌ அவ‌ர்க‌ள் பின்வாங்கினார்க‌ள்.

எந்த‌ச் செய‌லைச் செய்யும் முன்பும் இறைவ‌னோடு ம‌ன‌ம் க‌சிந்து பிரார்த்திக்க‌ வேண்டும். க‌ட‌வுளின் செய‌லுக்காக‌ முன் வைத்த‌ காலைப் பின் வைக்க‌க் கூடாது. த‌லைவ‌ர் என்ப‌வ‌ர் ம‌க்க‌ளோடு ம‌க்க‌ளாக‌ச் சேர்ந்து விய‌ர்வை சிந்த‌வேண்டும். ம‌க்க‌ளை வ‌ழிந‌ட‌த்துப‌வ‌ர் த‌ன்ன‌ல‌ம் பார்க்காதவ‌ராய் இருக்க‌ வேண்டும். தொலைதூர‌த்தில் இருந்தாலும் த‌ன் ம‌க்க‌ளுக்கான‌ க‌ரிச‌னை உடைய‌வ‌ராக‌ இருக்க‌வேண்டும். ம‌ன்ன‌ரின் முன் பேச‌வும் அச்ச‌மில்லாத‌வ‌ராய் இருக்க‌ வேண்டும். என‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளை நெகேமியாவின் வாழ்க்கை ந‌ம‌க்கு போதிக்கிற‌து.

பைபிள் மாந்தர்கள் 57 (தினத்தந்தி) எஸ்ரா

எஸ்ரா ஒரு குரு. இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், ஆன்மீகத் தரத்தையும் உயர்த்தப் பாடுபட்டவர். இவருடைய காலத்தில் தான் இறையாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விஷயங்கள் நடைபெற்றன. குருக்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது. அவர்களுக்கான சட்டதிட்டங்களை வகுத்து அரசியல், ஆன்மீகப் பொறுப்புகளை குருக்களிடமே ஒப்படைத்தவர் அவர்.

பாரசீக மன்னன் சைரஸ் பாபிலோனியாவைக் கைப்பற்றிய ஆண்டு கி.மு.538. வந்ததும் முதல் வேலையாக இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை கொடுத்து, யூதாவுக்குச் செல்லுங்கள் என அனுப்பியும் வைத்தார்.

அவர்களை வெறும‌னே அனுப்ப‌வில்லை. அனுப்பும்போது “இஸ்ர‌யேல‌ர்க‌ளின் க‌ட‌வுளே உண்மைக் க‌ட‌வுள். அவ‌ர்க‌ள் இஸ்ர‌யேலுக்குத் திரும்பிச் சென்று க‌ட‌வுளின் ஆல‌ய‌த்தைக் க‌ட்டி எழுப்ப‌ட்டும். அத‌ற்கு ம‌க்க‌ள் அனைவ‌ரும் த‌ன்னார்வ‌க் காணிக்கைக‌ளை அளிக்க‌ட்டும் என‌ அறிக்கையும் விட்டார்’

ம‌ன்ன‌னின் வேண்டுகோளை ஏற்று, ம‌க்க‌ள் வெள்ளி, பொன், கால்ந‌டைக‌ள், பொருட்க‌ள், விலையுய‌ர்ந்த‌ பாத்திர‌ங்க‌ள் என‌ எல்லாவ‌ற்றையும் கொடுத்து உத‌வின‌ர். பெரும் பொக்கிஷ‌ங்க‌ளோடு இஸ்ரயேல் மக்களின் ஒரு பகுதியினர் அப்போது நாடு திரும்பினார். அவர்களுக்கு செருபாவேல் தலைமை தாங்கினார்.

எருசலேம் தேவாலயம் அப்போது அழிந்த நிலையில் இருந்தது. திரும்பி வந்தவர்கள் எருசலேம் தேவாலயத்தைக் கட்டியெழுப்பி புதிதாக்கத் துவங்கினார்கள். ஆனால் அந்த‌ ப‌ணி முழுமைய‌டைய‌வில்லை. ஆண்ட‌வ‌ரின் கோயில் க‌ட்டி எழுப்ப‌ முடியாத‌ப‌டி எதிர்ப்பாள‌ர்க‌ள் எழுந்தார்க‌ள். சைர‌சு ஆட்சிகால‌ம் முதல் தாரிபு ம‌ன்ன‌னின் ஆட்சிக்காலத்தின் இரண்டாம் ஆண்டு  வ‌ரைக்கும் இந்த‌ ஆல‌ய‌ம் க‌ட்டும் ப‌ணி த‌டைப‌ட்டுக் கொண்டே இருந்த‌து.

செரூபாவேலும் தலைவர்களும் மீண்டும் ஒரு முறை கூடி ஆலயம் கட்டும் வேலையை ஆரம்பிக்க வேண்டுமென முடிவெடுத்தனர். ஆலயம் கட்டும் வேலை மீண்டும் தொடங்கியது. எதிர்ப்பவர்கள் அமைதி காக்கவில்லை. விஷயம் மன்னன் தாரிபு காதுகளுக்கு எட்டியது.

தாரிபு விசாரித்தான்.

இஸ்ரவேலர்கள் அவர்களுடைய ஆண்டவருக்கு ஆலயம் கட்டுகிறார்கள். இது ஆண்டவரின் வாக்கு என்கின்றனர். சைரஸ் மன்னன் இதற்கான அனுமதியைக் கொடுத்ததாகவும் சொல்கின்றனர். அனுமதியோடு சேர்த்து செல்வங்களையும் கொடுத்ததாக அவர்கள் கூறித் திரிகின்றனர். எனும் செய்தி  மன்னனிடம் கூறப்பட்டது.

தாரிபு யோசித்தார். இந்த செய்திகளெல்லாம் உண்மையா என்பதைக் கண்டறிய வேண்டும் என ஆணையிட்டான். பாபிலோனின் கருவூலம் சோதனையிடப் பட்டது. ஏட்டுச் சுருள்கள் இருந்த அறை புரட்டப்பட்டது. கடைசியில் அந்த முக்கியமான ஏட்டுச் சுருள் அவர்களுடைய கண்களுக்குத் தட்டுப்பட்டது.

உண்மை தான் ! மன்னன் கட்டளையிட்டிருக்கிறான். ஆலயத்தைக் கட்டுவதற்கான ஐடியாக்களையும் வழங்கியிருக்கிறான். செல்வங்களையும் கொடுத்திருக்கிறான் எனும் செய்திகளெல்லாம் தாரிபு மன்னனுக்குத் தெரிய வந்தது.

ஆலயம் கட்டும் வேலையைத் தடைசெய்ய வேண்டாம், அதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என கட்டளையிட்டான் மன்னன். இஸ்ரயேல் மக்கள் மகிழ்ந்தனர். தாரியு மன்னனின் ஆறாவது ஆட்சியாண்டில் ஆலயம் கட்டும் வேலை முடிவடைந்தது. நுறு காளைகள்,இருநூறு செம்மரிக் கடாக்கள், நானூறு குட்டிகள் என பெரும் பலி நிகழ்ந்து, ஆலயம் அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. பாஸ்கா விழாவும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பாபிலோனிலிருந்து இஸ்ரயேல் மக்களில் இன்னொரு பகுதியினர் திரும்பி யூதாவுக்கு வந்தனர். அப்போது பாபிலோனை அர்த்தசஸ்தா ஆட்சி செய்து வந்தார். அவர்களுக்குத் தலைமையேறு வந்தவர் தான் எஸ்ரா. மன்னர் அர்த்தசஸ்தா எஸ்ராவுக்கு வாழ்த்து கூறி அவருக்கு ஏராளமான செல்வங்களைக் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

ஆண்டவரின் அருட்கரம் எஸ்ராவோடு இருந்தது.  எஸ்ரா ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கற்று அதன்படி நடப்பதிலும், சட்டத்தையும், முறைமையையும் இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார்.

அக்கால‌த்தில் இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் வேற்று இன‌ப் பெண்ணை ம‌ண‌ப்ப‌து இறைவ‌னுக்கு எதிரான‌ செய‌லாக‌ப் பார்க்க‌ப் ப‌ட்ட‌து. அது க‌ட‌வுளின் நேர‌டிக் கோப‌த்துக்கு ஆளாவ‌தைப் போன்ற‌து. எஸ்ராவின் கால‌த்தில் இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் அந்த‌ப் பாவ‌த்தைச் செய்து வ‌ந்த‌ன‌ர். எஸ்ரா ம‌ன‌ம் க‌ல‌ங்கினார். ம‌க்க‌ளிட‌ம் வ‌ந்து க‌ட‌வுளின் வார்த்தைக‌ளைச் சொல்லி எச்ச‌ரிக்கையும் விடுத்தார். ம‌க்க‌ள் த‌ங்க‌ள் வ‌ழியை விட்டு வில‌குவ‌தாக‌ எஸ்ராவிட‌ம் உறுதிமொழி கொடுத்தன‌ர்.

எஸ்ராவின் நூல் சில முக்கியமான விஷயங்களை சொல்லித் தருகிறது. !

எரேமியா இறைவாக்கின‌ர் எருச‌லேமின் அழிவை மிக‌ துல்லிய‌மாக‌ இத‌ற்கு முன்பே இறைவாக்கு உரைத்திருந்தார். எழுப‌து ஆண்டுக‌ளுக்குப் பின்ன‌ர் அது மீண்டும் க‌ட்டு எழுப்ப‌ப்ப‌டும் என்றும் அவ‌ர் உரைத்திருந்தார். அந்த‌ இறைவாக்கு நிறைவேறிய‌து. அந்த காலத்திலேயே, ஆல‌ய‌ம் க‌ட்ட‌ ம‌க்க‌ள் உத‌வினார்க‌ள் என்பது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி.

எஸ்ராவின் இறை நேச‌மும், ம‌க்க‌ளை வழிநடத்தும் திற‌மையும், க‌ட‌வுளுக்கு முன்னால் க‌சிந்துருகித் த‌ன்னைத் தாழ்த்தும் பாங்கும், ம‌க்க‌ளை ஒன்றிணைக்கும் வ‌ல்ல‌மையும் நாம் க‌ற்றுக் கொள்ள‌ வேண்டிய‌ சில‌ உய‌ர்ந்த‌  விஷ‌ய‌ங்க‌ளாகும்.

பைபிள் மாந்தர்கள் 56 (தினத்தந்தி) யோசியா

எட்டு வயதான ஒரு சிறுவன் என்ன செய்வான் ? மூன்றாம் வகுப்பில் உட்கார்ந்து எழுத்துகள் படித்துக் கொண்டிருப்பான், அல்லது விளையாடித் திரிவான். அப்படித் தானே ? ஆனால் யோசியா எட்டு வயதாக இருந்த போது ஒரு மிகப்பெரிய பொறுப்பில் அமர்த்தப்பட்டான். யூதா நாட்டின் மன்னனாக !

யோசியாவுக்கு ஐந்து வயதாக இருந்தபோது மனாசே அரசர் இறந்து போனார். அவர் யோசியாவின் தாத்தா. இஸ்ரவேலில் கடவுளுக்கு எதிரான ஒரு ஆட்சியை ஐம்பத்து ஐந்து ஆண்டுகள் நடத்தியவன் அவன். அன்னை எதிதாளின் கரங்களுக்குள் இருந்து வேடிக்கை பார்க்கும் வயது யோசியாவுக்கு. வழக்கத்தின் படி மனாசேவின் மகன் ஆமோன் யூதாவின் மன்னனாரார். அவர் யோசியாவின் தந்தை.

‘ரொம்ப கெட்ட மன்னன்’ என சுருக்கமாகச் சொல்லுமளவுக்கு ஆமோனின் வாழ்க்கை இருந்தது. தந்தை எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாய்வான் என்பது போல தீமைகளைக் குவித்துக் கொண்டிருந்தான். நாட்டில் பிற தெய்வ வழிபாடுகள் பெருகின. பிற தெய்வங்களுக்காக தொழுகை மேடுகள்,அசேராக் கம்பங்கள், சிலைகள் என நாட்டில் இஸ்ரவேலர்களின் தெய்வத்துக்கு எதிரான செயல்களே நிரம்பியிருந்தன.

ஆமோனின் வாழ்க்கை அதிக நாள் நீடிக்கவில்லை. இரண்டே ஆண்டுகளில், அவனது அலுவலர்களே அவனைக் கொன்று விட்டனர். நாட்டுமக்கள் ஆமோனின் ஆதரவாளர்கள். அவர்கள் ஆமோனுக்கு எதிராய்ச் சதி செய்தவர்களையெல்லாம் கொன்று விட்டு யோசியாவைப் பிடித்து அரியணையில் அமர வைத்தார்கள். அப்ப‌டித் தான் யோசியா ம‌ன்ன‌ரானார்.

ம‌க்க‌ள் ஒரு சிறுவ‌னை அர‌ச‌னாக்கி த‌ங்க‌ள் விருப்ப‌ம் போல‌ வாழ்ந்து வ‌ந்த‌ன‌ர். ஆனால் யோசியாவின் ஆட்சியின் ப‌ன்னிர‌ண்டாவ‌து ஆண்டில் ஒரு திருப்ப‌ம் நிக‌ழ்ந்த‌து. யோசியா க‌ட‌வுளின் ப‌க்க‌ம் த‌ன‌து ம‌ன‌தை முழுமையாத் திருப்பினார். இஸ்ர‌யேல் நாட்டிலிருந்த‌ அத்த‌னை பிற‌ தெய்வ‌ வ‌ழிபாட்டுத் த‌ல‌ங்க‌ளையும் அழித்தார், சிலைக‌ளை உடைத்தார், க‌ம்ப‌ங்க‌ளை வெட்டினார். நக‌ரையே தூய்மையாக்கினார்.

யோசியா த‌ன்னுடைய‌ ஆன்மீக‌ வ‌ழிகாட்டியாக‌ இறைவாக்கின‌ர் செப்ப‌னியாவைச் சார்ந்திருந்தார். இவ‌ர‌து கால‌க‌ட்ட‌த்தில் தான் புக‌ழ்பெற்ற‌ இறைவாக்கின‌ர் எரேமியாவும் வாழ்ந்து வ‌ந்தார். அவர்க‌ளுடைய‌ ஞான‌ம் யோசியாவுக்கு உத‌வியிருக்க‌க் கூடும்.

த‌ன‌து ஆட்சியின் ப‌தினெட்டாம் ஆண்டு ஆண்ட‌வ‌ரின் ஆல‌ய‌த்தைப் புதுப்பிக்க‌ நினைத்தார் ம‌ன்ன‌ர். அத‌ற்காக‌ சாப்பான் என்ப‌வ‌ரையும் வேறு சில‌ரையும் நிய‌மித்தார். அவ‌ர்க‌ள் த‌லைமைக் குரு இல்‌க்கியாவிட‌ம் சென்ற‌ன‌ர். ஆல‌ய‌த் தூய்மைப்ப‌ணி ந‌ட‌ந்த‌து. அப்போது குரு ஒரு விலைம‌திப்ப‌ற்ற‌ பொக்கிஷ‌த்தைக் க‌ண்டெடுத்தார். அது ‘ஆண்ட‌வர், மோசே வ‌ழியாக‌ கொடுத்த‌ திருச்ச‌ட்ட‌ நூலின் மூல‌ப் பிர‌தி’.

திருச்ச‌ட்ட‌ நூல் ம‌ன்ன‌னிட‌ம் கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌து. ம‌ன்ன‌ன் அந்த‌ நூலை வாசித்தான்.  அப்போது தான் த‌ன‌து நாடு எத்த‌கைய‌ நிலையில் இருக்கிற‌து, இதற்கு என்னென்ன‌ த‌ண்ட‌னைக‌ள் என்ப‌ன‌வெல்லாம் யோசியாவுக்குப் புரிய‌ ஆர‌ம்பித்த‌ன‌.

அவ‌ர் த‌ன‌து ஆடைக‌ளைக் கிழித்துக் கொண்டு, க‌ட‌வுளின் முன்னால் த‌ன்னைத் தாழ்த்திக் கொண்டார். அப்போது குல்தா எனும் பெண் இறைவாக்கின‌ர் பேசினார். “க‌ட‌வுளின் த‌ண்ட‌னை நாட்டுக்கு நிச்ச‌ய‌ம் வ‌ரும், ஆனால் நீர் உம்மைத் தாழ்த்திக் கொண்ட‌தால் உம‌து கால‌த்தில் அழிவு வ‌ராது” என்று யோசியாவிட‌ம் சொன்னார் குல்தா.

யோசியா நாடெங்கும் வாழ்ந்த‌ பெரிய‌வ‌ர்க‌ளை அழைத்தார். எல்லோரையும் ஆண்ட‌வ‌ரின் ஆல‌ய‌த்தில் சேர்த்தார். எல்லோருக்கும் முன்னால் திருச்ச‌ட்ட‌ நூலை வாசித்தார். இனிமேல் அத‌ன்ப‌டி ம‌ட்டுமே வாழ்வ‌தென‌ உறுதி மொழி எடுத்தார். மக்க‌ளும் அவ‌ருடைய‌ வாக்கை ம‌தித்த‌ன‌ர், அத‌ன் ப‌டியே வாழ்ந்த‌ன‌ர்.

க‌ட‌வுளுக்கான‌ பாஸ்கா விழாவையும் யோசியா ம‌ன்ன‌ர் வெகு விம‌ரிசையாக‌க் கொண்டாடினார். எப்ப‌டி விழாவைக் கொண்டாட‌வேண்டும் எனும் வ‌ழிமுறைக‌ளை யோசியாவே முன்னின்று செய்தார்.

அவ‌ர‌து ம‌ர‌ண‌ம் எகிப்திய‌ ம‌ன்ன‌ன் நெக்கோ மூல‌ம் வ‌ந்த‌து.நெக்கோ வேறொரு ம‌ன்ன‌னிட‌ம் போருக்குச் செல்கையில், த‌ன்னைத் தான் கொல்ல‌ வ‌ருகிறார் என‌ நினைத்து யோசியா ம‌ன்ன‌ன் எதிர்கொண்டு சென்றார். நெக்கோ சொன்ன‌தையும் அவ‌ர் பொருட்ப‌டுத்த‌வில்லை. யோசியா ம‌ன்ன‌ன் வில்லால் எய்ய‌ப்ப‌ட்டு ம‌ர‌ண‌ம‌டைந்தார்.

யோசியாவின் ம‌ர‌ண‌ம் நாட்டு ம‌க்க‌ளை நிலைகுலைய‌ வைத்த‌து. எல்லோரும் அவ‌ருக்காய் துக்க‌ம் அனுச‌ரித்த‌ன‌ர். எரேமியா இறைவாக்கின‌ரும் ஒரு இர‌ங்க‌ற்பா எழுதினார்.

யோசியாவின் வாழ்க்கை மிக‌ முக்கிய‌மான‌ சில‌ பாட‌ங்க‌ளை ந‌ம‌க்குக் க‌ற்றுத் த‌ருகிற‌து.

‘தாத்தா இதைத் தான் செய்தார், அப்பா இதைத் தான் செய்தார், அத‌னால் நானும் இதையே செய்வேன்’ என‌ யோசியா நினைக்க‌வில்லை. பார‌ம்ப‌ரிய‌ப் ப‌ழ‌க்க‌த்தைத் தாண்டி உண்மையான‌ வ‌ழியை தேடிக் க‌ண்டு பிடித்து அதை ந‌டைமுறைப்ப‌டுத்தினார்.

இர‌ண்டாவ‌தாக‌, த‌வ‌று என்று தெரிந்த‌தும் த‌ன்னை அர‌ச‌ன் என்று க‌ருதாம‌ல் ஆடைக‌ளைக் கிழித்து, தாழ்மை நிலைக்கு இற‌ங்கி, க‌ட‌வுளின் க‌ட்ட‌ளையை முழுதாய் க‌டைபிடிக்க‌ முடிவெடுக்கிறார். ந‌ல்ல‌ த‌லைவ‌னாக‌ த‌ன‌து நாட்டு ம‌க்க‌ளையும் அப்ப‌டியே செய்ய‌ வைக்கிறார்.

இந்த‌ ந‌ல்ல‌ செய‌ல்க‌ளை யோசியாவின் வாழ்விலிருந்து க‌ற்றுக் கொள்வோம்

பைபிள் மாந்தர்கள் 55 (தினத்தந்தி) எசேக்கியா

எசேக்கியா யூதாவின் அரசனாக முடிசூட்டிக் கொண்டபோது அவருக்கு வயது 25. தாவீது மன்னனைப் போல கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் எசேக்கியா. நாட்டு மக்கள் வேற்று தெய்வங்களையும், சிலைகளையும் வழிபட்டு வந்தனர். மோசே அடையாளத்துக்காய் செய்து வைத்திருந்த வெண்கலப் பாம்பைக் கூட தூபம் காட்டி வழிபட்டு வந்தனர். எசேக்கியா அத்தனை சிலைகளையும் உடைத்து, தூண்களைத் தகர்த்து நாட்டை தூய்மையாக்கினார்.

இதனால், மீண்டும் உண்மைக் கடவுளை வழிபடும் கூட்டம் அதிகரித்தது. மக்கள் கடவுளை உண்மையுடனும், ஆத்மார்த்தமாகவும் தொழ ஆரம்பித்தனர். காணிக்கைகளையும், பலிகளையும் செலுத்த தயக்கம் காட்டவில்லை. எகேக்கியா மன்னன் யூதா நாடு முழுவதும் இந்த மத சீர்திருத்தத்தைச் செய்தார்.

எசேக்கிய மன்னனுக்கு எதிராக அசீரிய மன்னன் செனகெரிபு எழுந்தான். அவன் ஏற்கனவே இஸ்ரவேலின் பத்து கோத்திர நகரங்களை கைப்பற்றியிருந்தான். இப்போது அவன் எசேக்கியாவுக்கு எதிராக போரிட வந்தான்.

எசேக்கிய மன்னன் போரைத் தவிர்க்க விரும்பி சிரிய மன்னனுக்கு அளவில்லாத செல்வத்தை அள்ளி வழங்கினான். ஆண்டவரின் இல்லத்தில் இருந்தவற்றையெல்லாம் கூட‌ மன்னனுக்குக் கொடுத்தான். ஆனால் அவ‌னுடைய‌ க‌ர்வ‌ம் தீர‌வில்லை. எந்த‌க் க‌ட‌வுளும் என்னோடு போரிட்டு வெற்றி பெற‌ முடியாது. எல்லா க‌ட‌வுள்க‌ளையும் விட‌ நானே வ‌லிமையான‌வ‌ன் என‌ க‌ர்வ‌ம் கொண்டு எசேக்கிய‌ ம‌ன்ன‌னை ஏள‌ன‌ம் செய்தான்.

எசேக்கிய‌ ம‌ன்ன‌ன் க‌ட‌வுளின் ஆல‌ய‌த்துக்குச் சென்று அவ‌ர‌து பாத‌த்தில் ச‌ர‌ணடைந்தார். ஆடைக‌ளைக் கிழித்து த‌ன்னைப் ப‌ணிவான‌வ‌னாக்கினான். க‌ட‌வுள் ம‌ன‌மிர‌ங்கினார். த‌ன்னை இழிவாய்ப் பேசிய‌ ம‌ன்ன‌னுடைய‌ படை வீரர்கள் ஒரு இல‌ட்ச‌த்து எண்ப‌தாயிர‌ம் பேரை க‌ட‌வுளின் தூத‌ர் அன்று இர‌வே கொன்றார். எசேக்கியேலுக்குப் போர் தேவைப்ப‌ட‌வில்லை. சிரிய‌ ம‌ன்ன‌னோ ந‌ட‌ந்த‌தைக் க‌ண்டு அதிர்ச்சிய‌டைந்தான். த‌ன‌து க‌ட‌வுளான‌ நிஸ்ரோக்கின் ஆல‌ய‌த்தில் சென்று வ‌ழிபாடு செய்தான். அப்போது அவ‌னுடைய‌ ம‌க‌ன்க‌ளில் இருவ‌ர் வ‌ந்து அவரை வெட்டிக் கொன்ற‌ன‌ர் !

கால‌ங்க‌ள் கட‌ந்த‌ன‌. எசேக்கியா ம‌ன்ன‌னுக்கு நோய் வ‌ந்த‌து. ப‌டுத்த‌ ப‌டுக்கையானான். இறைவாக்கின‌ர் எசாயா அவ‌ரிட‌ம் வ‌ந்து. ‘நீர் இற‌ந்து போய் விடுவீர் என்ப‌து க‌ட‌வுளின் வாக்கு’. என்று சொன்னார். எசேக்கியேல் ப‌த‌றினார். ஆண்ட‌வ‌ரே..உம் பார்வையில் ந‌ல்ல‌வ‌னாய் வாழ்ந்தேனே என‌க்கு நோயை தீர்த்து ஆயுளை நீட்டித்துத் தாரும். என‌ க‌த‌றி அழுது வேண்டினார்.

க‌ட‌வுள் ம‌ன‌மிர‌ங்கினார். மீண்டும் எசாயா வ‌ழியாக‌ எசேக்கியேலிட‌ம் பேசினார். “க‌ட‌வுளின் வாக்கு என‌க்கு வ‌ந்த‌து. நீர் இன்னும் 15 ஆண்டுக‌ள் வாழ்வீர். இன்றிலிருந்து மூன்றாவ‌து நாளில் க‌ட‌வுளின் இல்ல‌ம் செல்வீர்” என்று மன்னனிடம் தெரிவித்தார் எசாயா.

‘அத‌ற்கு என்ன‌ அடையாள‌ம் ?” எசேக்கியா கேட்டார்.

‘நீயே சொல். உன‌து நிழ‌ல் ப‌த்து பாகை முன்னால் போக‌ வேண்டுமா, பத்து பாகை பின்னால் வ‌ர‌ வேண்டுமா ?” எசாயா கேட்டார்.

‘நிழ‌ல் முன்னால் போவ‌து எளிது. ப‌த்து பாகை பின்னால் வ‌ர‌ட்டும்’ எசேக்கியா சொன்னார்.

எசாயா க‌ட‌வுளிட‌ம் வேண்டினார். நிழ‌ல் ப‌த்து பாகை பின்னால் வ‌ந்த‌து. எசேக்கியா மகிழ்ந்தார். அவ‌ருடைய‌ நோய் நீங்கிய‌து. வாழ்க்கை தொட‌ர்ந்த‌து.

“உம‌க்குப் பின் உம்முடைய‌ ம‌க‌ன்க‌ள் கைது செய்ய‌ப்ப‌ட்டு பாபிலோனுக்குக் கொண்டு போக‌ப்ப‌டுவார்க‌ள். ‘ என்றார் எசாயா. எசேக்கியேல் அதைக் குறித்து அல‌ட்டிக் கொள்ள‌வில்லை. த‌ன‌து வாழ்நாளில் நாடு ந‌ன்றாய், அமைதியாய் இருந்தால் போதும் என்றே அவ‌ர் நினைத்தார்

எசேக்கியாவின் வாழ்க்கை முடிந்த‌து. அவ‌னுக்குப் பின் அவ‌னுடைய‌ ம‌க‌ன் ம‌னாசே அர‌சரானார். ம‌னாசே அர‌ச‌னான‌போது அவ‌னுக்கு வ‌ய‌து ப‌ன்னிர‌ண்டு. க‌ட‌வுளுக்கு எதிரான‌ ஒரு வாழ்க்கையை அவ‌ன் வாழ்ந்தான். நாடு மீண்டும் மிக‌ மிக‌ மோச‌மான‌ நிலைக்குச் சென்ற‌து. அவ‌னுக்குப் பின் வ‌ந்த‌ அவ‌ன‌து ம‌க‌ன் ஆமோனும் க‌ட‌வுள் வெறுக்க‌த்த‌க்க‌ கெட்ட‌ ஆட்சியையே ந‌ட‌த்தினான்.

எசேக்கியா ஒருவேளை ப‌தினைந்து ஆண்டுக‌ள் அதிக‌மாய் வாழ‌வேண்டும் என‌ ஆசைப்ப‌டாம‌ல் இருந்திருந்தால் ம‌னாசே பிற‌ந்திருக்க‌வே மாட்டான். ம‌னாசேவின் ஐம்ப‌த்து ஐந்து ஐந்து ஆண்டு கெட்ட‌ ஆட்சி ந‌ட‌ந்திருக்க‌வே ந‌ட‌ந்திருக்காது. அவ‌னுடைய‌ ம‌க‌ன் ஆமோனும் பிற‌ந்திருக்க‌ மாட்டான்.உணர்த்தியதும் அதை அப்படியே ஏற்றுக் கொண்டார் பவுல். “இக்கூடாரம் பிரிக்கப்படும் நேரம் விரைவில் வரும் என்பது எனக்குத் தெரியும். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அதை எனக்குத் தெரிவித்துள்ளார்” என்று ம‌ன‌ப்பூர்வ‌மாய் ஒத்து கொண்டார். ஆனால் எசேக்கியா அப்படிச் செய்யவில்லை.

க‌ட‌வுள் ந‌ம‌க்காக‌ வைத்திருக்கும் திட்ட‌த்தை மீறி நாம் ந‌ம்முடைய‌ விருப்ப‌த்துக்காய் க‌ட‌வுளை இறைஞ்சி ம‌ன்றாடும்போது க‌ட‌வுள் ஒருவேளை அவ‌ற்றைத் த‌ருவார். ஆனால் அது ஆசீர்வாத‌ங்க‌ளுக்குப் ப‌திலாக‌ பெரும் சாப‌த்தைக் கொண்டு வ‌ரும் வாய்ப்பும் உண்டு என்ப‌தை எசேக்கியாவின் வாழ்க்கை ந‌ம‌க்கு விள‌க்குகிற‌து.

பைபிள் மாந்தர்கள் 54 (தினத்தந்தி) பெனதாது.

சிரியா நாட்டு மன்னனாக இருந்தவன் பெனதாது. அவன் இஸ்ரயேல் நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டுமென பல முறை முயன்றான். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வியூகம் வகுத்துப் பதுங்கியிருப்பான், எலிசா அதை தனது ஞானத்தினால் அறிந்து இஸ்ரயேல் மன்னனை எச்சரிப்பார். சிரியா மன்னன் தனது திட்டம் பலிக்காமல் திரும்பிப் போவான். இது வழக்கமாகிவிட்டது.

“நம்ம படையில் ஏதோ ஒரு ஒற்றன் இருக்கிறான். இல்லையேல் நம்முடைய திட்டம் எல்லாம் எப்படி இஸ்ரயேல் மன்னனுக்குத் தெரியும் ? ” பெனதாது கர்ஜித்தான்.

“ம‌ன்ன‌ரே.. ஒற்ற‌ன் எல்லாம் கிடையாது. நீங்க‌ இங்கே ப‌ள்ளிய‌றையில் பேசுவ‌து கூட‌ இஸ்ர‌யேலில் இருக்கும் எலிசா எனும் இறைவாக்கின‌ருக்குத் தெரிந்து விடுகிற‌து. அதான் கார‌ண‌ம்” என்றான் ஒரு ப‌டைவீர‌ன்.

“எலிசாவை நான் பிடிக்காம‌ல் விட‌மாட்டேன்” என‌ ம‌ன்ன‌ன் பெரும் ப‌டையை எலிசா த‌ங்கியிருந்த‌ இட‌த்துக்கு அனுப்பினார். ப‌டைக‌ளும், குதிரைக‌ளும், தேர்க‌ளும், அவர் இருந்த நகரை வ‌ளைத்த‌ன‌. கூட‌ இருந்த‌வ‌ர்க‌ள் ப‌த‌றினார்க‌ள். எலிசாவோ ப‌த‌ட்ட‌ப்ப‌ட‌வில்லை. இறைவ‌னிட‌ம் ம‌ன்றாடினார்.

திடீரென‌ ம‌லையெங்கும் நெருப்புக் குதிரைக‌ளும், தேர்க‌ளும் எலிசாவைச் சுற்றிப் பாதுகாப்பாய் நின்ற‌ன‌.

சிரிய‌ ப‌டைக‌ள் நெருங்கி வ‌ருகையில் எலிசா மீண்டும் இறைவ‌னிட‌ம் ம‌ன்றாடினார். “இவ‌ர்க‌ள் க‌ண்க‌ளெல்லாம் குருடாக‌ட்டும்”. அப்ப‌டியே ஆன‌து. குருட‌ர்க‌ளாய் த‌டுமாறிய‌வ‌ர்க‌ளை எலிசா இஸ்ரயேலின் த‌லைந‌க‌ரான‌ ச‌மாரியாவுக்குக் கொண்டு சென்றார்.

ச‌மாரியாவின் ந‌டுவில் வ‌ந்த‌பிற‌கு மீண்டும் எலிசா க‌ட‌வுளிட‌ம் வேண்ட‌ வீர‌ர்க‌ளின் க‌ண்க‌ள் திற‌க்க‌ப்ப‌ட்ட‌ன‌. எதிரிக‌ளின் கோட்டைக்குள் நிற்ப‌தைக் க‌ண்ட‌ அவ‌ர்க‌ள் வெல‌வெல‌த்த‌ன‌ர். எலிசாவோ இஸ்ர‌வேல் ம‌ன்ன‌னிட‌ம்

“இவ‌ர்க‌ளுக்குப் ப‌சியும் தாக‌மும் தீர‌ அப்ப‌மும், த‌ண்ணீரும் கொடு” என்றார். எதிரி வீர‌ர்க‌ள் வ‌யிறார‌ச் சாப்பிட்டு விட்டுத் திரும்பினார்க‌ள்.

பென‌தாது க‌டும் கோப‌ம‌டைந்து த‌ன‌து ப‌டையை ஒட்டு மொத்த‌மாய்த் கொண்டு வ‌ந்து ச‌மாரியாவைச் சுற்றி வ‌ளைத்தான். நாட்டுக்குள் எந்த‌ப் பொருளும் வ‌ர‌ முடிய‌வில்லை. நாட்டிலிருந்து எதுவும் வெளியே போக‌ முடிய‌வில்லை. என‌வே ப‌ஞ்ச‌ம் த‌லைவிரித்தாடிய‌து. எதுவும் வாங்க‌ முடிய‌வில்லை.

“க‌ழுதைத் த‌லை வாங்க‌றீங்க‌ளா ? எண்ப‌து வெள்ளிக்காசு !” என கூவி விற்க‌ப்ப‌ட்ட‌து !

இஸ்ர‌யேல் ம‌ன்ன‌ன் செய்வ‌த‌றியாது விழித்தான். அப்போது ஒரு பெண் அவ‌ரை அழைத்தாள்.

“அர‌சே நீதி வ‌ழங்குங்க‌ள்” என்றாள் அந்த‌ப் பெண். அர‌ச‌ர் என்ன‌ என்று கேட்டார்.

“நேற்று இந்த‌ப் பெண் வ‌ந்து, இன்றைக்கு உன் ம‌க‌னை நாம் ச‌மைத்துச் சாப்பிடுவோம், நாளை என் ம‌க‌னைச் சாப்பிடுவோம் என்றாள். நானும் அவ‌ளை ந‌ம்பினேன். நேற்று என் ம‌க‌னைத் தின்றோம். இன்றைக்கு இவ‌ள் த‌ன் ம‌க‌னைத் த‌ர‌ ம‌றுக்கிறாள்” என்றாள்.

அர‌ச‌ன் நில‌மையின் வீரிய‌த்தைக் க‌ண்டு அதிர்ந்து போய் ஆடைக‌ளைக் கிழித்துக் கொண்டான். ம‌ன்ன‌னின் துய‌ர‌ம் எலியா மீது கோப‌மாய் மாறிய‌து.

எலியா ச‌மாதான‌ப்ப‌டுத்தினார். “ஆண்ட‌வ‌ர் சொல்வ‌தைக் கேளுங்க‌ள். நாளைக்கு ஒரு ம‌ர‌க்கால் கோதுமை, அதாவது சுமார் பன்னிரண்டு கிலோ கோதுமை, ஒரு வெள்ளிக்காசுக்கு விற்க‌ப்ப‌டும். அவ்வ‌ள‌வு ம‌லிவாய் பொருட்க‌ள் கிடைக்கும்” என்றார்.

ம‌ன்ன‌னுக்குப் ப‌க்க‌த்தில் நின்றிருந்த‌ அதிகாரியோ,” வான‌ம் பொத்துக் கொண்டு விழுந்தால் கூட‌ இது ந‌ட‌க்காது” என்றான்.

“ந‌ட‌க்கும். ஆனால் நீ அதில் எதையும் சாப்பிட‌ மாட்டாய்” என்றார் எலியா.

அன்று இர‌வு பென‌தாது ம‌ன்ன‌னின் கூடார‌ங்க‌ளிலும், அவ‌ர்க‌ளுடைய‌ பார்வையிலும், காதுக‌ளிலும் ஒரு வித‌ தோற்ற‌ ம‌ய‌க்க‌த்தைக் க‌ட‌வுள் தோன்றுவித்தார். பெரும் ப‌டை வ‌ருவ‌து போல‌வும், ஆர‌வார‌ம் எழுவ‌து போல‌வும், குதிரைக‌ள், தேர்க‌ள் விரைவ‌து போல‌வும் கேட்ட‌ ச‌த்த‌த்தால் மிர‌ண்டு போன‌ பென‌தாது வீர‌ர்க‌ளுட‌ன் இர‌வே கூடார‌த்தைக் காலி செய்து விட்டு ஓடிப்போனான்.

அவ‌ர்க‌ளுடைய‌ கூடார‌ங்க‌ளில் செல்வ‌ம் எக்க‌ச்ச‌க்க‌மாய்க் குவித்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌து. ம‌க்க‌ள் அந்த‌ச் செல்வ‌ங்க‌ளையெல்லாம் எடுத்துக் கொண்டார்க‌ள். அங்கிருந்த‌ பொருட்க‌ளினால் ச‌ட்டென‌ நாட்டின் ப‌ஞ்ச‌ம் மாறிப் போன‌து. எலிசா சொன்ன‌ப‌டியே ஒரு ம‌ர‌க்கால் கோதுமை ஒரு வெள்ளிக்காசுக்கு விற்க‌ப்ப‌ட்ட‌து.

இப்ப‌டியெல்லாம் ந‌ட‌க்காது என‌ சொன்ன‌ வீர‌ன், ந‌க‌ர‌வாயிலில் காவ‌ல் செய்து கொண்டிருந்த‌போது நெரிச‌லில் சிக்கி இறந்து போனான். எலிசா சொன்ன‌ப‌டி, அவ‌ன் எதையும் உண்ண‌ முடியாம‌ல் ம‌டிந்தான்.

பின்ன‌ர் ஒரு நாள் எலிசா சிரியா நாட்டுக்குள் சென்றார். ம‌ன்ன‌ன் பெனதாது உட‌ல்நிலை ச‌ரியில்லாம‌ல் இருந்தான். அவ‌ர் பிழைப்பாரா என‌ குறி கேட்க‌ “அசாவேல்” என்ப‌வ‌ரை அனுப்பினார் ம‌ன்ன‌ன்.

“மன்ன‌ர் பிழைப்பாரா” அசாவேல் கேட்டான்.

“நீ பிழைப்பாய்” என‌ அவ‌ரிட‌ம் சொல், ஆனால் உண்மையில் அவ‌ர் இற‌ந்து விடுவார். என்றார் எலிசா. ம‌றுநாள் அசாவேல் ஒரு துணியைத் த‌ண்ணீரில் முக்கி அவ‌ருடைய‌ முகத்தின் மேல் போட்டு மூடி அவ‌ரைக் கொன்றான்.

கெடுவான் கேடு நினைப்பான் !

பைபிள் மாந்தர்கள் 53 (தினத்தந்தி)கேகசி

பேராசை பெருநஷ்டம் என்று சொல்வார்களல்லவா ? அதன் சிறந்த உதாரணம் இந்த கேகசி !

எலிசா என்னும் இறைவாக்கினரின் உதவியாளர் தான் கேகசி. எலியாவுக்கு கைகழுவ தண்ணீர் ஊற்றிக் கொடுக்கும் பணியைச் செய்து வந்தவர் எலிசா. அதை மிகவும் ஆத்மார்த்தமாகச் செய்து வந்தார். எலியா விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபின் எலிசா கடவுளால் இறைவாக்கினராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எலிசா இறைவாக்கினர் ஆனபின் அவரிடமிருந்து மாபெரும் செயல்களெல்லாம் எளிதாக வந்தன. வியப்பூட்டும் அற்புதங்களைச் செய்து வந்தார் அவர். அவற்றில் ஒன்று தான் சிரியா நாட்டுப் படைத்தளபதி நாமான் என்பவருடைய தொழுநோயைக் குணமாக்கிய நிகழ்வு.

வ‌ண்டி நிறைய‌ பொன், வெள்ளி, ப‌ட்டாடைக‌ள் என‌ விலையுயர்ந்த‌ பொருட்க‌ளை எலிசாவின் பாத‌த்தில் ச‌ம‌ர்ப்பிக்க‌ நாமான் விரும்பினான். ஆனால் எலிசாவோ, குண‌ம‌ளித்த‌ல் இறைவ‌னின் கொடை இத‌ற்காய் அன்ப‌ளிப்புக‌ள் வாங்க‌ மாட்டேன் என‌ திட்ட‌வ‌ட்ட‌மாய் ம‌றுத‌லித்தார். நாமான் சிலிர்த்தான். இப்ப‌டிப்ப‌ட்ட‌ ம‌னித‌ர் வ‌ண‌ங்கும் க‌ட‌வுளே உண்மையான‌ க‌ட‌வுள் என‌ அறிக்கையிட்டான். பின்ன‌ர் எலிசாவிட‌ம்,

“நான் இங்கிருந்து இர‌ண்டு க‌ழுதைப் பொதி அள‌வுக்கு ம‌ண்ணை எடுத்துச் செல்ல‌ அனும‌தி தாருங்க‌ள். இனிமேல் இஸ்ர‌வேலின் க‌ட‌வுளைத் த‌விர‌ வேறு யாரையும் நான் வ‌ண‌ங்க‌வே மாட்டேன்” என்றான். எலிசா ம‌கிழ்ந்தார். “அமைதியுட‌ன் சென்று வாரும்” என‌ அனுப்பி வைத்தார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் கேக‌சி. எலிசாவின் ப‌ணியாள‌ன். அவ‌னுடைய‌ க‌ண்ணுக்கு முன்னால் வ‌ண்டி வ‌ண்டியாய் பொன்னும், வெள்ளியும் இருக்கின்ற‌ன‌. இத்த‌னை செல்வ‌ங்க‌ளை வேண்டாம் என‌ சொல்லும் த‌ன‌து குரு ஒரு முட்டாளாக‌த் தான் இருக்க‌ வேண்டும். ஆனால் நான் முட்டாளாய் இருக்க‌ மாட்டேன் என‌ ம‌ன‌தில் நினைத்தான்.

எப்ப‌டியாவ‌து இந்த‌ச் செல்வ‌த்தில் கொஞ்ச‌த்தையாவ‌து கைப்ப‌ற்றி விட‌வேண்டும், இனிமையான‌ வாழ்க்கை வாழ‌வேண்டும் என‌ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான். நாமான் சென்று ச‌ற்று நேர‌ம் க‌ழிந்த‌பின் பின்னாலேயே போனான் கேக‌சி.

கேக‌சி ஓடி வ‌ருவ‌தைக் க‌ண்ட‌ நாமான் வ‌ண்டியை நிறுத்தி அவ‌னை நோக்கி ஓடிச் சென்றான்.

“என்ன‌.. எல்லாரும் ந‌ல‌ம் தானே ?என்ன‌ விஷ‌ய‌ம் ?” என்று கேட்டான்.

“த‌லைவ‌ர் தான் என்னை அனுப்பினார்”

“இறைவாக்கின‌ர் எலிசாவா ? சொல்லுங்க‌ள் சொல்லுங்க‌ள்.. என்ன‌ செய்தி” நாமான் உற்சாக‌மானார்.

“எலிசா பொருளுக்கு ஆசைப்ப‌ட‌ மாட்டார் என்ப‌து உங்க‌ளுக்கே தெரியும். ஆனால் எப்ராயீம் ம‌லைநாட்டிலிருந்து ரெண்டு பேர் வ‌ந்திருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் இறைவாக்கின‌ர்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு ஒரு நாற்ப‌து கிலோ வெள்ளியும், ரெண்டு ப‌ட்டாடையும் வாங்கி வ‌ர‌ச் சொன்னார்” என்றார் கேக‌சி.

நாமான் ரொம்ப‌ ம‌கிழ்ச்சிய‌டைந்தான்.

“ரொம்ப‌ ச‌ந்தோச‌ம். த‌ய‌வு செய்து எண்ப‌து கிலோ வெள்ளியை வாங்கிக் கொள்ளுங்க‌ள்.”

“ம்ம்.. ச‌ரி”

நாமான் ப‌ணியாள‌ர்க‌ளுக்குக் க‌ட்ட‌ளையிட்டான். இர‌ண்டு பேர் எண்ப‌து கிலோ வெள்ளி, ம‌ற்றும் இர‌ண்டு ப‌ட்டாடைக‌ளைக் கொண்டு முன்னே ந‌ட‌க்க‌ கேக‌சி பின்னால் ந‌ட‌ந்தான்.

த‌ன்னுடைய‌ வீட்டுக்குப் ப‌க்க‌த்தில் வ‌ந்த‌தும் அவ‌ற்றை ப‌ணியாள‌ர்க‌ளிட‌மிருந்து வாங்கி விட்டு அவ‌ர்க‌ளை அனுப்பி வைத்தான் கேக‌சி. பின்ன‌ர் பொருட்க‌ளையெல்லாம் த‌ன‌து வீட்டுக்குள் கொண்டு ஒளித்து வைத்தான்.

அவ‌னுடைய ம‌ன‌ம் ச‌ந்தோச‌த்தில் துள்ளிய‌து. ஆஹா.. எண்ப‌து கிலோ வெள்ளி, இர‌ண்டு ப‌ட்டாடைக‌ள். இனிமேல் வாழ்க்கையில் சொகுசாக‌ வாழலாம் என‌ உற்சாக‌ம‌டைந்தான். ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாம‌ல் எலிசாவின் முன்னால் சென்று நின்றான்.

“கேக‌சி  …”

“சொல்லுங்க‌ள் த‌லைவ‌ரே”

“எங்கே போயிட்டு வ‌ந்தே ?”

“நா..நான் எங்கேயும் போக‌லையே. ” கேக‌சி திடுக்கிட்டான்.

“பொய்… ! என் ஞான‌த்தால் நான் ந‌ட‌ந்த‌தைக் க‌ண்டேன். செல்வ‌ங்க‌ளைப் பெற்றுக் கொள்ள‌ இதுவா ச‌ம‌ய‌ம் கேக‌சி ?” எலிசாவின் குர‌ல் இறுகிய‌து.

கேக‌சி த‌டுமாறினான்.

“இதோ கேள் ! நாமானின் தொழுநோய் உன்னையும், உன் வ‌ழிவ‌ந்தோரையும் என்றென்றும் பீடிக்கும்” எலிசா ச‌பித்தார்.

கேக‌சி திடுக்கிட்டுப் போனான். ச‌ட்டென‌ அவ‌ன் கைக‌ளில் வெள்ளைப் புள்ளிக‌ள் முளைக்க‌ ஆர‌ம்பித்த‌ன‌. ப‌த‌றிப் போய் பின் வாங்கினான். கொஞ்ச‌ நேர‌ம் தான் அவ‌ன் உட‌ல் முழுவ‌துமே தொழுநோய் வ‌ந்து நிர‌ம்பிய‌து.

கேக‌சி அந்த‌ இட‌த்தை விட்டு ஓடிப் போனான்.

எலிசாவைப் போல‌ மாபெரும் இறைவாக்கின‌ராய் மாற‌ வேண்டிய‌ கேக‌சி, த‌ன‌து பேராசையினால் அந்த‌ வாய்ப்பை இழ‌ந்தான்.

கேகசி பொய் சொல்லி த‌ன‌து த‌வ‌றுக‌ளை மூடி வைத்த‌த‌னால் ம‌ன்னிப்புப் பெறும் வாய்ப்பையும் இழ‌ந்தான். க‌டைசியில் அவ‌ன் சேர்த்த‌ சொத்துக‌ளால் அவ‌னுக்கு எந்த‌ ப‌ய‌னுமே இல்லை எனும் நிலை உருவான‌து.

இறைவ‌னை ம‌ட்டுமே ப‌ற்றிக் கொண்டு, ம‌றைமுக‌ப் பாவ‌ங்க‌ளையெல்லாம் வில‌க்கி, இறைவ‌னுக்கு முன்னால் தெளிவான‌ ம‌ன‌ச்சாட்சியுட‌ன் வாழ‌வேண்டும் என்ப‌தே கேக‌சியின் வாழ்க்கை ந‌ம‌க்குக் க‌ற்றுத் த‌ரும் பாட‌மாகும்.

பைபிள் மாந்தர்கள் 52 (தினத்தந்தி) நாமான்

சிரியா நாட்டின் படைத்தளபதி நாமான். வலிமை மிக்க வெற்றி வீரன்.  அரசர் அவரிடம் மிகவும் மரியாதை செலுத்தியிருந்தான். ஆனால் பாவம் ! அவன் ஒரு தொழுநோயாளி.

தொழுநோயாளிகள் ஊருக்கு வெளியே வாழ்ந்து வந்த காலத்தில்,  அரசவையிலேயே நாமான் இருந்தான் என்றால் அவன் எந்த அளவுக்கு மன்னனின் மரியாதையைப் பெற்றிருந்தான் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு முறை நாமான் இஸ்ரயேல் நாட்டில் தாக்குதல் நடத்தியபோது அங்கிருந்து ஒரு சிறுமியைக் கூட்டி வந்திருந்தார். அந்தச் சிறுமியைத் தனது மனைவிக்கு வேலைக்காரியாக்கி இருந்தார். ஒரு நாள் அந்தச் சிறுமி தலைவியிடம் சொன்னாள்.

“இஸ்ரயேல் நாட்டில் ஒரு இறைவாக்கினர் இருக்கிறார். அவரிடம் போனால் தலைவருக்கு சுகம் கிடைக்கும்”.

சிறுமியின் குரலில் இருந்த உறுதி தலைவிக்கு உற்சாகத்தைக் கொடுக்க, அவள் நாமானிடம் அதைச் சொன்னாள். நாமான் உடனே ம‌ன்ன‌னிட‌ம் சென்று விஷ‌ய‌த்தைச் சொன்னான். ம‌ன்ன‌னும் ம‌கிழ்ச்சிய‌டைந்தான்.

“போயிட்டு வாங்க‌. நான் இஸ்ர‌யேல் ம‌ன்ன‌னுக்கு ம‌ட‌ல் த‌ருகிறேன்” என்றான். கூட‌வே ப‌ல‌ கோடி ரூபாய் ம‌திப்புள்ள‌ பொன், வெள்ளி, பட்டாடைக‌ள் போன்ற‌வ‌ற்றையும், ப‌ணியாள‌ர்க‌ளையும் கொடுத்து அனுப்பி வைத்தான்.

நாமான் இஸ்ர‌யேல் ம‌ன்ன‌னிட‌ம் சென்று ம‌ட‌லைக் கொடுத்தான். இஸ்ர‌யேல் ம‌ன்ன‌ன் ம‌ட‌லைப் பிரித்தான்.

“என் ப‌ணியாள‌ன் நாமானை உம்மிட‌ம் அனுப்புகிறேன், அவ‌னுடைய‌ தொழுநோயைச் சுக‌மாக்குங்க‌ள்” என்று எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து. ம‌ன்ன‌ன் அதிர்ந்தான். தொழுநோயைக் குண‌ப்ப‌டுத்துவ‌தென்ப‌து இய‌லாத‌ காரிய‌ம் என்ப‌து ம‌ன்ன‌னுக்குத் தெரிந்த‌து. வேண்டுமென்றே சிரியா ம‌ன்ன‌ன் த‌ன்னை வ‌ம்புக்கு இழுப்ப‌தாய் நினைத்தான்.

த‌ன‌து ஆடைக‌ளைக் கிழித்தான்.

“நானென்ன‌ க‌ட‌வுளா ? உயிரைக் கொடுக்க‌வும், எடுக்க‌வும் என்னால‌ முடியுமா ? சிரியா ம‌ன்ன‌ன் என்னோடு போரிட‌ கார‌ண‌ம் தேடுகிறானா ?” என்று கோப‌த்தில் க‌த்தினான்.

இறைவாக்கின‌ர் எலிசா இதைக் கேள்விப்ப‌ட்டார். ம‌ன்ன‌னுக்கு ஆள் அனுப்பினார்.

“ஏன் ஆடைக‌ளைக் கிழிக்கிறீர் ? அவ‌னை என்னிட‌ம் அனுப்புங்க‌ள்” என்றார்.

ம‌ன்ன‌ன் நாமானை எலிசாவிட‌ம் அனுப்பினார். குதிரைக‌ள், தேர், செல்வ‌ங்க‌ள் என‌ சிரியாவின் ப‌டைத் த‌லைவ‌ர் க‌ம்பீர‌மாக‌ இறைவாக்கின‌ர் எலிசாவின் வீட்டு வாச‌லின் முன்னால் நின்றார்.

எலிசா வெளியே வ‌ர‌வில்லை. அவ‌ரை வ‌ர‌வேற்க‌வில்லை. வாழ்த்து சொல்ல‌வில்லை. உள்ளே இருந்துகொண்டு ஒரு ஆளை அனுப்பி

“நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால் உன் உட‌ல் ந‌ல‌ம் பெறும்” என்று சொல்ல‌ச் சொன்னார்.

நாமான் க‌டும் கோப‌ம‌டைந்தார். “அவ‌ர் வெளியே வ‌ந்து, க‌ட‌வுளைக் கூவிய‌ழைத்து, தொழுநோய் க‌ண்ட‌ இட‌த்துக்கு மேலே கைக‌ளை அசைத்து என‌க்கு சுக‌ம் கொடுப்பார் என‌ நினைத்தேன். நான் ச‌க‌தியாய்க் கிட‌க்கும் யோர்தானில் மூழ்க‌ வேண்டுமாம். எங்க‌ நாட்டில் ஓடும் அபானா, ப‌ர்பார் ந‌திக‌ளெல்லாம் யோர்தானை விட‌ ஆயிர‌ம் ம‌ட‌ங்கு ந‌ல்ல‌து” என்று கோப‌த்துட‌ன் க‌த்திவிட்டு திரும்பிச் செல்ல‌த் தொட‌ங்கினார்.

அப்போது அவ‌ருடைய‌ வேலைக்கார‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் சென்று “எம் த‌ந்தையே” என‌ பாச‌மாய் அழைத்துப் பேசினார்க‌ள்.

“ஒருவேளை இறைவாக்கின‌ர் க‌டுமையான‌ ஒரு வேலையைச் செய்ய‌ச் சொல்லியிருந்தால் நீர் செய்திருப்பீர் அல்ல‌வா. அதே போல‌ இந்த‌ எளிய‌ செய‌லையும் செய்யுங்க‌ள்” என்றார்க‌ள்.

நாமான் அவ‌ர்க‌ள் பேச்சுக்கு ம‌ரியாதை கொடுத்தான். யோர்தான் ந‌திக்குச் சென்றான். ந‌தியில் மூழ்க‌ ஆர‌ம்பித்தான். ஒன்று..இர‌ண்டு.. மூன்று….. ஏழாவ‌து முறை மூழ்கி எழுந்த‌போது அவ‌ன் க‌ண்ணை அவ‌னால் ந‌ம்ப‌வே முடிய‌வில்லை. அவ‌னுடைய‌ நோய் முழுமையாய் நீங்கி விட‌, சின்ன‌ப் பிள்ளையின் தோலைப் போல‌ அவ‌ன் உட‌ல் மாறிய‌து.

உட‌னே எலிசாவிட‌ம் ஓடி வ‌ந்தான். அவ‌னுடைய‌ க‌ர்வ‌ம் எல்லாம் போயிருந்த‌து.

“இஸ்ர‌யேலைத் த‌விர‌ எங்கும் க‌ட‌வுள் இல்லை என்ப‌தை உறுதியாய் அறிந்து கொண்டேன். தயவு செய்து என் அன்பளிப்புகளை வாங்கிக் கொள்ளுங்கள்” என வேண்டிக் கொண்டான்.

எலிசாவோ எதையும் வாங்காம‌ல் அவ‌ரை அனுப்பி வைத்தார். போகும் போது ,இஸ்ரேல் நாட்டின் மண்ணை அள்ளிக் கொண்டு போன நாமான் சொன்னார்,”இனிமேல் இஸ்ரயேலின் கடவுளே என் கடவுள். வேறு கடவுளை வழிபடமாட்டேன் !”

நாமானின் க‌தை சில‌ ப‌டிப்பினைக‌ளை ந‌ம‌க்குத் த‌ருகிற‌து. எதிர்பார்ப்புக‌ளின்றி அந்த‌ அடிமைச் சிறுமியைப் போல பிறருக்கு உத‌வும் ம‌ன‌ம் ந‌ம‌க்கு இருக்க  வேண்டும்.

க‌ர்வ‌த்தைக் க‌ழ‌ற்றி வைத்துவிட்டு ஆற்றில் இற‌ங்கிய‌போது தான் நாமான்  ந‌ல‌ம‌டைந்தான். இறைவ‌னின் அருளைப் பெற‌ க‌ர்வ‌த்தைக் க‌ழ‌ற்றுத‌ல் அத்தியாவசியம்.

ந‌ல‌ம‌டைந்த‌பின் நாமான் எந்த‌த் த‌ய‌க்க‌மும் இன்றி க‌ட‌வுளை ம‌கிமைப்ப‌டுத்துகிறான். க‌ட‌வுளின் பெய‌ரை அறிக்கையிட‌ த‌ய‌ங்காத‌ ம‌ன‌நிலை வேண்டும்.

இந்த‌ பாட‌ங்க‌ளை நாமானின் வாழ்விலிருந்து க‌ற்றுக் கொள்வோம்.