பைபிள் மாந்தர்கள் 68 (தினத்தந்தி) ஆமோஸ்

ஆமோஸ் இறைவாக்கினர் கி.மு எண்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் இறைவனின் வார்த்தைகளை மக்களுக்கு எடுத்துச் சொன்ன ஒரு தீர்க்கத்தரிசி. யூதா நாட்டில் பிறந்து வளர்ந்தவர். எருசலேமிற்குத் தெற்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது இவர் வாழ்ந்த தெக்கோவா எனும் ஊர். ஆட்டுமந்தைக்கு உரிமையாளராகவும், காட்டு அத்தி மரத் தோட்டம் பயிரிடுபவராகவும் இருந்தார்.

ஆமோஸ் மிகுந்த செல்வம் உடையவர். ஆமோஸ் என்பதற்கு ‘சுமை  சுமப்பவர்’என்று அர்த்தம். வளமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவருக்கு இறைவனின் வார்த்தை காட்சியாய் வந்தது. இஸ்ரயேல் நாட்டைப்பற்றி கடவுள் தனக்குச் சொன்னவற்றை ஆமோஸ் இறைவாக்கினர் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார். நீதியும் நேர்மையும் குறித்து இவர் அதிகம் பேசியதால், நீதியின் இறைவாக்கினர் என அழைக்கப்படுகிறார்.

தமஸ்கு, பெலிஸ்தியா, தீர், ஏதோம், அம்மோனியர், மோவாபு என பிற நாடுகளின் மீது எச்சரிக்கையும், இறைவனின் கோபத்தையும் பற்றி ஆமோஸ் இறைவாக்கு உரைத்தார். அப்போது கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்கள் கூட்டமான யூதாவும், இஸ்ரயேலும் உற்சாகமாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் பின்னர் கடவுளின் வார்த்தைகள் அவர்களுக்கு எதிராகவே வந்தபோது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

“யூதா க‌ட‌வுளின் க‌ட்ட‌ளைக‌ளை விட்டு வில‌கி ந‌ட‌க்கிற‌து. நான் அவ‌ர்க‌ள் மீதான‌ என் த‌ண்ட‌னையை மாற்ற‌ மாட்டேன். பொய் தெய்வ‌ங்க‌ளை வ‌ழிப‌டும் அவ‌ர்க‌ளை நெருப்பால் சுட்டெரிப்பேன்” என‌ யூதாவுக்கு எதிராய் அவ‌ருடைய‌ குர‌ல் ஒலித்த‌து.

இஸ்ர‌யேலின் மீதான‌ க‌ட‌வுளின் கோப‌ம் ம‌க்க‌ளுடைய‌ ம‌னிதாப‌மின்மையின் மீது ஆவேச‌மாய்ப் பாய்ந்த‌து. ஏழைக‌ளையும், வ‌றிய‌வ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் ஒரு பொருட்டாக‌வே ம‌திக்க‌வில்லை. க‌ட‌வுள் இத‌னால் க‌டும் கோப‌ம‌டைந்தார்.

‘ஏழைக‌ளை இர‌ண்டு கால‌ணிக‌ளுக்காக‌ விற்கிறீர்க‌ள், வ‌றிய‌வ‌ரின் த‌லைக‌ளை த‌ரையில் போட்டு மிதிக்கிறீர்க‌ள்’ என எச்சரித்தார்.  ம‌க்க‌ளுடைய‌ வாழ்க்கையின் த‌ர‌ம் அழிந்து விட்ட‌து. த‌காத‌ உற‌வுக‌ளும், ம‌து வெறியும் நாட்டில் நிர‌ம்பிவிட்ட‌து. இனிமேல் உங்க‌ளை அழிக்காம‌ல் இருக்க‌ முடியாது.

“வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுத்துவது போல, உங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன். விரைந்தோடுகிறவனும் தப்ப முடியாது. வலிமையுள்ளவனும் தன் வலிமையை இழந்து விடுவான். வீரனாலும் தன்னுயிரைக் காத்துக் கொள்ள முடியாது” எல்லோரையும் அழிப்பேன் என‌ க‌ட‌வுளின் கோப‌ம் வெளிப்ப‌ட்ட‌து.

ஆமோஸ் இறைவாக்கின‌ரின் வாயிலிருந்து உவ‌மைக‌ள் மிக‌ அழ‌காக‌ வெளிப்ப‌ட்டதை ப‌ல‌ வ‌ச‌ன‌ங்க‌ள் அழ‌காக‌ எடுத்துக் காட்டுகின்ற‌ன‌. “இரை அகப்படாமல் இருக்கும்போது காட்டில் சிங்கம் கர்ச்சிக்குமோ? ஒன்றையும் பிடிக்காமல் இருக்கையிலேயே குகையிலிருந்து இளஞ்சிங்கம் முழ‌க்கம் செய்யுமோ?  வேடன் தரையில் வலைவிரிக்காதிருக்கும்போதே பறவை கண்ணியில் சிக்கிக்கொள்வதுண்டோ” என்பது ஒரு சின்ன‌ உதார‌ண‌ம்.

இஸ்ர‌யேல் ம‌க்க‌ள் ம‌ன‌ம் திரும்பினால் க‌ட‌வுளின் ம‌ன்னிப்பு அவ‌ர்க‌ளுக்குக் கிடைக்கும் என மனம் திரும்புதலை ஆமோஸ் ஊக்குவித்தார். “நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள். அப்பொழுது நீங்கள் சொல்வதுபோல படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்”

ஆண்ட‌வ‌ரை விட்டு வில‌கினால் அது மிக‌வும் கொடுமையான‌து. ஆண்டவரின் நாளைப் பார்க்க விரும்பாதீர்கள். அது ஒளிமிக்க நாளன்று. இருள் சூழந்த நாள். அந்த நாள், சிங்கத்திடமிருந்து தப்பி ஓடிய ஒருவனைக் கரடி ஒன்று எதிர்கொண்டாற்போலும், அவன் தப்பியோடி வீட்டிற்குள் நுழைந்து, சுவரில் கைவைத்துச் சாய்ந்த போது, பாம்பு ஒன்று கடித்தாற்போலும் இருக்கும்” என‌ ஆமோஸ் இறைவாக்கின‌ர் அழ‌காக‌த் தெரிவிக்கிறார்.

ஆமோஸ் இறைவாக்கின‌ர் வ‌ழியாக‌ க‌ட‌வுள் பேசிய‌வை எல்லாமே இஸ்ர‌யேல் ம‌க்க‌ளின் க‌டின‌ ம‌ன‌த்தைப் ப‌ற்றிய‌தாக‌வே இருந்த‌து. ஏழைக‌ளை வாட்டி வ‌தைத்து, அடிமைக‌ளைக் கொடுமைப்ப‌டுத்தி, நீதியைப் புதைத்து வாழ்ந்து வ‌ந்தார்கள் இஸ்ரயேலர்கள். ஆனால் ச‌ட‌ங்குக‌ள், விழாக்க‌ளை ம‌ட்டும் போலித்த‌ன‌மாய் கொண்டாடி வ‌ந்தார்க‌ள். க‌ட‌வுள் “உங்க‌ள் விழாக்க‌ளை வெறுக்கிறேன்” என்றார்.

விழாக்களைப் போலவே கில்கால், பெத்தேல் எனும் இடங்களில் பலி செலுத்தும் சடங்கையும் மக்கள் ஒரு அடையாளமாகச் செய்து வந்தனர். ‘மனம் மாறாமல் வெறும் பலி செலுத்த வருவது உங்கள் பாவங்களை அதிகப்படுத்தும்’என கடவுள் எச்சரிக்கிறார்.

நாற்ப‌து ஆண்டுக‌ள் பாலை நில‌த்தில் வ‌ழிந‌ட‌த்தி, எதிரிக‌ளை ஒழித்து இஸ்ர‌யேல‌ரைக் க‌ட‌வுள் பாதுகாத்து வ‌ந்தார். ஆனால் அவ‌ர்க‌ளோ, இறைவாக்கின‌ர்க‌ளுக்குச் செவி கொடுக்காத‌ ம‌க்க‌ளாக‌ இருந்து வ‌ந்த‌ன‌ர். இதையும் க‌ட‌வுள் க‌ண்டித்தார்.

நாங்க‌ள் க‌ட‌வுளின் பிள்ளைக‌ள். எங்க‌ளைக் க‌ட‌வுள் க‌ண்டிக்க‌மாட்டார் என்ப‌து இஸ்ர‌யேல‌ர்க‌ளின் ம‌ன‌நிலையாய் இருந்த‌து. ஆனால் க‌ட‌வுளோ, “உங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்துகோண்டேன்: ஆதலால், உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும் நான் உங்களைத் தண்டிப்பேன்.” என‌ மிக‌த் தெளிவாக‌ அவ‌ர்க‌ளைக் க‌ண்டித்தார்.

நீதி வெள்ள‌மென‌ப் பொங்கி வ‌ர‌ட்டும். நேர்மை வ‌ற்றாத‌ ஆறாக‌ பாய்ந்து வ‌ர‌ட்டும். இதுவே இறைப‌ணி என்கிறார் இறைவ‌ன்.

ஆமோஸ் இறைவாக்கின‌ரின் மூல‌மாக‌ நீதியும், நேர்மையும், ஏழைக‌ளுக்கு இர‌ங்கும் உள்ள‌மும் ஆன்மீக‌ வாழ்வின் அவ‌சிய‌த் தேவைக‌ள் என்கிறார் க‌ட‌வுள்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s