பாபிலோனிய மன்னர் நெபுகத்நேசரின் முன்னால் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டார்கள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ எனும் மூவரும். இவர்கள் யூதா நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய இயற்பெயர் அனனியா, மிசாவேல் மற்றும் அசரியா.
பாபிலோனிய மன்னன் நெபுகத்நேசர் யூதேயாவுக்கு எதிராகப் படையெடுத்தபோது அடிமையாக அள்ளி வரப்பட்டவர்கள் தான் இந்த மூன்று பேரும். இப்போது இவர்கள் நல்ல அரச வேலையில் இருக்கிறார்கள்.
குற்றவாளிகளாக நின்றிருந்த மூன்று பேரையும் மன்னர் நெபுகத்நேசர் பார்த்தார். அவருடைய முகம் கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.
“நான் செய்த பொற்சிலையை நீங்கள் வணங்கவில்லை எனும் குற்றச்சாட்டு வந்திருக்கிறது. உண்மையா ?” அரசனின் குரல் கோபத்தில் ஒலித்தது.
அவர்கள் பேசாமல் நின்றிருந்தார்கள்.
” அறுபது முழ உயரமும், ஆறு முழ அகலமுமான பொற்சிலை ஒன்றைச் செய்து அதை தூர எனும் சமவெளியில் நிறுத்தி வைத்திருக்கிறேன். அந்த விஷயம் தெரியுமா ?”
“தெரியும்”
” எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் என இசைக்கருவிகள் முழங்கத் துவங்கும் வினாடியில் நீங்கள் அதை விழுந்து வணங்க வேண்டுமென்பது தெரியுமா ?”
“தெரியும்”
“அப்படி வணங்காமல் போனால் அவர்கள் குற்றவாளிகளென முடிவு செய்யப்பட்டு எரியும் தீயில் எறியப்படுவார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?”
“தெரியும்”
“நீங்கள் வணங்கினீர்களா ?
“இல்லை”
“எனது கட்டளையை மீறி, நான் வைத்த சிலையை வணங்காமல் போனதன் காரணம் என்ன ?”
“இஸ்ரவேலரின் உண்மை தெய்வத்தைத் தவிர யாரையும் நாங்கள் வணங்குவதில்லை”
“உங்களுக்குக் கடைசியாக ஒரு சந்தர்ப்பம் தருகிறேன். நீங்கள் அரசவையில் சிறப்புப் பயிற்சி எடுத்தவர்கள். நல்ல அறிவாளிகள். எனவே கருணை அடிப்படையில் ஒரே ஒரு வாய்ப்பு தருகிறேன். சிலையை வணங்க தயாராய் இருக்கிறீர்களா ?
“அரசே.. உமக்கு நாங்கள் மறுமொழி சொல்லத் தேவையில்லை. உமது கையினின்று விடுவிக்க எங்கள் ஆண்டவர் வல்லவர்”
நெபுகத்நேசரின் கோபம் எல்லையை எட்டியது.
“என்ன தைரியம் உங்களுக்கு !! உங்களை இதோ தீச்சூளையில் எறியப்போகிறேன்” மன்னம் கொக்கரித்தான்.
“எங்களை தீச்சூளையினின்றும் காக்க எங்கள் கடவுள் வல்லவர்” அவர்கள் இறைவனின் மீது நம்பிக்கை வைத்தார்கள், குரலில் உறுதி தெறித்தது.
“தப்புகிறீர்களா ? வெப்பத்தில் கருகி சாம்பலாகிறீர்களா என்பதைப் பார்க்கிறேன்”
“அப்படியே கடவுள் எங்களை காப்பாற்றாமல் போனால் கூட, கடவுளைத் தவிர இன்னொரு சிலையை நாங்கள் வழிபட மாட்டோம். இது உமக்கு தெரிந்திருக்கட்டும் !” அவர்கள் குரலில் உறுதி தெரிந்தது.
மன்னனின் கோபம் இப்போது எல்லையை மீறியது. அவன் முகம் கோபத்தில் கொதித்தது.
” யாரங்கே…தீச்சூளையை வழக்கத்தை விட ஏழுமடங்கு அதிக சூடாக்குங்கள். இவர்களைக் கட்டி அந்த தீச்சூளைக்குள் எறியுங்கள்” மன்னன் கட்டளையிட்டான்.
சூளை சூடேற்றப்பட்டது.
வலிமையான சிலர் வந்தார்கள். அவர்கள் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபத்நேகோ ஆகியோரை அவர்களுடைய ஆடை, தலைப்பாகை எல்லாவற்றோடும் சேர்த்துக் கட்டி தீச்சூளைக்குக் கொண்டு சென்றார்கள்.
அருகே சென்று அவர்களை தீச்சூளைக்குள் எறிந்தனர். நெருப்பின் சுவாலை மிக அதிகமாக இருந்ததால், அவர்களைத் தீச்சூளைக்குள் எறிந்தவர்கள் அந்த வெப்பத்தின் அனலிலேயே சுருண்டு விழுந்து செத்தனர்.
கட்டப்பட்ட நிலையில் மூன்று பேரும் நெருப்புக்குள் விழுந்தனர்.
அரசன் இதைப் பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென திகைப்புற்றவனாய் அருகில் இருந்த அமைச்சரை நோக்கினான்.
“மூன்று பேரைத் தானே தீச்சூளையில் போட்டோம் ? உள்ளே நான்கு பேர் தெரிகிறார்கள் ஒருவர் தேவமகனைப் போல இருக்கிறார். அவர்கள் கட்டவிழ்ந்த நிலையில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். நெருப்பு அவர்களை எதுவும் செய்யவில்லையே” என்றான்.
நெபுகத்நேசர் எழுந்தான், தீச்சூளையை நெருங்கினான்.
” உன்னதக் கடவுளின் ஊழியர்களாகிய சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! வெளியே வாருங்கள்” என்றான்.
அவர்கள் வெளியே வந்தார்கள். அங்கே அரச அலுவலர்கள் எல்லோரும் கூடி இருந்தார்கள். அவர்கள் நெருப்பிலிருந்து எந்த விதமான ஆபத்தும் இல்லாமல் வெளியே வந்தனர். நெருப்பின் வாசனை கூட அவர்களிடம் இல்லை. ஒரு சிறு துளியளவு தீக்காயமும் அவர்களிடம் இல்லை.
எல்லோரும் அதிர்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டே இருந்தனர்.
நெபுகத்நேசர் அதிர்ச்சியில் உறைந்தான். உடனே புதிய ஆணைகளைப் பிறப்பித்தான்.
“தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த கடவுளையும் தொழமாட்டோம் என உறுதியாய் இருந்தவரை கடவுள் தூதரை அனுப்பி காப்பாற்றியிருக்கிறார். இனி இவர்களுடைய கடவுளுக்கு எதிராய் பழிச்சொல் கூறுபவனையும், அவன் வீட்டையும் அழிப்பேன். ” மன்னனின் குரல் அச்சத்திலும், பிரமிப்பிலும் வெளிவந்தது.
சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ எனும் முன்று நபர்களின் விசுவாசம் அவர்களையும் காப்பாற்றி, தேசம் முழுமைக்கும் இறைவனைப் பற்றிய செய்தியையும் பரப்பியது. ஆழமான விசுவாசம் கொள்ள இந்த நிகழ்வு நமக்கு அழைப்பு விடுக்கிறது.
ஃ