முற்காலத்தில் இஸ்ரயேலை ஆண்ட மன்னன் தாவீது. அவருடைய மூன்றாவது மகன் அப்சலோம். அவன் தனது தங்கையைப் பலாத்காரம் செய்த மாற்றாந்தாயின் மகன் அம்மோனைக் கொன்று விட்டு தொலை தூரம் சென்றான்.
காலம் கடந்தது. தாவீதின் மனம் அப்சலோமைக் காணவேண்டும் என தவித்தது. மகனின் நினைவாகத் தாவீது இருக்கிறார் என்பதை அவருடைய தலைமை படைத்தளபதி யோவாசு அறிந்து கொண்டார். எனவே ஒரு பெண்ணை மன்னனின் முன்னால் நடிக்க அனுப்பினார்.
தலைவிரி கோலமாக கண்ணீரும் கம்பலையுமாக தாவீதின் முன்னால் வந்து நின்றாள் அந்தப் பெண். “அரசரே காப்பாற்றும்” என கதறினாள்.
“உனக்கு என்ன வேண்டும் ?”
“அரசரே எனக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். ஒருவன் மற்றவனைத் தாக்கி கொன்று விட்டான். எனது குடும்பத்தினர் அனைவரும் கோபத்தோடு இவனைக் கொன்று பழிதீர்க்க அலைகிறார்கள். அப்படி நடந்தால் எனக்கு பிள்ளைகளே இல்லாமல் போய்விடுவார்களே” என அழுதாள்.
“கவலைப்படாதே… நான் உன் மகனை யாரும் கொல்லாமலிருக்க ஆணையிடுவேன்”
அவளோ, “அரசே. என் வீடு இருக்கட்டும். நீங்களும் அதே தப்பைச் செய்யாதீர்கள்” என்றாள். இப்போது தாவீது மன்னனுக்கு அவள் சொன்ன விஷயம் புரிந்தது. இந்த திட்டத்தைத் தீட்டிக் கொடுத்திருப்பது யோவாசாய்த் தான் இருக்கும் என்பதும் புரிந்தது.
தாவீது யோவாசை அழைத்து அப்சலோமை அழைத்து வரச் செய்தார். ஆனாலும் தன் முகத்தில் முழிக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.
இஸ்ரவேல் மக்கள் கூட்டத்திலேயே எல்லோரும் அசந்து போகும் அழகனாய் இருந்தான் அப்சலோம். அவனுக்கு நீளமான அழகிய தலைமுடி இருந்தது.
நாட்கள் சென்றன. தலைமைப் படைத்தளபதி யோவாசு மூலமாக தாவீதுடன் ஐக்கியமானான் அப்சலோம். அதன் பின் அவனுடைய நடவடிக்கைகள் சூழ்ச்சிக்காரனின் சதுரங்க ஆட்டம் போல விறுவிறுப்படைந்தது.
தன்னோடு ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டான் அப்சலோம். இஸ்ரயேல் கூட்டத்துக்கெல்லாம் தானே தலைவன் போல காட்டிக் கொண்டான். தன்னிடம் வருபவர்கள் கைகளில் முத்தமிட்டு மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தான்.
இஸ்ரயேல் மக்கள் கூட்டத்தினரிடமெல்லாம் ரகசியத் தூதனுப்பி தனக்கு ஆதரவாளர்களை திரட்டினார். விஷயம் தாவீதின் காதுகளுக்கு வந்தது. தனக்கு எதிராக ஒரு சதிவலை பின்னப்பட்டிருப்பதை அறிந்த தாவீது தனது ஆதரவாளர்களுடன் தப்பி ஓடினார்.
அப்சலோம் இஸ்ரவேலர்களின் முன் தலைவனாய் காட்சியளித்தான். தனது தந்தையின் வைப்பாட்டியரோடு உறவு கொண்டு தந்தைக்கும் தனக்கும் தீராப் பகை எனும் செய்தியை மறைமுகமாக எல்லோருக்கும் தெரியப்படுத்தினான்.
நாட்கள் கடந்தன. தப்பி ஓடி குகைகளில் ஒளிந்து வாழ்ந்த தாவீதைக் கொல்ல அப்சலோமிற்கு அகிதோபல் ஒரு திட்டம் தீட்டிக் கொடுத்தான். அப்போது ஊசா என்பவர் இன்னொரு திட்டம் சொன்னார். ஊசா தாவீதின் விசுவாசி. எனவே ஒரு தவறான திட்டத்தைத் தீட்டி அப்சலோமை மாட்டி விட நினைத்தார். “நீங்கள் நாட்டு மக்களோடு சேர்ந்து போருக்குச் செல்லுங்கள்” என்றார் அவர்.
அப்சலோம் ஊசாயின் திட்டத்தை நம்பினார். ஊசாயோ, ரகசியமாக தாவீதின் கூட்டத்துக்குத் தகவல் அனுப்பி இந்த திட்டத்தைச் சொன்னார்.
தாவீதின் அபிமானிகள் தாவீதை வீட்டில் பத்திரமாய் இருக்கச் சொல்லி விட்டு அப்சலோமோடு போரிட யோவாசு தலைமையில் சென்றனர். “அப்சலோமை யாரும் கொல்ல வேண்டாம்” என மன்னர் எல்லோருக்கும் கட்டளையிட்டார்.
அப்சலோம் தாவீதின் வீரர்களோடு போரிட கழுதை மேல் ஏறி வேகமாய் வந்து கொண்டிருந்தான். கருவாலி மரத்திற்கு இடையே வேகமாய் வருகையில் அவனுடைய முடி கருவாலி மரத்தில் சிக்கிக் கொள்ள மரத்தில் எசகு பிசகாகத் தொங்கினான்.
யோவாசு மூன்று ஈட்டிகளை எடுத்துச் சென்று அப்சலோமின் மார்பில் பாய்ச்சினார். வீரர்கள் அப்சலோமை வெட்டிக் கொன்றார்.
“மன்னரே போரில் வெற்றி பெற்றோம்” எனும் செய்தி தாவீதுக்குச் சொல்லப்பட்டது. உடனடியாக “அப்சலோம் நலமா ?” என தவிப்புடன் கேட்டார்.
அப்சலோம் கொல்லப்பட்டார் எனும் செய்தியைக் கேட்டு தாவீது அதிர்ந்தார். ஐயோ என் மகன் அப்சலோமே. உனக்குப் பதிலாய் நான் இறந்திருக்கலாமே என கதறினார்.
தாவீது தனது மகன்கள் மீது கொண்டிருந்த அதிகப்படியான பாசமே அவருக்கு தீங்காய் மாறியது. தங்கை தாமாரைப் பலவந்தம் செய்ததும் அவர் தனது மகன் அம்மோனைத் தண்டித்திருக்க வேண்டும். அதில் அவர் இழைத்த தவறு அதைத் தொடர்ந்த ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாய் ஆகிவிட்டது.
கப்பல் பயணத்தில் மாலுமி ஒரு சின்ன கோணம் தவறாய் பயணம் துவங்கினால் கூட கடைசியில் கப்பல் இலக்கை விட்டு வெகு தூரத்தில் சென்று விடும். ஒரு சின்ன பாவம் நமது வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்புகளை உருவாக்கி விடும். எனவே சிறு சிறு பாவங்கள் கூட நம்மை அணுகாமல் காத்துக் கொள்ள அப்சலோமின் வாழ்க்கை நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது.