“இந்த பத்து லட்ச ரூபாயை பத்திரமா வெச்சுக்கப்பா. இதை வெச்சு நிறைய பிளான் பண்ணியிருக்கேன்” என்று நீங்கள் உங்கள் நண்பரிடம் ஒரு பெட்டியைக் கொடுக்கிறீர்கள். உங்கள் நண்பர் கொஞ்ச நாளிலேயே உங்களை மறந்து விட்டு பணத்தை இஷ்டம் போல செலவழித்துத் தீர்க்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அந்த நபர் குற்றவாளியா இல்லையா ? அவர் நம்பிக்கை துரோகியா இல்லையா ?
“உன்னை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு படைத்திருக்கிறேன். என்னை பற்றிக் கொள். என் கட்டளைகளைக் கைக்கொண்டு வாழ்” என்கிறார் கடவுள். அதை அலட்சியப் படுத்திவிட்டு அவர் தந்த உயிரை அழித்து விடுவது குற்றமா இல்லையா ?
தற்கொலை என்பது ஏதோ அங்கொன்றும் இங்கொன்றும் நடப்பதல்ல. உலக அளவில் ஒவ்வொரு நாற்பது வினாடிக்கும் ஒரு நபர் தற்கொலை செய்து கொள்கிறார். 2012ம் ஆண்டைய கணக்குப்படி உலகிலேயே தற்கொலையில் முன்னணியில் இருக்கும் நாடு எனும் அவப் பெயர் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கிறது.
இரண்டரை இலட்சம் இந்தியர்கள் 2012ம் ஆண்டில் மட்டும் தற்கொலை செய்திருக்கிறார்கள். எதில் வருகிறதோ இல்லையோ தற்கொலையின் டாப் 3 பட்டியலில் தமிழ்நாடு எப்போதும் வந்து விடுகிறது. உலக அளவில் ஆண்டுக்கு சுமார் பத்து இலட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாய் உலக நலவாழ்வு நிறுவனம் சொல்கின்றன. அதில் 75 சதவீதம் பேர் மத்தியதர, அல்லது வறுமைக்கோட்டில் இருக்கின்ற மக்கள் தான். 15 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் தான் மிக அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனும் தகவல் உண்மையிலேயே பதறடிக்கிறது.
தற்கொலைக்கான காரணங்களில் மன அழுத்தம் முதலாவது இடத்தைப் பிடிக்கிறது. பல்வேறு காரணங்களுக்காக இந்த மன அழுத்தம் வரலாம். நிராகரிப்பு, தோல்வி, அவமானம், பொறாமை, எரிச்சல், என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் சர்வதேச அளவில் இது தான் தற்கொலைக்கான முதல் காரணமாக இருக்கிறது.
இரண்டாவது காரணம் நம்பிக்கை இழப்பது. தொட்டதெல்லாம் தோல்வி. உப்பு விக்க போனா மழை பெய்யுது, பஞ்சு விக்க போனா காத்தடிக்குது என புலம்புபவர்கள் ஒரு கட்டத்தில் போதுமடா சாமி என வாழ்க்கையை முடித்துக் கொள்ள நினைக்கின்றனர்.
பயம் இன்னொரு முக்கியமான காரணம். வாழ்க்கையைக் குறித்த பயம். பிற சக்திகளைக் குறித்த பயம். நோயைக் குறித்த பயம். எதிரிகளைக் குறித்த பயம். எதிர்காலம் குறித்த பயம். தண்டனை குறித்த பயம் என ஏதோ ஒரு பயம் தற்கொலைக்குத் தூண்டுவது பொதுவான காரணங்களில் ஒன்று.
பதின் வயதுகளில் நடக்கின்ற தற்கொலை முயற்சிகள் பெரும்பாலும் முட்டாள்தனமானவை. “ஒரு பாடம் கத்துக்கொடுக்கணும்” என்பதே பெரும்பாலான மனதுக்குள் நுழையும் சிந்தனை. பெற்றோருக்கு, காதலர்க்கு, நண்பர்களுக்கு, உறவினர்க்கு என யாரோ ஒருவருக்கு வலியைக் கொடுப்பதாய் நினைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றனர்.
காரணங்கள் நூற்றுக் கணக்கில் இருந்தாலும் அடிப்படை விஷயம் ஒன்று தான். நம்மையெல்லாம் படைத்துக் காக்கும் இறைவன் நம்மைக் கவனிக்கிறார் என்பதை மறந்து போதல். தாயின் கருவில் உருவாகும் முன்பே நம்மைக் கண்ட தேவன் நமது இந்த சிக்கலில் இருந்தும் விடுபட உதவுவார் என்பதை மறந்து போதல். உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத் தொடுகிறான் என்று சொன்ன தேவன் நம் மீது அதீத அன்பு கொண்டிருக்கிறார் என்பதை மறந்து போதல். க்ஷ்`
பத்து கட்டளைகளைப் பற்றித் தெரியாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது. ‘கொலை செய்யாதிருப்பாயாக’ என்பதும் அதில் ஒரு கட்டளை என்பதை யாவரும் அறிவோம். சக மனிதனைக் கொலை செய்வது பெரும் பாவம். அதே போல சுய மனிதனை, அதாவது தன்னைக் கொலை செய்வதும் பாவமே. அதனால் தான் அதைத் தற் கொலை என பெயரிட்டு அழைக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் “அடுத்தவனை” கொலை செய்யாதிருப்பாயாக என கட்டளை சொல்லவில்லை, “கொலை செய்யாதிருப்பாயாக” என பல பொருள் பட கூறுகிறது எனலாம்.
சுருக்கமாக, இறைவன் கொடுத்த உயிரை முடித்துக் கொள்வது என்பது இறைவனுக்கு எதிரான செயல். எனவே தான் அது பாவமாகிறது.
“கடவுளே.. என்னோட பிரச்சினையை உம்மால கூட தீக்க முடியாது. நான் சாகறது மட்டும் தான் இதுக்கு ஒரே வழி” என்பது தான் தற்கொலை செய்பவர்களின் மனநிலை. தற்கொலை விசுவாசமின்மையின் அடையாளம்.
உயிர் என்பது கடவுளால் மட்டுமே வருகிறது. கர்ப்பத்தை அடைப்பதும், திறப்பதும் அவருடைய சித்தம் என்பதை பைபிள் பல இடங்களில் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ‘பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்’ எனும் வசனத்தைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. எனவே தான், “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்” என யோபுவைப் போல அவரிடம் சரணடவது அவசியமாகிறது.
வாழ்க்கை மிகவும் சவாலானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. போட்டியும் பொறாமையும் நிறைந்த இந்த உலகில் வாழ்க்கையை ஓட்டுவது கடினமானது. இந்த போராட்டமான வாழ்க்கையில் பல வேளைகளில் நாம் நிலை தடுமாறுவதுண்டு. “நான் உயிரோடிருக்கிறதைப் பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் ” ( யோனா 4 : 8) என யோனா புலம்பினார். “போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்” என எலியா புலம்பினார். அத்தகைய துயர வேளைகளிலும், கடவுளை நோக்கும் போது கடவுள் விடுவிக்கிறார்.
பைபிளில் எல்லோருக்கும் தெரிந்த இரண்டு தற்கொலைகள் உண்டு. ஒன்று சவுல் மன்னனுடையது. அவர் தனது வாளை தரையில் நட்டு அதன் மேல் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார். இரண்டாவது யூதாஸ் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். கடவுளை நோக்காமல் தன்னை நோக்குகையில் மனிதன் பாவம் செய்கிறான்.
ஆன்மீகத்தில் உயர் நிலையில் இருந்த பவுல், “மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார்” ( 2 கொரி 1 : 8 9 ) என மரணத்தின் பிடியிலிருந்து மீட்கும் பொறுப்பைக் கடவுளிடம் விடுகிறார். விசுவாசத்தை நிலை நாட்டுகிறார்.
கிபி நான்காம் ஐந்தாம் நூற்றாண்டுகளில் “டொனாடிசம்” என்றொரு கிறிஸ்தவக் குழு இருந்தது. இவர்கள் தற்கொலை செய்து கொண்டால் நேரடியாகக் கடவுளை அடைந்து விடலாம் என நம்பினார்கள். கிறிஸ்துவின் போதனைகளைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதவர்கள் அவர்கள்.
“அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது” ( யோபு 14:5 )எனும் பைபிள் வசனம், நமது வாழ்க்கையை முடிக்கும் உரிமை கடவுளிடம் மட்டுமே இருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது. பழைய காலத்தில் தற்கொலை செய்து கொண்ட கிறிஸ்தவர்களை அடக்கம் செய்ய திருச்சபைகள் மறுத்து வந்தன. அந்த அளவுக்கு தற்கொலையின் மீது தீவிர எதிர்ப்பு கொண்டிருந்தனர்.
சிசுக்கொலையைப் போல, தற்கொலையும் கிறிஸ்தவத்துக்கு எதிரானது. தற்கொலைக்கு முயல்பவர்களை தடுப்பதும், அவர்களை சரியான வழியில் கொண்டு வருவதும் நாம் செய்ய வேண்டிய காரியங்களாகும். தற்கொலைக்கு ஒரு நபர் முயல்கிறார் எனில் அவர் சொல்லொண்ணாத் துயரில் இருக்கிறார் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
அவருடன் கூடவே இருந்து அவருடைய துயரங்களை அமைதியாகக் கேட்பதும், அவரை அன்பு செய்ய நீங்கள் இருக்கிறீர்கள் எனும் நம்பிக்கையை விதைப்பதும் முதல் தேவை. அந்த சூழலில் தத்துவங்களோ, இறையியல் கோட்பாடுகளோ கை கொடுக்காது. அன்பு மட்டுமே ஒரு மனிதனை திருத்த முடியும். இறைவனின் அன்பை உங்கள் மூலமாய்ப் பகிருங்கள்.
சில சிந்தனைகளை மனதில் கொள்வோம்.
- தற்கொலை என்பது ‘வேறு வழி இல்லை’ என்பதன் வெளிப்பாடு. “என் கிருபை உனக்குப் போதும்” என்கிறார் கடவுள். அதை நம்புங்கள் தற்கொலை சிந்தனை விலகும்.
- தற்கொலை என்பது சுயநலத்தின் அடையாளம். தனது துயரங்களுக்கான விடுதலை பல வேளைகளில் அடுத்தவர்களுக்கு மிகப்பெரிய துயரத்தைத் தரும் என்பதை உணர்வது அவசியம்.
- தற்கொலை என்பது சிலை வழிபாடு. தன்னையோ, தன் வாழ்க்கையின் ஆனந்தத்தையோ வழிபடுபவர்கள் அதில் குறைபாடு ஏற்படுகையில் எடுக்கும் முடிவு. சிலை வழிபாடு பாவம்.
4 தற்கொலை செய்பவர்கள் உலகப் பிரகாரமான காரியங்களில் ஏற்பட்ட தோல்விக்காகவே தற்கொலை செய்கின்றனர். முதலில் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடாத பாவத்தை அவர்கள் செய்கின்றனர்.
- தற்கொலை ஒரு மோசமான சாட்சி. கனிகளின் மூலமாகவும், செயல்களின் மூலமாகவும் கடவுளுக்கு மகிமையையும், கனத்தையும் கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். தற்கொலை நம் கடவுளை அவமானப் படுத்தும் செயல்.
இவ்வுலக வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு ஒரே ஒரு தடவை தரும் வரம். ஏழு ஜென்மங்களோ, மறு பிறவிகளோ இல்லை. இந்த வாழ்க்கையை முழுமையாக, அவருக்கு ஏற்புடையதாக வாழ்வதே நமக்கு இடப்பட்டிருக்கும் பணி. உயிரையும், வாழ்வையும் இறைவனிடம் ஒப்படைப்போம். அவர் கையில் ஒரு பொம்மலாட்டப் பொம்மையைப் போல வாழ்வதே சிறப்பான வாழ்க்கை.
பாவத்தை அறிக்கையிட்டால்
மன்னிப்பு நிச்சயம் !
தற்கொலையில் அறிக்கையிடல்
இல்லையே சாத்தியம் !!
*
You must be logged in to post a comment.