பைபிள் மனிதர்கள் 40 (தினத்தந்தி) காத்

 

பழைய காலத்தில் இறைவாக்கினர்கள் மிகவும் மதிக்கப்படத் தக்க இடத்தில் இருந்தார்கள். ஆலோசனை பெறுவதற்காகவும் , கடவுளின் திட்டம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவும் அரசர்கள் இறைவாக்கினர்களைச் சார்ந்து இருந்தார்கள். இறைவாக்கினர்களும் தங்களுடைய கடமை என்ன என்பதை உணர்ந்து அதை செவ்வனே நிறைவேற்றி வந்தார்கள்.

காத் என்பவர் அத்தகைய ஒரு நல்ல தீர்க்கத்தரிசி. அவர் தாவீது மன்னனின் காலகட்டத்தில் வாழ்ந்தவர். சவுல் மன்னனுக்குப் பயந்து, தாவீது குகைகளில் பதுங்கி வாழ்கையில் அவரை யூதா நாட்டுக்குச் செல்லுமாறு அறிவுரை சொன்னார் காத். தாவீதும் மறு பேச்சு பேசாமல் அந்த வார்த்தைகளை ஏற்று அப்படியே செய்தார்.

ஆண்டுகள் கடந்தன. இப்போது தாவீது மாபெரும் மன்னனாக உருவெடுத்திருக்கிறார். ஒட்டு மொத்த இஸ்ரவேலுக்கும் அவரே தலைவராக சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். பல ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருந்த அவருடைய மனதில் ஒரு சிந்தனை. உடனே அவர் தன்னுடைய தலைமை படைத் தலைவன் யோவாபுவை அழைத்தார்.

“யோவாபு…. நாடு முழுவதும் மக்கள் தொகையைக் கணக்கெடுக்க வேண்டும். போருக்கு ஆயத்தமாய் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது தெரிய வேண்டும்” என்றார்.

கடவுளுக்கு தாவீதின் இந்த திட்டம் பிடிக்கவில்லை. ஏன், யோவாபுவுக்கே பிடிக்கவில்லை; அவர் மன்னனிடம்,

“மன்னரே, கடவுள் உங்களுக்கு இருப்பதைப் போல இன்னும் நூறுமடங்கு வீரர்களை மிகுதிப்படுத்துவாராக. இந்த கணக்கெடுப்பை ஏன் நடத்தச் சொல்கிறீர்கள். வேண்டாமே…” என மறுத்துப் பேசினார்.

மன்னனின் சிந்தனைகள் தானே கடைசியில் வெல்லும் ! இங்கேயும் அதுவே நடந்தது. யோவாபு தாவீது மன்னனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டார். கணக்கெடுப்பு நடந்தது.

நீண்ட நெடிய ஒன்பது மாதங்களுக்குப் பின் அவர்கள் தாவீதிடம் திரும்ப வந்தார்கள் “ அரசே, இஸ்ரயேல் குலத்தில் எட்டு இலட்சம் வீரர்களும், யூதாவில் ஐந்து இலட்சம் வீரர்களும் இருக்கிறார்கள்” என்றார்கள்.

திடீரென தாவீது மன்னன், தான் செய்தது தவறு என்பதை உணர்ந்தார், கடவுளிடம் மன்னிப்பு வேண்டினான். கடவுளின் சினம் தணியவில்லை. அதற்குக் காரணம் தாவீதின் இந்த செயல் மட்டுமல்ல, இஸ்ரயேல் மக்களின் கெட்ட நடத்தையும்தான். இஸ்ரயேல் மீது அவருடைய சினம் ஏற்கனவே பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இப்போது கடவுள் காத் தீர்க்கதரிசி மூலமாக மீண்டும் தாவீதிடம் பேசினார். காத் வந்து தாவீதின் முன்னால் நின்றார்.

“ஆண்டவரின் சினம் உம் மீதும் உனது மக்கள் மீதும் எழுகிறது. எனவே அவர் தண்டனை தர தீர்மானித்து விட்டார். மூன்று தண்டனைகளை அவர் மனதில் வைத்திருக்கிறார், அதில் ஒன்றைத் தேர்ந்தெடு” என்றார்.

தாவீது கலங்கினார். கடவுளின் சினத்துக்குத் தப்பித்துக்கொள்ள யாரால் முடியும் என வருந்தினார். “அதென்ன தண்டனைகள் ?” அவருடைய குரல் பதறியது.

“நாட்டில் ஏழு வருடம் கடுமையான பஞ்சம் வேண்டுமா ? எதிரிகள் உன்னை மூன்று மாதங்கள் விரட்டியடிக்க வேண்டுமா ? மூன்று நாட்கள் நாட்டில் கொடிய நோய் பரவ வேண்டுமா ? எது வேண்டுமென நீயே முடிவெடு !” காத் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் தாவீதை புரட்டிப் போட்டன. சிந்தித்தார்.

“மூன்று நாள் கொடிய நோய். அதைக் கடவுள் தரட்டும்” என்றார்.

மரண தூதன் தனது சிறகுகளை விரித்தார். தேசத்தில் கொடும் நோய் வந்தது. சுமார் எழுபதாயிரம் பேர் மடிந்தனர். தூதன் இப்போது தனது சிறகை இஸ்ரவேலை நோக்கித் திருப்பினார். அப்போது கடவுள் தடுத்தார்.

தாவீது அந்த தூதனை வழியில் சந்தித்தார். “பாவம் செய்தது நானல்லவா ? மந்தைகளான என் மக்கள் ஏன் தண்டிக்கப்பட வேண்டும் என கலங்கினார்”.

காத் மீண்டும் தாவீதுக்கு இறைவனின் வார்த்தைகளைச் சொன்னார். அதன்படி “எபூசியனான அரவுனா வின் போரடிக்கும் களத்தில் கடவுளுக்கென ஒரு பலி பீடம் கட்டி பலியிட வேண்டும்.” . தாவீது இறைவாக்கினரின் வார்த்தையை அப்படியே ஏற்றுக் கொண்டார்.

நேரடியாக அரவுனாவைச் சந்திக்கச் சென்றார். கடவுளுக்குப் பலி செலுத்த நிலம் வேண்டும் என கேட்டார். அரவுனா தனது நிலத்தையும், பலியிடும் காளையையும், விறகுகளையும் இனாமாகவே கொடுத்து விட விரும்பினான். ஆனாலும் தாவீது அனைத்தையும் பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டார்.

அங்கே கடவுளுக்கென ஒரு பலி பீடம் கட்டி அதில் பலி செலுத்தினார். அதன் பிறகே கொள்ளை நோய் நாட்டை விட்டு நீங்கியது.

இறைவனை விட்டு விலகி நடக்கும்போது கடவுளின் கோபம் நம்மை நெருப்பாய்ச் சுட்டெரிக்கிறது. அதுவும், தலைவர்கள் தவறிழைக்கும் போது அது மிகக் கொடிய தண்டனைக்குரியதாய் மாறுகிறது. வாழ்வு என்பது இறைவனை விட்டு விலகாத நிலையே ! என்பதை இந்த நிகழ்வு நமக்குச் சொல்லித் தருகிறது.

*

பைபிள் மனிதர்கள் 39 (தினத்தந்தி) தாவீது மன்னனின் வியத்தகு வீரர்கள்

இஸ்ரயேலர்களின் மன்னனான தாவீது மாபெரும் வீரர். கடவுளின் அபிஷேகம் பெற்ற அவர் சென்ற இடங்களிலெல்லாம் கடவுள் அவருக்கு வெற்றியையே கொடுத்தார். அவருடைய வெற்றிக்கு முக்கியமான ஒரு காரணம் அவருடன் இருந்த வீரர்கள். அவர்களெல்லாம் மாபெரும் பலசாலிகளாய் இருந்ததால் அவருடைய படையைப் பார்த்து எதிரிகளெல்லாரும் பயந்து நடுங்கினார்கள். தாவீது அரசருடன் மிக முக்கியமான மூன்று வீரர்கள் இருந்தார்கள்.

அவர்களில் முதலானவர் பாசெபத்து என்பவர். இவருக்கு எஸ்னீயன் அதினோ என்று இன்னொரு பெயரும் உண்டு. ஒருமுறை எண்ணூறு பேர் இவருக்கு எதிராய் நின்றனர். இவர் ஒற்றை ஆளாய் நின்று அந்த எண்ணூறு பேரையுமே தாக்கிக் கொன்றார். அந்த அளவுக்கு வீரத்தில் நிரம்பியிருந்தார் அவர். அதனால் அவர் வீரர்களில் மிக முக்கியமானவரானார்.

இரண்டாமவர் எலியாசர். தோதோ என்பவருடைய மகன். ஒரு முறை பெலிஸ்தியர்கள் இஸ்ரயேலர்களுடன் போரிட்டார்கள். அந்தப் போரில் இஸ்ரயேல் வீரர்கள் எதிர்த்து நிற்க முடியாமல் பின் வாங்கினார்கள். அப்போது எலியாசர் போரில் முன் வந்தார். தனது வாளைச் சுழற்றினார். தனி ஆளாய் நின்று வாளைச் சுழற்றினார்.  கை சோர்ந்து போய் வாளோடு ஒட்டிக்கொள்ளும் வரை போரிட்டார். அதிசயம் நடந்தது. போரில் பெலிஸ்தியர்கள் தோற்று பின்வாங்கினார்கள். எலியாசரின் வீரம் பிரமிப்பாய் பார்க்கப்பட்டது.

மூன்றாவது வீரன், ஆராரியன் ஆகேயின் மகனான சம்பா. இன்னொரு முறை பெலிஸ்தியர்கள் போரிட்டபோது இவன் மிகவும் தீரத்துடன் போரிட்டான். பயிறு விளைந்திருந்த வயலில் போர் நடந்தது. பெலிஸ்தியர்கள் இஸ்ரயேலரை மிகக் கொடுமையாத் தாக்கினார்கள். அந்தப் போரைத் தாக்குப் பிடிக்க முடியாமல்  இஸ்ரயேலர்கள் தோற்று பின்வாங்கினார்கள். அப்போது வீரன் சம்பா முன் வந்தார். வயலில் நின்று பெலிஸ்தியர்களுக்கு எதிரே போரிட்டார்.. வயலையும், இஸ்ரயேலரையும் மீட்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாய் இருந்தது. அந்த நோக்கம் நிறைவேறியது. அவர் ஒற்றை ஆளாய் நின்று போரில் வெற்றிபெற்றார்.

இவர்கள் மூன்று பேரும் வெல்ல முடியாதவர்களாய் இருந்தார்கள். ஒரு முறை தாவீது மன்னன் கோட்டையில் இருந்தார். பெத்லகேம் நகரில் பெலிஸ்தியர்களின் படை குவிந்திருந்தது. பெத்லேகேம் நகர் அருகே ஒரு பிரபல குளம் உண்டு. இந்த நேரத்திலா தாவீதுக்கு இந்த ஆசை வரவேண்டும் ? ‘எனக்கு அந்த பெத்லேகேமிலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் குடிக்க வேண்டும்” என்றார். மூன்று பேரும் புறப்பட்டனர். பெலிஸ்தியர் படை கடல் போல திரண்டிருந்தது.

மூன்று வீரர்களும் பெலிஸ்தியர்களின் படைக்கு உள்ளே புகுந்து சென்று பெத்லேகேம் வாசலில் இருந்த அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்தார்கள். அதைக் கொண்டு வந்து தாவீதிடம் கொடுத்தார்கள். தாவீது அவர்களுடைய வீரத்தை வியந்தார். ஆனால் அந்தத் தண்ணீரைக் குடிக்கவில்லை.

“இது எனது மூன்று வீரர்களும் உயிரைப் பணயம் வைத்து கொண்டு வந்த தண்ணீர். அவர்களுடைய இரத்தம். அதை நான் குடிக்க மாட்டேன். இதைக் கடவுளுக்காக வெளியே ஊற்றுகிறேன்” என்று தரையில் ஊற்றினார். .

இவர்களைத் தவிர முப்பது பெரிய வீரர்கள் தாவீதின் படையில் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர் அபிசாய். ஒரு முறை முன்னூறு பேர் அவருடன் போரில் குதித்தனர். இவர் தன்னிடமிருந்த ஈட்டியைக் கொண்டே அந்த முன்னூறு பேரையும் கொன்றார். அந்த முப்பது பேருக்கும் இவன் தலைவனாக இருந்தான். முதல் மூன்று வீரர்களுக்கு இணையான புகழ் கொண்டவன் இவன்.

பெனானா என்பவர் மற்றொரு வீரர்.  பனி பெய்து கொண்டிருந்த ஒரு பொழுதில் அவர் குளிரிலிருந்து தப்பிக்க ஒரு குகைக்குள் சென்றார். அந்தக் குகைக்குள் ஒரு சிங்கம் இருந்தது. இரை தன்னைத் தேடி வருகிறதே என அது மகிழ்ந்தது. பெனானாவின் வீரத்தைப் பற்றி அது அறிந்திருக்கவில்லை. பெனானா அஞ்சவில்லை, சீறி வந்த அந்த சிங்கத்தை அவர் அடித்தே கொன்றார்.

ஒரு முறை அரக்கனைப் போன்ற எகிப்தியன் ஒருவன் கையில் ஈட்டியோடு இவர் முன்னால் நின்றான். இவரிடம் இருந்ததோ ஒரு கோல் மட்டுமே. அதைக் கொண்டே வீரமாய்ப் போரிட்டு, எதிரியின் ஈட்டியைத் தட்டிப்பறித்து, அதைக் கொண்டே அவனைக் கொன்றார். அதனால் தாவீது மன்னர் அவனை தனது மெய்க்காப்பாளனாய் ஏற்படுத்தினார்.

இத்தனை வீரர்கள் இருந்தாலும் கடவுள் எப்போதெல்லாம் இஸ்ரயேலர்களுக்கு வெற்றி கொடுக்க வேண்டுமென விரும்பினாரோ, அப்போது  மட்டுமே அவர்கள் வெற்றி பெற்றனர். நாம் என்னதான் மிகப்பெரிய வீரர்களாய், திறமை மிகுந்தவர்களாய்,  சர்வ வல்லமை பொருந்தியவர்களாக இருந்தாலும் கடவுளின் அருளே நமக்கு வெற்றி தரும் என்பதே நாம் மனதில் கொள்ள வேண்டிய பாடமாகும்.

பைபிள் மனிதர்கள் 38 (தினத்தந்தி) சேபா

தாவீது இஸ்ரவேலின் அரசராக இருந்த காலகட்டம். தாவீது எனும் மாபெரும் தலைவனுக்குக் கீழே ஒட்டு மொத்த இஸ்ரயேல் மக்களும் இணைந்திருந்தார்கள். தாவீது மன்னன் எதிரிகளையெல்லாம் வென்று உச்சத்தில் இருந்தார். எதிரியாய் மாறிய அவருடைய மகன் அப்சலோம் கூட தாவீதின் வீரர்களால் கொல்லப்பட்டனர்.

அந்தக் கால கட்டத்தில் பிக்ரி என்பவனின் மகனான சேபா என்றொரு இழி மகன் இருந்தான். அவன் எக்காளம் ஊதி, தாவீதிடம் எங்களுக்கு இனிமேல் பங்கு இல்லை. ஈசாயின் மகனிடம் மரபுரிமை இல்லை என கத்தினான்.  மக்கள் தாவீதை விட்டு விட்டு புதிய தலைவனான சேபாவின் பின்னால் திரளத் துவங்கினர். ஆனால் யூதா குலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் அவனோடு சேரவில்லை. காரணம் தாவீது யூதா குலத்தைச் சேர்ந்தவர்.

தாவீதுக்கு பத்து வைப்பாட்டிகள் இருந்தார்கள். தாவீது அவர்களைப் பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைத்துப் பராமரிக்க ஏற்பாடுகள் செய்தார். பின் அசாமாவை அழைத்தார்.

“மூன்று நாட்களுக்குள் யூதாவினரை என்னிடம் அழைத்துக் கொண்டு வா. நீயும் கூடவே வா” ஏன்றார். ஆனால் அவனோ காலம் தாழ்த்தினான்.

பின்னர், தாவீது அரசர், அபிசாயை அழைத்தான். “போ.. வீரர்களைத் திரட்டிக் கொண்டு போய் சேபாவை அழியுங்கள். இல்லையேல் அவன் நமக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிப்பான். அப்சலோமை விட அதிகம் தீங்கு தருவான்” என்றார். அபிசாயின் தலைமையில் தாவீதின் முதன்மை  வீரர் யோவாபு உட்பட எல்லோரும் அணிதிரண்டனர். அவர்கள் சேபாவை விரட்டிக் கொண்டு போனார்கள்.

போகும் வழியில் முதலில் அனுப்பப்பட்ட அசாமா வழியில் வந்தான். படைத்தளபதி யோபாவு அவனைக் கொன்றுவிட திட்டமிட்டார். அவருடைய இடையில் குறுவாள் ஒன்று இருந்தது. அசாமா பக்கத்தில் வந்ததும், “சகோதரனே நலமா ?” என்று கேட்டு முத்தமிடுவதற்காக நெருங்கினார். அருகில் சென்றதும் இடது கையால் குறுவாளை இறுகப் பற்றி அவனுடைய வயிற்றில் குத்தி அவனைக் கொன்றார்.

வீரர்கள் தொடர்ந்து சேபாவை விரட்டிக் கொண்டு போனார்கள். பெத்மாக்காவின் ஆபேல் எனுமிடத்தில் அவன் ஒளிந்து கொண்டான். அவனைப் பிடிப்பதற்காக தாவீதின் படை சென்றது. நகரம் பெரிய மதில் சுவரால் கட்டப்பட்டிருந்தது. தாவீதின் வீரர்கள் மதில் சுவரை இடிக்கத் துவங்கினார்கள்.

நகருக்குள்ளே புத்தி கூர்மையுள்ள ஒரு பெண் இருந்தாள். அவள் குரலுயர்த்தி

“தயவு செய்து யோவாபுவை இங்கே வரச் சொல்லுங்கள். அவரிடம் நான் பேசவேண்டும்” என்றாள். அவர் அவளுடைய அழைப்பை ஏற்று சென்றார்.

“யோவாபு நீர் தானா ?” அந்தப் பெண் கேட்டாள்.

“ஆம்”

“தயவு செய்து நான் சொல்வதைக் கேளும்”

“கேட்கிறேன் சொல்”

“ஆபேலுக்குப் போய் ஆலோசனை கேள் – என்று முற்காலத்தில் சொல்வார்கள். அந்த அளவுக்கு இஸ்ரேலில் அமைதியும் நாணயமும் உடையவர்கள் நாங்கள். இஸ்ரயேலின் தாய் போன்ற நகரம் இது. இதை ஏன் அழிக்கத் தேடுகிறீர்கள் ? கடவுளின் உரிமைச் சொத்தை ஏன் விழுங்கப் பார்க்கிறீர்கள்?” அவள் கேட்டாள்.

“நகரை அழிக்க வேண்டுமென்பது எங்கள் நோக்கமல்ல. பிக்கிரியின் மகன் சேபா இங்கே இருக்கிறான். அவனைக் கொடுங்கள், நகரை விட்டுச் செல்கிறோம்” யோவாபு சொன்னார்.

“சரி. அவன் தலையை நகருக்கு வெளியே எறிந்து தருகிறோம். எடுத்துக் கொள்ளுங்கள்” என்று அவள் சொல்ல யோவாபு அவளிடமிருந்து விடைபெற்றார்.

அந்தப் பெண் நகரின் தலைவர்களையெல்லாம் அழைத்தாள். நகரைக் காப்பாற்ற இது ஒன்றே வழி என்பது நகரத் தலைவர்களுக்கும் புரிந்தது. அவர்கள் கலகக்காரன் சேபாவின் தலையை வெட்டி நகருக்கு வெளியே எறிந்தார்கள். சேபா எனும் கலகக் காரனின் அத்தியாயம் அங்கே நிறைவுற்றது.

யோவாபு எக்காளம் ஊதினார். வீரர்களெல்லாம் நகரை விட்டுச் சென்றனர்.

அறிவுக் கூர்மையாலும், துணிச்சலினாலும் ஒரு பெண் செய்த காரியம் அந்த நகரையே காப்பாற்றியது. அந்தப் பெண்ணின் பெயர் கூட பைபிளில் எழுதப்படவில்லை. விவிலியத்தில் வரலாறாய் மாறிப்போன பெண்கள் பலர் உண்டு. அவர்களுடன் இந்த பெயர் தெரியாத பெண்ணும் இணைந்து கொள்கிறாள்.

இக்கட்டான சூழல் எழும்போது பதட்டமடையாமல், கடவுள் கொடுத்த ஞானத்தைப் பயன்படுத்தி அந்த சூழலில் இருந்து தனது சமூகத்தைக் காப்பாற்ற துணிவு கொள்ளவேண்டும்.  இதையே சேபா எனும் கலகக் காரனின் முடிவு நமக்குச் சொல்கிறது.

பைபிள் மனிதர்கள் 37 (தினத்தந்தி) அப்சலோம்

 

முற்காலத்தில் இஸ்ரயேலை ஆண்ட மன்னன் தாவீது. அவருடைய மூன்றாவது மகன் அப்சலோம். அவன் தனது தங்கையைப் பலாத்காரம் செய்த மாற்றாந்தாயின் மகன் அம்மோனைக் கொன்று விட்டு தொலை தூரம் சென்றான்.

காலம் கடந்தது. தாவீதின் மனம் அப்சலோமைக் காணவேண்டும் என தவித்தது. மகனின் நினைவாகத் தாவீது இருக்கிறார் என்பதை அவருடைய தலைமை படைத்தளபதி  யோவாசு அறிந்து கொண்டார். எனவே ஒரு பெண்ணை மன்னனின் முன்னால் நடிக்க அனுப்பினார்.

தலைவிரி கோலமாக கண்ணீரும் கம்பலையுமாக தாவீதின் முன்னால் வந்து நின்றாள் அந்தப் பெண். “அரசரே காப்பாற்றும்” என கதறினாள்.

“உனக்கு என்ன வேண்டும் ?”

“அரசரே எனக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். ஒருவன் மற்றவனைத் தாக்கி கொன்று விட்டான். எனது குடும்பத்தினர் அனைவரும் கோபத்தோடு இவனைக் கொன்று பழிதீர்க்க அலைகிறார்கள்.  அப்படி நடந்தால் எனக்கு பிள்ளைகளே இல்லாமல் போய்விடுவார்களே” என அழுதாள்.

“கவலைப்படாதே… நான் உன் மகனை யாரும் கொல்லாமலிருக்க ஆணையிடுவேன்”

அவளோ, “அரசே. என் வீடு இருக்கட்டும். நீங்களும் அதே தப்பைச் செய்யாதீர்கள்” என்றாள். இப்போது தாவீது மன்னனுக்கு அவள் சொன்ன விஷயம் புரிந்தது. இந்த திட்டத்தைத் தீட்டிக் கொடுத்திருப்பது யோவாசாய்த் தான் இருக்கும் என்பதும் புரிந்தது.

தாவீது யோவாசை அழைத்து அப்சலோமை அழைத்து வரச் செய்தார். ஆனாலும் தன் முகத்தில் முழிக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.

இஸ்ரவேல் மக்கள் கூட்டத்திலேயே எல்லோரும் அசந்து போகும் அழகனாய் இருந்தான் அப்சலோம். அவனுக்கு நீளமான அழகிய தலைமுடி இருந்தது.

நாட்கள் சென்றன. தலைமைப் படைத்தளபதி யோவாசு மூலமாக தாவீதுடன் ஐக்கியமானான் அப்சலோம். அதன் பின் அவனுடைய நடவடிக்கைகள் சூழ்ச்சிக்காரனின் சதுரங்க ஆட்டம் போல விறுவிறுப்படைந்தது.

தன்னோடு ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டான் அப்சலோம். இஸ்ரயேல் கூட்டத்துக்கெல்லாம் தானே தலைவன் போல காட்டிக் கொண்டான். தன்னிடம் வருபவர்கள் கைகளில் முத்தமிட்டு மக்களின் உள்ளங்களைக் கவர்ந்தான்.

இஸ்ரயேல் மக்கள் கூட்டத்தினரிடமெல்லாம் ரகசியத் தூதனுப்பி தனக்கு ஆதரவாளர்களை திரட்டினார். விஷயம் தாவீதின் காதுகளுக்கு வந்தது. தனக்கு எதிராக ஒரு சதிவலை பின்னப்பட்டிருப்பதை அறிந்த தாவீது தனது ஆதரவாளர்களுடன் தப்பி ஓடினார்.

அப்சலோம் இஸ்ரவேலர்களின் முன் தலைவனாய் காட்சியளித்தான். தனது தந்தையின் வைப்பாட்டியரோடு உறவு கொண்டு தந்தைக்கும் தனக்கும் தீராப் பகை எனும் செய்தியை மறைமுகமாக எல்லோருக்கும் தெரியப்படுத்தினான்.

நாட்கள் கடந்தன. தப்பி ஓடி குகைகளில் ஒளிந்து வாழ்ந்த தாவீதைக் கொல்ல அப்சலோமிற்கு அகிதோபல் ஒரு திட்டம் தீட்டிக் கொடுத்தான். அப்போது ஊசா என்பவர் இன்னொரு திட்டம் சொன்னார். ஊசா தாவீதின் விசுவாசி. எனவே ஒரு தவறான திட்டத்தைத் தீட்டி அப்சலோமை மாட்டி விட நினைத்தார். “நீங்கள் நாட்டு மக்களோடு சேர்ந்து போருக்குச் செல்லுங்கள்” என்றார் அவர்.

அப்சலோம் ஊசாயின் திட்டத்தை நம்பினார். ஊசாயோ, ரகசியமாக தாவீதின் கூட்டத்துக்குத் தகவல் அனுப்பி இந்த திட்டத்தைச் சொன்னார்.

தாவீதின் அபிமானிகள் தாவீதை வீட்டில் பத்திரமாய் இருக்கச் சொல்லி விட்டு அப்சலோமோடு போரிட யோவாசு தலைமையில் சென்றனர். “அப்சலோமை யாரும் கொல்ல வேண்டாம்” என மன்னர் எல்லோருக்கும் கட்டளையிட்டார்.

அப்சலோம் தாவீதின் வீரர்களோடு போரிட கழுதை மேல் ஏறி வேகமாய் வந்து கொண்டிருந்தான். கருவாலி மரத்திற்கு இடையே வேகமாய் வருகையில் அவனுடைய முடி கருவாலி மரத்தில் சிக்கிக் கொள்ள மரத்தில் எசகு பிசகாகத் தொங்கினான்.

யோவாசு மூன்று ஈட்டிகளை எடுத்துச் சென்று அப்சலோமின் மார்பில் பாய்ச்சினார். வீரர்கள் அப்சலோமை வெட்டிக் கொன்றார்.

“மன்னரே போரில் வெற்றி பெற்றோம்” எனும் செய்தி தாவீதுக்குச் சொல்லப்பட்டது. உடனடியாக “அப்சலோம் நலமா ?” என தவிப்புடன் கேட்டார்.

அப்சலோம் கொல்லப்பட்டார் எனும் செய்தியைக் கேட்டு தாவீது அதிர்ந்தார்.  ஐயோ என் மகன் அப்சலோமே. உனக்குப் பதிலாய் நான் இறந்திருக்கலாமே என கதறினார்.

தாவீது தனது மகன்கள் மீது கொண்டிருந்த அதிகப்படியான பாசமே அவருக்கு தீங்காய் மாறியது. தங்கை தாமாரைப் பலவந்தம் செய்ததும் அவர் தனது மகன் அம்மோனைத் தண்டித்திருக்க வேண்டும். அதில் அவர் இழைத்த தவறு அதைத் தொடர்ந்த ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமாய் ஆகிவிட்டது.

கப்பல் பயணத்தில் மாலுமி ஒரு சின்ன கோணம்  தவறாய் பயணம் துவங்கினால் கூட கடைசியில் கப்பல் இலக்கை விட்டு வெகு தூரத்தில் சென்று விடும். ஒரு சின்ன பாவம் நமது வாழ்க்கையில் மிகப்பெரிய இழப்புகளை உருவாக்கி விடும். எனவே சிறு சிறு பாவங்கள் கூட நம்மை அணுகாமல் காத்துக் கொள்ள அப்சலோமின் வாழ்க்கை நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது.

பைபிள் மனிதர்கள் 36 (தினத்தந்தி) நாத்தான்

 

சர்வ வல்லமை பொருந்திய தாவீது மன்னனின் முன்னால் வந்து நின்று இறைவாக்கினர் நாத்தான் பேசினார்.

ஒரு நகரில் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். ஒருவன் செல்வன். இன்னொருவன் ஏழை. செல்வந்தனிடம் ஏராளமான ஆடு மாடுகள் இருந்தன. அந்த ஏழையிடம் இருந்ததோ ஒரே ஒரு ஆட்டுக்குட்டி. அது அவனோடும், அவனது குழந்தைகளோடும் விளையாடி ஆனந்தமாய் இருந்தது. அந்த ஏழை அதை விலைக்கு வாங்கியிருந்தான். அவனது மடியில் உறங்கி, அவனது பாத்திரத்தில் உண்டு, அது அவனது மகனைப் போலவே இருந்தது.

ஒருநாள் ஒரு வழிப்போக்கன் செல்வந்தனிடம் வந்தான். வழிப்போக்கனுக்கு உணவு தயாரிக்க செல்வந்தன் முடிவு செய்தான். அதற்காக தனது மந்தையிலிருந்து ஆட்டை எடுக்காமல், அந்த ஏழையின் ஒரே ஒரு ஆட்டைக் கொன்று உணவு தயாரித்தான்.

நாத்தான் சொல்லி முடித்ததும் தாவீது  மன்னன் கோபத்தில் எழுந்தான். யாரது ? அவன் சாகவேண்டும். இரக்கமின்றி செயல்பட்ட அவன் யார்  ? சொல்லுங்கள். தாவீது கர்ஜித்தான்.

அது நீ தான் !  நீயே அம் மனிதன். நாத்தான் மன்னனின் முன்னிலையில் நின்று அச்சமின்றி குரலுயர்த்தி, கைநீட்டி அதிகாரமாய்ப் பேச அதிர்ந்து போனான் தாவீது !

இறைவாக்கினர்களின் இயல்பே அது தான். அவர்கள் இறைவனின் வார்த்தைகளை பிறருக்கு எடுத்துரைக்கப் பிறந்தவர்கள். எந்த சபையிலும் நின்றும் உண்மையை உரக்கச் சொல்லத் தயங்குவதில்லை. எந்த மன்னனுக்கு எதிராகவும் குரலுயர்த்த அஞ்சுவதில்லை. கடவுளின் வார்த்தையை மேடைக்கு ஏற்றார்போல மாற்றிப் பேசுவதில்லை.

தாவீது அதிர்ந்து போய் நிற்க நாத்தான் தொடர்ந்தார். அவருடைய குரல் இறைவனின் குரலாய் எழுந்தது.

“இதோ கடவுள் சொல்கிறார். உன்னை இஸ்ரயேலரின் மன்னனாக்கினேன். ஏராளமான மனைவியர் தந்தேன். நீயோ இத்தியனான உரியாவைக் கொன்று அவனுடைய மனைவியை அபகரித்தாய். இனிமேல் உன் குடும்பத்திலிருந்து எனது கோபம் விலகாது.”

நாத்தானின் இறைவாக்கைக் கேட்ட தாவீது மனம் வருந்தினார். “ஐயோ கடவுளுக்கு எதிராய் பாவம் செய்து விட்டேனே” என புலம்பினார்.

நாத்தான் தாவீதைப் பார்த்தார். “நீ மனம் வருந்தியதால் கடவுள் உன்னை மன்னிக்கிறார். ஆனாலும் உனது மீறுதலுக்குத் தண்டனையாக உனக்குப் பிறக்கும் மகன் சாவான்” என்றார்.

தாவீதுக்கும், அவன் அபகரித்த மனைவியாகிய பத்சேபாவுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. நாத்தான் சொன்னது போலவே அந்தக் குழந்தை நோய்வாய்ப் பட்டு சாகக் கிடந்தது.

தாவீது அந்தக் குழந்தைக்காக சாப்பிடாமல் இருந்து இறைவனிடம் மன்றாடினார். ஏழாவது நாள் குழந்தை இறந்தது. அந்தச் செய்தியை மன்னனிடம் சொல்லவே பணியாளர்கள் அஞ்சினார்கள். ஆனால் செய்தியைக் கேள்விப்பட்ட தாவீது கலங்கவில்லை. எழும்பினார். கடவுளின் வார்த்தை நிறைவேறியதைப் புரிந்து கொண்டார். உணவு சாப்பிட்டார்.

“மன்னரே, குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இருந்தப்போ சாப்பிடாமல் அழுது புலம்பினீர்கள். குழந்தை இறந்தபின் துக்கம் கொண்டாடாமல் உணவு அருந்தி சகஜ நிலைக்கு வந்திருக்கிறீர்களே ?” என  அவர்கள் ஆச்சரியமாய்க் கேட்டார்கள்.

“குழந்தை இறக்கும் முன் கடவுள் ஒருவேளை மனமிரங்குவார் என உண்ணா நோன்பு இருந்து மன்றாடினேன். இப்போது குழந்தை இறந்து விட்டது, இனி அழுது புலம்பி என்ன ஆகப் போகிறது” என்றார் தாவீது.

தாவீதுக்கும் பத்சேபாவுக்கும் பின்னர் ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தான் ஞானத்தினால் உலகை ஆண்ட சாலமோன் மன்னன். அப்போது நாத்தான் வந்து அவர்களை வாழ்த்தினார்.

எபிரேய மொழியில் நாத்தான் என்பதற்கு “கடவுள் கொடுத்தார்” என்று பொருள். தாவீது மன்னனிடம் கடைசி வரை இறைவனின் திட்டத்தைப் பகிர்ந்து கொள்பவராக நாத்தான் இருந்தார்.  அதனால் தனக்கும் பத்சேபாவுக்கும் பிறந்த ஒரு குழந்தைக்கு நாத்தான் எனும் பெயரை தாவீது வைத்தார்..

தாவீது மன்னன் கடவுளின் ஆலயத்தைக் கட்ட மாட்டார், சாலமோனே கட்டுவார் என்று இறைவாக்கு உரைத்தவர் நாத்தான் தான். அவரே தான் சாலமோன் மன்னன் அரியணை ஏறவும் முக்கிய காரணமாக இருந்தார்.

இறைவாக்கினர்கள் சில முக்கியமான குணாதிசயங்கள் கொண்டிருந்தார்கள்.

 1. இறைவனோடான நேரடி தொடர்பு அவர்களுக்கு இருந்தது. இறைவன் சொன்னதைச் சொன்னபடி பிறரிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
 2. இறைவனைத் தவிர எதற்கும் அவர்கள் அஞ்சவில்லை. இழப்புகள், வலிகள், தண்டனைகள் எதுவுமே அவர்களை திசை திருப்புவதில்லை.
 3. உலகம் சார்ந்த எந்த ஆசையையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. தங்களை எப்போதுமே அவர்கள் தாழ்த்தி இறைவனையே உயர்த்திப் பிடித்தார்கள்.
 4. தொலை தூரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை அவர்கள் இறைவன் அருளால் காணும் தன்மை பெற்றிருந்தார்கள்.
 5. முழு மனதோடு ஒரு விஷயத்தைச் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். இரக்கம், மனிதநேயம், பரிவு, இறை சமாதானம், பொறுமை போன்றவை அவர்களிடம் இருந்தது.

பைபிள் மனிதர்கள் 35 (தினத்தந்தி) பத்சேபா

அது போர்க்காலம், மன்னன் தாவீது போருக்குச் செல்லவில்லை. மாலைப் பொழுதில் குளித்து விட்டுத் தன்னுடைய அரண்மனையின் மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அரண்மனைக்கு அருகே ஒரு வீட்டில் இளம் பெண் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். அவளது அழகில் கிறங்கினார். தனக்குள் மோக எண்ணத்தை வளர்த்துக் கொண்டார்.

உடனே தன்னுடையை பணியாளனை அழைத்தார்.

அதோ அந்த வீட்டில் குளித்துக் கொண்டிருக்கும் பெண் யார் என்று தெரியுமா ?’

தெரியும் மன்னா … அவள் எலியாவின் மகள் பத்சேபா’ பணியாளன் சொன்னான்.

‘எனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. அவளை அழைத்து வா’ மன்னன் ஆணையிட்டான்.

அப்படியே ஆகட்டும் மன்னா…. ஆனால்…..’ பணியாளன் இழுத்தான்

என்ன ஆனால்…. ‘ தாவீது திரும்பினார்.

‘அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இப்போது அவள் இத்தியரான ‘உரியா’ என்பவருடைய மனைவி.’, பணியாளன் சொன்னான்.

தாவீதின் மோகம் தணியவில்லை. பத்சேபாவைப் பார்த்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தான். பத்சேபா வந்தாள். தாவீது அவளுடன் உறவு கொண்டார். பத்சாபா உடைந்த மனதோடு தன்னுடைய இல்லம் சென்றாள்.

பத்சேபாவின் கணவன் உரியா, தாவீதின் படைவீரன். யோவாபு என்னும் தலைமைப் படைத்தலைவனின் கீழ் பணியாற்றிக் கொண்டிருந்தான்.

தாவீதுக்கு பத்சேபா மேல் இருந்த காமம் குறையவில்லை. அவளை எப்படியாவது முழுமையாக அடைந்து விடவேண்டும் என்று ஆசைப்பட்டார். உரியா உயிருடன் இருக்கும் வரைக்கும் தன்னால் அவளை முழுமையாக அடைய முடியாது என்று நினைத்த மன்னன், காலையில் யோவாபுவிற்கு ஒரு மடல் எழுதினார். அதை உரியாவின் கையிலேயே கொடுத்து யோபாவுவிடம் கொடுக்கச் சொன்னார்.

உரியா அதை அப்படியே கொண்டு போய் போர்க்களத்திலிருந்த யோபாவுவின் கைகளில் கொடுத்தான். யோபாவு அதை வாசித்துப் பார்த்தார்.

“போரில் உரியா சாக வேண்டும். எனவே அவனை எதிரிகள் அதிகமாய் இருக்கும் இடத்தில் அனுப்பு. நீ விலகிவிடு”.

மன்னரின் தகவலை யோபாவு வாசித்து முடித்து நிமிர்ந்து பார்த்தார். எதையும் அறியாத உரியா அமைதியாய் நின்றுகொண்டிருந்தார்.

போரில், வீரர்கள் எதிரிகளான அமலேக்கியரின் நகரை சற்றுத் தொலைவிலிருந்தே தாக்கிக் கொண்டிருந்தார்கள்

யோபாவு உரியாவை அழைத்தான்.

“உரியா…. நாம் போர் வியூகத்தைச் சற்று மாற்றுகிறோம்”

“சொல்லுங்கள்… கடைபிடிக்கிறேன்’

“நீ உன்னுடன் சில வீரர்களை அழைத்துக் கொண்டு நகரின் மதில் சுவரை நெருங்க வேண்டும்…. நெருங்கி அங்கிருக்கும் அமலேக்கியரை அழிக்கவேண்டும்… ‘யோபாவு சொன்னான்.

“மதில் சுவரின் மேல் எதிரிகள் இருக்கக் கூடும். இந்த வியூகம் நமக்குத் தான் ஆபத்தாய் முடியும்”

கவலைப்படாதே. நீ மதில் சுவரை நெருங்கும் போது அவர்கள் உங்களைத் தாக்குவதற்காகத் தலையைத் தூக்குவார்கள். அப்போது நாங்கள் அவர்களை இங்கிருந்தே வீழ்த்துவோம்’

யோபாவுவின் விளக்கத்தில் திருப்தியடைந்த உரியா தன்னுடன் சில வீரர்களையும் கூட்டிக் கொண்டு மதில்சுவரை நோக்கி விரைந்தான். நகர மதில் சுவரை நெருங்குகையில், மதில் சுவரின் மேல் காத்திருந்த அமலேக்கியர்கள் மதில்சுவரின் மீதிருந்து கற்களை உருட்டி விட்டார்கள். உரியாவின் படை விலக நேரம் கிடைக்காமல் நசுங்கி அழிந்தது. அதை தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார் யோவாபு, ஒரு விஷமப் புன்னகையுடன்.

கணவன் இறந்த செய்தி பத்சேபாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவள் கதறி அழுதார். தாவீது உள்ளுக்குள் மகிழ்ந்தார். அவர் பணியாளர்களை அழைத்து ‘உரியாவின் மனைவியை இங்கே அழைத்து வாருங்கள்’ என்றார்.

பத்சேபா வந்தாள்.

‘பத்சேபா… கவலைப்படாதே. உரியாவின் மறைவு எனக்கு மிகவும் அதிர்ச்சியாய் இருக்கிறது. இனிமேல் உன்னைக் காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது. எனவேஇனிமேல் நீ எனக்கு மனைவியாகி என்னுடன் இரு” என அவளை  மனைவியாக்கினார்.

கடவுளின் கட்டளைப்படி வாழ்ந்து வந்த தாவீது செய்த மிகப்பெரிய பாவமான பாலியல் பிழை நமக்குத் தரப்பட்டிருக்கும் மாபெரும் எச்சரிக்கை.

 1. தாவீது தனது கண்களை பாவத்தில் விழ அனுமதித்தான்.
 2. பாவம் செய்தபின்னும் அது பாவம் என உணராதிருந்தான்.
 3. பாவத்தைத் தொடர மேலும் கொடிய பாவங்களைச் செய்தான்.
 4. வெளிப்பார்வைக்கு நல்லவை செய்து இதயத்தை அழுக்கடைய வைத்தான்.
 5. போரில் தலைமை தாங்கும் தனது கடமையை மறந்து சிற்றின்பத்தில் சிக்கினான்..

“பாவம் பற்றிய உணர்வை மனிதர் இழந்திருப்பதே இக்காலத்தில் பெரிய பாவமாக இருக்கின்றது” என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். கடவுளின் பிரியத்துக்குரியவனான தாவீதின் பாவம் நமக்குத் தரப்பட்டிருக்கும் பாடம். வீழாமல் வாழ்வோம்.

பைபிள் மனிதர்கள் 34 (தினத்தந்தி) மெபிபொசேத்து

சவுல் மன்னனாக இருந்த காலத்தில் அவருடைய அரண்மனையில் இசை மீட்டிக் கொண்டிருந்தார் தாவீது. அவர் கடவுளால் திருப்பொழிவு செய்யப்பட்டவர். சவுலின் மகன் யோனத்தானும், தாவீதும் இணை பிரியாத நண்பர்கள். இருவருடைய உள்ளமும் ஒன்று பட்டிருந்தது. ஒருவருடைய நலனையே மற்றவர் சிந்திப்பார் எனுமளவுக்கு உயர்ந்த நட்பு இருந்தது.

காலம் உருண்டோடியது. அரசவையில் உயர்ந்த இடத்தை அடைந்தார் தாவீது. அவருடைய வீரத்தை நாடே கொண்டாடியது. பொறாமை கொண்ட சவுல், தாவீதின் மேல் பகையானார். யோனத்தான் போர் ஒன்றில் கொல்லப்பட்டார். சவுல் மன்னனும் இறந்தார். இறைவன் வாக்களித்தபடி, தாவீது  மன்னன் இஸ்ரயேல் மக்களின் மன்னனானார்.

போர்கள், வெற்றிகள் என பல ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் தாவீது மன்னன் பணியாளர்களிடம் கேட்டார். “யோனத்தான் எனது உயிர் நண்பன் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் பொருட்டு சவுலின் வீட்டாருக்கு நான் கருணை காட்ட இன்னும் யாராவது பாக்கி உண்டா ?”

அதிகாரிகளுக்கு பதில் தெரியவில்லை. “சவுலின் பணியாளர் சீபா இருக்கிறார் அரசே. அவரிடம் கேட்டால் பதில் தெரியும்” என்று சொன்ன பணியாளர்கள் போய் சீபாவைக் கையோடு அழைத்து வந்தார்கள்.

“சவுலின் பொருட்டு கருணைகாட்ட அவன் குடும்பத்தில் யாராவது உண்டா ?” தாவீது மன்னன் கேட்டார்.

“மன்னரே, உண்டு. யோனத்தானின் மகன். இரண்டு கால்களும் ஊனமமுற்றவர் !“

“யோனத்தானின் மகனா ? அவன் பெயர் என்ன ?”

“மெபிபொசேத்து (மேவிபோசேத்)”

தனது நண்பனின் மகனே ஊனமுற்ற நிலையில் இருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்ட தாவீது உடனடியாக அவரை வரவழைக்க ஏற்பாடு செய்தார். அவரோ தொலை தூரத்தில் இன்னொருவர் வீட்டில் மறைவாய் வாழ்ந்து வந்தார். அதற்குக் காரணம் உண்டு.

சுமார் 5 வயதாக இருக்கும்போது தந்தை யோனத்தான் கொல்லப்பட்டார் எனும் செய்தி தீயாய் வந்து அவரைத் தாக்கியது. அதுவரை இஸ்ரவேலின் முதல் மன்னனான சவுலின் பேரன், இளவரசர் யோனத்தானின் மகன் என அரச செழிப்பில் வளர்ந்தவர். நொடியில் நிலை குலைந்து அனைத்தையும் இழந்தார். பட்ட காலிலே படும் என்பது போல,  தாதி ஒருத்தியின் உதவியுடன் தப்பி ஓடும் வழியில் விபத்து ! அதில் இரண்டு கால்களையும் இழந்தார்.

இத்தனை காலம் அரச நிழலை விட்டு தூரமாய் இருந்தோம். இதோ கண்டு பிடித்து விட்டார்கள். இனி மரணம் தான். வேறு எதுவும் நிகழப் போவதில்லை எனும் அச்சம் அவரைப் பிடித்தது. தாவீதின் முன்னால் வந்த அவர் முகம் குப்புற விழுந்து வணங்கினார்.

“மெபிபொசேத்து..” தாவீது அவரை அழைத்தார்.

“இதோ.. உம் அடியான்” மெபிபொசேத்து தலை நிமிரவில்லை.

“பயப்படாதே மெபிபொசேத்து. நானும் உன் தந்தையும் உயிர் நண்பர்கள். அவருக்காக நான் உனக்குக் கருணை காட்டுவேன். சவுல் மன்னனின் நிலங்கள் முழுவதும் உனக்கே கிடைக்க ஏற்பாடு செய்வேன். அது மட்டுமல்ல. நீ அரச மரியாதையுடன், என்னுடன் தினமும் உணவருந்துவாய்” என்றார்.

ஊனமுற்ற நிலையில், யாரும் கவனிக்காமல், தொலை தூரத்தில் அச்சத்தோடு வாழ்ந்து வந்த மெபிபொசேத்துவுக்கு நடப்பதெல்லாம் கனவு போல தோன்றியது. மகிழ்ந்தான், நெகிழ்ந்தான்.

“அரசே.. நான் செத்த நாயைப் போன்றவன். என்னைக் கடைக்கண் பார்க்க எனக்கு என்ன தகுதி இருக்கிறது” மெபிபொசேத்து எதையும் நம்ப முடியாமல் தழுதழுத்தான்.

அரசர் பணியாளர் சேபாவை அழைத்தார். “சேபா ! இவன் உனது தலைவனின் பேரன். இனிமேல் இவனுக்காக நீயும், உன் பிள்ளைகளும், பணியாளர்களும் உழைக்க வேண்டும். இவனை நான் கவுரவப் படுத்துவேன். என்னுடன் இவன் உணவருந்துவான்” என்றார்.

கடவுளின் அருள் பெற்ற தாவீது தனது நண்பனின் மகனை மீண்டும் அரச மாளிகைக்குள் வலம் வர வைத்தார். இவருடைய வாழ்க்கை கிறிஸ்தவத்தின் ஆன்மீகப் பாடத்தை விளக்குகிறது என்கின்றனர் இறையியலார்கள்.

கடவுளின் அருளை விட்டு விலகி, தூரமாய் ஆன்மீக ஊனமுற்றவர்களாக நாம் இருக்கிறோம். நாம் ஒளிந்து கொண்டாலும் நம்மைத் தேடி வருகிறார் மீட்பர். நாம் அச்சப்படுகிறோம். ஆபத்து நேரிடப்போகிறது என கலங்குகிறோம். அவரோ நாம் எதிர்பாராத நலன்களால் நம்மை நிரப்புகிறார். அவருடன் சேர்ந்து பந்தியமரவும் வைக்கிறார். மேஜையில் இருக்கும் போது கால்களின் ஊனம் தெரிவதில்லை. உடலின் ஊனம் ஊனமல்ல, உள்ளத்தால் ஒன்றுபடுதலே தேவை. தாவீது உலக ரீதியாகச் செய்ததை, தாவீதின் மானிட வம்சத்தில் வந்த இயேசு ஆன்மீக ரீதியாகச் செய்கிறார். பாவங்களின் பாலைவனங்களில் இருப்பவர்களுக்கும் மீட்பை இலவசமாய்த் தருகிறார்.

இழந்து போனது கால்களையல்ல, பாவத்தின் இருளில் கிடந்த காலங்களை. அழைப்பு வருகிறது. செவிமடுப்போம். இதோ அடியான் என நம்மையே தாழ்த்தி அவர் பாதம் பணிவோம்.

பைபிள் மனிதர்கள் 33 (தினத்தந்தி) அப்னேர்

சவுல் மன்னனுடைய விசுவாசத்துக்குரிய படைத் தலைவன் அப்னேர். அப்னேரின் தந்தை பெயர் நேர். சவுலும், அப்னேரும் ஒன்று விட்ட சகோதரர்கள். அப்னேர் என்றால் “எனது தந்தை ஒரு தீபம்” என்று பொருள். சவுலின் பாசறையில் மிகவும் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தார் அப்னேர்.

சவுலுடன் எப்போதுமே இருந்த அப்னேர் சவுல் மன்னன் இறந்த பிறகு தன்னை வலிமையாக்கிக் கொண்டார். சவுலின் மகன்களில் ஒருவரான இஸ்போசேத்தை இஸ்ரயேலர்களுக்கு அரசனாக நியமித்தார். இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களில், யூதாவைத் தவிர மற்ற அனைவரும் இஸ்போசேத்தை தங்கள் மன்னனாக ஏற்றுக் கொண்டார்கள். யூதா மட்டும் தங்கள் அரசராக தாவீதை ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

அப்னேரின் படைக்கும், யோவாபு முன்னின்று நடத்திய தாவீதின் படைக்கும் இடையே பெரும் போர் ஆரம்பமானது. அந்தப் போரில் அப்னேர் தோற்கடிக்கப்பட்டு ஓடினார். தோற்று ஓடிய அப்னேரை யோபாவுவின் இளைய சகோதரனான ஆசகேல் துரத்திக் கொண்டே போனான். அப்னேருக்கு ஆசகேலைக் கொல்ல விருப்பம் இல்லை. காரணம் அப்னேர் யோவாபுவிடம் நட்பில் இருந்தார். அதனால் அவர் ஆசகேலை எச்சரித்தார்.

“சும்மா சும்மா என்னைத் துரத்தி வராதே. உன்னைக் கொல்ல எனக்கு விருப்பமில்லை. அப்புறம் நான் எப்படி உன் அண்ணன் முகத்தில் முழிப்பது” என்று தடுத்தான். ஆனால் ஆசகேல் அப்னேரின் வார்த்தைகளைப் பொருட்படுத்தவில்லை. வேறு வழியில்லாமல் தற்காப்புக்காக அப்னேர் ஆசகேலைக் கொன்றார். யோவாபுவின் மனதில் அது ஒரு பெரும் அதிர்ச்சியை உருவாக்கி, பெரும் வன்மத்தை மனதுக்குள் விதைத்து விட்டது.

வலிமையிலும், செல்வாக்கிலும் மிகுந்தவனாக இருந்தாலும் அப்னேர் பாலியல் தவறிழைத்தான். மன்னர் சவுலின் துணைவியரில் ஒருவரான “இரிஸ்பா” வோடு தகாத உறவு வைத்திருந்தார். அதை மன்னர் இஸ்போசேத்து தட்டிக் கேட்டார். அது அப்னேருக்குக் கடும் கோபத்தை உருவாக்கியது. தான் அரசனாய் ஏற்படுத்தியவன் தன்னிடமே கேள்வி கேட்பதா எனும் ஈகோ அவனுக்குள் முளைத்தது.

“உன் அரசு போகும். ஒட்டு மொத்த இஸ்ரயேலரையும் கடவுளின் கட்டளைப்படி தாவீது ஆள்வார்.” என சீறினார். அப்னேரைப் பார்த்து மன்னனே பயந்தான்.

அப்னேர் உடனே தாவீதுக்கு ஆளனுப்பி, “ஒட்டு மொத்த இஸ்ரயேலுக்கும் உன்னை அரசனாக்க, நான் உம்மோடு இருப்பேன். சம்மதமெனில் உடன்படிக்கை செய்து கொள்ளும்” என்றார். தாவீதும் அப்படியே செய்தார். “ உன்னை என் படைகளுக்கெல்லாம் தலைவனாக்குவேன்” என்றும் வாக்கு கொடுத்தார்.

அப்னேர் உடனடியாக வேலைகளை ஆரம்பித்தார். இஸ்ரயேலின் தலைவர்களையெல்லாம் தாவீதுக்கு ஆதரவாக மாற்றத் தொடங்கினார். தாவீதை ஒட்டு மொத்த இஸ்ரயேலுக்கும் தலைவராக்கும் திட்டம் படிப்படியாய் வெற்றிப் பாதையில் நடந்து கொண்டிருந்தது.

மகிழ்ச்சியைக் கொண்டாட அப்னேர் பத்து பேரோடு தாவீதை வந்து சந்தித்தார். தாவீது அவர்களுக்கு மாபெரும் விருந்து ஒன்றைக் கொடுத்தான். “சரி, நான் போய் இனி தலைவர்களையெல்லாம் அழைத்து வருகிறேன். நீங்கள் அவர்களோடு உடன்படிக்கை செய்து, ஒட்டு மொத்த இஸ்ரயேலுக்கே அரசனாகி விடலாம்” அப்னேர் சொல்ல தாவீது மகிழ்ச்சியுடன் அவனை வழியனுப்பி வைத்தார்.

யோபாவு இதைக் கேள்விப்பட்டதும் தாவீதிடம் தனது கோபத்தைக் காட்டினார். “என்ன காரியம் செய்தீங்க. அவன் ஏமாற்றுக்காரன். இங்கே நடப்பதை அறிந்து கொள்ள வந்தவன். அவனைக் கொன்றிருக்க வேண்டும். சும்மா விட்டு விட்டீர்களே” என்றான்.

கோபத்துடன் வெளியேறிய யோபாவு தாவீதுக்குத் தெரியாமல் ரகசியமாய் தூதர்களை அனுப்பி அப்னேரை அழைத்து வரச் செய்தான். யோபாவு தாவீதின் நம்பிக்கைக்குரியவன் என்பதால் அப்னேர் அவனை நம்பினான். ஆனால் யோபாவுவின் மனதில் தன் சகோதரனைக் கொன்றவனைக் கொல்ல வேண்டும் எனும் பழி வாங்குதல் உணர்வே மேலோங்கி இருந்தது.

“வா, தனியா பேசவோம்” என அப்னேரை நயவஞ்சகமாய் அழைத்துப் போய் கொலை செய்தான் யோபாவு. அப்னேரின் சாவு தாவீதை அதிர்ச்சியடையச் செய்தது. அவர் அழுது புலம்பி துக்கம் அனுசரித்தார். “கொலைகாரர்களை நான் தண்டிக்க மாட்டேன், கடவுளே அவர்களைத் தண்டிக்கட்டும்” என்றார். அப்னேர் இறந்தாலும் அவனுடைய திட்டம் நிறைவேறியது. தாவீது இஸ்போசேத்தைக் கொன்று,  ஒட்டு மொத்த இஸ்ரவேலுக்கும் மன்னனாக மாறினார்.

விவிலியத்தில் அதிகம் பேசப்படாத கதாபாத்திரமானாலும் மிக முக்கியமான பாத்திரம் அப்னேர். தாவீது இஸ்ரயேலின் மன்னனாக வேண்டும் எனும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் இவன் பங்கும் இருந்தது. ஆனாலும் கடவுளுடைய திட்டத்தை முழுமையாய் ஏற்றுக் கொள்ளாமல் சுயநலமாய் செயல்பட்டதும், தகாத உறவில் வீழ்ந்ததும் அவனுடைய மாபெரும் பலவீனங்களாக மாறின.

இறைவனின் திட்டம் எது எனத் தெரிந்தால் எந்த விதமான சுய நலச் சிந்தனைகளுக்கும் இடம் கொடாமல் அப்படியே அதை ஏற்றுக் கொள்வதும், பாலியல் பிழைகளில் விழுந்து விடாமல் இருப்பதும் அப்னேரின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் முக்கியமான இரண்டு பாடங்களாகும்.

பைபிள் மனிதர்கள் 32 (தினத்தந்தி) அபிகாயில்

தாவீது மீது சவுல் மன்னனுக்குக் கோபம். அவனைக் கொலை செய்ய வேண்டுமென திரிந்தார். தப்பி ஓடிய தாவீது குகைகளில் வசித்து வந்தார். அவருடன் சுமார் அறுநூறு பேர் இருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் பலருக்கு உதவிகளையும் செய்து வந்தார் தாவீது. நாபால் என்பர் அப்படி உதவி பெற்றவர்களில் ஒருவர். நாபாலின் கால்நடைகளை தாவீது, பாதுகாத்துக் காப்பாற்றியிருக்கிறார்.

நாபாலோ முரடன், கெட்ட சுபாவம் உடையவன். ஆனால் பெரிய செல்வந்தன். அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும், ஆயிரம் வெள்ளாடுகள் இருந்தன. அவன் தனது ஆடுகளுக்கு முடி கத்தரித்துக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்ட தாவீது பத்து இளைஞர்களை சமாதான வாழ்த்துக் கூற அனுப்பினார். கூடவே “தனக்கும் கூட்டாளிகளுக்கும் கொடுக்க முடிந்ததைக் கொடுங்கள்” என விண்ணப்பமும் வைத்தார்.

வந்தவர்களை நாபால் அவமானப் படுத்தினார். தாவீது எவன் ? எதுக்கு என்னோட உணவையும், அப்பத்தையும் கொடுக்க வேண்டும். என திருப்பி அனுப்பினான்.

நாபாலின் மனைவி பெயர் அபிகாயில். அவள் மிக அழகானவள். நல்ல திறமையானவள். ஞானம் நிறைந்தவள். பணியாளன் ஒருவன் சென்று நடந்த விஷயங்களையெல்லாம் அவளிடம் சொன்னார். தாவீது நல்லவர் என்றும், தங்களுடைய மந்தைகளையும், பணியாளர்களையும் பாதுகாத்தவர் என்றும் சொன்னார்.

அதே நேரத்தில் தாவீதிடம் திரும்பிய பத்து பேரும் நடந்ததைக் கூறினார்கள். தாவீது கடும் கோபம் அடைந்தார். உடனே தனது பணியாளர்களில் நானூறு பேரைக் கூட்டிக் கொண்டு, நாபாலையும் அவன் கூட்டத்தையும் கூண்டோடு ஒழிக்க வாள்களுடன் புறப்பட்டார்.

அபிகாயில் நடக்கப் போகும சிக்கலை அறிந்து கொள்ளுமளவுக்கு ஞானம் கொண்டிருந்தாள். உடனே இருநூறு அப்பங்கள், திராட்சை ரசம், தோலுரித்த ஐந்து ஆடுகள், வறுத்த பயிறு, அத்திப்பழ அடை, திராட்சைப் பழ அடை என ஏகப்பட்ட பொருட்களை எடுத்து கழுதை மேல் ஏற்றி தாவீதிடம் கொடுக்க ஆளனுப்பினாள்.  பின்னாலேயே அவளும் ஒரு கழுதையில் சென்றாள்.

போகும் வழியில் தாவீதை எதிர்கொண்டாள். தாவீது கோபம் தணியாதவராக இருந்தார். அபிகாயில் சட்டென குதிரையிலிருந்து இறங்கி தாவீதின் முன்னால் முகம் குப்புற விழுந்து வணங்கினாள். தலைவரே, பழி என்மேல் இருக்கட்டும். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். நாமான் ஒரு மூடன். பெயருக்கு ஏற்றார் போல அறிவீனன். நீர் இரத்தம் சிந்தாதவாறு உம்மைத் தடுக்க வந்தேன். இது ஆண்டவரின் விருப்பம். ஆண்டவர் உம்மை ஆசீர்வதித்து இஸ்ரவேலுக்கு அரசராக்குவார். என்றாள்.

அபிகாயிலின் பேச்சைக் கேட்ட தாவீது மனம் மாறினார். “உன்னை இங்கே அனுப்பிய ஆண்டவரின் பெயர் வாழ்த்தப்படட்டும். நீ இங்கே வராமல் இருந்திருந்தால் நாபாலையும், அவனைச் சார்ந்த அனைத்து ஆண்களையும் அழித்திருப்பேன். உன்னால் அவர்களை விட்டு விடுகிறேன். என்றார்.

நடந்தது எதையும் அறியாத நாபால் நன்றாக உண்டு குடித்து போதையில் லயித்திருந்தான். மறு நாள் காலையில் அபிகாயில் விஷயத்தை நாபாலிடம் சொல்ல அவன் அதிர்ந்து போய் சிலையானான். மாபெரும் ஆபத்திலிருந்து தான் தப்பியதை உணர்ந்தான். ஆண்டவர் அவனைத் தண்டித்தார். பத்து நாட்களில் அவன் இறந்தான்.

இதைக் கேள்விப்பட்ட தாவீது அபிகாயிலின் சம்மதத்துடன் அவரை மணந்து கொண்டார்.

விவிலியத்தில் அதிகம் பேசப்படாத அபிகாயிலின் வாழ்க்கை பிரமிப்பூட்டும் பாடங்கள் நிரம்பியது.

அபிகாயிலின் ஞானம் ஒரு மாபெரும் சண்டையைத் தவிர்த்தது. கூடவே தாவீது செய்ய இருந்த பாவத்தையும் தடுத்தது. ‘புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்’ எனும் நீதிமொழிக்கு முன்னுரையாக இருந்தது அபிகாயில் வாழ்க்கை. செல்வம் மனிதனைக் காப்பதில்லை, ஞானமே காக்கும்.

தாவீதிற்கும் அவருடைய ஊழியர்களுக்கும் நன்றியைச் செலுத்த வேண்டும் என முடிவு செய்ததில் அபிகாயிலின் நன்றி செலுத்தும் பண்பு தெரிகிறது.

கணவனுக்காக தாவீதிடம் மன்னிப்புக் கேட்பதில், மன்னிப்பும், பணிவும் நிறைந்த கர்வமற்ற குணாதிசயம் தெரிகிறது.

ஊழியன் ஒருவனுடைய பேச்சைக் கேட்க அபிகாயில் ஒத்துக்கொண்டதில் அவளுடைய “கேட்கும்” குணம் தெரிகிறது. தாமதிக்காமல் செயல்பட்டதில் அவளுடைய சாதுர்யமும், ஞானமும் தெரிகிறது. ஊழியர்களைக் காக்க முடிவு செய்ததில் அவளுடைய கரிசனை தெரிகிறது. கணவனிடம் போய் சண்டை போடாததில் அவளுடைய பொறுமை தெரிகிறது.

தாவீதைக் குறித்தும், கடவுளுடைய திட்டங்களைக் குறித்தும் அறிந்திருந்தாள் என்பது அவளுடைய ஆன்மீக அறிவைக் காட்டுகிறது.

தாவீதிடம் சண்டையைத் தவிர்க்கும்படி கேட்டபோதும் கூட கடவுளை முன்னிறுத்தியே அபிகாயில் பேசியது அவளுடைய இறை விசுவாசத்தைக் காட்டுகிறது. கோபம் கொண்ட தாவீதின் முன்னால் நின்று பேசியது அவளுடைய தைரியத்தைக் காட்டுகிறது.

கணவனின் வார்த்தையை விட, கடவுளின் வார்த்தைக்கு அவள் முதலிடம் கொடுத்தாள். அதன் பின் நடந்தவற்றைக் கணவனிடம் தெரிவிக்கிறாள் என்பதில் ஒரு நல்ல மனைவியாகவும் இருந்தாள் என்பதையும் காட்டுகிறது. நல்லவற்றைக் கற்றுக் கொள்வோம் !

பைபிள் மனிதர்கள் 31 (தினத்தந்தி) : தாவீது.

இஸ்ரயேலரின் மன்னனாக சவுலும், அவனுடைய அரண்மனையில் யாழ் மீட்டும் இளைஞனாக தாவீதும் இருந்த காலம். இஸ்ரயேலருக்கும் – பெலிஸ்தியருக்கும் இடையே போர். பெலிஸ்தியர்கள் இஸ்ரயேலரின் நாட்டுக்குப் படையெடுத்து வந்தார்கள். ஏலா பள்ளத்தாக்கின் ஒரு கரையில் பெலிஸ்தியர், மறுகரையில் இஸ்ரயேலர்.

கோலியாத் எனும் வீரன் பெலிஸ்தியரின் பாசறையிலிருந்து வெளியே வந்தான். அவன் உயரம் எட்டே கால் அடி. உடலெங்கும் வெண்கலக் கவசங்கள். மார்புக் கவசம் மட்டுமே 57 கிலோ. கையில் இருந்த ஈட்டியின் முனை ஏழு கிலோ. அச்சுறுத்தும் தோற்றத்தில் ஆஜானுபாகுவாய் இருந்தான் அவன்.

“சவுலின் அடிமைகளே ! போருக்கா அணிவகுத்து நிற்கிறீர்கள் ? தைரியமுடைய ஆண்கள் உங்களிடையே இருந்தால் முன்னே வாருங்கள். என்னை போரிட்டு வெல்லுங்கள். பெலிஸ்தியர்கள் எல்லோரும் உங்கள் அடிமைகளாவோம்.. இல்லையேல் நீங்கள் எங்கள் அடிமைகள்…. !!! ‘ கோலியாத் கர்ஜித்தான். இஸ்ரயேலர்கள் நடுங்கினார்கள். யாருமே அவனுடன் போரிட முன்வரவில்லை.

சகோதரர்களைச் சந்திக்க போர்களம் வந்த பதின் வயது தாவீது அதைக் கேட்டார். கோலியாத்தின் ஆணவக் குரலால் ஆவேசமடைந்தார்.

“இவனை யாராவது போய் வெட்டி வீழ்த்தவேண்டியது தானே ? ‘, தாவீது படைவீரர்களைக் கேட்டார்.

“ அவன் ராட்சஸன். அவனை வீழ்த்துமளவுக்கு வலிமையானவர்கள் யாரும் நம்மிடம் இல்லை’

“இவனை வெல்பவர்களுக்கு என்ன கிடைக்கும் ?”

“வெல்பவனுக்கு ஏராளமான செல்வமும் அளித்து, தன்னுடைய மகளையே திருமணம் செய்து வைப்பதாக மன்னர் சொல்லியிருக்கிறார்’ படைவீரர்கள் சொன்னார்கள்.

தாவீதின் சகோதரர்கள் தாவீதிடம் கோபம் கொண்டார்கள்.” போடா…திமிர் பிடிச்சவனே.வேடிக்கை பாக்காம, போய் வேலையைப் பாரு.’ என்று தாவீதைத் துரத்தினார்கள்.

தாவீது பயப்படவில்லை. கோலியாத்துடன் போரிடத் தயார் என்றான். சவுல் தாவீதை அழைத்தார். “நீ இளைஞன், அவன் போர் கலையில் வல்லவன். விசப் பரீட்சை வேண்டாம்” என்று தடுத்தார்.

“நான் ஆடுமாடுகளை மேய்க்கும் போது எதிர்ப்படும் கொடிய விலங்குகளையெல்லாம் அடித்துக் கொன்றிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை கோலியாத்தும் விலங்கு தான் அவனையும் என்னால் கொல்ல முடியும்’ தாவீது உறுதியாய் சொன்னான்.

கடைசியில் சவுல் சம்மதித்தார். வீரனுக்குரிய கவசங்களைப் போட்டுக்கொண்டு தாவீதால் நடக்க முடியவில்லை. எனவே அவற்றை நிராகரித்து விட்டு மேய்ப்பனைப் போல கிளம்பினான்.

ஆற்றங்கரைக்குச் சென்று வழவழப்பான நான்கைந்து கூழாங்கற்களை எடுத்து தன்னுடைய பையில் போட்டுக் கொண்டான். தன்னுடைய கவணை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டான்.!  நேராக கோலியாத்தின் முன்னால் சென்று நின்றான். கோலியாத் பார்த்தான். தனக்கு முன்னால் ஒரு சின்ன உருவம் நிற்பதைக் கண்டு சத்தமாய்ச் சிரித்தான்.

“என்ன கிண்டலா ? கோலுடன் அடிக்க வருகிறாயே ! நானென்ன நாயா ?… உன்னை அடித்துக் கொன்று பறவைகளுக்கு இரையாக்குகிறேன்.. பார்’ என்று கர்ஜித்தான்.

“ நீ வாளோடும், ஈட்டியோடும் வந்திருக்கிறாய்  நான் கடவுளின் ஆவியோடு வந்திருக்கிறேன். நீ அழிவது நிச்சயம்…’ தாவீதும் அசரவில்லை.

கோபத்தில் கோலியாத்து தாவீதை நோக்கிப் பாய்ந்தான்.

தாவீது பையிலிருந்த கூழாங்கல்லை எடுத்தான். கவணில் கூழாங்கல்லை வைத்துக் குறிபார்த்துக் கோலியாத்தின் நெற்றியில் அடித்தான்.

கூழாங்கல் பாய்ந்து சென்று கோலியாத்தின் நெற்றியில் பதிந்தது. சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்து, பெருமலை ஒன்று சரிவது போல சரிந்து விழுந்தான். தாவீது தாமதிக்கவில்லை  ஓடிச் சென்று கோலியாத்தின் வாளையே எடுத்து அவன் தலையை வெட்டி வீழ்த்தினான். அந்தப் போரில் இஸ்ரயேலர்கள் வென்றார்கள்.

தாவீது கோலியாத்தை வென்ற கதை பல படிப்பினைகளை நமக்குத் தருகிறது.

 1. மனிதர்கள் எதிர்பார்க்காத நபர்களைக் கடவுள் தேர்ந்தெடுக்கிறார். இறை நம்பிக்கையை உறுதியாய் வைத்திருக்க வேண்டியது மட்டுமே நாம் செய்ய வேண்டிய பணி.
 2. கடவுளின் பெயரால் நிற்கும்போது எத்தகைய அசுரர்களாய் இருந்தாலும் வெல்ல முடியும். கோபம், பகை, இச்சை போன்ற ஆன்மீக அசுரர்களை வெல்ல கடவுளின் பெயரால் நிற்க வேண்டியது அவசியம்.
 3. பிறருடைய வார்த்தைகளைக் கேட்டு நம்பிக்கையை இழக்க வேண்டாம். தாவீதின் சகோதரர்கள், சவுல் மற்றும் கோலியாத்து – எல்லோரும் எதிராகப் பேசினார்கள். தாவீதோ கடவுளை நம்பினார்.
 4. தன்னை நிலை நிறுத்திக் கொள்ளாமல் ஆண்டவரின் பெயரை மகிமைப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
 5. கடவுள் நமக்குத் தந்த திறமைகளில் நம்பிக்கை வைக்க வேண்டும். கவசங்களோடு போகாமல், கவணோடும் கல்லோடும் போன தாவீது, கவசத்தை விடக் கடவுளை நம்பியதால் வென்றார்.

இத்தகைய நல்ல குணாதிசயங்கள் கொண்டதால் தான் ஒரு ஆடுமேய்க்கும் இளைஞன், ஒரு சாம்ராஜ்யத்தையே காக்கும் தலைவனாக மாறினான். இவற்றையெல்லாம் மனதில் கொள்வோம் வாழ்வில் வெல்வோம்.