யூதேயாவிலுள்ள பெத்லேகேம் எனும் இடத்தில் மனைவி நகோமி, மகன்கள் மக்லோன், கிலியோன் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார் இஸ்ரயேலரான எலிமலேக்கு. நாட்டில் கொடிய பஞ்சம் வந்தது, பிழைப்புக்காக மோவாபு எனும் நாட்டில் குடியேறினார்கள். துயரம் அவர்களைத் துரத்தியது எலிமலேக்கு இறந்து போனார். மகன்கள் இருவரும் ஓர்பா, ரூத்து எனும் வேற்று இனப் பெண்களை மணந்து கொண்டார்கள். துயரம் அவர்களை விடாது துரத்தியது. இரண்டு மகன்களுமே இறந்து போக அதிர்ச்சியில் உறைந்தார் நகோமி.
நகோமி சொந்த ஊருக்குப் புறப்பட்டார். மருமக்களிடம் “நீங்கள் உங்கள் இனத்தாரிடம் சென்று வாழுங்கள்” என்றார். அவர்களோ மறுத்தனர்.
“எனக்கோ வயதாகிவிட்டது, இனிமேல் குழந்தை பெற்று அதை வளர்த்தி உங்கள் கணவனாக தர என்னால் முடியாது. நீங்கள் சொந்த ஊருக்குச் சென்று நலமுடன் வாழுங்கள்” என நகோமி மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். ஓர்பா கண்ணீருடன் விடைபெற்றாள். ரூத்து போகவில்லை. “இனிமேல் உங்கள் குலமே என் குலம், உங்கள் தெய்வமே என் தெய்வம், மரணம் வரை உங்களோடு தான் என் வாழ்க்கை” என்றாள். நகோமி நெகிழ்ந்தாள்.
ஊருக்குத் திரும்பிய அவர்கள் வறுமை வாழ்க்கையைத் தொடர்ந்தனர். வாற்கோதுமை அறுவடைக் காலம் வந்தது. ரூத்து மாமியாரிடம், “நான் அறுவடை நிலங்களுக்குப் போய் அங்கே உதிரும் மணிகளை பொறுக்கி வருகிறேன். அனுமதியுங்கள்” என்று கேட்டாள். அந்தக் காலத்தில் ஏழைகள் இப்படி செய்வதுண்டு. வேலையாட்களின் சில்மிஷ தொல்லைகளுக்கு ஆளாவதும் உண்டு. எனவே நகோமி யோசித்தாள். வேறுவழியின்றி அனுமதித்தாள்.
ரூத்து ஒரு நிலத்துக்குப் போய் அங்கிருந்த பெண்களோடு சேர்ந்து நிலத்தில் உதிரும் கோதுமை மணிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்துக்குப் பின் நிலத்தின் உரிமையாளர் அங்கே வந்தார். அவர் பெயர் போவாசு. அவர் ஒரு வகையில் ரூத்தின் முறை மாப்பிள்ளை. புதிதாக ஒரு பெண்ணைக் கண்டதும் அவர் நெற்றி சுருக்கினார். யார் என விசாரித்தார். அவர்கள் ரூத்தைப் பற்றிக் கூறினர். அவர் அவளிடம் பரிவுடன் நடந்து கொண்டார். “வேறு வயல்களுக்குச் செல்ல வேண்டாம் இங்கேயே இரு” என அன்பாய்ச் சொன்னார்.
“யாரும் இவளைத் தொந்தரவு செய்யாதீர்கள். கதிர்களை வேண்டுமென்றே உருவிப் போடுங்கள். இந்தப் பெண் எடுத்துக் கொள்ளட்டும்” என வேலையாட்களிடம் கூறினார். மதிய வேளையில் தனது உணவையும் ரூத்துடன் அவர் பகிர்ந்து உண்டார். நடந்தவற்றைக் கேட்ட நகோமி ஆனந்தமடைந்தார். அறுவடை முடியும் வரை ரூத்து அந்த வயலிலேயே இருந்தார்.
ஒருநாள் நகோமி ரூத்தை அழைத்து, “போவாசு உன்னைக் காக்கும் கடமை உடையவர். நீ அவருடைய கூடாரத்துக்குச் சென்று அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது, கால்களில் இருக்கும் போர்வையை விலக்கி அங்கே படுத்துக் கொள்” என்றார். ரூத்தும் அப்படியே செய்தார். நள்ளிரவில் திடீரென விழித்த போவாசு போர்வைக்குள் ஒரு பெண்ணைப் பார்த்ததும் குழம்பினார். “யார் நீ ?” என்றார்.. “நான் தான் ரூத்து. நான் உமது அடியாள், நீர் என்னைக் காக்கும் உறவு முறையினர்” ரூத்து சொன்னாள்.
போவாசு வியந்தார். “நீ இளமையானவள், இருந்தாலும் ஒரு இளமையானவனையோ, செல்வந்தனையோ தேடாமல் உறவு முறையைத் தேடி வந்திருக்கிறாய். மகிழ்ச்சி. ஆனாலும் என்னை விட உன்னை மணக்க அதிக உரிமையுள்ளவன் இன்னொருவன் உண்டு. அவனிடம் முதலில் பேசுகிறேன். அவன் மறுத்தால் நீ என்னுடையவள்” என்றார்.
மறுநாள் ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில், அந்த மனிதரிடம் பேசினார் போவாசு. “நகோமி நிலத்தை விற்கிறார். நீர், வாங்குகிறீரா ? கூடவே ரூத்தையும் மனைவியாக்கிக் கொள்ள வேண்டும் ” போவாசு சொல்ல, அந்த மனிதர் மறுத்தார்.
“அப்படியானால் நமது வழக்கப்படி உமது செருப்பைக் கழற்றி என்னிடம் தாரும்” போவாசு கேட்க அந்த மனிதர் அப்படியே செய்தார். அப்படி ஊர் முன்னிலையில் தனது முன்னுரிமையை அவர் போவாசுக்கு விட்டுக் கொடுக்க, போவாசு ரூத்தை மணந்து கொண்டார்.
போவாசுக்கும் ரூத்துக்கும் ஒரு மகன் பிறந்தான். அவன் பெயர் ஓபேது ! அந்த ஓபேது தான் தாவீது மன்னனின் தாத்தா ! இயேசுவின் வம்சாவளிப் பட்டியலில் இடம் பிடித்தவர்.
ரூத்தின் வாழ்க்கை பல்வேறு படிப்பினைகளை நமக்கு கற்றுத் தருகிறது. வேற்று இனத்தாராய் இருந்தாலும், உண்மை இறைவனை நாடி வந்து, அவரில் நம்பிக்கை வைத்ததால் இறைவனின் இணையற்ற கருணையைப் பெறலாம் என்பது முதல் பாடம். மாமியார் என்பவர் தாயைப் போன்று நேசிக்கப்பட வேண்டியவர் என்பது இரண்டாவது பாடம். தனது வாழ்க்கை, தனது இன்பம் எனும் சுயநல சிந்தனைகளை வெறுத்தால் இறைவனின் அருளை நிறைவாய்ப் பெறலாம் என்பது மூன்றாவது பாடம்.
ஃ