பைபிள் மாந்தர்கள் 5 (தினத்தந்தி) : நிம்ரோத் மன்னன்

MightyNimrod

 நிம்ரோத் மன்னனைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது. பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் முதல் மன்னன் இவன் தான். அதுவரை உலகில் மன்னராக யாருமே இருக்கவில்லை. நோவாவின்  மகன்களில் ஒருவனான காமின் சந்ததியில் வந்தவன் தான் நிம்ரோத் மன்னன். காம் தன் தந்தையால் சபிக்கப்பட்டவன், அந்தக் கதை சுவாரஸ்யமானது !

வெள்ளப்பெருக்கிலிருந்து கடவுளால் தப்பிக்கப்பட்ட நோவாவின் குடும்பம் வாழ்க்கையை ஆரம்பித்தது. நோவா திராட்சை பயிரிட்டு வாழ்ந்து வந்தார். ஒரு நாள் அளவுக்கு அதிகமாய் திராட்சை ரசத்தைக் குடித்து போதையில் ஆடை விலகிய நிலையில் கூடாரத்தில் படுத்துக் கிடந்தார் நோவா. காம் அதைக் கண்டான். வெளியே வந்து தனது சகோதரர்களான சேம் மற்றும் எப்பேத்துவிடம் அதைப் பற்றிச் சொன்னான். அவர்கள் இருவரும் உடனே ஒரு ஆடையை எடுத்துக் கொண்டு பின்னோக்கி நடந்து போய் தந்தையின் நிர்வாணத்தை மூடினர்..

காமின் செயல் தந்தையான நோவாவுக்கு கோபத்தைக் கொடுத்தது. அவனை சபித்து விட்டார்.  அவனுடைய சந்ததியில் உருவானவன் தான் நிம்ரோத் மன்னன். நோவாவின் கொள்ளுப் பேரன். எதிர் கிறிஸ்துவுக்கு அடையாளமாக சொல்லப் படுபவன் இவன் தான்.

எரேக்கு, அல்காது, கல்னே, இரகபோத்து, ஈர், காலாகு சோதோம், கொமோரா, நினிவே – போன்ற நகரங்களை நிர்மாணித்து தனது பெயரை நிலைநாட்டும் வேட்கை கொண்டவனாக நிம்ரோத் மன்னன் இருந்தான்.

கர்வத்தின் அடையாளமான பாபேல் கோபுரத்தைக் கட்டியவனும் இவன் தான். அது வரை உலகில் ஒரே மொழி தான் இருந்தது. மக்கள் நிம்ரோதின் கர்வத்தை உள்வாங்கியிருந்தார்கள். சினயார் சமவெளிப் பகுதியில் ஒன்று கூடிய மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு மாபெரும் கோபுரத்தைக் கட்ட முடிவெடுத்தார்கள்.

நாம் கட்டும் இந்தக் கோபுரம் சுவர்க்கத்தைத் தட்ட வேண்டும், நமது பெயரைச் சொல்ல வேண்டும் என கர்வத்துடன் பேசிக் கொண்டார்கள். கடவுள் கீழே இறங்கிவந்தார். மக்களுடைய கர்வத்தை அழிக்க முடிவெடுத்தார். மக்களிடையே மொழிக் குழப்பத்தை ஏற்படுத்தினார். மக்கள் குழுக்கள் குழுக்களாக வேறு வேறு மொழிகள் பேச ஆரம்பித்தனர். ஒருவர் பேசுவது இன்னொருவருக்குப் புரியாததால் குழப்பத்தில் அந்த கட்டிடம் கட்டும் வேலை நின்று விட்டது.

நிம்ரோத் மன்னன் காலத்தில் தான் சிலை வழிபாடு முதன் முதலில் ஆரம்பித்தது .  மக்கள் நிம்ரோத்தை கடவுளாக வணங்கினார்கள். பாகால், நீனூஸ் , அதோனிஸ், ஓசிரிஸ் என பிற்காலத்தில் பல பெயர்களில் வணங்கப்பட்ட பிற தெய்வங்கள் நிம்ரோத்  தான் !

நிம்ரோத் மன்னனைப் போலவே  அவனுடைய மனைவியான செமிராமிஸ் என்பவளும் கர்வத்தால் நிரம்பியிருந்தாள்.  சிற்றின்பத்திலும், போதையிலும் தான் அவளுடைய வாழ்க்கையும் அவளைச் சார்ந்தவர்களின் வாழ்க்கையும் இருந்தது. பிற்காலத்தில் இவளையும் மக்கள் கடவுளாக வழிபட்டனர்.

கிறிஸ்தவத்தில் உண்மையான ஆன்மீகப் பாதை எருசலேம் என்றும், தீமையான பாதை பாபிலோன் என்றும் குறிப்பிடப்படுகிறது. அதன் அடிப்படை என்ன என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

எங்கெல்லாம் கர்வம் தலை தூக்குகிறதோ அங்கே கடவுளின் கோபம் எழுகிறது. காரணம், கடவுள் தாழ்மையையும், பணிவையும் போதிக்கிறார்..

பைபிளில் இன்னொரு கதை வருகிறது (லூக்கா 18 ). இரண்டு பேர் ஆலயத்திற்கு செபிக்கச் செல்கின்றனர். ஒருவர் பரிசேயர். ஒருவர்  வரிதண்டுபவர். பரிசேயர்கள் என்பவர்கள் மதவாதிகளின் அடையாளம். சட்டங்களை ஒழுங்காகக் கடைபிடிப்பவர்கள். சட்டங்களைக் கடைபிடிப்பதால் தாங்கள் மிகப்பெரிய ஆன்மீகவாதிகள் எனும் “கர்வத்தில்” இருப்பவர்கள். வரி வசூலிப்பவர்களோ பாவிகளென ஒதுக்கப்பட்டவர்கள்.

பரிசேயர் ஆலயத்தில் நிமிர்ந்து நின்று. “கடவுளே நான் இந்த பாவியைப் போல இல்லாததற்கு நன்றி. நான் காணிக்கை கொடுக்கிறேன், நோன்பு இருக்கிறேன். கொள்ளையர்க்கள், நேர்மையற்றோர், விபச்சாரர் போன்ற வாழ்க்கை நடத்தவில்லை” எனும் தொனியில் வேண்டிக் கொண்டிருந்தார். வரிதண்டுபவரோ நிமிர்ந்து பார்க்கவும் துணியாமல் மார்பில் அடித்துக் கொண்டு “கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்” என்று மட்டும் சொன்னார்.

இந்தக் கதையைச் சொல்லி முடித்த இயேசு சொன்னார். இந்த பாவியே கடவுளுக்கு ஏற்புடையவன். “ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்” என்றார்.

நமது செயல்கள் நல்லனவாய் இருந்தால் போதாது. அந்த செயல்களுக்குப் பின்னால் இருக்கும் நோக்கமும் நல்லதாகவே இருக்க வேண்டும்.

நான் ரொம்ப தாழ்மையானவர் என ஒருவர் நினைப்பதே கர்வத்தின் அடையாளம் தான். தான் தாழ்மையாய் இருப்பதைக் குறித்த பிரக்ஜையற்று இறையில் நிலைத்திருப்பவனே உண்மையான தாழ்மை மனிதர்.

பைபிளில் வருகின்ற விசுவாச மனிதர்கள் நமது விசுவாசத்தை ஆழப்படுத்துகிறார்கள். அவர்கள் நமக்கு வழிகாட்டியாய் இருக்கிறார்கள். அதே நேரத்தில் நிம்ரோத் போன்ற மன்னர்களுடைய வாழ்க்கை நமக்கு எச்சரிக்கைக்காகக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எப்படி வாழக் கூடாது என்பதன் அடையாளமாய் நிம்ரோத் இருக்கிறான்.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s