பைபிள் மாந்தர்கள் 30 (தினத்தந்தி) : யோனத்தான்.

ஸ்ரயேலரின் முதல் அரசன் சவுல். அவருடைய மூத்த மகன் தான் யோனத்தான். சவுல் அரசராகி வெற்றிகரமாக தனது முதல் ஆண்டை முடித்திருந்தார். இப்போது அவர்களுடைய தொடர் பகைவரான பெலிஸ்தியர்கள் போருக்கு வந்தார்கள். அந்தப் போரில் முக்கியமான பங்கு வகித்தவர் யோனத்தான்.

தன்னுடன் ஆயிரம் வீரர்களை சேர்த்துக் கொண்டு சென்ற யோனத்தான் கெபா எனும் இடத்தில் காவலில் இருந்த பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்தினார். இஸ்ரயேல் மக்களிடையே யோனத்தானின் புகழ் பரவியது. யோனத்தான் ஒரு வீரனாக கொண்டாடப்பட்டார்.

காலங்கள் கடந்தன. சவுல் கடவுளை விட்டு விலகி நடக்கத் துவங்கினார். தாவீது எனும் வீரன் சவுலின் அரசவையில் அங்கம் வகித்தார். அவர் யாழ் மீட்டுவதிலும் வல்லவர். யோனத்தான் தாவீதை தனது உயிர் நண்பனாக்கிக் கொண்டான். தான் அணிந்திருந்த மேலங்கி, வாள், வில், கச்சை, எல்லாவற்றையும் தாவீதுக்குக் கொடுத்து தனது நட்பின் ஆழத்தைப் பிரகடனப் படுத்தினார். தாவீது, சவுலின் அரசவையில் படைத் தலைவனாகி வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார்.

தாவீது மாபெரும் வெற்றியாளனாய் மக்கள் மத்தியில் பிரபலமானார். மக்கள் “சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார், தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார்” என பாராட்டிப் பாடினார்கள். அதைக் கேட்டது முதல் சவுல் தாவீதின் மீது விரோதம் வளர்க்கத் துவங்கினார். சவுல் மன அழுத்தத்தில் இருக்கும் போதெல்லாம் தாவீது தனது யாழை மீட்டி சவுலை அமைதிப்படுத்துவது வழக்கம். சவுல் இரண்டு முறை தாவீது யாழ் வாசித்துக் கொண்டிருக்கையில் ஈட்டியால் எறிந்து அவரைக் கொல்ல முயன்றார். தாவீது தப்பினார்.

தனது மகளை தாவீதுக்கு மணம் முடித்து கொடுத்து பெலிஸ்தியர்களின் எதிராய் தாவீதை உருவாக்க சவுல் நினைத்தார். அதுவும் நடக்கவில்லை. பெலிஸ்தியருக்கு எதிராய் தாவீதுக்கே வெற்றி. சவுலின் கோபம் இன்னும் இன்னும் அதிகரித்தது. தாவீதைக் கொல்ல வேண்டும் என எல்லாரிடமும் சொன்னார். அது தாவீதின் உயிர்நண்பனும் சவுலின் மகனுமாகிய யோனத்தானின் காதுகளிலும் விழுந்தது.

அவர் சவுலிடம் வந்து தாவீதுக்காய் பரிந்து பேசினார். தாவீதைக் கொல்ல வேண்டாம். அவர் என்றுமே உங்களுக்குத் தீமை செய்ய நினைத்ததில்லை. உங்களுக்கு மாபெரும் வெற்றிகளைத் தான் தேடித் தந்திருக்கிறார். தாவீதைக் கொன்று குற்றமற்ற இரத்தத்துக்கு எதிராகப் பாவம் செய்ய வேண்டாம் என்றான். சரி, “தாவீதைக் கொல்லமாட்டேன்”  என்றார் சவுல்.

ஆனால் தாவீது மீண்டும் மீண்டும் வெற்றிகளும் செல்வாக்கும் பெறவே, சவுல் மீண்டும் தாவீதைக் கொல்ல முயன்றார். “நான் என்ன பாவம் செய்தேன். எதுக்கு உன் அப்பா என்னைக் கொல்லத் தேடுகிறார். “தாவீது யோனத்தானிடம் புலம்பினார். அதற்கு யோனத்தான், “கவலைப்படாதே. என் அப்பா என்னிடம் கேக்காமல் எதுவும் செய்ய மாட்டார். உனக்கு எதுவும் ஆகாது” என்றார்.  யோனத்தானுக்கும், தாவீதுக்கும் இருந்த நட்பின் ஆழம் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர குறையவில்லை.

ஆனால் தாவீதின் மீது சவுல் மிகுந்த கோபமாய் இருந்ததை அடுத்தடுத்த நாட்களில் அவர் அறிந்து கொண்டார். எனவே தாவீதை அவர் தப்புவித்து அனுப்பினார். பிரியும் வேளையில் இருவரும் கட்டிப் பிடித்து அழுதனர். அந்த அளவுக்கு அவர்களிடையே நட்பு மிகவும் ஆழமாக இருந்தது.

பின்னர் தாவீதைக் கொல்ல சவுல் தேடுகையில் தாவீது மறைந்து வாழ்ந்தார். அப்போதும் யோனத்தான் சென்று அவரைச் சந்தித்து, “ஆண்டவர் உன்னோடு இருப்பார். நீ வெல்வாய். இஸ்ரயேலின் அரசனாவாய். நான் உனக்கு அடுத்த இடத்தில் இருப்பேன்” என்றெல்லாம் வாழ்த்தினார்.

ஆனால் அந்த ஆனந்தம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. எதிரிகளான பெலிஸ்தியரின் கைகளில் சிக்கி சவுலும், அவர் மகன் யோனத்தானும் கொல்லப்பட்டனர். செய்தியைக் கேட்ட தாவீது தமது உடைகளைக் கிழித்துக் கொண்டு அழுது புலம்பினார். அவர்களுக்காக துயரம் மிகுந்த இரங்கற்பா பாடி உண்ணா நோன்பு இருந்தார்.

“சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உள்ளம் உடைந்து போனது! எனக்கு உவகை அளித்தவன் நீ! என் மீது அளித்த பேரன்பை என்னென்பேன்! அது மகளிரின் காதலை மிஞ்சியது அன்றோ” என கதறினார்.

ஆழமான நட்புக்கு அழகான உதாரணம் யோனத்தான் – தாவீது நட்பு. தாவீது தனது இருக்கைக்கு ஆபத்தாய் வந்து விடுவானோ என பயப்பட வேண்டிய யோனத்தான் தாவீதை அளவு கடந்து நேசிக்கிறார். தனது பட்டத்து உரிமையையே தாவீதுக்குக் கொடுப்பதன் முன்னறிவிப்பாய் அரச உடைகளை அவருக்கு அணிவிக்கிறார். தன் தந்தைக்கு எதிராய்ச் செயல்பட்டும் கூட நண்பனைக் காக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, எப்போதும் கடவுளை முன்னிறுத்தியே வாழ்கிறார்.

நட்பின் இத்தகைய நல்ல செயல்களை யோனத்தானின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்.

பைபிள் மாந்தர்கள் 29 (தினத்தந்தி) : சவுல்

இஸ்ரயேல் மக்களின் முதல் அரசன் எனும் சிறப்புப் பெற்றவர் சவுல். அதுவரை இஸ்ரயேல் மக்களுக்கு அரசர்கள் இல்லை. நீதித் தலைவர்களும், தீர்க்கத் தரிசிகளும் அவர்களை வழி நடத்தி வந்தார்கள். பிற இன மக்களுக்கு அரசர்கள் இருப்பதைக் கண்ட மக்கள், தங்களுக்கும் அரசன் வேண்டும் என்று அப்போதைய நீதித் தலைவர் சாமுவேலிடம் கேட்டார்கள். அவருக்கு அதில் உடன்பாடில்லை, எனினும் கடவுளின் விருப்பத்துக்கு இணங்க அதற்குச் சம்மதித்தார்.

பென்யமின் குலத்தில் கீசு என்றொருவர் இருந்தார். அவருக்குப் பிறந்தவர் தான் சவுல். அழகும், வீரமும், ஈரமும் நிறைந்தவர் சவுல். நல்ல உயரமானவர். ஆனால், தான் அரசனாவோம் என அவர் கனவிலும் நினைத்ததில்லை.

ஒருமுறை சவுலின் தந்தையுடைய கழுதைகள் காணாமல் போயின. ஊர் ஊராகச் சென்று அவர் கழுதைகளைத் தேடினார். கழுதைகள் கிடைத்தபாடில்லை. நாட்கள் பல சென்றன. சரி, இனிமேலும் திரும்பிச் செல்லாமல் இருந்தால் கழுதைகளைப் பற்றிய பயத்தை விட அதிகமாய் தன்னைப் பற்றிய பயம் தந்தைக்கு வந்து விடும் என சவுல் நினைத்தார். எனவே திரும்பிச் செல்ல முடிவெடுத்தார். அப்போது பணியாளன்,”இங்கே ஒரு கடவுளின் அடியாளர் இருக்கிறாராமே. அவரிடம் போய் கழுதைகளைப் பற்றிப் பேசுவோம்” என்றார்..

அவர்கள் செல்லும் வழியில் இறைவாக்கினர் சாமுவேல் அவர்களுக்கு எதிரே வந்தார். “உன்னிடம் பென்யமின் நாட்டினன் ஒருவனை அனுப்புவேன். அவரே நான் தேர்வு செய்துள்ள அரசன்” என்று கடவுள் ஏற்கனவே சொல்லியிருந்தார். சவுலைக் கண்டதும் சாமுவேலின் மனதில் கடவுளின் குரல் மீண்டும் ஒலித்தது. “இவனே நான் சொன்னவன்” !

சாமுவேல் அவரிடம் “கழுதைகள் கிடைத்து விட்டன கவலைப்படாதே” என சொல்லி அவரை அழைத்துச் சென்று அவருடன் உணவருந்தினார். மறுநாள் வைகறையில் சவுலையும் அழைத்துக் கொண்டு நகரின் எல்லைக்குச் சென்று அவருடைய தலையில் எண்ணை ஊற்றி அவரை திருப்பொழிவு செய்தார். சவுல் வியந்தார்.

சாமுவேல் அவரிடம், “ நீ போகும் வழியில் பெல்குவேல் எனுமிடத்தில் இரண்டு பேர் வந்து கழுதைகள் கிடைத்து விட்டன. உன் தந்தை உன்னைக் காணாமல் கவலையடைந்திருக்கிறார்” என்பார்கள். அங்கிருந்து நீ செல்லும் போது தாபோரில் வைத்து மூன்று பேர் உனக்கு எதிரே வருவார்கள். ஒருவன் இரண்டு அப்பங்கள் தருவான். அதை வாங்கிக் கொள்.

அங்கிருந்து கடவுளின் மலையருகே செல்லும் போது, மலையிலிருந்து இறங்கி வரும் இறைவாக்கினர் குழுவைச் சந்திப்பாய். அப்போது நீயும் இறையருள் பெற்று பரவசம் அடைவாய். இவையெல்லாம் நிகழும் போது கடவுள் உன்னோடு இருக்கிறார் என உணர்ந்து கொள் என்றார். அவர் சொன்னபடியே எல்லாம் நிகழ்ந்தன.

சில நாட்களுக்குப் பின் சாமுவேல் எல்லா மக்களையும் ஒன்று கூட்டினார். அவர்களை குலம் குலமாகவும், குடும்பம் குடும்பமாகவும் பிரித்தார். அரசனைத் தேர்ந்தெடுக்கப் போவதாய் அறிவித்தார். எல்லா குலத்தின் பெயரையும் எழுதிச் சீட்டுப் போட்டார்கள். அதில் பென்யமின் எனும் பெயர் வந்தது. அது சவுலின் குலம்.

பென்யமின் குல குடும்பங்கள் அனைத்தின் பெயரையும் சீட்டுப் போட்டனர். அதில் கீசின் குடும்பம் வந்தது. கீசு சவுலின் தந்தை. அந்தக் குடும்பத்திலுள்ளவர்களின் பெயர்களைப் போட்டு சீட்டுக் குலுக்குகையில் சவுலின் பெயர்  விழுந்தது. சவுல் ஓடி ஒளிந்து கொண்டார். மக்கள் அவரைத் தூக்கி வந்து சாமுவேலின் முன்னால் நிறுத்தினார்கள். சாமுவேல் அவரை அரசராய் தேர்ந்தெடுத்தார். அவர் கடவுளின் ஆசிரோடு மக்களை ஆண்டார். எனினும் வாழ்வின் கடைசி கட்டத்தில் இறைவனை விட்டு விலகி அனைத்தையும் இழந்த துயரமும் நிகழ்ந்தது.

சவுலிடம் ஏராளமான நல்ல குணங்கள் இருந்தன.

“நீ தான் கடவுள் தேர்ந்தெடுத்த நபர்” என சாமுவேல் சொன்னபோது. எனது குலம் ரொம்பச் சின்னது. எனது குடும்பம் ரொம்ப ரொம்பச் சின்னது என சொல்லும் தாழ்மை அவரிடம் இருந்தது.

“சவுல் தான் அரசன் ! அவன் எங்கே” என தேடிய போது அவர் ஒளிந்து கொண்டிருந்தார். பதவி ஆசையை வெறுக்கும் மனம் இருந்தது.

“மக்கள் அவரை நிராகரித்து அன்பளிப்புகள் கொடுக்காதபோதும்” அமைதி காக்கும் பணிவு இருந்தது.

“தொலைந்து போன கழுதைகளுக்காக ஊர் ஊராக அலைந்து திரிந்தார்” என்பதில் செய்யும் வேலையை முழு மனதாய்ச் செய்யும் ஆத்மார்த்தம் தெரிந்தது.

“இறைவாக்கினரைப் போய் பார்ப்போம்” எனும் பணியாளரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு சாமுவேலைச் சென்று பார்க்கும் இறைநம்பிக்கை இருந்தது.

“தந்தை கவலைப்படுவார் திரும்பப் போகலாம்” என அடுத்தவரைக் காயப்படுத்தாத மென்மையான மனம் இருந்தது.

இத்தகைய குணங்கள் உள்ள மனிதன் எங்கே இருந்தாலும் இறைவன் தேடி வருவார். அப்படியே நாமும் இருக்கவேண்டுமென சவுலின் வாழ்க்கை நம்மைத் தூண்டட்டும்.

பைபிள் மாந்தர்கள் 28 (தினத்தந்தி) : சாமுவேல்.

அன்னா எனும் பெண்ணுக்கு குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. ஆலயத்தில் கடவுளின் சந்நிதியில் அழுது புலம்பினாள். எனக்கு ஒரு குழந்தையைத் தாருங்கள். அவனை உமக்கே அர்ப்பணிப்பேன். என மனம் கசிய, கண்ணீர் வழிய வேண்டினாள். கடவுள் மனமிரங்கினார். சாமுவேல் பிறந்தான்.

சாமுவேல் பால் குடி மறந்த சிறுவனாய் மாறிய காலத்தில் ஆண்டவரின் ஆலயத்தில் அவனைக் கொண்டு வந்து குரு ஏலியிடம் ஒப்படைத்தாள் தாய் அன்னா. “இனி இவன் ஆண்டவருக்கு உரியவன்” என்பதே அவளுடைய முடிவாய் இருந்தது. அவன் ஆலய பணிகளில் ஏலிக்கு உதவியாய் இருந்தான்.

ஏலிக்கு இரண்டு மகன்கள் உண்டு. அவர்கள் உதவாக்கரைகள். எதுவெல்லாம் கடவுளுக்குப் பிடிக்காதோ அவற்றையெல்லாம் தேடித் தேடிச் செய்யும் தறுதலைகள்.

“சாமுவேல் சாமுவேல்”

இரவில் தூங்கிக் கொண்டிருந்த சாமுவேலின் காதுகளில் விழுந்தது அந்தக் குரல். ஓடிப் போய் ஏலியின் முன்னால் நின்றான். “ஐயா.. அழைத்தீர்களா ?”. தூக்கம் கலைந்த ஏலி சாமுவேலைப் பார்த்துக் குழம்பினார். “இல்லயே.. நீ போய் படுத்துக் கொள்” என்றார்.

“சாமுவேல்.. சாமுவேல்”

மீண்டும் குரல் அழைத்தது. மீண்டும் சாமுவேல் ஏலியின் முன்னால் போய் நின்றார். கண்களைக் கசக்கிய ஏலி குழம்பினார். “நான் உன்னை அழைக்கவில்லை. ஒருவேளை மீண்டும் உனக்குக் குரல் கேட்டால், ஆண்டவரே பேசும் அடியான் கேட்கிறேன் என்று சொல்” என்றார். சாமுவேல் மீண்டும் சென்று படுத்துக் கொண்டார்.

“சாமுவேல் சாமுவேல்” மூன்றாம் முறையாய் குரல் அழைத்தது.

“ஆண்டவரே பேசும் அடியான் கேட்கிறேன்” சாமுவேல் சொன்னான். கடவுள் சாமுவேலிடம் பேசினார். ஏலியின் பிள்ளைகளைத் தான் தண்டிக்கப் போவதாகவும், தான் செய்யப் போவது என்னென்ன என்பதையும் சொன்னார்.

சாமுவேல் வளர்ந்தார். கடவுள் அவரோடு இருந்தார். அவர் ஒரு இறை செய்தியாளராக மாறிய விஷயம் நாடெங்கும் பரவியது. அவர் மக்கள் அனைவரையும் இறைவன் பால் திருப்பினார்.

சாமுவேலுக்கு வயதானது.சாமுவேலின் பிள்ளைகள் சாமுவேலைப் போல நல்லவர்களாக இருக்கவில்லை. எனவே “எங்களுக்கு ஒரு அரசன் வேண்டும்” என சாமுவேலிடம் மக்கள் கேட்டார்கள். சாமுவேலுக்கு அது பிடிக்கவில்லை. அதுவரை அவர்களிடம் அரசர் இல்லை. அவர் கடவுளிடம் கேட்டார்.

“சாமுவேலே, மக்கள் உன்னை நிராகரிக்கவில்லை. அவர்கள் என்னை நிராகரித்து விட்டார்கள். அவர்கள் அரசனாக என்னைப் பார்க்காமல் வேறு அரசனை கேட்கிறார்கள். அவர்கள் குரலுக்குச் செவி கொடு. ஆனால் விளைவுகளைப் பற்றி எச்சரி” என்றார் கடவுள்.

சாமுவேல் மக்களிடம் சொன்னான். “அரசன் எப்படி இருப்பான் தெரியுமா ? உங்கள் மகன்கள் அவனுடைய சேவகர்கள் ஆவார்கள், பெண்கள் அவர்கள் பணிப்பெண்கள் ஆவார்கள், உங்கள் விளைச்சலில் சிறந்தவை அவனுக்குப் போகும், உங்கள் சொத்தில் முதன்மையானதெல்லாம் அவனுக்குப் போகும்” சாமுவேலின் எச்சரிக்கையை மக்கள் கேட்கவில்லை.

கடவுள் சாமுவேல் மூலமாக சவுல் எனும் பென்யமின் குல மனிதரை அரசராய் நியமித்தார். அவர் தான் இஸ்ரயேல் குலத்தின் முதல் மன்னர். சாமுவேல் மக்களிடம், “இதோ இவரே உங்கள் மன்னர். எனக்கு வயதாகிவிட்டது. நான் யாருக்காவது அநீதி இழைத்திருந்தாலோ, யாரையேனும் ஏமாற்றியிருந்தாலோ, கையூட்டு பெற்றிருந்தாலோ சொல்லுங்கள். நான் திருப்பித் தந்து விடுகிறேன்” என்றார். மக்களோ, “இல்லை.. நீர் யாரையும், ஏமாற்றவில்லை, யாரையும் ஒடுக்கவில்லை, யாரையும் வஞ்சிக்கவில்லை” என்றார்கள்.

சாமுவேல் மக்களிடம் நீங்கள் ‘ஒரு அரசன்’ வேண்டும் என கேட்டதே தவறு தான். எனினும் கடவுளைப் பின்பற்றுவதிலிருந்து விலகாதீர்கள். இல்லையேல் நீங்களும் உங்கள் மன்னனும் அழிவீர்கள் என்றார்.

காலங்கள் கடந்தன. சவுல் கடவுளின் வழியை விட்டு விலகினான். எனவே கடவுளின் அருகாமையும் அவரை விட்டு விலகியது. சாமுவேல் வயதாகி இறந்தார்.

இப்போது சவுலுக்கு முன் சவால். பெலிஸ்தியர் படைதிரண்டு வருகிறார்கள். சவுலுக்கு வழிகாட்ட சாமுவேல் இல்லை. அவர் குறி சொல்லும் பெண் ஒருத்தியிடம் மாறுவேடமிட்டு சென்று சாமுவேலின் ஆவியை எழுப்பி குறிகேட்டான்.

“என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய் ? கடவுளின் அருள் உன்னை விட்டு விலகிவிட்டது. தாவீது மன்னனாகப் போகிறான். நீ அழியப் போகிறாய்.”  என அழுத்தம் திருத்தமாய்ச் சொன்னது சாமுவேலின் ஆவி. சாமுவேல் இறந்தபிறகும் ஒரு தீர்க்கத் தரிசியாய் செயலாற்றியது வியப்பூட்டுகிறது.

சாமுவேல் எப்போதுமே கடவுளின் வார்த்தைகளுக்கே முதலிடம் கொடுத்தார். கடவுளின் வார்த்தைகளை குறைத்தோ, மறைத்தோ அவர் பேசவில்லை. கடவுளின் கட்டளையை அப்படியே செயல்படுத்தினார். எந்த ஒரு தீர்மானமாக இருந்தாலும், கடவுளிடம் முதலில் கேட்கும் நபராக சாமுவேல் இருந்தார். ஒட்டு மொத்த மக்களின் விருப்பமாக இருந்தால் கூட, கடவுளிடம் கேட்காமல் அவர் எதையும் செய்யவில்லை.

இத்தகைய நல்ல குணங்களைக் கற்றுக் கொள்ள சாமுவேலின் வாழ்க்கை நம்மைத் தூண்டட்டும்.

பைபிள் மாந்தர்கள் 27 (தினத்தந்தி) : ஏலி

ஏலி ! சீலோம் தேவாலயத்தில் தலைமைக் குருவாக இருந்தவர். இவரே நீதித் தலைவர். நீதித் தலைவர் என்பவர் அரசருக்கு அடுத்த நிலையில் இருப்பவர். அந்த காலத்தில் அரசர்கள் இல்லை. எனவே ஏலியின் இடமே மிக உயரிய இடமாய் இருந்தது. மக்களின் குறைகளுக்கு இறைவனின் அருளால் தீர்வு காண்பதும், இறைவனின் சித்தத்தை மக்களுக்குத் தெரியப்படுத்துவதும் இவரது முதல் கடமை. ஏலி மிகுந்த இறையச்சமும், இறை பக்தியும் உடையவர்.

ஏலி நல்லவராக இருந்தாலும் குருக்களாக இருந்த அவருடைய பிள்ளைகள் ஒப்னிக்கும், பினகாசும் தலைகீழாக இருந்தார்கள். அவர்களிடம் இறை அச்சம் துளிகூட இல்லை. இறைவனுக்காகப் படைக்கப்படும் படைப்புப் பொருட்களை அவர்கள் துச்சமாக நினைத்தார்கள். இறைச்சியையெல்லாம் பலிக்கான விதிமுறைகளை மீறி பயன்படுத்தி வந்தார்கள். யாராவது எதிர்த்துக் கேட்டால் வன்முறையைக் கையாண்டார்கள்.

கடவுளுக்குப் பணிசெய்த பெண்களிடமே தகாத உறவில் ஈடுபட்டிருந்தனர். ஏலியால் இவர்களை நல்வழிப்படுத்த முடியவில்லை. அவர் முதிர் வயதுடையவராக இருந்தார். ஆனாலும் அவர்களிடம் அறிவுரை சொன்னார்..

“ஏம்பா.. ஊரே உங்களைப் பத்தி தப்பா பேசுதே. இது சரியில்லை. ஏன் இப்படியெல்லாம் செய்றீங்க ? நான் கேள்விப்படற விஷயங்களெல்லாம் நல்லாயில்லை. மனுஷனுக்கு எதிரா பாவம் செஞ்சா கடவுள் கிட்டே வேண்டுதல் செய்யலாம். நீங்க கடவுளுக்கு எதிராகவே தப்பு செய்றீங்களே. இதெல்லாம் தப்பு” என்றார். அவர்கள் கேட்கவில்லை. கடவுளின் கோபம் அவர்கள் மேல் விழுந்தது.

ஏலியிடம் இறையடியார் ஒருவர் வந்தார். கடவுளின் வார்த்தைகளை அவரிடம் சொன்னார். “உன் வீடும் உன் மூதாதை வீடும் என்றென்றைக்கும் கடவுளுக்காய் பணிசெய்யும் என்ற கடவுளின் வாக்குறுதியை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார். உங்கள் ஆற்றல் மற்றும் உங்கள் மூதாதை ஆற்றல் அழிக்கப்படும். நீங்கள் கடவுளை விட உங்கள் பிள்ளைகளை உயர்வாக நினைக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தில் முதியவர்களே இல்லாத நிலை வரும். உன்னுடைய இரு பிள்ளைகளும் ஒரே நாளில் மாண்டு போவார்கள்” என்றார். ஏலி அதிர்ந்தார்.

கடவுள் ஏலியின் ஆலயத்தில் பணிபுரியும் சாமுவேல் எனும் சிறுவனிடமும் தனது திட்டத்தை அசரீரி மூலம் தெளிவாக்கினார். “தனது பிள்ளைகள் தப்பு செய்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்களைத் திருத்தாத குற்றத்துக்காக ஏலியின் குடும்பம் தண்டனை பெறும். இந்த தண்டனையை பூஜை, படையல் போன்றவற்றால் விலக்கி விட முடியாது” என்றார். ஏலி இதைக் கேட்டு கலங்கினார். “அவர் ஆண்டவர். அவரது பார்வையில் நல்லது எதுவோ அதைச் செய்யட்டும்” என்றார்.

காலங்கள் கடந்தன. சாமுவேல் வளர்ந்தார். இப்போது பெலிஸ்தியர்கள் இஸ்ரயேல் மக்களுக்கு எதிராகப் போரிட்டனர். கடவுள் இஸ்ரயேல் மக்கள் சார்பாக நிற்கவில்லை. போரில் இஸ்ரயேலர்கள் நாலாயிரம் பேர் கொல்லப்பட்டனர். கடவுளின் பேழையைக் கையோடு தூக்கிச் செல்வோம், வெற்றி கிடைக்கும் என இஸ்ரயேலர் நினைத்தனர். அதைக்கேட்டு பெலிஸ்தியர் நடுங்கினாலும், தைரியமாகப் போரிட்டு இஸ்ரயேலர்கள் முப்பதாயிரம் பேரைக் கொன்றனர். ஏலியின் மகன்கள் இருவரும் ஒரே நாளில் பலியானார்கள். கடவுளின் பேழையும் பெலிஸ்தியரிடம் அகப்பட்டது.

ஏலிக்கு அப்போது தொன்னூற்று எட்டு வயது. இஸ்ரயேலரின் வீழ்ச்சி நகர் முழுவதும் பேரழுகையாக உருவெடுத்தது. “என்ன நடக்கிறது” என பதறினார் ஏலி. அவருக்கு கண்பார்வையும் இல்லை. “நான் போர்க்களத்திலிருந்து வருகிறேன். இஸ்ரயேலர் தோற்று விட்டார்கள். உங்கள் மகன்கள் இருவரும் மாண்டனர்” என்றான் வந்தவன்.

“கடவுளின் உடன்படிக்கைப் பேழையும் கைப்பற்றப்பட்டது” என்றான் செய்தி சொன்னவன். அதைக் கேட்டதும் ஏலி அதிந்து போய் நிலைதடுமாறி கீழே விழுந்தார். கழுத்து முறிய அங்கேயே மரணமடைந்தார். இஸ்ரயேல் மக்களை நாற்பது நெடிய ஆண்டுகள் நீதித் தலைவராய் இருந்து ஆண்ட ஏலியின் சகாப்தம் அங்கே நிறைவுற்றது.

ஏலியின் வாழ்க்கை சொல்வதென்ன ?. முதலாவது, ஒரு தந்தையின் கடமை தனது பிள்ளைகளின் பாவங்களைப் பொறுத்துக் கொள்ளாமல் சரியான பாதையில் வழிநடத்துவது என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறது.

இரண்டாவது, கடவுளுக்கே முதலிடம் எனும் பாடம். உயிருக்கு உயிரான பிள்ளைகள் கூட அடுத்தடுத்த இடங்களையே பெறவேண்டும். மாதா பிதா குரு தெய்வம் எனும் உலக வரிசையல்ல, தெய்வம் – எனத் தொடங்கும் ஆன்மீக வரிசையே தேவை என்கிறது.

மூன்றாவது, கடமை தவறுபவர்கள் பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களை பதவி நீக்கம் செய்யும் ஒழுக்கமும், கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வைக்கும் கண்டிப்பும் தந்தையிடம் இருக்க வேண்டும் எனும் நேர்மை வேண்டும் என்கிறது.

குழந்தைகளை வளர்ப்பது மிகப்பெரிய பணி. தந்தை எவ்வளவு பெரிய ஆன்மீகவாதியாய், நீதித் தலைவராய் இருந்தாலும் இதில் தோல்வியடைய முடியும். ஏலியின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை மணி.

குழந்தைகளை வளர்ப்போம். செல்லங்களாக அல்ல, விண்ணக வழி செல்லும் செல்வங்களாக.

பைபிள் மாந்தர்கள் 26 (தினத்தந்தி) : அன்னா

அன்னா

எல்கானா-வுக்கு அன்னா, பெனின்னா என இரண்டு மனைவிகள். பெனின்னாவுக்குக் குழந்தைகள் உண்டு. ஆனால் அன்னாவுக்கோ குழந்தைப் பேறு இல்லை. பண்டைய காலங்களில் குழந்தைப் பேறு என்பது கடவுளின் அருள் எனவும், அந்தப் பாக்கியம் இல்லாதவர்கள் இறையருள் இல்லாதவர்கள் எனவும் கருதப்பட்டார்கள். அதனால் அவர்கள் அவமானங்களையும், வெறுப்பையும், மன உளைச்சலையும் சந்திப்பது வாடிக்கை. அன்னாவும் அத்தகைய ஒரு சூழலுக்கே தள்ளப்பட்டார்.

பெனின்னா அன்னாவைக் நகைத்தும், துன்புறுத்தியும் வதைத்தாள். எல்கானா அன்னாவின் மீது அதிக பாசம் வைத்திருந்தார். ஆண்டு தோறும் சீலோ எனுமிடத்திலுள்ள ஆலயத்தில் கடவுளை வழிபட வருவார். அந்த ஆலயத்தில் ஏலி என்பவர் தலைமைக் குருவாக இருந்தார்.

ஆண்டுதோறும் அன்னா ஆண்டவரின் ஆலயத்துக்குள் வந்து மனம் கசிந்து கண்ணீர் விட்டு அழுவாள். அவள் உண்ணாமல் அழும்போதெல்லாம், “நீ ஏன் அழறே, நான் உனக்கு பத்து பிள்ளைகளுக்குச் சமம் இல்லையா ?” என செல்லமாய் ஆறுதல் சொல்வார் எல்கானா. ஆனாலும் அவளுடைய துயரம் குறையவில்லை.

ஒருநாள் ஆலய முற்றத்தில் வழக்கம் போல அன்னா அழுது புலம்பி கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தார். “ஆண்டவரே என்னோட கஷ்டத்தைப் பாத்து எனக்கு ஒரு ஆண் குழந்தையைக் குடுங்க. அந்தக் குழந்தையை நான் வாழ்நாள் முழுக்க உங்களுக்காகவே ஒப்புக்கொடுப்பேன்” என்று பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டிருந்தாள். அந்த ஆலய முற்றத்தில் தலைமைக் குரு ஏலி ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார்.

ஏலி தூரத்திலிருந்து கவனித்தபோது அன்னா குடிபோதையில் உளறிக் கொண்டிருப்பது போல அவருக்குத் தோன்றியது. ஆலயவாசலில் ஒரு பெண் குடிபோதையில் உளறுகிறாளே என்று ஏலி விரைவாய் அவளிடம் வந்தார். “எவ்வளவு காலம் தான் நீ குடிகாரியா இருப்பாய் ? குடிக்கிறதை நிறுத்து” என்றார் அவர். அன்னா பதறினார். “ஐயோ நான் குடிகாரியல்ல. மனம் நொந்து போய் ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.” என்றாள். ஏலி மனம் வருந்தினார்.. “கவலைப்படாதே, உன் விண்ணப்பத்தைக் கடவுள் கேட்டருள்வார்” என்றார்.

அன்னா மனம் மகிழ்ந்தாள், “உமது அடியாள், உம் கண்முன்னே அருள் பெறுவாளாக” என்று சொல்லிவிட்டு லேசான மனதுடன் கவலையின்றி நடந்து போனாள். அன்னாவின் வேண்டுதல் கேட்கப்பட்டது ! குழந்தைகளே இல்லாத அன்னாளுக்கும் எல்கானாவுக்கும் ஒரு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டார்கள்.

கடவுள் அருளினால் அதிசயமாய்ப் பிறந்த மகனை அன்னா பாலூட்டிச் சீராட்டி வளர்த்தாள். அவன் பால்குடி மறந்ததும் அவனை ஆலயத்தில் இறை பணிக்கென விட்டு விடுவதாய் ஏற்பாடு. எல்கானா மறுப்பு சொல்லவில்லை. சாமுவேல் சிறுவனாகி பால்குடி மறந்ததும் அவனைத் தூக்கிக் கொண்டு அன்னா ஆலயத்துக்கு வந்தாள். வந்து குரு ஏலியின் முன்னாள் நின்றாள். “குருவே… அன்று குடிபோதையில் உளறுவதைப் போல பேசிய பெண் நானே. இந்தக் குழந்தைக்காகத் தான் அப்படி வேண்டினேன். என் விண்ணப்பத்தைக் கேட்ட கடவுளுக்கே இவனை அர்ப்பணிக்கிறேன். இவன் வாழ்நாள் முழுதும் கடவுளுக்கே அர்ப்பணிக்கப் பட்டவன்” என்றாள்.

அன்னாவின் வாழ்க்கை சில விஷயங்களைக் கற்றுத் தருகிறது.

முதலாவது, தளராத விசுவாசம். தொடர்ந்து பல ஆண்டுகளாகக் குழந்தைகள் இல்லை. ஆனாலும் அன்னா பிரார்த்தனையில் இருந்து பின் வாங்கவில்லை. கடவுள் அவருக்கு ஒரு குழந்தையைக் கொடுக்கும் வரை அவர் தொடர்ந்து மனமுருகி வேண்டுகிறார்.

தனக்கு ஒரு குழந்தை வேண்டும் எனும் அன்னாவின் பிரார்த்தனை பின்னர், “உமக்காய் எனக்கு ஒரு குழந்தையைத் தாரும்” எனும் நிலைக்கு மாறியது. இறைவனை முதன்மைப் படுத்தும் போது விண்ணப்பங்கள் விரைவாய் அங்கீகரிக்கப்படுகின்றன.

கடவுளின் திட்டம் வியப்பானது. அன்னாவுக்கு முதலிலேயே குழந்தை பிறந்திருந்தால் அவன் ஆலயத்திற்கு அற்பணிக்கப்பட்டிருக்க மாட்டான். சாமுவேல் எனும் மாபெரும் தீர்க்கத் தரிசி மனுக்குல வரலாற்றுக்குக் கிடைத்திருக்க மாட்டார்.  கடவுளின் திட்டம் என்ன என்பது மனிதக் கண்களுக்கு மிகத் தாமதமாகவே விளங்குகிறது.

விண்ணப்பம் கிடைத்ததும் கடவுளை மறக்கவில்லை அன்னா. உயிருக்கு உயிராய் வளர்த்த குழந்தையையே ஆலயத்தில் இறை பணிக்காய் முழு மனதுடன், ஆனந்தத்துடன் ஒப்புக்கொடுக்கிறாள். கடவுளுக்காய் ஒரு நன்றிப் பாடலையும் பாடுகிறாள்.

சாராள், ரபேக்கா, ராகேல், அன்னா என விவிலியத்தில் குழந்தைகளுக்காய் அழுது புலம்பிய அன்னையர் அனேகர். அவர்கள் மூலமாய் பிறந்த குழந்தைகள் தான் ஈசாக், யாக்கோபு, யோசேப்பு, சாமுவேல் என விசுவாச வாழ்க்கையைக் கட்டிக் காக்கும் மாபெரும் தூண்களாக மாறியிருக்கிறார்கள்.

நமது விண்ணப்பங்கள் உடனுக்குடன் அங்கீகரிக்கப் படவில்லையேல் கடவுள் நம்மை கை விட்டு விட்டார் என புலம்புகிறோம். தாமதம் என்பது நிராகரிப்பு அல்ல, நமது விசுவாசத்துக்கான சோதனை என்பதை உணர்ந்து இறையில் நிலைத்திருப்போம் !

பைபிள் மாந்தர்கள் 25 (தினத்தந்தி) : ரூத்

 

யூதேயாவிலுள்ள பெத்லேகேம் எனும் இடத்தில் மனைவி நகோமி, மகன்கள் மக்லோன், கிலியோன் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார் இஸ்ரயேலரான எலிமலேக்கு. நாட்டில் கொடிய பஞ்சம் வந்தது, பிழைப்புக்காக மோவாபு எனும் நாட்டில் குடியேறினார்கள். துயரம் அவர்களைத் துரத்தியது எலிமலேக்கு இறந்து போனார். மகன்கள் இருவரும் ஓர்பா, ரூத்து எனும் வேற்று இனப் பெண்களை மணந்து கொண்டார்கள். துயரம் அவர்களை விடாது துரத்தியது. இரண்டு மகன்களுமே இறந்து போக அதிர்ச்சியில் உறைந்தார் நகோமி.

நகோமி சொந்த ஊருக்குப் புறப்பட்டார். மருமக்களிடம் “நீங்கள் உங்கள் இனத்தாரிடம் சென்று வாழுங்கள்” என்றார். அவர்களோ மறுத்தனர்.

“எனக்கோ வயதாகிவிட்டது, இனிமேல் குழந்தை பெற்று அதை வளர்த்தி உங்கள் கணவனாக தர என்னால் முடியாது. நீங்கள் சொந்த ஊருக்குச் சென்று நலமுடன் வாழுங்கள்” என நகோமி மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். ஓர்பா கண்ணீருடன் விடைபெற்றாள். ரூத்து போகவில்லை. “இனிமேல் உங்கள் குலமே என் குலம், உங்கள் தெய்வமே என் தெய்வம், மரணம் வரை உங்களோடு தான் என் வாழ்க்கை” என்றாள். நகோமி நெகிழ்ந்தாள்.

ஊருக்குத் திரும்பிய அவர்கள் வறுமை வாழ்க்கையைத் தொடர்ந்தனர். வாற்கோதுமை அறுவடைக் காலம் வந்தது. ரூத்து மாமியாரிடம், “நான் அறுவடை நிலங்களுக்குப் போய் அங்கே உதிரும் மணிகளை பொறுக்கி வருகிறேன். அனுமதியுங்கள்” என்று கேட்டாள். அந்தக் காலத்தில் ஏழைகள் இப்படி செய்வதுண்டு. வேலையாட்களின் சில்மிஷ தொல்லைகளுக்கு ஆளாவதும் உண்டு. எனவே நகோமி யோசித்தாள். வேறுவழியின்றி அனுமதித்தாள்.

ரூத்து ஒரு நிலத்துக்குப் போய் அங்கிருந்த பெண்களோடு சேர்ந்து நிலத்தில் உதிரும் கோதுமை மணிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்துக்குப் பின் நிலத்தின் உரிமையாளர் அங்கே வந்தார். அவர் பெயர் போவாசு. அவர் ஒரு வகையில் ரூத்தின் முறை மாப்பிள்ளை. புதிதாக ஒரு பெண்ணைக் கண்டதும் அவர் நெற்றி சுருக்கினார். யார் என விசாரித்தார். அவர்கள் ரூத்தைப் பற்றிக் கூறினர். அவர் அவளிடம் பரிவுடன் நடந்து கொண்டார். “வேறு வயல்களுக்குச் செல்ல வேண்டாம் இங்கேயே இரு” என அன்பாய்ச் சொன்னார்.

“யாரும் இவளைத் தொந்தரவு செய்யாதீர்கள். கதிர்களை வேண்டுமென்றே உருவிப் போடுங்கள். இந்தப் பெண் எடுத்துக் கொள்ளட்டும்” என வேலையாட்களிடம் கூறினார். மதிய வேளையில் தனது உணவையும் ரூத்துடன் அவர் பகிர்ந்து உண்டார். நடந்தவற்றைக் கேட்ட நகோமி ஆனந்தமடைந்தார். அறுவடை முடியும் வரை  ரூத்து அந்த வயலிலேயே இருந்தார்.

ஒருநாள் நகோமி ரூத்தை அழைத்து, “போவாசு உன்னைக் காக்கும் கடமை உடையவர். நீ அவருடைய கூடாரத்துக்குச் சென்று அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது, கால்களில் இருக்கும் போர்வையை விலக்கி அங்கே படுத்துக் கொள்” என்றார். ரூத்தும் அப்படியே செய்தார். நள்ளிரவில் திடீரென விழித்த போவாசு போர்வைக்குள் ஒரு பெண்ணைப்  பார்த்ததும் குழம்பினார். “யார் நீ ?” என்றார்.. “நான் தான் ரூத்து. நான் உமது அடியாள், நீர் என்னைக் காக்கும் உறவு முறையினர்” ரூத்து சொன்னாள்.

போவாசு வியந்தார். “நீ இளமையானவள், இருந்தாலும் ஒரு இளமையானவனையோ, செல்வந்தனையோ தேடாமல் உறவு முறையைத் தேடி வந்திருக்கிறாய். மகிழ்ச்சி. ஆனாலும் என்னை விட உன்னை மணக்க அதிக உரிமையுள்ளவன் இன்னொருவன் உண்டு. அவனிடம் முதலில் பேசுகிறேன். அவன் மறுத்தால் நீ என்னுடையவள்” என்றார்.

மறுநாள்  ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில், அந்த மனிதரிடம் பேசினார் போவாசு. “நகோமி நிலத்தை விற்கிறார். நீர், வாங்குகிறீரா ? கூடவே ரூத்தையும் மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் ” போவாசு சொல்ல, அந்த மனிதர் மறுத்தார்.

“அப்படியானால் நமது வழக்கப்படி உமது செருப்பைக் கழற்றி என்னிடம் தாரும்” போவாசு கேட்க அந்த மனிதர் அப்படியே செய்தார். அப்படி ஊர் முன்னிலையில் தனது முன்னுரிமையை அவர் போவாசுக்கு விட்டுக் கொடுக்க,  போவாசு ரூத்தை மணந்து கொண்டார்.

போவாசுக்கும் ரூத்துக்கும் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் ஓபேது ! அந்த ஓபேது தான் தாவீது மன்னனின் தாத்தா ! இயேசுவின் வம்சாவளிப் பட்டியலில் இடம் பிடித்தவர்.

ரூத்தின் வாழ்க்கை பல்வேறு படிப்பினைகளை நமக்கு கற்றுத் தருகிறது. வேற்று இனத்தாராய் இருந்தாலும், உண்மை இறைவனை நாடி வந்து, அவரில் நம்பிக்கை வைத்ததால் இறைவனின் இணையற்ற கருணையைப் பெறலாம் என்பது முதல் பாடம். மாமியார் என்பவர் தாயைப் போன்று நேசிக்கப்பட வேண்டியவர் என்பது இரண்டாவது பாடம். தனது வாழ்க்கை, தனது இன்பம் எனும் சுயநல சிந்தனைகளை வெறுத்தால் இறைவனின் அருளை நிறைவாய்ப் பெறலாம் என்பது மூன்றாவது பாடம்.

பைபிள் மாந்தர்கள் 24 (தினத்தந்தி) : சிம்சோன்

samson-brings-down-the-house

“நீ கருவுற்று ஒரு மகனைப் பெறுவாய். அவன் கடவுளுக்கு உரியவனாய் இருப்பான். அவன் தலையில் சவரக் கத்தி படக் கூடாது. பெலிஸ்தியரிடமிருந்து இஸ்ரவேல் மக்களை அவன் மீட்பான்.!” கடவுளின் தூதர் மலடியாய் இருந்த மனோவாகின் மனைவியிடம் இதையெல்லாம் சொன்னபோது அவள் மகிழ்ச்சிக் கடலில் நீந்தினாள். மலடியாய் இருக்கும் தனக்கு ஒரு மகன் பிறக்கப் போகிறான் என்பது மகிழ்வின் முதல் காரணம். நாற்பது ஆண்டுகளாக பெலிஸ்தியரிடம் அடிமையாய் இருக்கும் தனது இஸ்ரயேல் இனம் விடுதலை பெறும் என்பது இன்னொரு காரணம்.

ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ‘சிம்சோன்’ என பெயரிட்டனர். இறையருளுடன் சிம்சோன் வளர்ந்தார். திமினா என்னுமிடத்தில் பெலிஸ்தியப் பெண் ஒருத்தியைக் கண்டு மனதைப் பறிகொடுத்தார். எதிரிகளின் வம்சத்தில் மனைவியா என பெற்றோர் கவலைப்பட்டனர். இருந்தாலும் சிம்சோனுடன் அவளுடைய வீட்டுக்குச் சென்றனர்.

வழியில் ஒரு இளம் சிங்கம் கர்ஜித்துக் கொண்டே அவர் மேல் பாய்ந்தது. அவர் வெறுங்கையால் அந்தச் சிங்கத்தைக் கிழித்துக் கொன்றார். அதை யாரும் அறியவில்லை. பெண்ணைப் பார்த்தாயிற்று. மணமுடிக்கவும் முடிவு செய்தாயிற்று. சில நாட்களுக்குப் பின் மனைவியை அழைத்துச் செல்ல வரும் போது அந்த சிங்கத்தின் எலும்புக் கூடுகளிடையே தேனீக்கள் தேனடை ஒன்றை வைத்திருப்பதைக் கண்டு சுவைத்தார்.

மனைவியின் வீட்டில் வந்து அங்கிருந்த முப்பது இளைஞர்களிடமும் ஒரு விடுகதை போட்டார். “உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது: வலியவனிடமிருந்து இனியது வந்தது. அது என்ன ?” இதன் விடையைச் சொன்னால் முப்பது நாற்பட்டாடைகள், முப்பது மேலாடைகள் உங்களுக்கு தருவேன் இல்லையேல் எனக்கு நீங்கள் தரவேண்டும் என்றார். அவனது சிங்கம் தேனடை கதை யாருக்கும் தெரியாததால் யாரும் விடை சொல்லவில்லை.

நண்பர்களோ சிம்சோனின் மனைவியை நச்சரித்து அவள் மூலமாய் உண்மையை கறந்தனர். அந்த விடையை சிம்சோனிடம் சொன்னதும் அவர் மனைவி மேல் கோபம் கொண்டார். அவர்களுடைய இனத்தவரில் முப்பது பேரைக் கொன்று அந்த ஆடைகளை அவர்களிடம் கொடுத்து விட்டுக் கிளம்பினார்.

சிம்சோன் இனிமேல் திரும்பி வரமாட்டான் என நினைத்து அவனுடைய மனைவியை இன்னொருத்திக்கு மணமுடித்து வைத்தனர். ஆனால் சிம்சோன் சிலநாட்களுக்குப் பின் மீண்டும் வந்தார். விஷயம் கேள்விப் பட்டு கடும் கோபமடைந்தார். முன்னூறு நரிகளைப் பிடித்து, இரண்டிரண்டு நரிகளின் வால்களைச் சேர்த்துக் கட்டி, அதில் ஒரு தீப்பந்தமும் வைத்து விளைநிலங்களில் அனுப்பி வைத்தார். எல்லாம் எரிந்து நாசமாகின.

மக்கள் கோபம் கொண்டு சிம்சோனின் மனைவியையும், அவள் தந்தையையும் நெருப்பில் எரித்தனர். சிம்சோனின் கோபம் எல்லை கடந்தது. பல ஆயிரம் பேரை அவன் ஒற்றை ஆளாய் நின்று கொன்றார். இருபது ஆண்டுகள் அவர் இஸ்ரயேல் மக்களின் நீதித் தலைவராக இருந்தார்.

கடைசியாக தெலீலா எனும் ஒரு அழகியைக் காதலித்தார். பெலிஸ்திய சிற்றரசன் அவளிடம் சென்று, ‘சிம்சோனின் வலிமையின் ரகசியத்தைக் கண்டுபிடித்துச் சொல் உனக்கு ஆயிரத்து நூறு வெள்ளிக்காசுகள் தருவேன்” என ஆசைகாட்டினார். அவளும் சிம்சோனைப் படாத பாடுபடுத்தி, சிம்சோனிடமிருந்து உண்மையை வாங்கினாள். “என் வலிமை என் தலை முடியில் தான்” சிம்சோன் சொல்ல, அவள் மகிழ்ந்தாள். நயவஞ்சகமாய், மடியில் கிடத்தி உறங்க வைத்து தலைமுடியை வழித்தாள்.

பெலிஸ்திய வீரர்கள் வந்தபோது சிம்சோனிடம் வலிமை இருக்கவில்லை. அவர்கள் அவனை இழுத்துக் கொண்டு போய் கண்களை நோண்டி, சித்திரவதை செய்து சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்குப் பின்னர் பிலிஸ்திய சிற்றரசர்களும், முக்கியமான நபர்களும், ஆயிரக்கணக்கான மக்களும் கூடியிருந்த மண்டபத்தில் சிம்சோன் வேடிக்கை காட்ட இழுத்து வரப் பட்டான். அவனுடைய தலைமுடி வளர்ந்து கொண்டே இருந்ததை யாரும் கவனிக்கவில்லை.

அந்த மண்டபத்தில் பெரிய இரண்டு தூண்கள் இருந்தன. “கடவுளே ஒரே ஒரு முறை எனக்கு வலிமை தாரும்” சிம்சோன் மனதுருகி வேண்டினார். பின் இரண்டு கைகளையும் இரண்டு தூண்களில் வைத்து பலமாக சாய்த்தார். தூண்கள் சரிய, மாளிகை தரைமட்டமாக, சிம்சோனுடன் சேர்ந்து எல்லோருமே சமாதியானார்கள். சிம்சோன் மூலமாக கடவுள் இஸ்ரயேலர்களுக்கு விடுதலையை வழங்கினார்.

சிம்சோனுடைய வாழ்க்கை சிற்றின்ப மோகத்தில் விழுந்து விடுகின்ற ஒரு மாவீரனின் வீழ்ச்சியைப் பேசுகிறது. தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் இளம் சிங்கத்தை வெறும் கையால் அடித்துக் கொல்லும் வலிமை அவனுக்கு இருந்தது. ஆனால் தனது மனசுக்குள் சீறிப் பாய்ந்து திரிந்த சிற்றின்பச் சிங்கத்தை கொல்லும் வலிமை அவரிடம் இருக்கவில்லை. வசீகரமான பெண்களிடமெல்லாம் தனது மனதைப் பறிகொடுத்து விடும் பலவீனரான அவர் இருந்தார். அழைத்தலில் மட்டும் நிலைத்திராமல் சஞ்சலம் அடைந்து கொண்டே இருந்ததால் அவரது வாழ்க்கை துயரமான நிகழ்வுடன் முடிந்து போய்விடுகிறது.

பைபிள் மாந்தர்கள் 23 (தினத்தந்தி) : இப்தா ( Jephthah)

இப்தா ஒரு வலிமையான போர் வீரன். ஒரு விலைமாதிற்குப் பிறந்தவன். எனவே அவனுடைய தந்தையின் குடும்பத்தினர் அவரை வெறுத்து துரத்தி விட்டார்கள். அவர் தப்பி ஓடி தோபு எனும் நாட்டில் வாழ்ந்து வந்தார். கடவுளின் அழைப்பு இப்தாவுக்கு வந்தது !

எத்தனை முறை பட்டாலும் திருந்தாத இனமாக இருந்தது இஸ்ரயேல். கடவுளின் தொடர்ந்த அன்பையும், பாதுகாப்பையும் பெற்ற அவர்கள் மீண்டும் கடவுளை நிராகரித்து வேற்று தெய்வங்களை வழிபடத் துவங்கினார்கள். எனவே அவர்கள் பலவீனமடைந்து எதிரிகளால் மீண்டும் அடிமையாக்கப் பட்டார்கள். அம்மோனியர்கள் அவர்களை நீண்ட நெடிய பதினெட்டு ஆண்டுகள் துன்புறுத்தினார்கள்.

இஸ்ரயேல் மக்கள் மீண்டும் கடவுளிடம் கதறி மன்றாடினார்கள். இந்த முறை கடவுள் சட்டென மனம் இரங்கவில்லை. மீண்டும் மீண்டும் வழி விலகிச் செல்லும் மக்கள் மீது கோபம் கொண்டார். “வேறு தெய்வங்களைத் தேடிப் போனீர்களே..அவர்களே உங்களை விடுவிக்கட்டும் என்றார்”. மக்களோ தொடர்ந்து வேண்டினர்.

தங்களிடம் இருந்த வேற்று தெய்வ வழிபாடுகளை எல்லாம் விலக்கினர். மனம் திருந்தியதைச் செயலில் காட்டியதால் கடவுள் மனமிரங்கினார். அம்மோனியருக்கு எதிராக யார் போரிட்டு வெல்வாரோ அவரே நம் தலைவர் என மக்கள் தங்களுக்குள் முடிவு செய்தார்கள். அப்போது தான் இப்தா அழைக்கப்பட்டார்.

இப்தா மக்களிடம் வந்து,”என்னை உதாசீனப்படுத்தி அனுப்பி விட்டீர்கள். உங்களுக்குத் தேவைப்படும் போது மட்டும் என்னை அழைப்பீர்களோ ?” என தனது மன வருத்தத்தைக் கொட்டினார். மக்கள் அவரை சமாதானப் படுத்தி தங்கள் விடுதலைக்காகப் போரிடுமாறு வேண்டினார்கள். அவரும் ஒத்துக் கொண்டார்.

முதல் முயற்சியாக அம்மோனிய மன்னனிடம் ஒரு தூதனை அனுப்பி சமாதானம் செய்து கொள்ள முயன்றார். எதிரி மன்னன் விட்டுக் கொடுக்கவில்லை. எனவே போர் ஒன்றே முடிவு எனும் நிலை உருவானது. கடவுளின் அருள் இப்தாவின் மீது நிரம்பியது.

இப்தா ஒரு நேர்ச்சை செய்தார். “கடவுளே, நீர் எதிரிகளை என் கையில் ஒப்புவித்தால். நான் வெற்றியுடன் திரும்பி வரும்போது என் வீட்டு வாயிலில் இருந்து யார் புறப்பட்டு வருகிறாரோ, அவர் ஆண்டவருக்கு உரியவர். அவரை எரிபலியாகத் தருவேன்” என்றார்.

போர் நடந்தது. ஆண்டவர் அருளுடன் போரிட்ட இப்தா வெற்றி பெற்றார். பதினெட்டு ஆண்டு கால துயர வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இப்தா மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார். இந்த செய்தியைக் கேட்டு மிக்க மகிழ்ச்சியுடன் மேள தாளங்களுடனும் அவரைச் சந்திக்க அவர் வீட்டு வாயிலில் இருந்து ஒரு பெண் ஓடி வந்தாள். அவள் இப்தாவின் அன்பு மகள். ஒரே மகள். அவருக்கு வேறு பிள்ளைகளே இல்லை !

இப்தா கடும் அதிர்ச்சியடைந்தார். தனது ஆடைகளைக் கிழித்துக் கொண்டு கதறினார்.. “ஐயோ மகளே.. என்னைத் துன்பத்தில் தள்ளி விட்டாயே” என்று புலம்பி தனது நேர்ச்சை பற்றி மகளிடம் சொன்னார். மகிழ்ச்சிக் கொண்டாட்டம் சட்டென கலைய, நிலைகுலைந்து போய் நின்றாள் மகள். ஆனாலும் கடவுளின் விருப்பமே நடக்கட்டும். இரண்டு மாதங்கள் நான் என் தோழியருடன் மலைகளில் சுற்றித் திரிந்து எனது கன்னிமை குறித்து நான் துக்கம் கொண்டாட வேண்டும் என்றாள் கண்ணீருடன்.

தந்தை தலையசைத்தார். மகள் மலைகளுக்கு பயணமானாள். இரண்டு மாதங்களுக்குப் பின் அவள் கன்னியாகவே தந்தையிடம் திரும்பி வந்தாள். அப்பா நான் தயார் என்றாள். இப்தா கடவுளுக்குச் செய்த நேர்ச்சையை நிறைவேற்றினார்.

அதிர்ச்சியும், வியப்பும், மகிழ்ச்சியும் கலந்த வாழ்க்கை இப்தாவுடையது. கடவுளுக்குக் கொடுத்த வாக்கை மன உறுதியுடன் இப்தா காப்பாறினார். அந்த நாட்களில் வீடுகளின் கீழ்த் தளத்திலும், வாயிலிலும் கால்நடைகளை பராமரிப்பது வழக்கம். அந்த அடிப்படையில் இப்தா நேர்ச்சை செய்திருக்கலாம். ஆனால் வெற்றி பெற்றவரை எதிர்கொள்ள வீட்டிலிருக்கும் பெண்கள் ஆடிப்பாடி செல்வார்கள் (1 சாமுவேல் 18 : 6-7 ) என்பதும் அன்றைய வழக்கமே ! எப்படியோ, கடவுளின் அழைப்பை அப்படியே ஏற்காமல் இப்தா செய்த நேர்ச்சை தேவையற்ற ஒன்று

தந்தையின் வேண்டுதலை நிறைவேற்ற தன்னையே தந்த அந்த பெயர் தெரியா பெண்ணின் அன்பும், இறையச்சமும் பிரமிக்கவும் வெலவெலக்கவும் வைக்கிறது.

அழைப்புக்குக் கடவுள் செவி கொடுக்கவில்லையெனில் முதலில் நமது பாவங்களையெல்லாம் விலக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இறைவனின் வார்த்தைகளைச் சோதித்தறியும் தேவையற்ற நேர்ச்சைகளை ஒதுக்க வேண்டும். இறைவனின் முன் செய்த உடன்படிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். தனது வாழ்க்கையை விட இறைவனையே முக்கியமாகக் கொள்ள வேண்டும்.  என பல வேறுபட்ட படிப்பினைகள் இப்தாவின் வாழ்க்கையிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன.

பைபிள் மாந்தர்கள் 22 (தினத்தந்தி) : அபிமெலக்கு

abimelech

இஸ்ரயேல் மக்களை வழிநடத்தி வந்த எருபாகால் எனும் கிதியோனுக்கு பல மனைவியரும், எழுபது பிள்ளைகளும் இருந்தனர். செக்கேம் எனுமிடத்திலிருந்த வைப்பாட்டி மூலமாய் அவருக்கு அபிமெலெக்கு எனும் ஒரு முரட்டு மகனும் இருந்தான். கிதியோன் வயதாகி இறந்தார். இஸ்ரயேல் மக்கள் மீண்டும் பிற தெய்வங்களை வழிபட்டு பாவத்தில் விழுந்தார்கள்.

எருபாகாலுக்கு அபிமெலக்கை மன்னனாக்குதில் உடன்பாடு இருந்ததில்லை. எனவே அபிமெலக்கு சூழ்ச்சியாக தனது தாயின் சகோதரர்களிடம் சென்று, உணர்வு ரீதியாகப் பேசி தந்தைக்குப் பிறகு தலைமை இடத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டான். அவர்கள் அவனுடைய பேச்சில் மயங்கினார்கள். பாகால் பெரித் – கோயிலில் இருந்து எழுபது வெள்ளிக்காசுகளைக் கொடுத்தனர். அவன் அந்தப் பணத்தைக் கொண்டு கொலையாளர்களை வாங்கினான். நேரடியாகத் தன்னுடைய சகோதரர்கள் வீட்டுக்குச் சென்று அவர்கள் எழுபது பேரையும் ஒரே கல்லில் வைத்து அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தான். கடைசி மகனான யோத்தாம் ஒளிந்து கொண்டதால் தப்பித்தான்.

முரடனான அபிமெலெக்கை மக்கள் அரசனாக்கினார்கள். யோத்தாம் அதைக் கண்டு கலங்கினார். வரலாற்றுச் சிறப்பு மிக்க கெரிசிம் மலைக்கு மேல் ஏறிநின்று ஒரு கதையைச் சொன்னார். மரங்களெல்லாம் ஒன்று கூடி தங்களுக்கு அரசனாய் இருக்கும் படி ஒலிவ மரத்திடம் கேட்டன. ஒலிவ மரமோ ‘பயன்படக்கூடிய எண்ணை தயாரிக்கும் பணி எனக்கு உண்டு’ தலைவனாய் இருக்க முடியாது என்றது. மரங்கள் அத்தி மரத்திடம் சென்றன,’ எனக்குப் பழங்கள் விளைவிக்கும் வேலையிருக்கிறது’ என அத்தி மரம் மறுத்தது. மரங்கள் திராட்சைக் கொடியிடம் சென்றன, ‘எனக்கு திராட்சை ரசம் தயாரிக்கும் வேலையிருக்கிறது, அதுதான் முக்கியம்’ என கொடியும் கை விரித்தது.

மரங்களெல்லாம் முட்புதரிடம் போய், அரசனாய் இருக்கும் படி கேட்டன. ஒன்றுக்கும் உதவாத முட்செடி ‘வாருங்கள் நானே உங்கள் அரசன். என் நிழலில் இளைப்பாறுங்கள். இல்லையேல் என்னிடமிருந்து கிளர்ந்தெழும் நெருப்பு மிகப்பெரிய அழிவை உருவாக்கும்’ என்றது.

கதையை சொல்லிய யோத்தாம் மக்களிடம் கண்ணீரோடு பேசினார். என் தந்தை உங்களை மீட்டார். எப்படியெல்லாம் வழிநடத்தினார். அவரையும் கடவுளையும் விட்டு விலகிய நீங்கள் அழிவீர்கள் என சாபமிட்டார். பின்னர் முரடன் அபிமெலெக்குவுக்கு அஞ்சி ஓடி ஒளிந்தார்.

அபிமெலெக்கு மூன்று ஆண்டுகள் கொடுங்கோல் ஆட்சி புரிந்தான். கடவுள் அபிமெலக்குக்கு எதிராக மக்கள் மனதில் பகையை ஊட்டினார். நாட்டில் நிம்மதியும், அமைதியும் விலக, வழிப்பறி, கொலை, கொள்ளையெல்லாம் நடந்தன.  அப்போது  மக்களிடையே ககால் என்பவன் வீரனாய் தோன்றினான். மக்கள் அவனுக்கு ஆதரவு கொடுத்தனர். அவன் அபிமெலக்கை எதிர்த்துப் பேசினார்.

அபிமெலக்கின் வீரன் செபூல், அந்த நகரின் அதிகாரியாய் இருந்தான். அவன் இந்த விஷயத்தை அபிமெலெக்கின் காதுகளில் போட்டான். செபூல், ககாலின் கூடவே இருந்து அவனுக்கு எதிராக சதி வேலை செய்தான். அபிமெலக்கின் வீரர்களிடம் அவனை மாட்டி விட்டான். ககால் வீரமாகப் போரிட்டான் ஆனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தப்பி ஓடினான்.

அபிமெலக் மக்கள் மீது கடும் கோபம் கொண்டு அவர்களை அழிக்கத் துவங்கினான். நகரை அழித்து, நகரில் உப்பைத் தூவினான். மிச்சமிருந்த மக்களில் சுமார் ஆயிரம் பேர் பயந்து போய் எல்பெரித் பாகால் கோயிலுக்குள் போய் பூட்டிக் கொண்டனர். கோயிலுக்குள் இருந்தால் தப்பலாம் என நினைத்தனர். அபிமெலெக்கோ மரங்களை வெட்டி கோயிலைச் சுற்றிலும் அடுக்கி, கோயிலையே எரித்துக் கொக்கரித்தான்.

நகருக்கு நடுவே ஒரு பெரிய கோட்டை இருந்தது. மக்கள் தலைதெறிக்க ஓடிப் போய் அதற்குள் ஒளிந்து கொண்டனர். கோட்டையைப் பிடிக்கும் கர்வத்துடன் அபிமலெக் கோட்டை வாசலை நெருங்கினான். ஆனால் கோட்டைக்கு மேல் ஒரு பெண் கையில் அம்மிக் கல்லுடன் தயாராய் இருந்தாள். கோட்டைக் கதவருகே அவன் வந்ததும் கல்லை நேராகத் தலையில் போட, தலை பிளந்து விழுந்தான் அபிமெலக்கு.

உயிர் பிரியும் கணத்திலும் தன் கர்வத்தை விடவில்லை அவன். அருகிலிருந்த வீரனை நோக்கி, என்னை உன் வாளால் வெட்டிக் கொன்று விடு. ஒரு பெண்ணின் கையால் செத்தேன் என்பது எனக்கு அவமானம் என்றான். வீரனும் அவனைக் குத்திக் கொன்றான். ஆனாலும் வரலாறு அந்தப் பெண்ணின் பெயரை மறக்காமல் குறித்து வைத்துக் கொண்டது. “அபிமெலக்கைக் கொன்றது யார்? மதில் சுவரினின்று ஒரு எந்திரக் கல்லை எறிந்தவள் ஒரு பெண்ணல்லவா?” எனும் 2 சாமுவேல் 11 : 21 வசனம் அதை தெளிவாக்குகிறது !

இறை அழைத்தல் இல்லாமல் தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொண்டு, கர்வத்தைத் தலையில் சுமந்து கொண்டு, வன்முறையாலும், சுய பலத்தாலும் அனைத்தையும் சாதிக்க நினைப்பவர்கள் நிச்சயம் அழிவார்கள் என்பதை அபிமெலக் வாழ்க்கை மீண்டும் ஒரு முறை நமக்கு விளக்குகிறது!

பைபிள் மாந்தர்கள் 21 (தினத்தந்தி) : கிதியோன்.

gideon-water

சிறுத்தை மேல் இருக்கும் சிற்றெறும்பு, தானே சிறுத்தையை விட உயர்வானது என கருதிக் கொள்ளும். அப்படித் தான் இருந்தது இஸ்ரயேல் மக்களுடைய நிலமை. இறைவனை விட்டு மீண்டும் விலகினார்கள். மிதியானியர்களிடம் அடிமையாய் ஆனார்கள்.

ஏழு வருடங்கள் மிகக் கடுமையான வாழ்க்கை. இஸ்ரயேல் மக்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து கடவுளை நோக்கிக் கதறினார்கள்.

இறைவாக்கினர் மூலம் கடவுள் பேசினார் “ நானே உங்கள் கடவுள். வேறு தெய்வங்களை வழிபடாதீர்கள் என்றேன். நீங்கள் கேட்கவில்லை” என்றார். மக்கள் தங்கள் தவறுகளை உணர்ந்தார்கள்.

அந்த நாட்டில் ஒபிரா என்னுமிடத்தில் “கிதியோன்” என்பவர் கோதுமைக் கதிர்களை திராட்சை ஆலையில் வைத்து ரகசியமாய் அடித்துக் கொண்டிருந்தார்.

“வீரனே.. கடவுள் உன்னோடு இருக்கிறார்” திடீரென முன்னால் தோன்றிய தூதனைக் கண்ட கிதியோன் தடுமாறினார்.

“கடவுள் என்னோடு இருந்தால் ஏன் எங்களுக்கு இந்த சோதனைகள் ?”

“நீ போ, மிதியானியரிடமிருந்து நீ மக்களை விடுவிப்பாய், நான் உன்னோடு இருப்பேன்”

“கடவுளே.. உண்மையிலேயே நீர் கடவுளா ? நான் படையல் எடுத்து வரும் வரை நீங்கள் இருந்தால் இது கடவுளின் வாக்கு என நம்புவேன்”

“சரி.. போய் வா” தூதர் சொல்ல, கிதியோன் விரைந்தார்..

கிதியோன் தூதருக்குப் படையல் கொண்டு வரும் வரை தூதர் அங்கே இருந்தார். படையலை பாறையில் வைத்ததும், தூகர் கையிலிருந்த கோலினால் அதைத் தொட்டார். நெருப்பு எரிந்தது. தூதர் மறைந்தார்.

கிதியோன் பரவசமானார். அந்த இடத்திலேயே கடவுளுக்கு ஒரு பலிபீடம் கட்டி “நலம் தரும் ஆண்டவர்” என பெயரிட்டு அழைத்தார்.

கடவுள் அவரிடம் பிற தெய்வங்களில் பலி பீடங்களை அழித்து, கம்பங்களை ஒடித்து, உண்மை கடவுளுக்கு பலி செலுத்தச் சொன்னார். கிதியோன் ஒரு இரவில் அதை நிறைவேற்றினார்.

பகலில் எழுந்த மக்கள் நடந்ததை அறிந்து கடும் கோபமடைந்தார்கள். கிதியோனைக் கொல்ல வேண்டும் எனும் வெறி அவர்கள் கண்களில் எரிந்தது.

“நீங்கள் கடவுளை வழிபடுகிறீர்களா ? பாகாலுக்காக போராடுகிறீர்களா ? எவனாவது பாகால் பெயரைச் சொல்லி போரிட வந்தால் இரவு முடியும் முன் கொல்லப்படுவான்” கிதியோனின் தந்தை யோவாசு அவர்களை எச்சரித்தார்..

“பாகால் உண்மையான கடவுளாக இருந்தால் அவருடைய பலிபீடங்களை அழித்தவனை அவரே அழிக்கட்டும்.” என்று சொல்லி மக்கள் கிதியோனுக்கு ‘எரு-பாகால்’ என பெயரிட்டனர்.

இதற்குள், மிதியானியரும், அமலேக்கியரும் இஸ்ரயேலரின் எல்லைக்குள் நுழைந்து கூடாரமடித்துத் தங்கினார்கள். மக்கள் அச்சமடைந்தனர்.

கிதியோன் மனதில் சந்தேகம். “கடவுளே உண்மையிலேயே நான் இவர்களோடு போரிடவேண்டுமா ? ஒரு ஆட்டுக் கம்பளியை தரையில் விரித்து வைக்கிறேன். தரையெல்லாம் காய்ந்து இருந்து, கம்பளி மட்டும் ஈரமாய் இருந்தால், நீர் என் மூலமாய் வெற்றி தருவீர் என புரிந்து கொள்வேன்” என்றார்.

என்ன அதிசயம், மறு நாள் காலையில் கம்பளி ஈரமாகவும், தரை உலர்ந்தும் இருந்தது.

இப்போதும் கிதியோனின் சந்தேகம் தீரவில்லை. “கடவுளே.. இன்னும் ஒரே ஒரு முறை. இன்று தரை ஈரமாய் இருக்க வேண்டும், கம்பளி காய்ந்திருக்க வேண்டும்.” என்றார். மாபெரும் அதிசயமாக தரையெல்லாம் பயங்கர ஈரமாகவும், கம்பளி உலர்ந்தும் இருந்தது ! கிதியோன் மனதளவிலும், உடலளவிலும் தயாரானார்.

மாபெரும் படையுடன் அவர் போருக்குக் கிளம்பினார். “நிறைய பேர் இருக்கிறார்கள். இப்போது வெற்றி தந்தால் உங்கள் பலத்தால் வெற்றி கொண்டதாய் நினைப்பீர்கள்” என்றார் கடவுள்.

“போருக்குப் பயப்படுபவர்களெல்லாம் திரும்புங்கள்” கிதியோன் சொன்னார். 22 ஆயிரம் பேர் அஞ்சினர். 10 ஆயிரம் பேர் எஞ்சினர்.  கடவுள் இன்னொரு சோதனையையும் வைத்தார்.

அதன்படி அருகில் இருந்த நீர் நிலையில் போய் எல்லோரையும் தண்ணீர் குடிக்கச் சொன்னார் கிதியோன். பெருபாலானோர் முழங்கால் படியிட்டு தண்ணீரைக் குடித்தனர். முன்னூறு பேர்  மட்டும் நாயைப் போல நாக்கினால் நக்கித் தண்ணீர் குடித்தனர்.

கடவுள் சொன்னார், “இந்த 300 பேர் போதும். இவர்கள் மூலம் நான் உனக்கு வெற்றி தருவேன் “ !

கிதியோன் அந்த முன்னூறு பேருடனும் சென்று மிகப்பெரிய எண்ணிக்கையிலான எதிரிகளைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

கிதியோன் கடவுளின் அழைப்பை மூன்று முறை சந்தேகத்தால் சோதிக்கிறார். இருந்தாலும் கடவுள் பொறுமையாய் இருக்கிறார். அவருக்கு விசுவாசம் ஊட்டுகிறார். நம்பிக்கையில் பலவீனமாய் இருக்கும் நமக்கு இது மிகப்பெரிய ஆறுதல் செய்தி !

32000 பேர் கொண்ட படையிலிருந்து 300 பேர் மட்டுமே கடவுளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எதற்காகவும் மண்டியிடாமல் இருப்பவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் !

உறுதியான விசுவாசமும், நிலையான விசுவாசமும் நமக்குத் தேவை என்பதை கிதியோன் வாழ்க்கை நமக்குச் சொல்கிறது !