பைபிள் மாந்தர்கள் 18 (தினத்தந்தி) : ராகாப்

Rahab

யோசேப்பு எகிப்து நாட்டின் ஆளுநராய் இருந்த காலத்தில் அவரது குடும்பத்தினர் 70 பேர் அந்த நாட்டில் நுழைந்தார்கள். அப்போதைய மன்னன் அவர்களை ஆதரித்து பராமரித்தான். வருடங்கள் ஓடின. இஸ்ரயேலர்களுக்கு எகிப்தில் எதிர்ப்பு எழுந்தது. 430 வருட எகிப்து நாட்டு வாழ்க்கை 70 எனும் எண்ணிக்கையை 6 இலட்சம் என உயர்த்தியிருந்தட்து. அவர்கள் எகிப்தியர்களின் அடிமைகள் எனும் நிலையிலேயே இருந்தார்கள்.

அவர்களை மோசே எகிப்திலிருந்து மீட்டு வந்தார். மோசேயின் மறைவுக்குப் பின் யோசுவா மக்களை தலைமையேற்று நடத்தினார். அவர்கள் பாலை நிலத்தில் அலைந்து கொண்டிருந்த காலம். எரிகோ எனும் நகரம் மிகவும் காவல் பலத்துடன் இருக்கிறது. அதைக் இஸ்ரயேல் மக்கள் கைப்பற்ற வேண்டுமென்பது கடவுளின் திட்டமாய் இருந்தது.

நகரம் மிகப்பெரிய மதில் சுவரினால் கட்டப்பட்டு, பலமான கதவுகளால் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது. எனவே யோசுவா முதலில் உள்ளே சென்று உளவு பார்த்து வர இரண்டு பேரை அனுப்பினார். அவர்கள் அந்த நகருக்குள் நுழைந்தார்கள். நகருக்குள் இருந்த ராகாப் எனும் பெண்ணின் வீட்டில் அன்று தங்கினார்கள். அவள் ஒரு விலை மாது.

அதற்குள் விஷயம் மன்னனின் காதுகளுக்கும் போய்விட்டது. “ராகாபின் வீட்டிலிருக்கும் இஸ்ரயேல் ஒற்றர்களை இழுத்து வாருங்கள். அவர்கள் நாடு முழுவதும் உளவு பார்க்க வந்திருக்கிறார்கள்” என மன்னன் கட்டளையிட்டான். வீரர்கள் ராகாபின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். ராகாபோ ஒற்றர்களை மாடியில் சணல் தட்டுகளுக்கு அடியில் ஒளித்து வைத்தாள்.

“சிலர் வந்தார்கள், ஆனால் அவர்கள் யார் எங்கிருந்து வந்தார்கள் என்பதெல்லாம் தெரியாது “ என்றாள் ராகாப். வீரர்கள் அவர்களைத் தேடி நகருக்கு வெளியே சென்றனர்.

ராகாப் உளவாளிகளிடம் வந்து, “இஸ்ரயேலர்களின் கடவுளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். செங்கடலை வற்றிப் போகச் செய்தவர். பல வெற்றிகளை உங்களுக்குத் தந்தவர். இப்போதும் இந்த நகர் மக்கள் உங்களை நினைத்து நடுங்குகிறார்கள். எனவே நீங்கள் வெல்வது நிச்சயம். ஆனால் என்னையும் என் குடும்பத்தினரையும் காப்பாற்றுங்கள்” என்று வேண்டினாள்.

உளவாளிகள் அவளிடம், “எங்களைக் காட்டிக் கொடுக்காமல், இந்த விஷயங்களை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டால் நிச்சயம் உன் குடும்பத்தைக் காப்பாற்றுவோம்” என்றார்கள். அவளும் ஒத்துக் கொண்டார். பின்னர் வீட்டுச் சாளரம் வழியே ஒரு கயிறைக் கட்டி மதிலுக்கு வெளியே அவர்களை அனுப்பி விட்டாள். அவள் வீடு அந்த மதிலோடு இணைந்திருந்தது.

அவர்கள், போகும் போது, “இந்தச் சன்னலில் ஒரு சிவப்புக் கயிறைக் கட்டிவை. உன் குடும்பத்தினர் அனைவரையும் இங்கே கூட்டி வை. எல்லோரும் உள்ளேயே இருங்கள். உங்களை அழிக்கமாட்டோம்” என்று வாக்கு கொடுத்தனர்.

அப்படியே ராகாப் செய்தாள். கடவுள் இஸ்ரயேலர்களுக்காக எரிகோ மதில் சுவரை தகர்த்தார். நகரைக் கைப்பற்றிய இஸ்ரயேலர்கள் ராகாபின் குடும்பத்துக்கு மட்டும் தீங்கு இழைக்கவில்லை ! அந்தக் குடும்பத்தினரை அவர்கள் தங்களோடு இணைத்துக் கொண்டார்கள்.

ராகாபின் விசுவாசம் வியப்பூட்டுகிறது. பலமான நகருக்குள் காவல் இருக்கும் அவள் ஒரு விலைமாது. ஆனால் கடவுளைப் பற்றிய அறிவும், நம்பிக்கையும் அவளிடம் மிகவும் அதிகமாகவே இருந்திருக்கிறது. “உங்கள் கடவுளாகிய ஆண்டவர், மேலே விண்ணுலகம் முதல் கீழே மண்ணுலகம் அனைத்திற்கும் கடவுள் ( யோசுவா 2 : 11 ) எனும் அவளுடைய வார்த்தைகள் அவற்றை அறிக்கையிடுகின்றன. அரசனுடைய கட்டளையைப் புறக்கணித்து, தனது உயிர் போய்விடலாம் எனும் கவலையைக் கூட களைந்து, இஸ்ரயேல் உளவாளிகளைக் காப்பாற்றுவதில் அவளுக்கு இருக்கும் உறுதி பிரமிக்க வைக்கிறது !

எனவே தான் புதிய ஏற்பாடு ராகாபை மறக்காமல் குறித்து வைக்கிறது ! “விலைமகளான இராகாபு ஒற்றர்களை நன்கு வரவேற்று, கீழ்ப்படியாதவரோடு அழியாது தப்பித்துக் கொண்டதும் நம்பிக்கையினால்தான் ( எபிரேயர் 11 : 31 ) என்கிறது புதிய ஏற்பாடு !

இதைவிட மிகப்பெரிய பாக்கியமும், வியப்பூட்டும் அங்கீகாரமும் ராகாபுக்குக் கிடைக்கிறது. பல நூற்றாண்டுகள் கடந்தபின் இந்த ராகாபின் வம்சா வழியில் ஒரு மாபெரும் மனிதர் தோன்றினார். அவர் தான் இயேசு கிறிஸ்து !

பாவிகளை மீட்க வந்தேன் என பறைசாற்றிய இயேசு, தனது வம்சாவழியை பாவிகளோடு அடையாளப்படுத்திக் கொண்டே வந்தார் என்பது வியப்பூட்டுகிறது ! ‘நான் இன்னாரோட பரம்பரையில வந்தவன்” என கர்வத்தின் கயிறைப் பிடித்துத் தொங்குபவர்களுக்கு இயேசுவின் இந்த வம்சப் பரம்பரை தாழ்மை என்றால் என்ன என்பதைப் போதிக்கிறது.

நாம் எந்தக் குடும்பப் பின்னணியில் வந்தோம் என்பதை வைத்து நமது வாழ்க்கை அளவிடப் படுவதில்லை. நாம் எந்த அளவுக்கு இறை விசுவாசத்தில் இருக்கிறோம் என்பதை வைத்தே அளவிடப்படும் என்பதை நினைவில் கொள்வோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s