பைபிள் மாந்தர்கள் 8 (தினத்தந்தி) : ஈசாக் !

ஈசாக் !

4320480586_839e41e9c2

ஈசாக் என்றதும் சட்டென என்ன ஞாபகத்துக்கு வருகிறது ? ஆபிரகாம் அவருடைய ஒரே மகனான ஈசாக்கைப் பலியிடத் துணிந்த செயலைத் தவிர ? ஈசாக்கின் வாழ்க்கை மிக முக்கியமான வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தருகிறது !

ஈசாக் தனது மனைவி ரெபேக்காவுடன் கெரார் என்னுமிடத்துக்குச் சென்றார். அங்கே பெலிஸ்திய மன்னன் அபிமெலேக்கு அரசாண்டு கொண்டிருந்தான். ரெபேக்கா மிகவும் அழகானவளாக இருந்தாள்., அந்தக் காலத்தில் ஒரு மிகப்பெரிய சிக்கல் இருந்தது. அன்னியர்கள் யாரேனும் அழகான மனைவியுடன் நாட்டில் நுழைந்தால், அவளை அடைவதற்காக கணவனைக் கொன்று விடுவது சர்வ சாதாரணம். எனவே “யார் இந்தப் பெண்” என கேட்டவர்களிடமெல்லாம் “இவள் என் சகோதரி” என்றே சொல்லி வந்தார்.

ஒரு நாள் இவள் ஈசாக்கின் மனைவி எனும் உண்மை மன்னனுக்குத் தெரிய வந்தது. மன்னன் உடனே இந்த விஷயத்தை நாட்டு மக்களுக்குத் தெரிவித்து, யாரும் ஈசாக்கையோ, அவருடைய மனைவியையோ தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவு பிறப்பித்தான். பின் சில காலத்துக்குப் பின் ஈசாக் அந்த நாட்டை விட்டு வெளியேறினார்.

கெரார் பள்ளத்தாக்கில் ஈசாக்கின் ஊழியர்கள் ஒரு கிணறு தோண்டினார்கள். தண்ணீர் பீறிட்டு எழுந்தது. அந்தப் பகுதியிலுள்ள மேய்ப்பர்களோ, இந்தக் கிணறு எங்களுடையதே.. இதை உங்களுக்குத் தரமுடியாது என சண்டை பிடித்தனர்.. ஈசாக்கு, அமைதியாக அடுத்த இடத்துக்குச் சென்றார்.

இரண்டாவதாக வேறு ஒரு கிணறைத் தோண்டினார்கள். அங்கும் தண்ணீக் கிடைத்தது. அங்கும் தகராறு எழுந்தது. அப்போதும் ஈசாக்கு அமைதியாக விலகிச் சென்றார்.

மூன்றாவது வேறொரு இடத்தில் ஒரு கிணறு தோண்டினார்கள். அங்கே சண்டை ஏற்படவில்லை. எனவே ஈசாக்கு அங்கேயே தங்கினார், இதுவே கடவுள் தனக்கு அளித்த இடம் என அவர் நம்பினார்.

விசுவாசத்தின் தந்தை, தனது சொந்தத் தந்தையாகும் பாக்கியம் ஈசாக்கிற்குக் கிடைத்தது. ஆபிரகாம் எல்லாவற்றிலும் கடவுளை முதலிடத்தில் வைத்து வாழ்க்கையை நடத்தியவர். அதற்காக தனது மகனைக் கூட இழக்கத் தயாராகி விட்டவர் தான் ஈசாக். எனவே தந்தையின் ஆன்மீக வாசனை ஈசாக்கின் வாழ்க்கையிலும் நிரம்பியிருந்தது எனலாம்.

கடவுளை முதல் இடத்தில் வைக்கும் போது மனிதர்களோடான பகை உணர்ச்சிகள் மறைந்து விடுகிறது. மறு உலக வாழ்க்கையை நோக்கிய பயணத்தில், இவ் வுலக வாழ்க்கை செல்வங்கள், சண்டை சச்சரவுகள் போன்றவை முக்கியமற்றதாகி விடுகின்றன.

“என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; என்றார் ( யோ : 22 – 36 ) இயேசு. இவ்வுலகைச் சார்ந்த வாழ்க்கை வாழ்பவர்கள் மட்டுமே இவ்வுலக மனிதரோடு போராடுவார்கள். விண்ணக வாழ்க்கையை நோக்கிப் பயணம் செய்பவர்களுடைய சிந்தனை எப்போதுமே பாவத்தோடான போராட்டமாகவே இருக்கும்.

ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள் ( மத் 5 : 40 ) என்கிறார் இயேசு. விட்டுக் கொடுத்தலும், சண்டைகளைத் தவிர்த்தலுமே இயேசு சொன்ன பாடம். அதைத் தான் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள் எனும் போதனையின் மூலம் உரக்கச் சொன்னார்.

பழைய ஏற்பாட்டில் கடவுளின் அருள் பெற்ற மக்கள் போர்களில் வென்றார்கள், எதிரிகளை முறியடித்தார்கள். உலக செல்வங்களைப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் புதிய ஏற்பாடு நமக்கு ஆன்மீகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது. மனிதர்களோடான சண்டைகளை முற்றிலும் தவிர்த்து, சாத்தானோடும் அவனுடைய பாவ தூண்டுதல்களோடும் மட்டுமே சண்டையிட புதிய ஏற்பாடு அழைப்பு விடுக்கிறது.

புதிய ஏற்பாட்டில் இயேசு  காட்டிய வழி, பழைய ஏற்பாட்டு ஈசாக்கின் வாழ்க்கை யிலேயே இருந்தது வியப்பான விஷயம். அதனால் தான் ஈசாக் முப்பிதாக்களில் ஒருவராக இருக்கிறார்.

ஈசாக்கின் வாழ்க்கை முழுதும் நல்ல விஷயங்களாலேயே நிறைந்திருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அவருடைய பிள்ளைகள் மீதே பாகுபாடு காட்டும் மனநிலை தான் அவரிடம் இருந்தது. அபிமலேக்கு மன்னனிடம் பொய் சொல்லும் மனநிலை தான் இருந்தது. ஆனால் பிற மனிதர்களிடம் சண்டையில்லாமல் செயல்பட வேண்டிய உயரிய குணம் அவரிடம் இருந்தது.

ஈசாக்கின் வாழ்க்கை நமக்கு மனிதர்களோடான சண்டைகளை தவிர்த்து விடவேண்டும் எனும் உயரிய குணத்தைச் சொல்லித் தருகிறது. அந்தக் குணத்தை மனதில் கொண்டாலே இன்றைக்கு நிகழ்கின்ற பல்லாயிரம் பிரச்சினைகள் நம்மை விட்டு மறைந்து விடும்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s