பைபிள் மாந்தர்கள் 2 (தினத்தந்தி) : ஆதித்தாய் ! ஏவாள்.

adam

ஏதேன் தோட்டம் கண்ணுக்கு வசீகரமாய் பழமரங்களுடன் இருக்கிறது. தோட்டத்தில் உலவிக் கொண்டிருக்கின்றனர் ஆதாமும், அவனுடைய துணைவியும். அவளுக்கு ஆதாம் இட்ட பெயர் ஏவாள். ஏவாள் என்றால் அனைவருக்கும் அன்னை என்பது பொருள். அவள் தான் உலகின் முதல் பெண்.

அந்தத் தோட்டத்தின் நடுவே இரண்டு அழகிய மரங்கள். ஒன்று நன்மை தீமை அறியும் மரம். இன்னொன்று வாழ்வுக்கான மரம். நன்மை தீமை அறியும் மரத்தின் கனியே விலக்கப்பட்ட கனி. அதைத் தான் சாப்பிட வேண்டாம் என கடவுள் எச்சரிக்கை செய்திருந்தார்.

தோட்டத்தில் அவர்கள் உலவிக் கொண்டிருக்கையில் பாம்பு அவர்களை எதிர்கொண்டது. அப்போது பாம்பு இன்றைய பாம்பைப் போல தரையில் ஊர்ந்து திரியவில்லை. அது எப்படி இருந்தது என்பதும் நமது கற்பனைக்கே விடப்பட்டிருக்கிறது.

“நீங்கள் தோட்டத்திலிருக்கும் எல்லா மரங்களிலிருந்தும் பழங்களை உண்ணக் கூடாதென்று கடவுள் சொன்னாராமே ? உண்மையா ? “ சூழ்ச்சியின் வலையை விரித்தது பாம்பு !

“அப்படியெல்லாம் இல்லை, ஒரே ஒரு மரத்தின் கனி மட்டும் தான் விலக்கப்பட்டிருக்கிறது. அந்த கனியை உண்ணக் கூடாது. ஏன் ?  தொடவும் கூடாது. சாப்பிட்டால் செத்துவிடுவோம் என்பதே  கடவுளின் எச்சரிக்கை” ஏவாள் சொன்னாள்.

“அட.. அப்படியெல்லாம் இல்லை. அதைச் சாப்பிட்டால் நீங்கள் கடவுளைப் போல ஆவீர்கள்” சூழ்ச்சிக்கார பாம்பு அவளை ஏமாற்றியது !

ஏவாள் ஏமாந்தாள். தொடக் கூடாது என கடவுள் சொன்ன கனியைத் தொட்டாள். பறித்தாள். உண்டாள்.

முதல் பொய் – சாத்தான் பாம்பின் வடிவில் வந்து சொன்னான் ! முதல் மனித மீறுதலும், பாவமும் அங்கே நடந்தது.

அந்த நிகழ்ச்சி நடந்தபோது ஆதாம் அருகிலேயே இருந்தான். பாம்பு சொல்வதை அவனும் கேட்டிருப்பான். ஆனால் ஏவாள் தவறிழைக்கையில் அவன் தடுக்கவில்லை. கடவுள் கட்டளையை ஏவாளிடம் கொடுக்கவில்லை, ஆதாமிடம் மட்டுமே சொன்னார். அதை ஏவாளுக்குச் சொன்னதே ஆதாம் தான். ஆனாலும், அந்த கட்டளையை ஏவாள் மீறியபோது அவன் தடுக்கவில்லை.

அந்தப் பாவத்தில் பங்கு கொண்டான். பழத்தைத் தின்றான்.

அதுவரை ஆடையில்லாமல் இருந்தவர்கள் அதுவரை வெட்கப்படவில்லை. பாவம் அவர்களுடைய புனிதமான நிர்வாணத்தை அவமானத்தின் சின்னமாய் தோன்றச் செய்கிறது. அத்தி இலைகளைத் தைத்து ஆடைகளைச் செய்தார்கள்.

ஏவாள் பழத்தைத் தின்றதால் பாவம் செய்தாள். ஆனால், ஏவாளைத் தடுக்காத பாவத்தை ஆதாம் செய்தான். சாத்தான் தந்திரசாலி. உலகின் சிற்றின்பங்களை வசீகரமாய் நமக்கு முன்னால் விரிக்கிறது. அது இணையத்தின் ஆபாசமானாலும் சரி, செல்வத்தின் மீதான தேடுதல் ஆனாலும் சரி. கடவுளின் கட்டளையை மீறியேனும் அதை அடைய வேண்டும் எனும் தூண்டுதலைத் தருகிறான். சாத்தானில் தூண்டுதல் எனும் தூண்டிலில் சிக்குபவன் ஆதாமைப் போல, ஏவாளைப் போல மாட்டிவிடுகிறான்.

கடவுள் வருகிறார். நடந்ததை அறிகிறார். கோபம் கொள்கிறார். “ஏன் நீ அந்தக் கனியைத் தின்றாய்” என அவர் ஆதாமிடம் கேட்கிறார். ஆதாமிடம் தானே அவர் கட்டளையிட்டிருந்தார். ஆதாம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்கவில்லை. மாறாக “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என பழியைத் தூக்கி ஏவாள் மீதும், ஏவாளை துணையாகத் தந்தக் கடவுளின் மீதும் போடுகிறான்.  ஏவாளும் மன்னிப்பு வேண்டவில்லை, பழியை பாம்பின் தலையில் போட்டாள் !

தனது தவறுகளுக்கான மன்னிப்பை வேண்டாமல், சாக்குப் போக்கு சொல்லி, பழியை இன்னொருவர் தலையில் போடும் இரண்டாவது பெரிய பாவத்தை இருவருமே செய்கிறார்கள். விளைவு ? அழகிய ஏதேனை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.

ஆதாம் ஏவாள் கதை நமக்கு மூன்று முக்கியமான  பாடங்களைச் சொல்லித் தருகிறது.

ஒன்று, சாத்தான் நமக்கு முன்னால் சிற்றின்ப ஆசைகளைக் குறித்துப் பேசும்போது விலகி ஓட வேண்டும். அந்த இன்பங்களின் ஒரு துளியை சுவைக்கத் துவங்கினால், கடவுளின் அன்பிலிருந்தும், அவருடைய கட்டளைகளிலிருந்தும் விலகி விடுவோம் ! காரணம், சாத்தான் நம்மை விட தந்திரசாலி !

இரண்டு, கடவுளின் கட்டளையை மீறி நடப்பது நமது பிரியத்துக்குரிய மனைவியாய் இருந்தாலோ, கணவனாய் இருந்தாலோ எச்சரிக்கை செய்தாக வேண்டும். அன்பு என்பது சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வதல்ல. துணையை சரியான வழியில் அழைத்துச் செல்வது !

மூன்றாவது, தவறிழைக்கும் நிலை நேர்ந்து விட்டால், பழியை அடுத்தவர் மேல் போடாமல் இறைவனின் பாதத்தில் அமர்ந்து மன்னிப்பை வேண்டி மன்றாடுவது ! மீண்டும் இறைவனின் பாதையில் பயணிப்பது !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s