இஸ்ரயேல் மன்னர்கள் கடவுளை விட்டு விலகி வேறு தெய்வங்களை வழிபடுவது தொடர்ந்து நடந்தது. அப்படி வழிபட்ட தெய்வங்களில் முக்கியமானவர் பாகால். பாகால் ஒரு கானானேயக் கடவுள். அவரை மழையின் கடவுள் என மக்கள் வழிபட்டனர். மன்னன் ஆகாபும் பாகாலுக்குக் கோயிலும் கட்டி வழிபட ஆரம்பித்தான். அப்போது அங்கே வந்தார், இறைவாக்கினர்களில் மிகவும் முக்கியமான எலியா !
“நான் சொன்னாலொழிய இந்த நாட்டில் மழை பொழியாது. இது கடவுள் மேல் ஆணை” என்றார். மழையின் தெய்வத்துக்கு விடப்பட்ட நேரடியான சவால் இது ! சொல்லிவிட்டு வெளியேறிய எலியா யோர்த்தானுக்கு அப்பால் இருந்த கெரீத்து எனும் ஓடைக்கு அருகே ஒளிந்து வாழ்ந்தார். அவருக்குக் காகங்கள் அப்பங்களும், இறைச்சியும் கொண்டு கொடுத்தன. ஓடை நீரைக் குடித்தார். நாட்டில் மழைபெய்யவில்லை. ஓடையும் ஒருநாள் வற்றிப் போனது. கடவுளின் கட்டளைப்படி அங்கிருந்து சாரிபாத் நகருக்குச் சென்றார். அங்கே ஒரு விதவை சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தார். அவரிடம்
“எனக்குக் கொஞ்சம் தண்ணியும் ஒரு அப்பமும் கொண்டுவா” என்றார்.
“என்னிடம் ரொம்பக் கொஞ்சம் மாவும், கொஞ்சம் எண்ணையும் தான் இருக்கு. நானும் பையனும் சாப்பிடணும்”
“கவலைப்படாதே.. முதல்ல எனக்கொரு அப்பம் சுட்டு கொண்டு வா. நான் சாப்பிடறேன். உன் பானையில மாவும் குறையாது, சட்டில எண்ணையும் தீராது” என்றார். அவள் போய் அப்படியே செய்தாள்.
வீட்டிற்குப் போய் பானையில் கையை விட்டு மாவு இருக்கிறதா என்று பார்த்தவளுக்கு ஆச்சரியம். மாவு இருந்தது, சட்டியில் எண்ணையும் இருந்தது. அப்பம் சுட்டாள், மீண்டும் சுட்டாள், மீண்டும் மீண்டும் சுட்டாள், நாட்கள் கடந்தன அவர்களுடைய பானைக்கு மட்டும் பட்டினி வரவே இல்லை.
அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. திடீரென அவளுடைய மகன் இறந்து போனான். தாய் கதறினாள்.
“ஐயோ.. ஏன் இப்படி செய்தீங்க. என் பாவத்தை நினைவூட்டவும், என் பையனைக் கொல்லவுமா வந்தீங்க” என எலியாவைப் பார்த்து கதறினாள். எலியா இறந்த மகனைத் தூக்கிக் கொண்டு மாடிக்குச் சென்றார்.
அவனைத் தம் கட்டிலில் கிடத்தினார், கிடத்தி விட்டு அவன் மீது மூன்று முறை படுத்து எழுந்து கடவுளை நோக்கி மன்றாடினார். கடவுள் கண் திறந்தார், இறந்து கிடந்த பையனும் கண் திறந்தான்.
நாட்கள் கடந்தன. நாட்டில் மழை பெய்வது நின்று மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தன.
எலியா, மன்னனுக்கு ஒரு சவால் விட்டார்.
“நீங்கள் உண்மையான கடவுளை விட்டு விட்டு, பாகாலையும், அசேராவையும் வழிபடுகிறீர்கள். அதனால் தான் உங்களுக்கு அழிவு வருகிறது. உங்கள் பாகாலின் இறைவாக்கினர்கள் நானூற்று ஐம்பது பேரையும், அசேராவின் இறைவாக்கினர்கள் நானூறு பேரையும் கூட்டிக் கொண்டு கர்மேல் மலைக்கு வாருங்கள். உண்மைக் கடவுளை உங்களுக்குக் காண்பிக்கிறேன்” என்றார்.
அப்படியே எல்லோரும் மலைமேல் கூடினார்கள். எலியா பேசினார்.
“அவரவர் கடவுளுக்குப் பலியிடுவோம். நீங்கள் விறகை அடுக்கி, அதன் மேல் ஒரு காளையை துண்டுகளாக்கி வையுங்கள். ஆனால் நெருப்பு வைக்கக் கூடாது. நானும் அப்படியே செய்கிறேன், யாருடைய பலியைக் கடவுள் நெருப்பால் எரிக்கிறார் என பார்ப்போம்”
அப்படியே முதலில் பாகாலையும், அசேராவையும் சேர்ந்தவர்கள் பலியிட ஆயத்தமானார்கள். விறகை அடுக்கி, அதன் மேல் காளையை வைத்து கடவுளை நோக்கி கத்தத் துவங்கினார்கள். காலையில் கத்தத் துவங்கியவர்கள் மாலைவரை இடைவிடாமல் கத்தியும் அவர்கள் வைத்த காளை அப்படியே தான் இருந்தது.
“சத்தமா கூப்டுங்கப்பா, உங்க கடவுள் தியானத்துல இருப்பாரு, இல்லேன்னா பயணத்துல இருப்பாரு.. சத்தமா.. சத்தமா கூப்டுங்க” என எலியா அவர்களை கிண்டலடித்துக் கொண்டே இருந்தார்.
இப்போது எலியாவின் முறை. பன்னிரண்டு கற்களைக் கொண்டு முதலில் ஒரு பலிபீடம் கட்டினார். பலிபீடத்தைச் சுற்றி பெரிய வாய்க்காலை வெட்டினார். விறகை அடுக்கி, அதன் மீது காளையைத் துண்டு துண்டாக வெட்டி வைத்தார்.
“நாலு குடம் தண்ணீர் கொண்டு இதன் மீது ஊற்றுங்கள்.”மக்கள் தண்ணீர் ஊற்றினார்கள். மொத்தம் மூன்று முறை ஊற்றுங்கள் என்றார். ஊற்றினார்கள். வாய்க்காலிலும் தண்ணீரை ஊற்றினார்.
“ஆண்டவரே, நீரே உண்மையான தெய்வம் என்பதை மக்களுக்குப் புரியவையும்.” என்று வேண்டினார்.
பலியாக இறைச்சி, அதன் மீது குடம் குடமாய்த் தண்ணீர், சுற்றிலும் வாய்க்காலில் தண்ணீர். மக்கள் எலியாவை ஏளனமாய்ப் பார்த்தார்கள். அப்போது அந்த அதிசயம் நடந்தது.
நெருப்பு அவர்கள் அத்தனை பேருக்கும் முன்பாக கீழிறங்கி வந்து பலிபீடத்தை முழுசாகச் சுட்டெரித்தது. வாய்க்காலில் இருந்த தண்ணீரும் அந்த வெப்பத்தில் அப்படியே காய்ந்து போனது.
மக்கள் மனம் திரும்பி கடவுளின் பக்கமாய்த் திரும்பினார்கள். எலிசா கடவுளிடம் வேண்டி மழையையும் திரும்ப வரவழைத்தார்.
ஃ