பைபிள் மாந்தர்கள் 53 (தினத்தந்தி)கேகசி

பேராசை பெருநஷ்டம் என்று சொல்வார்களல்லவா ? அதன் சிறந்த உதாரணம் இந்த கேகசி !

எலிசா என்னும் இறைவாக்கினரின் உதவியாளர் தான் கேகசி. எலியாவுக்கு கைகழுவ தண்ணீர் ஊற்றிக் கொடுக்கும் பணியைச் செய்து வந்தவர் எலிசா. அதை மிகவும் ஆத்மார்த்தமாகச் செய்து வந்தார். எலியா விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபின் எலிசா கடவுளால் இறைவாக்கினராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எலிசா இறைவாக்கினர் ஆனபின் அவரிடமிருந்து மாபெரும் செயல்களெல்லாம் எளிதாக வந்தன. வியப்பூட்டும் அற்புதங்களைச் செய்து வந்தார் அவர். அவற்றில் ஒன்று தான் சிரியா நாட்டுப் படைத்தளபதி நாமான் என்பவருடைய தொழுநோயைக் குணமாக்கிய நிகழ்வு.

வ‌ண்டி நிறைய‌ பொன், வெள்ளி, ப‌ட்டாடைக‌ள் என‌ விலையுயர்ந்த‌ பொருட்க‌ளை எலிசாவின் பாத‌த்தில் ச‌ம‌ர்ப்பிக்க‌ நாமான் விரும்பினான். ஆனால் எலிசாவோ, குண‌ம‌ளித்த‌ல் இறைவ‌னின் கொடை இத‌ற்காய் அன்ப‌ளிப்புக‌ள் வாங்க‌ மாட்டேன் என‌ திட்ட‌வ‌ட்ட‌மாய் ம‌றுத‌லித்தார். நாமான் சிலிர்த்தான். இப்ப‌டிப்ப‌ட்ட‌ ம‌னித‌ர் வ‌ண‌ங்கும் க‌ட‌வுளே உண்மையான‌ க‌ட‌வுள் என‌ அறிக்கையிட்டான். பின்ன‌ர் எலிசாவிட‌ம்,

“நான் இங்கிருந்து இர‌ண்டு க‌ழுதைப் பொதி அள‌வுக்கு ம‌ண்ணை எடுத்துச் செல்ல‌ அனும‌தி தாருங்க‌ள். இனிமேல் இஸ்ர‌வேலின் க‌ட‌வுளைத் த‌விர‌ வேறு யாரையும் நான் வ‌ண‌ங்க‌வே மாட்டேன்” என்றான். எலிசா ம‌கிழ்ந்தார். “அமைதியுட‌ன் சென்று வாரும்” என‌ அனுப்பி வைத்தார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் கேக‌சி. எலிசாவின் ப‌ணியாள‌ன். அவ‌னுடைய‌ க‌ண்ணுக்கு முன்னால் வ‌ண்டி வ‌ண்டியாய் பொன்னும், வெள்ளியும் இருக்கின்ற‌ன‌. இத்த‌னை செல்வ‌ங்க‌ளை வேண்டாம் என‌ சொல்லும் த‌ன‌து குரு ஒரு முட்டாளாக‌த் தான் இருக்க‌ வேண்டும். ஆனால் நான் முட்டாளாய் இருக்க‌ மாட்டேன் என‌ ம‌ன‌தில் நினைத்தான்.

எப்ப‌டியாவ‌து இந்த‌ச் செல்வ‌த்தில் கொஞ்ச‌த்தையாவ‌து கைப்ப‌ற்றி விட‌வேண்டும், இனிமையான‌ வாழ்க்கை வாழ‌வேண்டும் என‌ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான். நாமான் சென்று ச‌ற்று நேர‌ம் க‌ழிந்த‌பின் பின்னாலேயே போனான் கேக‌சி.

கேக‌சி ஓடி வ‌ருவ‌தைக் க‌ண்ட‌ நாமான் வ‌ண்டியை நிறுத்தி அவ‌னை நோக்கி ஓடிச் சென்றான்.

“என்ன‌.. எல்லாரும் ந‌ல‌ம் தானே ?என்ன‌ விஷ‌ய‌ம் ?” என்று கேட்டான்.

“த‌லைவ‌ர் தான் என்னை அனுப்பினார்”

“இறைவாக்கின‌ர் எலிசாவா ? சொல்லுங்க‌ள் சொல்லுங்க‌ள்.. என்ன‌ செய்தி” நாமான் உற்சாக‌மானார்.

“எலிசா பொருளுக்கு ஆசைப்ப‌ட‌ மாட்டார் என்ப‌து உங்க‌ளுக்கே தெரியும். ஆனால் எப்ராயீம் ம‌லைநாட்டிலிருந்து ரெண்டு பேர் வ‌ந்திருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் இறைவாக்கின‌ர்க‌ள். அவ‌ர்க‌ளுக்கு ஒரு நாற்ப‌து கிலோ வெள்ளியும், ரெண்டு ப‌ட்டாடையும் வாங்கி வ‌ர‌ச் சொன்னார்” என்றார் கேக‌சி.

நாமான் ரொம்ப‌ ம‌கிழ்ச்சிய‌டைந்தான்.

“ரொம்ப‌ ச‌ந்தோச‌ம். த‌ய‌வு செய்து எண்ப‌து கிலோ வெள்ளியை வாங்கிக் கொள்ளுங்க‌ள்.”

“ம்ம்.. ச‌ரி”

நாமான் ப‌ணியாள‌ர்க‌ளுக்குக் க‌ட்ட‌ளையிட்டான். இர‌ண்டு பேர் எண்ப‌து கிலோ வெள்ளி, ம‌ற்றும் இர‌ண்டு ப‌ட்டாடைக‌ளைக் கொண்டு முன்னே ந‌ட‌க்க‌ கேக‌சி பின்னால் ந‌ட‌ந்தான்.

த‌ன்னுடைய‌ வீட்டுக்குப் ப‌க்க‌த்தில் வ‌ந்த‌தும் அவ‌ற்றை ப‌ணியாள‌ர்க‌ளிட‌மிருந்து வாங்கி விட்டு அவ‌ர்க‌ளை அனுப்பி வைத்தான் கேக‌சி. பின்ன‌ர் பொருட்க‌ளையெல்லாம் த‌ன‌து வீட்டுக்குள் கொண்டு ஒளித்து வைத்தான்.

அவ‌னுடைய ம‌ன‌ம் ச‌ந்தோச‌த்தில் துள்ளிய‌து. ஆஹா.. எண்ப‌து கிலோ வெள்ளி, இர‌ண்டு ப‌ட்டாடைக‌ள். இனிமேல் வாழ்க்கையில் சொகுசாக‌ வாழலாம் என‌ உற்சாக‌ம‌டைந்தான். ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாம‌ல் எலிசாவின் முன்னால் சென்று நின்றான்.

“கேக‌சி  …”

“சொல்லுங்க‌ள் த‌லைவ‌ரே”

“எங்கே போயிட்டு வ‌ந்தே ?”

“நா..நான் எங்கேயும் போக‌லையே. ” கேக‌சி திடுக்கிட்டான்.

“பொய்… ! என் ஞான‌த்தால் நான் ந‌ட‌ந்த‌தைக் க‌ண்டேன். செல்வ‌ங்க‌ளைப் பெற்றுக் கொள்ள‌ இதுவா ச‌ம‌ய‌ம் கேக‌சி ?” எலிசாவின் குர‌ல் இறுகிய‌து.

கேக‌சி த‌டுமாறினான்.

“இதோ கேள் ! நாமானின் தொழுநோய் உன்னையும், உன் வ‌ழிவ‌ந்தோரையும் என்றென்றும் பீடிக்கும்” எலிசா ச‌பித்தார்.

கேக‌சி திடுக்கிட்டுப் போனான். ச‌ட்டென‌ அவ‌ன் கைக‌ளில் வெள்ளைப் புள்ளிக‌ள் முளைக்க‌ ஆர‌ம்பித்த‌ன‌. ப‌த‌றிப் போய் பின் வாங்கினான். கொஞ்ச‌ நேர‌ம் தான் அவ‌ன் உட‌ல் முழுவ‌துமே தொழுநோய் வ‌ந்து நிர‌ம்பிய‌து.

கேக‌சி அந்த‌ இட‌த்தை விட்டு ஓடிப் போனான்.

எலிசாவைப் போல‌ மாபெரும் இறைவாக்கின‌ராய் மாற‌ வேண்டிய‌ கேக‌சி, த‌ன‌து பேராசையினால் அந்த‌ வாய்ப்பை இழ‌ந்தான்.

கேகசி பொய் சொல்லி த‌ன‌து த‌வ‌றுக‌ளை மூடி வைத்த‌த‌னால் ம‌ன்னிப்புப் பெறும் வாய்ப்பையும் இழ‌ந்தான். க‌டைசியில் அவ‌ன் சேர்த்த‌ சொத்துக‌ளால் அவ‌னுக்கு எந்த‌ ப‌ய‌னுமே இல்லை எனும் நிலை உருவான‌து.

இறைவ‌னை ம‌ட்டுமே ப‌ற்றிக் கொண்டு, ம‌றைமுக‌ப் பாவ‌ங்க‌ளையெல்லாம் வில‌க்கி, இறைவ‌னுக்கு முன்னால் தெளிவான‌ ம‌ன‌ச்சாட்சியுட‌ன் வாழ‌வேண்டும் என்ப‌தே கேக‌சியின் வாழ்க்கை ந‌ம‌க்குக் க‌ற்றுத் த‌ரும் பாட‌மாகும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s