தாகமாயிருக்கிறேன்
மனிதனின் அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, உறைவிடம் எனும் மூன்று விஷயங்களைச் சொல்வார்கள். அவற்றில் மிக முக்கியமானது தண்ணீர் தான். உணவு இல்லாமல் ஒரு மனிதன் மூன்று வாரங்கள் தாண்டியும் வாழ முடியும், ஆனால் தண்ணீர் இல்லாமல் ஒரு வாரத்துக்கு மேல் வாழ முடியாது. உடலில் தண்ணீரின் அளவு குறையக் குறைய அவன் மரணத்தை நோக்கிச் செல்கிறான் என்கிறது மருத்துவம்.
நாகரீகத்தின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் எல்லாமே நதிக்கரையில் தான் உருவாகியிருக்கின்றன. காரணம் தண்ணீரின் தவிர்க்க முடியாத தேவை. தண்ணீர் இல்லாவிட்டால் விவசாயம், கால்நடை வளர்ப்பு என எதுவுமே செய்ய முடியாத சூழல் உருவாகும். எனவே தான் ஆதிமனிதன் நதிக்கரைகளில் தங்கி நாகரீக வாழ்வுக்குள் நுழைந்தான்.
அந்த அடிப்படை தேவையான தண்ணீர், இன்றைக்கு எல்லாருக்கும் கிடைக்கிறதா ? உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் சொல்லும் விஷயங்கள் பதற வைக்கின்றன.
சுகாதாரமான தண்ணீர் கிடைக்காமல் ஒவ்வொரு இருபத்து ஓரு வினாடிக்கு ஒரு முறையும் ஒரு குழந்தை இறந்து போகிறது. அதாவது இந்தக் கட்டுரையை நாம் படித்து முடிக்கும் நேரத்தில் சில குழந்தைகள் டயாரியா, காலரா உட்பட ஏதோ ஒரு தண்ணீர் சார்ந்த நோயினால் இறந்து விட்டிருப்பார்கள் எனும் புள்ளி விவரம் அதிர்ச்சியடைய வைக்கிறது அல்லவா ?
சராசரியாக ஒரு இலட்சத்து எண்பதாயிரம் பேர் ஆண்டு தோறும் நல்ல தண்ணீர் இல்லாததால் இறந்து போகின்றனர். சுமார் எண்பத்தைந்து கோடி மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைப்பதேயில்லை என்கிறது உலகளாவிய ஆய்வு. இன்னொரு ஆய்வு உலக அளவில் பெண்கள் ஒரு நாளைக்கு இருபது கோடி மணி நேரத்தை தண்ணீர் எடுப்பதற்காகச் செலவிடுகிறார்கள் என்கிறது !
“தண்ணீர் மன அழுத்தம்” அதாவது “வாட்டர் ஸ்ட்ரெஸ்” என்பது இன்றைக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய சிக்கலாக உருவாகியிருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாட்டினாலும், குறைபாட்டினாலும் மனிதனுக்கு உருவாகின்ற மன அழுத்தத்தையே வாட்டர் ஸ்ட்ரஸ் என்கிறார்கள்.
பூமியில் தண்ணீர் மிக அதிக அளவில் இருப்பதாகத் தோன்றினாலும் உண்மையில் மூன்று சதவீதம் தண்ணீர் மட்டுமே குடிப்பதற்குப் பயன்படுகிறது. மற்ற தண்ணீர் எல்லாம் குடிக்க முடியாத தண்ணீர். அதனால் தான் இருக்கும் தண்ணீரை சிக்கனமாய்ப் பயன்படுத்துவதும், கிடைக்கும் தண்ணீரைச் சேமிப்பதும் சமூகத்திற்கான நமது பங்களிப்பாகிறது.
தண்ணீர் மனிதனுடைய வாழ்வோடு இப்படி பின்னிப் பிணைந்திருப்பதால் தான் கடவுளின் வார்த்தையிலும் தண்ணீர் அடிக்கடிப் பயன்படுகிறது. வேதாகமத்தில் தண்ணீர் பல்வேறு குறியீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
“மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன: அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவனுக்கு விதையையும் உண்பவனுக்கு உணவையும் கொடுக்காமல், அங்குத் திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே, என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும்.” என ஏசாயா இறைவனின் வார்த்தையைத் தண்ணீரோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். வயலின் விளைச்சலுக்கு மழையும், மனதின் விளைச்சலுக்கு இறைவனின் வார்த்தையும் நமக்குத் தேவையாகிறது.
“அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார்” எனும் ஓசியாவின் வார்த்தை, கடவுளையே தண்ணீரோடு ஒப்பிட்டுப் பேசுகிறது.
ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தை தண்ணீரை நியாயத்தோடும் நீதியோடும் ஒப்பிட்டுப் பேசுகிறது ! “நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக்கடவது”. என்கிறது அவர் வாக்கு. எப்படி தண்ணீரின் பற்றாக்குறை மனித வாழ்க்கையை செயலற்றதாக்குகிறதோ, அதே போல நீதியும் நியாயமும் அற்ற வாழ்க்கை அவனது ஆன்மீக வாழ்க்கையை செயலற்றதாக்குகிறது என்பதையே ஆமோஸ் தீர்க்கத்தரிசியின் வார்த்தை நமக்குச் சொல்கிறது.
இறைவனுடைய வார்த்தை நீதியாகவும், நியாயமாகவும், ஞானமாகவும், விளைச்சலுக்குரியதாகவும் இருப்பதால் அதைத் தினமும் வாசிப்பது நம்மைத் தூய்மைப்படுத்துவதற்கு அவசியம்.
நோவாவின் காலத்தில் தண்ணீர் அழிவுக்கான வேலையைச் செய்தது. அதாவது பாவம் நிறைந்த மனிதர்களை அழிப்பதற்குத் தண்ணீர் காரணியாய் இருந்தது. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தண்ணீர் திருமுழுக்கின் வழியாய் நமது பழைய மனிதனை அழித்து நம்மை புதிதாக்குகிறது. தண்ணீர் பழைய வாழ்க்கைக்கும் புதிய வாழ்க்கைக்கும் இடையே ஒரு கோடு கிழிக்கிறது !
தண்ணீருக்குள்ளே நடந்து இஸ்ரயேல் மக்கள் விடுதலை பெற்றது போல, தண்ணீருக்குள் புகுந்து நமது வாழ்க்கை புதுப் பிறப்பாகிறது எனலாம்.
இயேசுவின் முதல் புதுமையும் தண்ணீரோடு தானே ஆரம்பிக்கிறது. கலங்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் திராட்சை இரசமாய் புதுப்பிறப்பெடுத்து மக்களுடைய தேவையை நிறைவேற்றுகிறது.
நள்ளிரவில் படகில் பயணித்த சீடர்களை நோக்கிய பயணத்தில் இயேசுவின் பாதங்களுக்குக் கீழே தண்ணீர் பவ்யமாய்ப் படுத்திருந்தது. கொந்தளித்து ஆவேசமாய் சூறைக்காற்றுடன் சுழன்றடித்தபோது இயேசுவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நாய்க்குட்டியாய் வாலாட்டிப் படுத்தது. தண்ணீர் இயேசுவின் புதுமைகளோடு தொடர்ந்து பயணிக்கிறது !
தண்ணீர் பணிவின் அடையாளமாகவும் இருக்கிறது. எலிசாவைப் பற்றிய அறிமுகம், அவர் எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் ஊற்றுபவராய்ச் சொல்கிறது. எலிசாவின் தாழ்மையை அது வெளிப்படுத்துகிறது. இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவிய நிகழ்வில் தாழ்மை தனது உச்சபட்ச காட்சியை அரங்கேற்றுகிறது !
யோர்தான் நதியில் ஏழுமுறை மூழ்கி நாகமான் தனது தொழுநோயை விலக்கியதும், தூதர்கள் கலக்கும் குளத்தில் இறங்கி நோயாளிகள் சுகம் பெறுவார்கள் என்பதும் தண்ணீரை நோய் தீர்க்கும் காரணிகளாகக் காட்டுகின்றன உதாரணங்கள் !
மிக முக்கியமாக தூய ஆவியானவர் வாழ்வளிக்கும் நீரூற்றாக வேதாகமத்தில் காட்சியளிக்கிறார். “யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும். மறைநூல் கூறுவது போல் அவருடைய உள்ளத்திலிருந்து வாழ்வு தரும் தண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடும் ” ( யோவான் : 7 :37 )எனும் வார்த்தை தூய ஆவியானவரால் நமக்குக் கிடைக்கப்போகும் செழிப்பான வாழ்க்கையைப் பேசுகிறது.
“நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது” ( ஆதி 1 :20 ) எனும் இறைவார்த்தை உயிர்களின் பிறப்பைப் பேசுகிறது. “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது”( யோவான் 3 :5) எனும் இறைவார்த்தை இறைவனில் புதிதாகப் பிறக்கும் ஆன்ம பிறப்பைப் பற்றிப் பேசுகிறது. இப்படி உடலின் பிறப்பையும், ஆன்மாவின் பிறப்பையும் தண்ணீர் குறித்து நிற்பது வியப்பூட்டுகிறது.
“நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்( யோ 4 :14 )எனும் இயேசுவின் வார்த்தை நிலைவாழ்வையும், தண்ணீரையும் இணைத்து ஒரு புதிய அர்த்தத்தையே நமக்குப் புரிய வைக்கிறது.
வேதாகமத்தின் ஆரம்பம் தண்ணீரைப் பேசுகிறது. “நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது” ( ஆதி 1:2). அதன் முடிவும் தண்ணீரைப் பற்றிப் பேசுகிறது. “தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்: விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும்” ( வெளி 22:17). வேதாகமத்தின் துவக்கமாகவும், முடிவாகவும், வேதாகமும் முழுவதும் பயணிக்கும் விஷயமாகவும் இருக்கும் தண்ணீர் மூலமாக கடவுள் சொல்ல வருவது என்ன ?
தண்ணீர் இவ் உலக வாழ்க்கைக்கு அடிப்படையானது ! அதைச் சரியான வகையில் பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். அதை வீணாக்காமலும், மாசுபடுத்தாமலும் இருப்போம் !
அதே போல, இறைவனின் வார்த்தை மறு உலக வாழ்க்கைக்கு அடிப்படையானது ! அதை முழுமையாக உட்கொள்ள வேண்டும். சரியான முறையில் பயன்படுத்துவதும், மாசுபடாமல் செயல்படுத்துவதும் அவசியம்.
தாகமாயிருக்கிறேன் என்றார் இயேசு ! அவருடைய தாகமெல்லாம், இறைவார்த்தையைப் பருகி நாம் நமது தாகத்தைத் தணிக்க வேண்டும் என்பதே !
ஃ
சேவியர்
You must be logged in to post a comment.