பைபிள் மனிதர்கள் 50 (தினத்தந்தி) இறைவாக்கினர் மீக்காயா

யூதா தேசத்தை யோசபாத்து மன்னனும், இஸ்ரயேல் தேசத்தை ஆகாபு மன்னனும் ஆண்டு கொண்டிருந்த காலகட்டம்.

இஸ்ரயேல் மன்னன் யோசபாத்தைப் பார்த்து “இராமோத்து, கிலயாது நமக்குரிய இடம். எதிரிகளின் கையில் இருக்கிறது. வருகிறீர்களா ? போரிட்டு அந்த நாட்டை மீட்போம்” என்று கேட்டான்.

“நான் தயார் தான். கடவுளுடைய வாக்கு என்ன என்பதை முதலில் நாம் கேட்டறிய வேண்டும்” என்றார் யோசபாத்து.

இஸ்ரயேல் மன்னன் மனதுக்குள் திட்டமிட்டான். எப்படியாவது யோசபாத்தை ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, போலி இறைவாக்கினர்கள் கொஞ்சம் பேரை கொண்டு வந்து நிறுத்தி, பொய் சொல்ல வைக்க வேண்டும்.

அத‌ன்ப‌டி அவ‌ன் நானூறு பொய் இறைவாக்கின‌ர்க‌ளைக் கூட்டி வ‌ந்தான். அவ‌ர்க‌ளிட‌ம்

“போருக்குப் போக‌லாமா, கூடாதா ? இறைவ‌னின் வாக்கு என்ன‌ ?” என்று கேட்டான்.

ஏற்க‌ன‌வே பேசி வைத்த‌த‌ன் ப‌டி அவ‌ர்க‌ள் “க‌ண்டிப்பாக‌ போக‌லாம், க‌ட‌வுள் உங்க‌ளுக்கே வெற்றிய‌ளிப்பார்” என்று க‌தைய‌ளந்தனர்.

“இரும்புக் கொம்புக‌ளைச் செய்து அவ‌ற்றின் மூல‌ம் குத்தினால் எதிரி காலி” என்றார் ஒருவ‌ர். ஆமாம்.. ஆமாம் என ஒத்து ஊதினர் மற்றவர்கள்.

யோச‌பாத்துக்கு அவ‌ர்க‌ள் சொல்வ‌து பொய் என்பது ப‌ளிச் என‌ தெரிந்த‌து. என‌வே ம‌ன்ன‌னை நோக்கி, “இங்கே உண்மையான‌ இறைவாக்கின‌ர்க‌ள் யாரும் இல்லையா ?” என்று கேட்டார்.

இஸ்ர‌யேல் ம‌ன்ன‌ன் சுவார‌ஸ்ய‌மில்லாத‌ குர‌லில் சொன்னான். ” மீக்காயா என்று ஒருத்த‌ன் இருக்கிறான். ஆனா என‌க்கு அவ‌னைப் புடிக்காது. எப்ப‌வுமே என‌க்கு எதிராத் தான் பேசுவான்”

“அப்ப‌டியெல்லாம் சொல்லாதீங்க‌ அர‌ச‌ரே. க‌ட‌வுளின் உண்மையான‌ விருப்ப‌த்தைக் கேட்போம். அவ‌ரை அழைத்து வாருங்க‌ள்”

இஸ்ர‌யேல் ம‌ன்ன‌னுக்கு வேறு வ‌ழியில்லை. வீர‌ன் ஒருவ‌னை அனுப்பி  மீக்காயாவை அழைத்து வ‌ர‌ ஆணையிட்டான். மீக்காயா என்பதற்கு “ஆண்டவருக்கு நிகர் யார்” என்பது பொருள். இவருடைய வாழ்க்கைக் காலம் கி.மு 874 க்கும் 853க்கும் இடைப்பட்ட காலம்.

வீர‌ன் மீக்காயாவிடம் சென்று விஷயத்தைச் சொல்லி,

“எல்லாரும் ந‌ம்ம‌ ம‌ன்ன‌னுக்கு சாத‌க‌மா பேசிட்டிருக்காங்க‌. நீயும் அப்ப‌டியே பேசு” என்றான்.

“ம‌ன்ன‌ன் நினைப்ப‌தைய‌ல்ல‌, க‌ட‌வுள் சொல்வ‌தையே பேசுவேன்” என்று சொன்ன மீக்காயா. ம‌ன்ன‌னின் முன் வ‌ந்து நின்றார். இறைவாக்கு உரைத்தார்.

“இது க‌ட‌வுளின் விருப்ப‌ம‌ல்ல‌. அவ‌ன‌வ‌ன் த‌ன் சொந்த‌ வீட்டுக்குத் திரும்பிப்  போக‌ட்டும்” என்றார்.

ம‌ன்ன‌ன் கோப‌ம‌டைந்தார். “பாத்தீங்க‌ளா, இவ‌ன் என‌க்கு எதிராத் தான் பேசுவான்னு அப்பவே சொன்னேனே…  ” என்றார்.

மீக்காயா தொட‌ர்ந்தார்.

“நான் காட்சி க‌ண்டேன். போருக்கு உன்னைத் தூண்டி விடும்ப‌டி செய்த‌தே க‌ட‌வுளின் ஆவி தான். போலி இறைவாக்கின‌ர்க‌ளின் நாவில் பொய்யை வைத்த‌தே அவ‌ர் தான். உன‌க்குத் தீங்கான‌ வாக்கு அது” என்றார்.

“ஓஹோ.. அப்போ இப்போ எப்ப‌டி எங்க‌ளிட‌மிருந்து ஆவி ஓடி உன்னிட‌ம் வ‌ந்த‌து ?” என்று சொல்லி ஒரு போலி இறைவாக்கின‌ர் மீக்காயாவின் க‌ன்ன‌த்தில் அறைந்தான்.

“மீக்காவைச் சிறையில் அடையுங்க‌ள்” ம‌ன்ன‌ன் கோப‌த்தில் க‌த்தினான். “இவ‌னுக்கு ஒழுங்கான‌ சாப்பாடு போடாதீங்க‌. நான் போரை ந‌ல‌மாய் முடித்து வ‌ரும் வ‌ரை இவ‌ன் அங்கேயே கிடக்கட்டும்”

மீக்காயா சிரித்தார். “ம‌ன்ன‌ரே.. நீர் ந‌ல‌மாய்த் திரும்பி வ‌ந்தால், க‌ட‌வுள் என்னிட‌ம் பேச‌வில்லை என்று அர்த்த‌ம். இத‌ற்கு ம‌க்க‌ளே சாட்சி. நீர் திரும்பி வ‌ர‌ப் போவ‌தில்லை” என்றார்.

இஸ்ர‌யேல் ம‌ன்ன‌ன் யோச‌பாத்தையும் அழைத்துக் கொண்டு போருக்கு கிள‌ம்பினான். இருந்தாலும் இஸ்ர‌யேல் ம‌ன்ன‌னுக்கு ம‌ன‌தில் ஒரு ப‌ய‌ம் இருந்த‌து. என‌வே யோச‌பாத்தை நோக்கி, “நீர் ம‌ன்ன‌னின் ஆடைக‌ளை அணிந்து கொண்டு போங்க‌ள். நான் மாறுவேட‌த்தில் வ‌ருகிறேன்” என்றார்.

யோச‌பாத்து வேறு வ‌ழியில்லாம‌ல் ம‌ன்ன‌னைப் போல‌ வேட‌மேற்றுப் போனார். இஸ்ர‌யேல் ம‌ன்ன‌ன் ஆகாபு மாறு வேட‌த்தில் போர்க்க‌ள‌ம் போனான்.

போர்க்க‌ள‌த்தில் எதிரி வீரர்கள் யோசபாத் தான் இஸ்ரயேல் மன்னன் என நினைத்து சுற்றி வளைத்தார்கள். யோசபாத் கடவுளை நோக்கி கூப்பிட்டார். கடவுள் செவிகொடுத்தார். எதிரிகள் விலகிப் போகச் செய்தார்.  ஆனாலும் ஒருவன் வில்லை நாணேற்றி அம்பெய்தான். அது குறி த‌வ‌றி மாறுவேடத்தில் இருந்த ஆகாபு ம‌ன்ன‌னின் மீது பாய்ந்த‌து. அவ‌ன் இற‌ந்தான்.

யோச‌பாத் ம‌ன்ன‌ன் ந‌ல‌மாய் நாடுதிரும்பினார். க‌ட‌வுள் அவ‌ரை அதிச‌ய‌மாய் மீட்ட‌தினால் அவ‌ர் சிலிர்ப்ப‌டைந்திருந்தார். அத‌ன்பின் த‌ன‌து ஆட்சி முறையை க‌ட‌வுளுக்குப் பிடித்த‌மான‌ வ‌கையில் முழுக்க‌ முழுக்க‌ மாற்றினார்.

நூற்றுக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் சொல்வ‌தால் ஒரு பொய் உண்மையாவ‌தில்லை, ஒரே ஒரு தேவ‌ ம‌னித‌ர் சொல்கிறார் என்ப‌தால் உண்மை பொய்யாவ‌தில்லை. கூட்ட‌த்தை ந‌ம்பாம‌ல், க‌ட‌வுளின் உண்மைக் குர‌லை ந‌ம்ப‌வேண்டும் என்ப‌தே மீக்காயாவின் வாழ்க்கை ந‌ம‌க்குக் க‌ற்றுத் த‌ரும் பாட‌மாகும்.

பைபிள் மனிதர்கள் 49 (தினத்தந்தி) ஈசபேல் ( யேசபேல் )

இஸ்ரயேலை ஆண்ட மன்னன் ஆகாபின் மனைவி தான் ஈசபேல். இஸ்ரவேல் மன்னர்களிலேயே மோசமானவன் எனும் பெயரை ஆகாப் எடுத்தான். அதற்குக் காரணம் மனைவி ஈசபேல். இஸ்ரவேல் நாட்டைச் சேராத ஈசபேல், பாகாலையும், அசேராவையும் வழிபட்டாள். தான் வழிபட்டதுடன் நின்று விடாமல் தனது கணவனையும் முழுக்க முழுக்க இந்த தெய்வங்களை வழிபடும் வகையில் மாற்றினாள்.

பாகால் என்பது மழைக் கடவுள். விளைச்சலைக் கொடுப்பார் என்பது பிற இனத்து மக்களுடைய நம்பிக்கை. பெரும்பாலும் ஒரு காளையின் வடிவத்தில் பாகாலை வழிபட்டு வந்தார்கள் அவர்கள். அசேரா என்பது பெண் தெய்வம்.

ஈசபேல் இந்த இரண்டு கடவுள்களையும் வழிபட்டு வந்தவள். இஸ்ரயேலரின் கடவுளை அடியோடு வெறுத்தாள். அத்துடன் யாரெல்லாம் உண்மைக் கடவுளின் இறைவாக்கினர்களோ அவர்களையெல்லாம் படுகொலை செய்தாள். அவர்கள் ஈசபேலுக்குப் பயந்து குகைகளில் மறைந்து வாழ்ந்தார்கள்.

ஒரு முறை ஆகாப் ம‌ன்ன‌ன் அர‌ண்ம‌னைக்குப் ப‌க்க‌த்தில் இருந்த‌ திராட்சைத் தோட்ட‌த்தைப் பார்த்தான். அது நாபோத் என்ப‌வ‌ருடைய‌து.

“இந்த‌த் தோட்ட‌த்தை என‌க்குக் கொடு, இதை நான் காய்க‌றித் தோட்ட‌மாக்குகிறேன்” என்றான் ம‌ன்ன‌ன்.

நாபோத் ம‌றுத்தார்.

“இத‌ற்குப் ப‌திலாய் வேறொரு தோட்ட‌ம் த‌ருகிறேன்”

“ஊஹூம்…”

“வெள்ளி த‌ருகிறேன்”

“இல்லை.. இது என் மூதாதையரின் உரிமைச் சொத்து. இதை நான் தராமலிருக்க கடவுள் என்னைக் காக்கட்டும் ” என நாபோத் மறுத்தார்.  ஆகாப் ம‌ன்ன‌ன் கடும் கோபத்துடன் அரண்மனை திரும்பினான். ஈச‌பேல் ஆகாபின் மனவாட்டத்தைக் க‌ண்டு பிடித்தாள். கார‌ண‌த்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

நாபோத் திராட்சைத் தோட்ட‌த்தைத் த‌ராவிட்டால் என்ன‌ ? அவ‌னைக் கொன்று விட்டாவ‌து அதை எடுத்து கொள்வேன் என‌ ம‌னதுக்குள் திட்ட‌ம் தீட்டினாள்.

நாபோத்து குடியிருந்த‌ ந‌க‌ர‌த்துப் பெரிய‌வ‌ர்க‌ளுக்கு அர‌ச‌ன் எழுதுவ‌து போல‌ க‌டித‌ம் எழுதினாள். அர‌ச‌னின் முத்திரையையும் இட்டாள்.

“ஒரு நோன்பு ஏற்பாடு செய்யுங்க‌ள். அதில் நாபோத்தை அழையுங்க‌ள். இர‌ண்டு மோச‌மான‌ ம‌னித‌ர்க‌ளைக் கொண்டு “இவன் கடவுளையும், அரசனையும் பழித்தான்” என‌ நாபோத் மீது குற்ற‌ம் சும‌த்த‌ச் சொல்லுங்க‌ள். பின்னர் அவனை வெளியே இழுத்துச் சென்று கல்லால் அடித்துக் கொல்லுங்கள்” என‌ எழுதி அனுப்பினாள். அன்றைய வழக்கப்படி ஒரு குற்றத்தை நிரூபிக்க இரண்டு பேர் ஒரே மாதிரி குற்றம் சாட்டிப் பேசவேண்டி இருந்தது.

ம‌ன்ன‌னின் க‌ட்ட‌ளை வ‌ந்த‌தாய் நினைத்த‌ பெரிய‌வ‌ர்க‌ள் அப்ப‌டியே செய்தார்க‌ள். நாபோத் இற‌ந்தான். ஈச‌பேலுக்குத் த‌க‌வ‌ல் வ‌ந்த‌து. ஈச‌பேல் ஆகாபிட‌ம் ‘நாபோத் இற‌ந்து விட்டான்’ என‌ சொன்னாள். ஆகாப் ஆன‌ந்த‌த்துட‌ன் திராட்சைத் தோட்ட‌த்துக்குச் சென்றான்.

அப்போது க‌ட‌வுளின் இறைவாக்கின‌ர் எலியா அங்கே வ‌ந்தார். “நாய்க‌ள் நாபோத்தின் இர‌த்த‌த்தை ந‌க்கிய‌ இட‌த்தில் உன் இர‌த்த‌த்தையும் ந‌க்கும். இஸ்ர‌யேலின் ம‌தில‌ருகே நாய்க‌ள் ஈச‌பேலைத் தின்னும்” என்றார்.

ம‌ன்ன‌ன் ஆகாப் ச‌ட்டென‌ த‌ன் த‌வ‌றை உணர்ந்தான். த‌ன‌து ஆடைக‌ளைக் கிழித்துக் கொண்டான். சாக்கு உடையை உடுத்தினான். நோன்பு இருந்தான். இவையெல்லாம் த‌ன்ன‌ல‌ம் அழித்து, அடிமை நிலையில் த‌ன்னை மாற்றிக் கொள்வ‌த‌ற்கான‌ அடையாள‌ங்க‌ள்.

ஆகாப் த‌ன்னைத் தாழ்த்திய‌தைக் க‌ண்ட‌ க‌ட‌வுள் ம‌ன‌மிர‌ங்கினார். கால‌ங்க‌ள் க‌ட‌ந்த‌ன‌. ஆகாப் இற‌ந்து போனார்.

இறைவாக்கின‌ர் எலியா ஏகூ என்ப‌வ‌ரை அர‌ச‌னாக‌த் திருப்பொழிவு செய்தார். அவ‌ர் ந‌ல்ல‌வ‌ராக‌ இருந்தார். ஈச‌பேலினால் க‌றைப‌டிந்து கிட‌ந்த‌ நாட்டைத் தூய்மை செய்ய‌ விரும்பினார். அத‌ற்கு முன் கொடிய‌வ‌ர்க‌ளை அழிக்க‌ திட்ட‌மிட்டார்.

அவ‌ர் இஸ்ர‌யேலுக்குள் வ‌ந்த‌போது ஈச‌பேல் க‌ண்ணுக்கு மைபூசி, த‌ன்னை அழ‌குப‌டுத்திக் கொண்டு ப‌ல‌க‌னி வ‌ழியாக‌ வெளியே எட்டிப் பார்த்தாள்.

“ச‌மாதான‌த்துக்காக‌த் தானே வ‌ருகிறீர்” என்று கேட்டாள். அவ‌ளுக்கு அருகே இர‌ண்டு திருந‌ங்கைய‌ர் இருந்த‌ன‌ர்.

ஏகூத் மேலே பார்த்து,

“அவ‌ளைத் தூக்கி கீழே எறியுங்க‌ள்” என்றார்.

அவ‌ர்க‌ள் அவ‌ளைத் தூக்கிக் கீழே எறிய‌ அவ‌ள் ம‌திலில் விழுந்து உருண்டு கீழே விழுந்தாள். குதிரைக‌ள் அவ‌ள் மீது ஏறி ஓட‌, அவ‌ள் இற‌ந்தாள்.

ஏகூத் உள்ளே சென்று உண்டு குடித்த‌பின் “ச‌ரி, அந்த‌ பெண்ணை த‌குந்த‌ ம‌ரியாதையோடு அட‌க்க‌ம் செய்யுங்க‌ள். அவ‌ள் ஒரு அர‌ச‌னின் ம‌க‌ள்” என்றார். சேவ‌ர்க‌ள் வெளியே வ‌ந்து பார்த்த‌போது அவ‌ளுடைய‌ உட‌லின் பெரும்ப‌குதியை நாய்கள் தின்றுவிட்டிருந்த‌து. எலியாவின் வாக்கு ப‌லித்த‌து !

கடவுளின் வாக்கைக் கேட்காமல் மனைவியின் வாக்கைக் கேட்ட ஆகாப் தனது மீட்பை இழக்கிறான். கடவுளின் வார்த்தைக்கு எதிராய்ப் பேசுபவர் மனைவியாய் இருந்தாலும் விலக்க வேண்டும் என்பதையே இந்த வாழ்க்கை நமக்கு விளக்குகிறது. கூட‌வே ந‌ம‌து இத‌ய‌ங்க‌ளில் இருக்கும் ஈச‌பேல் சிந்த‌னைக‌ளை அடியோடு அழிக்க‌வும் இந்த‌ நிக‌ழ்வுக‌ள் ந‌ம‌க்கு அழைப்பு விடுக்கின்ற‌ன‌.

செவிம‌டுப்போம்

பைபிள் மனிதர்கள் 48 (தினத்தந்தி) எலியா

இஸ்ரயேல் மன்னர்கள் கடவுளை விட்டு விலகி வேறு தெய்வங்களை வழிபடுவது தொடர்ந்து நடந்தது. அப்படி வழிபட்ட தெய்வங்களில் முக்கியமானவர் பாகால். பாகால் ஒரு கானானேயக் கடவுள். அவரை மழையின் கடவுள் என மக்கள் வழிபட்டனர். மன்னன் ஆகாபும் பாகாலுக்குக் கோயிலும் கட்டி வழிபட ஆரம்பித்தான். அப்போது அங்கே வந்தார், இறைவாக்கினர்களில் மிகவும் முக்கியமான எலியா !

“நான் சொன்னாலொழிய இந்த நாட்டில் மழை பொழியாது. இது கடவுள் மேல் ஆணை” என்றார். மழையின் தெய்வத்துக்கு விடப்பட்ட நேரடியான சவால் இது ! சொல்லிவிட்டு வெளியேறிய எலியா யோர்த்தானுக்கு அப்பால் இருந்த கெரீத்து எனும் ஓடைக்கு அருகே ஒளிந்து வாழ்ந்தார். அவருக்குக் காகங்கள் அப்பங்களும், இறைச்சியும் கொண்டு கொடுத்தன. ஓடை நீரைக் குடித்தார். நாட்டில் மழைபெய்யவில்லை. ஓடையும் ஒருநாள் வற்றிப் போனது. கடவுளின் கட்டளைப்படி அங்கிருந்து சாரிபாத் நகருக்குச் சென்றார். அங்கே ஒரு வித‌வை சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தார். அவ‌ரிட‌ம்

“எனக்குக் கொஞ்ச‌ம் த‌ண்ணியும் ஒரு அப்பமும் கொண்டுவா” என்றார்.

“என்னிட‌ம் ரொம்ப‌க் கொஞ்ச‌ம் மாவும், கொஞ்ச‌ம் எண்ணையும் தான் இருக்கு. நானும் பைய‌னும் சாப்பிட‌ணும்”

“க‌வ‌லைப்ப‌டாதே.. முத‌ல்ல‌ என‌க்கொரு அப்ப‌ம் சுட்டு கொண்டு வா. நான் சாப்பிட‌றேன். உன் பானையில‌ மாவும் குறையாது, ச‌ட்டில‌ எண்ணையும் தீராது” என்றார். அவ‌ள் போய் அப்படியே செய்தாள்.

வீட்டிற்குப் போய் பானையில் கையை விட்டு மாவு இருக்கிற‌தா என்று பார்த்த‌வ‌ளுக்கு ஆச்ச‌ரிய‌ம். மாவு இருந்த‌து, ச‌ட்டியில் எண்ணையும் இருந்த‌து. அப்ப‌ம் சுட்டாள், மீண்டும் சுட்டாள், மீண்டும் மீண்டும் சுட்டாள், நாட்க‌ள் க‌ட‌ந்த‌ன‌ அவ‌ர்க‌ளுடைய‌ பானைக்கு ம‌ட்டும் ப‌ட்டினி வ‌ர‌வே இல்லை.

அந்த‌ ம‌கிழ்ச்சி நீடிக்க‌வில்லை. திடீரென‌ அவ‌ளுடைய‌ ம‌க‌ன் இற‌ந்து போனான். தாய் க‌த‌றினாள்.

“ஐயோ.. ஏன் இப்ப‌டி செய்தீங்க‌. என் பாவ‌த்தை நினைவூட்ட‌வும், என் பைய‌னைக் கொல்ல‌வுமா வ‌ந்தீங்க‌” என‌ எலியாவைப் பார்த்து க‌த‌றினாள். எலியா இற‌ந்த‌ ம‌க‌னைத் தூக்கிக் கொண்டு மாடிக்குச் சென்றார்.

அவனைத் த‌ம் க‌ட்டிலில் கிட‌த்தினார், கிட‌த்தி விட்டு அவ‌ன் மீது மூன்று முறை ப‌டுத்து எழுந்து க‌ட‌வுளை நோக்கி ம‌ன்றாடினார். க‌ட‌வுள் க‌ண் திற‌ந்தார், இற‌ந்து கிட‌ந்த‌ பைய‌னும் க‌ண் திற‌ந்தான்.

நாட்க‌ள் க‌ட‌ந்த‌ன‌. நாட்டில் ம‌ழை பெய்வது நின்று மூன்று ஆண்டுக‌ள் ஆகியிருந்த‌ன‌.

எலியா, ம‌ன்ன‌னுக்கு ஒரு ச‌வால் விட்டார்.

“நீங்க‌ள் உண்மையான‌ க‌ட‌வுளை விட்டு விட்டு, பாகாலையும், அசேராவையும் வ‌ழிப‌டுகிறீர்க‌ள். அத‌னால் தான் உங்க‌ளுக்கு அழிவு வ‌ருகிற‌து. உங்க‌ள் பாகாலின் இறைவாக்கின‌ர்க‌ள் நானூற்று ஐம்பது பேரையும், அசேராவின் இறைவாக்கினர்கள் நானூறு பேரையும் கூட்டிக் கொண்டு க‌ர்மேல் ம‌லைக்கு வாருங்க‌ள். உண்மைக் க‌ட‌வுளை உங்க‌ளுக்குக் காண்பிக்கிறேன்” என்றார்.

அப்ப‌டியே எல்லோரும் ம‌லைமேல் கூடினார்க‌ள். எலியா பேசினார்.

“அவரவர் கடவுளுக்குப் பலியிடுவோம். நீங்க‌ள் விற‌கை அடுக்கி, அத‌ன் மேல் ஒரு காளையை துண்டுகளாக்கி வையுங்கள். ஆனால் நெருப்பு வைக்க‌க் கூடாது. நானும் அப்ப‌டியே செய்கிறேன், யாருடைய‌ ப‌லியைக் க‌ட‌வுள் நெருப்பால் எரிக்கிறார் என‌ பார்ப்போம்”

அப்ப‌டியே முத‌லில் பாகாலையும், அசேராவையும் சேர்ந்த‌வ‌ர்க‌ள் ப‌லியிட‌ ஆய‌த்த‌மானார்க‌ள். விற‌கை அடுக்கி, அத‌ன் மேல் காளையை வைத்து க‌ட‌வுளை நோக்கி க‌த்த‌த் துவ‌ங்கினார்க‌ள். காலையில் க‌த்த‌த் துவ‌ங்கிய‌வ‌ர்க‌ள் மாலைவ‌ரை இடைவிடாம‌ல் க‌த்தியும் அவ‌ர்க‌ள் வைத்த‌ காளை அப்ப‌டியே தான் இருந்த‌து.

“ச‌த்த‌மா கூப்டுங்க‌ப்பா, உங்க‌ க‌ட‌வுள் தியான‌த்துல‌ இருப்பாரு, இல்லேன்னா ப‌ய‌ண‌த்துல‌ இருப்பாரு.. ச‌த்த‌மா.. ச‌த்த‌மா கூப்டுங்க” என‌ எலியா அவ‌ர்க‌ளை கிண்ட‌ல‌டித்துக் கொண்டே இருந்தார்.

இப்போது எலியாவின் முறை. பன்னிரண்டு கற்களைக் கொண்டு முதலில் ஒரு பலிபீடம் கட்டினார். பலிபீடத்தைச் சுற்றி பெரிய வாய்க்காலை வெட்டினார். விற‌கை அடுக்கி, அத‌ன் மீது காளையைத் துண்டு துண்டாக‌ வெட்டி வைத்தார்.

“நாலு குட‌ம் த‌ண்ணீர் கொண்டு இத‌ன் மீது ஊற்றுங்க‌ள்.”மக்கள் தண்ணீர் ஊற்றினார்க‌ள். மொத்த‌ம் மூன்று முறை ஊற்றுங்க‌ள் என்றார். ஊற்றினார்க‌ள். வாய்க்காலிலும் த‌ண்ணீரை ஊற்றினார்.

“ஆண்ட‌வ‌ரே, நீரே உண்மையான‌ தெய்வ‌ம் என்ப‌தை ம‌க்க‌ளுக்குப் புரிய‌வையும்.” என்று வேண்டினார்.

ப‌லியாக‌ இறைச்சி, அத‌ன் மீது குட‌ம் குட‌மாய்த் த‌ண்ணீர், சுற்றிலும் வாய்க்காலில் த‌ண்ணீர். ம‌க்க‌ள் எலியாவை ஏள‌ன‌மாய்ப் பார்த்தார்க‌ள். அப்போது அந்த‌ அதிச‌ய‌ம் ந‌ட‌ந்த‌து.

நெருப்பு அவ‌ர்க‌ள் அத்த‌னை பேருக்கும் முன்பாக‌ கீழிற‌ங்கி வ‌ந்து ப‌லிபீட‌த்தை முழுசாக‌ச் சுட்டெரித்த‌து. வாய்க்காலில் இருந்த‌ த‌ண்ணீரும் அந்த வெப்பத்தில்  அப்ப‌டியே காய்ந்து போன‌து.

ம‌க்க‌ள் ம‌ன‌ம் திரும்பி க‌ட‌வுளின் ப‌க்க‌மாய்த் திரும்பினார்க‌ள். எலிசா க‌ட‌வுளிட‌ம் வேண்டி ம‌ழையையும் திரும்ப‌ வ‌ர‌வ‌ழைத்தார்.

பைபிள் மனிதர்கள் 47 (தினத்தந்தி) ஆசா

பழைய ஏற்பாட்டு மன்னர்களில் முக்கியமான ஒருவர் ஆசா. யூதா பகுதியை நாற்பத்தோரு ஆண்டுகள் எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் அவர். இத்தனை நீண்ட நெடிய காலம் அவர் ஆட்சி செய்வதற்குக் காரணம் ஒன்றே ஒன்று தான். அவர் கடவுளின் மீது வைத்திருந்த நம்பிக்கை !

தாவீது மன்னனைப் போல, கடவுளின் பார்வையில் நல்லதைச் செய்து வந்தார் ஆசா. கடவுளுக்கு எதிரான பாவம் இழைப்பவர்கள் யாராய் இருந்தாலும் அவர்களை எதிர்த்து நிற்கத் தயங்காதவராய் இருந்தார்.

அரசனானதும் முதல் வேலையாக ‘விலை ஆடவர்கள்’ எல்லாரையும் நாட்டை விட்டே துரத்தி விட்டார். விலை மகளிரைப் போல விலை ஆடவர் நாட்டை பாவத்துக்குள் அமிழ்த்தி வைத்திருந்த காலகட்டம் அது.

இரண்டாவதாக அவனுடைய மூதாதையர்கள் செய்து வைத்திருந்த வேற்று தெய்வச் சிலைகளையெல்லாம் அகற்றினான். பரம்பரை பரம்பரையாய் நடக்கிறது என கடவுள் சொல்லாத வழக்கங்களை அவன் பின்பற்றவில்லை. !

பார்த்தான், அவ‌னுடைய‌ தாய் மாக்காவே அசேரா எனும் தெய்வத்துக்கு ஒரு சிலை செய்து வைத்திருந்தாள். ஆசா அதையும் விட்டு வைக்க‌வில்லை. அதையும் சுட்டெரித்தான். கூட‌வே, ‘அர‌ச‌ அன்னை’ எனும் ப‌த‌வியில் இருந்து அவ‌ளை இற‌க்கினான்.க‌ட‌வுளுக்கு எதிரான‌வ‌ர் தாயாய் இருந்தால் கூட த‌யை காட்ட‌வில்லை !

க‌ட‌வுளிட‌ம் ம‌ன‌தை முழுதும் அர்ப்ப‌ணித்தான். தான் நேர்ந்து கொண்ட‌வ‌ற்றை ம‌ட்டும‌ல்ல‌, த‌ன் த‌ந்தை நேர்ந்து கொண்ட‌வ‌ற்றையும் கூட‌ நிறைவேற்றினான். அவனது வாழ்க்கை க‌ட‌வுளின் அருளினால் அருமையாய்ப் போய்க்கொண்டிருந்த‌து. நாடு அமைதியாய் இருந்த‌து.

அவ‌ரிட‌ம் ஐந்து இல‌ட்ச‌த்து எண்ப‌தாயிர‌ம் வீர‌ர்க‌ள் இருந்தார்க‌ள். அப்போது எத்தியோப்பிய‌ ம‌ன்ன‌ன் ப‌த்து இல‌ட்ச‌ம் வீர‌ர்களுடனும், முன்னூறு தேர்களுடனும் ப‌டையெடுத்து வ‌ந்தான். ஆசா அச‌ர‌வில்லை, க‌ட‌வுளை நோக்கி ம‌ன்றாடினான்.

“ஆண்டவரே! வலியோனை எதிர்க்கும் வலிமையற்றவனைக் காப்பவர் உம்மையன்றி எவருமிலர்! எங்கள் கடவுளாம் ஆண்டவரே! உம்மில் நம்பிக்கை வைத்து, உமது பெயரால் இப்படையை எதிர்க்க வந்துள்ள எங்களுக்குத் துணையாக வாரும்! ஆண்டவரே, நீரே எங்கள் கடவுள்” என்று வேண்டினார். க‌ட‌வுள் உத‌விக்கு வ‌ந்தார். ஐந்து இல‌ட்ச‌ம் வீர‌ர்க‌ள் ப‌த்து இல‌ட்ச‌ம் வீர‌ர்க‌ளை துர‌த்தித் துர‌த்தி அடித்து அத்த‌னை பேரையும் கொன்ற‌ன‌ர்.

அப்போது அச‌ரியா என்ப‌வ‌ர் ம‌ன்ன‌னிட‌ம் சென்று இறைவாக்கு உரைத்தார். “ஆசாவே ! நீங்க‌ள் ஆண்ட‌வ‌ரை நாடினால் அவ‌ரைக் க‌ண்ட‌டைவீர்க‌ள். புற‌க்க‌ணித்தால் புற‌க்க‌ணிக்க‌ப் ப‌டுவீர்க‌ள். ம‌ன‌த் திட‌ன் கொள்ளுங்க‌ள்”

அச‌ரியாவின் பேச்சைக் கேட்ட‌ ம‌ன்ன‌ன் ஆசா இன்னும் ம‌கிழ்ந்தான். தான் கைப்ப‌ற்றியிருந்த‌ அத்த‌னை நாடுகளிலும் க‌ட‌வுளுக்கு எதிராய் இருந்த‌வ‌ற்றையெல்லாம் அக‌ற்றினான். எழுநூறு மாடுக‌ளையும், ஏழாயிர‌ம் ஆடுக‌ளையும் க‌ட‌வுளுக்குப் ப‌லியிட்டான் !

“நாம் க‌ட‌வுளை முழு ம‌ன‌தோடு நாடுவோம். ஆண்ட‌வ‌ரை நாடாத‌ ம‌க்க‌ளை அழிப்போம்” என்று தீவிர‌மாய்ப் பேசும‌ள‌வுக்கு அவ‌னுடைய‌ இறை ஆர்வ‌ம் இருந்த‌து. அவ‌ன‌து ஆட்சியின் முப்ப‌த்து ஐந்தாம் ஆண்டுவ‌ரை போர் எனும் பேச்சே வ‌ர‌வில்லை.

சோத‌னை முப்ப‌த்து ஆறாம் ஆண்டில் வ‌ந்த‌து. பாசா எனும் இஸ்ர‌யேல் ம‌ன்ன‌ன், யூதா ம‌ன்ன‌ன் ஆசாவுக்கு எதிரானான். அதுவ‌ரை க‌ட‌வுளை முழுமையாய் நாடிய‌ ஆசா ஒரு முட்டாள்த‌ன‌மான‌ காரிய‌த்தைச் செய்தான். க‌ட‌வுளின் ஆலய‌த்தில் இருந்த‌ செல்வ‌ங்க‌ளையெல்லாம் எடுத்து சிரிய‌ ம‌ன்ன‌ன் பென‌தாத் க்கு அனுப்பி, அவ‌னுடைய‌ உத‌வியை நாடினான்.

அது ஆசாவுக்கு வெற்றியைக் கொடுத்த‌து. ஆனால், அவ‌ன் க‌ட‌வுளை ந‌ம்பாம‌ல் இன்னொரு ம‌னித‌னை ந‌ம்பிய‌தால் க‌ட‌வுள் க‌வ‌லைய‌டைந்தார். அப்போது “அனானி” எனும் தீர்க்க‌த்த‌ரிசி ம‌ன்ன‌னிட‌ம் வ‌ந்தார்.

“நீ க‌ட‌வுளை ந‌ம்பாம‌ல் வேறு ம‌ன்ன‌னை ந‌ம்பிவிட்டாய். இதை விட‌ப் பெரிய‌ ப‌டையை க‌ட‌வுளின் அருளால் நீ வீழ்த்த‌வில்லையா ? உலகம் அனைத்தையும் ஆண்டவரின் கண்கள் சுழன்று பார்க்கின்றன. அவர் தம்மை முழு மனத்துடன் நம்பும் அனைவர்க்கும் ஆற்றல் அளிக்கிறார். நீயோ இதன் மட்டில் மதியீனமாய் நடந்துகொண்டாய்: எனவே இன்றுமுதல் நீ போர்களைச் சந்திக்க வேண்டும்” என்றார்.

அப்போதும் ஆசா சுதாரித்துக் கொள்ள‌வில்லை. எரிச்ச‌ல‌டைந்து அவரைச் சிறையில‌டைத்தான்.

ஆசாவுக்கு இப்போது போர் உட‌லில் நிக‌ழ்ந்த‌து. அவனுடைய பாதத்தில் ஒரு பெரிய‌ புண் வ‌ந்த‌து. அப்போதும் அவ‌ன் க‌ட‌வுளை நோக்கி ம‌ன்றாட‌வில்லை. ம‌ருத்துவ‌ர்க‌ளிட‌ம் ச‌ர‌ண‌டைந்தார். க‌டைசியில் ம‌ர‌ண‌ம‌டைந்தான்.

ஆசாவின் வாழ்க்கை ந‌ம‌க்கு மாபெரும் எச்ச‌ரிக்கை. க‌ட‌வுளின் வ‌ழியில் நேர்மையாக‌ ந‌ட‌ந்த‌ ஒரு ம‌ன்னன், அதி அற்புதங்களைக் கண்டவன் க‌ட‌வுளை விட்டு வில‌கிப் போகும் ம‌தியீன‌ன் ஆகிறான்.

த‌ன‌து சுய‌த்தின் மீது வைக்கும் ந‌ம்பிக்கை க‌ட‌வுளின் அன்பை விட்டு ந‌ம்மை வில‌க்கி விடும். முழுமையாய் இறைவ‌னில் ச‌ர‌ணடைத‌லே மீட்பைத் த‌ரும் என்ப‌தையே ஆசாவின் வாழ்க்கை ந‌ம‌க்கு உண‌ர்த்துகிற‌து

பைபிள் மனிதர்கள் 46 (தினத்தந்தி) எரொபவாம் ( யெரொபெயாம்)

சாலமோன் மன்னனுடைய ஆட்சி கடவுளின் வழியை விட்டு விலகியது. கடவுளின் கோபம் அவன் மீது திரும்பியது.

சாலமோன் மன்னனின் பணியாளர்களில் எரொபவாம் என்றொருவர் இருந்தார். அவனுடைய திறமைகளைக் கண்ட மன்னன் அவருக்கு பணியாளர்களைக் கண்காணிக்கும் பொறுப்பைக் கொடுத்தார். எரொபவாமின் மனமோ மன்னனுக்கு எதிராகவே இருந்தது.

ஒரு நாள் எரொபவாம் எருசலேம் நகரை விட்டு வெளியே சென்றார். வழியில் அகியா என்றொரு இறைவாக்கினர் அவனைச் சந்தித்தார். இறைவாக்கினர் தனது தோளில் கிடந்த புத்தம் புது சால்வையை எடுத்துக் கிழிக்க ஆரம்பித்தார். பன்னிரண்டு துண்டுகளாக அதைக் கிழித்தார்.

“இது தான் இஸ்ர‌யேலின் ப‌ன்னிர‌ண்டு கோத்திர‌ங்க‌ள். இதில் ப‌த்து குலங்களுக்கு நீ அரசனாவாய், தாவீதை முன்னிட்டு சாலமோனின் மகன் ஒரு குலத்துக்கு மன்னனாவான்” என்ப‌தே க‌ட‌வுளின் வாக்கு என்றார்.

இந்த‌ விஷ‌ய‌த்தைக் கேள்விப்பட்ட சாலமோன் எரொபவாமைக் கொல்ல‌ வேண்டும் என‌ துடித்தார். தப்பியோடிய எரொபவாமோ எகிப்தில் த‌ஞ்ச‌ம் புகுந்தார்.

கால‌ம் சென்ற‌து. ம‌ன்ன‌ன் சால‌மோன் இற‌ந்து விட்டார். இப்போது அவ‌ருடைய‌ ம‌க‌ன் ரெக‌பெயாம் ம‌ன்ன‌னாக‌ வேண்டும் என‌ ம‌க்க‌ள் விரும்பினார்க‌ள். சால‌மோன் ம‌ன்ன‌ன் இற‌ந்த‌தை அறிந்த எரொபவாம் இஸ்ரயேல் திரும்பினார்.

இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் சால‌மோன் ம‌ன்ன‌னின் ம‌க‌ன் ரெக‌பெயாமிட‌ம் வ‌ந்தார்க‌ள்.

“உங்க‌ள் த‌ந்தை எங்க‌ள் மேல் சும‌த்திய‌ க‌டுமையான‌ ப‌ழுவைக் குறையுங்க‌ள். அப்போது நாங்க‌ள் கால‌மெல்லாம் உங்க‌ளுட‌னே இருப்போம்”

‘ச‌ரி.. மூன்று நாட்க‌ள் க‌ழிந்து வாருங்க‌ள் சொல்கிறேன்”

“இவ‌ர்க‌ளுக்கு நான் என்ன‌ ப‌தில‌ளிக்க‌லாம்”  அர‌சவை முதியோர்க‌ளிட‌ம் ஆலோசனை கேட்டான் ரெக‌பெயாம்.

“இனிய‌ சொற்க‌ளைக் கூறுங்க‌ள். அப்போது உங்க‌ளுக்கு அவ‌ர்க‌ள் துணை நிற்பார்க‌ள்” என்ற‌ன‌ர்.

அதே கேள்வியை இளைஞ‌ர்க‌ளிட‌மும் கேட்டான்.

“நீ சால‌மோனை விட‌ பெரிய‌வ‌ன். அவ‌ரை விட‌க் க‌டின‌மான‌ ப‌ழுவையும், த‌ண்ட‌னைக‌ளையும் கொடுத்தால் தான் ம‌க்க‌ள் உன்னோடு கூட‌ இருப்பார்க‌ள்” என்றார்க‌ள்.

ரெக‌பெயாம் மூத்தோர் சொல்லைத் த‌ட்டி விட்டு, இளைஞ‌ர் சொன்ன‌ ப‌திலை ம‌க்க‌ளிட‌ம் சொன்னான். அது இறைவ‌னின் திருவுள‌த்தால் ந‌ட‌ந்த‌து. ம‌க்க‌ள் அனைவ‌ரும் ரெக‌பெயாமுக்கு எதிராக‌க் கிள‌ர்ந்து எழுந்தார்க‌ள்.

“விஷ‌ய‌ம் தெரியுமா ? எரொபவாம் என்றொரு சிறந்த‌ நிர்வாகி இருந்தானே, அவ‌ன் மீண்டும் இஸ்ர‌யேலுக்கு வ‌ந்திருக்கிறானாம்” த‌க‌வ‌ல் க‌சிய‌, ம‌க்க‌ள் அவனையே த‌ங்க‌ள் ம‌ன்ன‌னாக்க‌ வேண்டும் என‌ முடிவெடுத்தார்க‌ள். யூதா குல‌ம் த‌விர ம‌ற்ற‌ அனைவ‌ரும் இப்போது எரொபவாமை ம‌ன்னனாக்கினார்க‌ள்.

ரெக‌யெபாம் க‌டும் கோப‌ம‌டைந்தான். உட‌னே பென்ய‌மின் குல‌த்திலிருந்து ஒரு இல‌ட்ச‌த்து எண்ப‌தாயிர‌ம் வீர‌ர்க‌ளைத் திர‌ட்டினார். போருக்கு ஆய‌த்த‌மானான். ஆனால் க‌ட‌வுளின் வாக்கு அவ‌ர்க‌ளுக்கு இறைவாக்கின‌ர் “செம‌யா” மூல‌ம் கூற‌ப்ப‌ட்ட‌து.

“ந‌ட‌ப்ப‌வையெல்லாம் க‌ட‌வுளின் திட்ட‌ப்ப‌டி ந‌ட‌க்கின்ற‌ன‌. என‌வே நீங்க‌ள் க‌ட‌வுளுக்கு எதிரே நிற்க‌வேண்டாம். வீடுக‌ளுக்குச் செல்லுங்க‌ள்”.

ம‌க்க‌ள் க‌ட‌வுளின் வாக்கைக் கேட்ட‌ன‌ர். எரொபவாம் ம‌ன்ன‌னுக்கு எதிரான‌ யுத்த‌ம் த‌விர்க்க‌ப் ப‌ட்ட‌து. கால‌ம் க‌ட‌ந்த‌து. எரொப‌வாமின் ஆட்சி தொட‌ர்ந்த‌து. ரெக‌யெபாம் ஆட்சி செய்த‌ எல்லைக்குள் தான் இஸ்ரயேலர்களின் புனிதஸ்தலமான எருச‌லேம் தேவால‌ய‌ம் இருந்த‌து.

அந்த‌ ஊருக்கு மக்கள் தொடர்ந்து போனால் மீண்டும் என்னை விட்டு விட்டு ரெக‌பெயாமை அர‌ச‌னாக்கி விடுவார்க‌ளோ என‌ அஞ்சினான் எரொபவாம். க‌ட‌வுளின் வாக்கை ம‌ற‌ந்தான். க‌ட‌வுளின் அன்பை ம‌ற‌ந்தான். அவ‌ர் த‌ந்த‌ வெற்றிக‌ளை ம‌ற‌ந்தான். மக்கள் எருசலேமுக்குச் செல்வதைத் தடுக்க, அவ‌ன‌து நாட்டில் வேற்று தெய்வ‌ங்க‌ளுக்குக் கோயில் க‌ட்டி, ம‌க்க‌ளை வ‌ழிப‌ட‌த் தூண்டினான். லேவிய‌ர் குலத்தின‌ர் அல்லாத‌வ‌ரை குருக்க‌ளாக‌வும் ஏற்ப‌டுத்தினான்.

ம‌க்க‌ள் எருச‌லேமுக்குப் போகாம‌ல் இருப்ப‌த‌ற்காக‌ அதே நாளில் ஒரு விழாவையும் உண்டாக்கினான். அந்த‌ விழா நாளில் பீட‌த்துக்கு முன்னால் நின்று ப‌லி செலுத்த ஆய‌த்த‌மானான். அப்போது அங்கே வ‌ந்தார் ஒரு இறைய‌டியார்.

“இதோ இப்ப‌லிப்பீட‌ம் இடிந்து விழும். சாம்ப‌ல் சித‌றிப்போகும். ” என்று உர‌த்த‌ குர‌லில் சொன்னார். எரொபவாம் கோப‌ம‌டைந்து கையை நீட்டி

“பிடியுங்க‌ள் அவ‌னை” என்றான். நீட்டிய‌ அவ‌னுடைய‌ கை ம‌ட‌ங்க‌வேயில்லை. அதிர்ச்சிய‌டைந்த‌ ம‌ன்ன‌ன் ச‌ட்டென‌ ப‌ணிந்து, “என் கையைக் குண‌மாக்குங்க‌ள்” என‌ கெஞ்சினான். இறைய‌டியார் ஆண்ட‌வ‌ரிட‌ம் வேண்டினார், கை ச‌ரியான‌து.

“இறைய‌டியாரே வீட்டுக்கு வாருங்கள். அன்ப‌ளிப்புக‌ளைப் பெற்றுச் செல்லுங்க‌ள்” என்றான் ம‌ன்ன‌ன்.

“நீ உன் வீட்டில் பாதியைத் த‌ந்தாலும் வேண்டாம். இந்த‌ இட‌த்தில் உண‌வு அருந்த‌வோ, த‌ண்னீர் குடிக்க‌வோ கூடாது. என‌ க‌ட‌வுள் சொல்லியிருக்கிறார்” என்று சொல்லிவிட்டு‌  கிள‌ம்பினார்.

க‌ட‌வுளால் தேர்ந்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ எரொப‌வாம் பின்னர்  ம‌க‌னையும் இழ‌ந்து, க‌ட‌வுளின் அருளையும் இழ‌ந்து இற‌ந்து போனான்.

தேவைய‌ற்ற‌ ப‌ய‌ங்க‌ளும், க‌ட‌வுளின் வாக்குத‌த்த‌த்தின் மீதான‌ ந‌ம்பிக்கையின்மையும் ந‌ம‌து மீட்பை அழித்து விடும் என்ப‌தே எரொப‌வாமின் வாழ்க்கை ந‌ம‌க்குச் சொல்லும் பாடமாகும்

பைபிள் மனிதர்கள் 45 (தினத்தந்தி) சேபாவின் அரசி

இஸ்ரயேலர்களின் மன்னனாக சாலமோன் விளங்கிய காலம். அவருக்கு அளவில்லா ஞானத்தையும், அறிவையும் கடவுள் வழங்கினார். அதனால் அவருடைய புகழ் உலகின் பல பாகங்களிலும் பரவியது.

அவருடைய புகழைக் கேள்விப்பட்டார் சேபா நாட்டின் அரசி. காண வருவது மன்னரையல்லவா ? எனவே ஏராளமான செல்வங்களை அவள் தன்னோடு கொண்டு வந்தாள். நறுமணப் பொருட்கள், பொன், விலையுயர்ந்த கற்கள், ஒட்டங்கள் என அவள் கொண்டு வந்தவற்றின் கணக்கைக் கேட்டால் வியப்படையாமல் இருக்க முடியாது.

மன்னருக்கு பரிசாய்க் கொடுத்த பொன் மட்டும் நாலாயிரத்து எண்ணூறு கிலோ. கப்பல்களில் வந்திறங்கின வாசனை மரங்களும், விலையுயர்ந்த கற்களும். அதன் பிறகு யாருமே சாலமோன் மன்னனுக்கு அந்த அளவுக்கு அள்ளிக் கொடுக்கவில்லை எனுமளவுக்கு செல்வக் குவியலை அவள் பரிசாகக் கொண்டு வந்தாள்.

மன்னனின் முன்னால் வந்து நின்ற அவள் தனது கேள்விகளினால் மன்னனை சோதித்தாள். சாலமோன் மன்னன் அறிவிலும், ஞானத்திலும் சிறந்து விளங்கியவர். அவருக்கு அரசியின் கேள்விகளை எதிர்கொள்வதில் சிரமம் இருக்கவில்லை. விடுகதைகள், புதிர்கள், கேள்விகள் என எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக எதிர்கொண்டார் சாலமோன்.

அரசி வியந்தாள். சாலமோனின் அறிவு ஒரு புறம் அவளைக் கட்டிப் போட்டது. மறுபுறம் சாலமோனின் செல்வச் செழிப்பு அவளை மலைக்க வைத்தது. அவருடைய அரண்மனையின் அழகு அவளை வியக்க வைத்தது. அந்த அரண்மனை சாலமோன் மன்னன் பதின்மூன்று ஆண்டுகள் செலவழித்துக் கட்டிய மாபெரும் அரண்மனை !

அவருடைய அரண்மனையில் பணி செய்யும் மக்கள் அரசியை இன்னும் மலைக்க வைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் அழகான சீருடைகள் இருந்தன. மிகவும் சுறு சுறுப்புடன் அவர்கள் நடந்து கொண்டனர். பரிமாறுபவர்கள் மிகப் பெரிய திறமை சாலிகளாக இருந்தார்கள்.

கடைசியாக மன்னனின் கடவுள் பக்தி அவரை மிகவும் ஈர்த்தது. அவர் ஆண்டவருக்காய் செலுத்திய மாபெரும் எரிபலிகளைக் கண்டபோது பேச்சற்றுப் போனார். எல்லாவற்றையும் பார்த்தபின்னர் மன்னரை நோக்கி,

மன்னரே. எங்கள் நாட்டில் உங்களைப் பற்றி உயர்வாகப் பேசினார்கள். நீங்கள் அறிவிலும் ஞானத்திலும் பெரியவர், செல்வத்தில் வல்லவர் என்றெல்லாம் கூறினார்கள். நான் அவற்றை நம்பவேயில்லை. நேரில் வந்து பார்க்கும் போதுதான் தெரிகிறது உமது புகழ்.

‘உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அவர்கள் உமது புகழில் பாதியைக் கூட சொல்லவில்லை என்பதே உண்மை. உமது ஞானமும் செல்வமும் அவர்கள் சொன்னதை விட மிகுதியாகவே இருக்கிறது. உமது மனைவியரும், பணியாளரும் பாக்கியம் செய்தவர்கள். கடவுள் போற்றப்படுவாராக’ என வாழ்த்தினார் அரசி.

சாலமோன் மன்னனும் விருந்தோம்பலில் குறை வைக்கவில்லை. சேபா நாட்டு அரசிக்கு ஏராளமான பரிசுகளைக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல் அவர் எதையெல்லாம் விரும்பிக் கேட்டாரோ அவற்றையெல்லாம் அவர் அவருக்குக் கொடுத்தார்.

அரசி மகிழ்ச்சியடைந்தார். தனது பணியாளர்களோடு சொந்த நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.

உலகில் இவரைப் போல யாரும் செல்வச் செழிப்பாய் இருந்ததில்லை என சொல்லுமளவுக்கு செல்வத்தில் புரண்டவர் சாலமோன் மன்னன். ஆண்டு தோறும் அவருக்கு பரிசாகக் கிடைக்கும் பொன்னின் எடை மட்டுமே சுமார் இருபத்து ஏழாயிரம் கிலோ. அவருடைய மாளிகைகள், பயன்பாட்டுப் பொருட்கள், அரியணைகள் என எல்லாமே தங்க மயமாய்க் காட்சியளித்தன. வெள்ளியைப் பயன்படுத்துவதே கவுரவக் குறைச்சல் எனும் நிலை இருந்தது.

சேபா நாட்டு இளவரசியைக் குறித்த குறிப்புகள் பெரும்பாலான மதக் குறிப்புகளில் காணப்படுகின்றன. பைபிளைத் தவிர, குரான், யூத நூல்கள், எத்தியோப்பியக் கலாச்சாரப் பதிவுகள் என பல இடங்களில் அரசி குறித்த செய்திகள் இடம் பெறுகின்றன. ஒரு சில சின்ன மாறுதல்களுடன்.

அவற்றில் ஒரு கதை சுவாரஸ்யமானது. அரசிக்கு கழுதைக் கால்கள் என்றும், கால்களில் நிறைய ரோமம் உண்டு என்றும் செய்திகள் உலவின‌. அதைத் தெரிந்து கொள்வதற்காக சாலமோன் மன்னன் தனது அரண்மனையின் தரையை பளபளப்பாக்கி தண்ணீரைப் போல வைத்திருந்தார். தண்ணீர் தான் கிடக்கிறது என நினைத்த அரசி தனது ஆடையை சற்றே தூக்கி நடந்தபோது அவருடைய கால்கள் வெளிப்பட்டன, கால்களின் உண்மை நிலை தெரிய வந்தது என்பது ஒரு கதை.

சேபா இளவரசி வியக்குமளவுக்கு கடவுளுக்குப் பலிகள் செலுத்திய சாலமோன், பின்னர் வழி விலகினார். வேற்று தெய்வங்களை வழிபடும் பெண்களை சகட்டு மேனிக்கு திருமணம் செய்து கொண்டார். அவருக்கு எழுநூறு மனைவியரும், முன்னூறு வைப்பாட்டியரும் இருந்தனர்.

உலகப் புகழ்பெற்ற ஞானியாய், அறிவாளியாய் இருந்தாலும் ஆன்மீகத்தில் சறுக்கி விடாத கவனம் தேவை. மிகச் சிறந்த நீதி நூல்களை எழுதினாலும், செபங்கள் செய்தாலும், பாடல்கள் எழுதினாலும் கடவுளை விட்டு விலகி நடந்தால் விண்ணக வாழ்வுக்குச் செல்வது சாத்தியமற்றது என்பதையே சாலமோன் மன்னனின் வாழ்க்கை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

பைபிள் மனிதர்கள் 44 (தினத்தந்தி) சிமயி

 

பைபிளில் மனிதர்களில் அதிகம் அறியப்படாத நபர்களில் ஒருவர் சிமயி. தாவீது மன்னனின் குடும்பம் தான் இவனுடைய குடும்பமும்.  தாவீது மன்னனுடைய ஆட்சிக்காலத்தில் ஒரு சிக்கல் எழுகிறது. அவருடைய மகன் அப்சலோம் தாவீதுக்கு எதிரியாக மாறுகிறான். தாவீது மன்னனுக்கு தர்ம சங்கடமான நிலை. உயிர் பிழைக்க தப்பி ஓடுகிறார். தான் நேசிக்கும் மகனே தன்னை கொல்லத் தேடுகிறானே எனும் பெருங் கவலையோடு.

அவர் தனது ஆதரவாளர்களுடன் எருசலேம் செல்கிறார். யானை சேற்றில் புதைந்தால் சுண்டெலி கூட வந்து உதைக்கும் என்பார்கள். அதே போல, தாவீது மன்னனின் வீழ்ச்சி மக்களிடம் அவமானத்தைக் கொண்டு வந்தது. தாவீது பகூரிம் என்னுமிடத்துக்கு வந்தபோது சிமயி வந்தான்.

அவன் கோபத்துடனும், வெறுப்புடனும் தாவீதையும் அவன் கூட இருந்தவர்களையும் பழித்துரைத்தான். கற்களைப் பொறுக்கி எல்லோர் மேலும் எறிந்தான். “இரத்த வெறியனே, பரத்தை மகனே. சவுலுக்குப் பதிலாக நீ ஆட்சி செய்தாய். இப்போது உன் மகன் உனக்குப் பதிலாய் ஆட்சி செய்வான். நீ இரத்த வெறியன். உனக்கு அழிவு நிச்சயம்” என சபித்தான்.

மன்னனாக அரியணையில் இருந்தவர். அவர் முன்னால் நிற்பதற்கே மற்றவர்கள் பயப்படுவார்கள். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. தாவீதைச் சுற்றி அவனைப் பாதுகாக்கவும், உதவி செய்யவும் ஏராளம் வீரர்கள் உண்டு.

தாவீதுடன் இருந்தவர்களில் ஒருவன் தாவீதின் சகோதரி செரூயாவின் மகன் வீரனான அபிசாய். அவனுக்கு கடும் கோபம். நேராக தாவீது மன்னனிடம் வந்தான்.

“அரசே.. இவன் ஒரு செத்த நாய். இவன் உங்களைப் பழித்துப் பேசுவதா. ஒரு வார்த்தை சொல்லுங்கள்,. இவனுடைய தலையை வெட்டி வீசுகிறேன்”

தாவீது அமைதி காத்தார். “வேண்டாம். நான் பெற்ற மகனே என்னைக் கொல்லத் தேடுகிறான். இவன் பேசுவதில் என்ன இருக்கிறது. ஒருவேளை கடவுளே கூட இவனைத் தூண்டிவிட்டு பேசச் செய்திருக்கலாம். நாம் அமைதியாய் இருப்போம். இந்த பொறுமைக்காகக் கடவுள் நமக்கு நன்மை செய்வார்” என்றார்.

நாட்கள் செல்கின்றன. இப்போது காட்சிகள் மாறுகின்றன. தாவீது மன்னன் மீண்டும் அரியணையில் அமர்கிறார். எதிர்ப்பாளரான அவருடைய மகன் கொல்லப்படுகிறான்.

தாவீது மன்னர் யோர்தான் ஆற்றின் கரையில் வந்தார். அப்போது சிமயி தாவீது மன்னனைத் தேடி வந்தான். தாவீதின் முன்னால் சென்று தரையில் விழுந்தான் சிமயி.

“மன்னரே மன்னியும். நான் செய்தது பெரும் பாவம். பழைய நிகழ்ச்சிகளை எல்லாம் மனதில் வைக்காதீர்கள். மன்னியுங்கள் என கெஞ்சினான்”. அபிசாய் அப்போதும் பக்கத்தில் இருந்தார்.

“மன்னரே, கடவுளால் திருப்பொழிவு செய்யப்பட்ட ஒருவரைப் பழித்ததற்காக இவனைக் கொல்லவா ?” என்று கேட்டார். அப்போதும் தாவீது இரக்கம் காட்டினார். “வேண்டாம் விட்டு விடு” என்றார்.

காலம் கடந்தது. இப்போது தாவீது மன்னன் மரணப் படுக்கையில். அவருடைய மகன் சாலமோன் அரியணையில். தனது மரணத்துக்கு முந்திய வினாடிகளில் தாவீது சாலமோனை அழைத்தார்.

“மகனே, சிமயி உன்னோடு இருக்கிறான். அவன் என்னைப் பழித்து சபித்தான். நான் அவனை மன்னித்தேன். ஆனால் நீ அப்படிச் செய்யாதே. அவன் இரத்தத்தில் தோய்ந்து இறந்து போகும்படி செய்” என சொல்லி விட்டு இறந்து போனார்.

சாலமோன் சிமயியை வரவழைத்தான். ஆனால் கொல்லவில்லை. “நீ எருசலேமிலேயே ஒரு வீட்டில் தங்கியிரு. என்றைக்கு நீ கெதரோன் நீரோடையைக் கடப்பாயோ, அன்று நிச்சயம் கொல்லப்படுவாய்” என்றார்.

சிமயி தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என எருசலேமில் தஞ்சம் புகுந்தான். மூன்று ஆண்டுகள் சுமூகமாக ஓடின. இப்போது அவனுடன் இருந்த இரண்டு அடிமைகள் அவனை விட்டு விட்டு காத் எனும் வேறு ஒரு ஊருக்குப் போய்விட்டார்கள். சிமயி மன்னனுக்குச் செய்த உடன்படிக்கையை மறந்தான். எருசலேமை விட்டு வெளியேறி காத்துக்குச் சென்று அவர்களைக் கூட்டி வந்தான். விஷயம் சாலமோன் காதுகளுக்குச் சென்றது. சிமயியை வரவழைத்தார்.

“நீ வெளியேறிச் சென்றால் கொல்லப்படுவாய் என்று சொன்னேனல்லவா. நீயும் ஆண்டவர் மீது ஆணையிட்டாயே ? என்னாயிற்று ? நீ செய்த பாவங்களுக்குத் தண்டனை பெற வேண்டும் என்பதற்காகத் தான் கடவுள் உன்னை இப்படி நடத்தியிருக்கிறார் போலும்” என்றான்.  சிமயி கதிகலங்கி நின்றான்.

“சிமயியைக் கொன்று விடு” என தனது வீரன் பெனாயாவுக்குக் கட்டளையிட்டார் சாலமோன் சிமயி கொல்லப்பட்டான்.

சிமயியின் வாழ்க்கை இரண்டு விஷயங்களைச் சொல்கிறது.

தாவீதைப் போல கடவுளோடு தொடர்ந்து நடந்த ஒரு மனிதன் கூட தனது மனதில் பழிவாங்குதல் எனும் பாவ உணர்வைக் கொண்டிருக்கலாம் எனும் எச்சரிக்கை முதலாவது. ஆண்டவரை விட  பொருளாசை தேவை என ஓடினால் அழிவு நிச்சயம் எனும் பாடம் இரண்டாவது.

*

பைபிள் மனிதர்கள் 43 (தினத்தந்தி) யோவாபு

யோவாபு தாவீது மன்னனின் சகோதரி செரூயாயின் மகன். தாவீது அவனை படைகளுக்கெல்லாம் தலைவனாக வைத்திருந்தார். மிகச்சிறந்த வீரனான இவனுடைய தலைமையின் கீழ் தாவீது  தோல்வி என்பதே அறியாத மன்னனாய் இருந்தார்.

அரசவையில் மிகவும் செல்வாக்குடைய ஒரு நிலையில் இருந்தார் யோவாபு. அபிசாயி, அசாகேல் என அவனுக்கு இரண்டு சகோதரர்கள் உண்டு. இருவருமே சிறந்த வீரர்கள். அவர்களில் அசாகேலை தாவீதின் படைவீரன் அப்னேர் கொலை செய்தான். அந்தப் பகையை மனதில் சுமந்து திரிந்த யோவாபு, பிறிதொரு காலத்தில்  தாவீதின் அறிவுரையையும் மீறி அப்னேரைக் கொன்றான்.

தாவீதின் மகன் அப்சலோம் தாவீதுக்கு எதிராக எழுந்தபோது இளவரசர் என்றும் பாராமல் சாகடித்தான். தாவீது மன்னனின் கட்டளையை மீறி இந்த செயலைச் செய்தான். அதைக் கேள்விப்பட்டு மன்னன் கலங்கிப் புலம்பியபோது மன்னனின் முன் நேரடியாகச் சென்று அவரைக் கடிந்து கொள்ளுமளவுக்கு செல்வாக்கோடு இருந்தான் யோவாபு.

தாவீது மன்னன், உரியாவின் மனைவி பத்சேபாவின் மேல் மோகம் கொண்டு மயங்கிய போது உதவிக்கு வந்தவன் யோவாபு தான். நயவஞ்சகமாய் உரியாவை போர்க்களத்தில் சாகடித்தவன் அவன். அப்படித்தான் தாவீது பத்சேபாவைச் சொந்தமாக்கினார்.

யோவாபுவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் தாவீது யோவாபுவுகுப் பதிலாக அமாசா என்பவரை படைகளின் தலைவனாய் நியமித்தார். அமாசா தாவீதின் இன்னொரு சகோதரியின் மகன். தனக்கு எதிரே வருபவர்களை தயவு தாட்சண்யமின்றி தீர்த்துக் கட்டும் பழக்கம் யோவாபுக்கு இருந்தது. அமாசாவும் கொல்லப்பட்டான். வெறும் வலிமை மட்டுமல்லாமல் குள்ளநரித் தந்திரமும் யோவாபுவிடம் இருந்ததாகவே அவருடைய செயல்பாடுகள் தெரிவிக்கின்றன.

தாவீது மன்னனின் கடைசி காலத்தில் யோவாபு, தாவீதின் மகனான அதோனியாவின் பக்கம் நின்றான். அதோனியாவை மன்னனாக்கி அவனோடு கூட அரசவையின் ஆதிக்கத்தைத் தொடரவேண்டும் என்பது அவனுடைய கனவாய் இருந்தது. ஆனால் காட்சிகள் மாறின. கடவுளின் விருப்பம் சாலமோன் மன்னனாக வேண்டும் என்பது. அதுவே தாவீது மன்னனின் விருப்பமாகவும், அன்றைய முக்கிய இறைவாக்கினரான நாத்தானின் விருப்பமாகவும் இருந்தது. சாலமோன் மன்னனானார்.

தாவீது தனது மரணப் படுக்கையில் சாலமோனிடம் இறுதி விண்ணப்பம் வைத்தார். “ மகனே யோவாபு விஷயத்தில் விவேகமாக நடந்து கொள். அவன் அப்னேர், அமாசா இருவரையும் கொன்று விட்டான். போர்க்காலத்தில் சிந்தப்பட்ட இரத்தத்துக்கு சமாதான காலத்தில் பழிவாங்கினான் அவன். எனவே அவன் நரைமுடியனாய் நிம்மதியாய் சாகவிடாதே. கொன்று விடு” என்றார்.

இதற்கிடையில் தாவீதின் இன்னொரு மகன் அதோனியாவின் சூழ்ச்சி காரணமாக சாலமோன் மன்னன் அவனைக் கொலை செய்தான். அதோனியா இறந்ததும் யோவாபு பயந்தான். தனது உயிர் நிச்சயம் போய்விடும் என்பது அவனுக்கு உறுதியாய்த் தெரிந்தது. அவன் ஓடிப் போய் ஆலயத்தில் நுழைந்தான். பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டான். ஆலயத்தில் வைத்து கொலை செய்யப்பட மாட்டோம் என அவன் நம்பினான். ஒரு முறை அதோனியா பலிபீடத்தின் கொம்புகளைப் பற்றிக் கொண்டிருக்கையில் மன்னிக்கப்பட்டான். எனவே அதே வழியை இவனும் பின்பற்றினான்.

சாலமோன் பெனாயாவை அனுப்பி, “யோவாபு வைக் கொன்று வா” என கட்டளையிட்டான். பெனாயா போனான். அவன் யோவாபுவை ஆலயத்துக்கு வெளியே வருமாறு அழைத்தான். யோவாபு நகரவில்லை. “இது அரச கட்டளை.. வெளியே வா” என்றான் பெனாயா.

“முடியாது. நான் இங்கேயே சாவேன்” என்றான் யோவாபு.

பெனாயா மன்னனிடம் திரும்பி வந்து நடந்ததைக் கூறினான். சாலமோன் மன்னனோ, “அப்படியா.. சரி, அவனை ஆலயத்தில் வைத்தே கொன்று விடு. “ என்று கட்டளையிட்டான்.

இந்தக் கட்டளையை யோவாபு எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை. பெனாயா ஆலயத்தில் நுழைந்து யோவாபுவைக் கொன்றான்.

“யோவாபுவின் இரத்தப்பழி அவன் மேலும், அவன் குடும்பத்தின் மேலும் இருக்கட்டும். அவன் நேர்மையிலும், பண்பிலும் சிறந்தவர்களான அப்னேர், அமாசா ஆகியோரை தாவீதுக்கே தெரியாமல் கொன்றான்” என்றார் சாலமோன்.

யோவாபுவின் வாழ்க்கை சில ஆன்மீகப் பாடங்களையும் கற்றுத் தருகிறது. யோவாபு எப்போதும் சுயநலமாக சிந்தித்தவன். தனது உயர்வு, தனது பதவி, தனது செல்வாக்கு இவற்றுக்காக பிறரை அழிக்கத் தயங்காதவன். காலமெல்லாம் கூட இருந்த தாவீது மன்னனுக்கு எதிராகவே கடைசிகாலத்தில் கட்சி மாறியவன் இவன். கடவுளின் வார்த்தைகளைக் கேட்பவனாகவோ, அவர் விருப்பத்தைச் செயல்படுத்துபவனாகவோ அவன் காணப்பட்டதில்லை. அவனுடைய செயல்பாடுகள் அவனுக்கு மரணத்தைக் கொண்டு வந்தன.

தனது பலத்தின் மேலும், செல்வாக்கின்மேலும் நம்பிக்கை வைப்பவர்கள் எத்தனை வலிமையானவர்களாய் இருந்தாலும் வீழ்வார்கள். கடவுளை மட்டுமே சார்ந்திருப்பவர்கள் எத்தனை பெலவீனர்களாய் இருந்தாலும் வெல்வார்கள். இதுவே யோவாபுவின் வாழ்க்கை சொல்லித் தரும் பாடங்களில் முக்கியமானது.

பைபிள் மனிதர்கள் 42 (தினத்தந்தி) சாலமோன் மன்னன்

ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் – சாலமோன் ( நீதிமொழிகள் 1 : 7 )

சாலமோன் மன்னன் அரசவையிலே வீற்றிருக்கிறார். அவருக்கு முன்னால் ஒரு வினோத வழக்கு. வழக்குடன் வந்தவர்கள் இரண்டு பெண்கள். இருவரும் ஒரே வீட்டில் குடியிருப்பவர்கள். அந்த வீட்டில் அவர்களைத் தவிர யாரும் இல்லை. வழக்கு இது தான்.

ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது. பிறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு மற்றவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. அவள் இரவில் தூங்கும் போது, தெரியாமல் தனது குழந்தையின் மீது புரண்டு படுக்க குழந்தை இறந்து விடுகிறது. இறந்த குழந்தையை அவள் நைசாகத் தூக்கிக் கொண்டு போய், மற்ற தாயின் அருகே கிடத்தி விட்டு, அவளுடைய குழந்தையை தன்னருகே வைத்துக் கொண்டாள்.

காலையில் தன்னருகே இறந்து கிடந்த குழந்தையைக் கண்ட தாய் முதலில் அதிர்ச்சியடைந்தாள். பிறகு உற்றுப் பார்க்கையில் அது தனது குழந்தையல்ல என கண்டு கொள்கிறாள். இப்போது இருவருமே உயிருடன் இருக்கும் குழந்தைக்காக சண்டை போடுகின்றனர். இந்த வழக்கு தான் சாலமோன் மன்னனின் முன்னில் வந்து சேர்ந்தது.

அரசவை நகம் கடித்தது. மன்னர் சில வினாடிகள் மௌனமாய் இருந்தார். பின் காவலரை அழைத்து ஒரு வாளைக் கொண்டு வரச் சொன்னார். வாள் வந்தது. “இந்தக் குழந்தையை இரண்டாக வெட்டி ஆளுக்கொரு துண்டு கொடுங்கள்” என மன்னன் கட்டளையிட்டான். குழந்தையின் உண்மையான தாயோ பதறினாள். “ஐயோ.. வேண்டாம்..வேண்டாம்.. அவளே குழந்தையை வளர்க்கட்டும்” என்றாள். மற்ற தாயோ, உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம். ஆளுக்கொரு துண்டாய் எடுத்துக் கொள்ளலாம் என்றாள்.

குழந்தையைக் கொல்லவேண்டாம் என்றவளே உண்மையான தாய் என மன்னன் தீர்ப்பளித்தார். நாட்டு மக்களெல்லாரும் வியந்தனர், கொஞ்சம் பயந்தனர்.

உலகிலேயே அதிக ஞானமுடையவர் என விவிலியம் சாலமோன் மன்னனைக் குறிப்பிடுகிறது. கடவுள் ஒரு முறை அவருக்குக் கனவில் தோன்றி, “உனக்கு என்ன வேண்டும்” என கேட்டபோது “மக்களை வழிநடத்த ஞானம் கொடுங்கள்” என கேட்டார் மன்னன். கடவுள் மகிழ்ந்தார். செல்வமோ, புகழோ கேட்காததால் அவருக்கு ஞானத்தையும், கூடவே செல்வத்தையும், புகழையும் கொடுத்து கடவுள் அவரை மிகப்பெரிய நபராய் மாற்றினார்.

கி.மு 1000 சாலமோன் மன்னனுடைய பிறந்த வருடம். தாவீது மன்னரின் மகனான இவர் சுமார் 40 ஆண்டுகள் யூதா, மற்றும் இஸ்ரேல் நாடுகளை அரசாட்சி செய்தவர். இஸ்ரேல் நாட்டின் மூன்றாவது மன்னன் இவர் !

எருசலேம் தேவாலயம், மிகப் புகழ்பெற்ற ஆன்மீக, மற்றும் வரலாற்றுத் தளம். அந்த ஆலயம் “. எருசலேமின் பொற்காலம் “ என அழைக்கப்படும் சாலமோன் மன்னன் ஆட்சியில் தான் கட்டப்பட்டது.

பைபிளில் இடம் பெற்றிருக்கும் நீதி மொழிகள், உன்னதப் பாடல் மற்றும் பிரசங்கி ஆகிய மூன்று நூல்களையும் சாலமோன் மன்னன் எழுதியிருக்கிறார். இதில் நீதிமொழிகள் எனும் நூல் உலக தத்துவ நூல்களெக்கெல்லாம் பிதாமகன் போல கம்பீரமாய் வாழ்க்கை வழிகளை சொல்கிறது.

கடவுளின் செல்லப் பிள்ளையாக சாலமோன் மன்னன் இருந்தார். புகழிலும், செல்வத்திலும், ஞானத்திலும் அவரே உச்சியில் இருந்தார்.

தனது வாழ்வின் பிற்காலத்தில் சிற்றின்பத்தில் சிக்கி, 700 மனைவியர், 300 வைப்பாட்டிகள் என வாழ்விழந்தார். அந்தப் பெண்களின் தலையணை மந்திரங்களில் சிக்கிக் கொண்டு இறைவனை விட்டு விலகியும் நடந்தார்.

இறைவனுக்கு வெகு அருகில், இறைவனை விட்டு வெகு தொலைவில் என இரண்டு விதமான எல்லைகளையும் கண்ட வாழ்க்கையாக சாலமோன் மன்னனின் வாழ்க்கை அமைந்து விட்டது. இறைவனின் மீதான பிணைப்பிலிருந்து விலகினால் எத்தனை உயரத்தில் இருப்பவருக்கும், துயரத்தின் வாழ்க்கை அமையும் என்பதையே அவருடைய வாழ்க்கை சொல்கிறது !

சாலமோன் மன்னன் எழுதிய ஆயிரக்கணக்கான நீதி, தத்துவ, வாழ்வியல் மொழிகளின் சில சாம்பிள்கள் இவை.

உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி: உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே, அவை உன் தலைக்கு அணிமுடி: உன் கழுத்துக்கு மணிமாலை – நீ.மொ 1 : 8

விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்: ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும். நீ.மொ 4 : 23

எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உண்ணக் கொடு, தாகத்தோடு இருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு.  நீதி மொழி : 25 : 21-22

ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பர் : தம் பேச்சின் விளைவை அவர் துய்த்தாக வேண்டும். நீ. மொ 18 : 20

*

பைபிள் மனிதர்கள் 41 (தினத்தந்தி) அதோனியா

கடவுளின் ஆசி பெற்றவராக விளங்கிய தாவீது மன்னன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். இப்போது அவர் முதுமையின் கடைசிப் படிக்கட்டில்.

அதோனியா, தாவீது மன்னரின் நான்காவது மகன். தாவீதுக்கு அகித்து எனும் பெண் மூலமாகப் பிறந்தவன். அவருடைய மூத்த சகோதரர்களான அம்னோன் மற்றும் அப்சலோம் இருவரும் இறந்து போய்விட்டார்கள். இருப்பவர்களில் மூத்தவன் அதோனியா தான். தாவீதுக்குப் பின்னால் மன்னனாவதற்குச் சட்டப்படி அத்தனை உரிமையும் அதோனியாவுக்கே உண்டு ! அடுத்து இருப்பவன் இளையவன் சாலமோன், அவன் தாவீதுக்கும் பத்சேபா எனும் பெண்ணுக்கும் பிறந்தவன். கடவுளின் திட்டமோ சாலமோன் அரசராக வேண்டும் என்பது !

மரணப் படுக்கையில் தாவீது கிடக்க, அதோனியா தனக்குத் தானே அரசனாய் முடிசூட்டிக் கொள்ள தீர்மானித்தான். தாவீதுடன் கூடவே பயணித்த தலைமைப் படைத் தலைவன் “யோவாபு” இப்போது அதோனியாவின் பக்கம். கூடவே பதவிப் பிரமாணம் செய்து வைக்க குரு அபியத்தால். இறைவாக்கினர் நாத்தானும், தாவீதின் மெய்க் காப்பாளர்களும் இன்னொரு பக்கம். அவர்களுக்கு சாலமோன் தான் மன்னனாக வேண்டும் என்பதே விருப்பம்.

அதோனியா எதிர்ப்பாளர்களைப் பொருட்படுத்தவில்லை. அரச அலுவலர்கள், அரசரின் மற்ற மக்கள் எல்லோரையும் அழைத்து விருந்து வைத்தான். ஆடுகளையும், எருதுகளையும், கொழுத்த காளைகளையும் பலியிட்டான். தானே மன்னன் என கொக்கரித்தான். விருந்து தடபுடலாய் நடந்தது.

இறைவாக்கினர் நாத்தான் சாலமோனின் தாய் பத்சேபாவிடம் சென்றார்.

“நீர் போய் தாவீது மன்னனைப் பார்த்து, நீர் எனக்கு வாக்களித்தபடி சாலமோனை மன்னனாக முடிசூட்டுங்கள் என்று சொல்லுங்கள். நானும் வந்து உங்களுக்கு ஆதரவாகப் பேசுவேன்” என்றார்.

அதன்படி, பத்சேபா  மன்னனின் அறைக்குள் நுழைந்தாள். அங்கே தாவீது மன்னனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தாள் அழகும் இளமையும் நிறைந்த மன்னனின் கடைசி மனைவி அபிசாகு.

“மன்னரே வணக்கம்” பத்சேபா பணிந்தாள்.

“சொல் என்ன வேண்டும் ?”

“தலைவரே.. உமக்குப் பின் சாலமோன் மன்னனாவான் என்று வாக்களித்தீர்கள்.  இப்போது அதோனியா மன்னனாய் தனக்குத் தானே முடிசூட்டியிருக்கிறான். உமக்குப் பின் யார் மன்னனாவான் என்பதை நீரே அறிவிக்க வேண்டும்.” என்றாள்.

அப்போது நாத்தான் இறைவாக்கினர் வந்தார்.

“மன்னரே, அதோனியா மன்னராவான் என்று நீர் சொன்னதே இல்லை. இன்று அவன் ஆதரவாளர்களைத் திரட்டி மன்னன் என்று சொல்லிக் கொள்கிறான். கடவுளுக்குப் பலிகளையும் இட்டிருக்கிறான்” என்றார்.

இதைக் கேட்ட தாவீது கோபமடைந்தார்.

“சாலமோன் தான் எனக்குப் பின் அரசர். அதை இன்றே செய்து முடிப்பேன். எனது கோவேறுக் கழுதையைக் கொண்டு வாருங்கள். நாத்தானும், குரு சாதோக்கும் சாலமோனை கீகோனுக்கு அழைத்துச் சென்று அரசனாய் திருப்பொழிவு செய்யட்டும்” என்றார்.

தாவீது மன்னனின் கட்டளைப்படியே எல்லாம் நடந்தன. சாலமோன் மன்னனானார். எக்காள ஒலி முழங்கியது. மக்கள் மிகுந்த ஆரவாரம் செய்து மன்னனை வாழ்த்தினார்கள். அந்த ஒலி விருந்துண்டு மயக்கத்தில் இருந்த அதோனியாவுக்கும் அவன் ஆதரவாளர்களுக்கும் கேட்டது.

திடீரென நாட்டில் எழுந்த பேரொலி அவர்களைத் திடுக்கிட வைத்தது. “என்ன செய்தி ? “ என பதட்டத்துடன் வினவியவர்களுக்கு சாலமோன் மன்னனான செய்தி தெரிவிக்கப்பட்டது. அவரை தாவீது மன்னனே அரசனாய் அறிமுகப் படுத்தினார் என்பதையும், சாலமோன் இப்போது சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதையும் அறிந்தவுடன் அவர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். எல்லோரும் சிதறி ஓடினார்கள்.

அதோனியாவின் கண்களில் மரண பயம் தெரிந்தது. ஓடிப்போய் கடவுளின் பலிபீடத்தின் கொம்புகளை இறுகப் பிடித்துக் கொண்டு “நான் கொல்லப்பட மாட்டேன் என்று உறுதி தந்தால் மட்டுமே வெளியே வருவேன்” என்றான்.

“ஒழுங்காக இருந்தால் நீ கொல்லப்பட மாட்டாய்.” என்றார் புதிய மன்னர் சாலமோன்.

அதோனியா உயிர்தப்பினான். ஆனாலும் தனக்கு அரச கிரீடம் கிடைக்கவில்லையே எனும் ஆதங்கமும், கோபமும் அவனுக்குள் உயிரோட்டமாய் இருந்தது. நாட்கள் கடந்தன. அவன் சாலமோனின் தாயான பத்சேபாவிடம் வந்தான்.

“நான் அரசனாக வேண்டிய இடத்தில் சாலமோன் இருக்கிறான். எனக்கு ஒரு வேண்டுதல் உண்டு. தாவீது மன்னனின் கடைசி மனைவியாகிய அபிசாகை எனக்கு மணமுடித்துத் தர சாலமோனிடம் சொல்லுங்கள்” என்றான்.

தாவீது மன்னனின் மனைவியை தன் மனைவியாக்கி, அதன் மூலம் குறுக்கு வழியில் கிரீடம் சூட்டலாமா எனும் அதோனியாவின் குறுக்கு புத்தி பத்சேபாவுக்குப் புரியவில்லை. அவள் சாலமோனிடம் சென்று அதோனிக்கு அபிசாகை மணமுடித்துக் கொடுக்க வேண்டினாள்.

சாலமோன் மன்னனுக்கு விஷயம் சட்டென புரிந்தது. “அதோனியாவின் இந்த வார்த்தைக்காகவே அவன் கொல்லப்படுவான்” என்றார் . உடனே அதோனியாவைக் கொல்ல ஆணையும் இட்டார். அதோனியா கொல்லப்பட்டார்.

நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் கடைசியில் இறைசித்தமே நிறைவேறும் என்பது மீண்டும் அழுத்தமாய் நிரூபிக்கப்பட்டது.