தனிமையை இனிமையாக்க

alone

சிலருக்கு தனிமை என்பது வரம். எனவே தனிமையைத் தேடிப் பயணங்கள் செல்வார்கள். மலைகளின் உச்சிக்கோ. யாருமற்ற வனாந்தரத்தின் புரட்டப்படாத பக்கங்களுக்கோ. நதிகளின் பிரதேசத்துக்கோ செல்வார்கள். அந்தத் தனிமை அவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டி அனுப்பி வைக்கும். உண்மையில் அவர்கள் தனிமையில் இருப்பதில்லை, கூட்டத்திலிருந்து தனியே பிரிந்து இயற்கையின் மடியில் ஓய்வெடுக்கின்றனர்.

இன்னும் சிலருக்கு தனிமை சாபம். கொஞ்ச நேரம் தனியே விட்டாலே என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டப்படுவார்கள். மக்கள் கூட்டத்தில் இருக்க வேண்டும் என பரபரப்பார்கள். அவர்களுக்கு மற்றவர்களுடைய அருகாமை தான் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

இன்னும் சிலர் எந்தப் பக்கமும் சாயாமல் இருப்பார்கள். தனிமையாய் இருந்தால் தனிமையை ரசித்துக் கொள்வார்கள். கூட்டத்தில் இருந்தால் அந்த கணத்தை நேசிப்பார்கள்.

வாழ்க்கை எந்திரமாகி விட்டது. அலுவலகப் பணிகளுக்கான ஓடல்களில் பெரும்பாலான நேரம் முடிந்து விடும். குடும்பத்தினருக்கான ஓட்டம் மீதி நேரத்தை அபகரித்துவிடும். எஞ்சியிருக்கும் நேரத்தை அரைகுறையாய் கிடைக்கும் தூக்கம் எடுத்துக் கொள்ளும். இதில் நம்மோடு நாமே இருக்கும் தனிமை நிமிடங்கள் கிடைப்பதே அபூர்வம்.

எது எப்படியோ, விரும்புகிறோமோ இல்லையோ, தனிமையில் இருக்கும் சந்தர்ப்பங்கள் நம்மை அவ்வப்போது சந்தித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த தனிமையான கணங்களை இனிமையான கணங்களாய் மாற்றுவது நம் கையில் தான் இருக்கிறது.

தனிமையில் இருக்கையில் நீ உன்னோடு இருக்கிறாய். உன்னை உனக்குப் பிடிக்காவிட்டால் தான் தனிமை பிடிக்காமல் போகும். உன்னை உனக்குப் பிடிக்குமெனில் தனிமை என்பது வரவேற்புக்குரியது.

நாள் முழுக்க ஏதேதோ விஷயங்களுக்காக ஓடிய நம்மை நமக்கென இயங்க வைப்பது தனிமை தான். அத்தகைய தனிமை நிமிடங்களில் என்னென்ன செய்யலாம்.

1. எழுதலாம். நமக்குத் தோன்றும் விஷயங்கள், நமது அனுபவங்கள், அல்லது நமது கற்பனைகள் நமது ரகசிய மனக் கிடங்கு என ஏதோ ஒரு விஷயத்தை எழுதலாம். ஒரு பிளாக் ஆரம்பிப்பதோ, ஒரு டைரி வாங்குவதோ என எழுத்தின் தளம் எதுவாகவும் இருக்கலாம். எழுதுவது நமது மனதை மகிழ்வாக்கும், இலகுவாக்கும் கூடவே தனிமையை இனிமையாக்கும்.

2. ‘யாருமே இல்லேன்னா இதைச் செய்வேன்’ என எல்லாருக்குள்ளும் ஒரு ஏக்கம் இருக்கும். அந்த விஷயத்தைச் செய்யுங்கள். அது கன்னா பின்னாவென நடனமாடுவதானாலும் சரி, சத்தமாய்ப் பாடுவதானாலும் சரி, ஒரு படம் பார்ப்பதானாலும் சரி, உங்கள் வீட்டுச் செல்லப் பிராணியுடன் உருண்டு புரள்வதானாலும் சரி எது உங்கள் ஏக்கமோ அதை நிறைவேற்றுங்கள்.

3. தனிமை தந்திருக்கும் சுதந்திரத்தை உணருங்கள். இது உங்களுக்கான நேரம், உங்களுக்கான தருணம். இங்கே நீங்கள் தான் பாஸ், நீங்கள் தான் வேலையா பவுலர், நீங்கள் தான் பேட்ஸ்மேன், நீங்கள் தான் அம்பயர் ஏன் நீங்கள் தான் பார்வையாளர்கள். எனவே உங்கள் ரசனையை செயல்படுத்துங்கள்.

4. தனிமையில் இருக்கும் போது நீங்கள் யாருடனெல்லாம் பகையாய் இருக்கிறீர்கள், வெறுப்பாய் இருக்கிறீர்கள் என யோசித்துப் பாருங்கள். நீண்ட நாட்களாகப் பேசாமலிருக்கும் நண்பர்களை நினையுங்கள் அந்த பெயர்களை எழுதி வையுங்கள். ஒவ்வொருவராய் அழையுங்கள். “சும்மா தான் பேசி ரொம்ப நாளாச்சு” என இரண்டு நிமிடம் பேசுங்கள். சொல்ல முடியாத மகிழ்ச்சியை உணர்வீர்கள்.

5. உங்களுடைய நண்பர்கள் பட்டியலில், அல்லது உறவினர் பட்டியலில் ஒரு சில பெயர்கள் உங்களிடம் எப்போதும் இருக்கும். ‘இவனை மன்னிக்கவே கூடாது’ எனும் செய்தியுடன். அதில் ஒரு நபருக்கு போன் பண்ணுங்கள். தவறு உங்கள் பக்கம் இல்லாவிட்டாலும் கூட ஒரு மன்னிப்பைக் கேளுங்கள். மனித நேயத்தின் அற்புத தருணத்தை உணர்வீர்கள்.

6. உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஒரு காதல் கடிதம் எழுதுங்கள். திருமணம் ஆகவில்லையேல் உங்கள் பெற்றோருக்கு ஒரு அன்பின் மடல் எழுதுங்கள். எழுதும்போது அவர்கள் உங்களுக்காய் செய்த நல்ல விஷயங்கள் மட்டுமே மனதில் வரிசையாய் வரட்டும். உங்கள் இதயத்தின் அன்பைப் பிழிந்து வடிக்கும் அந்தக் கடிதம் உங்களுடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்.

7. தனிமை நேரத்தை உங்களுடைய திட்டமிடலுக்குப் பயன்படுத்துங்கள். அல்லது உங்களுடைய பழைய பொருட்களையெல்லாம் புரட்டிப் பார்த்து அடுக்கி வைப்பதில் செலவிடுங்கள். பழைய புகைப்படங்களையெல்லாம் பார்த்து அந்தக் காலத்துக்குச் சென்று வாருங்கள். அந்த நினைவுகள் நம்மை ஆனந்தத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்லும்.

8. ஒரு புதிய கலையைக் கற்றுக் கொள்ள அந்த நேரத்தைச் செலவிடலாம். அது ஒரு புதிர் விளையாட்டைக் கற்றுக் கொள்வதானாலும் சரி, ஒரு இசைக்கருவியை கற்றுக் கொள்வதானாலும் சரி, அல்லது கார்ட்டூன் வரையக் கற்றுக் கொள்வதானாலும் சரி. ஏதோ ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொள்ளத் தொடங்குவது உங்களுக்கு உற்சாகமூட்டும்.

9. தியானம் செய்யலாம். தனிமை கிடைப்பது தியானத்துக்கு ஜாக்பாட் போல. செல்போனை சைலன்ட் மோடில் போட்டு விட்டு மனதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் ஈடுபடலாம். அல்லது வெறுமனே பகல் கனவுக்குள் நுழைந்து மனதை இலகுவாக்கலாம்.

10. வாசிக்கலாம். ஒரு நல்ல நூலை வாசிப்பது உங்களுடைய தனிமைக்குத் துணை. கூடவே உங்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களையும் நீங்கள் கற்றுக் கொள்ளலாம். எந்த புத்தகம் என்றில்லை, எது உங்களுக்குப் பயனளிக்குமோ அதைப் படியுங்கள்.

தனிமையை இனிமையாக்க ஆயிரம் வழிகள் உண்டு. அதை அர்த்தமுள்ளதாகவும், இனிமையுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றவும் ஏராளம் வழிகள் உண்டு. அவற்றில் ஒரு பத்து சிந்தனைகளே இவை. முயற்சி செய்து பாருங்கள்.

 

Thanks Vettimani, London.

Leave a comment