நூறு வயது வரை குழந்தைக்காக ஏக்கத்தோடு காத்திருக்கும் பெற்றோருக்கு ஒரு குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும் ? அந்தக் குழந்தையை கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சுவார்கள். தரையிலேயே விட மாட்டார்கள். அதன்பின் அவர்களுடைய வாழ்க்கையே அந்தக் குழந்தையைச் சுற்றித் தான் அமையும் இல்லையா ? ஆபிரகாம் – சாரா வுக்கும் அப்படித் தான் இருந்தது. இருவருக்குமாய் பிறந்த முதல் குழந்தை ஈசாக். குழந்தை பிறந்த போது ஆபிரகாமுக்கு நூறு வயது, சாராவுக்கு தொன்னூறு வயது !
கடவுள் ஆபிரகாமை அழைத்தார். “ஆபிரகாம், உன் அன்பு மகனை மோரியா நிலப்பகுதியிலுள்ள மலையில் எனக்கு எரிபலியாகச் செலுத்து” என்றார். நூறு ஆண்டுகள் தவத்தின் பயனாக கடவுள் கொடுத்த வாரிசு, அவனையே எரி பலியாகச் செலுத்தச் சொல்கிறார் கடவுள். ஆபிரகாம் மறு பேச்சு பேசவில்லை. மறு நாள் அதிகாலையில் ஈசாக்கையும், பணியாளர்களையும் அழைத்துக் கொண்டு மோரியா நிலப்பகுதிக்குச் செல்கிறார். கடவுள் சொன்ன இடத்துக்குச் செல்ல மூன்று நாட்கள் பயணிக்க வேண்டியிருந்தது.
அங்கிருந்து மலையில் ஏறிப் போக வேண்டும். விறகுக் கட்டை எடுத்து மகனின் தோளில் வைக்கிறார். கத்தியையும், தீயையும் தனது கையில் எடுத்துக் கொள்கிறார். அப்போது தான் ஈசாக் கேட்டான்.
“விறகு இருக்கிறது, கத்தி இருக்கிறது, நெருப்பு இருக்கிறது. பலியிட வேண்டிய ஆட்டுக்குட்டி எங்கே அப்பா ?”
“கடவுள் தருவார் மகனே” ஆபிரகாம் சொன்னார்.
மலைக்கு மேல் சென்று, ஈசாக்கைக் கட்டி விறகின் மேல் கிடத்தினார் ஆபிரகாம். அடுத்து கத்தியை எடுத்து மகனை வெட்ட வேண்டும். நெருப்பினால் சுடவேண்டும். எரிபலி நிறைவேறிவிடும். ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட கத்தியை கையிலெடுத்தார். அப்போது கடவுளின் குரல் கேட்டது.
“ஆபிரகாம், நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்பதை அறிந்து கொண்டேன். பையன் மேல் கை வைக்காதே” என்றார். ஆபிரகாம் மகிழ்ந்தார். சுற்றிலும் பார்த்தார்.. ஒரு ஆட்டுக்குட்டி முட்செடியில் கொம்பு சிக்கிக் கொண்டு தத்தளிப்பதைக் கண்டார். அதைப் பிடித்து அதே பீடத்தில் எரிபலியாய் செலுத்தினார் !
மனதைப் பதை பதைக்க வைக்கும் ஆபிரகாமின் விசுவாசம் எட்டி விட முடியாத உயரத்தில் இருக்கிறது. முப்பிதாக்கள் எனும் வரிசையில் ஆபிரகாம் முதலில் நிற்பதற்குக் காரணமே அவரது அசைக்க முடியாத இறை விசுவாசம் தான்.
ஈசாக்கைப் பலியிட ஆபிரகாம் சென்றபோது அவருக்கு வயது 125. ஈசாக் 25 வயது நிரம்பிய வலிமையான இளைஞர். ஈசாக் தந்தையின் விண்ணப்பத்தைக் கேட்டு, தன்னையே பலியாகக் கொடுக்க சம்மதித்திருக்க வேண்டும் என்பதே இறையியலாளரின் கருத்து. விசுவாசத்தின் தந்தை, தனது மகனை அதே ஆழமான விசுவாசத்தில் வளர்த்திருக்கிறார் என்பதே வியப்பளிக்கும் செய்தி !
மலையடிவாரம் வரை பணியாளர்கள் கூடவே வருகிறார்கள். அவர்களிடம், “நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள். நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்″ என்றார் ஆபிரகாம். ( ஆதி 22 : 5 ). திரும்பி வருவோம் – எனும் விசுவாசம் ஆபிரகாமுக்கு எப்படி வந்தது ?
“உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ ‘ஈசாக்கு’ எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப்பின் வரும் அவன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்” ஆதி : 17 : 19, எனும் கடவுள் ஆபிரகாமிடம் ஏற்கனவே சொல்லியிருந்தார். அதை ஆபிரகாம் முழுமையாக நம்பினார். என்ன ஒரு வியப்பூட்டும் விசுவாசம் !
கடவுள் ஆபிரகாமிடம் தனிமையாக, இரவில் பேசுகிறார். வேறு யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஆபிரகாம் அந்த கட்டளையை நிறைவேற்றாவிட்டாலும் யாரும் அறியப் போவதில்லை. ஆனால் ஆபிரகாமோ, மனிதனின் அங்கீகாரமல்ல, கடவுளின் அங்கீகாரத்தையே முக்கியமாகத் தேடினார்
ஆபிரகாம் மிகப்பெரிய செல்வந்தனாய் இருந்தார். சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தபோது தான் “நாட்டை விட்டு வெளியேறு” என்கிறார் கடவுள். ஆபிரகாம் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுகிறார். அப்போது அவருக்கு வயது 75 ! எழுபத்தைந்து வயதில் எல்லாவற்றையும் விட்டு விட்டு நாடோடியாய் திரிய ஆபிரகாமின் விசுவாசம் அவரை இயக்கியது !
பயணத்தில் அவருடைய லோத்தும் கூடவே செல்கிறார். காலங்கள் கடக்கின்றன. ஆபிரகாமும் லோத்தும் ஒரே இடத்தில் வசிக்க வசதியில்லை எனும் நிலை எழுந்தபோது ஆபிரகாம் லோத்திடம், உனக்கு எந்த இடம் பிடித்திருக்கிறதோ அதை நீ முதலில் தேர்ந்தெடு. மற்ற இடத்தை நான் எடுத்துக் கொள்கிறேன் என்கிறார். பணிவும், சண்டையில்லாத சூழலையும், தனது உரிமையைக் கூட விட்டுக் கொடுக்கும் தாழ்மையும் ஆபிரகாமிடம் இருந்தது.
ஆபிரகாமின் விசுவாசமும், பொறுமையும், பணிவும், இறையச்சமும் நமக்கெல்லாம் மிகப்பெரிய ஆன்மீகப் பாடம் !
ஃ
You must be logged in to post a comment.