அழைக்கும் ஐ.டி ( Malayala Manorama Article )

IT-industry-bcbay

 

ஐடி துறையைப் பற்றி நாள் தோறும் வெளிவரும் செய்திகள் வேலை தேடுபவர்களையும், ஐடி தொடர்பான படிப்புகள் படிப்பவர்களையும் தொடர்ந்து பதட்டமடையச் செய்து கொண்டே இருக்கின்றன. “இந்த நிறுவனத்தில் இருபத்தையாயிரம் பேர் வேலை இழந்தார்கள்”, “அந்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடக்கிறது”, “இந்த வருடம் ஐடி துறையில் சரிவு ஏற்பட்டிருக்கிறது” எனும் செய்திகளெல்லாம் கடந்த சில வருடங்களாக மிகவும் சகஜமாகி இருக்கிறது.

ஐ.டி படிக்கலாமா ? வேலை கிடைக்குமா ? என்றெல்லாம் மாணவர்களும் பெற்றோர்களும் சந்தேகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையைச் சொல்வதென்றால், ஐடி துறை எல்லா துறைகளையும் விட மிக அதிகமான வளர்ச்சியைப் பெற்றது. காலத்தின் மாற்றத்தில் சிக்கி அது சரிவுகளையும் சந்தித்தது. இது எல்லா நிறுவனங்களிலும் நிகழ்வது தான். சில ஐடி நிறுவனங்களில் இலட்சக் கணக்கான ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சதவீதம் மக்கள் வேலையிழந்தால் கூட அது பூதாகரமாய்த் தெரிந்து விடுகிறது என்பது தான் விஷயம்.

ஐடி அழியும் என்பதெல்லாம் அறியாத மக்கள் சொல்லும் கருத்து. ஆனால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு அதற்கு இருந்த வசீகரம் இப்போது சற்று குறைந்திருக்கிறது என்பது உண்மை தான். காரணம், ஐடி துறை என்பது மாயாஜால மந்திர உலகமல்ல, மன அழுத்தம் தரக்கூடிய அளவுக்கு கடின உழைப்பை எதிர்பார்க்கும் துறை என்பது தெரிந்ததால் தான்.

ஐடி துறை கால‌த்துக்கேற்ப‌ த‌ன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும். “நாப்ப‌து வ‌ருஷ‌மா கிள‌ர்க்கா இருக்கேன்” என்ப‌து போன்ற‌ சூழ்நிலை ஐடி துறையில் இல்லை. அது ஆண்டு தோறும் மாற்றங்களைச் சந்திக்கிறது.

உதார‌ண‌மாக‌ பாதுகாப்பு என்ப‌து முத‌லில் சாவி போட்டுக் க‌த‌வைத் திற‌ப்ப‌தாய் இருந்த‌து, பிற‌கு அக்ஸ‌ஸ் கார்டைக் காண்பித்து க‌த‌வைத் திற‌ப்ப‌தாய் மாறிய‌து, பின்பு கைவிர‌ல் ரேகையை வைத்து க‌த‌வைத் திற‌ப்ப‌தாய் உருமாறிய‌து, பிற‌கு க‌ண்க‌ளை ஸ்கேன் செய்து க‌த‌வைத் திற‌ப்ப‌து, ஒரு ம‌னித‌னுடைய‌ குர‌லை வைத்துத் திற‌ப்ப‌து என்றெல்லாம் மாறிக் கொண்டே இருக்கிற‌து. இந்த‌ மாற்ற‌ம் தான் ஐடி துறையின் சிற‌ப்ப‌ம்ச‌ம்.

இந்த‌ மாற்ற‌த்துக்குத் த‌க்க‌ப‌டி த‌ங்க‌ளை மாற்றிக் கொள்ள‌த் த‌ய‌ங்காத‌வ‌ர்க‌ளுக்கு ஐடி துறை எப்போதுமே அடைக்க‌ல‌ம் கொடுத்துக் கொண்டே தான் இருக்கிற‌து.

ஐடி துறையில் சேர்ந்து விட்ட‌வ‌ர்க‌ள் த‌ங்களுடைய‌ எதிர்கால‌த்தைக் குறித்து க‌வ‌லைப்ப‌ட‌த் தேவையில்லை. ஒரு சில‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொண்டு அத‌ன் அடிப்ப‌டையில் த‌ங்க‌ள் ப‌ணியைத் தொட‌ர்ந்தாலே போதும். ஐடி துறையில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்து விடலாம்.

  1. ஐடி துறை எல்லா துறையையும் போன்ற‌தே எனும் சிந்த‌னையை ம‌ன‌தில் கொண்டிருங்க‌ள். முழுமையான‌ அர்ப்ப‌ணிப்புட‌ன் உழைப்ப‌தும், தேவையான‌ ஆட‌ம்ப‌ர‌ங்க‌ளுக்கு வில‌கியிருப்ப‌தும், ப‌ணிவுட‌ன் வேலையைச் செய்வ‌தும் என‌ உங்க‌ள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ளுங்க‌ள். ஈகோவை ஒதுக்கி வைத்து விட்டு இணைந்து பணியாற்றும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
  2. அர‌சு வேலைக‌ளைப் போல‌, ‘அப்பாடா வேலை கிடைத்த‌து” என‌ ஐடியில் ரெஸ்ட் எடுக்க‌ முடியாது. இது தான் ஆர‌ம்ப‌மே. வேலைக்குச் சேர்ந்த‌ முத‌லிலேயே நிறுவ‌ன‌ம் த‌ருகின்ற‌ அத்த‌னை ப‌யிற்சிக‌ளிலும் முழுமையாக‌ ஈடுப‌ட்டு முடிந்த‌வ‌ரை அறிவை வ‌ள‌ர்த்துக் கொள்ளுங்க‌ள். அடிப்ப‌டை ப‌ல‌மாக‌ இருந்தால் ஐடி வாழ்க்கை வ‌ள‌மாக‌ இருக்கும் என்ப‌து பால‌பாட‌ம். பெரும்பாலான‌ ஐடி நிறுவ‌ன‌ங்களில் “ஸ்கில் போர்ட்” என‌ப்ப‌டும் ஆன்லைன் ப‌யிற்சித் த‌ள‌ங்க‌ள் இருக்கும். அவ‌ற்றை முடிந்த‌வ‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தி தேவையான‌ ஐடி அறிவைப் பெற்றுக் கொள்ளுங்க‌ள்.
  3. ஐடி நிறுவ‌ன‌ங்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை “த‌க‌வ‌ல் பாதுகாப்பு” மிக‌ மிக‌ முக்கிய‌ம். நிறுவ‌ன‌த்தின் த‌க‌வ‌ல்க‌ளை நீங்க‌ள் த‌வ‌றாக‌ப் ப‌ய‌ன்ப‌டுத்தினீர்க‌ள் என்ப‌து தெரிய‌ வ‌ந்தால் “எத்திக்ஸ் அன்ட் க‌ம்ப்ளைய‌ன்ஸ்” வ‌கையின் கீழ் உட‌ன‌டியாக‌ப் ப‌ணி நீக்க‌ம் செய்ய‌ப்ப‌டுவ‌து உறுதி. எல்லாவ‌ற்றிலும் நேர்மையாக இருங்கள். உங்க‌ள் ப‌டிப்பு, முந்தைய‌ வேலை, அனுப‌வ‌ம் என‌ எதிலும் பொய் சொல்ல‌ வேண்டாம். க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்டால் வேலை போய்விடும் என்ப‌து ச‌ர்வ‌ நிச்ச‌ய‌ம். அது ம‌ட்டும‌ல்ல‌ நேர்மையாய் இருப்ப‌து அடிப்ப‌டை ம‌னித‌ப் ப‌ண்பு அல்லவா ?
  4. எந்த‌த் துறையில் வேலை செய்ய‌ப் போகிறீர்க‌ளோ அந்த‌க் க‌ட‌லில் மூழ்கி முத்தெடுங்க‌ள். காலையில் வ‌ந்து கொடுத்த‌ வேலையைச் செய்து விட்டுப் போவோம் என்றிருக்காதீர்க‌ள். டெஸ்டிங் துறையெனில் அதைக் குறித்து எவ்வ‌ள‌வு க‌ற்றுக் கொள்ள‌ முடியுமோ அந்த‌ அள‌வுக்குக் க‌ற்றுக் கொள்ளுங்க‌ள். டெவ‌ல‌ப்மென்ட் எனில் அதில் எந்த‌ தொழில்நுட்ப‌த்தில் வேலை செய்கிறீர்க‌ளோ அதைக் க‌ரைத்துக் குடியுங்க‌ள். இப்ப‌டி நீங்க‌ள் ப‌ணிசெய்யும் துறையில் பிஸ்தாவாக‌ உங்க‌ளை மாற்றிக் கொள்ளுங்க‌ள்.
  5. இன்ட‌ர்ப‌ர்ச‌ன‌ல் ஸ்கில்ஸ் என‌ப்ப‌டும் ம‌ற்ற‌ ந‌ப‌ர்க‌ளுட‌னான‌ உரையாட‌ல் திற‌மையை வ‌ள‌ர்த்துக் கொள்ளுங்க‌ள். பெரும்பாலான‌ ஐடி நிறுவ‌ன‌ங்க‌ளில் ப‌ல்வேறு நாடுக‌ளில், ப‌ல்வேறு நேர‌ வித்தியாச‌த்தில் வேலை செய்ப‌வ‌ர்க‌ளுட‌ன் ப‌ணி செய்ய‌ வேண்டியிருக்கும். அத‌ற்கு உங்க‌ளுடைய‌ உரையாட‌ல் திற‌ம் மிக‌ அவ‌சிய‌ம். இதை ‘விர்சுவ‌ல் ஆபீஸ்” என்பார்க‌ள். ந‌ல்ல‌ வேலையும் செய்து, திற‌மையாக‌ப் பேச‌வும் செய்ப‌வ‌ர்க‌ள் ஐடியில் ஜொலிப்பார்க‌ள்.
  6. டொமைன் திற‌மையை வ‌ள‌ர்த்துக் கொள்ளுங்க‌ள். எந்த‌ துறையில் நீங்க‌ள் வேலை செய்தாலும் வ‌ங்கி, காப்பீடு என‌ ஏதோ ஒரு த‌ள‌த்தில் தான் ப‌ணி செய்வீர்க‌ள். அந்த‌ த‌ள‌த்தைப் ப‌ற்றி நிறைய‌ க‌ற்றுக் கொள்ளுங்க‌ள். கூட‌வே அந்த‌ த‌ள‌ம் சார்ந்த‌ சான்றித‌ழ் ப‌யிற்சிக‌ள் இருந்தால் அதைப் பெற‌ முய‌லுங்க‌ள். தொழில்நுட்ப‌ம் ம‌ற்றும் த‌ள‌ம் இர‌ண்டிலும் நீங்க‌ள் வ‌ல்ல‌வ‌ராக‌ இருந்தால் ஐடியில் நீங்க‌ள் த‌விர்க்க‌ முடியாத‌ இட‌த்தில் இருப்பீர்க‌ள் என்ப‌து திண்ண‌ம்.
  7. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத் தயங்காதீர்கள். அதற்கு முக்கியத் தேவை திறமைசாலியாக இருப்பதும், புதிய‌ தொழில்நுட்ப‌ங்க‌ளைக் க‌ற்றுக் கொள்வ‌துமாகும். நிறுவ‌ன‌ம் தேவைப்ப‌டும் த‌ள‌த்தில் உங்க‌ளுடைய‌ திற‌மையை வெளிப்ப‌டுத்த‌ எப்போதும் த‌யாராய் இருங்க‌ள். கிள‌வுட் க‌ம்யூட்டிங், பிக் டேட்டா, டிஜிட‌ல் டிரான்ஸ்ஃப‌ர்மேஷ‌ன் என‌ புதிய‌ விஷ‌ய‌ங்க‌ளைக் க‌ற்றுக் கொண்டே இருங்க‌ள்.
  8. ஒரு விஷ‌ய‌த்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விட‌ எப்ப‌டி வித்தியாச‌மாய்ச் செய்வ‌து என்ப‌தில் க‌வ‌ன‌ம் செலுத்துங்க‌ள். ஒரு வேலையை குறைந்த‌ நேர‌த்தில், குறைந்த‌ செல‌வில், அதிக‌ த‌ர‌த்தில் செய்ய‌ முடியுமா என‌ உங்க‌ள் மூளையைக் க‌ச‌க்குங்க‌ள். எப்போதும் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விட‌ திற‌மையில் ஒரு ப‌டி முன்னால் நிற்கும் வேக‌ம் ம‌ன‌தில் இருக்க‌ட்டும். “ஒன் ஸ்டெப் அகெட்” என‌ இதைச் சொல்வார்க‌ள். புதிய‌ ‘இன்னோவேஷ‌ன்” ம‌ன‌ம் உங்க‌ளிட‌ம் இருந்தால் நீங்க‌ள் நிச்ச‌ய‌ம் ஐடியில் ஸ்டார் தான்.
  9. 9. ஐடி துறையில் உங்க‌ளுடைய‌ க‌வ‌ன‌த்தைச் சிதைக்கும் ப‌ல‌ வாய்ப்புக‌ள் வ‌ர‌லாம். உங்க‌ளுடைய‌ குணாதிச‌ய‌த்தைச் சீண்டிப் பார்க்கும் சிந்த‌னைக‌ள் எழ‌லாம். உங்க‌ளை தோல்வியடைய‌ச் செய்யும் அத்த‌கைய‌ ச‌ல‌ன‌ங்க‌ளை ஒதுக்கி வையுங்க‌ள். அந்த நிறுவனத்துக்கு ஓடலாமா, தனக்கு சம்பள உயர்வு கம்மியா கிடைச்சிருக்கே, என்பது போன்ற பணச் சிந்தனைகளை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். இருக்கின்ற‌ வேலையில் ப‌ரிம‌ளிக்க‌ முய‌ற்சி செய்யுங்க‌ள். அங்கீகாரங்களும், பொருளாதாரமும் தானே வ‌ந்து சேரும்.
  10. க‌டைசியாக‌ ஒன்று. வாழ்க்கைக்கும் வேலைக்குமான‌ ஒரு ச‌ம‌நிலையை உருவாக்கிக் கொள்ளுங்க‌ள். வர்க் லைஃப் பேலன்ஸ் முக்கியம். த‌ன்னைக் க‌வ‌னித்துக் கொள்வ‌து, த‌ன் குடும்ப‌த்தைக் க‌வ‌னித்துக் கொள்வ‌து, த‌ன் வேலையைக் க‌வ‌னித்துக் கொள்வ‌து எனும் வ‌ரிசையில் உங்க‌ளுடைய‌ வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்க‌ள். அலுவ‌ல‌க‌த்துக்கு வெளியே தான் உங்க‌ளுடைய‌ வாழ்க்கையின் பெரும்பாலான‌ பாக‌ம் இருக்கிற‌து எனும் உண்மை உண‌ர்ந்து செய‌ல்ப‌டுங்க‌ள்.

இந்த‌ சின்ன‌ச் சின்ன‌ விஷ‌ய‌ங்க‌ளை ம‌ன‌தில் கொண்டு செய‌ல்ப‌ட்டால் உங்க‌ளுடைய‌ ஐடி வாழ்க்கை செழிப்பாக‌வும், இனிமையாக‌வும், நிலையாக‌வும் இருக்கும் என்ப‌து நிச்ச‌ய‌ம்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s