‘எலக்ஷன்ல நம்ம ஆளு ஜெயிச்சுடணும்’ எனும் பேச்சு இப்போது சகஜமாகி விட்டது. தன் சாதியைச் சேர்ந்த, தன் இனத்தைச் சேர்ந்த, தன் இடத்தைச் சேர்ந்த, தன் விருப்பத்தையொத்த ஒருவரைத் தலைவராக்கிப் பார்க்க வேண்டும் என மக்கள் துடிக்கின்றனர்.
என்சினீயரிங் போறியா, எம்.பி.பி.எஸ் போறியா என்பதைப் போன்ற ஒரு தொனியிலேயே ‘பாஸ்டர் ஆகப் போறியா ?’ என்று கேட்கும் காலம் உருவாகிவிட்டது. உண்மையில் தலைமைப்பணி என்பது வேலையா ? நாம் செய்யும் அர்ப்பணமா ? நாம் உருவாக்கிக் கொள்ளும் அதிகார வளையமா ?
எதுவுமே இல்லை. உண்மையில் தலைமைப் பண்பு என்பது கடவுளின் அழைத்தலுக்குச் செவிமடுப்பது மட்டுமே. ஒருவேளை அந்த அழைத்தல் இல்லையென்றால் நாமாக அந்த பணிக்குள் நுழையாமல் இருப்பதே நலம். தலைமைப்பணி குறித்த சகோதரர் சகரியா பூனனின் “ஒரு ஆன்மீக தலைமை” நூல் சிறப்பானது. தலைமைப் பண்பைப் பற்றிய ஆன்மீக விளக்கத்துக்கு ஒரு நூலைப் பரிந்துரை செய்யச் சொன்னால் அதையே நான் பரிந்துரை செய்வேன்.
“உங்களில் தலைவராய் இருக்க விரும்புபவர் எல்லோருக்கும் பணியாளனாய் இருக்கட்டும்” என்பதே தலைவருடைய முதல் இலக்கணமாய் இயேசு சொல்லும் செய்தி. இயேசு தலைசிறந்த தலைவர், அவர் தான் சீடர்களின் பாதங்களை ஆர்வமாய்க் கழுவினார். அவர் தான் தன்னை இகழ்ந்து பேசி, அடித்து, ஆணியில் தொங்க விட்டவர்களுக்காய் தந்தையிடம் மன்னிப்பை யாசித்தார்.
“பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” எனும் பேதுருவின் வார்த்தை தலைவர் ஏன் தாழ்மையுள்ளவராய் இருக்க வேண்டும் என்பதைச் சொல்கிறது.
வேலைக்கும், அழைப்புக்கும் வேறுபாடு உண்டு. ஒரு ஆயா குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கும், தாய் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. சம்பளம் குறைந்தாலே ஆயா வேறு வீடு போய்விடுவார். அன்னை அப்படியல்ல, அனாதை இல்லத்தில் போனால் கூட தனது பிள்ளையை நேசிப்பாள். அழைத்தல் என்பது முதல் தேவை. “தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை” என்கிறது எபிரேயர் 5:4
தலைவர் என்பவர் கடவுளை நேரடியாக அனுபவித்தவராய் இருக்க வேண்டும். இறைவனோடான தனிப்பட்ட உறவே ஒரு மனிதரை ஆன்மீகத் தலைவர் ஆக்க முடியும். நெருப்பில் கடவுளின் குரல் ஒலித்த பிறகே மோசே பணிவாழ்வில் நுழைகிறார். கடவுள் எதையெல்லாம் சொல்கிறாரோ அதையெல்லாம் செய்யும் துணிச்சல் ஒரு தலைவருக்கு மிக முக்கியம். இறைவாக்கினர்கள், மோசே, ஆபிரகாம், தானியேல் போன்ற ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் அதைத்தானே பார்க்கிறோம்.
வார்த்தையை வாசிக்க அறிவு போதும், வார்த்தையானவரோடு வசிக்க நமக்கு தூய்மையான வாழ்க்கை வேண்டும். தூய்மையான வாழ்க்கை மட்டுமே இறைவனின் குரலை நமக்குள் ஒலிக்கச் செய்யும். பைபிளைப் படித்து அல்லது இணைய தளங்களில் துழாவி ஒரு அட்டகாசமான செய்தியைக் கொடுத்து விட முடியும். ஆனால் எவ்வளவு தூரம் கடவுள் நம்மோடு பேசியிருக்கிறார் என்பதை வைத்தே ஒரு செய்தி உயிர் பெற முடியும். மண்ணால் மனிதனைச் செய்வது எளிது, உயிர் மூச்சை ஊத இறைவனால் மட்டுமே முடியும்.
பைபிள் அறிவு ஒருவனைத் தலைவனாக்க முடியுமெனில் சாத்தான் தான் இன்றைய மிகப்பெரிய தலைவனாய் இருக்க முடியும். அவன் தானே இயேசுவுக்கே பைபிள் வார்த்தைகளைச் சொல்லிக் காட்டி ஆசையைத் தூண்டியவன் !
கடவுள் பைபிள் வார்த்தைகள் மூலமாக மட்டும் பேசுவதில்லை. நமது இதயத்தின் ஆழத்தில் அவருடைய குரல் மெல்லியதாய் ஒலிக்கும். அதைக் கேட்கும் காதுகள் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டியது அவசியம். “மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள்” என்பது கடவுளுக்காய் சாப்பாடு தயாரிப்பதை விட முக்கியம் கடவுள் போடும் சாப்பாடைச் சாப்பிடுவது என்பதைக் கற்றுத் தருகிறது.
கடவுளுடைய குரலைக் கேட்காதபோது மனிதருடைய தேவைக்காகப் பேசும் மனிதர்களாக நாம் மாறிப் போகும் ஆபத்து உண்டு. “இஸ்ரயேலர்களை சபிக்கவேண்டும்” எனும் அரச கட்டளையை மீறி அவர்களை வாழ்த்திய பிலயாம் இறைவனுடைய குரலுக்குச் செவிமடுத்தவர். அவருக்கு அரசனைப் பற்றிய பயமோ, உயிர்ப் பயமோ, செல்வ ஆசையோ இருக்கவில்லை.
கடவுளுடைய குரலைக் கேட்கவேண்டுமெனில் முதலில் ஒரு குழந்தையின் மனநிலை தேவை. ஏனென்றால் “மறை உண்மைகளை ஞானிகளுக்கு மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்துவதே” இறைவனின் நோக்கம். ஞானிகள் தாங்கள் கற்றுக் கொண்ட அறிவோடு கடவுளை அணுகுகின்றனர், குழந்தைகள் கிடைப்பதைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தோடு கடவுளை அணுகுகின்றனர்.
ஒரு ஆன்மீகத் தலைவர் கடவுள் மீதான பயம் கொண்டவராய் இருக்க வேண்டும். காரணம் கடவுள் கணக்கு கேட்கும் போது தலைவர்களிடம் மிகவும் கடுமையாய் நடந்து கொள்வார் என்பதையே பைபிள் நமக்குச் சொல்கிறது.
கடவுளிடம் கொள்ளும் பயமே ஞானத்தின் ஆரம்பம். ஞானம் ஒரு தலைவரை நல்ல வழிகாட்டியாய் மாற்றுகிறது. மோசே ஒரு சிறந்த வழிகாட்டியாய் இருந்தார். ஆனால் கடவுளின் ஒரே ஒரு கட்டளையை மீறினார். கடவுள் பாறையிடம் பேசச் சொன்னார், மோசே அதை அடித்தார். ‘முன்னமே அடிக்கத் தானே செய்தேன்’ என்பதே அவருடைய சிந்தனை. அந்த சின்ன மீறுதல் அவருக்கு மிகப்பெரிய தண்டனையைக் கொண்டு வந்தது. வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவரால் நுழைய முடியவில்லை.
கடவுளிடம் பயம் கொண்டால் வேறு எதற்கும் பயப்படத் தேவையில்லை என்கிறது ஏசாயா. அனைத்து அதிகாரங்களையும் கையில் கொண்டிருக்கும் இறைவனைப் பற்றிக் கொண்டால், பிற பயங்கள் வருவதில்லை. எந்த பயம் வந்தாலும் இந்த சூழலை இறைவன் சரிசெய்வார், சாத்தானை அவர் சிலுவையில் வென்று விட்டார், உலகத்தில் இருப்பவரை விட உங்களுள் இருப்பவர் பெரியவர் எனும் சிந்தனைகள் இருந்தால் போதும். தேவையற்ற பயங்கள் விலகிவிடும். கடவுளில் கொள்ளும் பயத்தைத் தவிர, மற்ற பயங்களை விலக்குவது இறை நம்பிக்கையின் அடையாளம், நல்ல தலைவருக்கு மிக அவசியம்.
காரணம் ஒரு தலைவர் நல்லவராய் இருந்தால் சபை நல்லதாய் இருக்கும். ஒரு தலைவர் கெட்டவராய் இருந்தால் சபையும் கெட்டதாய் மாறிவிடும். இஸ்ரயேல் மன்னர்கள் எப்போதெல்லாம் நல்லவர்களாய் இருந்தார்களோ அப்போதெல்லாம் நாடு சுபிட்சமாக இருந்தது, எப்போதெல்லாம் வழிவிலகினார்களோ அப்போதெல்லாம் அவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் அழிவே வந்தது என்கிறது பைபிள்.
நல்ல தலைவர் என்பவர் தனது மந்தையை செழிப்பான பகுதியை நோக்கி நடத்திச் செல்வார். அது இடுக்கமான பாதையாகவே இருக்கும். ஊசியின் காதைப் போல ஒடுக்கமாய் இருக்கும். ஒரு தலைவரின் வெற்றி என்பது “எண்ணிக்கை”யில் இல்லை. அப்படிப் பார்த்தால் இயேசுவே படுதோல்வியடைந்த தலைவராய் இருப்பார். அவருடைய வாழ்நாளில் அவரால் 11 அப்போஸ்தலர்களையே உருவாக்க முடிந்தது.
நல்ல தலைவர் என்பவர் நாடுகளையோ, கண்டங்களையோ சகட்டு மேனிக்கு சுற்றி வருபவராக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இயேசு தனது வாழ்நாளில் இருநூறு கிலோமீட்டர்கள் சுற்றளவைத் தாண்டிப் பயணித்திருக்கவில்லை என்கிறது கிறிஸ்தவ வரலாறு. வெற்றி என்பது எவ்வளவு பேரை கூட்டிச் சேர்க்கிறோம், எத்தனை தூரம் பயணம் செய்கிறோம் என்பதில் இல்லை. எப்படிப்பட்ட மனிதர்களை உருவாக்குகிறோம் என்பதே முக்கியம்.
உலகத் தலைவர்களுக்கும் ஆன்மீகத் தலைவர்களுக்கும் முக்கியமான ஒரு வேறுபாடு உண்டு. உலகத் தலைவர்கள் மாவீரர்களாக இருந்திருக்கிறார்கள். நெப்போலியன், அலக்சாண்டர், பார்வோன், ஹிட்லர் என உலகத் தலைவர்கள் எல்லோருமே உடல் வலிமையிலோ, சுய நம்பிக்கையிலோ வலுவாக இருந்தவர்களே.
ஆன்மீகத் தலைவர்களின் முக்கியத் தேவையே உடைபடுதல் தான். தான் எனும் சுயம், தன்னால் முடியும் எனும் தன்னம்பிக்கை, தான் நல்ல தலைவர் எனும் சுய அங்கீகாரம் என அத்தனையும் உடைபடும் இடத்தில் தான் ஒரு தலைவர் முளைத்தெழுகிறார். “தான்” முழுமையாக வெளியே ஊற்றப்பட்டால் தான் அங்கே ‘இறைவன்” ஊற்றப்பட முடியும். பலவீனத்தில் தான் இறைவனின் பலம் புகுந்து செல்லும், நாம் பூச்சியமாகும் போது தான் இறைவனின் படையில் இணைய முடியும். எந்த ஒரு மெல்லிய ஆயுதமும் வீழ்த்தி விடக் கூடிய வலிமை தானே அன்னை தெரசாவுக்கு இருந்தது !!!
சபைக்குத் தலைவராக இருப்பவர் இறைவன் எனும் திராட்சைக் கொடியில் அங்கமாய் இருக்க வேண்டியதும், அந்தக் கொடியில் தனக்கு இடப்பட்ட பணியை மட்டும் செய்ய வேண்டியதும் மிக முக்கியமானது.
தன்னுடைய அழைப்பு ‘கை’ எனில், கைக்குரிய வேலைகளை முழுமையாய்ச் செய்வதும், பிற உறுப்புகளின் பணிகளை விமர்சிக்காமல் இருப்பதும் அவசியம். உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட பணியை கடவுள் கொடுக்கிறார். அந்தந்த பணிகளின் அங்கீகாரமும், நிராகரிப்பும் கடவுளிடமிருந்தே வரும். தனக்குரிய பணியில் நிலைத்திருப்பதே அவசியம்.
தனது சபை மக்களின் முழுமையான பொறுப்பும் தலைவரிடம் உண்டு. ஒரு ஆடு காணாமல் போனால் கூட தேடிப்போகும் தவிப்பு மேய்ப்பனுக்கு இருக்க வேண்டும். வழிவிலகிப் போனால் அவர்களுக்காய் செபிப்பதும், அவர்களுக்கு வழிகாட்டுவதும் தலைவர்களின் இயல்பாய் இருக்க வேண்டும்.
தலைவர்கள் ஆன்மீகத் தந்தை போன்றவர்கள். குழந்தைகள் தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு வாழ்வதை விட, அவர்களுடைய வாழ்க்கையைப் பார்த்தே வாழும். ஆன்மீகத் தலைவர்கள் தங்களுடைய வாழ்க்கையை முழுமையான தூய்மைக்குள் நடத்த வேண்டிய அவசியம் இதனால் எழுகிறது.
“நான் சொல்வதைக் கேளுங்கள்” என்பது பழைய ஏற்பாட்டு பாணி, “என்னைப் பின்செல்” என்பதே புதிய ஏற்பாட்டு அழைப்பு. நமது வாழ்க்கை “என்னைப் பின்செல்” என நாம் நமது மந்தையை அழைக்கும்படி இருக்க வேண்டும்.
தலைவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும், இயேசுவின் வாழ்க்கையோடும் அவரது செயலோடும் ஒப்பிட்டுச் செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இல்லையேல் நாம் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போல வெளியே மட்டுமே அழகாய் இருப்போம். பாத்திரத்தை வெளிப்பக்கமாய்க் கழுவுவதில் எந்த பயனும் இல்லை என்பது தானே இயேசுவின் போதனை.
தலைவர்கள் தங்களுடைய வளர்ச்சி, சபையின் வளர்ச்சி அனைத்தின் மகிமையையும் ஆண்டவருக்கே வழங்கும் பணிவுடையவர்களாக இருக்க வேண்டும். “கடவுள் கொடுத்தார், கடவுள் எடுத்துக் கொண்டார், அவருக்கே மகிமை” எனும் மனநிலை இருந்தால் சபையை கடவுள் கட்டியெழுப்புவார் என்பதில் சந்தேகம் இல்லை.
கடைசியாக ஒரு தலைவர் என்பவர் தனது சபையின் பாரம்பரியங்கள், அடையாளங்கள், வழக்கங்கள், பழக்கங்கள் போன்றவற்றை கண்மூடித் தனமாக நம்பாமல் அவற்றை இறைவார்த்தையின் வெளிச்சத்தில் விளங்கிக் கொண்டு சபையை நடத்துபவராக இருக்க வேண்டும்.
“என் தாத்தா பனையேறினார், நானும் பனையேறித் தான் தீருவேன்” என யாரும் சொல்வதில்லை. ஆனால் “என் தாத்தா காலத்துல இருந்தே இந்த கோயில்ல இது தான் வழக்கம்.. மாத்த முடியாது” என கொடிபிடிப்பவர்கள் ஏராளம் உண்டு. “போ அப்பாலே சாத்தானே” என தவறானவைகளுக்கு எதிர்த்து நிற்கும் குணமும், தெளிவும் தலைவருக்கு இருக்க வேண்டும். தந்தையின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டால் சாட்டை சுழற்றும் திடமும் தலைவருக்கு இருக்க வேண்டும். “கொஞ்சம் அட்ஜஸ்ட்” பண்ணினால் பெயரும், பணமும், புகழும் கிடைக்கலாம். ஆனால் மீட்பை இழக்க வேண்டிய நிலை வரும்.
தலைமைப் பணி என்பது எளிதானதல்ல
இறைவனில் சரணடைந்தால் எதுவும் கடினமானதல்ல.
ஃ
சேவியர்