மதத்தின் பெயரால் சர்வதேச சமூகம் சந்தித்ததைப் போன்ற இழப்புகளை வேறெந்த முறையிலும் மனித குலம் சந்திக்கவில்லை. உலகில் ஏதோ ஒரு மூலையில் ஒரு மதவாதி செய்யும் ஒரு செயலுக்கான எதிர்வினை மறு எல்லையில் ஏதோ ஒரு அப்பாவியின் தலையில் விழும் என்பது எழுதப்படாத விதி.
ஒரு நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கும் சமூகம் இன்னொரு நாட்டில் சிறுபான்மையாய் இருக்கிறது. ஒரு நாட்டில் சிறுபான்மையாய் இருக்கும் சமூகம் இன்னொரு நாட்டில் பெரும்பான்மையாய் இருக்கிறது. பெரும்பான்மையாய் இருக்கிறோம் எனும் மிதப்பில் மதவாதிகள் செய்கின்ற தவறுகள், அவர்கள் சிறுபான்மையாய் இருக்கும் நாடுகளில் எதிரொலிக்கின்றன. எனவே தான் மதம் சார்ந்த பிளவுகளும், வன்முறைகளும் எப்போதுமே திகிலைக் கிளப்புகின்றன.
இஸ்லாமிய சமூகத்தினருக்கு எதிராக பரவியிருக்கும் மனநிலைக்கு முக்கியமான காரணம் ஒரு சில தீவிரவாத இயக்கங்களே. அல்குவைதா இயக்கம் கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. இப்போது ஐ.எஸ்.ஐ.எஸ் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் ஈராக் அன்ட் சிரியா ) இயக்கம் சர்வதேச அச்சுறுத்தல் இயக்கமாக மிரட்டுகிறது.
ஒரு மதத்தினருக்கு எதிராக இன்னொரு மதத்தினர் தடை விதிக்கும் போது அது தீவிரமான மதச் சண்டையை உருவாக்கி விடுகிறது. மதங்களிடையே காழ்ப்புணர்ச்சியையும் வலுவாக்குகிறது. ஆனால் ஒரே மதத்தைச் சார்ந்தவர்கள் அதை எதிர்த்து நிற்கும் போது ஆக்கபூர்வமாய் மாறிவிடுகிறது. இப்போது ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து அத்தகைய ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய இஸ்லாமியத் தலைவர்கள் ஒன்று கூடி ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராக பத்வா விதித்திருக்கிறார்கள். இந்தியாவில் 14.2 சதவீதம் இஸ்லாமியர்கள் வாழ்கின்றனர். எண்ணிக்கையின் அடிப்படையில் 17.22 கோடி பேர் இஸ்லாமியர்கள். உலகிலேயே இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா தான். எனவே தான் இந்திய முஸ்லிம்கள் ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக பத்வா விதித்திருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
வன்முறை என்பது இஸ்லாமின் வழிமுறையல்ல. இப்போது ஐ.எஸ் அமைப்பு செய்து கொண்டிருக்கும் செயல்களெல்லாம் இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரானவை.எனவே அந்த அமைப்புக்கு எதிராக பத்வா விதிக்கிறோம் என்று அந்த முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்வா என்பது இஸ்லாமிய மதத் தீர்ப்பு. இஸ்லாமிய மதத்துக்கோ, கோட்பாடுகளுக்கோ, வாழ்க்கை முறைக்கோ எதிராகச் செயல்படும் இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்தத் தடை விதிக்கப்படுகிறது. சல்மான் ருஷ்டி முதல் ஏ.ஆர் ரஹ்மான் வரை பலரையும் இந்த பத்வா பாதித்திருக்கிறது. இப்போது ஒரு மிகப்பெரிய தீவிரவாத அமைப்புக்கு எதிராக இந்தத் தடை வலிமையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்வாவின் நகல்களை ஐ.நா சபைத் தலைவர்களுக்கும், உலகின் 47 நாடுகளின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தடைக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. “ஐ.எஸ். இயக்கத்துக்கு தடை விதித்து இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் மதத் தலைவர்களும், அறிஞர்களும் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை வரவேற்கிறோம். அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து அந்த இயக்கத்தில் சேர்ப்பதைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும்” என்று அமெரிக்காவின் செய்தித் தொடர்பாளர் ஹெலனா வயிட் தெரிவித்தார்.
ஐ.நா அமைப்பு மத்திய கிழக்கு நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கூடவே ஆசியாவின் பல்வேறு பாகங்களில் நுழைந்து அதன் இருப்பைப் பலப்படுத்த முயற்சித்து வருகிறது.இந்தியாவிலும் அதன் கிளைகள் ஆங்காங்கே இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்திய அரசியலமைப்புச் சட்டங்கள் மதச்சார்பின்மைக்கு துணை செய்தாலும் இந்தியாவில் சிறுபான்மையினரின் வளர்ச்சியும், அங்கீகாரமும் சகஜ நிலையில் இல்லை என்பதே உண்மை. 14 சதவீதம் இஸ்லாமியர்கள் வாழும் பூமியில் 2 3 சதவீதம் இஸ்லாமியர்கள் மட்டுமே நல்ல அரசுப் பதவிகளில் இருக்கின்றனர். வெறும் 1.2 சதவீதம் பேர் மட்டுமே பட்ட மேற்படிப்பை முடிக்கிறார்கள். வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களோ 94 சதவீதத்திற்கும் மேல்.
இப்படி சமூகத்தின் பொருளாதார, வாழ்க்கைச் சூழலில் பின் தங்கியிருக்கும் இஸ்லாமியர்கள் மீது தீவிரவாதிகள் எனும் பழியும் சேர்ந்து விடும் போது அவர்கள் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் ஒற்றுமையில் எப்போதும் முன்னில் நிற்கும் இஸ்லாமியர்கள் இப்போது ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராகவும் ஒன்றிணைந்திருப்பது இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலகின் பார்வையில் மிகப்பெரிய அங்கீகாரத்தையும் இந்திய இஸ்லாமியர்களுக்கு வழங்கியிருக்கிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமீபகாலமாக தொடர் வன்முறைகளிலும், மனிதநேயமற்ற செயல்களிலும் செயல்பட்டு வருகிறது. தனது அமைப்பினரோடு பாலியல் உறவு வைத்துக் கொள்ளவில்லை என்றெல்லாம் காரணம் காட்டி பெண்களை படுகொலை செய்கிறது. பிணைக்கைதிகளாக மக்களைப் பிடித்து ஈவு இரக்கமில்லாமல் தலையைக் கொய்கிறது. சிறுவர்களுக்கும் வன்முறையைப் போதிக்கிறது. இவையெல்லாம் நிச்சயம் இஸ்லாமியக் கொள்கைகள் அல்ல.
“அப்பாவிகளைக் கொல்வதை இஸ்லாம் எதிர்க்கிறது. பத்திரிகையாளர்கள், உதவியாளர்கள் போன்றவர்களைக் கொல்பவர்களை இஸ்லாம் எதிர்க்கிறது. ஜிகாத் என்பது தற்காப்புப் போர், சரியான காரண காரியமில்லாமல் அதை அமல்படுத்தக் கூடாது. கட்டாய மதமாற்றம் இஸ்லாமுக்கு எதிரானது. குழந்தைகளுக்கோ, பெண்களுக்கோ உரிமைகளை மறுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது, சித்திரவதை இஸ்லாமுக்கு எதிரானது, இப்படி ஏராளமான வரைமுறைகள் இஸ்லாமில் உண்டு. ஆனால் இவை அனைத்தையும் ஐ.எஸ்.ஐ.எஸ் செய்கிறது” என பட்டியலிடுகின்றனர் இஸ்லாமியத் தலைவர்கள்.
இஸ்லாமியத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாத இயக்கத்துக்கு எதிராக இஸ்லாமியர்களே எழுந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகச் சரியான ஒரு நடைமுறை. உலகெங்கும் இருக்கும் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் எனும் மாயை உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருப்பது ஆரோக்கியமானது.
எந்த இயக்கமும், எந்த குழுவும், எந்த மதமும் தங்களைத் தாங்களே சுத்தம் செய்து கொள்வதும், விமர்சித்துக் கொள்வதும், வழிகளைச் செப்பனிட்டுக் கொள்வதும் ஆரோக்கியமானது. இந்து சாமியார்களின் லீலைகளுக்கு எதிராக இந்துக்கள் விமர்சிக்கும் போக்கு உண்டு. போப் உட்பட, கிறிஸ்தவத் தலைவர்களின் செயல்பாடுகளை கடுமையாய் விமர்சிக்கும் போக்கு கிறிஸ்தவத்திலும் உண்டு.
அத்தகைய ஒரு நிலை இஸ்லாமிலும் எழுந்திருப்பது சர்வமத சூழலுக்கு வெகு ஆரோக்கியமானது. சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்திலும் இஸ்லாமிய இளைஞர்கள் ஐ.எஸ் இயக்கத்துக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைத் தீவிரமாகப் பதிவு செய்தது குறிப்பிடத் தக்கது.
எம்மதமும் சம்மதமே. அதே நேரத்தில் எந்த மதத்திலும் வன்முறை என்பது எதிர்க்கப்பட வேண்டியதே. சிறுபான்மையினரைக் காக்கும் கடமை பெரும்பான்மையினருக்கு உண்டு. அத்தகைய பரஸ்பர அன்பிலும், நம்பிக்கையிலும் தான் சர்வதேச சமாதானம் கட்டியெழுப்பப்பட முடியும்
ஃ
சேவியர்
Thanks : Namma Adayaalam
You must be logged in to post a comment.