நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்” ஓசேயா 6 :6
இஸ்ரவேலில் வாழ்ந்த இறைவாக்கினர்களில் ஒருவர் ஓசேயா. ஒசேயா என்றால் கடவுளே மீட்பர் என்று பொருள். இவருடைய காலம் கி.மு 722 க்கு முந்தையது என்கிறது வரலாறு. ஓசேயாவை இறைவன் பயன்படுத்திய விதம் வியப்பூட்டுகிறது.
ஓசேயாவிடம் முதன் முதலாகக் கடவுள் பேசுகிறார்.
“ஓசேயா” ஆண்டவரின் குரல் ஒலிக்க ஒசேயா செவிமடுக்கத் தயாராகிறார்.
“நீ போய், ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள். அந்தப் பெண் ஒரு விலைமகளாய் இருக்கட்டும். முறைதவறிய பிள்ளைகளைப் பெற்றெடு” என்றார். அவர் கடவுளின் கட்டளைப்படி, ‘கோமேர்’ எனும் பெண்ணைத் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.
நம்பிக்கைக்கு உரியவள் அல்லாத ஒரு மனைவியோடு வாழ்வது எத்துணை துயரமானது. தன் அன்பை விட்டு விலகி வேறு திசைகளில் மனதை அலையவிடும் ஒரு மனைவியோடு வாழ்வது மிகப்பெரிய சாபம். நிம்மதியை இழந்து, மன உளைச்சலிலும், வேதனையிலும் வாழும் அனுபவம் அது. அவளை விலக்கி விடவும் முடியாது. ஏனென்றால் “அவளை நீ தொடர்ந்து அன்பு செய்” என்பதே ஓசேயாவுக்கு கடவுள் கொடுத்த கட்டளை.
இஸ்ரயேல் மக்களைக் கடவுள் எவ்வளவு தான் அன்பு செய்தாலும் அவர்கள் தொடர்ந்து வேறு தெய்வங்களை நாடியே ஓடினார்கள். வேறு ஆடவர்களைத் தேடிச் செல்லும் விலை மாதைப் போல. அந்த வலி கடவுளுக்கு மிகப்பெரிய துயரத்தைக் கொடுத்தது. அது எத்தகைய துயரம் என்பதை வார்த்தைகள் எளிதில் விளக்கி விட முடியாது. அந்த வலியின் ஆழம் எத்துணை கடுமையானது என்பதை ஓசேயா அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கடவுள் ஓசேயாவுக்கு இப்படி ஒரு வாழ்க்கையைக் கொடுக்கிறார்.
இறைவாக்கினர்களாய் வாழ்வது எளிதான விஷயமல்ல. மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டும். தன் உயிரை துச்சமென மதிக்க வேண்டும். சூழலுக்குத் தக்கபடி பேசாமல் கடவுள் சொல்வதை மட்டுமே பேசும் மனம் வேண்டும். கடவுளின் கட்டளைகளை ஏன் எதற்கு என கேட்காமல் அப்படியே ஏற்றுச் செயல்படுத்தும் மனம் வேண்டும்.
ஓசேயா அப்படியே செய்தார். அவருடைய மனைவியோ அவளோடு இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவள் இன்னொரு ஆடவனிடம் அடிமையாகவும் ஆனாள். அப்போதும் ஓசேயா அவளை நேசித்து, அந்த அடிமைத் தொகையைக் கொடுத்து அவளை மீட்டு வந்தார். அவளோடு கூடி வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்றார்.
அவள் மீண்டும் வழி விலகி ஓடினாள். மீண்டும் ஓசேயா அவளை நேசித்தார். இப்போது ஏசாயா புரிந்து கொண்டார். நேசிக்கும் மக்கள் வழிவிலகிப் போவதன் துயரத்தைப் புரிந்து கொண்டார். கடவுளின் மனதைப் புரிந்து கொண்டார். பணி வாழ்வுக்குத் தயாரானார்.
கடவுள் ஓசேயா மூலமாகச் சொன்ன செய்தி இரண்டே இரண்டு தான். ஒன்று, கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது புனிதமான வாழ்க்கை. இரண்டு, விலகிச் செல்லும் மக்களைத் தேடிச் செல்லும் கடவுளின் அன்பு.
“இஸ்ரயேல் கள்ளத்தராசைக் கையில் வைத்திருக்கும் கானானியன் போன்றவன்: அவன் கொடுஞ்செயல் புரியவே விரும்புகின்றான்.” என கடவுள் தனது மக்களைக் கடிந்து கொள்கிறார்.
அதே நேரம், “அவர்கள் திரும்பிவந்து என் நிழலில் குடியிருப்பார்கள்: கோதுமைபோல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள்.” என கரிசனையும் காட்டுகிறார்.
ஒசேயா கடவுளின் குரலாக ஒலிக்கிறார். கடவுளின் துயரத்தின் ஒரு சிறு பகுதியை தனது வாழ்க்கையின் மூலமாக அனுபவித்தவர் அவர். எனவே கடவுளின் அன்பையும், துயரத்தையும் மக்களிடம் வெகு நேர்த்தியாகக் கொண்டு சென்றார். சாதாரண மக்கள் முதல் உயர் பதவிகளில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் ஓசேயாவின் இறைவாக்கு இருந்தது.
“எப்ராயிமே! நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரயேலே! உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்?” எனும் கடவுளின் துயரம் மிகுந்த அழைப்பு இஸ்ரயேல் மக்களை மனம் திரும்ப வைத்தது.
இன்று இறைமகன் இயேசுவின் மணப்பெண்ணாக நாம் இருக்கிறோம். அவரையே பற்றிக் கொண்டு இருக்கிறோமா ? அல்லது நமது வாழ்க்கையை பணம், புகழ், பதவி, சிற்றின்பம் போன்ற நபர்களுக்கு விற்று விடுகிறோமா ?
இறைவனைத் தவிர வேறு எதை வணங்கினாலும் நாம் விபச்சாரத்துக்கு இணையான பாவம் செய்கிறோம். நாம் இன்று இறைவனை வணங்குகிறோமா, பொருளாதாரம், பொழுதுபோக்கு, பகட்டான வாழ்க்கை, கர்வப் புகழ் இவற்றை வணங்குகிறோமா ?
ஓசேயாவின் வாழ்க்கை மூன்று முக்கியமான பாடங்களைக் கற்றுத்தருகிறது.
- இறைவனை மட்டுமே எப்போதும் பற்றிக் கொண்டிருக்க வேண்டும்.
- கடவுளின் தண்டனை ஒரு தந்தை மகனுக்கு அளிக்கும் தண்டனை போன்ற ஒன்றே. அவருடைய உள்ளமோ நமது மனமாற்றத்தை எண்ணி ஏங்குகிறது.
- இறையழைத்தலுக்குச் செவிகொடுக்க விரும்பினால், யோசியாவைப் போல நாம் உடைபடத் தயாராக இருக்க வேண்டும்.
ஃ