கிறிஸ்துவுக்கு முந்தைய காலகட்டத்தில் கடவுள் பல இறைவாக்கினர்களை தமது மக்களிடம் இறைவாக்கு உரைக்க அனுப்பி வைத்தார். அவர்களில் ஓசியா, யோவேல், ஆமோஸ், ஓபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா மற்றும் மல்கியா ஆகிய பன்னிரண்டு பேர் சின்ன இறைவாக்கினர்கள் எனப்படுகின்றனர்.
பழைய ஏற்பாட்டிலேயே மிகவும் சிறிய நூல் ஒபதியா இறைவாக்கினரின் இறைவாக்கு நூல் தான். ஒபதியா எனும் எபிரேய வார்த்தைக்கு கடவுளின் ஊழியர் என்று பொருள்.
ஒபதியா மூலமாக கடவுள் கொடுக்கும் இறைவாக்கு ஏதோமியர்களுக்கு எதிரான இறைவாக்கு. கி.மு 586ல் எருசலேம் நகர் வீழ்ச்சியடைந்தது. அதைக் கண்டு ஏதோமியர்கள் அக்களித்தார்கள். வீழ்ந்த நாட்டுக்குள் அத்து மீறி நுழைந்து அங்குள்ள செல்வங்களையெல்லாம் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றார்கள். பிற நாடுகள் யூதாவுக்குள் நுழைவதற்கும் ஏதோமியர்கள் காரணமாய் இருந்தார்கள்.
தனது மக்களுக்கு எதிராக ஏதோமியர்கள் இருந்ததைக் கண்டு கடவுள் கோபமடைந்தார். விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமின் மகன் ஈசாக். அவருக்கு இரண்டு பிள்ளைகள் யாக்கோபு மற்றும் ஏசா. ஏசாவின் வழிவந்தவர்களே ஏதோமியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு யாக்கோபின் பரம்பரையினருக்கும் எப்போதுமே சண்டை நடப்பது இயல்பு.
அதே போல ஆபிரகாமின் உறவினரான லோத்து, மயங்கிக் கிடக்கையில் அவருடைய இளைய மகள் உறவு கொண்டதன் மூலம் பிறந்த பரம்பரையினர் அம்மோனியர்கள். மூத்த மகள் கொண்ட உறவின் மூலம் பிறந்தவர்கள் மோவாபியர்கள். இவர்களும் எப்போதும் இஸ்ரயேலருக்கு எதிராகவே செயல்பட்டனர்.
அரேபியாவுக்குச் செல்லும் வழியில் இருக்கும் ஏதோம் நாடு அந்த வழியாகச் செல்பவர்களிடம் வரி வசூலித்துச் செல்வச் செழிப்பைப் பெருக்கிக் கொண்டது. தாவீது மன்னனின் காலத்திலும், சாலமோன் மன்னனின் காலத்திலும் இஸ்ரவேல் தலைமையின் கீழ் ஏதோம் வந்தது. இருப்பினும் இஸ்ரவேலுக்கு எதிராய் செயல்படும் மனநிலையே எப்போதும் அவர்களிடம் இருந்தது.
கடவுள் இஸ்ரயேல் மக்களின் துயரங்களையும், வலிகளையும் கண்டு மனம் வருந்தினார். ஒபதியா இறைவாக்கினர் கடவுளின் வார்த்தையை மக்களுக்குத் தெரிவித்தார். உயர்ந்த செங்குத்தான பாறை மீது கட்டப்பட்டிருந்தது ஏதோமியரின் தலைநகரான சலா. எனவே “உயரத்திலே குடியிருப்பை அமைத்திருப்பவனே!” என ஒபதியா ஆரம்பித்தார்.
“என்னைத் தரை மட்டும் தாழ்த்தக் கூடியவன் யார்? என உள்ளத்தில் சொல்லிக் கொள்பவனே! உன் இதயத்தின் இறுமாப்பு உன்னை ஏமாற்றிவிட்டது. நீ கழுகைப் போல் உயர உயரப் பறந்தாலும், விண்மீன்கள் நடுவில் உன் கூட்டை அமைத்தாலும், அங்கிருந்தும் உன்னைக் கீழே விழச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்” ஒபதியாவின் வார்த்தைகள் ஏதோமியர்களின் கர்வத்துக்கு எதிராக வீரியத்துடன் வெளிவந்தன.
ஏதோமில் இருக்கும் ஞானிகளையும், ஏசாவின் மலைமேல் இருக்கும் அறிவாளிகளையும் அழிக்காமல் விடமாட்டேன். வலிமை மிக்க வீரர்களெல்லாம் திகிலடைந்து ஓடுவார்கள். என கடவுளின் வார்த்தைகள் ஏதோமுக்கு எதிராக எழுந்தன.
யூதாவுக்கும், இஸ்ரவேலுக்கும் எதிராக எதிரி நாடுகள் வந்தபோது ஏதோம் எதிரிநாடுகளோடு சேர்ந்து கொண்டது கடவுளின் கோபத்தை அதிகப்படுத்தியது.
ஏதோமின் மீது தனது கோபம் ஏன் என்பதையும் கடவுள் ஒபதியா மூலம் வெளிப்படுத்தினார்.
” நீ உன் சகோதரனுடைய நாளைக் கண்டு, அவனுடைய வேதனை நாளைக் கண்டு மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும். அவர்களின் அழிவு நாளில் களிப்படையாது இருந்திருக்க வேண்டும். அவர்களின் துன்ப நாளில் இறுமாப்படையாது இருந்திருக்க வேண்டும்: அவர்கள் துன்புற்ற நாளில், அவர்களுடைய வாயில்களுக்குள் நுழையாது இருந்திருக்க வேண்டும். அவர்களின் அழிவைக் குறித்து மகிழ்ச்சியடையாது இருந்திருக்க வேண்டும். அவர்களின் பொருள்களைக் கொள்ளையடிக்காது இருந்திருக்க வேண்டும்.” என அழிவுக்கான காரணங்களை ஒபதியா பட்டியலிட்டார்.
எதிரிகளை அழிப்பது மட்டுமல்லாது, தனது மக்கள் மீண்டும் வெற்றியடைவார்கள். அவர்கள் தங்களுடைய நாட்டையும், பெருமையையும் மீண்டெடுப்பார்கள் என்றும் ஒபதியா இறைவாக்குரைத்தார்.
“யாக்கோபின் குடும்பத்தார் தங்கள் உரிமைச் சொத்தைத் திரும்பப் பெறுவர். யாக்கோபின் குடும்பத்தார் நெருப்பாய் இருப்பர். யோசேப்பின் குடும்பத்தார் தீப்பிழம்பாய் இருப்பர். ஏசாவின் குடும்பத்தாரோ வைக்கோலாய் இருப்பர். அவர்கள் இவர்களைத் தீக்கிரையாக்கி முற்றிலும் அழித்து விடுவார்கள். ஏசாவின் குடும்பத்தாருள் எவருமே தப்பமாட்டார். ஆண்டவரே இதைக் கூறினார்.” என ஒபதியா தனது இறைவாக்கில் எடுத்துரைத்தார்.
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான ஏசாவும், யாக்கோபும் இரண்டு வேறு திசைகளில் பயணித்தார்கள். யாக்கோபின் வீழ்ச்சியில் ஏசா உதவ முன்வரவில்லை. தன் சகோதரனுடைய தேவையில் உதவாதவனைக் கடவுள் அழிப்பார் எனும் மிகப்பெரிய பாடத்தை ஒபதியா கற்றுத் தருகிறது.
இறைவனுக்கு ஏற்புடையவர்களாக நாம் வாழும்போது கடவுள் நம்மைத் தொடர்ந்து பாதுகாக்கிறார். நமது அழிவிலும் அவர் நம்மைக் கைவிடுவதில்லை. கடவுளின் பிள்ளைகள் அழிவுக்குள்ளாகும் போது அதை எட்ட நின்று வேடிக்கை பார்ப்பதும், அவர்களுடைய அழிவில் அக்களிப்பது மிகப்பெரிய பாவம் என்பதையும் ஒபதியா நூல் நமக்கு விளக்குகிறது.
ஃ