“பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது”. கடவுள் தான் வானத்தையும் பூமியையும் படைத்தார். மனிதனைப் படைத்த அவர், நிலத்தைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். (ஆதி 2 :15 )இறைவனின் படைப்பில் குறையானதும் இல்லை, கறையானதும் இல்லை. நலமோடு வாழவேண்டுமெனில், நிலமோடு வாழவேண்டும் என்பது பழைய ஏற்பாட்டில் இறைவன் சொன்ன செய்தியும் கூட.
நமக்கெல்லாம் நிலம் வாங்குவது ஒரு கனவு. அது ஒரு சமூக அந்தஸ்தின் தேவைகளில் ஒன்று. தனக்கென ஒரு இடம் இருக்கிறது என்பது பொருளாதாரத்தின் அடையாள அட்டை. திருமண ஒப்பந்தங்களில் கூட பையனுக்கு அறிவு இருக்கிறதா என்பதை விட நிலம் இருக்கிறதா என்பதையே முதலில் பார்க்கிறோம்.
நிலம் என்பது நமது பரம்பரையின் நீட்சி. பூர்வீக சொத்து என்பது நமது கலாச்சாரத்தில் உணர்வு ரீதியிலானது. அந்தபூர்வீக சொத்தில் அரைசென்டாவது நமக்கு வேண்டும் என நினைப்பது வெறுமனே பணம் பண்ணுவதற்கானது அல்ல. நமது முன்னோர்களின் நினைவுகளை நமது இதயத்தில் ஏந்திச் செல்வதைப் போன்றது. அவர்களுடைய சுவாசத்தின் ஈரத்தை தலைமுறை தாண்டியும் சுமந்து செல்வதைப் போன்றது.
காலம் காலமாக ஒரு இடத்தில் வசித்து வரும் மக்கள் அந்த இடத்தை விட்டு விட்டு இன்னொரு இடத்துக்குச் செல்லும் வலி மிகப்பெரிது. வேரோடு பிடுங்கி வேறோர் இடத்தில் நடப்படும் பனைமரம் போல அவர்களின் வாழ்க்கை நிலைகுலையும். அதுவும் வலுக்கட்டாயமாக துரத்தப்படும் மக்களின் வலி சொல்ல முடியாது.
அவர்களை புலம் பெயர்ந்தவர்கள் என பெயரிட்டு அழைக்கிறோம். உண்மையில் அவர்கள் ‘புலன்’ பெயர்ந்தவர்கள். அவர்களுடைய ஐம்புலனும் பூர்வீக இடத்திலேயே தங்கியிருக்க உடல் பெயர்ந்து போனவர்கள் அவர்கள். கதியற்று அதோ கதியாய் நிற்கும் அவர்களை அகதிகள் என்கிறோம்.
இறைவனின் பார்வையில் நிலம் என்பது நாம் பற்றிக்கொண்டிருக்க வேண்டிய ஒன்றல்ல. இறைவன் ஒருவரே நாம் பற்றிக் கொண்டிருக்க வேண்டியவர். இறைவனை முழுக்க முழுக்க நம்பி பயணிப்பவர்கள் இதைப் புரிந்து கொள்கின்றனர். “புறப்படு” என்று சொன்னவுடன், நிலங்களையும் சொத்துகளையும் உதறி விட்டுப் புறப்பட்டுப் போன ஆபிரகாம் ஒரு உதாரணம்.
இறைவனைப் பின் பற்றும் போது நாம் அவர் சொல்லும் நாட்டில், அவர் காட்டும் நிலத்தில் நுழைய வேண்டும் என்பது ஆன்மீக பாடம். அதை விட்டு விட்டு நமது அறிவின் துணை கொண்டு நாம் நிலத்தைத் தேர்தெடுக்கும் போது அது கடவுளுக்குப் பிரியமில்லாததாய் மாறுகிறது என்பதையும் பழைய ஏற்பாட்டின் நிகழ்வுகள் நமக்குக் கற்றுத் தருகின்றன.
நிலத்தைப் பண்படுத்துவதும், பாதுகாப்பதும் இறைவனின் திட்டத்தின் பாகங்களே. “தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்” என்கிறது நீதிமொழிகள். அதை விட்டு விட்டு நிலத்தை ஆலைக் கழிவுகளாலும், மட்காத குப்பைகளாலும், ரசாயனங்களாலும் அழிக்கும் போது அது மனுக்குலத்துக்கு ஊறு விளைபிப்பதாய் மாறுகிறது.
சக மனிதனுக்கு இன்னல் உண்டாக்கும் போது அது பாவமாகிறது. “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” பிலிப்பியர் 2:4 எனும் வசனம் அதைத் தெளிவாக்குகிறது
“கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்” என்கிறது நீதிமொழிகள் (3 :19 ). அத்துடன் நின்று விடாமல் அதை செழிப்பாக்கும் வேலையையும் அவர் செய்தார் என்பதை சங்கீதம் சொல்கிறது.
அந்த பூமியை “தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்” சங் ( 65 : 9 ). எனவே நிலம் என்பது விலை கொடுத்து வாங்கியதால் நமக்குரியது ஆகிவிடுவதில்லை. அது இறைவன் நமக்கு பயன்படுத்தவும், பண்படுத்தவும் கொடுத்த வாய்ப்பு என்றே கொள்ள வேண்டும்.
பழைய ஏற்பாட்டு ஆசீர்வாதங்கள் நிலங்களை அளிப்பேன் எனவும், வாக்களிக்கப்பட்ட தேசத்தைக் கொடுப்பேன் எனவும் தொடர்ந்து கூறி வருவதை நாம் அறிவோம். புதிய ஏற்பாட்டில் அந்த நிலம் நமது இதயமாக மாறி விடுகிறது.
விதைப்பவன் உவமையில் நமது இதயமாகிய நிலத்தில், வார்த்தையாகிய விதையை, இறைமகன் விதைக்கிறார்.
இறைவனிடம் பாகுபாடு இல்லை. வழியோரம், முட்செடி, பாறை நிலம், நல்ல நிலம் என நான்கு வகை இதயங்களுக்கும் அவருடைய வார்த்தைகள் செல்கின்றன. “உலகெங்கும் சென்று சகல ஜாதிகளுக்கும் நற்செய்தியை அறிவியுங்கள்” என்ற அவருடைய வார்த்தை பாரபட்சம் பார்ப்பதில்லை.
“ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பும்” இறைவன் அவர். எனவே விதைகளை அவர் விதைத்துக் கொண்டே இருக்கிறார். நிலத்துக்கு ஏற்றபடி விதைகளில் வித்தியாசம் இல்லை. விதைப்பவரிடம் பாரபட்சம் இல்லை. நிலம் மட்டுமே வேறுபடுகிறது.
வழியோர நிலம், வார்த்தைகளை நிராகரிப்பவர்கள். எதிர்ப்பவர்கள். “அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை”. சுயநலமும், நெஞ்சழுத்தமும், தற்பெருமையும் கொண்ட மனிதர்கள் இவர்கள். இந்த நிலங்களில் சாத்தான் சகஜமாக நுழைகிறான், நடக்கிறான், விழும் விதைகளை எடுத்து வெளியே எறிகிறான். அதைப்பற்றிய எந்த பிரகக்ஞையும், உறுத்தலும் இன்றி நிலம் கிடக்கிறது.
பாறை நிலங்கள் மேல் மட்டத்தில் மட்டும் கொஞ்சம் மண் இருப்பவை. விழுந்த விதைகள் அதீத உற்சாகத்தினால் முளை விடும். ஆனால் ஒரு சின்ன கிண்டல், கேலி, சோதனை, நோய், எதிர்ப்பு போதும் அந்த முளை கருகிப்போக. வார்த்தைகள் வேர்விட அனுமதிக்காத பாறை நிலம். காற்றடித்தாலே கலைந்து விடும் காகித வீட்டைப் போன்றது.
மூன்றாவது நிலம் முட்செடிகள் வளரும் நிலம். இங்கே விதைகள் வளரும்.வேர் விடும். நிலம் நல்லது தான். ஆனால் அந்த நிலத்தில் இன்னும் ஏகப்பட்ட முட்செடிகள் இருக்கின்றன. உலக ஆசை, இச்சை, கவலை, எதிர்பார்ப்புகள், புகழ், பெருமை என ஏகப்பட்ட செடிகள். இவற்றை வெட்டி எறிந்து விட்டு விதைத்திருந்தால் விதை பலன் கொடுத்திருக்கும். நிலத்தைப் பண்படுத்திவிட்டு விதைத்திருந்தால் பலன் கொடுத்திருக்கும். அந்த முட்செடிகள் எல்லாம் இருக்கட்டும், கூடவே இறை வார்த்தையும் இருக்கட்டும் என நினைக்கும் நிலம்.
நான்காவது நிலம் நல்ல நிலம். விதையைப் பெறுகிறது, வேர்விட அனுமதிக்கிறது, வளர்ந்து வர துணை செய்கிறது. பலன் கொடுக்கிறது. அதுவும் ஒரு சின்ன விதை முப்பது மடங்கு, அறுபது மடங்கு, நூறு மடங்கு என வியப்பூட்டும் விளைச்சல் கொடுக்கிறது.
நமது இதயம் நல்ல நிலமாக இருக்கிறதா என்பதைப் பரிசீலனை செய்து கொள்வோம். நல்ல நிலம் விதைகளை ஏற்றுக்கொள்கிறது, வேர் விட அனுமதிக்கிறது, முட்களை அகற்றி வளர வழி செய்கிறது, வெறும் விதையாய் புதைந்து விடாமல் மண்ணைக் கீறி வெளியே வந்து பயன் தருகிறது.
இறை வார்த்தைகளை நம் இதயத்தில் ஏற்போம், அதை மனதில் நிலை கொள்ளவும், வளரவும் அனுமதிப்போம். தேவையற்ற உலக சிந்தனைகள் ஆடம்பரங்கள், இச்சைகள் போன்றவை முளையை அழித்து விடாமல் கவனமாய் இருப்போம். விசுவாசம், செபம், தூய வாழ்க்கை எனும் உரங்களாலும், தூய ஆவி எனும் நீராலும் விதைகளை பயன்கொடுக்கும் செடியாக வளர்த்தெடுத்து அனைவருக்கும் கனி கொடுப்போம்.
இறைவன் விரும்பும் நல்ல நிலம் விலையை வைத்து நிர்ணயிக்கப்படுவதில்லை. விளைச்சலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. விளைச்சல் கொடுப்பதில் முதன்மையாய் இருப்போம் . அந்த வாக்களிக்கப்பட்ட நிலமாக நம் இதயத்தை மாற்றுவோம்.
*
( Desopakari Katturai)
You must be logged in to post a comment.