பைபிள் மாந்தர்கள் 17 (தினத்தந்தி) : யோசுவா

Joshua_leads_army_1133-41

நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம் – யோசுவா 24 : 15

 எகிப்திலிருந்து இஸ்ரயேலர்களை மோசே கடவுளின் கட்டளைப்படி மீட்டுக்கொண்டு வந்தார். இஸ்ரயேல் மக்கள் 12 கோத்திரங்களாக அதாவது 12 மூதாதையர் குலங்களாக இருந்தனர். யாக்கோபின் பத்து பிள்ளைகளின் பரம்பரை பத்து கோத்திரங்களாகவும், யாக்கோபின் மகன் யோசேப்பின் இரண்டு பிள்ளைகள் வழியாய் இரண்டு கோத்திரமும் என மொத்தம் பன்னிரண்டு கோத்திரங்கள். கடவுள் அவர்களுக்கு பாலும், தேனும் பாயும் கானான் நாட்டைக் கொடுப்பேன் என வாக்குக் கொடுத்திருந்தார். கானான் நாட்டின் அருகே இஸ்ரயேலர்கள் வந்தார்கள்.

மோசே அவர்களுக்குத் தலைவராக இருந்தார். அவர் பன்னிரண்டு கோத்திரங்களிலிருந்தும் ஒவ்வொரு நபர் வீதம் பன்னிரண்டு பேரை கானான் நாட்டிற்குள் அனுப்பினார். அவர்கள் கானான் நாட்டிற்குள் சென்றார்கள். அந்த நாடு செல்வச் செழிப்புடன் இருப்பதை அவர்கள் கண்டார்கள். நாற்பது நாட்கள் கானான் நாட்டிற்குள் அலைந்து திரிந்த அவர்கள் மோசேயிடம் திரும்ப வந்து தாங்கள் கண்டதைப் பற்றித் தெரிவித்தனர். கானானிலிருந்து கொண்டு வந்திருந்த ஒரு திராட்சைக் குலை, இரண்டு பேர் தூக்குமளவுக்கு மிகப் பெரியதாக இருந்தது.

பத்து பேர் வந்து, “ஐயோ. நாட்டில் இருப்பவர்களெல்லாம் முரடர்கள். அரக்கர்கள் மாதிரி இருக்கிறார்கள். நம்மையெல்லாம் மிக எளிதில் அழித்து விடுவார்கள் என்றார்கள்”. இரண்டு பேர் மட்டும் “கடவுள் நமக்குத் தரும் நாடு செல்வத்தில் நிரம்பியிருக்கிறது. அற்புதமான வளங்கள் நிரம்பியிருக்கின்றன என்றார்கள். அந்த இருவர் யோசுவா மற்றும் காலேப்.

மக்கள் பத்து பேர் சொன்ன தகவல்களால் பயந்து கடவுள் கொடுத்த நாட்டுக்குள் நுழைய மறுத்தனர். கடவுள் அவர்கள் மேல் கோபம் கொண்டு, இந்த நாட்டுக்குள் இன்னும் நாற்பது ஆண்டுகள் கழிந்தே நுழைவீர்கள். அதுவும், அவதூறு சொன்ன பத்து பேரும் அந்த நாட்டுக்குள் நுழையவே மாட்டீர்கள் என்றார்.

மோசே தனது முதிர் வயதில் மரணமடைந்தார். இப்போது இஸ்ரயேல் மக்களை வழிநடத்த ஒரு புதிய தலைவர் தேவை. அதற்காகக் கடவுள் தேர்ந்தெடுத்த நபர் தான்  யோசுவா. யோசுவா, மோசேயின் தலைமையில் வழி நடந்தவர். மக்கள் அவரை உடனடியாகத் தலைவராய் ஏற்றுக் கொண்டார்கள்

யோசுவாவின் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் கடவுளின் அற்புதங்களைக் கண்டார்கள். முதல் அதிசயம் எரிகோ!. எரிகோ நகர் மிகப்பெரிய மதில் சுவரினால் கட்டப்பட்டிருந்தது. அந்த மதில் சுவர் ரதங்கள் ஓடுமளவுக்கு அகலமானது. அந்த நகரை கத்தியின்றி ரத்தமின்றி இஸ்ரயேலர்கள் கைப்பற்றினார்கள்.

நகரை வளைத்து அதை தினம் ஒரு முறை வீதம் ஆறு நாட்கள் சுற்றி வரவேண்டும். ஏழாம் நாளில் ஏழு முறை நகரைச் சுற்றி வரவேண்டும். பத்துகட்டளைகள் அடங்கிய கடவுளின் பேழை தூக்கிச் செல்லப்பட வேண்டும். அதற்கு முன் ஏழு குருக்கள் கொம்புகளால் ஆன  எக்காளங்களை ஏந்திச் செல்லவேண்டும். அதற்கும் முன் முன்னணி வீரர்கள் நடந்து செல்ல வேண்டும் . பேழைக்குப் பின் பின்னணி வீரர்கள் செல்ல வேண்டும்.  என கடவுளின் திட்டம் விளக்கப்பட்டது.

அப்படியே நடந்தது. ஏழாவது நாளில், ஏழு முறை நகரைச் சுற்றி வந்தபின், ஏழாவது முறையாய் எக்காளம் முழங்கியதும் யோசுவா மக்களிடம், ‘ஆரவாரம் செய்யுங்கள்’ என்றார். அது வரை அவர்கள் சத்தமிட அனுமதி இல்லை. இப்போது மக்கள் மாபெரும் குரலில் ஆரவாரம் செய்தார்கள். அப்போது வியப்பூட்டும் அதிசயம் அங்கே நடந்தது. எதுவுமே செய்ய முடியாது என நினைத்திருந்த விஸ்வரூப மதில்  உடைந்து விழுந்தது. இஸ்ரயேலர் நகருக்குள் புகுந்து நகரைக் கைப்பற்றினர்.

அதன் பின் அவர்கள் ஆயி நகரையும் கைப்பற்றினார்கள். ஆயி நகரைக் கைப்பற்றவும் ஒரு நல்ல யுத்தியை யோசுவா வகுத்தார். முதலில் ஆயி நகருக்குச் சென்ற போது தோல்வியே மிஞ்சியது. எனவே, ஐயாயிரம் வீரர்கள் ஆயி நகருக்குள் செல்வதெனவும், மற்றவர்களில் முப்பதாயிரம் வீரர்கள் நகருக்கு வெளியே பதுங்கி இருப்பதெனவும் ரகசிய திட்டம் உருவானது. யோசுவா சுமார் 5000 வீரர்களுடன் நகருக்குச் சென்றார். அங்குள்ள வீரர்களும் மக்களும் அவர்களை விரட்டியடித்தனர். அவர்கள் பயந்தது போல நகருக்கு வெளியே வெகுதூரம் புறமுதுகிட்டு ஓடினார்கள். அந்த சமயத்தில் ஒளிந்திருந்த இஸ்ரயேல் படை வீரர்கள் நகருக்குள் புகுந்து நகரைக் கைப்பற்றினர் !

விடுதலைப் பயணத்தில் கடவுள் வாக்களித்த நாட்டில் மக்களைக் கொண்டு சேர்த்த நபர் யோசுவா தான்.

முழுமையான ஒரு நல்ல தலைவராகவும், வழிகாட்டியாகவும் அவர் இருந்தார். அவரிடம் தாழ்மை, கீழ்ப்படிதல், இறை பணி, விசுவாசம் என முக்கியமான அம்சங்கள் நிரம்பியிருந்தன. அவர்காலத்தில் இஸ்ரயேலர் வேறு தெய்வங்களை நாடிப் போகவேயில்லை.

தலைமைப் பணி ஏற்க விரும்புபவர்களுக்கு ஒரு மாபெரும் பாடமாய் இருக்கிறது யோசுவாவின் வாழ்க்கை !

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s