பைபிள் மாந்தர்கள் 60 (தினத்தந்தி) யோபு

ஊசு எனும் நாட்டில் ஆனந்தமாகவும் செல்வச் செழிப்போடும் வாழ்ந்து வந்தான் நீதிமானும், பக்திமானுமான யோபு. ஏழு மகன்கள், மூன்று மகள்கள், ஏழாயிரம் ஆடுகள், மூவாயிரம் ஒட்டகங்கள், ஐநூறு ஏர் காளைகள், ஐநூறு பெண் கழுதைகள், ஏகப்பட்ட வேலைக்காரர்கள் என பெரிய செல்வந்தராய் இருந்தார்.

சாத்தான் கடவுள் முன் வந்து நின்றான்.

‘எங்கிருந்து வருகிறாய்’ கடவுள் கேட்டார்.

‘உலகைச் சுற்றி உலவி வருகிறேன்’ .

‘பார்த்தாயா .. என் ஊழியன் யோபுவைப் பார்த்தாயா. எத்தனை நீதிமான், இவனைப் போல உலகில் வேறு யாருமே இல்லை’

‘சும்மாவா ? அவனுக்கு எல்லா செல்வ‌மும் கொடுத்திருக்கிறீர், அவ‌ற்றை பெருக‌ச் செய்கிறீர், பாதுகாக்கிறீர். அத‌னால் அவ‌ன் இப்ப‌டி இருக்கிறான். அவ‌ற்றை அழித்துப் பாரும். உம்மை அவ‌ன் ப‌ழிப்பான்’

‘ச‌ரி.. அவ‌னுக்குரிய‌தெல்லாம் உன் கையில். ஆனால் அவ‌னை ம‌ட்டும் ஒன்றும் செய்யாதே’ கட‌வுள் சொல்ல‌ சாத்தான் புற‌ப்ப‌ட்டான்.

அப்போது யோபு த‌னியே இருந்தார். அவ‌ர‌து பிள்ளைக‌ள் எல்லோரும் மூத்த‌ ம‌க‌ன் வீட்டில் உண‌வ‌ருந்தி ம‌கிழ்ச்சியாய் இருந்த‌ன‌ர்.

அப்போது ஒருவ‌ன் ஓடி வ‌ந்தான். ‘ஐயா.. ந‌ம‌து எருதுக‌ளையும், க‌ழுதைக‌ளையும் எதிரிக‌ள் கைப்ப‌ற்றின‌ர். வேலையாட்க‌ளைக் கொன்று விட்ட‌னர், நான் மட்டுமே தப்பினேன் என்றான்.

அப்போது இன்னொருவ‌ன் ஓடி வ‌ந்தான்,’ ஐயா..க‌ட‌வுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து ஆடுக‌ளையும் வேலையாட்க‌ளையும் சுட்டெரித்து விட்ட‌து, நான் ம‌ட்டுமே த‌ப்பினேன்’ என்றான்.

‘த‌லைவ‌ரே.. ஒட்ட‌க‌ங்க‌ளைக் க‌ல்தேய‌ர் கைப்ப‌ற்றி விட்ட‌ன‌ர். ஊழிய‌ர்க‌ளைக் கொன்ற‌ன‌ர். நான் ம‌ட்டுமே த‌ப்பினேன்’ என்றான் ஓடி வந்த வேறொருவன்.

அப்போது இன்னொருவ‌ன் ஓடி வ‌ந்து, ‘ த‌லைவ‌ரே. பெரும் பாலைக்காற்று திடீரென‌ வீசிய‌தில் உம‌து புத‌ல்வ‌ரும், புத‌ல்விய‌ரும் இருந்த‌ வீடு விழுந்து அழிந்த‌து. எல்லோரும் மாண்ட‌ன‌ர். நான் ம‌ட்டுமே த‌ப்பினேன்’ என்றான்.

அடுத்தடுத்து வந்த இடி போன்ற செய்திகளால் யோபு அதிர்ந்தார். யோபு அதிர்ந்தார்.க‌ல‌ங்கினார். ஆடைக‌ளைக் கிழித்துக் கொண்டார்.

” என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியானாய் யான் வந்தேன்: அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்: ஆண்டவர் அளித்தார்: ஆண்டவர் எடுத்துக்கொண்டார். ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக” என்றார். க‌ட‌வுளைப் ப‌ழிக்க‌வேயில்லை.

ஆண்ட‌வ‌ர் சாத்தானிட‌ம் ‘பார்த்தாயா யோபுவை’ என்றார்.

‘இதென்ன பெரிய இழப்பு. அவ‌னுடைய‌ எலும்பு, ச‌தை மீது கையை வைத்துப் பாரும். அவ‌ன் உம்மைப் ப‌ழித்துரைப்ப‌து உறுதி’ சாத்தான் சொன்னன்.

‘அப்ப‌டியே செய். அவ‌ன் உயிரை தொடாதே’க‌ட‌வுள் அனும‌தித்தார்.

சாத்தான் யோபுவுக்கு உச்ச‌ந்த‌லை முத‌ல் உள்ள‌ங்கால்வ‌ரை எரியும் புண்க‌ளைக் கொடுத்தான். ஓடொன்றை எடுத்து த‌ம்மைச் சொறிந்து கொண்டே சாம்ப‌லில் உட்கார்ந்தார் யோபு.

யோபுவின் நில‌மையைப் பார்த்து யோபுவின் ம‌னைவிக்கே பொறுக்க‌வில்லை.

‘இன்னுமா மாசின்மையில் இருக்கிறாய். க‌ட‌வுளைப் ப‌ழித்து மடிந்து போவும்’ என்றாள்.

யோபுவோ, ‘க‌ட‌வுளிட‌மிருந்து ந‌ன்மையைப் பெற்ற‌ நாம், தீமையைப் பெற‌க் கூடாதா’ என்றார். க‌ட‌வுளைப் ப‌ழிக்க‌வேயில்லை.

அப்போது அவ‌ருடைய‌ ந‌ண்ப‌ர்க‌ள் மூன்று பேர் அவ‌ரைக் காண‌ வ‌ந்த‌ன‌ர்.

அந்த‌ மூன்று ந‌ப‌ர்க‌ளும் யோபுவின் ந‌ம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் வார்த்தைக‌ளைப் பேசினார்க‌ள். அவ‌ருடைய‌ நில‌மைக்குக் கார‌ண‌ம் பாவ‌மாய் இருக்குமோ என‌ பேசினார்க‌ள். யோபு த‌ன‌து பிற‌ந்த‌ நாளைப் ப‌ழித்தார். ஆனாலும் க‌ட‌வுளை அவ‌ர் ப‌ழிக்க‌வோ, இழிவாய்ப் பேச‌வோ இல்லை.

ஆனால் க‌ட‌வுளை நோக்கி க‌சிந்துருகி ம‌ன்றாடினார்.

“உம் கையினின்று என்னைத் தப்புவிப்பவர் ஒருவருமில்லை. என்னை வனைந்து வடிவமைத்து உண்டாக்கின உம் கைகள்: இருப்பினும், நீரே என்னை அழிக்கின்றீர். தயைகூர்ந்து நினைத்துப் பாரும்! களிமண்போல் என்னை வனைந்தீர்: அந்த மண்ணுக்கே என்னைத் திரும்பச் செய்வீரோ? பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா? தயிர்போல் என்னை நீர் உறைக்கவில்லையா” என‌ க‌த‌றினார்.

க‌ட‌வுள் யோபுவை மீண்டும் ஆசீர்வ‌தித்தார். முன்பு இருந்த‌தை விட‌ இர‌ண்டு ம‌ட‌ங்கு செல்வ‌த்தை அவ‌ருக்கு அளித்தார். அவ‌ருக்கு ஏழு புத‌ல்வ‌ர்க‌ளும் மூன்று புத‌ல்விய‌ரும் பிற‌ந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் உல‌க‌ அழ‌கிய‌ர் போல‌ இருந்த‌ன‌ர்.

க‌ட‌வுள் அவ‌ருடைய‌ ஆயுளையும் நீட்டித்தார். அத‌ன் பின்பு யோபு நூற்று நாற்ப‌து ஆண்டுக‌ள் வாழ்ந்து த‌ன‌து நான்காம் த‌லைமுறைவ‌ரை க‌ண்டுக‌ளித்தார்.

ம‌ன‌த‌ள‌வில் தூய்மையாய் இருத்த‌ல், பொருளாசை இல்லாம‌ல் இருத்த‌ல், இறைவ‌னை இறுதிவ‌ரை உறுதியாய்ப் ப‌ற்றிக் கொண்டிருத்த‌ல் போன்ற‌வ‌ற்றை யோபுவின் வாழ்க்கை ந‌ம‌க்கு க‌ற்றுத் த‌ருகிற‌து.

“சாத்தான் உல‌கைச் சுற்றிக் கொண்டிருப்பான், ந‌ம்மைப் ப‌ற்றி முழுமையாய் அறிந்திருப்பான் என்ப‌வை ந‌ம‌க்கு எச்ச‌ரிக்கையைக் க‌ற்றுத் த‌ருகின்ற‌ன‌. எனினும், க‌ட‌வுளின் அனும‌தியின்றி இறைம‌க்க‌ளை சாத்தான் எதுவும் செய்து விட‌ முடியாது என்ப‌தும், ந‌ம‌து தாங்கும் திற‌மைக்கேற்ப‌வே கடவுள் ந‌ம்மைச் சோதிப்பார் என்ப‌தும் ந‌ம‌க்கு அதீத‌ ஊக்க‌ம் த‌ருகிற‌து !

*

One comment on “பைபிள் மாந்தர்கள் 60 (தினத்தந்தி) யோபு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s