பைபிள் மாந்தர்கள் 9 (தினத்தந்தி) : இரட்டையர்கள் ஈசா – யாக்கோபு

Jacob-Blessing-Isaac

ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கிற்கு 40 வயதாக இருந்தபோது ரபேக்காவைத் திருமணம் செய்தார்.  சுமார் 19 வருடங்கள் அவர்களுக்குக் குழந்தைப் பாக்கியமே இல்லை. ஈசாக் உருக்கமாக செபித்தான். ரபேக்கா கர்ப்பமானாள். இரட்டைக் குழந்தைகள். ஆனால் வழக்கத்துக்கு மாறாக கருவறையிலேயே இரண்டு பேரும் முட்டி மோதிக் கொண்டார்கள்.

ரபேக்கா ஆண்டவரிடம் கேட்டாள்.  ஆண்டவர் அவளிடம், “உன்னுடைய வயிற்றிலிருந்து இரண்டு பெரிய இனங்கள் தோன்றும். மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்” என்றார். ரபேக்கா அமைதியானாள். பேறுகாலம் வந்தது. முதலில் ஒரு குழந்தை வெளிவந்தது. உடல் முழுக்க ரோமமும், செந்நிறமுமாக அந்தக் குழந்தை இருந்தது. இரண்டாவது குழந்தை முதல் குழந்தையின் குதிகாலைப் பிடித்துக் கொண்டே வெளிவந்தது. முதல் குழந்தைக்கு ஏசா என்றும், இரண்டாவது குழந்தைக்கு யாக்கோபு என்றும் பெயரிட்டனர்.

ஏசா வேட்டையில் கில்லாடி. விதவிதமாய் வேட்டையாடிக் கொண்டு வரும் உணவினால் ஈசாக்கிற்கு அவன் மீது அதிக பிரியம். யாக்கோபுவோ அமைதியாய், வீட்டைச் சுற்றி வரும் பழக்கமுடையவனாய் இருந்தான். அவன் அம்மாவின் செல்லப் பிள்ளை.

ஏசா ஒரு நாள் வேட்டையாடி களைத்துப் போய் வந்தான். அப்போது யாக்கோபு சுவையான கூழ் சமைத்துக் கொண்டிருந்தான். “ரொம்பப் பசிக்குது கொஞ்சம் கூழ் கொடு” என்றான் ஏசா. யாக்கோபுவோ குறுக்குப் புத்தியுடன், “கூழ் தருகிறேன். உன் தலைமகனுக்குரிய உரிமையை எனக்குத் தா” என்றான். அவனும் கொடுத்தான். வெறும் ஒரு சாப்பாட்டுக்காக ஏசா தனது மூத்த மகனுக்குரிய உரிமையை இழந்தான்.

காலங்கள் உருண்டோடின. ஈசாக் வாழ்வின் இறுதி கட்டத்துக்கு வந்தார். அவருடைய கண்பார்வை மங்கியது. ஒரு நாள் அவர்  ஏசாவை அழைத்து, “ நீ போய் வேட்டையாடி எனக்கு சுவையாய் சமைத்துக் கொடு. நான் உனக்கு ஆசி வழங்குவேன்” என்றார். ஏசா காட்டுக்குக் கிளம்பினான்.

இந்த உரையாடலை ரகசியமாய்க் கேட்டுக் கொண்டிருந்த ரபேக்கா அவசரம் அவசரமாய் யாக்கோபை அழைத்து விஷயத்தைச் சொன்னாள். கூடவே,, “நீ போய் நம்ம மந்தையிலிருந்து ரெண்டு கொழுத்த ஆட்டுக் குட்டியை அடித்து வா. நான் சமைத்துத் தரேன். நீ ஏசா மாதிரி போய் ஆசீர்வாதம் வாங்கிக்கோ” என்றாள்.

“அம்மா, என் உடல் ஏசா மாதிரி ரோமமா இருக்காது.. கண்டுபிடிச்சா வாழ்த்துக்குப் பதிலா சாபம் தான் கிடைக்கும்” யாக்கோபு தயங்கினார். ரபேக்கா ஊக்கமூட்டினாள். காரியங்கள் மளமளவென நடந்தன. யாக்கோபு கொண்டு வந்த ஆட்டுக்குட்டிகளை ரபேக்கா சமைத்தாள். கூடவே ஆட்டின் தோலை எடுத்து யாக்கோபின் கைகளில் கட்டினாள். ஏசாவின் ஆடைகளை எடுத்து யாக்கோபை உடுத்தச் செய்தாள்.

யாக்கோபு உணவுடன் தந்தையின் அருகே சென்றார். “அப்பா ஏசா வந்திருக்கிறேன்” யாக்கோபு சொன்னார். “ஏசாவா, அதற்குள் வேட்டை முடிந்து விட்டதா.. யாக்கோபின் குரல் போல இருக்கிறதே” ஈசாக் சந்தேகித்தார்.. “நான் ஏசா தான்” யாக்கோபு மீண்டும் பொய் சொன்னர். ஈசாக் அவனை அருகே அழைத்து கைகளைத் தடவினார். ம்ம்… ரோமம் அடர்ந்த கைகள். நெருங்கி அவனுடைய ஆடையின் வாசனையை நுகர்ந்தார். ம்ம்… ஏசாயின் வாசனை. இப்போது ஈசாக் முழுமையாய் ஏமாந்தார். தனது கையை யாக்கோபின் தலையில் வைத்தார். நாடுகளுக்கும், மக்களுக்கும், சகோதரர் யாவருக்கும் நீயே தலைவன்” என்றார்.

காட்டிலிருந்து ஏசா திரும்பி வந்தபோது விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார். கதறிப் புலம்பினார். ஈசாக் வருந்தினார், ஆனாலும் ஆசீர்வாதத்தைத் திரும்பப் பெற முடியாது என கைகளை விரித்தார்.

″உன் கருப்பையில் இரு இனங்கள் உள்ளன; உன் வயிற்றிலிருந்தே ஈரினத்தார் பிரிந்திருப்பர். ஓர் இனம் மற்றதைவிட வலிமை மிக்கதாய் இருக்கும். மூத்தவன் இளையவனுக்குப் பணிந்திருப்பான்″ என்றார். ( தொடக்க நூல் 25 : 23 ). என்று கடவுள் ஏற்கனவே ரெபேக்காவிடம் சொல்லியிருந்தார். அந்த திட்டம் கடைசியில் நிறைவேறுகிறது. ஆனால் அவர் விரும்பிய வழியில் நடந்ததா என்பது கேள்விக்குறியே !

பெற்றோர் செய்யக் கூடாத ஒரு செயல் பிள்ளைகளிடையே பாகுபாடு காட்டுவது. ஈசாக்கும் ரபேக்காவும் காட்டுகிறார்கள். அது சகோதரர்களுக்கிடையே சிறுவயதிலிருந்தே கசப்புணர்வை உருவாக்கி விடுகிறது.

ஈசாக் தனது வாழ்வில் அனைத்தை விடவும் உணவை நேசிக்கிறார்.ஆசி வழங்குவதற்கு முன்பு கூட, சாப்பாடு கொண்டு வா. அதை முதலில் ருசிக்கட்டும் என்கிறார். உணவு அவருக்குக் கடவுளாய் மாறிவிடுகிறது.

ஏசாவோ, கஞ்சிக்காக ‘தலைமகன்’ எனும் உயரிய ஆசீர்வாதத்தை இழக்கிறான். விரும்பிய பெண்களையெல்லாம் மணக்கிறான். சகோதரன் மேல் கொலை வெறி கொள்கிறான். என ஆன்மீகம் அகன்று விட்ட நிலையையே அது காட்டுகிறது.

இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்டம் வைத்திருக்கிறார். அதை அவர் மிகவும் அற்புதமான முறையில் நடத்துவார். அவரை நம்புவதும், அவர் காட்டும் வழியில் நடப்பதுமே அவசியம் ! என்பதையே இரட்டையர் வாழ்க்கை நமக்குச் சொல்கிறது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s