உயிர்த்தெழவே மரித்தவர்.
ஹாரி கௌடினி என்றொரு மனிதர் இருந்தார். 1874 ல் பிறந்த இவர், தனது வாழ்நாளில் உலகப் பிரசித்தம். “தப்பிதல்களின் தலைவன்” என்று இவரை அழைத்தார்கள். என்னை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கட்டலாம், பூட்டலாம், மாட்டி வைக்கலாம், அடைத்து வைக்கலாம் அனைத்திலும் இருந்து தப்பிப்பேன், என பொதுவில் சவால் விடுவார். இவருடைய சவாலை ஏற்றுக்கொண்டு பலரும் பல விதங்களில் இவரைப் பூட்டி வைக்க நினைத்தார்கள். முடியவில்லை. பல்லாயிரம் பேருக்கு முன்னால் வைத்தே, சவால்களை வெற்றியுடன் முடிப்பார்.
ஒரு முறை இவருக்காகவே ஸ்பெஷலாக 5 வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு புதுவகை பூட்டைக் கண்டுபிடித்து அவரைப் பூட்டியது, லண்டன் “டெய்லி மிரர்” செய்தி நிறுவனம். அதிலிருந்தும் தப்பினார். உலகமே அவரை வியந்து பார்த்தது .சங்கிலிகளால் பூட்டினால் தப்பினார்.
சவப்பெட்டியில் அடைத்து புதைத்தால் வெளியே வந்தார். பால் கேனுக்குள் திணித்துப் பூட்டினால், வெளியே வந்தார். உயர் மட்ட பாதுகாப்புடைய சிறையில் போட்டபோதும் தப்பினார் !
கடைசியாகஅக்டோபர் 31, 1926ல் மரணம் அவரைப் பூட்டியது. சாகும் முன் மனைவியிடம் சொன்னார். இதிலிருந்து தப்பிக்கும் வழி ஏதேனும் இருந்தால் நான் நிச்சயம் வருவேன். வந்து உன்னைச் சந்திப்பேன். நமது திருமண நாளில் உன்னை எப்படியும் வந்து சந்திப்பேன், காத்திரு ! என்றார். மனைவி மெழுகுதிரியும், இதயமும் உருக காத்திருந்தாள். திருமண நாள் வந்தது. ஹாரி வரவில்லை. அடுத்த வருடம் திருமண நாள் வந்தது, ஹாரி வரவில்லை. வருடங்கள் கடந்தன. பத்துவருடங்கள் சென்றபின் அவருடைய மனைவி தனது டைரியில் இப்படி எழுதினாள்.
“மரணத்திலிருந்து தப்பிக்க ஹாரியாலும் முடியாது ! ”
மரணத்திலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது, ஒரே ஒருவர் தான் தப்பித்திருக்கிறார். அவருடைய உயிர்ப்பைத் தான் ஈஸ்டர் என அழைக்கிறோம்.
ஆதிமனிதன் ஆதாமை கடவுள் தமது சாயலாகப் படைத்து தமது ஆவியை ஊதி மனிதனாக்கினார். அவனையும், ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் தங்க வைத்த இறைவன் ஒரே ஒரு கட்டளையை அவர்களுக்குக் கொடுத்தார். தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்தின் கனியை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். ஆனால் தோட்டத்தின் நடுவில் இருக்கும் ‘நன்மை தீமை அறியும்’ மரத்தின் கனியை மட்டும் சாப்பிட வேண்டாம்.
எப்போதுமே மறுக்கப்படுபவை தான் வசீகரமாய் தோன்றும். வேண்டாம் என தடுப்பது தான் மீறுதலை போதிக்கும். ஆதாம் ஏவாளும் அப்படியே செய்தார்கள். கட்டளையை மறுதலித்தார்கள், பாவத்தை அரவணைத்தார்கள். ஏதேன் அவர்களுக்கு இல்லாமல் போயிற்று. துரத்தப்பட்டார்கள்.
காலங்கள் கடந்தன. ஆதாமின் பாவம் தலைமுறைகள் தோறும் தொடர்ந்தது. தனி மனித பாவத்தைக் கழுவ பலியிடுதல் வழக்கமாய் இருந்தது. இப்போது மனுக்குலத்தை மீட்க கடவுளே பலியாய் வரவேண்டிய சூழல். காரணம், கடவுள் ஒருவரே முடிவிலி !
இயேசு மனித அவதாரமாய் வந்தார். மனிதன் பாவமற்ற வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்பதை தனது வாழ்வினால் நடத்திக் காட்டினார். மீட்புக்கான அன்பின் போதனையை நிகழ்த்தினார். பின்னர் அன்பின் உயர் நிலையை கல்வாரியில் நிறைவேற்றிக் காட்டினார்.
மரணத்தின் விளிம்பிலும், தன்னை சிலுவையில் அறைந்தவர்களை மன்னித்தார். மரணத்தின் குகைக்குள் பயணித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
அவரது உயிர்ப்பே ஈஸ்டர். உயிர்ப்பு இல்லாமல் கிறிஸ்தவம் இல்லை. ஹாரியைப் போல இயேசுவும் கல்லறைக்குள் அடங்கியிருந்தால், கிறிஸ்தவம் இன்று இல்லை. நற்செய்தி இல்லை. பாவத்தையும் மரணத்தையும், ஆண்டவர் வென்று விட்டார் என்பதற்கான ஆதாரம் இல்லை. மீட்பு இல்லை. “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்” என்கிறது பைபிள்.
மறுபடியும் முளைத்து எழாத சூரியனை யாரும் வெளிச்சத்தின் நாயகனாகப் பார்க்க முடியாது. மரணத்தோடு முற்றுப்புள்ளியாகியிருந்தால் இயேசு ஒரு மனிதனாகவே வந்து மனிதனாய் மறைந்த ஒரு தத்துவஞானியாகியிருப்பார். உயிர்ப்பு என்பது ஒரு அனுபவம். கிறிஸ்தவ அனுபவத்தில் உயிர்ப்பு என்பது பாவ வாழ்க்கையை விட்டு விட்டு புதிய வாழ்க்கைக்குள் நுழைவது.
அதாவது பழைய மனிதனை மரணிக்க வைத்து விட்டு புதிய மனிதனை உயிர்ப்பிக்க வைப்பது.
பாவம் என்பதை அறவே வெறுக்கும் ஒரு புதிய வாழ்வையே உயிர்ப்பு பிரதிபலிக்க வேண்டும். தெரியாமல் சகதியில் விழுந்து விட்டால் தன்னைத் தானே நக்கி நக்கி தூய்மைப்படுத்தும் பூனையைப் போல பாவத்தை கழுவ நம்மிடம் துடிப்பு இருக்க வேண்டும். சகதியில் விழுந்து விட்டால் சுகம் என்று அதிலேயே புரளும் பன்றிகளைப் போன்ற பழைய வாழ்க்கை அழிய வேண்டும்.
உலையில் இட்ட ஆமை முதலில் தண்ணீரில் நீந்தி விளையாடும். வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரிக்க அதிகரிக்க அதன் உற்சாகம் அதிகமாகும். பின்னர் தண்ணீ கொதி நிலைக்குப் போகும் போது தான் தப்பிக்கவே முடியாது எனும் உண்மை அதற்கு உறைக்கும். ஆனால் அதன் பின் சாவைத் தவிர எதுவும் அதற்கு இல்லை. பாவமும் அப்படியே. முதலில் சுகமாய் தோன்றும். பின்னர் அதிலேயே திளைக்கத் தோன்றும். தப்பிக்காவிட்டால் பாவத்தில் மூழ்கி ஆன்மா மரணமடையும்.
இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தில் பங்குகொள்ள வேண்டுமெனில் மூன்று விஷயங்கள் நமக்குத் தேவை.
1. முதலாவது தேவை சிலுவையை சுமத்தல் !
சிலுவையைச் சுமக்காமல் இயேசுவின் வழியில் நடக்க முடியாது. இயேசுவின் வழியில் நடக்காமல் இயேசுவின் உயிர்ப்பைச் சந்திக்க முடியாது. சிலுவை என்பது நமது உடல் சார்ந்த சிக்கல்கள் அல்ல. அது நமது பாவம் சார்ந்தது. நமது உலக ஆசைகளை வெறுப்பதே உண்மையான சிலுவை சுமத்தல். “தன்னலம் துறந்தால்” மட்டுமே அதைச் சுமக்க முடியும்.
கண்கள் நம்மை பாவத்தில் விழத் தூண்டினால், பிடுங்கி எறிய வேண்டும். கைகள் பாவத்தைச் செய்யத் தூண்டினால் வெட்டி விட வேண்டும் என்கிறார் இயேசு. அது தான் நாம் தினமும் சுமக்க வேண்டிய சிலுவை. அதுவே தன்னை வெறுத்து, தன் சிலுவையை சுமக்கும் நிலமை.
ஆசைகள் அலைக்கழிக்கையில் மனக் கட்டுப்பாடு எனும் சிலுவையைச் சுமக்க வேண்டும். கோபம் நமது மூக்கில் ஏறி அமர்கையில் கோபம் தாண்டும் சிலுவை சுமக்க வேண்டும். இப்படி, இயேசு வெறுத்த அத்தனை விஷயங்களையும் நாமும் வெறுத்து, அதனால் வரும் இடர்கள் எனும் சிலுவையை “நாள்தோறும்” சுமக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
2. இரண்டாவது தேவை சிலுவையில் அறையப்படுதல்
கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்படுதல் என்பது பழைய வாழ்க்கையைச் சிலுவையில் அறைந்து விட்டு புதுப் பிறப்பு எடுப்பது. பழைய மனிதனைக் களைந்துவிட்டு புதிய மனிதனை அணிந்து கொள்ளச் சொல்லும் இறை வார்த்தை அது ! ஆதாமின் வாழ்க்கை பாவத்தின் முள்கிரீடத்தை தலைமுறை தலைமுறையாய் நமது தலையில் சூட்டுகிறது. அந்தப் பாவத்தின் சாபத்தை இயேசுவின் சிலுவை அழிக்கிறது. நமது பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டுவிட்டான். இனிமேல் புது மனிதனாய் நாம் வாழவேண்டும் என்பதே பைபிள் சொல்லும் வாழ்க்கை.
3. மூன்றாவது தேவை இயேசுவோடு உயிர்த்தல்.
சிலுவையில் அறையப்பட்டு அப்படியே இறந்து போய்விடுவதில் அர்த்தமில்லை. பழைய பாவங்களை அழித்து விட்டு நமது வாழ்க்கையை அதைவிடப் புதிய பாவங்களுக்குள் நுழைப்பது என்பது மீண்டும் நாம் புதைத்த மனிதனைத் தோண்டி எடுத்து அணிந்து கொள்வது போல.
பேயை விரட்டிவிட்டால் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அதைவிடக் கொடிய ஏழு பேய்கள் வந்து தங்கி வீட்டை சல்லடையாக்கிவிடும். எனவே தான் சிலுவையில் அறையப்பட்டபின் அவரோடு உயிர்த்தெழுதலும் அவசியமாகிறது ! பாவங்கள் அகற்றப்பட்ட இதயத்தை இறைவனின் வார்த்தைகளாலும் வாழ்க்கையாலும் நிரப்ப வேண்டும். அதுவே இயேசுவோடு உயிர்த்தலின் அடையாளம்.
உயிர்த்த இயேசுவின் அனுபவத்தில் இணைவது என்பதும், இயேசுவுக்காய் வாழ்வோம் என்பதும் துறவற வாழ்க்கையல்ல. வாழும் இடத்தில், பணி செய்யும் இடத்தில் இயேசுவின் அன்பைப் பிரதிபலிப்பதே. நமது வெளிப்படையான வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும், மறைவான வாழ்விலும் எப்போதும் இயேசுவைப் போல வாழ்வதே ! .
அனைவருக்கும் உயிர்த்த இயேசுவின் பெயரால் நல்வாழ்த்துகள்.
ஃ