பைபிள் மாந்தர்கள் 65 (தினத்தந்தி) : ஓசேயா

நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்”  ஓசேயா 6 :6

இஸ்ர‌வேலில் வாழ்ந்த‌ இறைவாக்கின‌ர்க‌ளில் ஒருவ‌ர் ஓசேயா. ஒசேயா என்றால் கடவுளே மீட்பர் என்று பொருள். இவ‌ருடைய‌ கால‌ம் கி.மு 722 க்கு முந்தைய‌து என்கிற‌து வ‌ர‌லாறு. ஓசேயாவை இறைவ‌ன் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ வித‌ம் விய‌ப்பூட்டுகிற‌து.

ஓசேயாவிட‌ம் முத‌ன் முத‌லாக‌க் க‌ட‌வுள் பேசுகிறார்.

“ஓசேயா” ஆண்ட‌வ‌ரின் குர‌ல் ஒலிக்க‌ ஒசேயா செவிம‌டுக்க‌த் த‌யாராகிறார்.

“நீ போய், ஒரு பெண்ணைத் திரும‌ண‌ம் செய்து கொள். அந்த‌ப் பெண் ஒரு விலைம‌க‌ளாய் இருக்க‌ட்டும். முறைத‌வ‌றிய‌ பிள்ளைக‌ளைப் பெற்றெடு” என்றார். அவர் கடவுளின் கட்டளைப்படி, ‘கோமேர்’ எனும் பெண்ணைத் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

ந‌ம்பிக்கைக்கு உரிய‌வ‌ள் அல்லாத‌ ஒரு ம‌னைவியோடு வாழ்வ‌து எத்துணை துய‌ர‌மான‌து. த‌ன் அன்பை விட்டு வில‌கி வேறு திசைக‌ளில் ம‌ன‌தை அலைய‌விடும் ஒரு ம‌னைவியோடு வாழ்வ‌து மிக‌ப்பெரிய‌ சாப‌ம். நிம்ம‌தியை இழ‌ந்து, ம‌ன‌ உளைச்ச‌லிலும், வேத‌னையிலும் வாழும் அனுப‌வ‌ம் அது.  அவ‌ளை வில‌க்கி விட‌வும் முடியாது. ஏனென்றால் “அவ‌ளை நீ தொட‌ர்ந்து அன்பு செய்” என்ப‌தே ஓசேயாவுக்கு க‌ட‌வுள் கொடுத்த‌ க‌ட்ட‌ளை.

இஸ்ர‌யேல் ம‌க்க‌ளைக் க‌ட‌வுள் எவ்வ‌ள‌வு தான் அன்பு செய்தாலும் அவ‌ர்க‌ள் தொட‌ர்ந்து வேறு தெய்வ‌ங்க‌ளை நாடியே ஓடினார்க‌ள். வேறு ஆட‌வ‌ர்க‌ளைத் தேடிச் செல்லும் விலை மாதைப் போல‌. அந்த‌ வ‌லி க‌ட‌வுளுக்கு மிக‌ப்பெரிய‌ துய‌ர‌த்தைக் கொடுத்த‌து. அது எத்த‌கைய‌ துய‌ர‌ம் என்ப‌தை வார்த்தைக‌ள் எளிதில் விள‌க்கி விட‌ முடியாது. அந்த‌ வ‌லியின் ஆழ‌ம் எத்துணை க‌டுமையான‌து என்ப‌தை ஓசேயா அறிந்து கொள்ள‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌வே க‌ட‌வுள் ஓசேயாவுக்கு இப்ப‌டி ஒரு வாழ்க்கையைக் கொடுக்கிறார்.

இறைவாக்கின‌ர்க‌ளாய் வாழ்வ‌து எளிதான‌ விஷ‌ய‌ம‌ல்ல‌. மிக‌ப்பெரிய‌ விலையைக் கொடுக்க‌ வேண்டும். த‌ன் உயிரை துச்ச‌மென‌ ம‌திக்க‌ வேண்டும். சூழ‌லுக்குத் த‌க்க‌ப‌டி பேசாம‌ல் க‌ட‌வுள் சொல்வ‌தை ம‌ட்டுமே பேசும் ம‌ன‌ம் வேண்டும். க‌ட‌வுளின் க‌ட்ட‌ளைக‌ளை ஏன் எத‌ற்கு என‌ கேட்காம‌ல் அப்ப‌டியே ஏற்றுச் செய‌ல்ப‌டுத்தும் ம‌ன‌ம் வேண்டும்.

ஓசேயா அப்ப‌டியே செய்தார். அவ‌ருடைய‌ ம‌னைவியோ அவ‌ளோடு இருக்க‌வில்லை. ஒரு க‌ட்ட‌த்தில் அவள் இன்னொரு ஆட‌வ‌னிட‌ம் அடிமையாகவும் ஆனாள். அப்போதும் ஓசேயா அவ‌ளை நேசித்து, அந்த‌ அடிமைத் தொகையைக் கொடுத்து அவ‌ளை மீட்டு வ‌ந்தார். அவ‌ளோடு கூடி வாழ்ந்து பிள்ளைக‌ளையும் பெற்றார்.

அவ‌ள் மீண்டும் வ‌ழி வில‌கி ஓடினாள். மீண்டும் ஓசேயா அவ‌ளை நேசித்தார். இப்போது ஏசாயா புரிந்து கொண்டார். நேசிக்கும் ம‌க்க‌ள் வ‌ழிவில‌கிப் போவ‌த‌ன் துய‌ர‌த்தைப் புரிந்து கொண்டார். க‌ட‌வுளின் ம‌ன‌தைப் புரிந்து கொண்டார். ப‌ணி வாழ்வுக்குத் த‌யாரானார்.

க‌ட‌வுள் ஓசேயா மூல‌மாக‌ச் சொன்ன‌ செய்தி இர‌ண்டே இர‌ண்டு தான். ஒன்று, க‌ட‌வுள் நம்மிடம் எதிர்பார்ப்பது புனித‌மான‌ வாழ்க்கை. இர‌ண்டு, விலகிச் செல்லும் மக்களைத் தேடிச் செல்லும் க‌ட‌வுளின் அன்பு.

“இஸ்ரயேல் கள்ளத்தராசைக் கையில் வைத்திருக்கும் கானானியன் போன்றவன்: அவன் கொடுஞ்செயல் புரியவே விரும்புகின்றான்.” என‌ க‌ட‌வுள் த‌ன‌து ம‌க்க‌ளைக் க‌டிந்து கொள்கிறார்.

அதே நேர‌ம், “அவர்கள் திரும்பிவந்து என் நிழலில் குடியிருப்பார்கள்: கோதுமைபோல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள்.” என கரிசனையும் காட்டுகிறார்.

ஒசேயா க‌ட‌வுளின் குர‌லாக‌ ஒலிக்கிறார். க‌ட‌வுளின் துய‌ர‌த்தின் ஒரு சிறு ப‌குதியை த‌ன‌து வாழ்க்கையின் மூல‌மாக‌ அனுப‌வித்தவர் அவர். எனவே கடவுளின் அன்பையும், துயரத்தையும் மக்களிடம் வெகு நேர்த்தியாக‌க் கொண்டு சென்றார். சாதார‌ண‌ ம‌க்க‌ள் முத‌ல் உய‌ர் ப‌த‌விக‌ளில் இருப்ப‌வ‌ர்க‌ள் வ‌ரை அனைவ‌ருக்கும் ஓசேயாவின் இறைவாக்கு இருந்த‌து.

“எப்ராயிமே! நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரயேலே! உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்?” எனும் க‌ட‌வுளின் துய‌ர‌ம் மிகுந்த‌ அழைப்பு இஸ்ர‌யேல் ம‌க்க‌ளை ம‌ன‌ம் திரும்ப‌ வைத்த‌து.

இன்று இறைம‌க‌ன் இயேசுவின் ம‌ண‌ப்பெண்ணாக‌ நாம் இருக்கிறோம். அவ‌ரையே ப‌ற்றிக் கொண்டு இருக்கிறோமா ? அல்ல‌து நம‌து வாழ்க்கையை  ப‌ண‌ம், புக‌ழ், ப‌த‌வி, சிற்றின்ப‌ம் போன்ற‌ ந‌ப‌ர்க‌ளுக்கு விற்று விடுகிறோமா ?

இறைவனைத் தவிர வேறு எதை வணங்கினாலும் நாம் விபச்சாரத்துக்கு இணையான பாவம் செய்கிறோம். நாம் இன்று இறைவனை வணங்குகிறோமா, பொருளாதாரம், பொழுதுபோக்கு, பகட்டான வாழ்க்கை, கர்வப் புகழ் இவற்றை வணங்குகிறோமா ?

ஓசேயாவின் வாழ்க்கை மூன்று முக்கியமான பாட‌ங்க‌ளைக் க‌ற்றுத்த‌ருகிற‌து.

  1. இறைவனை மட்டுமே எப்போதும் பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
  2. கடவுளின் தண்டனை ஒரு தந்தை மகனுக்கு அளிக்கும் தண்டனை போன்ற ஒன்றே. அவருடைய உள்ளமோ நமது மனமாற்றத்தை எண்ணி ஏங்குகிறது.
  3. இறையழைத்தலுக்குச் செவிகொடுக்க விரும்பினால், யோசியாவைப் போல நாம் உடைபடத் தயாராக இருக்க வேண்டும்.

பைபிள் மாந்தர்கள் 64 (தினத்தந்தி) : சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ

பாபிலோனிய ம‌ன்ன‌ர் நெபுக‌த்நேச‌ரின் முன்னால் குற்ற‌வாளிக‌ளாக‌ நிறுத்த‌ப்ப‌ட்டார்க‌ள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ எனும் மூவ‌ரும். இவ‌ர்க‌ள் யூதா நாட்டைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள். இவ‌ர்க‌ளுடைய‌ இய‌ற்பெய‌ர் அனனியா, மிசாவேல் மற்றும் அசரியா.

பாபிலோனிய ம‌ன்ன‌ன் நெபுக‌த்நேச‌ர் யூதேயாவுக்கு எதிராக‌ப் ப‌டையெடுத்த‌போது அடிமையாக‌ அள்ளி வ‌ர‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் இந்த‌ மூன்று பேரும். இப்போது இவ‌ர்க‌ள் ந‌ல்ல‌ அர‌ச‌ வேலையில் இருக்கிறார்க‌ள்.

குற்ற‌வாளிக‌ளாக‌ நின்றிருந்த‌ மூன்று பேரையும் ம‌ன்ன‌ர் நெபுக‌த்நேச‌ர் பார்த்தார். அவ‌ருடைய‌ முக‌ம் கோப‌த்தில் கொதித்துக் கொண்டிருந்த‌து.

“நான் செய்த‌ பொற்சிலையை நீங்க‌ள் வ‌ண‌ங்க‌வில்லை எனும் குற்ற‌ச்சாட்டு வ‌ந்திருக்கிற‌து. உண்மையா ?” அர‌ச‌னின் குர‌ல் கோப‌த்தில் ஒலித்த‌து.

அவ‌ர்க‌ள் பேசாம‌ல் நின்றிருந்தார்க‌ள்.

” அறுப‌து முழ‌ உய‌ர‌மும், ஆறு முழ‌ அக‌ல‌முமான‌ பொற்சிலை ஒன்றைச் செய்து அதை தூர‌ எனும் ச‌ம‌வெளியில் நிறுத்தி வைத்திருக்கிறேன். அந்த‌ விஷ‌ய‌ம் தெரியுமா ?”

“தெரியும்”

” எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் ‍ என இசைக்கருவிகள் முழங்கத் துவங்கும் வினாடியில் நீங்கள் அதை விழுந்து வணங்க வேண்டுமென்பது தெரியுமா ?”

“தெரியும்”

“அப்ப‌டி வ‌ண‌ங்காம‌ல் போனால் அவ‌ர்க‌ள் குற்ற‌வாளிக‌ளென‌ முடிவு செய்ய‌ப்ப‌ட்டு எரியும் தீயில் எறிய‌ப்ப‌டுவார்க‌ள் என்ப‌து உங்க‌ளுக்குத் தெரியுமா ?”

“தெரியும்”

“நீங்க‌ள் வ‌ண‌ங்கினீர்க‌ளா ?

“இல்லை”

“என‌து க‌ட்ட‌ளையை மீறி, நான் வைத்த‌ சிலையை வ‌ண‌ங்காம‌ல் போன‌த‌ன் கார‌ண‌ம் என்ன‌ ?”

“இஸ்ர‌வேல‌ரின் உண்மை தெய்வ‌த்தைத் த‌விர‌ யாரையும் நாங்க‌ள் வ‌ண‌ங்குவ‌தில்லை”

“உங்க‌ளுக்குக் க‌டைசியாக ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் த‌ருகிறேன். நீங்க‌ள் அர‌ச‌வையில் சிற‌ப்புப் ப‌யிற்சி எடுத்த‌வ‌ர்க‌ள். ந‌ல்ல‌ அறிவாளிக‌ள். என‌வே க‌ருணை அடிப்ப‌டையில் ஒரே ஒரு வாய்ப்பு த‌ருகிறேன். சிலையை வ‌ண‌ங்க‌ த‌யாராய் இருக்கிறீர்க‌ளா ?

“அர‌சே.. உம‌க்கு நாங்க‌ள் ம‌றுமொழி சொல்லத் தேவையில்லை. உம‌து கையினின்று விடுவிக்க‌ எங்க‌ள் ஆண்ட‌வ‌ர் வ‌ல்ல‌வ‌ர்”

நெபுக‌த்நேச‌ரின் கோப‌ம் எல்லையை எட்டிய‌து.

“என்ன‌ தைரிய‌ம் உங்க‌ளுக்கு !! உங்க‌ளை இதோ தீச்சூளையில் எறியப்போகிறேன்” ம‌ன்ன‌ம் கொக்க‌ரித்தான்.

“எங்க‌ளை தீச்சூளையினின்றும் காக்க‌ எங்க‌ள் க‌ட‌வுள் வ‌ல்ல‌வ‌ர்” அவ‌ர்க‌ள் இறைவ‌னின் மீது ந‌ம்பிக்கை வைத்தார்க‌ள், குர‌லில் உறுதி தெறித்த‌து.

“த‌ப்புகிறீர்க‌ளா ? வெப்ப‌த்தில் க‌ருகி சாம்ப‌லாகிறீர்க‌ளா என்ப‌தைப் பார்க்கிறேன்”

“அப்ப‌டியே க‌ட‌வுள் எங்க‌ளை காப்பாற்றாம‌ல் போனால் கூட‌, க‌ட‌வுளைத் த‌விர‌ இன்னொரு சிலையை நாங்க‌ள் வ‌ழிப‌ட‌ மாட்டோம். இது உம‌க்கு தெரிந்திருக்க‌ட்டும் !” அவ‌ர்க‌ள் குர‌லில் உறுதி தெரிந்த‌து.

ம‌ன்ன‌னின் கோப‌ம் இப்போது எல்லையை மீறிய‌து. அவ‌ன் முக‌ம் கோப‌த்தில் கொதித்த‌து.

” யார‌ங்கே…தீச்சூளையை வ‌ழ‌க்க‌த்தை விட ஏழும‌ட‌ங்கு அதிக‌ சூடாக்குங்க‌ள். இவ‌ர்க‌ளைக் க‌ட்டி அந்த‌ தீச்சூளைக்குள் எறியுங்க‌ள்” ம‌ன்ன‌ன் க‌ட்ட‌ளையிட்டான்.

சூளை சூடேற்ற‌ப்ப‌ட்ட‌து.

வ‌லிமையான‌ சில‌ர் வ‌ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆப‌த்நேகோ ஆகியோரை அவ‌ர்க‌ளுடைய‌ ஆடை, த‌லைப்பாகை எல்லாவ‌ற்றோடும் சேர்த்துக் க‌ட்டி தீச்சூளைக்குக் கொண்டு சென்றார்க‌ள்.

அருகே சென்று அவ‌ர்க‌ளை தீச்சூளைக்குள் எறிந்த‌னர். நெருப்பின் சுவாலை மிக‌ அதிக‌மாக‌ இருந்த‌தால், அவ‌ர்க‌ளைத் தீச்சூளைக்குள் எறிந்த‌வ‌ர்க‌ள் அந்த‌ வெப்ப‌த்தின் அன‌லிலேயே சுருண்டு விழுந்து செத்த‌ன‌ர்.

க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ நிலையில் மூன்று பேரும் நெருப்புக்குள் விழுந்த‌ன‌ர்.

அர‌ச‌ன் இதைப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென‌ திகைப்புற்ற‌வ‌னாய் அருகில் இருந்த‌ அமைச்ச‌ரை நோக்கினான்.

“மூன்று பேரைத் தானே தீச்சூளையில் போட்டோம் ? உள்ளே நான்கு பேர் தெரிகிறார்கள் ஒருவர் தேவமகனைப் போல இருக்கிறார். அவ‌ர்க‌ள் க‌ட்ட‌விழ்ந்த‌ நிலையில் உல‌விக் கொண்டிருக்கிறார்க‌ள். நெருப்பு அவ‌ர்க‌ளை எதுவும் செய்ய‌வில்லையே” என்றான்.

நெபுக‌த்நேச‌ர் எழுந்தான், தீச்சூளையை நெருங்கினான்.

” உன்னதக் கடவுளின் ஊழியர்களாகிய சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! வெளியே வாருங்கள்” என்றான்.

அவ‌ர்க‌ள் வெளியே வ‌ந்தார்க‌ள். அங்கே அர‌ச‌ அலுவ‌ல‌ர்க‌ள் எல்லோரும் கூடி இருந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் நெருப்பிலிருந்து எந்த‌ வித‌மான‌ ஆப‌த்தும் இல்லாம‌ல் வெளியே வ‌ந்த‌ன‌ர். நெருப்பின் வாச‌னை கூட‌ அவ‌ர்க‌ளிட‌ம் இல்லை. ஒரு சிறு துளிய‌ள‌வு தீக்காய‌மும் அவ‌ர்க‌ளிட‌ம் இல்லை.

எல்லோரும் அதிர்ச்சியுடன் இந்த‌ நிக‌ழ்ச்சியைப் பார்த்துக் கொண்டே இருந்த‌ன‌ர்.

நெபுக‌த்நேச‌ர் அதிர்ச்சியில் உறைந்தான். உட‌னே புதிய‌ ஆணைக‌ளைப் பிற‌ப்பித்தான்.

“த‌ங்க‌ள் க‌ட‌வுளைத் த‌விர‌ வேறெந்த‌ க‌ட‌வுளையும் தொழ‌மாட்டோம் என‌ உறுதியாய் இருந்த‌வ‌ரை க‌ட‌வுள் தூத‌ரை அனுப்பி காப்பாற்றியிருக்கிறார். இனி இவ‌ர்க‌ளுடைய‌ க‌ட‌வுளுக்கு எதிராய் ப‌ழிச்சொல் கூறுப‌வனையும், அவன் வீட்டையும் அழிப்பேன். ” ம‌ன்ன‌னின் குர‌ல் அச்ச‌த்திலும், பிரமிப்பிலும் வெளிவ‌ந்த‌து.

சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ எனும் முன்று நபர்களின் விசுவாசம் அவர்களையும் காப்பாற்றி, தேசம் முழுமைக்கும் இறைவனைப் பற்றிய செய்தியையும் பரப்பியது. ஆழமான‌ விசுவாச‌ம் கொள்ள‌ இந்த‌ நிக‌ழ்வு ந‌மக்கு அழைப்பு விடுக்கிற‌து.

பைபிள் கதைகள் 63 (தினத்தந்தி) தானியேல்

யூதா நாட்டின் மீது படையெடுத்து சென்ற பாபிலோனிய மன்னன் நெபுகத்நேசர்  புனித நகரான‌ எருசலேமைக் கைப்பற்றி கோயிலைக் கொள்ளையடித்தான். அழகும், அறிவும் நிறைந்த, உயர் குலத்தைச் சேர்ந்த சிலரை அடிமைகளாய் கொண்டு சென்றான்.

அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் கல்தேய மொழி உட்பட பலவற்றில் பயிற்சி அளிக்கப்பட்டது.  தானியேல் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் பயிற்சி முடித்து அரச பணியில் இணைந்தனர். அவ‌ர்க‌ள் வெறும் காய்க‌றி உண‌வை உண்டு வ‌ந்த‌ன‌ர்.

ஒரு நாள் ம‌ன்ன‌ன் ஒரு க‌ன‌வு க‌ண்டான். அத‌ன் விள‌க்க‌த்தைக் கூற‌ யாராலும் முடிய‌வில்லை. என‌வே ம‌ன்ன‌ன் க‌டும் கோப‌ம் கொண்டு நாட்டிலுள்ள‌ அத்த‌னை ஞானிக‌ள், ம‌ந்திர‌வாதிக‌ள், மாய‌க்கார‌ர்க‌ள் எல்லோரையும் கொன்று விடுமாறு க‌ட்ட‌ளையிட்டான். தானியேலோ ம‌ன்ன‌ரிட‌ம் சென்று கனவின் பயனைக் கூற சில நாட்கள் அவகாசம் கேட்டுப் பெற்றார்.

வீட்டுக்குச் சென்று ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விஷ‌ய‌த்தைச் சொன்னார் தானியேல். நான்கு பேருமாய்ச் சேர்ந்து க‌ட‌வுளிட‌ம் ம‌ன்றாடினார்க‌ள். க‌ட‌வுள் தானியேலுக்கு அந்த‌க் க‌ன‌வின் விள‌க்க‌த்தைக் காட்சி ஒன்றில் வெளிப்ப‌டுத்தினார்.

தானியேல் ம‌ன்ன‌ரிட‌ம் சென்றார்.

“ம‌ன்ன‌ரே உங்க‌ள் க‌ன‌வின் விள‌க்க‌த்தை நான் சொல்ல‌ வ‌ந்திருக்கிறேன்”

“நீ பொய் சொல்ல‌வில்லை என்ப‌தை எப்ப‌டி ந‌ம்புவ‌து ?”

“நீங்க‌ள் க‌ண்ட‌ க‌ன‌வையும் நானே சொல்கிறேன். அப்போது நீங்க‌ள் ந‌ம்புவீர்க‌ள்”

ம‌ன்ன‌ன் ஒத்துக் கொண்டார்.

“ம‌ன்ன‌ரே. நீங்க‌ள் க‌ண்ட‌ க‌ன‌வு ஒரு மிக‌ப்பெரிய‌ சிலை. பொன், வெள்ளி, வெண்க‌ல‌ம், இரும்பு, ம‌ற்றும் ஒரு ப‌குதி ம‌ண்ணினால் ஆன‌ சிலை அது. அதை ஒரு பெரிய‌ க‌ல் மோதி தூள் தூளாக்கி விட்ட‌து. மோதிய‌ க‌ல்லோ வ‌ள‌ர்ந்து உல‌கை நிறைத்த‌து.” இது தானே க‌ன‌வு ? தானியேல் கேட்க‌, ம‌ன்ன‌ன் பிர‌மித்துப் போய் த‌லைய‌சைத்தான்.

தானியேல் அத‌ன் விள‌க்க‌த்தைச் சொன்னார். அது அந்த‌ நாட்டின் நிக‌ழ‌ இருக்கின்ற‌ ஆட்சிக‌ளையும், அத‌ன் மாற்ற‌ங்க‌ளையும், எதிர்கால‌த்தையும் குறித்து பேசினார்து. நெபுக‌த்நேச‌ர் தானியேலின் விள‌க்க‌த்தால் நிறைவ‌டைந்து அவ‌ரை பெரிய‌ ப‌த‌வியில் வைத்தான்.

இன்னொரு க‌ன‌விலே வானுய‌ர்ந்த‌ ம‌ர‌ம் ஒன்று வெட்டி வீழ்த்த‌ப்ப‌டுவ‌தையும், அடிம‌ர‌ம் வெட்ட‌ப்ப‌டாம‌ல் இருப்ப‌தையும், ம‌னித‌ன் ஏழு ஆண்டுக‌ள் துய‌ருறுவ‌தையும் ம‌ன்ன‌ர் க‌ண்டார். வ‌ழ‌க்க‌ம் போல‌வே வேறு யாராலும் இத‌ன் ப‌திலைச் சொல்ல‌ முடிய‌வில்லை. தானியேல் சொன்னார்

“இது உம‌து வீழ்ச்சியைக் குறிக்கிற‌து. உம‌து அர‌சு அழியும். ஏழு ஆண்டுக‌ள் நாட்டை விட்டு காட்டுக்குப் போய் துய‌ருறுவீர். ஆயினும் க‌ட‌வுளை நீர் வேண்டினால் மீண்டும் ஆட்சிய‌மைப்பீர்”. தானியேல் சொன்ன‌து அப்ப‌டியே நிறைவேறிற்று.

நெபுக‌த்நேச‌ருக்குப் பின் அவ‌ர‌து ம‌க‌ன் பெல்சாட்ச‌ர் ஆட்சியில் ஏறினார். அவ‌ர் ஒரு அர‌ச‌ குல‌ உய‌ர் விருந்து வைத்துக் கொண்டிருந்த‌போது திடீரென‌ ஒரு கை தோன்றி சுவ‌ரில் “மேனே மேனே, தேகேல், பார்சின்” என்று எழுதிய‌து. இப்போதும் விளக்கம் சொல்ல முடியாமல் எல்லோரும் தோற்றுப் போக‌, தானியேல் அழைக்க‌ப்ப‌ட்டார். தானியேல் சொன்னார்.

“உம் த‌ந்தைக்கு நேர்ந்த‌தையெல்லாம் அறிந்திருந்தும் நீர் க‌ட‌வுளுக்கு எதிராய் ந‌ட‌ந்த‌தால் அழிக்க‌ப்ப‌டுவீர்” என்ப‌தே பொருள். பெல்சாட்ச‌ர் உட‌னே தானியேலை அர‌சின் மூன்றாம் நிலைக்கு உய‌ர்த்தினார். அன்று இர‌வே தானியேலின் கூற்றுப் ப‌டி ம‌ன்ன‌ர் கொலை செய்ய‌ப்ப‌ட்டார்.

தாரியு ம‌ன்ன‌ன் இப்போது ஆட்சிக்கு வ‌ந்தான். அவ‌னிட‌மும் தானியேல் மிக‌ப்பெரிய‌ ம‌ரியாதையைப் பெற்றார். ம‌ன்ன‌ரின் பிரிய‌த்துக்குரிய‌வ‌ர் ஆனார். இத‌னால் ம‌ற்ற‌ ஊழிய‌ர்க‌ளுக்குப் பொறாமை. ம‌ன்ன‌ரிட‌ம் சென்று “இன்னும் முப்ப‌து நாட்க‌ளுக்கு வேறெந்த‌ தெய்வ‌த்தையும் வ‌ண‌ங்க‌க் கூடாது, அப்ப‌டி வ‌ண‌ங்குவோர் சிங்க‌க் குகையில் த‌ள்ள‌ப்ப‌டுவ‌ர்” என‌ ஆணை பிற‌ப்பிக்க‌ச் செய்த‌ன‌ர்.

தானியேல் ஆணையைப் பொருட்ப‌டுத்த‌வில்லை. இஸ்ர‌யேல‌ரின் க‌ட‌வுளை தின‌மும் மூன்று முறை தொழுதார். இத‌ற்காக‌வே காத்திருந்த‌வ‌ர்க‌ள் அவ‌ரை இழுத்துக் கொண்டு ம‌ன்ன‌ரிட‌ம் சென்றார்க‌ள். சிங்க‌க் குகையில் த‌ள்ள‌ அனும‌தி கேட்டார்க‌ள். ம‌ன்ன‌ன் வ‌ருந்தினார். ஆனாலும் த‌ன‌து ஆணையை திரும்ப‌ப் பெற முடியாத‌ சூழ‌ல். க‌வ‌லையுட‌ன் ம‌ன்ன‌ன் ஒத்துக் கொண்டான்.

“உன் ஆண்ட‌வ‌ர் உன்னை விடுவிப்பாராக‌” என்று ம‌ன்ன‌ன் சொன்னார். சிங்க‌க் குகையில் தானியேல் த‌ள்ள‌ப்ப‌ட்டார். ம‌ன்ன‌ர் அன்றிர‌வு முழுதும் தூங்க‌வேயில்லை, க‌ல‌க்க‌மாய் இருந்தார். ம‌றுநாள் அதிகாலையிலேயே குகைக்கு ஓடிவ‌ந்தார்.

“தானியேலே.. க‌ட‌வுள் உன்னை விடுவித்தாரா?” உடைந்த‌ குர‌லில் ப‌த‌ட்ட‌த்துட‌ன் கேட்டார் ம‌ன்ன‌ர்.

“அர‌ச‌ரே நீர் வாழ்க‌. க‌ட‌வுள் தூத‌ர்க‌ளை அனுப்பி சிங்க‌ங்க‌ளின் வாயைக் க‌ட்டிப் போட்டார்” தானியேல் சொன்னார். ம‌ன்ன‌ர் ம‌கிழ்ந்தார். இனிமேல் எல்லோரும் தானியேலின் க‌ட‌வுளை வ‌ழிப‌ட‌ வேண்டும் என‌ க‌ட்ட‌ளையிட்டார்.

ஒரு தேவ‌ ம‌னித‌னின் வாழ்க்கை ஒரு தேச‌த்தையே உண்மைக் க‌ட‌வுளின் பால் திருப்பிய‌து. அத்த‌கைய‌ ஒரு வாழ்க்கையை நாட‌ தானியேலின் வாழ்க்கை ந‌ம‌க்கு ஊக்க‌ம‌ளிக்க‌ட்டும்

பைபிள் கதைகள் 62 (தினத்தந்தி) : எசேக்கியேல்

“பாவம் செய்பவரே சாவர். பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். நீதிமானின் நீதி அவன்மீது இருக்கும். பொல்லானின் பொல்லாங்கு அவன்மீது இருக்கும்” எசேக்கியேல் 18: 20

இறைவாக்கினர்களில் மிகவும் முக்கியமானவர் எசேக்கியேல். எசேக்கியேல் என்றால், “ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்” என்பது பொருள். கடவுள் அருளிய ஞானத்தினால் எசேக்கியேல் உரைத்த தீர்க்கத் தரிசனங்களும், கண்ட காட்சிகளும் வாளின் கூர்மையுடன் சீறிப்பாய்ந்தன. ஆலயங்களின் தூய்மை, இதயத்தின் தூய்மை, மனம் திரும்புதலின் தேவை, கடின மனதின் விளைவு என பல செய்திகள் இவரிடமிருந்து இறைவாக்காய் வெளிவந்தன.

தனது முப்பதாவது வயதில் குருவாக பயிற்சி பெற்றவர் எசேக்கியேல்., இறைவனின் அழைப்பினால் தீர்க்கத் தரிசியாக உருமாறுகிறார். கிமு 593 முதல் கிமு 571 வரை இவர் இறைவாக்கு உரைத்திருக்கிறார் என்கிறது வரலாறு.

எசேக்கியேல் தனது தீர்க்கத்தரிசன வாழ்க்கையின் துவக்கத்திலேயே விண்ணகத்தையும், கடவுளின் மாட்சியையும் காட்சியாய்க் கண்டார். கடவுள் அவரை இஸ்ரவேல் மக்களிடையே இறைவாக்கு உரைக்க அனுப்பினார். ஒரு  ஏட்டுச் சுருளை எசேக்கியேலிடம் கொடுத்து கடவுள் சாப்பிடச் சொன்னார். அதை அவர் உண்டார். இறைவனின் வார்த்தையை உள்வாங்கி, ஜீரணித்து, அதை நாவால் பிரகடனம் செய்வதையே இது குறிப்பிடுகிறது.

வழிவிலகிப் போன இஸ்ரயேல் மக்களை மீண்டும் தன்னிடம் கொண்டு வரவேண்டும் எனும் பேராவல் கடவுளிடம் இருப்பதை இவரது வார்த்தைகள் நெகிழ்ச்சியோடு பதிவு செய்கின்றன.

இன்னொரு முறை இஸ்ர‌வேலுக்கு எதிரான‌ இறைவாக்குக்காக‌ வித்தியாச‌மான‌ ஒரு க‌ட்ட‌ளையைக் க‌ட‌வுள் கொடுக்கிறார்.

“மழிக்கும் கத்தியைப் போன்று கருக்கலான ஒரு வாளை எடுத்து, அதைக்கொண்டு உன் தலையையும் தாடியையும் மழித்துக்கொள். ஒரு தராசை எடுத்து அந்த முடியைப் பங்கிடு. அதில் மூன்றிலொரு பங்கை  நகரின் நடுவில் நெருப்பினால் சுட்டெரி: மூன்றிலொரு பங்கை நகரைச் சுற்றிலும் வாளால் வெட்டிப்போடு: மூன்றில் ஒரு பங்கைக் காற்றில் தூற்றிவிடு. ஏனெனில் நான் அவர்களை உருவிய வாளுடன் பின்தொடர்வேன். அதில் கொஞ்சம் நீ எடுத்து உன் ஆடையின் முனைகளில் முடிந்து வை. பிறகு அதில் இன்னும் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயிலிட்டுச் சுட்டெரி. அதனினின்று இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் எதிராகத் தீ புறப்படும்.” என்றார் க‌ட‌வுள்.

இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் க‌ட‌வுளின் வ‌ழியை விட்டு வில‌கி, சிலை வ‌ழிபாடு, அருவ‌ருப்பான‌ ந‌ட‌த்தை என‌ திரிந்த‌தால் க‌ட‌வுள் இப்ப‌டி எச்ச‌ரிக்கை விடுக்கிறார்.

“நெருப்புப் போன்ற ஒருவரின் சாயலைக் கண்டேன். அவரது இடைக்குக் கீழ்ப்புறம் நெருப்புப் போன்றும், அவரது இடைக்கு மேற்புறம் பளபளக்கும் வெண்கலம் போன்றும் ஒளிர்வதைக் கண்டேன். அவர் கைபோன்று தெரிந்த ஒன்றை நீட்டி என் தலை முடியைப் பிடித்தார்.” என தொடங்கி ஒரு காட்சியை எசேக்கியேல் விவரிக்கிறார். க‌ட‌வுளின் ம‌க்க‌ளிடையே ப‌லுகியிருக்கும் சிலை வ‌ழிபாட்டைக் க‌ட‌வுள் எசேக்கியேலுக்கு இப்ப‌டி காண்பிக்கிறார்.

இன்னொரு காட்சி மிக‌வும் சுவார‌ஸ்ய‌மான‌து.

“ஆண்டவர் எசேக்கியேலைத் தூக்கிக் கொண்டு போய்ப் பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தினார். அங்கே எலும்புகள் மிகுதியாய்க் கிடந்தன.அவை மிகவும் உலர்ந்தவையாய் இருந்தன.

” மானிடா! இந்த எலும்புகள் உயிர்பெறமுடியுமா? ”

” ஆண்டவரே! உமக்குத் தெரியுமே”

“நீ இந்த எலும்புகளுக்கு இறைவாக்குரை. உலர்ந்த எலும்புகளே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். நான் உங்களுக்குள் உயிர்மூச்சு புகச் செய்வேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். அப்போது நானே ஆண்டவர் என அறிந்து கொள்வீர்கள்.” கடவுள் சொல்ல, எசேக்கியேல் அப்படியே செய்தார்.

அப்போது எலும்புகள் உராயும் ஓசை கேட்டது. ஒவ்வொரு எலும்பும் தனக்குரிய எலும்புகளுடன் சேர்ந்து கொண்டது.அவற்றில் நரம்புகள் ஏற்பட்டு, சதை தோன்றித் தோல் அவற்றின்மேல் மூடியது. எசேக்கியேல் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

“உயிர்மூச்சுக்கு இறைவாக்குரை. நான்கு காற்றுகளிலிருந்தும் உயிர்மூச்சே வா, நீ வந்து கொலையுண்ட இவர்களுக்குள் புகு. அப்பொழுது இவர்கள் உயிர் பெறுவர். என சொல் ” கடவுள் சொன்னார். எசேக்கியேல் அப்படியே செய்தார். அப்போது அந்த எலும்புக் கூடுகளின் கூட்டம் மாபெரும் படைத்திரள் போல உயிர் பெற்று, காலூன்றி நின்றன.

இந்த காட்சி இஸ்ரயேல் மக்களைக் குறிக்கும். அவர்கள் எலும்புகளாகிப் போனார்கள். நாங்கள் உலர்ந்து விட்டோம், நம்பிக்கை இழந்தோம் என்கின்றனர். கல்லறைகளிலில் இருந்தும் வாழ்வைக் கொடுக்கவும், இழந்த அவர்கள் நாட்டைக் கொடுக்கவும் என்னால் இயலும். என்றார் கடவுள்.

“தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் வார்த்தைகளுள் எதுவும் இனிமேல் காலந்தாழ்த்தாது. நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்” இன்றைய சூழலில், நாம் நமது பாவ‌ வ‌ழிக‌ளை விட்டு வில‌கி இறைவ‌னிட‌ம் திரும்ப‌ வேண்டும் என்ப‌தையே எசேக்கியேலின் வாழ்க்கையும், வார்த்தைக‌ளும் போதிக்கின்ற‌ன‌.