பைபிள் மாந்தர்கள் 61 (தினத்தந்தி) எரேமியா

“கடவுள் சொல்கிறார்… ஞானி தன் ஞானத்தைக் குறித்துப் பெருமை பாராட்ட வேண்டாம்! வலிமை மிக்கவர் தம் வலிமையைக் குறித்துப் பெருமைப் பாராட்ட வேண்டாம்! செல்வர் தம் செல்வத்தைக் குறித்துப் பெருமைப் பாராட்ட வேண்டாம்.” ‍ எரேமியா ( 9:23 )

பைபிளில் வரும் இறைவாக்கினர்களில் எரேமியா மிகவும் முக்கியமானவர். எபிரேய மொழியில் இவரது நூல் “யர்மியாஹூ” என அழைக்கப்படுகிறது. கடவுள் உயர்த்துகிறார் என்பது இதன் பொருள். இந்த நூல் கிமு 580ல் எழுதி முடிக்கப்பட்டதாய் வரலாறு கூறுகிறது.

பென்யமின் நாட்டுக் குருக்களில் ஒருவரான இலிக்கியா என்பவரின் மகன் தான் இந்த எரேமியா. எருசலேமிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அனத்தோத் என்பது தான் இவருடைய பிறந்த ஊர்.

யூதாவின் பதினாறாவது மன்னனாகிய யோசியா ஆட்சிப் பொறுப்பேற்று பதிமூன்று ஆண்டுகள் கடந்திருந்த போது எரேமியாவின் பணி வாழ்க்கை ஆரம்பமானது. எரேமியா மிகவும் மென்மையான மனம் படைத்தவர். ஆனால் கடவுள் இவருக்கு இட்ட பணியோ, கடுமையான கடவுளின் எச்சரிக்கைகளையும், அழிவின் முன்னறிவிப்புகளையும் மக்களுக்கு எடுத்துக் கூறுவது. திருமணம் செய்யக் கூடாது, அடுத்தவர்களுடைய மகிழ்ச்சியிலோ துக்கத்திலோ ஒன்றிணையக் கூடாது என கடவுள் அவருக்கு சிறப்புக் கட்டளையிட்டபடியால், தனிமையாகவே வாழ்ந்தார்.

ஒவ்வொருவரும் அவரவர் பாவத்தை அவரவரே தீர்க்க வேண்டும். மீட்பின் அனுபவம் தனித்தனி நபர்களுக்கே இருக்க வேண்டும் என்பதை  “எல்லாரும் அவரவர் தம் தீச்செயலின் பொருட்டே சாவர். புளித்த திராட்சைப் பழம் தின்பவனுக்குத்தான் பல் கூசும்” என்று அப்போதே கடவுள் எரேமியாவின் வாயிலாக அழகாகச் சொன்னார். மக்கள் மேல் அதிக அக்கறையும், பாசமும், நெகிழ்வும் கொண்டிருந்ததால் இவர் அழுகையில் தீர்க்கத்தரிசி என அழைக்கப்பட்டார்.

நாட்டு ம‌க்க‌ள் உண்மையான‌ ம‌ன‌ந்திரும்ப‌லைக் கொண்டிருக்க‌ வேண்டும் என‌வும், இல்லையேல் அழிவு அவ‌ர்க‌ளை வ‌ந்து சேரும் என்ப‌தையும் இவ‌ர் தீர்க்க‌த்த‌ரிச‌ன‌மாய் மீண்டும் மீண்டும் கூறினார்.

எரேமியா நூல் பைபிளில் மிக‌வும் முக்கிய‌மான‌ ஒரு நூல். இதை எரேமியா சொல்ல‌ச் சொல்ல‌, அவ‌ருடைய‌ உத‌வியாள‌ர் பாரூக் எழுதினார். பாரூக் ஒரு அருமையான மனிதர். செல்வம் மிகுந்தவர். அரசவையோடு நல்ல நெருக்கமான தொடர்பில் இருந்தவர். விரும்பினால் எத்தனை உயரிய அரச பதவியையும் அடைந்து விடும் வாய்ப்பும் அவருக்கு இருந்தது. ஆனால் அதையெல்லாம் உதாசீனம் செய்து விட்டு எரேமியாவுடன் சேர்ந்து இறை பணிசெய்வதையே விரும்பினார்.

எரேமியா மூலம் எழும் இறைவனின் வார்த்தைகளை எடுத்துரைக்கும் மனிதனாகவும் பாரூக் இருந்தார். இதனால் மன்னர் யோயாக்கீமின் கோபப் பார்வைக்குள் விழுந்தார். ம‌ன்ன‌ன் பாரூக்கைச் சிறையில் அடைத்து, அவர் எழுதியிருந்தவற்றையெல்லாம் அழித்தான். ஆனாலும் க‌ட‌வுளின் ஆவியான‌வ‌ர் அந்த‌ நூலை ம‌றுப‌டியும் முத‌லில் இருந்து எழுத‌ வைத்தார்.

“நீ ஒரு நார்ப்ப‌ட்டாலான‌ ஒரு க‌ச்சையை வாங்கிக் கொள்” க‌ட‌வுள் சொல்ல‌ எரேமியா அப்ப‌டியே செய்தார்.

“இந்த‌ க‌ச்சையை ந‌னைக்காதே, உன் இடையிலேயே இருக்க‌ட்டும்” க‌ட‌வுள் சொல்ல‌, எரேமியா ஒத்துக் கொண்டார்.

“ச‌ரி, இப்போது அந்த‌ க‌ச்சையை எடுத்துக் கொண்டு போய் பேராத்து ஆற்றின் பாறை இடுக்கில் ம‌றைத்து வை” எனும் குர‌ல் வ‌ந்த‌போது அப்ப‌டியே செய்தார். நாட்க‌ள் கட‌ந்த‌ன‌. ஒருநாள் க‌ட‌வுள் மீண்டும் கூப்பிட்டார்.

“இப்போது அந்த‌ க‌ச்சையை எடுத்து வா”. எரேமியா சென்று அதை எடுத்துப் பார்த்தார். அது நைந்து உப‌யோக‌மில்லாம‌ல் இருந்த‌து.

“இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன்.என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப்பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்” என்றார் க‌ட‌வுள். இப்ப‌டி ப‌ல்வேறு அழ‌கிய‌ உவ‌மைக‌ள் எரேமியாவின் நூலில் காண‌க் கிடைக்கின்ற‌ன‌.

இயேசு கிறிஸ்துவைப் ப‌ற்றிய‌ இறைவாக்கு உரைத்ததில் இவ‌ர் ஏசாயா வைப் போல‌வே புக‌ழ் பெற்றார். ந‌ல்ல‌ மேய்ப்ப‌ராக‌வும், தாவீதின் கிளையாக‌வும் இவ‌ர் இயேசு கிறிஸ்துவைத் த‌ன‌து இறைவாக்கினால் முன்மொழிந்தார்.

கிறிஸ்தவ இறைவாக்கினர்களின் வரிசையில் மிகவும் வலுவானவராக வாழ்ந்த எரேமியா கல்லெறிந்து கொல்லப்பட்டார் எனவும், எகிப்திலிருந்து பாபிலோன் சென்று அங்கே மரணித்திருக்கலாம் எனவும் இரு விதமான கருத்துகள் நிலவுகின்றன.

“என்னிடம் மன்றாடு: உனக்கு நான் செவிசாய்ப்பேன்: நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன்” என‌ எரேமியா வ‌ழியாய் க‌ட‌வுள் பேசினார்.

ந‌மது உலகத் தேவைகளுக்காகவும், ஆன்மீகத் தேவைகளுக்காகவும்  இறைவனையே முழுக்க முழுக்க‌ சார்ந்திருப்போம். இறைய‌ர‌சின் ம‌றை பொருட்க‌ளை ந‌ம‌க்கு விள‌க்கி, ந‌ம‌து வாழ்க்கையை இறைவ‌னுக்கு ஏற்புடைய‌தாக‌ மாற்ற‌ அவ‌ர் ந‌ம‌க்கு அருள் செய்வார்.