புனிதப் பயணம்
என்பது
நாம் செல்வதல்ல
நமக்குள் செல்வது !
இறைவனைத் தேடி மனிதர்கள் எல்லா இடங்களிலும் அலைந்து திரிகிறார்கள். சிலருக்கு இறைவன் மலைகளின் உச்சியில் இருப்பார் எனும் நம்பிக்கை. எனவே மலைகளை நோக்கி அவர்கள் நடக்கிறார்கள்.
சிலருக்கு ஆண்டவன் சில சிற்பங்களின் உள்ளே சிக்கிக் கிடக்கிறானோ எனும் சந்தேகம். எனவே அவர்கள் அத்தகைய சிற்பங்கள், சிலைகள் இருக்கும் திசை நோக்கி சென்று கொண்டே இருக்கிறார்கள்.
சிலருக்கு அவன் நதிகளில் கலந்திருப்பதாய் நம்பிக்கை. அவர்கள் புனித நதிகளை நோக்கி பயணங்கள் செல்கின்றனர்.
ஊரெல்லாம் சுற்றிக் களைக்கும் மனிதர்கள் கடவுளை எங்கேயும் காணமுடியாமல் சோர்ந்து போய் ஒரு இடத்தில் தனிமையில் அமரும் போது, கடவுள் அவர்களுக்கு உள்ளேயே இருப்பதைக் கண்டு கொள்கின்றனர். கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்தோமே என அவர்கள் சுயம் உணர்கையில் வயது அவர்களை வாழ்க்கையின் எல்லைக் கோட்டின் அருகே கொண்டு போய் நிறுத்தி விடுகிறது.
புத்தனுக்கு ஞானம் தோன்றியது தேசங்கள் தாண்டிய பயணத்தில் அல்ல, போதி மரத்தடியில் தன்னை உணர்ந்த போது தான். காரணம் இறைவன் வெளியே இல்லை, உள்ளே இருக்கிறார். நாம் தான் வெளியே ஓடிக் கொண்டிருக்கிறோம்.
இறைவனை வெளியே தேடுவது மிக வசதியானது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சென்று ஒரு பூஜை செய்வதோ, ஒரு பிரார்த்தனை செய்வதோ, ஒரு தொழுகை செய்வதோ நமக்கு மிக எளிதான விஷயம். ஆனால் உள்ளேயே கடவுள் இருக்கிறார் என்றால் அது நமக்கு மிகப்பெரிய இடஞ்சல்.
அதனால் தான் கடவுள் உள்ளே இருக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்வதில் நமக்கு விருப்பம் இல்லை.
அப்படி என்னென்ன சிக்கல் ?
கடவுள் உள்ளே இருக்கிறார் என்றால், நமது கண்கள் வழியாக அவர் பார்க்கிறார். அதனால் பார்வைகள் ஆபாசங்களுக்கு விலகியிருக்க வேண்டியிருக்கிறது. பெண்களைப் பார்க்கும்போது கண்களைப் பார்க்கும் கண்ணியம் தேவைப்படுகிறது. நூல்கள், இணைய தளங்கள், சினிமாக்கள் இங்கெல்லாம் கடவுளையும் கையோடு கூட்டிக்கொண்டு போகலாமா என யோசிக்க வேண்டியிருக்கிறது !
கடவுள் உள்ளே இருக்கிறார் என்றால், அவர் இருக்கின்ற இந்த உடலானது ஆலயமாகி விடுகிறது. மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக்குள்ளே போய் ஒரு குவாட்டர் அடித்து நாலு சிகரெட் புடிப்போம் என்றால் மனம் பதட்டமாகிறது இல்லையா ? நமது உடல் ஆலயமானால் அதில் மதுவையும், புகையையும், தேவையற்ற போதையையும் உலவச் செய்ய முடியாதல்லவா ?
கடவுள் உள்ளே இருக்கிறார் என்றால் நமது சிந்தனைகளை அவர் வாசிக்கிறார் என்று பொருள். நமது சிந்தனைகளைச் சீர்செய்ய வேண்டியிருக்கிறது. கெட்ட சிந்தனைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கட்டாயம் எழுகிறது. ரகசியங்களைப் புதைத்து வைக்கும் குப்பை மேடாக மனதைப் போட முடியாது அல்லவா ?
கடவுள் உள்ளே இருக்கிறார் என்றால் நமது செயல்களின் பின்னணியில் செயல்படும் நமது மனநிலை தூய்மையாய் இருக்க வேண்டியிருக்கிறது. நாம் புகழையும் பெருமையையும் எதிர்பார்த்து உதவுகிறோமா ? நமது நட்பின் பின்னணியில் ஏதேனும் சுயநலம் இருக்கிறதா என்றெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.
“நாலு பேருக்கு நல்லது நடக்கும்ன்னா எதுவுமே தப்பில்லை” என்பதெல்லாம் மிகவும் தவறான கோட்பாடுகள். நல்ல செயல்கள், கெட்ட செயல்கள் என்பது போல செத்த செயல்கள் என்றொரு வகை உண்டு. நல்ல செயல்களாய் வெளிப்பார்வைக்குத் தெரிகின்ற செயல்கள் தவறான காரண காரியங்களுக்காய் செய்யப்படுகிறதெனில் அவை செத்த செயல்கள். ஊர்கூட்டி ஒருவருக்கு நலத்திட்டம் வழங்குவதை இதன் உதாரணமாய்க் கொள்ளலாம்.
இறைவன் உள்ளே இருக்கிறார் என்றால் நாம் அவருடைய கண்களை விட்டு எப்போதுமே தப்ப முடியாது. இருட்டின் கையில் இருந்தாலும், அடைக்கப்பட்ட தனியறையில் இருந்தாலும் கடவுள் கூடவே இருக்கிறார் எனும் சிந்தனையுடன் தவறுகளுக்கு விலகியிருக்க வேண்டிய கட்டாயம் வருகிறது.
கடவுள் உள்ளே இருக்கிறார் என்றால் அவருக்குப் பிடித்தமான வாழ்க்கையை ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழவேண்டியது அவசியமாகிறது. ஏதோ வாரமொருமுறையோ, மாதமொருமுறையோ செல்லும் மத அடையாளத்தைத் தாண்டி வாழ்க்கையே புனிதமடைய வேண்டிய கட்டாயம் உருவாகிறது.
கடவுள் உள்ளே இருக்கிறார் என்றால், கண்ணுக்கு மை தீட்டி, உதட்டில் சாயம் பூசி, அழகிய ஆடை அணிந்து, நேர்த்தியாக அழகாக காட்சியளிப்பது போல, மனதையும் அழகுபடுத்த வேண்டிய தேவை எழுகிறது. மனதின் அழுக்கைக் கழுவிக் களைய வேண்டிய கட்டாயமும் உருவாகிறது.
காரணம் கடவுள் உள்ளே இருந்தால், அகத்தின் அழகு முகத்தில் தெரிய வேண்டும். அதாவது கடவுள் முகத்தில் பிரதிபலிக்க வேண்டும். முகத்தில் சாந்தமும், பணிவும், பொறுமையும் மிளிர வேண்டும். நாவில் நன்மையே கூடாரமடித்துக் குடியிருக்க வேண்டும் எனும் மாற்றம் தேவைப்படுகிறது.
இப்படி ஏகப்பட்ட தேவைகள், கட்டாயங்கள், மாற்றங்கள் தேவைப்படுவதால் தான் நாம் கடவுளை இதயத்துக்குள் அமர வைக்க தயங்குகிறோம். எப்படியாவது இதயத்தை விட்டு அவரை வெளியேற்றி விட்டால் காணிக்கைகள், பரிகாரங்கள், பயணங்கள் மூலம் கடமையைக் கழித்து விடலாம் என்பது அவர்களுடைய எண்ணம்.
கடவுள் நாம் தேடிப் போகவேண்டியவரல்ல. நம்மைத் தேடி வருகிறவர். காரணம், நாம் அனைவரும் அவருடைய பிள்ளைகளாக இருக்கிறோம். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அவர் வரும்போது அவரை வீட்டுக்குள் அழைத்து நமது வீட்டின் சாவியை அவர் கையில் ஒப்படைக்க வேண்டியது தான்.
கடவுளுக்காய் கதவைத் திறக்க வேண்டுமெனில் உள்ளே நிரம்பியிருக்கும் தீயவர்களை முதலில் வெளியேற்ற வேண்டும். காலி செய்யாத கோப்பையில் புதியதாய் எதையும் ஊற்ற முடியாது.
உள்ளே நுழைந்தபின் அவர் நிம்மதியாய் இருக்கும் வகையில் நமது இதயம் தூய்மையானதாய் இருக்க வேண்டும். மனதைத் தூய்மைப்படுத்த அவரது உதவியையும் தயங்காமல் நாடலாம்.
உள்ளே நுழைந்த கடவுளுக்கு முழு அதிகாரத்தையும் கொடுக்க வேண்டும். அந்த அறையில் போகாதே, இந்த அறைக்குள் நுழையாதே என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. அதற்கு நமது மனதில் பாவத்தின் அறைகள் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.
அப்புறமென்ன, உங்களுடைய வாழ்க்கை செம்மைப்படும், அர்த்தப்படும். மதமெனும் சடங்குகள் தாண்டி இறைவனின் வசம் உங்கள் இதயம் இளைப்பாறும். வருகின்ற கவலைகள், சோர்வுகள். சவால்கள் எல்லாவற்றையும் சமாளிக்க உங்களோடு கடவுளும் இருந்தால் யானை மீதிருக்கும் சிற்றெறும்பாய் உணர்வீர்கள்.
அதுதான் ஆன்மீகத்தின் தேவை. உள்ளே.. உள்ளே.. இறைவன் உன் உள்ளே வரட்டும். உன் வாழ்க்கை துயரங்களை விரட்டும்.
( Thanks : Sivatamizh Magazine, London )