நர்ஸ் ! எனும் ஒற்றை வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களை நாம் கொடுப்பதுண்டு. சிலருக்கு அது ஒரு வேலை. சிலருக்கு அது இலட்சியம். இன்னும் சிலருக்கு அது ஒரு பயிற்சிக் களம். மருத்துவக் கட்டிலில் படுத்திருப்பவர்களுக்கோ அவர்கள் தான் கடவுளின் வாரிசுகள். ஸ்டெதஸ்கோப் போட்ட தேவதைகளே நர்ஸ்கள் என ஒரு வெளிநாட்டுப் பழமொழி கூட உண்டு.
மருத்துவப் பணி என்பது ஒரு மகத்தான பணி என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. எல்லா இடங்களிலும் இவர்களுடைய பணி இருக்கிறது. நர்ஸ் என்றாலே மருத்துவமனை தான் நமது மனதில் வரும். உண்மையில் சுமார் 40 சதவீதம் நர்ஸ்கள் மருத்துவமனைக்கு வெளியே, பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வீடுகள், சமூக பணிகள், ஆய்வுக் கூடங்கள் போன்ற இடங்களில் தான் பணிபுரிகின்றனர்.
நர்ஸ் எனும் பணியை யோசிக்கும் போது “ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்” பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. நவீன கால மருத்துவம் அவருடைய சிந்தனையின் அடிப்படையில் தான் உருவானது. போர்களினால் பாதிக்கப்பட்டவர்களிடையே தான் அவருடைய பணி பெருமளவில் இருந்தது.
1820 க்கும் 1910க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த அவர் முழுநேர மருத்துவப் பணி செய்தது வெறும் மூன்று ஆண்டுகள் தான் என்பது வியப்பூட்டுகிறது. “எவ்வளவு காலம் பணி செய்கிறாய் என்பதல்ல, எப்படி பணி செய்கிறாய் என்பதே முக்கியம் என்பதே முக்கியம்” என்பதையே இவருடைய வாழ்க்கை சொல்கிறது. “நீ செய்யும் செயல் எவ்வளவு பெரியதென்பதல்ல முக்கியம், அதில் எவ்வளவு அன்பை நீ செலுத்துகிறாய் என்பதே முக்கியம்” என்கிறார் அன்னை தெரேசா.
வேலைகள் எல்லாமே வருமானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதற்கு தாதியர் பணி ஒரு சிறந்த உதாரணம். வெறும் சம்பளத்தை எதிர்பார்த்து இந்தப் பணியில் சேர்பவர்கள் பணியின் அர்த்தத்தை இழந்து விடுகிறார்கள். நீடிய பொறுமை, இரக்கம், சுயநலமின்மை என பல்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களே நல்ல நர்ஸாக பணிபுரிய முடியும் என்கிறார் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்.
ஒரு நல்ல நர்ஸ் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த கிறிஸ்தவர் நிச்சயம் நல்ல ஒரு செவிலியராகப் பணிபுரிய முடியும். காரணம் ஒரு நல்ல கிறிஸ்தவருடைய பண்புகள் ஒரு சிறந்த செவிலியருக்குத் தேவைப்படுகிறது !
1. செவிலியர் பரிவுகாட்டுபவர்களாக இருக்க வேண்டும். மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருப்போருக்கு அந்த நேரத்தில் தேவைப்படுவதெல்லாம் நகையோ, பணமோ, வீடோ, காரோ அல்ல. பரிவு காட்டும் இதயம் தான். “ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்” எனும் இறைவாக்கு ( கலாத் 6:2 ) நம்மிடம் எதிர்பார்ப்பது இதைத் தான்.
2. செவிலியர்கள் இதயத்தின் ஆழத்தில் இரக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். இரக்கத்தின் வேர்கள் இதயத்தில் தான் மையம் கொள்ளும். வேரற்ற இரக்கம் வெயிலில் காய்ந்து விடும். “இரக்கமுடையோர் பேறுபெற்றோர் ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” எனும் இறைவார்த்தை நினைவுக்கு வருகிறதா ?
3. மகிழ்ச்சியாய் இருக்க வேண்டியது செவிலியர்களின் பண்புகளில் ஒன்று. நோயாளிகள் ஏராளமான சோகத்தை மனதில் சுமந்து திரிபவர்கள். அவர்களுக்கு உற்சாகத்தை ஊட்டும் காரணிகளாக செவிலியர் இருக்க வேண்டும். ஒரு புன்னகை, ஒரு உற்சாகமான பார்வை, ஒரு மலர்ச்சியான முகம் இது நோயாளிக்கும் பரவி அவர்களுடைய சுமையைத் தணிக்க உதவும் என்பது உளவியல் உண்மை.
” ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்” எனும் பிலிப்பியர் 4:4 ம் வசனமும், ” மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து: வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” எனும் நீதிமொழிகள் 14:22ம் வசனமும் செவிலியருக்கு இருக்க வேண்டிய பண்புகளோடு இணைந்து பயணிக்கிறது.
4. பதட்டப்படாமல் வேகமான முடிவெடுக்கும் திறமை செவிலியர்க்கு அவசியம். நோயாளிகளோடான வாழ்க்கை ஒரு ரயில் பயணம் போல ரம்மியமானதல்ல, அது பாறைமீது காரோட்டுவது போன்றது. கவனம் சிதையாமல் இருக்க வேண்டியதும், தேவையான நேரத்தில் சரியான முடிவை வேகமாய் எடுக்க வேண்டியதும் அவசியம். அதற்கு கடவுளின் ஞானம் தேவை.
“உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்திடல் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர்” எனும் இறை வார்த்தைகள் ( யாக்கோபு 1 : 5 ) செவிலியருக்கு ஊக்கம் ஊட்டட்டும்.
5. வார்த்தைகளில் இனிமையும், எளிமையும் இருக்க வேண்டியது இன்னொரு முக்கியமான தேவை. நோயாளிகளின் துயரக் கதைகளைச் சலிக்காமல் கேட்கும் காதுகளும், அவற்றுக்கு எரிச்சல் படாமல் பொறுமையாய் பதிலளிக்கும் மனமும் செவிலியருக்குத் தேவை. ஒரு குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு எரிச்சலடையாமல் பதில் சொல்லும் அன்னையைப் போல அவர்கள் செயல்பட வேண்டும்.
” உங்கள் பேச்சு எப்பொழுதும் இனியதாயும் சுவையுடையதாயும் இருப்பதாக! ஒவ்வொருவருக்கும் தகுந்த மறுமொழி அளிக்க நீங்கள் அறிந்திருக்கவேண்டும்” எனும் கொலோசேயர் 4 : 6 , செவிலியருக்காகவே எழுதப்பட்டது போல இருக்கின்றன.
6. கடின உழைப்பு தேவை. அதை அற்பண உணர்வோடு செய்தலும் வேண்டும். அலுவலக வேலை போல காலை முதல் மாலை வரை எனும் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் செவிலியர் பணி முடிவதில்லை. அது தொடர்ச்சியான ஒரு பணி. அலுவலக எல்லைக்கு வெளியேயும் அதே மனநிலையை நீடித்துக் கொள்ளும் தேவை ஏற்படலாம். உழைக்கச் சலிக்காத இதயம் அவர்களுக்கு வேண்டும்.
“நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல: ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள்” ( கொலோ 3 :23 ) எனும் இறைவார்த்தை செவிலியருக்கு ஊக்கமளிக்கும் மருந்து.
7. தன்னலமின்றி பணி செய்ய வேண்டியது செவிலியரின் மிக முக்கியமான பண்பு. பணத்துக்காகவோ, தனது இலாபத்துக்காகவோ இந்தப் பணியைப் பயன்படுத்தும் போது மிகப்பெரிய பாவத்தை அவர்கள் செய்கின்றனர். ஏனெனில் இயலாதோரை வதைப்பவர்களை இறைவன் எதிர்க்கிறார்.” எவரும் தன்னலம் நாடக்கூடாது: மாறாகப் பிறர் நலமே நாடவேண்டும்” (1 கொரி 10:24) எனும் இறை வார்த்தைகள் செவிலியர் மனதில் எழுத வேண்டிய வார்த்தைகள்.
8. செவிலியருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான இன்னொரு குணாதிசயம் பணிவு. கிறிஸ்தவர்களுக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு இது. பணிவை விலக்கும்போது மனிதன் இறை பிரசன்னத்தை விட்டு சாத்தானில் எல்லைக்குள் நுழைந்து விடுகிறான். “முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்குங்கள்” எனும் எபேசியர் 4:2, செவிலியருக்கும் மிகப் பொருத்தமே.
9. நீடிய பொறுமை செவிலியருக்கு இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று. நோயாளிகளும், அவர்களுடைய உறவினர்களும் பதட்டத்தின் படிகளில் அமர்ந்து கொண்டு கேட்கும் கேள்விகளை பொறுமையுடன் எதிர்கொள்வதானாலும் சரி, நோயாளிகளின் உளவியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு பொறுமையுடன் கையாள்வதானாலும் சரி, பொறுமை மிக மிக அவசியம். “பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்: எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்” எனும் நீதிமொழிகள் ஒரு அறிவுறுத்தல்.
10. செபத்தில் நிலைத்திருப்பவராக இருக்க வேண்டும். இறைவனை விட்டு விட்டுச் செய்யும் செயல்கள் எல்லாம் செத்த செயல்களே. செய்கின்ற செயலை இறைவனின் அருளோடு செய்வதில் தான் கிறிஸ்தவ வாழ்க்கையின் மகத்துவமே அடங்கியிருக்கிறது. பிறருக்காக மனம் உருகி செபிப்பதும், யாரையும் காயப்படுத்தாத தினங்களுக்காக செபிப்பதும் செவிலியருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான குணமாகும்.
எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள் (பிலி 4 :6 ) என்கிறது வேதாகமம்.
ஏற்கனவே சொன்னது போல, ஒரு நல்ல நர்ஸ் கிறிஸ்தவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் ஒரு சிறந்த கிறிஸ்தவர் நிச்சயம் நல்ல ஒரு செவிலியராகப் பணிபுரிய முடியும். காரணம் ஒரு நல்ல கிறிஸ்தவருடைய பண்புகள் ஒரு சிறந்த செவிலியருக்குத் தேவைப்படுகிறது !
செவிலியர் அனைவரும் தங்கள் பணி ஒருவகையில் இறையழைத்தல் என்பது போல ஆத்மார்த்தமாய் செய்தால் மனுக்குலத்தின் மகத்துவங்களாக அவர்கள் நிலைபெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
( Thanks : Desopakari Magazine )