பைபிள் மாந்தர்கள் 59 (தினத்தந்தி) எஸ்தர்

  1. எஸ்தர்

மன்னர் அகஸ்வேர் சூசான் தலைநகரில் இருந்தார். தன் குறுநில மன்னர்கள், உயர் அதிகாரிகள்,பாரசீகத் தலைவர்கள் அனைவரையும் அழைத்து நூற்று எண்பது நாட்கள் விருந்து வைத்தார். பின்னர் ஒருவாரம் பொதுமக்களுக்கும் விருந்து வைத்தார்.

“அரசி வஸ்தியை அலங்காரம் செய்து அழைத்து வாருங்கள். மக்கள் அவள் எழிலைக் காணட்டும்” மன்னன் ஆணையிட்டான்.

வஸ்தி மறுத்தாள். அரசன் திகைத்தான்.

‘அரசே.. உமது கட்டளையை உமது மனைவி நிறைவேற்றாவிட்டால் நாட்டில் வாழும் எந்தப் பெண்ணுமே தங்கள் கணவர் பேச்சைக் கேட்க மாட்டார்கள். வஸ்தியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணமுடியுங்கள். நாட்டில் பெண்கள் எல்லாம் கணவனின் சொல்படி வாழவேண்டும் என கட்டளையிடுங்கள்” தலைவர்கள் சொல்ல, மன்னன் அப்படியே செய்தான்.

நாட்டில் உள்ள அனைத்து கன்னிப் பெண்களும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருத்தி எஸ்தர். எஸ்தர் ஒரு யூதப் பெண். அரண்மனையில் வேலை செய்யும் அவருடைய பெரியப்பா மகன் மொர்தக்காய் என்பவரிடம் வளர்ந்து வந்தாள்.

கன்னிப் பெண்கள் எல்லாரும் ஆறுமாதகாலம் வெள்ளைப் போளத்தாலும், ஆறு மாதகாலம் நறுமணப் பொருட்களாலும் என ஒரு வருடம் அழகுபடுத்தப் பட்டனர்.

அதன் பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக மன்னரின் அந்தப்புரத்திற்குச் செல்வார்கள். மன்னருக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ அவர் அரசியாவார் என்பதே வழிமுறை. எஸ்தரின் முறை வந்தது. எஸ்தரை மன்னனுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. எனவே அவரை மனைவியாக்கிக் கொண்டார்.

ஒருமுறை மன்னரைக் கொல்ல இரண்டு பேர் முயன்றனர். அதைக் கண்டுபிடித்த மொர்தக்காய் அந்த செய்தியை எஸ்தரிடம் சொன்னார். எஸ்தர் மன்னரிடம் சொன்னார். கொலைசெய்ய முயன்றவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். “மன்னரின் உயிரைப் பாதுகாத்தார் மொர்தக்காய்” என அரண்மனைக் குறிப்பேட்டில் எழுதப்பட்டது.

அகஸ்வேர் மன்னன் தனது பணியாளர் ஆகாகியனான ஆமானை அனைத்து அதிகாரிகளுக்கும் மேலான பதவியில் வைத்தார். அவனுக்கு எல்லாரும் வணக்கம் செலுத்துவார்கள், மொர்தக்காயைத் தவிர !

மொர்தக்காய் யூதன் என்பது ஆமானுக்குத் தெரிய வந்தது. இப்போது அவனது எதிரி மொர்தக்காய் என்பது மட்டுமல்லாமல், யூதர்கள் என்றானது.

எனவே நாட்டிலுள்ள யூதர்களையெல்லாம் கொல்ல ஒரு நாள் குறித்து அதை அனைத்து மாநிலங்களின் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தான். செய்தி மொர்தக்காய்க்குத் தெரிந்தது. அவர் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு கடவுளிடம் வேண்டினார்.

எஸ்தர் அரசியிடம் மொர்தக்காய் விஷயத்தைச் சொன்னார். எஸ்தர் கலங்கினார். ஆனாலும் மன்னர் அழைக்காமல் மன்னரின் முன்னால் செல்ல முடியாது என்பதால், யூத மக்கள் அனைவரையும் மூன்று நாள் நோன்பு இருந்து கடவுளிடம் மன்றாடச் சொன்னாள்.

மூன்று நாளுக்குப் பின் எஸ்தர் தைரியமாய் மன்னரின் முன்னால் சென்று நின்றாள்.

‘என்ன வேண்டும்’ மன்னர் கேட்டார்.

” நான் ஏற்பாடு செய்திருக்கும் விருந்துக்கு மன்னரும் ஆமானும் வரவேண்டும் அப்போது  விண்ணப்பத்தைச் சொல்வேன்” எஸ்தர் சொல்ல, மன்னர் ஒத்துக்கொண்டார்.

முதல் நாள் விருந்து முடிந்தது. அடுத்த நாளும் விருந்துக்கு வாருங்கள். என்ன வேண்டும் என்பதை நான் அப்போது சொல்வேன் என்றாள் எஸ்தர். விருந்து முடிந்து வெளியே போன ஆமானை மொர்த்தக்காய் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை.

கோபத்தில் வீடு சென்ற அவனிடம், மனைவி ஒரு குரூர யோசனையைச்  சொன்னாள். அதன் படி மொர்தக்காயைத் தூக்கிலிட ஐம்பது அடி உயரத்தில் ஒரு தூக்கு மரத்தை ஆமான் தயாராக்கினான்.

அன்று இரவு மன்னர் தூக்கம் வராமல் குறிப்பேடு நூலை வாசிக்கத் துவங்கினார். அப்போது மொர்தக்காயின் பெயர் அவருடைய கண்களில் தட்டுப்பட்டது. தன் உயிரைக் காப்பாற்றிய மொர்தக்காய்க்கு மரியாதை செய்ய வேண்டும் என முடிவெடுத்தார். மன்னர் ஆமானை அழைத்தார்.

‘நான் ஒருவருக்கு மரியாதை செலுத்த வேண்டும். என்ன செய்யலாம்’

தன்னைத் தான் மரியாதை செலுத்தப் போகிறார் என நினைத்த ஆமான், ” கிரீடம் சூட்டி, மன்னரின் ஆடை உடுத்து, நகர்வலம் கொண்டு வரவேண்டும்” என்றார்.

‘அருமையான யோசனை. அதை மொர்த்தக்காய்க்குச் செய்”‘ என்றார் மன்னர். ஆமான் அதிர்ந்தான். வேறுவழியில்லாமல் அப்படியே செய்தான். மொர்த்தக்காயைப் பார்த்து எல்லோரும் பயப்பட ஆரம்பித்தனர்.

இரண்டாம் நாள் விருந்தில் களித்திருந்த மன்னர் எஸ்தரிடம், ‘இப்போது கேள் என்ன வேண்டும்’ என்று கேட்டார். எஸ்தர் தழுதழுக்கும் குரலில், ‘என்னையும் என் இனத்தையும் கொல்ல நினைக்கிறான் ஒருவன். எனக்கு உயிர்ப்பிச்சை அளியுங்கள்’ என்றாள்.

யாரது ? மன்னன் கோபத்தில் கத்தினார். “இதோ இந்த ஆமான் தான்” என்றாள் அரசி. ஆமான் திடுக்கிட்டான்.

மன்னனின் கோபம் ஆமான் மேல் திரும்பியது. ஆமானைக் கொல்ல‌ ஆணையிட்டார். மொர்தக்காய்க்காக  தயாராக்கி வைத்த தூக்கிலேயே அவன் தொங்கவிடப்பட்டான்.

எஸ்தரின் மூலம் யூத இனம் அழிவிலிருந்து தப்பியது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s