நல்ல நிலமாவோம் ( Christian Article )

begood

 

“பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது”. கடவுள் தான் வானத்தையும் பூமியையும் படைத்தார். மனிதனைப் படைத்த அவர், நிலத்தைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். (ஆதி 2 :15 )இறைவனின் படைப்பில் குறையானதும் இல்லை, கறையானதும் இல்லை. நலமோடு வாழவேண்டுமெனில், நிலமோடு வாழவேண்டும் என்பது பழைய ஏற்பாட்டில் இறைவன் சொன்ன செய்தியும் கூட.

ந‌ம‌க்கெல்லாம் நில‌ம் வாங்குவ‌து ஒரு க‌ன‌வு. அது ஒரு ச‌மூக‌ அந்த‌ஸ்தின் தேவைகளில் ஒன்று. த‌ன‌க்கென‌ ஒரு இட‌ம் இருக்கிற‌து என்ப‌து பொருளாதார‌த்தின் அடையாள‌ அட்டை. திரும‌ண‌ ஒப்ப‌ந்த‌ங்க‌ளில் கூட‌ பைய‌னுக்கு அறிவு இருக்கிற‌தா என்ப‌தை விட‌ நில‌ம் இருக்கிற‌தா என்ப‌தையே முத‌லில் பார்க்கிறோம்.

நில‌ம் என்ப‌து ந‌ம‌து ப‌ர‌ம்ப‌ரையின் நீட்சி. பூர்வீக‌ சொத்து என்ப‌து ந‌ம‌து க‌லாச்சார‌த்தில் உண‌ர்வு ரீதியிலான‌து. அந்தபூர்வீக‌ சொத்தில் அரைசென்டாவ‌து ந‌ம‌க்கு வேண்டும் என‌ நினைப்பது வெறுமனே பணம் பண்ணுவதற்கானது அல்ல. ந‌ம‌து முன்னோர்க‌ளின் நினைவுக‌ளை ந‌ம‌து இத‌ய‌த்தில் ஏந்திச் செல்வ‌தைப் போன்ற‌து. அவர்களுடைய சுவாசத்தின் ஈரத்தை தலைமுறை தாண்டியும் சுமந்து செல்வதைப் போன்றது.

கால‌ம் கால‌மாக‌ ஒரு இட‌த்தில் வ‌சித்து வ‌ரும் ம‌க்க‌ள் அந்த‌ இட‌த்தை விட்டு விட்டு இன்னொரு இட‌த்துக்குச் செல்லும் வ‌லி மிக‌ப்பெரிது. வேரோடு பிடுங்கி வேறோர் இட‌த்தில் ந‌ட‌ப்ப‌டும் ப‌னைம‌ர‌ம் போல‌ அவ‌ர்க‌ளின் வாழ்க்கை நிலைகுலையும். அதுவும் வ‌லுக்க‌ட்டாய‌மாக‌ துர‌த்த‌ப்ப‌டும் ம‌க்க‌ளின் வ‌லி சொல்ல முடியாது.

அவ‌ர்க‌ளை புல‌ம் பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ள் என‌ பெய‌ரிட்டு அழைக்கிறோம். உண்மையில் அவ‌ர்க‌ள் ‘புலன்’ பெய‌ர்ந்த‌வ‌ர்க‌ள். அவ‌ர்க‌ளுடைய‌ ஐம்புல‌னும் பூர்வீக‌ இட‌த்திலேயே த‌ங்கியிருக்க உடல் பெய‌ர்ந்து போனவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள். கதியற்று அதோ கதியாய் நிற்கும் அவர்களை அகதிகள் என்கிறோம்.

இறைவ‌னின் பார்வையில் நில‌ம் என்ப‌து நாம் ப‌ற்றிக்கொண்டிருக்க‌ வேண்டிய‌ ஒன்ற‌ல்ல‌. இறைவ‌ன் ஒருவ‌ரே நாம் ப‌ற்றிக் கொண்டிருக்க‌ வேண்டிய‌வ‌ர். இறைவ‌னை முழுக்க‌ முழுக்க‌ ந‌ம்பி ப‌ய‌ணிப்ப‌வ‌ர்க‌ள் இதைப் புரிந்து கொள்கின்ற‌ன‌ர். “புற‌ப்ப‌டு” என்று சொன்ன‌வுட‌ன், நில‌ங்க‌ளையும் சொத்துக‌ளையும் உதறி விட்டுப் புற‌ப்ப‌ட்டுப் போன‌ ஆபிர‌காம் ஒரு உதார‌ண‌ம்.

இறைவ‌னைப் பின் ப‌ற்றும் போது நாம் அவ‌ர் சொல்லும் நாட்டில், அவ‌ர் காட்டும் நில‌த்தில் நுழைய‌ வேண்டும் என்ப‌து ஆன்மீக‌ பாட‌ம். அதை விட்டு விட்டு ந‌ம‌து அறிவின் துணை கொண்டு நாம் நில‌த்தைத் தேர்தெடுக்கும் போது அது க‌ட‌வுளுக்குப் பிரிய‌மில்லாத‌தாய் மாறுகிற‌து என்ப‌தையும் பழைய ஏற்பாட்டின் நிகழ்வுகள் ந‌ம‌க்குக் கற்றுத் தருகின்றன.

நில‌த்தைப் ப‌ண்ப‌டுத்துவ‌தும், பாதுகாப்ப‌தும் இறைவ‌னின் திட்ட‌த்தின் பாக‌ங்க‌ளே. “தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்” என்கிற‌து நீதிமொழிக‌ள். அதை விட்டு விட்டு நில‌த்தை ஆலைக் க‌ழிவுகளாலும், ம‌ட்காத குப்பைகளாலும், ரசாயனங்களாலும் அழிக்கும் போது அது மனுக்குலத்துக்கு ஊறு விளைபிப்பதாய் மாறுகிறது.

சக மனிதனுக்கு இன்னல் உண்டாக்கும் போது அது பாவமாகிறது. “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” பிலிப்பிய‌ர் 2:4 எனும் வ‌ச‌ன‌ம் அதைத் தெளிவாக்குகிற‌து

“கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்” என்கிறது நீதிமொழிகள் (3 :19 ). அத்துடன் நின்று விடாமல் அதை செழிப்பாக்கும் வேலையையும் அவர் செய்தார் என்பதை சங்கீதம் சொல்கிறது.

அந்த‌ பூமியை “தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்” ச‌ங் ( 65 : 9 ). என‌வே நில‌ம் என்பது விலை கொடுத்து வாங்கிய‌தால் ந‌மக்குரிய‌து ஆகிவிடுவ‌தில்லை. அது இறைவ‌ன் ந‌ம‌க்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌வும், ப‌ண்ப‌டுத்த‌வும் கொடுத்த‌ வாய்ப்பு என்றே கொள்ள‌ வேண்டும்.

ப‌ழைய‌ ஏற்பாட்டு ஆசீர்வாத‌ங்க‌ள் நில‌ங்க‌ளை அளிப்பேன் என‌வும், வாக்க‌ளிக்க‌ப்ப‌ட்ட‌ தேச‌த்தைக் கொடுப்பேன் என‌வும் தொட‌ர்ந்து கூறி வ‌ருவ‌தை நாம் அறிவோம். புதிய‌ ஏற்பாட்டில் அந்த‌ நில‌ம் ந‌ம‌து இத‌ய‌மாக‌ மாறி விடுகிற‌து.

விதைப்ப‌வ‌ன் உவ‌மையில் ந‌ம‌து இத‌ய‌மாகிய‌ நில‌த்தில், வார்த்தையாகிய‌ விதையை, இறைம‌க‌ன் விதைக்கிறார்.

இறைவ‌னிட‌ம் பாகுபாடு இல்லை. வழியோரம், முட்செடி, பாறை நிலம், நல்ல நிலம் என நான்கு வகை இதயங்களுக்கும் அவருடைய வார்த்தைகள் செல்கின்றன. “உலகெங்கும் சென்று சகல ஜாதிகளுக்கும் நற்செய்தியை அறிவியுங்கள்” என்ற அவருடைய வார்த்தை பாரபட்சம் பார்ப்பதில்லை.

“ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பும்” இறைவன் அவர். எனவே விதைகளை அவர் விதைத்துக் கொண்டே இருக்கிறார். நிலத்துக்கு ஏற்றபடி விதைகளில் வித்தியாசம் இல்லை. விதைப்பவரிடம் பாரபட்சம் இல்லை. நிலம் மட்டுமே வேறுபடுகிறது.

வ‌ழியோர‌ நில‌ம், வார்த்தைக‌ளை நிராக‌ரிப்ப‌வர்க‌ள். எதிர்ப்ப‌வ‌ர்க‌ள். “அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை”. சுய‌ந‌ல‌மும், நெஞ்ச‌ழுத்த‌மும், த‌ற்பெருமையும் கொண்ட‌ ம‌னித‌ர்க‌ள் இவ‌ர்க‌ள். இந்த‌ நில‌ங்க‌ளில் சாத்தான் ச‌க‌ஜ‌மாக‌ நுழைகிறான், ந‌ட‌க்கிறான், விழும் விதைக‌ளை எடுத்து வெளியே எறிகிறான். அதைப்பற்றிய எந்த பிரகக்ஞையும், உறுத்தலும் இன்றி நிலம் கிடக்கிறது.

பாறை நில‌ங்க‌ள் மேல் ம‌ட்ட‌த்தில் ம‌ட்டும் கொஞ்ச‌ம் ம‌ண் இருப்ப‌வை. விழுந்த‌ விதைக‌ள் அதீத‌ உற்சாக‌த்தினால் முளை விடும். ஆனால் ஒரு சின்ன‌ கிண்ட‌ல், கேலி, சோத‌னை, நோய், எதிர்ப்பு போதும் அந்த‌ முளை க‌ருகிப்போக‌. வார்த்தைக‌ள் வேர்விட‌ அனும‌திக்காத‌ பாறை நில‌ம். காற்றடித்தாலே கலைந்து விடும் காகித வீட்டைப் போன்றது.

மூன்றாவ‌து நில‌ம் முட்செடிகள் வளரும் நிலம். இங்கே விதைக‌ள் வ‌ளரும்.வேர் விடும். நில‌ம் ந‌ல்ல‌து தான். ஆனால் அந்த‌ நில‌த்தில் இன்னும் ஏக‌ப்ப‌ட்ட‌ முட்செடிக‌ள் இருக்கின்ற‌ன‌. உல‌க‌ ஆசை, இச்சை, க‌வ‌லை, எதிர்பார்ப்புக‌ள், புக‌ழ், பெருமை என‌ ஏக‌ப்ப‌ட்ட‌ செடிக‌ள். இவ‌ற்றை வெட்டி எறிந்து விட்டு விதைத்திருந்தால் விதை ப‌ல‌ன் கொடுத்திருக்கும். நிலத்தைப் பண்படுத்திவிட்டு விதைத்திருந்தால் பலன் கொடுத்திருக்கும். அந்த முட்செடிகள் எல்லாம் இருக்கட்டும், கூட‌வே இறை வார்த்தையும் இருக்க‌ட்டும் என‌ நினைக்கும் நில‌ம்.

நான்காவ‌து நில‌ம் ந‌ல்ல‌ நில‌ம். விதையைப் பெறுகிற‌து, வேர்விட‌ அனும‌திக்கிற‌து, வ‌ள‌ர்ந்து வ‌ர‌ துணை செய்கிற‌து. ப‌ல‌ன் கொடுக்கிற‌து. அதுவும் ஒரு சின்ன விதை முப்பது மடங்கு, அறுபது மடங்கு, நூறு மடங்கு என வியப்பூட்டும் விளைச்சல் கொடுக்கிறது.

ந‌ம‌து இத‌ய‌ம் ந‌ல்ல‌ நில‌மாக‌ இருக்கிற‌தா என்ப‌தைப் ப‌ரிசீல‌னை செய்து கொள்வோம். ந‌ல்ல‌ நில‌ம் விதைக‌ளை ஏற்றுக்கொள்கிற‌து, வேர் விட‌ அனும‌திக்கிற‌து, முட்க‌ளை அக‌ற்றி வ‌ள‌ர‌ வ‌ழி செய்கிற‌து, வெறும் விதையாய் புதைந்து விடாம‌ல் ம‌ண்ணைக் கீறி வெளியே வ‌ந்து ப‌ய‌ன் த‌ருகிற‌து.

இறை வார்த்தைக‌ளை ந‌ம் இத‌ய‌த்தில் ஏற்போம், அதை ம‌ன‌தில் நிலை கொள்ள‌வும், வ‌ள‌ர‌வும் அனும‌திப்போம். தேவைய‌ற்ற‌ உல‌க‌ சிந்த‌னைக‌ள் ஆட‌ம்ப‌ரங்க‌ள், இச்சைக‌ள் போன்ற‌வை முளையை அழித்து விடாம‌ல் க‌வ‌ன‌மாய் இருப்போம். விசுவாசம், செபம், தூய வாழ்க்கை எனும் உரங்களாலும், தூய ஆவி எனும் நீராலும் விதைக‌ளை ப‌ய‌ன்கொடுக்கும் செடியாக‌ வ‌ள‌ர்த்தெடுத்து அனைவ‌ருக்கும் க‌னி கொடுப்போம்.

இறைவன் விரும்பும் ந‌ல்ல‌ நில‌ம் விலையை வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. விளைச்ச‌லை வைத்தே நிர்ண‌யிக்க‌ப்ப‌டுகிற‌து. விளைச்ச‌ல் கொடுப்ப‌தில் முத‌ன்மையாய் இருப்போம் . அந்த‌ வாக்க‌ளிக்க‌ப்ப‌ட்ட‌ நில‌மாக‌ ந‌ம் இத‌ய‌த்தை மாற்றுவோம்.

*

( Desopakari Katturai)

என்ன நடக்கிறது கிரீஸில் ?

greek

 

தாங்கள் சேமித்த பணம் பத்திரமாக இருக்க வேண்டும், தேவையான நேரத்தில் தமக்கு உதவ வேண்டும் என்பது தான் சாமானியர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்ற எதிர்பார்ப்பு. அதனால் தான் பைனான்ஸ் நிறுவனங்களை நம்பாமல், தேசிய வங்கிகளில் பணத்தைச் சேமியுங்கள் என பெரியவர்கள் அறிவுரை சொல்கிறார்கள்.

அப்படி வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்தினால் கூட எந்த ஒரு பயனும் இல்லாமல் போகலாம் எனும் நிலமை ஒரு தேசமே திவாலானால் நடக்கும் ! அப்போது வங்கிகளில் நாம் சேமித்து வைத்திருக்கும் பணம் எல்லாம் வெறும் எண்களாக மாறிவிடும். இலட்சக்கணக்கான பணம் வங்கியில் இருந்தால் கூட அடுத்த வேளை சாப்பாட்டுக்கு பணம் எடுக்க முடியாத கொடுமை நேரிடும்.

அந்த நிலமையில் தான் கிரீஸ் இப்போது சிக்கித் தவிக்கிறது. தத்துவஞானி சாக்ரடீஸ் பிறந்த மண் இன்று கடனில் சிக்கித் தவிக்கிறது. அதி பலசாலி ஹெர்குலிஸின் தேசம் இன்று வலுவிழந்திருக்கிறது.

ஒரு நாளைக்கு 60 யூரோவுக்கு மேல் ஏடிஎம்மில் எடுக்க முடியாது, வேறு நாடுகளுக்கு ஆன்லைன் பணப் பரிமாற்றம் செய்ய முடியாது உட்பட பல்வேறு நிபந்தனைகள் கிரீஸ் நாட்டு மக்கள் மேல் திணிக்கப்பட்டுள்ளதால் மக்கள் செய்வதறியாது திகைத்திருக்கின்றனர்.

2008களில் உலகமே பொருளாதார வீழ்ச்சியில் உடைந்து பதறியபோதும் கிரீஸ் சமாளித்து நின்றது. ஆனால் அதன் பின் அவர்களுடைய பொருளாதார வளர்ச்சி வேகமாக வலுவிழக்க ஆரம்பித்தது. நெகடிவ் 1.2 சதவீதம் எனுமளவுக்கு அடுத்த ஆண்டில் பொருளாதார வீழ்ச்சி இருந்தது.

2010ல் சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்), ஐரோப்பிய வங்கி (ஈ.சி.பி) மற்றும் ஐரோப்பிய கமிஷன் இணைந்து நூற்று பத்து பில்லியன் யூரோவை கடனாக வழங்கின. மூன்று வருடங்களுக்குள் பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுக்க வேண்டும் எனும் கந்து வட்டிக் கண்டிப்புடன்.

கிரீஸ் தன்னால் இயன்ற பல நடவடிக்கைகளை எடுத்தது. தொழிலாளர்களின் போனஸ், ஊதிய உயர்வு போன்றவற்றை நிறுத்தியும், சேவை வரியை உயர்த்தியும், சில திட்டங்களை தாமதப்படுத்தியும் சமாளிக்கப் பார்த்தது. ஆனால் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லை. யானைப் பசிக்குப் போட்ட சோளப்பொரி போல அது காணாமல் போய்விட்டது.

2012ல் மீண்டும் ஒரு 130 பில்லியன் யூரோவை கடனாய் வாங்கியது கிரீஸ். அதை வைத்துக் கொண்டும் பெரிதாக எந்த முன்னேற்றத்தையும் காட்ட முடியவில்லை. தினசரி வாழ்க்கையை ஓட்டுவதற்கே அது தேவைப்பட்டது. கடன் வாங்கிக் கடன் வாங்கி வாழும் குடும்பம் நடுத்தெருவிற்கு விரைவிலேயே வந்து விடுவது போல கிரீஸ் நான்கு பேர் கேள்வி கேட்கும் நிலைக்கு வந்து விட்டது.

ஜெர்மனிக்கு 68.2 பில்லியன், பிரான்ஸ் க்கு 43.8 பில்லியன், இத்தாலிக்கு 38.4 பில்லியன், ஸ்பெயினுக்கு 25 பில்லியன்,அமெரிக்காவுக்கு 11.3 பில்லியன், இங்கிலாந்துக்கு 10.8 பில்லியன் உட்பட சுமார் 270 பில்லியன் யூரோ கடன் இப்போது கிரேக்கத்தின் தலையில்.

சரி, ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவோம், காட்சி மாறுகிறதா பார்க்கலாம் என இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த தேர்தலில் மாற்று ஆட்சி யான இடதுசாரியின் அலெக்சிஸ் சிப்ரஸ் பதவிக்கு வந்தார். அவரிடமும் வறுமையையும் கடனையும் சட்டென அடைக்கும் மந்திரக் கோல் இல்லை.

ஒரு நாலு மாசம் கழிச்சு பணத்தைக் கொடுத்துடறேன் என கேட்டு வாங்கிய தவணையும் ஜூன் 30ம் தியதியோடு நின்று போக, கடன் கொடுத்தவர்கள் குரல்வளையை நெரிக்க ஆரம்பித்தார்கள். கடன் கொடுக்க முடியாவிட்டால் நாங்கள் சொல்லும் நிபந்தனைகளைக் கேள் என நிர்ப்பந்தம் கொடுத்தனர்.

அவர்களுடைய நிபந்தனை ரொம்ப சிம்பிள். “மக்களுடைய வயிற்றில் அடித்து எங்கள் கடனை அடை !” என்பது தான் அவர்களுடைய நிர்ப்பந்தம்.

முதலாளித்துவம் வரியைக் கூட்டு, பென்ஷனை குறை, ரிட்டயர்ட்மென்ட் வயதை அதிகரி என ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாக நிற்க, எளியவர்களோ வங்கியில் கிடக்கும் கொஞ்சம் பணத்தைக் கூட பயன்படுத்த முடியாமல் திகைத்தனர்.

கடன்கொடுத்தவர்களின் நிபந்தனைக்கு ஒப்புக்கொள்வதா வேண்டாமா என்பதை அறிய அரசு பொது வாக்கெடுப்பு நடத்தியது. நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளாவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக நேரிடும். இப்போதைய கரன்சியை மாற்ற வேண்டியிருக்கும். பணவீக்கம் சுனாமியாய் தாக்கும். வெளிநாட்டு உதவிகளெல்லாம் நின்று போகும் என ஏகப்பட்ட சிக்கல்கள்.

ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் 25 சதவீதம் எனவும், குழந்தை வறுமை நிலமை 40 சதவீதம் எனவும் திணறிக் கொண்டிருக்கையில் உலகத்தின் கோபத்தையும் சம்பாதிக்க வேண்டுமா எனும் குழப்பம் ஒரு பக்கம். மக்களோ அரசின் பக்கம் நின்றார்கள். 61 சதவீதத்துக்கும் ஆதிகமானோர் அரசின் சார்பாய் வாக்களித்தார்கள்.

மக்களின் வளர்ச்சியையும், வாய்ப்புகளையும் பறித்து வட்டியாக கட்டிய பணம் பல்லாயிரம் கோடி. ஏற்கனவே கிரீஸ் நாடு சுகாதாரத்துக்காக செலவிடும் பணத்தையும், மருத்துவத்துக்காகச் செலவிடும் பணத்தையும் பாதிக்கு மேல் குறைத்திருந்தது. இதனால் குழந்தைகள் பிறக்கும் விகிதம் குறைந்தும், குழந்தைகள் இறந்தே பிறக்கும் விகிதம் அதிகரித்தும் இருக்கிறது.

இருந்தாலும் உலக நாடுகள் கிரீஸிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ளவில்லை. இத்தகைய சூழலில், கிரீஸ் மக்களின் உறுதியான நிலைப்பாடு உலக நாடுகள் எதிர்பாராத ஒன்று. ஐரோப்பிய யூனியன் பெருந்தலைகள் இந்த முடிவினால் சற்று நிலைகுலைந்து போயிருக்கின்றன. யூரோவின் மதிப்பு சட்டென ஒரு சிறு சறுக்கலையும் சந்தித்திருக்கிறது.

பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள் கிரீஸுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கின்றன. இந்த நாடுகளும் தங்கள் தலையில் கடனை வைத்திருக்கின்றன. இங்கும் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி இல்லை. ஒரு வேளை நாமும் நாளை நடுத்தெருவில் நிற்கலாம் எனும் அச்ச உணர்வே இதன் காரணம். இப்படி ஐயோப்பிய யூனியன் இரண்டாக உடைந்தால் அதனால் பயனடையப் போவது அமெரிக்காவின் டாலர் என்பதும், வலுவிழக்கப் போவது யூரோ என்பதும் தான் ஐரோப்பிய யூனியனை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

நாடுகள் கைவிட்டால் கிரீஸின் நிலமை இன்னும் மோசமாகி விடும் அபாயம் உண்டு. கிரீஸுக்கென தனி கரன்சி இல்லை. யூரோவே அங்கு பணமாக பயன்படுத்தப்படுகிறது. கிரீஸை ஆதரிப்பதில்லை என நாடுகள் முடிவெடுத்தால் அதன் வங்கிகளில் பணம் இருக்காது. மக்களின் வாழ்க்கை ஒட்டுமொத்தமாய் முடங்கும். அரசு அவசர அவசரமாக புதுப் பணத்தை அச்சிட்டு மக்களுக்கு வழங்கவேண்டியிருக்கும். அது அவ்வளவு எளிதானதல்ல. இப்படி அடுக்கடுக்காய் இமாலயப் பிரச்சினைகள் அவர்கள் தலையில்.

இத்தகைய சூழலில் கிரீஸ் நாட்டில் மக்களிடையே உருவாகியுள்ள எழுச்சி உலக வரலாற்றில் முக்கியமானது. உள்நாட்டு வளங்களைச் சார்ந்த வாழ்க்கை முறையை நாடுகள் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை கிரீஸ் நாட்டின் இன்றைய நிலமை நெற்றிப் பொட்டில் அறைந்து உணர்த்தியிருக்கிறது.

மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற கிரீஸுக்கு மனரீதியான வெற்றி கிடைத்திருக்கிறது. ஆனால் பண உதவி கிடைக்காவிட்டால் அவர்களால் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வர முடியாது. எனவே கிரீஸ் நாடாளுமன்றம் மீண்டும் கூடி கடன் கொடுத்தவர்களின் நிபந்தனைகளை ஏறக்குறைய ஏற்றுக் கொண்டும், சிலவற்றை மாற்றியும் புதிய ஒரு திருத்தப்பட்ட ஒப்பந்தப் பட்டியலை அளித்திருக்கிறது.

இந்த புதிய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டால் நாடுகள் மீண்டும் ஒரு முறை தங்களுக்கு 53.3 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை கிரீஸ் வைத்திருக்கிறது. ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு மீண்டும் கடனுதவி கிடைத்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் வீழ்ச்சியிலிருந்து கிரீஸ் ஓரளவு மீண்டு வரும் என்பது வல்லுநர்களின் எதிர்பார்ப்பு.

இதற்கிடையே வங்கியில் கிடக்கும் பணம் தங்களுக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ எனும் பதட்டம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. எனவே அவர்கள் தங்களுடைய கிரடிட், டெபிட் கார்ட்களைப் பயன்படுத்தி தங்கமாகவோ, வைரமாகவோ, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களாகவோ வாங்கிக் குவித்து வருகின்றனர். அதே நேரம் பணமாகக் கொடுக்க வேண்டிய இடங்களில் செலவுகளைக் குறைத்து வருகின்றனர். குறிப்பாக பார்கள், திரையரங்கங்கள், நாடக இடங்களெல்லாம் ஈயோட்டுகின்றன.

கிரீஸின் வீழ்ச்சி உலக அளவில் பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். கிரீஸைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக சீன பொருளாதாரத்தில் நிலவி வரும் சறுக்கல் உலக நாடுகளிடையே மீண்டும் அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. டாலருக்கு நிகரான யென் மதிப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி நேர்ந்திருக்கிறது. இதனால் சர்வதேசச் சந்தையில் தங்கமும் விலை வீழ்ச்சி அடையும் சூழல் உருவாகியிருக்கிறது.

உள்நாட்டுத் தொழிலை ஊக்குவிக்காமல், விவசாயத்தை வளப்படுத்தாமல், சிறு தொழில்களை மேம்படுத்தாமல் முதலாளித்துவத்தின் கைவிசிறிகளாகச் செயல்படும் எந்த நாடும் இத்தகைய சிக்கலில் சிக்கிக் கொள்ளலாம் என்பதன் எச்சரிக்கை மணி இது.

*

 

சேவியர்

( Thanks : Namma Adayalam )

 

 

 

 

 

 

விடுமுறைகளும், விதிமுறைகளும் ( Vettimani, London)

Group Of Children Running In Park

‘அவசர உலகம்’ என்று தான் இன்றைய வாழ்க்கையை அழைக்கிறார்கள். அவசரமாய் எழும்பி, அவசரமாய் ஓடி, அவசரமாய் வீடு வந்து, அவசரமாய் தூங்கி, அவசரமாய் எழும்பி என வாழ்க்கை ஓடுகிறது. நின்று நிதானித்தால் ஏதோ உலகமே இடிந்து விழுவது போல எல்லாரும் பாவிக்கிறார்கள்.

ஒரு நண்பரைப் பார்த்தால் உற்சாகமாய்க் கட்டியணைத்து அரை மணி நேரம் பேச யாருக்கும் நேரம் இருப்பதில்லை. “ஹாய்… வாட் எ சர்ப்ப்ரைஸ்..” என ஒரு வார்த்தை பேசிவிட்டு. அதிகபட்சம் அவருடைய எண்ணை வாங்கி வாட்ஸப்புவோம். அல்லது “பேஸ்புக்ல என்ன நேம் ல இருக்கே ?” என கேட்டு வாங்கி விடைபெறுவோம்.

நமது உறவுகள் டிஜிடல் மயமாகிவிட்டன. இதயங்களின் இறுக்கத்தை இணையத்தின் இருப்பு பறித்துக் கொண்டு விட்டது. எல்லோருமே நெருக்கமாய் இருப்பது போன்ற ஒரு மாயைக்குள் சிக்கிக் கொள்ளப் பழகிவிட்டோம்.

நமது பிள்ளைகள் காலையில் எழும்பி போகோ சேனல் பார்த்து விட்டு, ஸ்கூல் சென்று திரும்பி டோரேமான் பார்த்து சாப்பிட்டுவிட்டு, ஹோம் வர்க் முடித்து ஐபேட்களில் ஐக்கியமாகி விடுகின்றனர். அவர்கள் தூங்கிய பின் தான் பாதி பெற்றோர் வீடுகளுக்கே திரும்புகிறார்கள்.

கணவன் மனைவி யிடையேயான உரையாடல்களையும் வாழ்க்கையின் பொருளாதாரத் தேவைகள் பறித்து விட்டன.குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையேயான உரையாடல்களை மொபைல் ஆப்ஸ் பறித்து விட்டன. இத்தகைய சூழலில் எல்லோருக்கும் தேவையான ஒரு விஷயம் விடுமுறையில் ஒரு பயணம்.

ரயில் பயணங்களில் பார்த்திருக்கிறேன். ஒரு குடும்பம் ரயிலில் பயணம் செய்யும். அப்பா ஒரு ஓரமாய் அமர்ந்து வாட்ஸப்பிக் கொண்டிருப்பார், அம்மா ஃபேஸ் புக்கிக் கொன்டிருப்பார், பிள்ளைகள் க்ளேஷ் ஆஃப் கிளான்ஸ் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இடையே இருக்க வேண்டிய சிரிப்பும், உற்சாகமும், அடித்துப் பேசி மகிழும் கணங்களும் எல்லாமே டெக்னாலஜி கருவிகளில் சமாதியாகி விடுகின்றன.

பயணங்கள் விடுமுறையின் ஒரு முக்கியமான அம்சம். அதில் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம் எல்லா கேட்ஜெட்களையும் தூக்கி மூட்டை கட்டி வீட்டிலேயே போட்டு விட்டுக் கிளம்புவது தான். அவசரத்துக்குப் பேச ஒரு போன் கையில் இருந்தால் போதுமானது.

பயணங்கள் முதலாவது நமது குடும்பத்தினரிடையே ஒரு ஆழமான புரிதலை உருவாக்க வேண்டும். என் பையன் எவ்வளவு அழகா பேசறான் என்பதையே பல பெற்றோர்கள் இத்தகைய பயணங்களில் தான் புரிந்து கொள்கிறார்கள். மனைவியோடு மனம் விட்டுப் பேசும் தருணங்களும், குழந்தைகளோடு குழந்தையாய் புரளும் தருணங்களும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குகின்றன. இந்த பிணைப்பைத் தான் விடுமுறைப் பயணங்கள் தரவேண்டும்.

பயணங்கள் நமது ஆயுளை நீட்டிக்கும் என்றும், மன அழுத்தத்தை விலக்கும் என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. விட்டு விடுதலையாகி ஒரு சிட்டுக் குருவியைப் போல பறந்து திரியும் ஒரு ஆனந்த அனுபவத்தை அனுபவித்துப் பாருங்கள். வாழ்க்கை என்பது வரப்போகும் நாட்களிலல்ல, கடந்து செல்லும் கணங்களில் இருக்கிறது என்பதே வாழ்க்கையின் தத்துவம்.

விடுமுறை பயணங்கள் செல்லும் பல பெற்றோர் செய்யும் தவறு கூடவே தாங்கள் யார் எனும் அடையாளத்தையும் கூடவே தூக்கிச் சுமப்பது தான். நான் ஒரு மேனேஜர், நான் ஒரு முதலாளி, நான் ஒரு அப்பாடக்கர் போன்ற சிந்தனைகளைத் தூக்கிக் கொண்டு பயணம் செல்லாதீர்கள். உங்களுக்கு உள்ளே ஒளிந்து கிடக்கும் உங்களுடைய மழலைக்கால முகமோ, அல்லது யாருக்கும் தெரியாத உங்களுடைய ரசனை முகமோ வெளியே வரட்டும்.

“அங்கே ஓடாதே”, “இங்கே போகாதே”, ” அது அழுக்கு அதெல்லாம் தொடாதே” எனும் தொடர் கட்டுப்பாடுகளை இட்டு விடுமுறையை விதிகளின் முறையாக்கி விடாதீர்கள். மணல் வீடு கட்டுங்கள், அலையில் புரளுங்கள். ஆடை அழுக்காவது தான் மனது சுத்தமாவதன் அடையாளம். மனதின் கவசங்களைக் கழற்றாமல் தும்பி பிடிக்க முடியாது. விடுமுறை என்பது நீங்கள் எப்படி இருக்க வேண்டுமென நீங்கள் முடிவெடுப்பது. அடுத்தவர்களுக்காக எதையும் போலித்தனமாகச் செய்யாதீர்கள்.

சரி, விடுமுறைக்கு பயணம் எதுவும் போக முடியவில்லை என வைத்துக் கொள்ளுங்கள். பரவாயில்லை. ஒரு நாளை முழுமையாய் “நோ எலக்ட்ரானிக் டே” என அழைத்து குடும்பமாய் விளையாடுங்கள். லேப்டாப், போன், டேப்லெட் எல்லாமே அறைகளில் அடங்கிக் கிடக்கட்டும். அவை விரல்களால் பேசும் ஊடகங்கள். விரல்களால் பேசுவதை விட விழிகளால் பேசுவது அழகானது என்பதை உணருங்கள்.

வீட்டிலேயே ஒரு குட்டி மீட்டிங் போடுங்கள். பாடல், ஆடல், உரையாடல், பகிர்தல், விளையாடுதல் என ஏதேனும் சுவாரஸ்யமாய் செய்து கொண்டே இருங்கள். நேரத்தைப் பற்றியோ, வேறு எதைப் பற்றியோ சிந்தனையற்று இருங்கள். நீங்கள் அப்படிச் செலவு செய்யும் நேரத்தில், உறவையும் அன்பையும் மகிழ்வையும் சம்பாதிப்பீர்கள்.

கடைசியாக எப்போது உங்கள் பெற்றோரைச் சென்று பார்த்தீர்கள், அல்லது சற்றுத் தொலைவில் இருக்கும் உங்கள் சகோதரனையோ, சகோதரியையோ சென்று பார்த்தீர்கள் ? இந்த விடுமுறை அத்தகைய ஒரு வாய்ப்பை நல்கலாமே. குடும்பத்தோடு கிளம்பி உறவினர்களைச் சந்தித்து ஒரு இனிமையான அன்புப் பரிமாற்றத்தை நடத்துங்கள். அல்லது நீண்டகால நண்பன், ஒரு உறவினர் என உறவின் எல்லையை அதிகப்படுத்துங்கள்.

இன்னும் அதிக அர்த்தமுள்ளதாக இந்த விடுமுறையைக் கழிக்க வேண்டுமா ? குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒரு அனாதை இல்லம் செல்லுங்கள். அங்கே உள்ள குழந்தைகளுடன் உங்கள் குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள். அங்கே உள்ள பெரியவர்களின் அருகே அமர்ந்து கதைகளைக் கேளுங்கள். வாழ்வின் முழுமை இத்தகைய நிகழ்வுகளில் இருக்கிறது. உங்கள் குழந்தைகள் வாழ்வின் உன்னதத்தை உணர்வார்கள். பிறரோடு நேசமாய் இருக்க வேண்டியதன் தேவையை அறிவார்கள்.

வெளியே செல்லும் வாய்ப்பும் இல்லாத சூழல் என வைத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு மழை நாள் என நினைத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்குள்ளேயே செய்யக் கூடிய ஒரு ஹாபியை எடுங்கள். அது ஓவியம் வரைவதாக இருந்தால் எல்லாரும் சேர்ந்து ஓவியம் வரைந்து மகிழுங்கள். அல்லது ஒரு கொலாஜ் செய்து ரசியுங்கள். என்ன செய்கிறீர்கள் என்பதல்ல முக்கியம் எப்படி இணைந்து செய்கிறீர்கள் என்பதே முக்கியம். ஓவியம் அழகாக இருப்பதல்ல முக்கியம், குடும்பம் அன்பாக இருப்பதே முக்கியம்.

இப்போதெல்லாம் வீடியோ கேமராக்கள் கையடக்க போனிலேயே ஹைடெக் முறையில் வந்து விட்டது. வீட்டுக்குள்ளேயே ஒரு குட்டி நாடகம், நடனம், பாட்டு என எதையாவது ரெக்கார்ட் செய்து மகிழலாம். அது உங்களுடைய அந்த விடுமுறையின் இனிமையை டிஜிடல் கனவாக தனக்குள் பதுக்கியும் வைத்துக் கொள்ளும்.

வீட்டில் சின்னக் குழந்தைகள் இருந்தால் நல்ல கதைகளை வாசிக்கலாம். கதைகள் சொல்ல குழந்தைகளை உற்சாகப் படுத்தலாம். ஒருவர் கதையை ஆரம்பித்து, அடுத்தவர் அதைத் தொடரும் படி பிள்ளைகளின் கற்பனை வளத்தை ஊக்குவிக்கலாம். அதெல்லாம் இல்லையேல் குறைந்தபட்சம் கேரம், சீட்டு போல எல்லாரும் உட்கார்ந்து விளையாடும் ஏதோ ஒரு விளையாட்டையேனும் விளையாடலாம்.

விட்டுக் கொடுத்தலும், பிறருடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தலும், பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதும் விடுமுறை காலத்தில் மிக அவசியம். அதுவும் நீங்கள் வேறு குடும்பத்தினருடன் சேர்ந்து விடுமுறையைக் கொண்டாடுகிறீர்களெனில் இது நிச்சயம் தேவை.

விடுமுறையின் முடிவில் இனிய நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கட்டும். ஏதேனும் கசப்பு அனுபவங்கள் இருந்தால் அதை அப்படியே கைகழுவி விட்டு விடுங்கள். தூக்கிச் சுமக்காதவரை எந்த சுமையும் நமக்கொரு பொருட்டல்ல.

சுருக்கமாக, விடுமுறை என்பது நம்மை புதுப்பித்துக் கொள்வதாகவும், நமது ரசனைகளின் விளை நிலத்தில் விளையாடும் காலமாகவும், உறவுகளின் இனிமையை உணரும் காலமாகவும், மனித நேயத்தின் கிளைகள் செழிக்கும் காலமாகவும் இருக்கட்டும். விடுமுறையில் டிஜிடலுக்கு விடைகொடுங்கள், உறவுகளுக்கு உயிர் கொடுங்கள்.

வாழ்த்துகள்

 

 

 

 

 

தற்கொலை : உன் உயிர் உன‌த‌ல்ல ( A Christian View )

suicide-note

“இந்த பத்து லட்ச ரூபாயை பத்திரமா வெச்சுக்கப்பா. இதை வெச்சு நிறைய பிளான் பண்ணியிருக்கேன்” என்று நீங்கள் உங்கள் நண்பரிடம் ஒரு பெட்டியைக் கொடுக்கிறீர்கள். உங்கள் நண்பர் கொஞ்ச நாளிலேயே உங்களை மறந்து விட்டு பணத்தை இஷ்டம் போல செலவழித்துத் தீர்க்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபர் குற்றவாளியா இல்லையா ? அவர் நம்பிக்கை துரோகியா இல்லையா ?

“உன்னை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு படைத்திருக்கிறேன். என்னை பற்றிக் கொள். என் கட்டளைகளைக் கைக்கொண்டு வாழ்” என்கிறார் கடவுள். அதை அலட்சியப் படுத்திவிட்டு அவர் தந்த உயிரை அழித்து விடுவது குற்றமா இல்லையா ?

த‌ற்கொலை என்ப‌து ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் ந‌ட‌ப்ப‌த‌ல்ல‌. உல‌க‌ அள‌வில் ஒவ்வொரு நாற்ப‌து வினாடிக்கும் ஒரு ந‌ப‌ர் த‌ற்கொலை செய்து கொள்கிறார். 2012ம் ஆண்டைய‌ க‌ண‌க்குப்ப‌டி உல‌கிலேயே த‌ற்கொலையில் முன்ன‌ணியில் இருக்கும் நாடு எனும் அவ‌ப் பெய‌ர் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிற‌து.

இர‌ண்ட‌ரை இல‌ட்ச‌ம் இந்தியர்கள் 2012ம் ஆண்டில் ம‌ட்டும் த‌ற்கொலை செய்திருக்கிறார்க‌ள். எதில் வருகிறதோ இல்லையோ தற்கொலையின் டாப் 3 பட்டியலில் தமிழ்நாடு எப்போதும் வந்து விடுகிறது. உல‌க‌ அள‌வில் ஆண்டுக்கு சுமார் பத்து இல‌ட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாய் உலக நலவாழ்வு நிறுவனம் சொல்கின்ற‌ன‌. அதில் 75 ச‌த‌வீத‌ம் பேர் ம‌த்திய‌த‌ர‌, அல்ல‌து வ‌றுமைக்கோட்டில் இருக்கின்ற‌ ம‌க்க‌ள் தான். 15 வ‌ய‌துக்கும் 29 வ‌ய‌துக்கும் இடைப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் மிக‌ அதிக‌ அள‌வில் த‌ற்கொலை செய்து கொள்கின்ற‌ன‌ர் எனும் த‌க‌வ‌ல் உண்மையிலேயே ப‌த‌ற‌டிக்கிற‌து.

த‌ற்கொலைக்கான‌ கார‌ண‌ங்க‌ளில் ம‌ன‌ அழுத்த‌ம் முத‌லாவ‌து இட‌த்தைப் பிடிக்கிற‌து. ப‌ல்வேறு கார‌ண‌ங்க‌ளுக்காக‌ இந்த ம‌ன‌ அழுத்த‌ம் வ‌ர‌லாம். நிராக‌ரிப்பு, தோல்வி, அவ‌மான‌ம், பொறாமை, எரிச்ச‌ல், என‌ எதுவாக‌வும் இருக்க‌லாம். ஆனால் ச‌ர்வ‌தேச‌ அள‌வில் இது தான் த‌ற்கொலைக்கான‌ முத‌ல் கார‌ண‌மாக‌ இருக்கிற‌து.

இர‌ண்டாவ‌து கார‌ண‌ம் ந‌ம்பிக்கை இழ‌ப்ப‌து. தொட்ட‌தெல்லாம் தோல்வி. உப்பு விக்க‌ போனா ம‌ழை பெய்யுது, ப‌ஞ்சு விக்க‌ போனா காத்த‌டிக்குது என‌ புல‌ம்புப‌வ‌ர்க‌ள் ஒரு க‌ட்ட‌த்தில் போதும‌டா சாமி என‌ வாழ்க்கையை முடித்துக் கொள்ள‌ நினைக்கின்ற‌ன‌ர்.

ப‌ய‌ம் இன்னொரு முக்கிய‌மான‌ கார‌ண‌ம். வாழ்க்கையைக் குறித்த‌ ப‌ய‌ம். பிற‌ ச‌க்திக‌ளைக் குறித்த‌ ப‌ய‌ம். நோயைக் குறித்த‌ ப‌ய‌ம். எதிரிக‌ளைக் குறித்த‌ ப‌ய‌ம். எதிர்கால‌ம் குறித்த‌ ப‌ய‌ம். த‌ண்ட‌னை குறித்த‌ ப‌ய‌ம் என‌ ஏதோ ஒரு ப‌ய‌ம் த‌ற்கொலைக்குத் தூண்டுவ‌து பொதுவான‌ கார‌ண‌ங்க‌ளில் ஒன்று.

ப‌தின் வ‌ய‌துக‌ளில் ந‌ட‌க்கின்ற‌ த‌ற்கொலை முய‌ற்சிக‌ள் பெரும்பாலும் முட்டாள்த‌ன‌மான‌வை. “ஒரு பாட‌ம் க‌த்துக்கொடுக்க‌ணும்” என்ப‌தே பெரும்பாலான‌ ம‌ன‌துக்குள் நுழையும் சிந்த‌னை. பெற்றோருக்கு, காத‌ல‌ர்க்கு, ந‌ண்ப‌ர்க‌ளுக்கு, உற‌வின‌ர்க்கு என‌ யாரோ ஒருவ‌ருக்கு வ‌லியைக் கொடுப்ப‌தாய் நினைத்துக் கொண்டு த‌ற்கொலை செய்து கொள்கின்ற‌ன‌ர்.

கார‌ணங்கள் நூற்றுக் கணக்கில் இருந்தாலும் அடிப்ப‌டை விஷ‌ய‌ம் ஒன்று தான். ந‌ம்மையெல்லாம் ப‌டைத்துக் காக்கும் இறைவ‌ன் ந‌ம்மைக் க‌வ‌னிக்கிறார் என்ப‌தை ம‌ற‌ந்து போத‌ல். தாயின் க‌ருவில் உருவாகும் முன்பே ந‌ம்மைக் க‌ண்ட‌ தேவ‌ன் ந‌ம‌து இந்த‌ சிக்க‌லில் இருந்தும் விடுப‌ட உத‌வுவார் என்ப‌தை ம‌ற‌ந்து போத‌ல். உன்னைத் தொடுவோன் என் க‌ண்ம‌ணியைத் தொடுகிறான் என்று சொன்ன‌ தேவ‌ன் ந‌ம் மீது அதீத‌ அன்பு கொண்டிருக்கிறார் என்ப‌தை ம‌ற‌ந்து போத‌ல். க்ஷ்`

பத்து கட்டளைகளைப் பற்றித் தெரியாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது. ‘கொலை செய்யாதிருப்பாயாக’ என்பதும் அதில் ஒரு கட்டளை என்பதை யாவரும் அறிவோம். சக மனிதனைக் கொலை செய்வது பெரும் பாவம். அதே போல சுய மனிதனை, அதாவது தன்னைக் கொலை செய்வதும் பாவமே. அதனால் தான் அதைத் தற் கொலை என பெயரிட்டு அழைக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் “அடுத்தவனை” கொலை செய்யாதிருப்பாயாக என கட்டளை சொல்லவில்லை, “கொலை செய்யாதிருப்பாயாக” என பல பொருள் பட கூறுகிறது எனலாம்.

சுருக்கமாக, இறைவன் கொடுத்த உயிரை முடித்துக் கொள்வது என்பது இறைவனுக்கு எதிரான செயல். எனவே தான் அது பாவமாகிறது.

“கடவுளே.. என்னோட பிரச்சினையை உம்மால கூட தீக்க முடியாது. நான் சாகறது மட்டும் தான் இதுக்கு ஒரே வழி” என்பது தான் தற்கொலை செய்பவர்களின் மனநிலை. தற்கொலை விசுவாசமின்மையின் அடையாளம்.

உயிர் என்பது கடவுளால் மட்டுமே வருகிறது. கர்ப்பத்தை அடைப்பதும், திறப்பதும் அவருடைய சித்தம் என்பதை பைபிள் பல இடங்களில் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ‘பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்’ எனும் வசனத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எனவே தான், “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்” என யோபுவைப் போல‌ அவ‌ரிட‌ம் ச‌ர‌ண‌ட‌வ‌து அவ‌சிய‌மாகிற‌து.

வாழ்க்கை மிக‌வும் ச‌வாலானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. போட்டியும் பொறாமையும் நிறைந்த‌ இந்த‌ உலகில் வாழ்க்கையை ஓட்டுவ‌து க‌டின‌மான‌து. இந்த‌ போராட்ட‌மான‌ வாழ்க்கையில் ப‌ல‌ வேளைக‌ளில் நாம் நிலை த‌டுமாறுவ‌துண்டு. “நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் ” ( யோனா 4 : 8) என‌ யோனா புலம்பினார். “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்” என எலியா புலம்பினார். அத்தகைய துயர வேளைகளிலும், கடவுளை நோக்கும் போது கடவுள் விடுவிக்கிறார்.

பைபிளில் எல்லோருக்கும் தெரிந்த இரண்டு தற்கொலைகள் உண்டு. ஒன்று சவுல் மன்னனுடையது. அவர் த‌ன‌து வாளை த‌ரையில் ந‌ட்டு அத‌ன் மேல் விழுந்து த‌ற்கொலை செய்து கொள்கிறார். இர‌ண்டாவ‌து யூதாஸ் தூக்கு மாட்டிக்கொண்டு த‌ற்கொலை செய்து கொள்கிறார். கடவுளை நோக்காமல் தன்னை நோக்குகையில் மனிதன் பாவம் செய்கிறான்.

ஆன்மீக‌த்தில் உய‌ர் நிலையில் இருந்த‌ ப‌வுல், “மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார்” ( 2 கொரி 1 : 8 9 ) என‌ ம‌ர‌ண‌த்தின் பிடியிலிருந்து மீட்கும் பொறுப்பைக் க‌ட‌வுளிட‌ம் விடுகிறார். விசுவாச‌த்தை நிலை நாட்டுகிறார்.

கிபி நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுக‌ளில் “டொனாடிச‌ம்” என்றொரு கிறிஸ்த‌வ‌க் குழு இருந்த‌து. இவ‌ர்க‌ள் த‌ற்கொலை செய்து கொண்டால் நேர‌டியாக‌க் க‌ட‌வுளை அடைந்து விட‌லாம் என‌ ந‌ம்பினார்க‌ள். கிறிஸ்துவின் போத‌னைக‌ளைப் ப‌ற்றிய‌ ச‌ரியான‌ புரித‌ல் இல்லாத‌வ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள்.

“அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது” ( யோபு 14:5 )எனும் பைபிள் வ‌ச‌ன‌ம், ந‌ம‌து வாழ்க்கையை முடிக்கும் உரிமை க‌ட‌வுளிட‌ம் ம‌ட்டுமே இருக்கிற‌து என்ப‌தை தெளிவாக்குகிற‌து. ப‌ழைய‌ கால‌த்தில் த‌ற்கொலை செய்து கொண்ட‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளை அட‌க்க‌ம் செய்ய‌ திருச்ச‌பைக‌ள் ம‌றுத்து வ‌ந்த‌ன‌. அந்த‌ அள‌வுக்கு த‌ற்கொலையின் மீது தீவிர‌ எதிர்ப்பு கொண்டிருந்த‌ன‌ர்.

சிசுக்கொலையைப் போல, தற்கொலையும் கிறிஸ்தவத்துக்கு எதிரானது. த‌ற்கொலைக்கு முய‌ல்ப‌வ‌ர்க‌ளை த‌டுப்ப‌தும், அவ‌ர்க‌ளை ச‌ரியான‌ வ‌ழியில் கொண்டு வ‌ருவ‌தும் நாம் செய்ய‌ வேண்டிய‌ காரிய‌ங்க‌ளாகும். த‌ற்கொலைக்கு ஒரு ந‌ப‌ர் முய‌ல்கிறார் எனில் அவ‌ர் சொல்லொண்ணாத் துய‌ரில் இருக்கிறார் என்ப‌தை முத‌லில் புரிந்து கொள்ள‌ வேண்டும்.

அவ‌ருட‌ன் கூடவே இருந்து அவ‌ருடைய‌ துய‌ர‌ங்க‌ளை அமைதியாக‌க் கேட்ப‌தும், அவ‌ரை அன்பு செய்ய‌ நீங்க‌ள் இருக்கிறீர்க‌ள் எனும் ந‌ம்பிக்கையை விதைப்ப‌தும் முதல் தேவை. அந்த‌ சூழ‌லில் த‌த்துவ‌ங்க‌ளோ, இறையிய‌ல் கோட்பாடுக‌ளோ கை கொடுக்காது. அன்பு ம‌ட்டுமே ஒரு ம‌னித‌னை திருத்த‌ முடியும். இறைவ‌னின் அன்பை உங்கள் மூலமாய்ப் ப‌கிருங்க‌ள்.

சில‌ சிந்த‌னைக‌ளை ம‌ன‌தில் கொள்வோம்.

 

  1. த‌ற்கொலை என்ப‌து ‘வேறு வ‌ழி இல்லை’ என்ப‌த‌ன் வெளிப்பாடு. “என் கிருபை உன‌க்குப் போதும்” என்கிறார் க‌ட‌வுள். அதை ந‌ம்புங்க‌ள் த‌ற்கொலை சிந்த‌னை வில‌கும்.
  2. த‌ற்கொலை என்ப‌து சுய‌ந‌ல‌த்தின் அடையாள‌ம். த‌ன‌து துய‌ர‌ங்க‌ளுக்கான‌ விடுத‌லை ப‌ல‌ வேளைக‌ளில் அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு மிக‌ப்பெரிய‌ துய‌ர‌த்தைத் த‌ரும் என்ப‌தை உண‌ர்வ‌து அவ‌சிய‌ம்.
  3. த‌ற்கொலை என்ப‌து சிலை வ‌ழிபாடு. தன்னையோ, த‌ன் வாழ்க்கையின் ஆன‌ந்த‌த்தையோ வ‌ழிப‌டுப‌வ‌ர்க‌ள் அதில் குறைபாடு ஏற்ப‌டுகையில் எடுக்கும் முடிவு. சிலை வ‌ழிபாடு பாவ‌ம்.

4 த‌ற்கொலை செய்ப‌வ‌ர்க‌ள் உல‌க‌ப் பிர‌கார‌மான‌ காரிய‌ங்க‌ளில் ஏற்ப‌ட்ட‌ தோல்விக்காக‌வே த‌ற்கொலை செய்கின்ற‌ன‌ர். முத‌லில் தேவ‌னுடைய‌ ராஜ்ய‌த்தைத் தேடாத‌ பாவ‌த்தை அவ‌ர்க‌ள் செய்கின்ற‌ன‌ர்.

  1. த‌ற்கொலை ஒரு மோச‌மான‌ சாட்சி. க‌னிக‌ளின் மூல‌மாக‌வும், செய‌ல்க‌ளின் மூல‌மாக‌வும் க‌ட‌வுளுக்கு ம‌கிமையையும், க‌ன‌த்தையும் கொடுப்ப‌வ‌ர்க‌ளாக‌ நாம் இருக்க‌ வேண்டும். த‌ற்கொலை ந‌ம் கட‌வுளை அவ‌மான‌ப் ப‌டுத்தும் செய‌ல்.

இவ்வுலக வாழ்க்கை என்ப‌து க‌ட‌வுள் ந‌ம‌க்கு ஒரே ஒரு த‌ட‌வை த‌ரும் வ‌ர‌ம். ஏழு ஜென்ம‌ங்க‌ளோ, ம‌று பிற‌விக‌ளோ இல்லை. இந்த‌ வாழ்க்கையை முழுமையாக, அவருக்கு ஏற்புடையதாக வாழ்வ‌தே ந‌ம‌க்கு இட‌ப்ப‌ட்டிருக்கும் ப‌ணி. உயிரையும், வாழ்வையும் இறைவ‌னிட‌ம் ஒப்படைப்போம். அவ‌ர் கையில் ஒரு பொம்ம‌லாட்ட‌ப் பொம்மையைப் போல‌ வாழ்வ‌தே சிற‌ப்பான‌ வாழ்க்கை.

பாவ‌த்தை அறிக்கையிட்டால்

ம‌ன்னிப்பு நிச்ச‌ய‌ம் !

த‌ற்கொலையில் அறிக்கையிட‌ல்

இல்லையே சாத்திய‌ம் !!

 

*

மனைவியிடம் கணவன் என்னதான் எதிர்பார்க்கிறான் ?

kvr1


ஒரு சாது தனது சீடர்களுடன் நதிக்கரைக்கு வந்தார். அப்போது ஒரு தம்பதியர் கடும் கோபத்துடன் ஒருவரை ஒருவர் நோக்கி கத்திக் கொண்டிருந்தார்கள். சாது நின்றார். தனது சீடர்களிடம் கேட்டார்.

“ஏன் அவர்கள் கத்துகிறார்கள் தெரியுமா ?”

” அவர்கள் நிதானம் இழந்து விட்டார்கள். அதனால் கத்துகிறார்கள்” சீடர்கள் சொன்னார்கள்.

“ஆனால் அவர்கள் அருகருகே தானே நிற்கிறார்கள் !! ஏன் கத்த வேண்டும் ? மெதுவாய் சொல்லலாமே ” குரு கேட்டார்.

சீடர்கள் ஏதேதோ பதில்களைச் சொன்னார்கள். ஆனால் எதுவுமே சாதுவுக்கு திருப்திகரமாக இருக்கவில்லை. கடைசியில் அவரே அதற்கான பதிலைச் சொன்னார்.

” இருவர் கோபம் கொள்ளும் போது அவர்களுடைய இதயம் தூரமாய்ச் சென்று விடுகிறது. தூரத்தில் இருப்பவர்களுடன் கத்தி தானே பேசவேண்டும், அதனால் தான் கத்துகிறார்கள். அதே போல இரண்டு பேர் நேசத்தில் இருக்கும் போது ரொம்பவே நெருங்கி வருகிறார்கள். எனவே அவர்கள் மென்மையாய்ப் பேசினால் போதுமென்றாகி விடுகிறது. இன்னும் நெருங்கி உறவில் இறுக்கமாய் இருக்கும் போது இடைவெளியே இல்லாமல் போய் விடுகிறது. அவர்கள் பேசவே தேவையில்லை. மௌனமே பாஷையாகி அவர்களுக்குள் உலவும்” குரு சொல்லச் சொல்ல சீடர்கள் மௌனமாய்க் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

குரு கடைசியாகச் சொன்னார்,

“எனவே… விவாதிக்கும் போதோ, சண்டையிடும் போதோ உங்கள் இதயம் தூரமாய்ப் போய்விடாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.இதயங்களைத் தூரமாய் அனுப்பி வைக்கும் வார்த்தைகளைப் பேசாதீர்கள். இல்லாவிட்டால் இந்த தூரம் மிக அதிகமாகி திரும்பி இணையும் பாதையையே மறந்து விடும்”

குரு தன் சீடர்களிடம் சொன்னதை சண்டையிட்ட தம்பதியர் கேட்டனர். அவர்களுடைய மனதுக்குள் ஈட்டி பாய்ந்தது போல் இருந்தது. அமைதியானார்கள்.

குரு அவர்களை நெருங்கிச் சொன்னார். ‘நெருப்பு நல்லது தான். நீங்கள் பற்ற வைப்பதை, நீங்களே அணைக்க முடிந்தால் நெருப்பு நல்லது தான். அணைக்க முடியாதபடி எரிய விட்டாலோ அது பேரழிவைத் தராமல் அழியாது”.

தம்பதியர் தங்கள் தவறை உணர்ந்து மனம் திருந்தினர், இணைந்து நடந்தனர்.

அன்பின்றி அமையாது உலகு. அன்பின்றி அமையாது குடும்பம். ஒரு க‌ண‌வ‌னின் க‌ன‌வு அன்பு என்ப‌தைத் த‌விர‌ வேறு என்ன‌வாக‌ இருக்க‌ முடியும் ? வீட்டுக்கு வெளியே வெறுப்புக‌ளைக் கூட‌ அவ‌ன் விருப்போடு பெற்றுக் கொள்வான், வீட்டில் அன்பு க‌ரை புர‌ண்டு ஓடினால் போதும்.

பறவைகள் சுதந்திரமாய்ப் பறந்து திரிகின்றன. கிளைகளை விட்டுக் கிளைகளுக்குத் தாவுகின்றன. மரங்களை விட்டு மரங்களுக்குத் தாவுகின்றன. கானகத்தை விட்டுக் கானகத்துக்குத் தாவுகின்றன. மாலையில் அவை தனது கூடுகளில் குஞ்சுகளோடு அமர்ந்து நிம்மதி நித்திரையை அடைகின்றன.

விழிப்போம் எனும் நம்பிக்கை நம்மை நிம்மதியாய் உறங்க வைக்கிறது. கூடடைவோம் எனும் நம்பிக்கை சிறகுகளை நில்லாமல் பறக்க வைக்கிறது. குடும்பமும் அப்படியே. வீடடைதல் என்பது மீட்படைதல் போல. அத்தகைய நிம்மதியே கணவன் காணும் முதல் கனவு. தனது சோர்வுகளை, கவலைகளை, இயலாமைகளை, நிராகரிப்புகளை மறந்து நிம்மதியாய் இருக்க நினைக்கும் இடம் வீடு. அத்தகைய நிம்மதியான குடும்பம் அமையும் மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.

ஆணின் கனவுகள் தனது குழந்தைகளின் எதிர்காலத்தையே கண்களில் வைத்திருக்கும். அங்கே மனைவி ஒதுக்கப்படுவதாய் பெண்கள் மனம் வெதும்புவதுண்டு. உண்மையில், திருமணம் என்பது ஆணையும் பெண்ணையும் ஒன்றாக்குகிறது. ஆணும் பெண்ணும் இரு உடல் ஓரு உயிராய் இணைந்து செயலாற்ற வேண்டும். அப்படி கணவனின் கனவுகளுக்கு தோள் கொடுக்கும் ம‌னைவி வேண்டும் என்ப‌து ஆண்க‌ளின் க‌ன‌வுக‌ளில் முக்கிய‌மான‌து.

ஆணும் பெண்ணும் இர‌ண்டு சிற‌குக‌ளாக‌ மாறி குடும்ப‌ம் உட‌லைச் சும‌ந்து செல்ல‌ வேண்டும். ஆணும் பெண்ணும் இர‌ண்டு ப‌க்க‌ங்க‌ளாக‌ மாறி நாண‌ய‌த்துக்கு ம‌திப்பு கூட்ட‌ வேண்டும். ப‌க‌லின் வெப்ப‌மாய் ஆண் மாறும் போது, இர‌வின் த‌ண்மையாய் பெண் மாற‌ வேண்டும். வெப்ப‌மாய் பெண் மாறினால் நில‌வாய் ஆண் மாற‌ வேண்டும். இப்ப‌டி இணைந்து ப‌ய‌ணிக்கும் த‌ண்ட‌வாள‌ங்க‌ள் போல‌ இணைந்தே திரியும் ஒரு அற்புத‌ வாழ்க்கை க‌ண‌வ‌னின் க‌ன‌வுக‌ளில் சிற‌ப்பிட‌ம் பிடிக்கும்.

பெரும்பாலான ஆண்களின் கனவுகளில் ஒரு பத்து கனவைப் பொறுக்கி எடுத்தால் இவை இடம் பெறலாம்.

1

நேர‌டியாக‌ எதையும் பேசுவ‌து ஆண்க‌ளின் இய‌ல்பு. பாத்திர‌த்தின் ச‌த்த‌த்திலோ, க‌த‌வை சாத்தும் வேக‌த்திலோ, பிள்ளைக‌ளைத் திட்டும் வார்த்தைக‌ளிலோ கோப‌த்தைக் காட்டுவ‌து பெண்க‌ளின் இய‌ல்பு. எதையும் நேர‌டியாக‌ப் பேசும் நிலைக்கு த‌ன‌து ம‌னைவி வ‌ர‌வேண்டும். அதுவும் க‌ண்க‌ளில் அன‌லோடு வ‌ராம‌ல் நிழலோடு வ‌ர‌வேண்டும் என்ப‌து க‌ண‌வ‌னின் க‌ன‌வுக‌ளில் நிச்ச‌ய‌ம் உண்டு.

2

ப‌க்க‌த்து வீட்டுக் க‌தைக‌ளிலிருந்தோ, சீரிய‌லில் வ‌ரும் குடும்ப‌ங்க‌ளிலிருந்தோ, தூர‌த்துச் சொந்த‌க்கார‌னின் ப‌ஜ்ஜி உரையாட‌ல்க‌ளிலிருந்தோ, அம்மாக்க‌ளின் உர‌ச‌ல்க‌ளில் இருந்தோ அடுத்த‌ ச‌ண்டைக்கான‌ நெருப்பை ம‌னைவி பெற்று விட‌க் கூடாது எனும் எதிர்பார்ப்பு இல்லாத‌ ம‌னித‌ன் இருக்க‌ முடியுமா ?

3

” ப‌திலை ந‌ம்ப‌ப் போவ‌தில்லை” எனும் முடிவுட‌ன், “ஏங்க‌ லேட்டு…” என‌க் கேட்கும் ம‌னைவிக்குப் ப‌தில் சொல்லும் உல‌க‌ ம‌கா ச‌ங்க‌ட‌த்திலிருந்து த‌ப்பிக்க‌ வேண்டும் எனும் க‌ன‌வு இல்லாத‌ க‌ண‌வ‌ன் இருக்க‌ முடியுமா ?

4

ந‌ம‌க்கு ம‌ட்டும் ஏன் ம‌ற‌தியை ஆண்ட‌வ‌ன் கொடுத்தான். பெண்க‌ளுக்கு ம‌ட்டும் ஏன் ஞாப‌க‌ ச‌க்தியை அள‌வுக்கு அதிக‌மாக‌ கொடுத்தார். “கெட்ட‌ விஷ‌ய‌ங்க‌ளை உட‌னே ம‌ற‌ந்து ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ட்டும் ம‌ன‌சுல‌ வெச்சுக்க‌ மாட்டாளா” என் ம‌னைவி ? எனும் க‌ன‌வில்லாத‌ க‌ண‌வ‌ன் உண்டா ?

5

வீட்டுக்காக‌, ம‌னைவிக்காக‌ என்ன‌ செய்தாலும் ஒரு சின்ன‌ பாராட்டு கூட‌ கிடைக்க‌ மாட்டேங்குது. ஆனா ஒரு சின்ன‌ த‌ப்பு ப‌ண்ணினா கூட‌ போஸ்ட‌ர் அடிச்சு ஒட்டாத‌ குறையா ச‌ண்டை ந‌ட‌க்குது. எப்போ ந‌ம்ம‌ ம‌னைவி நாம‌ ப‌ண்ற‌ ந‌ல்ல‌ விஷ‌ய‌ங்க‌ளைப் பாராட்ட‌ப் போறாங்க‌ ? எனும் க‌ன‌வு வ‌ராம‌ல் போகுமா என்ன ?

6

பிள்ளைங்க‌ள‌ பாக்க‌ வேண்டிய‌து. இல்லேன்னா அம்மாவைப் பாக்க‌ வேண்டிய‌து. இல்லேன்னா தோழிக‌ளைப் பாக்க‌ வேண்டிய‌து. ஒண்ணும் இல்லேன்னா சீரிய‌லைப் பாக்க‌ வேண்டிய‌து. எப்போ தான் ந‌ம்ம‌ ம‌னைவி ந‌ம்மைப் பார்ப்பாங்க‌ எனும் எதிர்பார்ப்பு க‌ல‌ந்த‌ க‌ன‌வு இல்லாத‌ க‌ண‌வ‌ன் யார் ?7

தாம்ப‌த்ய‌ம் என்ப‌து ஆன‌ந்த‌த்தின் ப‌கிர்த‌ல். அது வ‌லுக்க‌ட்டாய‌மாய் எழுதி வாங்கும் உயில்ப்ப‌த்திர‌ம் அல்ல‌. அதில் உட‌ல்க‌ளை விட‌ அதிக‌ம் உண‌ர்வுக‌ள் பேச‌ வேண்டும். அதை ஒரு ஆயுத‌மாக‌வோ, ப‌ழி வாங்கும் யுத்தியாக‌வோ ம‌னைவி ப‌ய‌ன்ப‌டுத்த‌க் கூடாது எனும் க‌ன‌வு க‌ண‌வ‌னுக்கு இல்லாமல் போகுமா.

8

என்னை புரிஞ்சுக்க‌வே மாட்டீங்க‌” என‌ ம‌னைவியின் குர‌ல் ஒலிக்காத‌ வீடுக‌ள் இருக்க‌ முடியாது. புரிந்து கொண்டாலும் புரிந்து கொள்ள‌வில்லை என்றே ம‌னைவிக‌ள் சொல்வார்க‌ள். புரிந்து கொள்வ‌து என்ப‌து அவ‌ர்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை, சொல்வ‌த‌ற்கெல்லாம் ஆமாம் போடுவ‌து. இந்த‌ நிலை மாற‌ வேண்டுமென‌ ப‌க‌ல் க‌ன‌வு காணாத‌ க‌ண‌வ‌ன் உண்டோ ?

9

ந‌ன்றி என்ப‌து ரொம்ப‌ காஸ்ட்லி விஷ‌ய‌மா என்ன‌ ? ஒரு சின்ன‌ ந‌ன்றி கூட‌ சொல்ல‌ மாட்டாங்க‌ளா ந‌ம்ம‌ மனைவி என‌ புல‌ம்பாத( ம‌ன‌துக்குள் தான் ) க‌ண‌வ‌ன் யார் ? ம‌னைவி ந‌ம் செய‌லுக்கு ந‌ன்றி சொல்ல‌ வேண்டுமென‌ க‌ன‌வு காணாத‌ க‌ண‌வ‌ன் உண்டா ?

10

நாம் எடுக்கின்ற‌ முய‌ற்சிக‌ளுக்கு ஊக்க‌மும், ஆத‌ர‌வும் கிடைக்க‌ வேண்டும் என்ப‌து க‌ண‌வ‌ன்க‌ளின் க‌ன‌வுக‌ளில் ஒன்று. அப்ப‌டி முழு ஆத‌ர‌வு கிடைக்காவிட்டால் கூட‌ குத‌ர்க்க‌மாய்ப் பேசி எரிச்ச‌ல‌டைய‌ச் செய்யாம‌ல் இருக்க‌ வேண்டும் என்ப‌து ச‌ர்வ‌ நிச்ச‌ய‌க் க‌ன‌வு தானே !

இப்படி எல்லா க‌ண்க‌ளிலும் க‌ன‌வுக‌ள் இருக்கின்ற‌ன‌, அந்த‌க் க‌ன‌வுக‌ள் ப‌லிப்ப‌தும் ப‌லிக்காத‌தும் ம‌னைவிய‌ரின் க‌டிவாள‌த்தில் அட‌ங்கியிருக்கின்ற‌ன. கணவனே கண் கண்ட தெய்வம் என்பதை விட கணவனே கனவு கண்ட தெய்வம் என்பது தானே பொருத்தம் ?

ச‌ரி, ம‌னைவிய‌ரின் க‌ன‌வுக‌ள் என்ன‌வாய் இருக்கும் ? அதெல்லாம் நான் சொல்லாம‌லேயே உங்க‌ளுக்குத் தெரியும். அப்புற‌மென்ன‌ ? க‌ன‌வுக‌ள் தொட‌ர‌ வாழ்த்துக‌ள்.

 

இந்திராணி : பதறடித்த ஒரு படுகொலை.

Indrani

ஒரு சின்ன செய்தியாக முதலில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தேசத்தின் முதுகெலும்பை சில்லிட வைக்கும் பெரும் செய்தியாக உருமாறியிருக்கிறது. தனது சொந்த மகளை, அதுவும் திருமண வயதான மகளை, திட்டமிட்டு படுகொலை செய்து விட்டு எதுவுமே நடக்காதது போல் இயல்பு வாழ்க்கை வாழ்ந்த நாற்பத்து மூன்று வயதான இந்திராணி முகர்ஜி தான் வழக்கின் மையம்.

அஸ்ஸாமில் பிறந்து கவுகாத்தியில் வளர்ந்தவர் இந்திராணி. இவரது தந்தை ஒரு பொறியாளர். பெற்றோருடன் கவுகாத்தியில் வசித்து வந்த இந்திராணிக்கு முதல் காதலனாக அறிமுகமானார் சித்தார்த் தாஸ். திருமணம் நடக்கிறது. திருமண வாழ்க்கையின் அடையாளமாக இரண்டு குழந்தைகள். அவர்களில் மூத்தவர் தான் ஷீனா போரா. கொலை செய்யப்பட்டவர். இரண்டாவது குழந்தை மைக்கேல்.

ஷீனாவுக்கு இரண்டு வயதாகவும், மைக்கேல் கைக்குழந்தையாகவும் இருக்கும் போதே குழந்தைகளை பெற்றோரிடம் விட்டு விட்டு கொல்கத்தாவிற்கு மேல்படிப்புக்காகச் சென்றார் இந்திராணி. அங்கே அவருக்கு இன்னொரு காதல் காத்திருந்தது. அவர் சஞ்சீவ் கன்னா. தனது இளமையையும், வனப்பையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தனக்கு திருமணம் ஆனதையும், குழந்தைகள் இருப்பதையும் மறைத்து காதலை வளர்த்தார் இந்திராணி. காதல் கனிந்து திருமணம் நடந்தது. இந்த‌ ச‌ஞ்சீவ் க‌ன்னா ஷீனாவின் கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர்.

குழ‌ந்தைக‌ளின் போட்டோவை எப்போதும் த‌ன்னுட‌ன் வைத்திருப்பார் இந்திராணி. விசாரித்த கணவனிடம், இவ‌ர்க‌ள் என்னுடைய‌ ச‌கோத‌ரியும், ச‌கோத‌ர‌னும் என ஒரு மாபெரும் பொய்யைக் கூறினார். அப்ப‌டியே கால‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ன‌. இத‌ற்கிடையில் ச‌ஞ்சீவ் க‌ன்னாவுட‌னான‌ திருண‌த்தின் மூல‌ம் அவ‌ருக்கு வைதி என்றொரு மகள் பிறக்கிறாள்.

2000 ல் இவ‌ருடைய‌ வாழ்க்கை இன்னுமொரு திருப்ப‌த்தைச் ச‌ந்திக்கிற‌து. அழ‌கும், திற‌மையும் அவருக்கு மீடியாவில் அவ‌ருக்கு ஒரு ந‌ல்ல‌ வேலையைப் பெற்றுத் த‌ருகிற‌து. ஸ்டார் இந்தியா டிவியில் கிடைத்த‌ அந்த‌ வேலைக்காக‌ இப்போது கொல்கொத்தாவை விட்டு மும்பைக்குக் குடியேறுகிறார்.

மீடியா வாழ்க்கை அவ‌ருக்கு ஆட‌ம்ப‌ர‌த்தின் இன்னொரு ப‌க்க‌த்தை அறிமுக‌ம் செய்து வைக்கிற‌து. பிர‌ப‌ல‌ங்க‌ளுட‌ன் கிடைக்கும் தொட‌ர்பு அவ‌ருக்கு வ‌ச‌தியான‌ வாழ்க்கையின் மாய‌பிம்ப‌த்தை ம‌ன‌துக்குள் வ‌ரைகிற‌து. அப்போது அவ‌ருடைய‌ பார்வையில் விழுகிறார் பீட்ட‌ர் முக‌ர்ஜி. ஸ்டார் டிவியின் த‌லைமைச் செய‌ல் அதிகாரி. வ‌ய‌து வித்தியாச‌ம் பார்க்காம‌ல் அவ‌ரை வ‌லைக்குள் விழ‌ வைக்கிறார் இந்திராணி.

பீட்ட‌ர் அந்த‌க் கால‌க‌ட்ட‌த்தில் த‌ன‌து ம‌னைவி ஷ்ப்னத்தைப் பிரிந்து ம‌கன்கள் ராகுல் ம‌ற்றும் ராபினுடன் த‌னியே வ‌சித்து வ‌ந்தார். அது இந்திராணியின் காத‌ல் திட்ட‌ங்க‌ளுக்கு வ‌ச‌தியாக‌ இருந்த‌து. இங்கே த‌ன‌து ம‌க‌ள் வைதியை, ம‌க‌ள் என்றே அறிமுக‌ம் செய்கிறாள். ஷீனாவும், மைக்கேலும் த‌ன‌து ச‌கோத‌ரியும், ச‌கோத‌ர‌னும் என்று பீட்ட‌ரிட‌மும் கதை கட்டுகிறாள்.

மனைவியைப் பிரிந்த பீட்டரும், கணவனைப் பிரிந்த இந்திராணியும் வாழ்க்கையில் இணைகிறார்கள். அவ்வப்போது பெற்றோரையும், உலகிற்கு சகோதர சகோதரியாய் அறிமுகப்படுத்தப்பட்ட தனது குழந்தைகளையும் கவுகாத்திக்குச் சென்று பார்த்து வருகிறார் இந்திராணி. அவர்களுடைய படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் வழங்குகிறார்.

2007ம் ஆண்டு ஒரு புதிய‌ தொலைக்காட்சி சேன‌லை ஆர‌ம்பிக்கிறார்க‌ள் பீட்ட‌ர் இந்திராணி த‌ம்ப‌தியின‌ர். நயன்.எக்ஸ் மீடியா எனும் அந்த‌ சேன‌ல் இவ‌ர்க‌ளுக்கு ஒரு புதிய‌ அந்த‌ஸ்தைக் கொடுக்கிற‌து. ப‌க‌ட்டும், ஆட‌ம்ப‌ர‌மும் நிறைந்த‌ வாழ்க்கையை இந்திராணி முழுமையாய் அனுப‌விக்கிறார்.

கால‌ம் ஓடுகிற‌து. ஷீனா போரா ப‌தின் வ‌ய‌துக‌ளில் இருக்கிறார். மேல்ப‌டிப்புக்காக‌ க‌வுகாத்தியை விட்டு இந்திராணி இருக்கும் மும்பைக்கு வ‌ருகிறார். அங்கேயே ப‌டித்து விட்டு ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஒரு வேலையிலும் சேர்கிறார். தன்னைப் பார்க்க‌ வ‌ந்த‌ ஷீனாவை, ‘இவ‌ள் தான் என் த‌ங்கை ஷீனா’ என‌ பீட்ட‌ரிட‌ம் அறிமுக‌ம் செய்து வைக்கிறாள் இந்திராணி.

பீட்ட‌ரின் ம‌க‌னுக்கு இள‌மைத் துள்ள‌லான‌ வய‌து, ஷீனா ப‌தின் வ‌ய‌துக‌ளில். இருவ‌ரும் ச‌கோத‌ர‌ ச‌கோத‌ரிய‌ர் என்ப‌து ராகுலுக்குத் தெரியாது. காத‌ல் ப‌ற்றிக் கொள்கிற‌து. இந்த‌க் காத‌ல் தான் இந்திராணிக்கு த‌லைவ‌லியாய் மாறிவிடுகிற‌து. ஷீனாவோ அன்னையின் மிர‌ட்ட‌லுக்கும், க‌ண்டிப்புக்கும், அறிவுரைக்கும் க‌ட்டுப்ப‌ட‌வில்லை.

ஷீனா தனது மகள் எனும் உண்மை பீட்டருக்குத் தெரிந்து விடுமோ, அதன் மூலம் தனது உல்லாச வாழ்க்கை முடிவுக்கு வருமோ என இந்திராணி பயப்படுகிறாள். இதற்கிடையில் ஷீனா கர்ப்பமாகிறார். இந்திராணி ஒரு ப‌டுகொலைக்கு த‌ன்னைத் த‌யார்ப‌டுத்திக் கொள்கிறார்.

கையில் புர‌ளும் ப‌ண‌ம் அவ‌ருக்கு வ‌ச‌தியாய்ப் போய்விடுகிற‌து. 2012ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தியதி ஷீனாவை வலுக்கட்டாயமாய் காருக்குள் திணிக்கிறார். பாந்திரா நேஷனல் கல்லூரி அருகில் வைத்து சொந்த மகள் என்றும் பாராமல் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்கிறார். உடலை ராய்காட் காட்டுப்பகுதியில் எரித்து விடுகிறார். இத‌ற்கு துணை நின்ற‌வ‌ர்க‌ள் அவ‌ர‌து இர‌ண்டாவ‌து க‌ண‌வ‌ன் ச‌ஞ்சீவ் ம‌ற்றும் டிரைவர் ஷியாம் ம‌னோக‌ர் ராய்.

ஷீனாவைக் காணாத‌தால் க‌வ‌லைப்ப‌ட்ட‌ ஒரே ம‌னித‌ர் அவ‌ரை விரும்பிய‌ ராகுல் தான். இந்திராணியோ, ஷீனா மேல்ப‌டிப்புக்காக‌ வெளிநாடு போய்விட்ட‌தாய் க‌தை விடுகிறார். ஆனாலும் அது குறித்த கூடுதல் விவரங்கள் எதையும் இந்திராணி கொடுக்கவில்லை. ந‌வீன‌ தொழில்நுட்ப‌ யுக‌த்தில் எந்த‌ நாடும் தொலைவாக‌ இல்லை. அதுவும் ப‌ண‌த்துக்குக் குறைவில்லாத‌ ராகுலுக்கு இந்த‌க் க‌தையெல்லாம் ந‌ம்பும்ப‌டியாக‌ இல்லை. என‌வே போலீஸில் புகார் அளிக்கிறார்.

ராகுலை நம்ப வைக்க இந்திராணி பல தில்லாலங்கடி வேலைகளைச் செய்கிறார். இறந்து போன ஷீனாவின் மொபைலில் இருந்து ராகுலுக்கு “உன்னை பிடிக்கவில்லை” என்பது போன்ற எஸ்.எம்.எஸ் களை அனுப்புகிறார். ஷீனா வேலை பார்த்து வந்த நிறுவனத்துக்கு ராஜினமா கடிதத்தைப் போலியாக அனுப்புகிறார். தான் வாடகைக்கு இருந்த வீட்டைக் காலி செய்வதாக போலியாக கடிதம் அனுப்புகிறார். இப்படி ஷீனாவின் மொபைலை ஒரு வருடம் கையிலேயே வைத்திருந்து ஷீனா உயிருடன் இருப்பது போல‌ ஒரு தோற்றத்தை உருவாக்கியிருக்கிறார்.

தனது அக்கா எங்கே என மைக்கேலும் விசாரிக்கிறார். கைக்குழந்தை முதல் அக்காவுடனே வளர்ந்த மைக்கேலுக்கு இந்த பிரிவு பெரும் கவலையளிக்கிறது. அக்கா எங்கே என தொடர்ந்து விசாரிக்கிறார். “ஷீனா அமெரிக்கா போயிருக்கிறார். உன்னைத் தொடர்பு கொள்ள அவள் விரும்பவில்லை” எனும் இந்திராணியின் பொய்யை மைக்கேல் நம்பவில்லை. அக்காவின் பாசம் அவருக்கு மட்டுமே தெரியும். கடைசியில், இனிமேல் அவளைப்பற்றி விசாரித்தால் உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இருக்கப் போவதில்லை என மிரட்டுகிறார். அம்மாவின் பணமும், உதவியும் தேவைப்பட்ட மைக்கேல் அமைதியாகிறான்.

2012ம் ஆண்டு ராகுல் அளித்த‌ புகார் அப்ப‌டியே மெல்ல‌ மெல்ல‌ ம‌றைந்து போய்விட்ட‌து. இந்திராணி வெகு இயல்பாக தனது வாழ்க்கையை நடத்துகிறார். இதற்கிடையில் வெகு சமீபத்தில் ஷாம் மனோகர் ராய் லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி வைத்திருந்த குற்றத்துக்காக, ஆயுத சட்டத்தில் மும்பை போலீசாரால் கைது செய்யப்படுகிறார். வசமாக மாட்டிய டிரைவரிடம் தங்களுக்கு வந்த பழைய புகாரின் அடிப்படையில் ஷீனாவைப் பற்றி விசாரித்த போது டிரைவர் நடந்த விஷயத்தைப் புட்டுப் புட்டு வைக்கிறார்.

இந்த டுவிஸ்டை காவல்துறையே எதிர்பார்க்கவில்லை. விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இந்திராணி அப்போது ஊரில் இல்லை, எனவே ரகசியமாய்க் கண்காணிக்கப்பட்டார். பின்னர் நாடு திரும்பிய இந்திராணி கைது செய்யப்பட்டார்.

காவ‌ல்துறையிட‌மும் முத‌லில் ஷீனா த‌ன‌து ச‌கோத‌ரி என்றே கூறினார் இந்திராணி. ஆனால் அந்த‌ பொய் மிக‌ எளிதில் உடைந்து விட‌க் கூடிய‌து என்ப‌து அவ‌ருக்குத் தெரிந்தே இருந்த‌து. விசாரணை என்று வந்து விட்டால், இந்தத் தொழில் நுட்ப யுகம் அனைத்தையும் காட்டிக் கொடுத்துவிடும் எனும் உண்மை மீடியாவில் இருந்த இந்திராணி அறியாததல்ல. எனவே, இப்போது ஒப்புத‌ல் வாக்குமூல‌த்தில் உண்மை விஷ‌ய‌ங்களை ஒவ்வொன்றாய்ப் பேச ஆரம்பித்திருக்கிறார்.

நில‌மையின் வீரிய‌த்தைக் க‌ருத்தில் கொண்டு மும்பை க‌மிஷ‌ன‌ர் ராகேஷ் ம‌ரியா நேர‌டியாக இந்த வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வ‌ருகிறார். இந்திராணியின் இர‌ண்டாவ‌து க‌ண‌வ‌ன் ச‌ஞ்சீவ் க‌ன்னாவும் கைது செய்யப்பட்டார்.

வ‌ழ‌க்கின் முக்கிய‌ குற்ற‌வாளிக‌ளான‌ இந்திராணி முக‌ர்ஜி, ச‌ஞ்சீவ் க‌ன்னா, ஷ்யாம் ம‌னோக‌ர் மூவ‌ருமே காவ‌ல் துறையின் பிடியில் இருப்ப‌தால் இந்த‌க் கொலையின் ம‌ர்ம‌ முடிச்சுக‌ள் அனைத்தும் மிக விரைவில் அவிழும் என‌ எதிர்பார்க்க‌ப் ப‌டுகிற‌து. ராகுல், மைக்கேல் போன்றோரின் த‌க‌வ‌ல்க‌ள் இந்த‌ வ‌ழ‌க்கிற்கு வ‌லுவூட்டும் என்ப‌தையும் ம‌றுப்ப‌த‌ற்கில்லை.

சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்பு ஆருஷி கொலை வ‌ழ‌க்கு தேச‌த்தை உலுக்கிய‌து. இப்போது அதே போல‌ ஒரு கொலை வ‌ழ‌க்கு மீண்டும் ஒரு முறை தேச‌த்தைப் புர‌ட்டிப் போட்டிருக்கிற‌து.

இது க‌வுர‌வ‌க் கொலையா ? ஷீனாவின் பெய‌ரில் பினாமியாய் சேர்த்த‌ சொத்துகள் தான் காரணமா ? ஷீனாவின் காத‌ல் தான் பிர‌ச்சினையா ? ஈகோ மோதலா ? என‌ ப‌ல்வேறு கோண‌த்தில் இந்த‌ வ‌ழ‌க்கை காவ‌ல்துறையின‌ர் விசாரித்து வ‌ருகின்ற‌ன‌ர்.

குடும்ப உறவுகள் பலவீனமடைந்து வருவது மனிதத்தை நேசிக்கும் ஒவ்வொருவர் மனதிலும் ஆழமான கவலையை உருவாக்கியிருக்கிறது.

*

சேவிய‌ர்

( Thanks to Namma Adayalam )

தீவிரவாதத்துக்கு எதிராய் அணிதிரளும் இந்திய முஸ்லீம்கள்

IS

 

தத்தின் பெயரால் சர்வதேச சமூகம் சந்தித்ததைப் போன்ற இழப்புகளை வேறெந்த முறையிலும் மனித குலம் சந்திக்கவில்லை. உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒரு மதவாதி செய்யும் ஒரு செயலுக்கான எதிர்வினை மறு எல்லையில் ஏதோ ஒரு அப்பாவியின் தலையில் விழும் என்பது எழுதப்படாத விதி.

ஒரு நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கும் சமூகம் இன்னொரு நாட்டில் சிறுபான்மையாய் இருக்கிறது. ஒரு நாட்டில் சிறுபான்மையாய் இருக்கும் சமூகம் இன்னொரு நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கிறது. பெரும்பான்மையாய் இருக்கிறோம் எனும் மிதப்பில் மதவாதிகள் செய்கின்ற தவறுகள், அவர்கள் சிறுபான்மையாய் இருக்கும் நாடுகளில் எதிரொலிக்கின்றன. எனவே தான் மதம் சார்ந்த பிளவுகளும், வன்முறைகளும் எப்போதுமே திகிலைக் கிளப்புகின்றன.

இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராக பரவியிருக்கும் மனநிலைக்கு முக்கியமான காரணம் ஒரு சில தீவிரவாத இயக்கங்களே. அல்குவைதா இயக்கம் கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. இப்போது ஐ.எஸ்.ஐ.எஸ் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அன்ட் சிரியா ) இயக்கம் சர்வதேச அச்சுறுத்தல் இயக்கமாக மிரட்டுகிறது.

ஒரு மதத்தினருக்கு எதிராக இன்னொரு மதத்தினர் தடை விதிக்கும் போது அது தீவிரமான‌ மதச் சண்டையை உருவாக்கி விடுகிறது. மதங்களிடையே காழ்ப்புணர்ச்சியையும் வலுவாக்குகிறது. ஆனால் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள் அதை எதிர்த்து நிற்கும் போது ஆக்கபூர்வமாய் மாறிவிடுகிறது. இப்போது ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து அத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இஸ்லாமியத் தலைவர்கள் ஒன்று கூடி ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராக பத்வா விதித்திருக்கிறார்கள். இந்தியாவில் 14.2 சதவீதம் இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். எண்ணிக்கையின் அடிப்படையில் 17.22 கோடி பேர் இஸ்லாமியர்கள். உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா தான். என‌வே தான் இந்திய‌ முஸ்லிம்க‌ள் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக ப‌த்வா விதித்திருப்ப‌து உல‌க‌ நாடுக‌ளின் க‌வ‌ன‌த்தை ஈர்த்திருக்கிற‌து.

வ‌ன்முறை என்ப‌து இஸ்லாமின் வ‌ழிமுறைய‌ல்ல‌. இப்போது ஐ.எஸ் அமைப்பு செய்து கொண்டிருக்கும் செய‌ல்க‌ளெல்லாம் இஸ்லாமிய‌ ந‌ம்பிக்கைக்கு எதிரான‌வை.என‌வே அந்த‌ அமைப்புக்கு எதிராக‌ ப‌த்வா விதிக்கிறோம் என்று அந்த முடிவில் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

 

ப‌த்வா என்ப‌து இஸ்லாமிய‌ மதத் தீர்ப்பு. இஸ்லாமிய‌ ம‌த‌த்துக்கோ, கோட்பாடுக‌ளுக்கோ, வாழ்க்கை முறைக்கோ எதிராக‌ச் செய‌ல்ப‌டும் இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு எதிராக‌ இந்த‌த் த‌டை விதிக்க‌ப்ப‌டுகிற‌து. ச‌ல்மான் ருஷ்டி முத‌ல் ஏ.ஆர் ர‌ஹ்மான் வ‌ரை ப‌லரையும் இந்த பத்வா பாதித்திருக்கிறது. இப்போது ஒரு மிக‌ப்பெரிய‌ தீவிர‌வாத‌ அமைப்புக்கு எதிராக‌ இந்த‌த் த‌டை வ‌லிமையாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

ப‌த்வாவின் ந‌க‌ல்க‌ளை ஐ.நா ச‌பைத் த‌லைவ‌ர்க‌ளுக்கும், உலகின் 47 நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்த‌த் த‌டைக்கு அமெரிக்கா வ‌ர‌வேற்பு தெரிவித்துள்ள‌து. “ஐ.எஸ். இயக்கத்துக்கு தடை விதித்து இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர்களும், அறிஞர்களும் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை வரவேற்கிறோம். அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து அந்த இயக்கத்தில் சேர்ப்பதைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்” என்று அமெரிக்காவின் செய்தித் தொடர்பாளர் ஹெலனா வயிட் தெரிவித்தார்.

ஐ.நா அமைப்பு ம‌த்திய‌ கிழ‌க்கு நாடுக‌ளில் பேர‌ழிவை ஏற்ப‌டுத்தி வ‌ருகிற‌து. கூட‌வே ஆசியாவின் ப‌ல்வேறு பாக‌ங்க‌ளில் நுழைந்து அத‌ன் இருப்பைப் ப‌ல‌ப்ப‌டுத்த‌ முய‌ற்சித்து வ‌ருகிற‌து.இந்தியாவிலும் அத‌ன் கிளைக‌ள் ஆங்காங்கே இருப்ப‌தாக‌ செய்திக‌ள் வெளியாகி வ‌ருகின்ற‌ன‌.

இந்திய‌ அர‌சிய‌ல‌மைப்புச் ச‌ட்ட‌ங்க‌ள் ம‌த‌ச்சார்பின்மைக்கு துணை செய்தாலும் இந்தியாவில் சிறுபான்மையின‌ரின் வ‌ள‌ர்ச்சியும், அங்கீகார‌மும் ச‌க‌ஜ‌ நிலையில் இல்லை என்ப‌தே உண்மை. 14 ச‌த‌வீத‌ம் இஸ்லாமிய‌ர்க‌ள் வாழும் பூமியில் 2 ‍ 3 ச‌த‌வீத‌ம் இஸ்லாமியர்கள் ம‌ட்டுமே ந‌ல்ல‌ அர‌சுப் ப‌த‌விக‌ளில் இருக்கின்ற‌ன‌ர். வெறும் 1.2 ச‌த‌வீத‌ம் பேர் ம‌ட்டுமே ப‌ட்ட‌ மேற்ப‌டிப்பை முடிக்கிறார்க‌ள். வ‌றுமைக்கோட்டின் கீழ் வாழ்ப‌வ‌ர்க‌ளோ 94 ச‌த‌வீத‌த்திற்கும் மேல்.

இப்ப‌டி ச‌மூக‌த்தின் பொருளாதார‌, வாழ்க்கைச் சூழ‌லில் பின் த‌ங்கியிருக்கும் இஸ்லாமிய‌ர்க‌ள் மீது தீவிர‌வாதிக‌ள் எனும் ப‌ழியும் சேர்ந்து விடும் போது அவ‌ர்க‌ள் உள‌விய‌ல் ரீதியாக‌வும் பாதிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். ஆனாலும் ஒற்றுமையில் எப்போதும் முன்னில் நிற்கும் இஸ்லாமிய‌ர்க‌ள் இப்போது ஐ.எஸ் இய‌க்க‌த்துக்கு எதிராக‌வும் ஒன்றிணைந்திருப்ப‌து இந்தியாவில் மிக‌ப்பெரிய‌ தாக்க‌த்தை ஏற்படுத்தியிருக்கிறது. உல‌கின் பார்வையில் மிக‌ப்பெரிய‌ அங்கீகார‌த்தையும் இந்திய‌ இஸ்லாமிய‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்கியிருக்கிற‌து.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு ச‌மீப‌கால‌மாக தொட‌ர் வ‌ன்முறைக‌ளிலும், ம‌னித‌நேய‌ம‌ற்ற‌ செய‌ல்க‌ளிலும் செய‌ல்ப‌ட்டு வ‌ருகிற‌து. த‌ன‌து அமைப்பின‌ரோடு பாலிய‌ல் உற‌வு வைத்துக் கொள்ள‌வில்லை என்றெல்லாம் கார‌ண‌ம் காட்டி பெண்க‌ளை ப‌டுகொலை செய்கிற‌து. பிணைக்கைதிக‌ளாக‌ ம‌க்க‌ளைப் பிடித்து ஈவு இர‌க்க‌மில்லாம‌ல் த‌லையைக் கொய்கிற‌து. சிறுவ‌ர்க‌ளுக்கும் வ‌ன்முறையைப் போதிக்கிற‌து. இவையெல்லாம் நிச்ச‌ய‌ம் இஸ்லாமிய‌க் கொள்கைக‌ள் அல்ல.

“அப்பாவிகளைக் கொல்வதை இஸ்லாம் எதிர்க்கிறது. பத்திரிகையாளர்கள், உதவியாளர்கள் போன்றவர்களைக் கொல்பவர்களை இஸ்லாம் எதிர்க்கிறது. ஜிகாத் என்பது தற்காப்புப் போர், சரியான காரண காரியமில்லாமல் அதை அமல்படுத்தக் கூடாது. கட்டாய மதமாற்றம் இஸ்லாமுக்கு எதிரானது. குழந்தைகளுக்கோ, பெண்களுக்கோ உரிமைகளை மறுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது, சித்திரவதை இஸ்லாமுக்கு எதிரானது, இப்படி ஏராளமான வரைமுறைகள் இஸ்லாமில் உண்டு. ஆனால் இவை அனைத்தையும் ஐ.எஸ்.ஐ.எஸ் செய்கிறது” என‌ ப‌ட்டிய‌லிடுகின்ற‌ன‌ர் இஸ்லாமிய‌த் த‌லைவ‌ர்க‌ள்.‌

இஸ்லாமிய‌த்தின் பெய‌ரால் ந‌ட‌க்கும் தீவிர‌வாத‌ இய‌க்க‌த்துக்கு எதிராக‌ இஸ்லாமிய‌ர்க‌ளே எழுந்திருப்ப‌து ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து. இது மிகச் சரியான ஒரு நடைமுறை. உலகெங்கும் இருக்கும் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் எனும் மாயை உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது ஆரோக்கியமானது.

எந்த‌ இய‌க்க‌மும், எந்த‌ குழுவும், எந்த‌ ம‌த‌மும் த‌ங்க‌ளைத் தாங்க‌ளே சுத்த‌ம் செய்து கொள்வ‌தும், விம‌ர்சித்துக் கொள்வ‌தும், வ‌ழிக‌ளைச் செப்ப‌னிட்டுக் கொள்வதும் ஆரோக்கியமான‌து. இந்து சாமியார்க‌ளின் லீலைக‌ளுக்கு எதிராக‌ இந்துக்க‌ள் விம‌ர்சிக்கும் போக்கு உண்டு. போப் உட்பட, கிறிஸ்த‌வ‌த் த‌லைவ‌ர்க‌ளின் செய‌ல்பாடுக‌ளை க‌டுமையாய் விம‌ர்சிக்கும் போக்கு கிறிஸ்த‌வ‌த்திலும் உண்டு.

அத்த‌கைய‌ ஒரு நிலை இஸ்லாமிலும் எழுந்திருப்ப‌து ச‌ர்வ‌ம‌த‌ சூழ‌லுக்கு வெகு ஆரோக்கிய‌மான‌து. சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்திலும் இஸ்லாமிய இளைஞர்கள் ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைத் தீவிரமாகப் பதிவு செய்தது குறிப்பிடத் தக்கது.

எம்ம‌த‌மும் ச‌ம்ம‌த‌மே. அதே நேரத்தில் எந்த‌ ம‌த‌த்திலும் வ‌ன்முறை என்ப‌து எதிர்க்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌தே. சிறுபான்மையின‌ரைக் காக்கும் க‌ட‌மை பெரும்பான்மையின‌ருக்கு உண்டு. அத்த‌கைய‌ ப‌ர‌ஸ்ப‌ர‌ அன்பிலும், ந‌ம்பிக்கையிலும் தான் ச‌ர்வ‌தேச‌ ச‌மாதான‌ம் க‌ட்டியெழுப்ப‌ப்ப‌ட‌ முடியும்

 

சேவிய‌ர்

Thanks : Namma Adayaalam

 

 

 

 

 

 

 

ஏமாற்றும் காதலனா ?

kvr3

“அவன் இப்படிச் செய்வான்னு கொஞ்சம் கூட நினைச்சே பாக்கலடி” ர‌ம்யாவின் விசும்பல் பிரியாவையும் கலங்க வைத்தது.

கடந்த ஒரு வாரமா இந்தப் புலம்பல் தான். ர‌ம்யாவை எப்படி சமாதானப்படுத்துவதென்று தெரியாமல் பிரியா ரொம்பவே குழம்பிப் போனாள். இருக்காதா பின்னே ? அவன் செய்த காரியம் அப்படி !

அந்த அவன் மிஸ்டர். விஜ‌ய் ! விஜ‌யும், ர‌ம்யாவும் உயிருக்கு உயிராய் பழகினார்கள். அதிலும் ர‌ம்யாவுக்கு விஜ‌ய் தான் எல்லாமே. விஜ‌ய் இல்லாத ஒரு வாழ்க்கையையெல்லாம் அவள் நெனச்சுக் கூட பாத்ததில்லை. நின்னா, பேசினா, சாப்பிட்டா என எப்பவுமே புராணம் தான். அப்படி இறுக்கமாய் இருந்த ர‌ம்யா-விஜ‌ய் காதலில் கொஞ்ச நாளாகவே சின்னச் சின்ன விரிசல்கள். காரணம் விஜ‌யின் வாழ்க்கையில் புதிதாய் நுழைந்திருந்த பெண். சுடர் !

இண்டர்நேஷனல் ஸ்கூலில் படித்து வனப்புடன் வந்த சுடருக்கு நெடுநெடுவென வளர்ந்திருந்த விஜ‌யின் மீது ஒரு சபலம். உரசல்களில் பற்றிக் கொண்டான் விஜ‌ய். விஜ‌ய்க்கு ர‌ம்யாவின் அன்பையும் மீறி சுடரின் மேனியின் மீது மோகம் முளை விட்டது. அடிக்கடி இருவரும் தனியே சந்தித்துக் கொள்வதெல்லாம் சகஜமாய் இருந்தது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கடுகளவு கூட ர‌ம்யா சந்தேகப் பட்டதே இல்லை. கடந்த வாரம் விஜ‌யின் பையிலிருந்து கிடைத்த ஒரு கடிதம் தான் அவளைப் புரட்டிப் போட்டது. நான்கைந்து டன் மலையை தலையில் போட்டதுபோல இருந்தது அந்த மெல்லிய காகிதம்.

சுடர் தான் காதலை காகிதத்தில் பொழிந்திருந்தாள். “ஓனி மோனிக் கண்ணா” என்றெல்லாம் அவள் எழுதியிருந்த கடிதம் ஏதோ சுடரும் விஜ‌யும் நான்கு ஜென்மமாகக் காதலித்து வருவது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டது. போதாக்குறைக்கு சமீபகாலமாக நடந்த அவர்களுடைய காதல் சில்மிஷங்களையெல்லாம் வேறு கடிதத்தில் கிறுக்கியிருக்க ர‌ம்யாவுக்கு வாழ்க்கையே இருட்டியது.

“விட்டுருடி.. கல்யாணத்துக்கு முன்னாடியே விஷயம் தெரிஞ்சுதேன்னு சந்தோசப்படு. கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி அடுத்தவ வாலைப் புடிச்சு சுத்தியிருந்தான்னா என்ன பண்றது?” பிரியாவின் நிஜமான அக்கறையைக் கேட்கும் நிலையில் ர‌ம்யா இல்லை.

“விஜ‌ய் கூட ஏமாற்றுவானா ? பச்சைப் புள்ளை மாதிரி இருப்பானே ! அப்போ இவ்ளோ நாள் பொழிஞ்ச அன்பெல்லாம் சும்மாவா ? என்னை விட அவ இப்போ அவனுக்கு பெட்டரா தெரியுதா ? “   ர‌ம்யாவின் மனதில் கேள்விகளுக்குப் பதிலாய் கேள்விகளே முளைத்தன.

பிரியாவும் ர‌ம்யாவும் நீண்டகால தோழிகள். இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு அவர்களைத் தவிர வேறு தோழிகளே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு இருவரும் நெருங்கிய தோழிகள். பிரியா கொஞ்சம் ஸ்மார்ட் பேர்வழி. அவளே இந்த இந்த சூழ்நிலையைச் சமாளிக்க ரொம்பவே திணறிவிட்டாள்.

வாரம் ஒன்று ஓடியது.

ர‌ம்யாவிடம் கடந்த வாரத்தில் இருந்த படபடப்பும், வெறுப்பும் கொஞ்சம் தணிந்திருந்தது. எதிரே நீளமாய், நீலமாய் தெரிந்த கடலைப் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருந்தாள். இது தான் சரியான சந்தர்ப்பம் என்று பேச ஆரம்பித்தாள் பிரியா.

“ர‌ம்யா…. விஜ‌ய் பத்தி நீ என்ன நினைக்கிறே ?”

“நினைக்கிறதுக்கு என்ன இருக்கு ? லாஸ்ட் ஒன் வீக் நான் அவன் கூட பேசலை. அவன் கூட பேசாம ஒரு வாரம் இருக்கிறது இதான் பஸ்ட் டைம். எப்படியோ சமாளிச்சுட்டேன்.”

“வெரி குட்… இத பாரு… உன்னோட வெல் விஷரா சொல்றேன். இனிமே இந்த விஜ‌ய் உனக்கு வேண்டாம்..”

“நானும் அப்படித் தான் நினைக்கிறேன்… பட்…”

“என்ன இழுக்கறே…”

“இல்லே… பழைய விஷயங்களையெல்லாம் நினைக்கும்போ ரொம்ப கஷ்டமா இருக்கு”

“ஸீ… கஷ்டப்படவேண்டியது அவன். நீயில்லை. நீ எந்தத் தப்பும் பண்ணல. அதனால தான் சொல்றேன். இனி அவனோட உன் வாழ்க்கை சந்தோசமா இருக்காது” பிரியா சொல்ல ஆரம்பித்தாள்.

உன்னோட நம்பிக்கையை அவன் எப்போ உடைச்சானோ அந்த வினாடியே இந்த பந்தம் முடிஞ்சு போச்சு. கையும் களவுமா பிடிபட்டுட்டான். அதனால தான் உன் கிட்டே ஒரு விளக்கம் சொல்லக் கூட ஆளைக் காணோம். இப்போதைக்கு சுடரோட பிடியில அவன் கிடக்கட்டும். பட், என்னிக்காவது அவன் ரியலைஸ் பண்ணுவான்.

பஸ்ட் ஆஃப் ஆல், நீ இந்த முடிவை மிக மிகத் தெளிவா எடுத்தே ஆகணும். நோ மோர் விஜ‌ய் இன் யுவர் லைஃப். இது தான் ரொம்ப முக்கியம். இந்த முடிவைப் பொறுத்து தான் உன்னோட அடுத்தடுத்த முன்னேற்றமே இருக்கும். சோ, மறுபடியும் சொல்றேன். அவன் வேண்டாம்ங்கற முடிவை கல்வெட்டு மாதிரி மனசுல எழுதிக்கோ.

இந்த விஷயம் இதோட முடிஞ்சு போகாது. என்னிக்கு அவனுக்கு சுடர் சுடுதோ அல்லது போரடிக்குதோ உடனே உன்னைத் தேடுவான். உன்னோட அருமை அவனுக்கு அப்போ தான் தெரியும். இல்லேன்னா, உன்னோட தேவை அவனுக்கு அப்போ வரும். மே பி, அவன் உன்னை தொந்தரவு பண்ணுவான். ரொம்ப செண்டிமெண்டா பேசி குழப்பப் பாப்பான். இல்லேன்னா பழைய எவிடன்ஸ் எதையாச்சும் வெச்சு மிரட்டப் பாப்பான். அதனால ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும். நீ வேற யாரையாச்சும் லவ் பண்ண ஆரம்பிச்சேன்னு வெச்சுக்கோ அவன் சைக்கோத் தனமா கூட செயல்படக் சேன்ஸ் இருக்கு. நான் உன்னை பயப்படுத்தறதுக்காக சொல்லல, தட்ஸ் லைஃப் !

பிரியா சொல்லச் சொல்ல ர‌ம்யாவுக்கு பயமும், குழப்பமும் ஒருசேர வந்து தொற்றிக் கொண்டது. “கை ரேகை பாக்கறீங்களாம்மா” என்று நெருங்கிய பாட்டியை நிராகரித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தாள் பிரியா. ர‌ம்யா மணலில் கிறுக்கத் தொடங்கினாள்.

ஒருவேளை அவன் போன் பண்ணினா நல்லது. இல்லேன்னா நீயே ஒரு போன் பண்ணி, “சாரி.. இனிமே நமக்குள்ள எந்த விதமான உறவும் கிடையாது” ன்னு தெளிவா சொல்லிடு. உன்னோட குரல்ல ஏமாற்றம், அழுகைம், ஏக்கம், கோபம் ன்னு எதுவும் காட்டாதே. ரொம்ப நார்மலா பேசு. நீ என்ன மனநிலைல பேசறேன்னு அவனுக்கு தெரியக் கூடாது. பட், நீ இனிமே அவனை லவ் பண்ணப் போறதில்லேங்கற மெசேஜ் அவனுக்குப் போய் சேரணும் அது முக்கியம். காரணம் கேட்டான்னா, சுடரோட “கொஞ்சல் லெட்டர்” மேட்டரை கிளியரா சொல்லிடு.

நிறைய பேர் பண்ற ஒரு பெரிய தப்பு என்னண்ணா, “சரி, லவ் தான் பண்ணலே.. ஃபைன்… பிரண்ட்ஸா இருப்போமே ?” ன்னு ஒரு படி இறங்கிடறது தான். இந்த விஷயத்துல ஆம்பளைங்க ரொம்ப அட்வாண்டேஜ் எடுத்துப்பாங்க. தேவையில்லாம உன்னோட டென்ஷனும், மன அழுத்தமும் அதிகமாகும். ஒண்ணு மட்டும் சொல்றேன் கேட்டுக்கோ, ஒரு தடவை சின்சியரா லவ் பண்ணின ஒருத்தனை ஒரு நல்ல நண்பனா உன்னால பாக்கவே முடியாது. உன்னால என்ன, யாராலயுமே பாக்க முடியாது. இது தான் உண்மை ! மற்ற டயலாக்ஸ் எல்லாமே வெறும் சால்ஜாப்பு தான்.

உன்னைப் பாக்கணும், உன் கிட்டே கொஞ்சம் பேசணும்ன்னு இறங்கி வந்தான்னா அவாய்ட் பண்ணு. “இப்போ முடியாது வேணும்ன்னா ஒரு ஆறு மாசம் கழிச்சு மீட் பண்ணுவோமே” ன்னு சொல்லு. சந்திக்கிறது ரொம்ப டேஞ்சர். உன்னோட உறுதி உடையவும் கூடாது, உன் வாழ்க்கை சிதையவும் கூடாது. சோ, அவனைப் பாக்கறதை அவாய்ட் பண்ணியே ஆகணும்.

அவனை ஞாபகப் படுத்தற பொருள் எதையும் வீட்லயோ, கையிலயோ வெச்சுக்காதே. அவனோட லவ் லெட்டர்ஸை எல்லாம் கிழிச்சுப் போடு. போட்டோ கீட்டோ ஏதாச்சும் இருந்தா எரிச்சுப் போடு. அவன் தந்த கிஃப்ட் ஏதாச்சும் இருந்தா ஒண்ணு அவன் கிட்டேயே குடுத்துடு. இல்லேன்னா டிஸ்போஸ் பண்ணிடு. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவனை ஞாபகப் படுத்தும். இது ரொம்ப கஷ்டம். எவ்வளவுக்கு எவ்வளவு அவனோட நினைவையும், அவனை ஞாபகப் படுத்தற பொருட்களையும் விட்டு தூரமா போறியோ அந்த அளவுக்கு நீ சீக்கிரமா நார்மல் ஆயிடுவே. இது தான் நிறைய கவுன்சிலிங்ல சொல்ற பாலபாடம்.

அதே போல அவனோட பேவரிட் பிளேஸஸ், ஹோட்டல்ஸ், அவனோட பிரண்ட்ஸ் எல்லாரையும் கொஞ்ச நாளைக்கு அவாய்ட் பண்ணு. அவனோட பிரண்ட்ஸ் மூலமா அவனுக்கு தேவையில்லாத இன்பர்மேஷன் போறதுக்கு அது காரணமாயிடும். அவனை நேரில பாக்க வேண்டிய சேன்ஸ் கூட வந்துடும். தட்ஸ் நாட் குட். உன்னோட மனசும் ரொம்ப காயப்படும். சோ, அதையெல்லாம் கொஞ்சம் அவாய்ட் பண்ணு.

அவனோட எஸ்.எம்.எஸ், இ-மெயில் எதுக்குமே நீ ரிப்ளை பண்ணாதே. அது கெஞ்சலா இருக்கலாம், கொஞ்சலா இருக்கலாம், மிரட்டலா இருக்கலாம். நீ அதை வாசித்தது போலவே காட்டிக்க வேண்டாம். ஜஸ்ட் இக்னோர் ! அவ்ளோ தான். அவனுக்கு நாக்கைப் புடுங்கிக்கற மாதிரி நாலு வரி அனுப்பத் தோணும், பட்.. வேண்டாம். சொல்லாம இருக்கிற வார்த்தைக்குத் தான் மரியாதை அதிகம். வலிமையும் அதிகம் ! சோ, ஜஸ்ட் இக்னோர் !

இந்த பிரிவை ஒரு துக்கம் மாதிரி அனுசரிக்காதே. ஒரு புதிய தொடக்கம் மாதிரி கொண்டாடு. தேவையில்லாம ரொமாண்டிக் சாங் கேக்கறது. குப்புறப் படுத்து சொகப் பாட்டு கேக்கறது. புலம்பறது. அவன் இல்லேன்னா லைஃப்பே இல்லேன்னு பெனாத்தறது எல்லாமே சுத்த வேஸ்ட். நல்ல எனர்ஜட்டிக் விஷயங்கள்ல மனசை ஈடுபடுத்தணும். அது தான் ரொம்ப முக்கியம்.

ஏதாச்சும் இருந்தா என் கிட்டே கொட்டு. சும்மா மனசுக்குள்ளே போட்டு பூட்டிக்காதே. தேவையில்லாம மனசுக்குள்ள எல்லாத்தையும் போட்டுப் பூட்டினா இல்லாத நோயெல்லாம் வந்து சேரும். இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே மறந்துட்டு ஜாலியா இருக்கப் பாரு. உனக்குப் பிடிச்ச விஷயங்களை நிறைய செய். படம் பாரு. டூர் போ. பிரண்ட்ஸைப் போய் பாரு. பட், ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ. விஜ‌யை வெறுப்பேத்தணும்ன்னு நினைச்சு எதையும் செய்யாதே. அது நீ அவனை மறக்கலேங்கறதுக்கு அடையாளம். சோ, எதைச் செஞ்சாலும் உனக்காக, உன் சந்தோசத்துக்காக செய் !

முடிஞ்சது முடிஞ்சு போச்சு. நாளைக்கு அவன் வீட்டுக்கு வந்து கெஞ்சினான், மன்னிச்சுடுன்னு சொன்னான், தப்பு பண்ணிட்டேன்னு அழுதான்னு சொல்லிட்டு வராதே. அடிச்சே கொன்னுடுவேன். ஸ்டாப் ஈஸ் ஸ்டாப் ! அவ்ளோ தான். புல் ஸ்டாப் போட்டதை மாத்தாதே. இன்னிக்கு சுடரைத் தேடி போனவன், நாளைக்கு இன்னொரு பொண்ணைத் தேடிப் போகமாட்டான்னு என்ன நிச்சயம் ?

ஒருவேளை உனக்குள்ள ரொம்ப ஆத்திரம் இருந்தா, நீ ஒருதடவை விஜ‌யைப் பார்த்து பேசிடு. பட், பேசும்போ “இது தான் லாஸ்ட் டைம். இனிமே பேச மாட்டேன். நீ இப்படி என்னை ஏமாத்துவேன்னு நினைச்சுப் பாக்கலேன்னு” பேசலாம் தப்பில்லை. இது உன்னோட சாய்ஸ். அவன்கிட்டே நேரடியா பேசி இந்த ரிலேஷனை முடிக்கணும்ன்னு உனக்கு கட்டாயமா தோணினா மட்டும் இதைப் பண்ணு.

டைம் ஈஸ் த பெஸ்ட் ஹீலர் ன்னு சொல்லுவாங்க. அது இந்த விஷயத்துல ரொம்ப ரொம்ப உண்மை. கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாயிடும். வாழ்க்கைல நடக்கிறது எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கொ. அது தான் உண்மையும் கூட ! உன்னோட எமோஷன்ஸ், கோபம், எரிச்சல் எல்லாத்தையும் எழுது. எழுதறது ஒரு வடிகால். ஆனா அதை அப்படியே அவனுக்கு அனுப்பி மட்டும் வெச்சுடாதே !

மைண்டை டைவர்ட் பண்ணனும். அது தான் முக்கியம். ஏதாச்சும் புது ஹாபி ஆரம்பிக்கலாம். யோகா கிளாஸ் போலாம். டு சம்திங். அவன் உன்னைப்பற்றி ஏதாச்சும் கதை கட்டி வுட்டா உடட்டும். அவன் எப்படிப்பட்டவன் ன்னு நீ அதை வெச்சு புரிஞ்சுக்கலாம். அடிக்கிற காத்துக்கெல்லாம் வேலி கட்ட முடியாது.

“என்ன சொல்றதெல்லாம் புரியுதா ? இல்லை கனவுலகத்துல இருக்கியா ?”

“கேட்டுட்டு தான் இருக்கேன் பிரியா … நீ சொல்றதெல்லாம் சரி தான்… பட் அவன் சைட்ல இருந்து என்ன ரியாக்ஷன் வரும்னு தெரியலயே”

“என்ன பண்ணுவான்னு நினைக்கிறே ? “

“ஒண்ணும் தெரியல. பட், அவனை நான் கழற்றி வுட்டதுல நிச்சயம் கடுப்பாவான்.”

“அவனோட கேரக்டரை வெச்சு அவன் எப்படி பிகேவ் பண்ணுவான்னு நீ புரிஞ்சுக்கலாமேடி”

“ஊஹூம்.. அவன் ஒரு கல்லுளி மங்கன். விஜ‌யைப் பொறுத்தவரை அவன் என்ன பண்ணுவான்னு சொல்லவே முடியாதுடி….”

அவன் கூட இவ்ளோ நாள் பழகியிருக்கே ! அவனைப் பற்றி தெரியாம இருக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் ஒரு இண்டரஸ்டிங் மேட்டர் சொல்றேன்.

இந்த கழற்றி விட்ட கேஸ்களை ஐந்து டைப்பா பிரிக்கலாம். ஒண்ணு புரிந்து கொள்ளக் கூடியவர். சென்ஸிபிள் டைப் ன்னு சொல்லுவாங்க. நேருக்கு நேரா பேசி, என்ன பிரச்சினை, ஏன் பிரியறேன்னு சொன்னா போதும். புரிஞ்சுப்பாங்க. ரொம்ப ஈஸி டைப் இவங்க தான். “என்னன்னு சொல்லத் தெரியல, பட் இந்த ரிலேஷன் வேண்டாம்ன்னு தோணுது” ன்னு சொன்னா கூட ஓகே சொல்லிட்டு கிளம்பிடுவாங்க.

இரண்டாவது டைப் கம்ப்ளையிண்ட் டைப். வைனிங் பீப்பிள் ன்னு இங்கிலீஷ்ல சொல்லுவாங்க. உன்னோட பிரண்ட்ஸ் கிட்டே எல்லாம் போய் புலம்பித் தள்ளுவாங்க. அவங்க கிட்டே உன்னோட பெயர் டேமேஜ் ஆகறமாதிரி நடந்துப்பாங்க. எப்படியாவது உன்னை மோசமானவளா காட்ட டிரை பண்ணுவாங்க. இந்த மாதிரி ஆட்கள் கிட்டே எதிர்த்துப் பேசக் கூடாது. உன் கிட்டே கேட்கிறவங்க கிட்டேயெல்லாம் டென்ஷன் ஆகாம, “இனிமே இந்த காதல்ல நம்பிக்கை இல்லை” ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கணும்.

மூணாவது டைப் ஆதிக்க டைப். எல்லாத்தையும் கண்ட்ரோல்ல வெச்சுக்கப் பாப்பாங்க. ரொம்ப கடுமையா நடந்துக்கவோ, வீட்டுல வந்து நேரடியா பேசவோ டிரை பண்ணுவாங்க. தன்னோட வலிமையால இந்த பிரச்சினையைக் கையாள நினைப்பாங்க. முரண்டு பிடிக்காம ஆனா அதே நேரம் ஸ்ட்ராங்கா இருக்கணும்.

நாலாவது டைப் சுய பச்சாதாப டைப் ன்னு சொல்லலாம். ரொம்ப பரிதாபமா, எளிமையா, மென்மையா உன்னோட மனசை மாத்தப் பாப்பாங்க. ரொம்ப செண்டிமெண்ட் கதை பேசி, மெல்ல சில்மிஷ வேலை காட்டி இழுக்கப் பாப்பாங்க. சமயத்துல குடம் குடமா கண்ணீர் கூட வடிப்பாங்க. சோ, இந்த மாதிரி ஆட்களை அவங்க போக்கிலேயே போய் புரிய வைக்கணும்.

கடைசி டைப் தற்கொலை கேஸ். இது ரொம்ப டேஞ்சர் கேஸ். திடீர்ன்னு கையை வெட்டிகிட்டு செத்துப் போவாங்க. சிலர் தற்கொலை பண்ணமாட்டாங்க, ஆனா செத்துடுவேன்னு பேசிப் பேசியே உன்னை குழப்புவாங்க. பயமுறுத்துவாங்க. உன்னை ஒரு பிளாக் மெயில் வட்டத்துக்குள்ள கொண்டு போய் விட்டுடுவாங்க. இவங்க கிட்டேயும் கொஞ்சம் கவனமா பேசணும்.

சொல்லி நிறுத்திய பிரியா வித்தியாவைப் பார்த்தாள்.

“இப்போ சொல்லுடி, உன்னோட பழைய ஆள் எந்த டைப் ?”

“கண்டிப்பா சூயிசைட் கேஸ் இல்லை ! அந்த அளவுக்கு அவன் தைரியசாலியும் இல்லை, கோழையும் இல்லை, அரைவேக்காடு ” சொல்லிவிட்டுச் சிரித்த ர‌ம்யாவை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் பிரியா.