உள்ளே உள்ளே; இறைவன் உன் உள்ளே ( Sivathamizh Magazine London )

forgive

புனிதப் பயணம்

என்பது

நாம் செல்வதல்ல‌

நமக்குள் செல்வது !

இறைவனைத் தேடி மனிதர்கள் எல்லா இடங்களிலும் அலைந்து திரிகிறார்கள். சிலருக்கு இறைவன் மலைகளின் உச்சியில் இருப்பார் எனும் நம்பிக்கை. எனவே மலைகளை நோக்கி அவர்கள் நடக்கிறார்கள்.

சிலருக்கு ஆண்டவன் சில சிற்பங்களின் உள்ளே சிக்கிக் கிடக்கிறானோ எனும் சந்தேகம். எனவே அவர்கள் அத்தகைய சிற்பங்கள், சிலைகள் இருக்கும் திசை நோக்கி சென்று கொண்டே இருக்கிறார்கள்.

சிலருக்கு அவன் நதிகளில் கலந்திருப்பதாய் நம்பிக்கை. அவர்கள் புனித நதிகளை நோக்கி பயணங்கள் செல்கின்றனர்.

ஊரெல்லாம் சுற்றிக் களைக்கும் மனிதர்கள் கடவுளை எங்கேயும் காணமுடியாமல் சோர்ந்து போய் ஒரு இடத்தில் தனிமையில் அமரும் போது, கடவுள் அவர்களுக்கு உள்ளேயே இருப்பதைக் கண்டு கொள்கின்றனர். கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்தோமே என‌ அவ‌ர்க‌ள் சுய‌ம் உண‌ர்கையில் வ‌ய‌து அவ‌ர்க‌ளை வாழ்க்கையின் எல்லைக் கோட்டின் அருகே கொண்டு போய் நிறுத்தி விடுகிற‌து.

புத்த‌னுக்கு ஞான‌ம் தோன்றிய‌து தேச‌ங்க‌ள் தாண்டிய‌ ப‌ய‌ண‌த்தில் அல்ல‌, போதி ம‌ர‌த்த‌டியில் த‌ன்னை உண‌ர்ந்த‌ போது தான். கார‌ண‌ம் இறைவ‌ன் வெளியே இல்லை, உள்ளே இருக்கிறார். நாம் தான் வெளியே ஓடிக் கொண்டிருக்கிறோம்.

இறைவ‌னை வெளியே தேடுவ‌து மிக‌ வ‌ச‌தியான‌து. ஒரு குறிப்பிட்ட‌ நேர‌த்தில் சென்று ஒரு பூஜை செய்வ‌தோ, ஒரு பிரார்த்த‌னை செய்வ‌தோ, ஒரு தொழுகை செய்வ‌தோ ந‌ம‌க்கு மிக‌ எளிதான‌ விஷ‌ய‌ம். ஆனால் உள்ளேயே க‌ட‌வுள் இருக்கிறார் என்றால் அது ந‌ம‌க்கு மிக‌ப்பெரிய‌ இட‌ஞ்ச‌ல்.

அத‌னால் தான் க‌ட‌வுள் உள்ளே இருக்கிறார் என்ப‌தை ஏற்றுக் கொள்வ‌தில் ந‌ம‌க்கு விருப்ப‌ம் இல்லை.

 

அப்படி என்னென்ன சிக்கல் ?

க‌ட‌வுள் உள்ளே இருக்கிறார் என்றால், ந‌ம‌து க‌ண்க‌ள் வ‌ழியாக‌ அவ‌ர் பார்க்கிறார். அதனால் பார்வைக‌ள் ஆபாச‌ங்க‌ளுக்கு வில‌கியிருக்க‌ வேண்டியிருக்கிற‌து. பெண்க‌ளைப் பார்க்கும்போது க‌ண்க‌ளைப் பார்க்கும் க‌ண்ணிய‌ம் தேவைப்ப‌டுகிற‌து. நூல்க‌ள், இணைய‌ த‌ள‌ங்க‌ள், சினிமாக்க‌ள் இங்கெல்லாம் க‌ட‌வுளையும் கையோடு கூட்டிக்கொண்டு போகலாமா என யோசிக்க‌ வேண்டியிருக்கிற‌து !

க‌ட‌வுள் உள்ளே இருக்கிறார் என்றால், அவ‌ர் இருக்கின்ற‌ இந்த‌ உட‌லான‌து ஆல‌ய‌மாகி விடுகிற‌து. ம‌துரை மீனாட்சிய‌ம்ம‌ன் ஆல‌ய‌த்துக்குள்ளே போய் ஒரு குவாட்ட‌ர் அடித்து நாலு சிக‌ரெட் புடிப்போம் என்றால் மனம் ப‌த‌ட்ட‌மாகிற‌து இல்லையா ? ந‌ம‌து உடல் ஆல‌ய‌மானால் அதில் ம‌துவையும், புகையையும், தேவைய‌ற்ற‌ போதையையும் உல‌வ‌ச் செய்ய‌ முடியாத‌ல்ல‌வா ?

க‌ட‌வுள் உள்ளே இருக்கிறார் என்றால் ந‌ம‌து சிந்த‌னைக‌ளை அவ‌ர் வாசிக்கிறார் என்று பொருள். ந‌ம‌து சிந்த‌னைக‌ளைச் சீர்செய்ய‌ வேண்டியிருக்கிற‌து. கெட்ட‌ சிந்த‌னைக‌ளை முளையிலேயே கிள்ளி எறிய‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் எழுகிற‌து. ர‌க‌சிய‌ங்க‌ளைப் புதைத்து வைக்கும் குப்பை மேடாக‌ ம‌ன‌தைப் போட‌ முடியாது அல்ல‌வா ?

க‌ட‌வுள் உள்ளே இருக்கிறார் என்றால் நம‌து செய‌ல்க‌ளின் பின்ன‌ணியில் செய‌ல்ப‌டும் ந‌ம‌து ம‌ன‌நிலை தூய்மையாய் இருக்க‌ வேண்டியிருக்கிற‌து. நாம் புக‌ழையும் பெருமையையும் எதிர்பார்த்து உத‌வுகிறோமா ? ந‌ம‌து ந‌ட்பின் பின்ன‌ணியில் ஏதேனும் சுய‌ந‌ல‌ம் இருக்கிற‌தா என்றெல்லாம் சிந்திக்க‌ வேண்டியிருக்கிற‌து.

“நாலு பேருக்கு ந‌ல்ல‌து ந‌ட‌க்கும்ன்னா எதுவுமே த‌ப்பில்லை” என்ப‌தெல்லாம் மிக‌வும் த‌வ‌றான‌ கோட்பாடுக‌ள். ந‌ல்ல‌ செய‌ல்க‌ள், கெட்ட‌ செய‌ல்க‌ள் என்ப‌து போல‌ செத்த‌ செய‌ல்க‌ள் என்றொரு வ‌கை உண்டு. ந‌ல்ல‌ செய‌ல்க‌ளாய் வெளிப்பார்வைக்குத் தெரிகின்ற‌ செய‌ல்க‌ள் த‌வ‌றான‌ கார‌ண‌ காரிய‌ங்க‌ளுக்காய் செய்ய‌ப்ப‌டுகிற‌தெனில் அவை செத்த‌ செய‌ல்க‌ள். ஊர்கூட்டி ஒருவ‌ருக்கு ந‌ல‌த்திட்ட‌ம் வ‌ழ‌ங்குவ‌தை இத‌ன் உதார‌ண‌மாய்க் கொள்ள‌லாம்.

இறைவ‌ன் உள்ளே இருக்கிறார் என்றால் நாம் அவ‌ருடைய‌ க‌ண்க‌ளை விட்டு எப்போதுமே த‌ப்ப‌ முடியாது. இருட்டின் கையில் இருந்தாலும், அடைக்க‌ப்ப‌ட்ட‌ த‌னிய‌றையில் இருந்தாலும் க‌ட‌வுள் கூட‌வே இருக்கிறார் எனும் சிந்த‌னையுட‌ன் த‌வ‌றுக‌ளுக்கு வில‌கியிருக்க‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் வ‌ருகிற‌து.

க‌ட‌வுள் உள்ளே இருக்கிறார் என்றால் அவ‌ருக்குப் பிடித்த‌மான‌ வாழ்க்கையை ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ‌வேண்டிய‌து அவ‌சிய‌மாகிற‌து. ஏதோ வார‌மொருமுறையோ, மாத‌மொருமுறையோ செல்லும் ம‌த‌ அடையாள‌த்தைத் தாண்டி வாழ்க்கையே புனித‌ம‌டைய‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் உருவாகிற‌து.

கடவுள் உள்ளே இருக்கிறார் என்றால், க‌ண்ணுக்கு மை தீட்டி, உத‌ட்டில் சாய‌ம் பூசி, அழ‌கிய‌ ஆடை அணிந்து, நேர்த்தியாக‌ அழ‌காக‌ காட்சிய‌ளிப்ப‌து போல‌, ம‌ன‌தையும் அழ‌குப‌டுத்த‌ வேண்டிய‌ தேவை எழுகிற‌து. ம‌ன‌தின் அழுக்கைக் க‌ழுவிக் க‌ளைய‌ வேண்டிய‌ க‌ட்டாய‌மும் உருவாகிற‌து.

கார‌ண‌ம் க‌ட‌வுள் உள்ளே இருந்தால், அக‌த்தின் அழ‌கு முக‌த்தில் தெரிய‌ வேண்டும். அதாவ‌து க‌ட‌வுள் முக‌த்தில் பிர‌திப‌லிக்க‌ வேண்டும். முக‌த்தில் சாந்த‌மும், ப‌ணிவும், பொறுமையும் மிளிர‌ வேண்டும். நாவில் ந‌ன்மையே கூடார‌ம‌டித்துக் குடியிருக்க‌ வேண்டும் எனும் மாற்ற‌ம் தேவைப்ப‌டுகிற‌து.

இப்ப‌டி ஏக‌ப்ப‌ட்ட‌ தேவைக‌ள், க‌ட்டாய‌ங்க‌ள், மாற்ற‌ங்க‌ள் தேவைப்ப‌டுவ‌தால் தான் நாம் க‌ட‌வுளை இத‌ய‌த்துக்குள் அம‌ர‌ வைக்க‌ த‌ய‌ங்குகிறோம். எப்ப‌டியாவ‌து இத‌ய‌த்தை விட்டு அவ‌ரை வெளியேற்றி விட்டால் காணிக்கைக‌ள், ப‌ரிகார‌ங்க‌ள், ப‌ய‌ண‌ங்க‌ள் மூல‌ம் க‌ட‌மையைக் க‌ழித்து விட‌லாம் என்ப‌து அவ‌ர்க‌ளுடைய‌ எண்ண‌ம்.

க‌ட‌வுள் நாம் தேடிப் போக‌வேண்டிய‌வ‌ர‌ல்ல‌. ந‌ம்மைத் தேடி வ‌ருகிற‌வ‌ர். கார‌ண‌ம், நாம் அனைவ‌ரும் அவ‌ருடைய‌ பிள்ளைக‌ளாக‌ இருக்கிறோம். நாம் செய்ய‌ வேண்டிய‌தெல்லாம் ஒன்றே ஒன்று தான். அவ‌ர் வ‌ரும்போது அவ‌ரை வீட்டுக்குள் அழைத்து ந‌ம‌து வீட்டின் சாவியை அவ‌ர் கையில் ஒப்ப‌டைக்க‌ வேண்டிய‌து தான்.

க‌ட‌வுளுக்காய் க‌த‌வைத் திற‌க்க‌ வேண்டுமெனில் உள்ளே நிர‌ம்பியிருக்கும் தீய‌வ‌ர்க‌ளை முத‌லில் வெளியேற்ற‌ வேண்டும். காலி செய்யாத‌ கோப்பையில் புதிய‌தாய் எதையும் ஊற்ற‌ முடியாது.

உள்ளே நுழைந்த‌பின் அவ‌ர் நிம்ம‌தியாய் இருக்கும் வ‌கையில் ந‌ம‌து இத‌ய‌ம் தூய்மையான‌தாய் இருக்க வேண்டும். ம‌ன‌தைத் தூய்மைப்ப‌டுத்த‌ அவ‌ர‌து உத‌வியையும் த‌ய‌ங்காம‌ல் நாட‌லாம்.

உள்ளே நுழைந்த‌ கட‌வுளுக்கு முழு அதிகார‌த்தையும் கொடுக்க‌ வேண்டும். அந்த‌ அறையில் போகாதே, இந்த‌ அறைக்குள் நுழையாதே என்றெல்லாம் க‌ட்டுப்பாடுக‌ள் விதிக்க‌க் கூடாது. அத‌ற்கு ந‌ம‌து ம‌ன‌தில் பாவ‌த்தின் அறைக‌ள் இல்லாம‌ல் இருக்க‌ வேண்டிய‌து அவ‌சிய‌ம்.

அப்புற‌மென்ன‌, உங்க‌ளுடைய‌ வாழ்க்கை செம்மைப்ப‌டும், அர்த்த‌ப்ப‌டும். ம‌த‌மெனும் ச‌ட‌ங்குக‌ள் தாண்டி இறைவ‌னின் வ‌ச‌ம் உங்க‌ள் இத‌ய‌ம் இளைப்பாறும். வ‌ருகின்ற‌ க‌வ‌லைக‌ள், சோர்வுக‌ள். ச‌வால்க‌ள் எல்லாவ‌ற்றையும் ச‌மாளிக்க‌ உங்க‌ளோடு க‌ட‌வுளும் இருந்தால் யானை மீதிருக்கும் சிற்றெறும்பாய் உண‌ர்வீர்க‌ள்.

அதுதான் ஆன்மீக‌த்தின் தேவை. உள்ளே.. உள்ளே.. இறைவ‌ன் உன் உள்ளே வ‌ர‌ட்டும். உன் வாழ்க்கை துய‌ர‌ங்க‌ளை விர‌ட்டும்.

( Thanks : Sivatamizh Magazine, London )

 

 

 

 

 

 

 

தனிமையை இனிமையாக்க

alone

சிலருக்கு தனிமை என்பது வரம். எனவே தனிமையைத் தேடிப் பயணங்கள் செல்வார்கள். மலைகளின் உச்சிக்கோ. யாருமற்ற வனாந்தரத்தின் புரட்டப்படாத பக்கங்களுக்கோ. நதிகளின் பிரதேசத்துக்கோ செல்வார்கள். அந்தத் தனிமை அவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டி அனுப்பி வைக்கும். உண்மையில் அவர்கள் தனிமையில் இருப்பதில்லை, கூட்டத்திலிருந்து தனியே பிரிந்து இயற்கையின் மடியில் ஓய்வெடுக்கின்றனர்.

இன்னும் சிலருக்கு தனிமை சாபம். கொஞ்ச நேரம் தனியே விட்டாலே என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டப்படுவார்கள். மக்கள் கூட்டத்தில் இருக்க வேண்டும் என பரபரப்பார்கள். அவர்களுக்கு மற்றவர்களுடைய அருகாமை தான் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

இன்னும் சிலர் எந்தப் பக்கமும் சாயாமல் இருப்பார்கள். தனிமையாய் இருந்தால் தனிமையை ரசித்துக் கொள்வார்கள். கூட்டத்தில் இருந்தால் அந்த கணத்தை நேசிப்பார்கள்.

வாழ்க்கை எந்திரமாகி விட்டது. அலுவலகப் பணிகளுக்கான ஓடல்களில் பெரும்பாலான நேரம் முடிந்து விடும். குடும்பத்தினருக்கான ஓட்டம் மீதி நேரத்தை அபகரித்துவிடும். எஞ்சியிருக்கும் நேரத்தை அரைகுறையாய் கிடைக்கும் தூக்கம் எடுத்துக் கொள்ளும். இதில் நம்மோடு நாமே இருக்கும் தனிமை நிமிடங்கள் கிடைப்பதே அபூர்வம்.

எது எப்படியோ, விரும்புகிறோமோ இல்லையோ, தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்கள் நம்மை அவ்வப்போது சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த தனிமையான கணங்களை இனிமையான கணங்களாய் மாற்றுவது நம் கையில் தான் இருக்கிறது.

தனிமையில் இருக்கையில் நீ உன்னோடு இருக்கிறாய். உன்னை உனக்குப் பிடிக்காவிட்டால் தான் தனிமை பிடிக்காமல் போகும். உன்னை உனக்குப் பிடிக்குமெனில் தனிமை என்பது வரவேற்புக்குரியது.

நாள் முழுக்க ஏதேதோ விஷயங்களுக்காக ஓடிய நம்மை நமக்கென இயங்க வைப்பது தனிமை தான். அத்தகைய தனிமை நிமிடங்களில் என்னென்ன செய்யலாம்.

1. எழுதலாம். நமக்குத் தோன்றும் விஷயங்கள், நமது அனுபவங்கள், அல்லது நமது கற்பனைகள் நமது ரகசிய மனக் கிடங்கு என ஏதோ ஒரு விஷயத்தை எழுதலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதோ, ஒரு டைரி வாங்குவதோ என எழுத்தின் தளம் எதுவாகவும் இருக்கலாம். எழுதுவது நமது மனதை மகிழ்வாக்கும், இலகுவாக்கும் கூடவே தனிமையை இனிமையாக்கும்.

2. ‘யாருமே இல்லேன்னா இதைச் செய்வேன்’ என எல்லாருக்குள்ளும் ஒரு ஏக்கம் இருக்கும். அந்த விஷயத்தைச் செய்யுங்கள். அது கன்னா பின்னாவென நடனமாடுவதானாலும் சரி, சத்தமாய்ப் பாடுவதானாலும் சரி, ஒரு படம் பார்ப்பதானாலும் சரி, உங்கள் வீட்டுச் செல்லப் பிராணியுடன் உருண்டு புரள்வதானாலும் சரி எது உங்கள் ஏக்கமோ அதை நிறைவேற்றுங்கள்.

3. தனிமை தந்திருக்கும் சுதந்திரத்தை உணருங்கள். இது உங்களுக்கான நேரம், உங்களுக்கான தருணம். இங்கே நீங்கள் தான் பாஸ், நீங்கள் தான் வேலையா பவுலர், நீங்கள் தான் பேட்ஸ்மேன், நீங்கள் தான் அம்பயர் ஏன் நீங்கள் தான் பார்வையாளர்கள். எனவே உங்கள் ரசனையை செயல்படுத்துங்கள்.

4. தனிமையில் இருக்கும் போது நீங்கள் யாருடனெல்லாம் பகையாய் இருக்கிறீர்கள், வெறுப்பாய் இருக்கிறீர்கள் என யோசித்துப் பாருங்கள். நீண்ட நாட்களாகப் பேசாமலிருக்கும் நண்பர்களை நினையுங்கள் அந்த பெயர்களை எழுதி வையுங்கள். ஒவ்வொருவராய் அழையுங்கள். “சும்மா தான் பேசி ரொம்ப நாளாச்சு” என இரண்டு நிமிடம் பேசுங்கள். சொல்ல முடியாத மகிழ்ச்சியை உணர்வீர்கள்.

5. உங்களுடைய நண்பர்கள் பட்டியலில், அல்லது உறவினர் பட்டியலில் ஒரு சில பெயர்கள் உங்களிடம் எப்போதும் இருக்கும். ‘இவனை மன்னிக்கவே கூடாது’ எனும் செய்தியுடன். அதில் ஒரு நபருக்கு போன் பண்ணுங்கள். தவறு உங்கள் பக்கம் இல்லாவிட்டாலும் கூட ஒரு மன்னிப்பைக் கேளுங்கள். மனித நேயத்தின் அற்புத தருணத்தை உணர்வீர்கள்.

6. உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு காதல் கடிதம் எழுதுங்கள். திருமணம் ஆகவில்லையேல் உங்கள் பெற்றோருக்கு ஒரு அன்பின் மடல் எழுதுங்கள். எழுதும்போது அவர்கள் உங்களுக்காய் செய்த நல்ல விஷயங்கள் மட்டுமே மனதில் வரிசையாய் வரட்டும். உங்கள் இதயத்தின் அன்பைப் பிழிந்து வடிக்கும் அந்தக் கடிதம் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.

7. தனிமை நேரத்தை உங்களுடைய திட்டமிடலுக்குப் பயன்படுத்துங்கள். அல்லது உங்களுடைய பழைய பொருட்களையெல்லாம் புரட்டிப் பார்த்து அடுக்கி வைப்பதில் செலவிடுங்கள். பழைய புகைப்படங்களையெல்லாம் பார்த்து அந்தக் காலத்துக்குச் சென்று வாருங்கள். அந்த நினைவுகள் நம்மை ஆனந்தத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்லும்.

8. ஒரு புதிய கலையைக் கற்றுக் கொள்ள அந்த நேரத்தைச் செலவிடலாம். அது ஒரு புதிர் விளையாட்டைக் கற்றுக் கொள்வதானாலும் சரி, ஒரு இசைக்கருவியை கற்றுக் கொள்வதானாலும் சரி, அல்லது கார்ட்டூன் வரையக் கற்றுக் கொள்வதானாலும் சரி. ஏதோ ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்ளத் தொடங்குவது உங்களுக்கு உற்சாகமூட்டும்.

9. தியானம் செய்யலாம். தனிமை கிடைப்பது தியானத்துக்கு ஜாக்பாட் போல. செல்போனை சைலன்ட் மோடில் போட்டு விட்டு மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் ஈடுபடலாம். அல்லது வெறுமனே பகல் கனவுக்குள் நுழைந்து மனதை இலகுவாக்கலாம்.

10. வாசிக்கலாம். ஒரு நல்ல நூலை வாசிப்பது உங்களுடைய தனிமைக்குத் துணை. கூடவே உங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களையும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம். எந்த புத்தகம் என்றில்லை, எது உங்களுக்குப் பயனளிக்குமோ அதைப் படியுங்கள்.

தனிமையை இனிமையாக்க ஆயிரம் வழிகள் உண்டு. அதை அர்த்தமுள்ளதாகவும், இனிமையுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றவும் ஏராளம் வழிகள் உண்டு. அவற்றில் ஒரு பத்து சிந்தனைகளே இவை. முயற்சி செய்து பாருங்கள்.

 

Thanks Vettimani, London.

உயிர்த்தெழவே மரித்தவர் ( Christian Article in Vettimani, London)

உயிர்த்தெழவே மரித்தவர்.

jesus

ஹாரி கௌடினி என்றொரு மனிதர் இருந்தார். 1874 ல் பிறந்த இவர், தனது வாழ்நாளில் உலகப் பிரசித்தம். “தப்பிதல்களின் தலைவன்” என்று இவரை அழைத்தார்கள். என்னை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கட்டலாம், பூட்டலாம், மாட்டி வைக்கலாம், அடைத்து வைக்கலாம் அனைத்திலும் இருந்து தப்பிப்பேன், என பொதுவில் சவால் விடுவார். இவருடைய சவாலை ஏற்றுக்கொண்டு பலரும் பல விதங்களில் இவரைப் பூட்டி வைக்க நினைத்தார்கள். முடியவில்லை. பல்லாயிரம் பேருக்கு முன்னால் வைத்தே, சவால்களை வெற்றியுடன் முடிப்பார்.
ஒரு முறை இவருக்காகவே ஸ்பெஷலாக 5 வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு புதுவகை பூட்டைக் கண்டுபிடித்து அவரைப் பூட்டியது, லண்டன் “டெய்லி மிரர்” செய்தி நிறுவனம். அதிலிருந்தும் தப்பினார். உலகமே அவரை வியந்து பார்த்தது .சங்கிலிகளால் பூட்டினால் தப்பினார்.

சவப்பெட்டியில் அடைத்து புதைத்தால் வெளியே வந்தார். பால் கேனுக்குள் திணித்துப் பூட்டினால், வெளியே வந்தார். உயர் மட்ட பாதுகாப்புடைய சிறையில் போட்டபோதும் தப்பினார் !
கடைசியாகஅக்டோபர் 31, 1926ல் மரணம் அவரைப் பூட்டியது. சாகும் முன் மனைவியிடம் சொன்னார். இதிலிருந்து தப்பிக்கும் வழி ஏதேனும் இருந்தால் நான் நிச்சயம் வருவேன். வந்து உன்னைச் சந்திப்பேன். நமது திருமண நாளில் உன்னை எப்படியும் வந்து சந்திப்பேன், காத்திரு ! என்றார். மனைவி மெழுகுதிரியும், இதயமும் உருக காத்திருந்தாள். திருமண நாள் வந்தது. ஹாரி வரவில்லை. அடுத்த வருடம் திருமண நாள் வந்தது, ஹாரி வரவில்லை. வருடங்கள் கடந்தன. பத்துவருடங்கள் சென்றபின் அவருடைய மனைவி தனது டைரியில் இப்படி எழுதினாள்.

“மரணத்திலிருந்து தப்பிக்க ஹாரியாலும் முடியாது ! ”

மரணத்திலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது, ஒரே ஒருவர் தான் தப்பித்திருக்கிறார். அவருடைய உயிர்ப்பைத் தான் ஈஸ்டர் என அழைக்கிறோம்.

ஆதிமனிதன் ஆதாமை கடவுள் தமது சாயலாகப் படைத்து தமது ஆவியை ஊதி மனிதனாக்கினார். அவனையும், ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் தங்க வைத்த இறைவன் ஒரே ஒரு கட்டளையை அவர்களுக்குக் கொடுத்தார். தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்தின் கனியை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். ஆனால் தோட்டத்தின் நடுவில் இருக்கும் ‘நன்மை தீமை அறியும்’ மரத்தின் கனியை மட்டும் சாப்பிட வேண்டாம்.

எப்போதுமே மறுக்கப்படுபவை தான் வசீகரமாய் தோன்றும். வேண்டாம் என தடுப்பது தான் மீறுதலை போதிக்கும். ஆதாம் ஏவாளும் அப்படியே செய்தார்கள். கட்டளையை மறுதலித்தார்கள், பாவத்தை அரவணைத்தார்கள். ஏதேன் அவர்களுக்கு இல்லாமல் போயிற்று. துரத்தப்பட்டார்கள்.
காலங்கள் கடந்தன. ஆதாமின் பாவம் தலைமுறைகள் தோறும் தொடர்ந்தது.  தனி மனித பாவத்தைக் கழுவ பலியிடுதல் வழக்கமாய் இருந்தது. இப்போது மனுக்குலத்தை மீட்க கடவுளே பலியாய் வரவேண்டிய சூழல். காரணம், கடவுள் ஒருவரே முடிவிலி !

இயேசு மனித அவதாரமாய் வந்தார். மனிதன் பாவமற்ற வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதை தனது வாழ்வினால் நடத்திக் காட்டினார். மீட்புக்கான அன்பின் போதனையை நிகழ்த்தினார். பின்னர் அன்பின் உயர் நிலையை கல்வாரியில் நிறைவேற்றிக் காட்டினார்.

மரணத்தின் விளிம்பிலும், தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். மரணத்தின் குகைக்குள் பயணித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

அவரது உயிர்ப்பே ஈஸ்டர். உயிர்ப்பு இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை. ஹாரியைப் போல இயேசுவும் கல்லறைக்குள் அடங்கியிருந்தால், கிறிஸ்தவம் இன்று இல்லை. நற்செய்தி இல்லை. பாவத்தையும் மரணத்தையும், ஆண்டவர் வென்று விட்டார் என்பதற்கான ஆதாரம் இல்லை. மீட்பு இல்லை.  “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” என்கிறது பைபிள்.
மறுபடியும் முளைத்து எழாத சூரியனை யாரும் வெளிச்சத்தின் நாயகனாகப் பார்க்க முடியாது. மரணத்தோடு முற்றுப்புள்ளியாகியிருந்தால் இயேசு ஒரு மனிதனாகவே வந்து மனிதனாய் மறைந்த ஒரு தத்துவஞானியாகியிருப்பார். உயிர்ப்பு என்பது ஒரு அனுபவம். கிறிஸ்தவ அனுபவத்தில் உயிர்ப்பு என்பது பாவ வாழ்க்கையை விட்டு விட்டு புதிய வாழ்க்கைக்குள் நுழைவது.

அதாவது பழைய மனிதனை மரணிக்க வைத்து விட்டு புதிய மனிதனை உயிர்ப்பிக்க வைப்பது.
பாவம் என்பதை அறவே வெறுக்கும் ஒரு புதிய வாழ்வையே உயிர்ப்பு பிரதிபலிக்க வேண்டும். தெரியாமல் சகதியில் விழுந்து விட்டால் தன்னைத் தானே நக்கி நக்கி தூய்மைப்படுத்தும் பூனையைப் போல பாவத்தை கழுவ நம்மிடம் துடிப்பு இருக்க வேண்டும். சகதியில் விழுந்து விட்டால் சுகம் என்று அதிலேயே புரளும் பன்றிகளைப் போன்ற பழைய வாழ்க்கை அழிய வேண்டும்.
உலையில் இட்ட ஆமை முதலில் தண்ணீரில் நீந்தி விளையாடும். வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்க அதிகரிக்க அதன் உற்சாகம் அதிகமாகும். பின்னர் தண்ணீ கொதி நிலைக்குப் போகும் போது தான் தப்பிக்கவே முடியாது எனும் உண்மை அதற்கு உறைக்கும். ஆனால் அதன் பின் சாவைத் தவிர எதுவும் அதற்கு இல்லை. பாவமும் அப்படியே. முதலில் சுகமாய் தோன்றும். பின்னர் அதிலேயே திளைக்கத் தோன்றும். தப்பிக்காவிட்டால் பாவத்தில் மூழ்கி ஆன்மா மரணமடையும்.
இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தில் பங்குகொள்ள வேண்டுமெனில் மூன்று விஷயங்கள் நமக்குத் தேவை.

1. முதலாவது தேவை சிலுவையை சுமத்தல் !

சிலுவையைச் சுமக்காமல் இயேசுவின் வழியில் நடக்க முடியாது. இயேசுவின் வழியில் நடக்காமல் இயேசுவின் உயிர்ப்பைச் சந்திக்க முடியாது. சிலுவை என்பது நமது உடல் சார்ந்த சிக்கல்கள் அல்ல. அது நமது பாவம் சார்ந்தது. நமது உலக ஆசைகளை வெறுப்பதே உண்மையான சிலுவை சுமத்தல். “தன்னலம் துறந்தால்” மட்டுமே அதைச் சுமக்க முடியும்.
கண்கள் நம்மை பாவத்தில் விழத் தூண்டினால், பிடுங்கி எறிய வேண்டும். கைகள் பாவத்தைச் செய்யத் தூண்டினால் வெட்டி விட வேண்டும் என்கிறார் இயேசு. அது தான் நாம் தினமும் சுமக்க வேண்டிய சிலுவை. அதுவே தன்னை வெறுத்து, தன் சிலுவையை சுமக்கும் நிலமை.
ஆசைகள் அலைக்கழிக்கையில் மனக் கட்டுப்பாடு எனும் சிலுவையைச் சுமக்க வேண்டும். கோபம் நமது மூக்கில் ஏறி அமர்கையில் கோபம் தாண்டும் சிலுவை சுமக்க வேண்டும். இப்படி, இயேசு வெறுத்த அத்தனை விஷயங்களையும் நாமும் வெறுத்து, அதனால் வரும் இடர்கள் எனும் சிலுவையை “நாள்தோறும்” சுமக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

2. இரண்டாவது தேவை சிலுவையில் அறையப்படுதல்

கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்படுதல் என்பது பழைய வாழ்க்கையைச் சிலுவையில் அறைந்து விட்டு புதுப் பிறப்பு எடுப்பது. பழைய மனிதனைக் களைந்துவிட்டு புதிய மனிதனை அணிந்து கொள்ளச் சொல்லும் இறை வார்த்தை அது ! ஆதாமின் வாழ்க்கை பாவத்தின் முள்கிரீடத்தை தலைமுறை தலைமுறையாய் நமது தலையில் சூட்டுகிறது. அந்தப் பாவத்தின் சாபத்தை இயேசுவின் சிலுவை அழிக்கிறது. நமது பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டுவிட்டான். இனிமேல் புது மனிதனாய் நாம் வாழவேண்டும் என்பதே பைபிள் சொல்லும் வாழ்க்கை.

3. மூன்றாவது தேவை இயேசுவோடு உயிர்த்தல்.

சிலுவையில் அறையப்பட்டு அப்படியே இறந்து போய்விடுவதில் அர்த்தமில்லை. பழைய பாவங்களை அழித்து விட்டு நமது வாழ்க்கையை அதைவிடப் புதிய பாவங்களுக்குள் நுழைப்பது என்பது மீண்டும் நாம் புதைத்த மனிதனைத் தோண்டி எடுத்து அணிந்து கொள்வது போல.
பேயை விரட்டிவிட்டால் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அதைவிடக் கொடிய ஏழு பேய்கள் வந்து தங்கி வீட்டை சல்லடையாக்கிவிடும். எனவே தான் சிலுவையில் அறையப்பட்டபின் அவரோடு உயிர்த்தெழுதலும் அவசியமாகிறது ! பாவங்கள் அகற்றப்பட்ட இதயத்தை இறைவனின் வார்த்தைகளாலும் வாழ்க்கையாலும் நிரப்ப வேண்டும். அதுவே இயேசுவோடு உயிர்த்தலின் அடையாளம்.
உயிர்த்த இயேசுவின் அனுபவத்தில் இணைவது என்பதும், இயேசுவுக்காய் வாழ்வோம் என்பதும் துறவற வாழ்க்கையல்ல. வாழும் இடத்தில், பணி செய்யும் இடத்தில் இயேசுவின் அன்பைப் பிரதிபலிப்பதே. நமது வெளிப்படையான வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும், மறைவான வாழ்விலும் எப்போதும் இயேசுவைப் போல வாழ்வதே ! .
அனைவருக்கும் உயிர்த்த இயேசுவின் பெயரால் நல்வாழ்த்துகள்.

 

 

 

 

 

 

 

 

 

 

செவிலியர் பணி : ஒரு கிறிஸ்தவப் பார்வை

nurse_1
மனிதம் கலப்போம்.

நர்ஸ் ! எனும் ஒற்றை வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களை நாம் கொடுப்பதுண்டு. சிலருக்கு அது ஒரு வேலை. சிலருக்கு அது இலட்சியம். இன்னும் சிலருக்கு அது ஒரு பயிற்சிக் களம். மருத்துவக் கட்டிலில் படுத்திருப்பவர்களுக்கோ அவர்கள் தான் கடவுளின் வாரிசுகள். ஸ்டெதஸ்கோப் போட்ட தேவதைகளே நர்ஸ்கள் என ஒரு வெளிநாட்டுப் பழமொழி கூட உண்டு.

மருத்துவப் பணி என்பது ஒரு மகத்தான பணி என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. எல்லா இடங்களிலும் இவர்களுடைய பணி இருக்கிறது. நர்ஸ் என்றாலே மருத்துவமனை தான் நமது மனதில் வரும். உண்மையில் சுமார் 40 சதவீதம் நர்ஸ்கள் மருத்துவமனைக்கு வெளியே, பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வீடுகள், சமூக பணிகள், ஆய்வுக் கூடங்கள் போன்ற இடங்களில் தான் பணிபுரிகின்றனர்.

நர்ஸ் எனும் பணியை யோசிக்கும் போது “ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்” பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. நவீன கால மருத்துவம் அவருடைய சிந்தனையின் அடிப்படையில் தான் உருவானது. போர்களினால் பாதிக்கப்பட்டவர்களிடையே தான் அவருடைய பணி பெருமளவில் இருந்தது.

1820 க்கும் 1910க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அவர் முழுநேர மருத்துவப் பணி செய்தது வெறும் மூன்று ஆண்டுகள் தான் என்பது வியப்பூட்டுகிறது. “எவ்வளவு காலம் பணி செய்கிறாய் என்பதல்ல, எப்படி பணி செய்கிறாய் என்பதே முக்கியம் என்பதே முக்கியம்” என்பதையே இவருடைய வாழ்க்கை சொல்கிறது. “நீ செய்யும் செயல் எவ்வளவு பெரியதென்பதல்ல முக்கியம், அதில் எவ்வளவு அன்பை நீ செலுத்துகிறாய் என்பதே முக்கியம்” என்கிறார் அன்னை தெரேசா.

வேலைகள் எல்லாமே வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதற்கு தாதியர் பணி ஒரு சிறந்த உதாரணம். வெறும் சம்பளத்தை எதிர்பார்த்து இந்தப் பணியில் சேர்பவர்கள் பணியின் அர்த்தத்தை இழந்து விடுகிறார்கள். நீடிய பொறுமை, இரக்கம், சுயநலமின்மை என பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களே நல்ல நர்ஸாக பணிபுரிய முடியும் என்கிறார் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்.

ஒரு நல்ல நர்ஸ் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த கிறிஸ்தவர் நிச்சயம் நல்ல ஒரு செவிலியராகப் பணிபுரிய முடியும். காரணம் ஒரு நல்ல கிறிஸ்தவருடைய பண்புகள் ஒரு சிறந்த செவிலியருக்குத் தேவைப்படுகிறது !

1. செவிலியர் பரிவுகாட்டுபவர்களாக இருக்க வேண்டும். மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருப்போருக்கு அந்த நேரத்தில் தேவைப்படுவதெல்லாம் நகையோ, பணமோ, வீடோ, காரோ அல்ல. பரிவு காட்டும் இதயம் தான். “ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்” எனும் இறைவாக்கு ( கலாத் 6:2 ) நம்மிடம் எதிர்பார்ப்பது இதைத் தான்.

2. செவிலியர்கள் இதயத்தின் ஆழத்தில் இரக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். இரக்கத்தின் வேர்கள் இதயத்தில் தான் மையம் கொள்ளும். வேரற்ற இரக்கம் வெயிலில் காய்ந்து விடும். “இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” எனும் இறைவார்த்தை நினைவுக்கு வருகிறதா ?

3. மகிழ்ச்சியாய் இருக்க வேண்டியது செவிலியர்களின் பண்புகளில் ஒன்று. நோயாளிகள் ஏராளமான சோகத்தை மனதில் சுமந்து திரிபவர்கள். அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் காரணிகளாக செவிலியர் இருக்க வேண்டும். ஒரு புன்னகை, ஒரு உற்சாகமான பார்வை, ஒரு மலர்ச்சியான முகம் இது நோயாளிக்கும் பரவி அவர்களுடைய சுமையைத் தணிக்க உதவும் என்பது உளவியல் உண்மை.

” ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்” எனும் பிலிப்பியர் 4:4 ம் வசனமும், ” மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து: வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” எனும் நீதிமொழிகள் 14:22ம் வசனமும் செவிலியருக்கு இருக்க வேண்டிய பண்புகளோடு இணைந்து பயணிக்கிறது.

4. பதட்டப்படாமல் வேகமான முடிவெடுக்கும் திறமை செவிலியர்க்கு அவசியம். நோயாளிகளோடான வாழ்க்கை ஒரு ரயில் பயணம் போல ரம்மியமானதல்ல, அது பாறைமீது காரோட்டுவது போன்றது. கவனம் சிதையாமல் இருக்க வேண்டியதும், தேவையான நேரத்தில் சரியான முடிவை வேகமாய் எடுக்க வேண்டியதும் அவசியம். அதற்கு கடவுளின் ஞானம் தேவை.

“உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்திடல் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்” எனும் இறை வார்த்தைகள் ( யாக்கோபு 1 : 5 ) செவிலியருக்கு ஊக்கம் ஊட்டட்டும்.

5. வார்த்தைகளில் இனிமையும், எளிமையும் இருக்க வேண்டியது இன்னொரு முக்கியமான தேவை. நோயாளிகளின் துயரக் கதைகளைச் சலிக்காமல் கேட்கும் காதுகளும், அவற்றுக்கு எரிச்சல் படாமல் பொறுமையாய் பதிலளிக்கும் மனமும் செவிலியருக்குத் தேவை. ஒரு குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு எரிச்சலடையாமல் பதில் சொல்லும் அன்னையைப் போல அவர்கள் செயல்பட வேண்டும்.

” உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக! ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந்திருக்கவேண்டும்” எனும் கொலோசேயர் 4 : 6 , செவிலியருக்காகவே எழுதப்பட்டது போல இருக்கின்றன.

6. கடின உழைப்பு தேவை. அதை அற்பண உணர்வோடு செய்தலும் வேண்டும். அலுவலக வேலை போல காலை முதல் மாலை வரை எனும் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் செவிலியர் பணி முடிவதில்லை. அது தொடர்ச்சியான ஒரு பணி. அலுவலக எல்லைக்கு வெளியேயும் அதே மனநிலையை நீடித்துக் கொள்ளும் தேவை ஏற்படலாம். உழைக்கச் சலிக்காத இதயம் அவர்களுக்கு வேண்டும்.

“நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல: ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்” ( கொலோ 3 :23 ) எனும் இறைவார்த்தை செவிலியருக்கு ஊக்கமளிக்கும் மருந்து.

7. தன்னலமின்றி பணி செய்ய வேண்டியது செவிலியரின் மிக முக்கியமான பண்பு. பணத்துக்காகவோ, தனது இலாபத்துக்காகவோ இந்தப் பணியைப் பயன்படுத்தும் போது மிகப்பெரிய பாவத்தை அவர்கள் செய்கின்றனர். ஏனெனில் இயலாதோரை வதைப்பவர்களை இறைவன் எதிர்க்கிறார்.” எவரும் தன்னலம் நாடக்கூடாது: மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்” (1 கொரி 10:24) எனும் இறை வார்த்தைகள் செவிலியர் மனதில் எழுத வேண்டிய வார்த்தைகள்.

8. செவிலியருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான இன்னொரு குணாதிசயம் பணிவு. கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு இது. பணிவை விலக்கும்போது மனிதன் இறை பிரசன்னத்தை விட்டு சாத்தானில் எல்லைக்குள் நுழைந்து விடுகிறான். “முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்குங்கள்” எனும் எபேசியர் 4:2, செவிலியருக்கும் மிகப் பொருத்தமே.

9. நீடிய பொறுமை செவிலியருக்கு இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. நோயாளிகளும், அவர்களுடைய உறவினர்களும் பதட்டத்தின் படிகளில் அமர்ந்து கொண்டு கேட்கும் கேள்விகளை பொறுமையுடன் எதிர்கொள்வதானாலும் சரி, நோயாளிகளின் உளவியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு பொறுமையுடன் கையாள்வதானாலும் சரி, பொறுமை மிக மிக அவசியம். “பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்: எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்” எனும் நீதிமொழிகள் ஒரு அறிவுறுத்தல்.

10. செபத்தில் நிலைத்திருப்பவராக இருக்க வேண்டும். இறைவனை விட்டு விட்டுச் செய்யும் செயல்கள் எல்லாம் செத்த செயல்களே. செய்கின்ற செயலை இறைவனின் அருளோடு செய்வதில் தான் கிறிஸ்தவ வாழ்க்கையின் மகத்துவமே அடங்கியிருக்கிறது. பிறருக்காக மனம் உருகி செபிப்பதும், யாரையும் காயப்படுத்தாத தினங்களுக்காக செபிப்பதும் செவிலியருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணமாகும்.

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள் (பிலி 4 :6 ) என்கிறது வேதாகமம்.

ஏற்கனவே சொன்னது போல, ஒரு நல்ல நர்ஸ் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த கிறிஸ்தவர் நிச்சயம் நல்ல ஒரு செவிலியராகப் பணிபுரிய முடியும். காரணம் ஒரு நல்ல கிறிஸ்தவருடைய பண்புகள் ஒரு சிறந்த செவிலியருக்குத் தேவைப்படுகிறது !

செவிலியர் அனைவரும் தங்கள் பணி ஒருவகையில் இறையழைத்தல் என்பது போல ஆத்மார்த்தமாய் செய்தால் மனுக்குலத்தின் மகத்துவங்களாக அவர்கள் நிலைபெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

( Thanks : Desopakari Magazine )

ஃபாஸ்ட் ஃபுட் – நல்லதா ? கெட்டதா ? ( A Christian View )

5851279-fastfood

இன்றைய உலகம் அவசரத்தின் பிடியில் தான் இயங்குகிறது. எதுவும் சட்டென நடக்காவிட்டால் நமக்குப் பிடிப்பதில்லை. ஏடிஎம் மிஷின் பணம் தர பத்து வினாடி தாமதித்தாலே எரிச்சலடைகிறோம். செல்போனில் பட்டனை அமுக்கிய உடன் அடுத்த ஸ்கிரீன் வரவில்லையேல் கடுப்பாகிறோம். வேகம் தான் நம்மை இயக்குகிறது. காலையில் அலாரம் நம்மை அடித்து எழுப்பியதும் அடித்துப் புரண்டு எல்லா வேலைகளையும் செய்து அலுவலகம் ஓடி இரவில் வீடுவந்து தூங்கும் வரை எல்லாவற்றிலும் ஒரு அவசரகதி நம்மை ஆக்கிரமித்து விட்டது.

அந்த பரபரப்பு தான் சாப்பாட்டு விஷயத்திலும் நுழைந்து ‘பாஸ்ட் ஃபுட்” கலாச்சாரத்துக்கு தீனி போட்டிருக்கிறது. ஹோட்டலுக்குப் போனால் கூட “சீக்கிரம் என்ன கிடைக்கும்” என்று தானே கேட்கிறோம். அதனால் தான் வீதிக்கு வீதி அவசர உணவகங்கள் முளைத்திருக்கின்றன. நமது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட வெளிநாட்டு உணவகங்களும் தங்களது கடையை நமது வீதிகளில் விரித்து லாபம் சம்பாதிக்கின்றன.

1900 களில் மக்கள் நூறு முறை வீட்டில் சாப்பிட்டால் இரண்டு முறை வெளியே சாப்பிடுவது என்பது சராசரிக் கணக்கு. ஆனால் அது இன்று நூறு முறைக்கு ஐம்பத்து ஐந்து தடவை வெளியே சாப்பிடுவது என்பது சராசரிக் கணக்காக மாறி விட்டது, என்கிறது  ஒரு புள்ளி விவரம். பெற்றோர் அதிக தடவை வெளியே சாப்பிடுவது குடும்ப உறவுகளில் இடைவெளி உருவாகவும் காரணமாகிவிடுகிறது.

வீட்டில் பெற்றோரோடு இணைந்து வீட்டில் சாப்பிடும் குழந்தைகள் எல்லா விதங்களிலும் நன்மை அடைகிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்கள் கல்வியிலும், குடும்ப உறவுகளிலும் ஆரோக்கியமாக இருப்பதாய் ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன.

அப்படி குடும்பத்தினர் இணைந்து உணவு உண்ணும் பழக்கமுடைய வீடுகளில் குழந்தைகள் நன்னடத்தை உடையவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்ட வீடுகளிலுள்ள குழந்தைகள் மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுகையில் 40 சதவீதம் குறைவாகவே புகை பிடிக்கும் பழக்கத்துக்கும், 50 சதவீதம் குறைவாகவே மதுப் பழக்கத்துக்கும் செல்கிறார்கள்.

ஆனால் வீடுகளில் எல்லோருமாய் அமர்ந்து உண்ணும் கலாச்சாரம், இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருவது கவலையளிக்கிறது. குழந்தை அழுதால் குர்குரே, லேஸ் என ஏதோ ஒரு பாக்கெட்டை கையில் திணிப்பதும். வார இறுதியில் பீட்ஸாவோ, பர்கரோ சாப்பிடுவதும். அடிக்கடி வெளியே போய் பிரியாணியை ஒரு கட்டு கட்டுவதும் பழக்கமாகி விட்டது. சமையல் செய்வதை சிட “சமையல்” நிகழ்ச்சிகளை டிவியில் பார்ப்பதே பலருக்குப் பிரியமானதாய் இருக்கிறது.

இன்றைக்கு கொஞ்ச‌ம் நேர‌த்தை சேமிக்கிறேன் பேர்வ‌ழி என‌ நாம் அள்ளித் திணிக்கும் ஃபாஸ்ட் ஃபுட் வ‌கைக‌ளினால் பிற்கால‌த்தில் நாம் ஏக‌ப்ப‌ட்ட‌ நேர‌த்தை ம‌ருத்துவ‌னையில் செல‌வ‌ழிக்க‌ வேண்டியிருக்கும் என்ப‌து தான் நாம் புரிந்து கொள்ள‌ வேண்டிய ய‌தார்த்த‌மாகும்.

குறிப்பாக‌ இன்றைய‌ குழ‌ந்தைக‌ளுக்கு நாம் ‘செல்ல‌மாக‌’ வாங்கிக் கொடுக்கும் உண‌வுப் பொருட்க‌ள் பிற்கால‌த்தில் ந‌ம‌க்கும், அவ‌ர்க‌ளுக்கும் அதிக‌ப்ப‌டியான‌ அவ‌ஸ்தையையே கொடுக்கும்.

அதீத‌ எடை எனும் ஒபிஸிடி பிர‌ச்சினையின் மூல‌ கார‌ண‌ம் இப்ப‌டி சாப்பிடும் ஃபாஸ்ட் ஃபுட் வ‌கைய‌றாக்க‌ள் தான். ப‌ள்ளிக்கூட‌ வாச‌ல்க‌ளிலும், மால்க‌ளின் ஓர‌ங்க‌ளிலும் இத்த‌கைய‌ குழ‌ந்தைக‌ளைப் பார்க்கும் போது ந‌ம்மைய‌றியாம‌லேயே ஒரு க‌வ‌லை வ‌ந்து தொற்றிக் கொள்கிற‌து. அள‌வுக்கு அதிக‌மான‌ கொழுப்பு உட‌லில் தேங்குவது தான் அதீத‌ எடையின் முக்கிய‌ கார‌ண‌ம். இத்த‌கைய‌ குழ‌ந்தைக‌ளுக்கு ச‌ர்க்க‌ரை நோய் ம‌ற்றும் இத‌ய‌ம் சார்ந்த‌ நோய்க‌ள் எளிதில் வ‌ந்து விடுகின்ற‌ன‌.

துரித‌ உண‌வ‌க‌ங்க‌ளில் அதிக‌ கொழுப்பு, அதிக‌ கார்போஹைட்ரேட், அதிக‌ ச‌ர்க்க‌ரை க‌ல‌ந்த‌ உண‌வுக‌ளே வினியோகிக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. இவை உட‌லிலுள்ள‌ இன்சுலின் சுர‌ப்பிக‌ளின் ப‌ணியை அலைக்க‌ழிக்க‌ வைத்து டைப் 2 எனும் ச‌ர்க்க‌ரை நோய் உட‌லில் வேரூன்ற‌ வ‌ழிசெய்து விடுகிற‌து. வார‌த்துக்கு ரெண்டு நாள் துரித‌ உண‌வ‌க‌ங்க‌ளில் சாப்பிடுப‌வ‌ர்க‌ளுக்கு ச‌ர்க்க‌ரை நோய் வ‌ரும் வாய்ப்பு இர‌ண்டு ம‌ட‌ங்கு அதிக‌ம் என்ப‌து ஒரு ஒப்பீட்டுத் த‌க‌வ‌ல்.

வ‌லிப்பு நோய் இன்னொரு அச்சுறுத்த‌ல். அத‌ன் மூல‌ கார‌ண‌ம் இத்த‌கைய‌ ஃபாஸ்ட் புட் உண‌வ‌க‌ங்க‌ள். இர‌த்த‌க் குழாய்க‌ளில் கொழுப்பு ப‌டிவ‌தால் உருவாகும் சிக்க‌ல் தான் வ‌லிப்பு நோயை த‌ருகிற‌து. இர‌த்த‌க் குழாய்க‌ளில் கொழுப்பு சேர்வ‌தால் வ‌ருகின்ற‌ இன்னொரு மிக‌ப்பெரிய‌ அச்சுறுத்த‌ல் இத‌ய‌ நோய்க‌ள். ம‌ர‌ண‌த்தை விலைக்கு வாங்கும் வ‌ழி தான் கொழுப்புக‌ளை அள்ளி உட‌லில் சேர்க்கும் இத்த‌கைய‌ உண‌வுக‌ள்.

துரித‌ உண‌வுக‌ள் உட‌லில் அள‌வுக்கு அதிக‌மான‌ சோடிய‌த்தையும் சேர்க்கின்ற‌ன‌. கொஞ்ச‌ம் ஃப்ர‌ஞ்ச் ஃப்ரை நீங்க‌ள் சாப்பிட்டாலே க‌ணிச‌மான‌ அள‌வு சோடிய‌த்தை உட‌லில் சேர்க்கிறீர்க‌ள் என்று அர்த்த‌ம். இப்ப‌டி சேரும் சோடிய‌ம் ம‌ன‌ அழுத்த‌ம், உய‌ர் குருதி அழுத்த‌ம் ம‌ற்றும் இத‌ய‌ நோய்க‌ளுக்கு வ‌ர‌வேற்புப் ப‌த்திர‌ம் வாசிக்கின்ற‌ன‌.

இவ்வ‌ள‌வு சிக்க‌ல்க‌ள் த‌ருகின்ற‌ இந்த‌ உண‌வுக‌ளில் வைட்ட‌மின்க‌ளோ, தேவையான புர‌த‌ச் ச‌த்துக‌ளோ, க‌னிம‌ச் ச‌த்துக‌ளோ இருப்ப‌தில்லை. நரம்புகள், எலும்புகள், தோல், மூளை, குடல், நுரையீரல் என அனைத்து பாகங்களுக்கும் துரித உணவுகள் ஆபத்தையே உருவாக்குகின்றன. ப‌ண‌த்தைக் க‌ரைத்து வாங்கும் இந்த‌ உண‌வுக‌ளில் கெடுத‌ல்க‌ள் ம‌ட்டுமே இருக்கின்ற‌ன‌ என்ப‌து அதிர்ச்சிய‌ளிக்கிற‌து.

இத‌ற்கு என்ன‌ தீர்வு என‌ ம‌ருத்துவ‌ர்க‌ளிட‌ம் சென்றால் அவ‌ர்க‌ள் சொல்வ‌து என்ன‌ தெரியுமா ? ந‌ம்ம‌ தாத்தா பாட்டி கால‌த்தில் என்ன‌ சாப்பிட்டார்க‌ளோ, எப்ப‌டி சாப்பிட்டார்க‌ளோ அப்ப‌டிச் சாப்பிட‌வேண்டுமாம். தானிய‌ங்க‌ள், ப‌ழ‌ங்க‌ள், காய்க‌றிக‌ள், சுத்த‌மான‌ த‌ண்ணீர் என‌ அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் வாழ்க்கை முறையை இய‌ற்கையோடும், ஆரோக்கிய‌த்தோடும் இணைத்துக் கொண்டிருந்தார்க‌ள். நாம் தான் தொலைக்காட்சி வெளிச்ச‌த்தில், தொழில் நுட்ப‌ பாதையில், நாக்கிற்கு அடிமைக‌ளாகி உட‌லை நோய்க‌ளின் கூடார‌மாக்கிவிட்டோம்.

“குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்: உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்” என்கிற‌து நீதிமொழிக‌ள் 23:21. உண‌வு என்ப‌து தேவையான‌ அள‌வும், ஆரோக்கிய‌மான‌ வ‌கையுமாக‌ இருக்க‌ வேண்டும் என்ப‌தையே நீதிமொழிக‌ள் விள‌க்குகிற‌து.

“கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போருடைய தெய்வம் அவர்களுடைய வயிறு” என்கிறது பிலிப்பியர் 3 :18 ‍ 19 வசனங்களின் சாராம்சம். வ‌யிறுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌வ‌ர்க‌ள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் ப‌கைவ‌ர்க‌ள் என்று மிக‌வும் வ‌லிமையான‌ வார்த்தைக‌ளை தூய‌ ஆவியான‌வ‌ர் விவிலிய‌த்தில் ப‌திவு செய்து வைத்திருப்ப‌து விய‌ப்ப‌ளிக்கிற‌து.

“உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோவில் என்று தெரியாதா? நீங்கள் உங்களுக்கு உரியவரல்ல.

கடவுள் உங்களை விலை கொடுத்து மீட்டுள்ளார். எனவே, உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள். ” என்கிற‌து 1 கொரி 6 : 19 20 வ‌ச‌ன‌ங்க‌ள். அந்த‌ உட‌லை நாம் ஆரோக்கிய‌மாக‌ வைத்திருப்ப‌து ந‌ம‌து விருப்ப‌ம் ம‌ட்டும‌ல்ல‌, க‌ட‌மையும் கூட‌. க‌ட‌வுள் கொடுத்த‌ க‌ட்ட‌ளைக‌ளில் ஒன்றாக‌ நாம் அதை எடுத்துக் கொள்ள‌ வேண்டியிருக்கிற‌து.

ஆரோக்கிய‌ம‌ற்ற‌ உண‌வுக‌ளை உட்கொண்டு உட‌லினைப் பாழாக்குவ‌து என்ப‌து க‌ட‌வுளின் கோயிலை அசுத்த‌மாக்குவ‌து போல‌. ” சிகரெட் புகைப்பது உடலுக்கு எவ்வளவு தீங்கோ, அதை விட அதிகமாய் ஃபாஸ் புட் உணவுகள் உடலுக்கு தீங்கு இழைக்கின்றன” என்கிறது க‌ட‌ந்த‌ ஆண்டின் உல‌க‌ ந‌ல‌வாழ்வு நிறுவ‌ன‌ அறிக்கை. ம‌துவினாலும், புகையினாலும் உட‌லை அசுத்த‌மாக்குவ‌து எப்ப‌டி பாவ‌மோ, ஃபாஸ்ட் புட் போன்ற‌ ஆரோக்கிய‌ம‌ற்ற‌ உண‌வுக‌ளால் உட‌லை அழிப்ப‌தும் பாவ‌மே.

“மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும்” என்பதே உணவைக் குறித்து க‌ட‌வுள் ம‌னித‌னுக்கு இட்ட‌ முத‌ல் க‌ட்ட‌ளை. உல‌க‌ம் பாவ‌த்தில் வீழ்ந்த‌பின் வெள்ள‌ப்பெருக்கின் கால‌த்துக்குப் பின்பே வில‌ங்குக‌ள் உண‌வாக‌ அனும‌திக்க‌ப்ப‌ட்ட‌ன. ந‌ம‌து உண‌வுக‌ளையும் அந்த வரிசையில் அடிப்ப‌டையில் அமைத்துக் கொள்வ‌து ஆரோக்கிய‌மான‌து.

இறைம‌க‌ன் இயேசு எல்லா உண‌வும் ந‌ல்ல‌தே என்றார். ஆனால் அவ‌ர் உண‌வை நோக்கி ஓட‌வில்லை. நாற்ப‌து நாள் உண்ணா நோன்பு இருக்க‌ அவ‌ர் த‌ய‌ங்க‌வில்லை.

ஆரோக்கியமான உணவு என்பது இறைவார்த்தையைப் போல, உடலுக்குள் சென்று கரைந்து நமது பாகமாகவே ஆகி விடும். நம்மை இறைவனின் பாகமாகவும் மாற்றும். துரித உணவுகள் என்பவை உலகம் சார்ந்த தத்துவங்கள் போல, உடலுக்குள் கொழுப்பாக சேர்ந்து ஆன்மீக வளர்ச்சியை அழித்துப் போட்டுவிடும்.

உண‌வு என்ப‌து வாழ்க்கையை ந‌ட‌த்திச் செல்வ‌த‌ற்கான‌ தேவை ம‌ட்டுமே. அதை முத‌ன்மைப்ப‌டுத்தி ஓடுவ‌து த‌வ‌று. ந‌ம் உட‌லெனும் ஆல‌ய‌த்தை த‌வ‌றான‌ உண‌வுக‌ளால் அழிப்ப‌து த‌வ‌று. உட‌லின் ஆரோக்கிய‌த்தைப் பாழாக்கி அத‌ன் மூல‌ம் ம‌ன‌தின் ஆரோக்கிய‌த்துக்கும் வேட்டு வைப்பதும் த‌வ‌றான‌து.

எனவே, முடிந்த‌வ‌ரை துரித‌ உண‌வுக‌ளைத் த‌விர்ப்போம்.

( Thanks Desopakari Magazine )

ஊனமாக்கும் ஊடகங்கள் ( Vettimani Magazine : London )

Media

 

 

சக மனிதன் மீதான கரிசனை நீர்த்துப் போகும்போது மானுடம் தனது அர்த்தத்தை இழந்து விடுகிறது. சக மனிதன் மீதான அன்பும், அக்கறையும் இன்று பலவீனப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பம் உறவுகளை வெறும் டிஜிடல் தகவல்களால் இணைக்க முயல்வதே அதன் முக்கிய காரணம்.

சமூகத்தில் தன்னை விட இளைத்தவர்கள் மீது வலிமையானவர்கள் நடத்தும் வன்முறை கற்காலத்துக்கு நம்மை கடத்திச் செல்கிறது. வலிமையானவன் வெல்வான் என்பது குகைக் கால வரலாறு. தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சி, நம்மை குகைக்குள் குடியிருக்க வைக்கிறதா ?

பெண்கள் சமூகத்தின் கண்கள். பெண்கள் தான் வாழ்க்கையை அழகாக்குகிறார்கள். பெண்கள் குடியிருக்கும் வீடுகள் தான் அன்பினால் நிரம்பி வழிகின்றன. பெண்கள் கலந்திருக்கும் சமூகம் தான் நிறைவை அடைகிறது. பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. மனித அன்பின் உச்ச நிலையான தாயும் சரி, மனித வாழ்க்கையின் மகத்துவமான மகளும் சரி, மனித பயணத்தின் மகிழ்வான மனைவியும் சரி பெண்மையின் வைர வடிவங்களே. ஆனால் அந்தப் பெண்கள் இன்று ஆண்களின் கரங்களில் சிக்கி அழிவதைக் காணும்போது ச‌மூக‌ம் அவ‌மான‌ப்ப‌டுகிற‌து.

டெல்லியில் கூட்டுப் பாலிய‌ல் வ‌ன்முறை ஒரு பெண்ணின் மீது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ போது இந்திய‌ தேச‌ம் கொந்த‌ளித்த‌து. வெளிச்ச‌த்துக்கு வ‌ராத‌ எத்த‌னையோ ஆயிர‌ம் இத்த‌கைய வ‌ன்கொடுமைக‌ள் இந்தியாவின் ஒவ்வோர் மாநில‌த்திலும் ந‌ட‌ந்து கொண்டே தான் இருக்கின்ற‌ன‌. ச‌மீப‌த்தில் இல‌ங்கையில் ஒரு ப‌தின் வ‌ய‌துச் சிறுமியின் மீது நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ கூட்டு பாலிய‌ல் வெறியாட்ட‌ம் ஆன்மாக்க‌ளை அதிர‌ வைத்திருக்கிற‌து. ம‌ல‌ரினும் மெல்லிய‌ள் என‌ க‌விதையில் பெண்ணைப் பாராட்டி விட்டு, மோக‌த்தின் பூட்ஸ் கால்க‌ளால் அவர்களை ந‌சுக்குவ‌தைக் காண்கையில் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்றே இத‌ய‌ம் க‌த‌றுகிற‌து.

த‌ன் ச‌கோத‌ரிக்கு இழைக்க‌ப்ப‌ட்ட‌ கொடுமை க‌ண்டு ப‌த‌றித் த‌விக்க‌ வேண்டிய‌ ச‌மூக‌ம் அதை ப‌ட‌மெடுத்து ஃபேஸ் புக் ஸ்டேட்ட‌ஸ்க‌ளாக‌வோ, வாட்ஸப் த‌க‌வ‌ல்க‌ளாக‌வோ அனுப்பிக் கொண்டிருக்கிற‌து. வ‌ன்கொடுமை ந‌ட‌ப்ப‌தைக் க‌ண்ட‌தும் ப‌த‌றிப் போய் த‌டுக்க‌ வேண்டிய‌ கைக‌ள் இன்று ஸ்மார்ட் போன்க‌ளில் ப‌ட‌ம் பிடிப்ப‌தையே முத‌ல் வேலையாய்ச் செய்கின்ற‌ன‌. புலிக் கூட்டில் விழுந்து விட்ட‌ வாலிப‌னை மீட்காம‌ல் அவ‌னை புலி என்ன‌ செய்கிற‌து என‌ ப‌ட‌ம் எடுத்துக் கொண்டிருந்த‌ அவ‌மான‌ச் ச‌மூக‌ம‌ல்லவா இது !

அதைத் தான் ஊட‌க‌ங்க‌ளும் செய்கின்ற‌ன‌. வ‌ன்கொடுமைக்கு ஆளான‌ ச‌கோத‌ரியை அவ‌ளுடைய‌ வ‌ர‌லாறை முழுக்க‌ முழுக்க‌ ப‌திவு செய்தும், திரும்ப‌த் திரும்ப‌ அந்த‌ நிக‌ழ்ச்சிக‌ளைக் காட்டியும், குறுப்படங்களில் தலைகுனிய வைத்தும், மேலும் மேலும் அவ‌ளை அழித்துக் கொண்டிருக்கின்ற‌ன‌. துபாய் போன்ற‌ நாடுக‌ளில் ஒரு விப‌த்துப் ப‌ட‌த்தைக் கூட‌ ப‌த்திரிகையில் போட‌ அனும‌தி இல்லை. ஆனால் சுத‌ந்திர‌த்தில் திளைக்கும் ந‌ம‌து தேச‌ங்க‌ள் தான் “பிரேக்கிங் நியூஸ்” போட்டுப் போட்டு ம‌ன‌சாட்சியே இல்லாம‌ல் குடும்ப‌த்தின‌ரை மீளாத் துய‌ர‌த்தில் இற‌க்கி விடுகின்ற‌ன‌.

அத்துட‌ன் ஊட‌க‌ங்க‌ள் நிற்ப‌தில்லை. “இந்த‌ வ‌ன்கொடுமைக்கு அந்த‌ப் பெண் அணிந்திருந்த‌ மிடி தான் கார‌ண‌மா ?” என‌ நான்கைந்து பேரை வைத்துக் கொண்டு விவாத‌ம் எனும் பெய‌ரில் ச‌மூக‌ம் இழைத்த‌ கொடுமைக்கு அந்த‌ப் பெண்ணையே குற்ற‌வாளியாக்கியும் விடுகின்ற‌ன‌ர். வெட்க‌ம் கெட்ட சில த‌லைவ‌ர்க‌ள் “பெண்கள் த‌வ‌றிழைக்க‌த் தூண்டினால் ஆண்க‌ள் என்ன‌ செய்வார்க‌ள்” என‌ குரூர‌ப் பேட்டிக‌ளையும் த‌வ‌றாம‌ல் கொடுக்கின்ற‌ன‌ர்.

ஒரு பெண்ணை ச‌கோத‌ரியாக‌வோ, ம‌க‌ளாக‌வோ, தாயாக‌வோ பார்க்க‌த் தெரியாத‌ ம‌னித‌ன் இந்த‌ பூமியின் சாப‌க்கேடு. அத்த‌கைய‌ பிழைக‌ளுக்கு ஒத்து ஊதும் த‌லைவ‌ர்க‌ள் ம‌னுக்குல‌த்தின் வெட்க‌க்கேடு.

ஒரு அதிர‌டியான‌த் த‌க‌வ‌ல் த‌ங்க‌ள் ஊட‌க‌த்தின் வீச்சை அதிக‌ரிக்கும், ரேட்டிங்கை எகிற‌ச் செய்யும் என்ப‌த‌ற்காக‌ ம‌னிதாபிமான‌த்தைக் க‌ழ‌ற்றி வைத்து விட்டு நாள் முழுதும் நீட்டி முழ‌க்கும் ஊட‌க‌ங்க‌ள் ச‌ற்றே நிதானித்துச் சிந்திக்க‌ வேண்டும்.

த‌ங்க‌ளுடைய‌ நோக்க‌ம் கொடுமை இழைக்க‌ப்ப‌ட்ட‌ பெண்ணுக்கு நீதி வ‌ழ‌ங்க‌ வேண்டும் எனும் நோக்கில் இருக்கிற‌தா ? இல்லை ஊட‌க‌த்திற்குத் தீனி போட‌வேண்டும் எனும் நிலையில் இருக்கிற‌தா ?. ஒருவேளை இத்த‌கைய‌ கொடுமை ந‌ம‌து இல்ல‌த்தில் நிக‌ழ்ந்தால் இதே நிக‌ழ்ச்சியை இப்ப‌டித் தான் கையாள்வோமா ? இல்லை க‌ண்ணீரோடு ப‌திவு செய்வோமா ? போன்ற‌ சில‌ அடிப்ப‌டை கேள்விக‌ளை எழுப்ப‌ வேண்டும். சரியானதை, சரியான நேரத்தில், சரியான விதத்தில் செய்யும் சமூகப் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்க வேண்டும்.

கான்பூர் இர‌யில் நிலைய‌த்தில் மின்சார‌ம் தாக்கி ஒரு குர‌ங்கு செய‌லிழ‌ந்து விழுந்த‌து. ப‌த‌றிப் போன‌ இன்னொரு குர‌ங்கு அதை உலுக்கி, அடித்து, த‌ண்ணீர் தெளித்து, க‌த‌றி நீண்ட‌ நெடிய‌ இருப‌து நிமிட‌ போராட்ட‌த்துக்குப் பின் அதை உயிருட‌ன் மீட்ட‌து. ஒரு குர‌ங்கு த‌ன‌து ச‌க‌ குர‌ங்கின் மீது காட்டிய ப‌ரிவும், அக்க‌றையும், அன்பும் ம‌னித‌ குல‌த்துக்கான‌ பாட‌ம‌ல்ல‌வா ? ஆறாவ‌து அறிவு ஆப‌த்தான‌தா ? ஐந்த‌றிவே அற்புத‌மா ?

நிறுத்தி நிதானிப்போம். வாழ்க்கை என்ப‌து ந‌ம‌து ஸ்மார்ட்போன்க‌ளில் இல்லை. ஃபேஸ்புக் ஸ்டேட்ட‌ஸ்க‌ளில் இல்லை. ந‌ம‌து உற‌வு என்ப‌து வாட்ஸ‌ப் த‌க‌வ‌ல்க‌ளில் இல்லை. ஐம்புல‌ன்க‌ளின் உரையாட‌லில் இருக்கிற‌து. கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தீண்டி உற‌வுக‌ளை வ‌ள‌ர்ப்போம். வ‌லையில் சிக்கிய‌ ப‌ற‌வை சிற‌கை இழ‌க்கிற‌து. இணைய‌ வலையில் சிக்கிய மனிதர்கள் உற‌வை இழ‌க்கிறார்க‌ள். உண‌ர்வோடு இணைந்து வாழ்பவ‌ர்க‌ளுக்கு அடுத்த‌வ‌ர்க‌ளுடைய‌ வாழ்க்கை வெறும் வேடிக்கைத் த‌க‌வ‌லாய் இருப்ப‌தில்லை. வேத‌னைத் த‌க‌வ‌லாய் தான் இருக்கும்.

தொழில் நுட்ப‌த்தை நாம் ப‌ய‌ன்ப‌டுத்தும் வ‌ரை அது ந‌ம‌க்குப் ப‌ய‌ன‌ளிக்கும். தொழில்நுட்ப‌ம் ந‌ம்மை ப‌ய‌ன்ப‌டுத்த‌த் துவ‌ங்குகையில் வாழ்க்கை ப‌ய‌ம‌ளிக்கும். தொழில் நுட்ப‌ம் ந‌ம‌து ப‌ணியாள‌னாய் இருக்க‌ட்டும், அன்பு ம‌ட்டுமே ந‌ம‌து எஜ‌மானாய் இருக்க‌ட்டும்.

அன்பின்றி அமையாது உல‌கு.

அழைக்கும் ஐ.டி ( Malayala Manorama Article )

IT-industry-bcbay

 

ஐடி துறையைப் பற்றி நாள் தோறும் வெளிவரும் செய்திகள் வேலை தேடுபவர்களையும், ஐடி தொடர்பான படிப்புகள் படிப்பவர்களையும் தொடர்ந்து பதட்டமடையச் செய்து கொண்டே இருக்கின்றன. “இந்த நிறுவனத்தில் இருபத்தையாயிரம் பேர் வேலை இழந்தார்கள்”, “அந்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடக்கிறது”, “இந்த வருடம் ஐடி துறையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது” எனும் செய்திகளெல்லாம் கடந்த சில வருடங்களாக மிகவும் சகஜமாகி இருக்கிறது.

ஐ.டி படிக்கலாமா ? வேலை கிடைக்குமா ? என்றெல்லாம் மாணவர்களும் பெற்றோர்களும் சந்தேகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையைச் சொல்வதென்றால், ஐடி துறை எல்லா துறைகளையும் விட மிக அதிகமான வளர்ச்சியைப் பெற்றது. காலத்தின் மாற்றத்தில் சிக்கி அது சரிவுகளையும் சந்தித்தது. இது எல்லா நிறுவனங்களிலும் நிகழ்வது தான். சில ஐடி நிறுவனங்களில் இலட்சக் கணக்கான ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சதவீதம் மக்கள் வேலையிழந்தால் கூட அது பூதாகரமாய்த் தெரிந்து விடுகிறது என்பது தான் விஷயம்.

ஐடி அழியும் என்பதெல்லாம் அறியாத மக்கள் சொல்லும் கருத்து. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதற்கு இருந்த வசீகரம் இப்போது சற்று குறைந்திருக்கிறது என்பது உண்மை தான். காரணம், ஐடி துறை என்பது மாயாஜால மந்திர உலகமல்ல, மன அழுத்தம் தரக்கூடிய அளவுக்கு கடின உழைப்பை எதிர்பார்க்கும் துறை என்பது தெரிந்ததால் தான்.

ஐடி துறை கால‌த்துக்கேற்ப‌ த‌ன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும். “நாப்ப‌து வ‌ருஷ‌மா கிள‌ர்க்கா இருக்கேன்” என்ப‌து போன்ற‌ சூழ்நிலை ஐடி துறையில் இல்லை. அது ஆண்டு தோறும் மாற்றங்களைச் சந்திக்கிறது.

உதார‌ண‌மாக‌ பாதுகாப்பு என்ப‌து முத‌லில் சாவி போட்டுக் க‌த‌வைத் திற‌ப்ப‌தாய் இருந்த‌து, பிற‌கு அக்ஸ‌ஸ் கார்டைக் காண்பித்து க‌த‌வைத் திற‌ப்ப‌தாய் மாறிய‌து, பின்பு கைவிர‌ல் ரேகையை வைத்து க‌த‌வைத் திற‌ப்ப‌தாய் உருமாறிய‌து, பிற‌கு க‌ண்க‌ளை ஸ்கேன் செய்து க‌த‌வைத் திற‌ப்ப‌து, ஒரு ம‌னித‌னுடைய‌ குர‌லை வைத்துத் திற‌ப்ப‌து என்றெல்லாம் மாறிக் கொண்டே இருக்கிற‌து. இந்த‌ மாற்ற‌ம் தான் ஐடி துறையின் சிற‌ப்ப‌ம்ச‌ம்.

இந்த‌ மாற்ற‌த்துக்குத் த‌க்க‌ப‌டி த‌ங்க‌ளை மாற்றிக் கொள்ள‌த் த‌ய‌ங்காத‌வ‌ர்க‌ளுக்கு ஐடி துறை எப்போதுமே அடைக்க‌ல‌ம் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிற‌து.

ஐடி துறையில் சேர்ந்து விட்ட‌வ‌ர்க‌ள் த‌ங்களுடைய‌ எதிர்கால‌த்தைக் குறித்து க‌வ‌லைப்ப‌ட‌த் தேவையில்லை. ஒரு சில‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொண்டு அத‌ன் அடிப்ப‌டையில் த‌ங்க‌ள் ப‌ணியைத் தொட‌ர்ந்தாலே போதும். ஐடி துறையில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்து விடலாம்.

  1. ஐடி துறை எல்லா துறையையும் போன்ற‌தே எனும் சிந்த‌னையை ம‌ன‌தில் கொண்டிருங்க‌ள். முழுமையான‌ அர்ப்ப‌ணிப்புட‌ன் உழைப்ப‌தும், தேவையான‌ ஆட‌ம்ப‌ர‌ங்க‌ளுக்கு வில‌கியிருப்ப‌தும், ப‌ணிவுட‌ன் வேலையைச் செய்வ‌தும் என‌ உங்க‌ள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்க‌ள். ஈகோவை ஒதுக்கி வைத்து விட்டு இணைந்து பணியாற்றும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  2. அர‌சு வேலைக‌ளைப் போல‌, ‘அப்பாடா வேலை கிடைத்த‌து” என‌ ஐடியில் ரெஸ்ட் எடுக்க‌ முடியாது. இது தான் ஆர‌ம்ப‌மே. வேலைக்குச் சேர்ந்த‌ முத‌லிலேயே நிறுவ‌ன‌ம் த‌ருகின்ற‌ அத்த‌னை ப‌யிற்சிக‌ளிலும் முழுமையாக‌ ஈடுப‌ட்டு முடிந்த‌வ‌ரை அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்ளுங்க‌ள். அடிப்ப‌டை ப‌ல‌மாக‌ இருந்தால் ஐடி வாழ்க்கை வ‌ள‌மாக‌ இருக்கும் என்ப‌து பால‌பாட‌ம். பெரும்பாலான‌ ஐடி நிறுவ‌ன‌ங்களில் “ஸ்கில் போர்ட்” என‌ப்ப‌டும் ஆன்லைன் ப‌யிற்சித் த‌ள‌ங்க‌ள் இருக்கும். அவ‌ற்றை முடிந்த‌வ‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தி தேவையான‌ ஐடி அறிவைப் பெற்றுக் கொள்ளுங்க‌ள்.
  3. ஐடி நிறுவ‌ன‌ங்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை “த‌க‌வ‌ல் பாதுகாப்பு” மிக‌ மிக‌ முக்கிய‌ம். நிறுவ‌ன‌த்தின் த‌க‌வ‌ல்க‌ளை நீங்க‌ள் த‌வ‌றாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்தினீர்க‌ள் என்ப‌து தெரிய‌ வ‌ந்தால் “எத்திக்ஸ் அன்ட் க‌ம்ப்ளைய‌ன்ஸ்” வ‌கையின் கீழ் உட‌ன‌டியாக‌ப் ப‌ணி நீக்க‌ம் செய்ய‌ப்ப‌டுவ‌து உறுதி. எல்லாவ‌ற்றிலும் நேர்மையாக இருங்கள். உங்க‌ள் ப‌டிப்பு, முந்தைய‌ வேலை, அனுப‌வ‌ம் என‌ எதிலும் பொய் சொல்ல‌ வேண்டாம். க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டால் வேலை போய்விடும் என்ப‌து ச‌ர்வ‌ நிச்ச‌ய‌ம். அது ம‌ட்டும‌ல்ல‌ நேர்மையாய் இருப்ப‌து அடிப்ப‌டை ம‌னித‌ப் ப‌ண்பு அல்லவா ?
  4. எந்த‌த் துறையில் வேலை செய்ய‌ப் போகிறீர்க‌ளோ அந்த‌க் க‌ட‌லில் மூழ்கி முத்தெடுங்க‌ள். காலையில் வ‌ந்து கொடுத்த‌ வேலையைச் செய்து விட்டுப் போவோம் என்றிருக்காதீர்க‌ள். டெஸ்டிங் துறையெனில் அதைக் குறித்து எவ்வ‌ள‌வு க‌ற்றுக் கொள்ள‌ முடியுமோ அந்த‌ அள‌வுக்குக் க‌ற்றுக் கொள்ளுங்க‌ள். டெவ‌ல‌ப்மென்ட் எனில் அதில் எந்த‌ தொழில்நுட்ப‌த்தில் வேலை செய்கிறீர்க‌ளோ அதைக் க‌ரைத்துக் குடியுங்க‌ள். இப்ப‌டி நீங்க‌ள் ப‌ணிசெய்யும் துறையில் பிஸ்தாவாக‌ உங்க‌ளை மாற்றிக் கொள்ளுங்க‌ள்.
  5. இன்ட‌ர்ப‌ர்ச‌ன‌ல் ஸ்கில்ஸ் என‌ப்ப‌டும் ம‌ற்ற‌ ந‌ப‌ர்க‌ளுட‌னான‌ உரையாட‌ல் திற‌மையை வ‌ள‌ர்த்துக் கொள்ளுங்க‌ள். பெரும்பாலான‌ ஐடி நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌ல்வேறு நாடுக‌ளில், ப‌ல்வேறு நேர‌ வித்தியாச‌த்தில் வேலை செய்ப‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌ணி செய்ய‌ வேண்டியிருக்கும். அத‌ற்கு உங்க‌ளுடைய‌ உரையாட‌ல் திற‌ம் மிக‌ அவ‌சிய‌ம். இதை ‘விர்சுவ‌ல் ஆபீஸ்” என்பார்க‌ள். ந‌ல்ல‌ வேலையும் செய்து, திற‌மையாக‌ப் பேச‌வும் செய்ப‌வ‌ர்க‌ள் ஐடியில் ஜொலிப்பார்க‌ள்.
  6. டொமைன் திற‌மையை வ‌ள‌ர்த்துக் கொள்ளுங்க‌ள். எந்த‌ துறையில் நீங்க‌ள் வேலை செய்தாலும் வ‌ங்கி, காப்பீடு என‌ ஏதோ ஒரு த‌ள‌த்தில் தான் ப‌ணி செய்வீர்க‌ள். அந்த‌ த‌ள‌த்தைப் ப‌ற்றி நிறைய‌ க‌ற்றுக் கொள்ளுங்க‌ள். கூட‌வே அந்த‌ த‌ள‌ம் சார்ந்த‌ சான்றித‌ழ் ப‌யிற்சிக‌ள் இருந்தால் அதைப் பெற‌ முய‌லுங்க‌ள். தொழில்நுட்ப‌ம் ம‌ற்றும் த‌ள‌ம் இர‌ண்டிலும் நீங்க‌ள் வ‌ல்ல‌வ‌ராக‌ இருந்தால் ஐடியில் நீங்க‌ள் த‌விர்க்க‌ முடியாத‌ இட‌த்தில் இருப்பீர்க‌ள் என்ப‌து திண்ண‌ம்.
  7. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத் தயங்காதீர்கள். அதற்கு முக்கியத் தேவை திறமைசாலியாக இருப்பதும், புதிய‌ தொழில்நுட்ப‌ங்க‌ளைக் க‌ற்றுக் கொள்வ‌துமாகும். நிறுவ‌ன‌ம் தேவைப்ப‌டும் த‌ள‌த்தில் உங்க‌ளுடைய‌ திற‌மையை வெளிப்ப‌டுத்த‌ எப்போதும் த‌யாராய் இருங்க‌ள். கிள‌வுட் க‌ம்யூட்டிங், பிக் டேட்டா, டிஜிட‌ல் டிரான்ஸ்ஃப‌ர்மேஷ‌ன் என‌ புதிய‌ விஷ‌ய‌ங்க‌ளைக் க‌ற்றுக் கொண்டே இருங்க‌ள்.
  8. ஒரு விஷ‌ய‌த்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விட‌ எப்ப‌டி வித்தியாச‌மாய்ச் செய்வ‌து என்ப‌தில் க‌வ‌ன‌ம் செலுத்துங்க‌ள். ஒரு வேலையை குறைந்த‌ நேர‌த்தில், குறைந்த‌ செல‌வில், அதிக‌ த‌ர‌த்தில் செய்ய‌ முடியுமா என‌ உங்க‌ள் மூளையைக் க‌ச‌க்குங்க‌ள். எப்போதும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விட‌ திற‌மையில் ஒரு ப‌டி முன்னால் நிற்கும் வேக‌ம் ம‌ன‌தில் இருக்க‌ட்டும். “ஒன் ஸ்டெப் அகெட்” என‌ இதைச் சொல்வார்க‌ள். புதிய‌ ‘இன்னோவேஷ‌ன்” ம‌ன‌ம் உங்க‌ளிட‌ம் இருந்தால் நீங்க‌ள் நிச்ச‌ய‌ம் ஐடியில் ஸ்டார் தான்.
  9. 9. ஐடி துறையில் உங்க‌ளுடைய‌ க‌வ‌ன‌த்தைச் சிதைக்கும் ப‌ல‌ வாய்ப்புக‌ள் வ‌ர‌லாம். உங்க‌ளுடைய‌ குணாதிச‌ய‌த்தைச் சீண்டிப் பார்க்கும் சிந்த‌னைக‌ள் எழ‌லாம். உங்க‌ளை தோல்வியடைய‌ச் செய்யும் அத்த‌கைய‌ ச‌ல‌ன‌ங்க‌ளை ஒதுக்கி வையுங்க‌ள். அந்த நிறுவனத்துக்கு ஓடலாமா, தனக்கு சம்பள உயர்வு கம்மியா கிடைச்சிருக்கே, என்பது போன்ற பணச் சிந்தனைகளை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். இருக்கின்ற‌ வேலையில் ப‌ரிம‌ளிக்க‌ முய‌ற்சி செய்யுங்க‌ள். அங்கீகாரங்களும், பொருளாதாரமும் தானே வ‌ந்து சேரும்.
  10. க‌டைசியாக‌ ஒன்று. வாழ்க்கைக்கும் வேலைக்குமான‌ ஒரு ச‌ம‌நிலையை உருவாக்கிக் கொள்ளுங்க‌ள். வர்க் லைஃப் பேலன்ஸ் முக்கியம். த‌ன்னைக் க‌வ‌னித்துக் கொள்வ‌து, த‌ன் குடும்ப‌த்தைக் க‌வ‌னித்துக் கொள்வ‌து, த‌ன் வேலையைக் க‌வ‌னித்துக் கொள்வ‌து எனும் வ‌ரிசையில் உங்க‌ளுடைய‌ வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்க‌ள். அலுவ‌ல‌க‌த்துக்கு வெளியே தான் உங்க‌ளுடைய‌ வாழ்க்கையின் பெரும்பாலான‌ பாக‌ம் இருக்கிற‌து எனும் உண்மை உண‌ர்ந்து செய‌ல்ப‌டுங்க‌ள்.

இந்த‌ சின்ன‌ச் சின்ன‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொண்டு செய‌ல்ப‌ட்டால் உங்க‌ளுடைய‌ ஐடி வாழ்க்கை செழிப்பாக‌வும், இனிமையாக‌வும், நிலையாக‌வும் இருக்கும் என்ப‌து நிச்ச‌ய‌ம்.

 

ஹெல்த்சானா : மருத்துவ இரண்டாவது அபிப்ராயம்

untitled

அந்த ஹாஸ்பிடல் போனா பணத்தையெல்லாம் புடுங்குவாங்க, இந்த ஹாஸ்பிட்டல்ல போனா வேணும்னே டெஸ்ட் எடுக்க சொல்லுவாங்க தேவையில்லாத சர்ஜரியெல்லாம் சஜஸ்ட் பண்ணுவாங்க. இப்படிப்பட்ட புலம்பல்களைக் கேட்காதவர்கள் இருக்க முடியாது. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

பல மருத்துவமனைகள் நோயாளிகளின் மருத்துவக் காப்பீட்டுக்குத் தக்கபடி பணம் வசூலிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. பணத்தைக் காப்பீட்டு நிறுவனங்கள் கொடுக்கின்றன என்பதால் நோயாளிகள் அதைக் கண்டு கொள்வதில்லை. ஆனால் அதே நேரத்தில் அந்த பணத்துக்காகவே அரை நோயாளியை ஆபரேஷன் பெயரில் முழு நோயாளியாக்கி விடுவது கொடுமையில்லையா ?

பெரும்பாலான மக்கள் ஒரு மருத்துவர் சொன்ன விஷயம் சரிதானா என்பதை இன்னொரு மருத்துவரிடம் கேட்டு சரிபார்த்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பெரிய அளவிலான சர்ஜரிகளுக்கோ, மருத்துவ சிகிச்சைகளுக்கோ இந்த சரிபார்த்தலை தவறாமல் செய்கிறார்கள்.

இந்த செகன்ட் ஒப்பீனியன் என்பது மிகவும் சிரமமான விஷயம். ஒரு தெரிந்த டாக்டர் இருந்தால், அவர் நல்லவராக இருந்தால், திறமை சாலியாக இருந்தால் மட்டுமே பெரும்பாலும் இந்த செகன்ட் ஒப்பீனியன் பயனளிக்கும். இல்லையேல் சிக்கல் மேலும் பெரிதாகி விட வாய்ப்பு உண்டு. காலவிரயம், பண விரயம், உழைப்பு விரயம் என பல விரயங்களும் இதில் உண்டு.

மருத்துவமனைகளில் பெரிய நோய்களுக்காக அட்மிட் ஆகும் மக்களில் 90 சதவீதம் பேருக்கும் தங்களுக்குத் தரப்படும் சிகிச்சை சரியானது தானா எனும் சந்தேகம் உண்டு என்கிறது ஒரு புள்ளி விவரம். தங்கள் டாக்டரை கடவுளாக நம்பியோ, தங்கள் கடவுளை டாக்டராக நம்பியோ அவர்கள் மருத்துவ சிகிச்சைக்குள் செல்கின்றன. இப்படி அரைகுறை நம்பிக்கையோடு மருத்துவமனையில் செல்பவர்கள் விரைவில் குணமாவதில்லை என்பது உளவியல் பாடம்.

இன்றைக்கு எல்லாமே ஆன்லைன் மூலமாக சாத்தியப்பட்டிருக்கிறது. காலையில் குடிக்கும் காபி முதல் இரவில் போர்த்தும் போர்வை வரை எல்லாவற்றையும் ஆன்லைனிலேயே வாங்கி விடுகிறோம். வங்கி எங்கே இருக்கிறது என்பதையே மறக்குமளவுக்கு பணப் பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் இடம் மாறிவிட்டன. இப்போது புதிதாக மருத்துவத்துறையும் அதில் இணைந்திருப்பது மருத்துவ நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.

“ஆன்லைன் செகன்ட் ஒப்பீனியன்” மருத்துவத் துறைக்குள் நுழைந்திருக்கும் ஒரு புதிய வரவு. மருத்துவ அறிக்கைகள், பரிசோதனைகள் சார்ந்த சந்தேகங்களை ஆன்லைன் மூலமாகவே தெளிவுபடுத்திக் கொள்ளும் முறை தான் இது.

ஒரு டாக்டர் தருகின்ற மருத்துவ அறிக்கைகளை ஆன்லைனில் அப்லோட் செய்து, அதன் இரண்டாவது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளலாம். இரண்டாவதுடன் நின்று விடாமல் மீண்டும் பல நிலை ஆலோசனைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். ஸ்மார்ட் போனில் அந்த அப்ளிகேஷனை நிறுவி நமது சந்தேகங்களை தேவையான நேரத்தில் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

ஹெல்த்சானா நிறுவனம் அத்தகைய மெடிகல் செகன்ட் ஒப்பீனியன் பணியில் தெளிவான கட்டமைப்பும், விரிவான தொடர்புகளும், தொலைநோக்குப் பார்வையும் என தனது வேர்களை ஆழமாய் மருத்துவத் துறைக்குள் நுழைத்திருக்கிறது.

மருத்துவமனைக்கு ஓடி, டாக்டரின் அப்பாயின்ட்மென்டைப் பெற்று, சாயங்காலம் வரை காத்திருந்து மன உளைச்சலடையும் சூழல் இனி இல்லை.
நேரடியாக இந்த வலைத்தளத்தில் நுழையுங்கள். ரிப்போர்ட்களை ஸ்கேன் செய்தோ, அல்லது ஸ்மார்ட் போனில் போட்டோ எடுத்தோ அப்லோட் செய்யுங்கள். டாக்டர்களின் லிஸ்டைப் பாருங்கள். உங்களுக்குத் திருப்தியான ஒருவரை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான். டாக்டர் உங்களுடைய ரிப்போர்ட்களைப் பார்த்து விட்டு “செகன்ட் ஒப்பீனியன்” சொல்வார்.

இந்த டாக்டருக்கு உங்கள் இன்சூரன்ஸ் பணத்தின் மீது கண் இல்லை, உங்களை கட்டாய அறுவை சிகிச்சைக்குள் அழைத்துச் செல்லவேண்டிய அவசியம் இல்லை. எனவே ‘உள்ளது உள்ளபடி’ ஒரு முடிவைச் சொல்வார். இவரும் அறுவை சிகிச்சை அவசியம் என்றால் நீங்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். அல்லது அங்கேயே மூன்றாவதாக வேறொரு டாக்டரிடமும் நீங்கள் அபிப்பிராயம் பெற்றுக் கொள்ளலாம்.

முக்கியமான ‘உயிர்போகும்’ பிரச்சினைகளில் மூன்று நான்கு மருத்துவர்களிடம் உங்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்பது கூட வெகு எளிதில் இங்கே சாத்தியமாகிறது.

ஒருவேளை எல்லோரும் ஒரே பதிலைச் சொன்னால், “சரி, டாக்டர் சரியாத் தான் சொல்லியிருக்கார். ஆபரேஷன் பண்ணுவோம் ” என உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை முரண்பட்ட பதில் இருந்தால் என்ன செய்வது ?
அதற்காக அவர்கள் செய்திருக்கும் யுத்தி வியக்க வைக்கிறது.

ஹெல்த்சானாவின் ‘உயர்மட்ட மருத்துவர் குழு” இந்த ரிப்போர்ட்களையெல்லாம் பரிசோதிக்கும். அதில் நான்கைந்து பிரபல மருத்துவர்கள் இருப்பார்கள். அவர்கள் அனைவருமாகச் சேர்ந்து ஒரு பொதுவான முடிவெடுத்து பதில் கொடுப்பார்கள்.

ஹெல்த்சானாவின் பணிகளை கூட்டிக் கழித்து ஒரு நாலு பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அமெரிக்காவிலோ, லண்டனிலோ, ஜெர்மனியிலோ இருக்கும் ஒரு நோயாளி சென்னையிலோ, நெல்லையிலோ இருக்கும் தன்னுடைய‌ ஃபேவரிட் மருத்துவரின் அபிர்ப்பிராயத்தை வாங்குவது ஒன்று.

ஆயிரம் தான் இருந்தாலும் “நேரடியா டாக்டர் கிட்டே பேசறது மாதிரி வருமா ?” என்பவர்களுக்காக உலகின் எந்த பாகத்தில் இருந்தாலும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் டாக்டர்களுடன் நேரடியாகப் பேசும் வசதி இன்னொன்று.

என்னோட மருத்துவ ரிப்போர்ட்ஸ் எல்லாம் குப்பை மாதிரி கெடக்கு என புலம்பும் மக்களுக்கு, டிஜிடலைஸ் செய்து முழு மருத்துவ வரலாற்றையும் கையில் கொடுத்து விடுவது மூன்றாவது.

பயணம் செய்பவர்களுக்கான மருத்துவ ஆலோசனை, அதற்கான மருத்துவ அறிக்கைகள், இத்யாதிகள் எல்லாம் சேர்த்து “எலக்ட்ரானிக் மெடிக்கல் ரெக்கார்ட்” உருவாக்கித் தருவது நான்காவது. தெரியாத நாட்டில், புரியாத சூழலில் ஏதேனும் நோய் வந்தால் சட்டென நமது வரலாற்றை வினாடிகளில் புரட்டிப் பார்த்து சிகிச்சை அளிக்க இவை உதவும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் இன்றைக்கு இத்தகைய மெடிகல் செகன்ட் ஒப்பீனியன் நிறுவனங்கள் மீது தங்கள் பார்வையைச் செலுத்தியிருக்கின்றன. குறிப்பாக ஐ.டி துறையில் ஊழியர்களுக்கு மெடிகல் செகன்ட் ஒப்பீனியன் தேவைகள் அதிகரித்திருக்கின்றன. சின்ன வயதிலேயே மன அழுத்தத்தில் பல உயிரிழப்புகள் நேர்வதால் இத்தகைய மருத்துவ சேவைகள் அவர்களுக்கு அத்தியாவசியத் தேவையாகின்றன.

இதைக்குறித்து சென்னையிலுள்ள மருத்துவர் செங்குட்டுவன், கார்டியாலஜிஸ்ட் கூறுகையில்

“ஹெல்த்சானா போன்ற நிறுவனங்களின் பயன்பாடுகளை இனிமே தவிர்க்க முடியாது. மருத்துவம் உயிர் சம்பந்தப்பட்டது, அலட்சியமா இருக்க முடியாது. ஒண்ணு போனா இன்னொண்ணு வராது. சோ, ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். மெடிகல் செகன்ட் ஒப்பீனியன் ரொம்ப நல்ல விஷயம். நாலு இடம் விசாரிச்சு தான் நாம எதையுமே பண்றோம். மருத்துவத்துலயும் அது இருக்கிறதுல தான் ரொம்ப நல்லது. ” என்றார்.

கோயமுத்தூர் மெடிக்கல் காலேஜ் டாக்டர்: முத்துக்குமரன் ரங்கராஜன், கேஸ்ட்ரோஎன்ட்ரோலாஜிஸ்ட் கூறுகையில்

“எல்லாரோட மெடிகல் ஹிஸ்டரியும் கைல இருக்கணும். திடீர்னு பேஷன்ட் மயக்கமாயிட்டாருன்னா டாக்டருக்கு நோயாளியோட கண்டிஷனைக் கண்டுபிடிக்க டைம் ஆகும். அதுவே கையோட மெடிகல் ரிப்போர்ட் டிஜிடல் வடிவில இருந்தா வெரி சிம்பிள். உயிரைக் காப்பாத்தற வாய்ப்பு அதிகரிக்கும். ஹெல்த்சானா(Healthsana.com) ஒரு அற்புதமான முயற்சிங்கறதுல சந்தேகமில்லை” என்றார்.

தொழில்நுட்பங்களால் நோய்கள் அதிகரிக்கின்றன. நோய்களை தொழில்நுட்பம் நீக்குகிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது இது தானோ !!!