அசீரியர்கள் இஸ்ரயேல் மக்களின் பரம எதிரிகளாக இருந்தார்கள். அசீரியர்களின் தலைநகரம் நினிவே. அது மிகவும் செல்வச் செழிப்போடு இருந்தது. பல மைல் சுற்றளவுள்ள பெரும் சுவர்கள் அந்த நகரைச் சூழ்ந்திருந்ததாகவும்,நகருக்குத் தண்ணீர் கொண்டு வர கால்வாய் இருந்ததாகவும், அரண்மனைகள் மற்றும் நூலகங்கள் இருந்ததாகவும் அகழ்வாராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டின் அழிவைப் பற்றிக் கூறுவதே இறைவாக்கினர் நாகூம் நூலின் சாரம்சம். நாகூம் என்றால் ஆறுதலளிப்பவர் என்று பொருள்.
கிமு ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் நினிவே அழிவுற்றது. தனது மக்களைக் கொடுமைப்படுத்தும் எந்த நாட்டையும் கடவுள் விட்டு வைப்பதில்லை என்பதை நாகூம் விளக்குகிறார். யூதாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள எல்கோஸ் எனும் இடத்தைச் சேர்ந்த அவருக்கு காட்சியாக இறைவார்த்தை கொடுக்கப்பட்டது.
கடவுள் சர்வ வல்லமை படைத்தவர். “சுழற்காற்றிலும் புயற்காற்றிலும் அமைந்துள்ளது அவர் வழி ! மேகங்கள் அவர்தம் காலடியில் எழுகின்ற புழுதிப்படலம் ! அவர் கடலை அதட்டி வற்றச் செய்கின்றார் ! அவர் முன்னிலையில் மலைகள் அதிர்கின்றன ! குன்றுகள் கரைகின்றன ! அவர் கோபம் தீயாய் கொட்டுகிறது ! பாறைகள் தவிடு பொடியாகின்றன !” என கடவுளின் மாட்சியைப் பற்றி கண்ட காட்சியை விளக்குகிறார்.
எதிரியின் நாடு அழிந்து விட்டது, எனவே ஆனந்தப்படு ! இனிமேல் தீயவன் எழமாட்டான். அவன் புதைக்கப்பட்டான் என்கிறார் கடவுள்.
” நைல் நதியின் கரையருகில் நீரால் சூழப்பட்ட, கடலை அரணாகவும் தண்ணீரை மதிலாகவும் கொண்ட தீப்சு நகரைவிட நீ சிறப்புற்று இருந்தாயோ?” என நினிவேயைப் பேசி ‘நினிவே பாழாய்ப் போனது; அவளுக்காகப் புலம்புவோர் யாரேனும் உண்டோ? ” என நாகூம் கேட்கிறார். தீயவனின் அழிவுக்கு ஆனந்தப்படுபவர்கள் தான் உண்டே தவிர, அதற்காய் அழுது புலம்புபவர்கள் இல்லை.
“உன் காயத்துக்கு மருந்தில்லை, உன் புண் குணமாகாது; உன்னைப்பற்றிய செய்தி கேட்கும் யாவரும் கைகொட்டுவர்; ஏனெனில், உன் இடைவிடாத கொடுமையால் துன்புறாதவர் ஒருவரும் இல்லை”
“உன் தேர்களைச் சுட்டுச் சாம்பலாக்குவேன்; உன் இளம் சிங்கங்கள் வாளுக்கு இரையாகும்; நாட்டில் உனக்கு இரை இல்லாதபடி செய்வேன்” என நாகூம் இறைவாக்கினர் கர்ஜித்தார்.
நினிவே நகரம் வலிமையின் உச்சமாய், செழிப்பின் உச்சமாய், கம்பீரத்தின் உச்சமாய் இருந்தது. ஆனால் அது கடவுளின் மக்களுக்கு எதிராய்ச் செயல்பட்டது. எனவே சிங்கத்தைப் போல பிடரி சிலிர்த்த தேசம் மண்ணோடு மண்ணாகிப் போனது.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தான் இந்த நினிவே நகரம் பாவத்தில் விழுந்து தத்தளித்தது. கடவுள் நாட்டை அழிக்க வேண்டுமென முடிவெடுத்து யோனாவை அனுப்பினார். யோனாவின் மூலமாய் வெளிப்பட்ட கடவுளின் வார்த்தைகளுக்கு நினிவே நகர மக்கள் செவி சாய்த்தார்கள். தங்களுடைய தவறை உணர்ந்தார்கள். பாவ வழிகளை விட்டு வெளியே வந்தார்கள். எனவே கடவுள் அவர்களைத் தண்டிக்கவில்லை. மனம் திரும்பிய மக்களுக்கு இரக்கம் காட்டினார்.
ஆனால் இப்போது நிலமை மீண்டும் தலைகீழ். இப்போது அழிவு ஒன்றே நினிவேயின் மீதான கடவுளின் தீர்ப்பாகிப் போனது. நாகூம் இறைவாக்கினரின் நூல் வெறும் எச்சரிக்கையின் நூல் அல்ல. அது கடவுளின் தீராத் துயரத்தின் எரிமலை வெளிப்பாடு.
நினிவேயின் அழிவு பாவத்தின் மீதான கடவுளின் சமரசமற்ற தன்மையைக் காட்டுகிறது. நினிவேயின் அழிவு யூதாவின் மகிழ்ச்சியாய் மாறியது.நாகூம் இறைவாக்கு உரைத்த இருபது ஆண்டுகளுக்குள்ளேயே மாபெரும் நகரமான நினிவே அழிக்கப்பட்டது. அழிவில் என்னென்ன நேரும் என கடவுள் நாகூம் மூலமாகச் சொல்லியிருந்தவை அனைத்தும் நிறைவேறின.
இயேசுவின் நற்செய்திப் பணியைக் குறிப்பிடுவதாக அமைந்த “நற்செய்தி அறிவிப்பவனின் கால்கள் மலைகளின்மேல் தென்படுகின்றன” எனும் வசனங்கள் குறிப்பிடத் தக்கவை.
நாகூம் இறைவாக்கினரின் நூல் நமக்கு பல்வேறு படிப்பினைகளைக் கற்றுத் தருகிறது.
- இறைவன் அன்பு வடிவானவர். அவர் மனம் திரும்புபவர்களை மார்போடணைக்கும் தாயைப் போன்றவர். ஆனால் பாவத்தில் மூழ்கிக் கிடப்பவர்கள் மனம் திருந்த மறுத்தால் அழிக்கவும் தயங்க மாட்டார்.
- இறைமக்களின் மீதான தாக்குதல் இறைவனுக்கு கோபத்தைக் கொண்டு வருகிறது. கடவுளின் மக்களாக இருப்பதில் ஒரு ஒப்பற்ற பாதுகாப்பு உணர்வு உண்டு.
- இறைவன் மீதான நம்பிக்கையும், இறைவனுக்குக் கீழ்ப்படியும் மனமும் நாம் ஒவ்வொருவரும் பெற்றிருக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
- கடவுள் கோபம் கொள்வதில் பொறுமையாய் இருப்பவர். அலட்சியமாய் அந்தப் பொறுமையை எடுத்துக்கொள்பவர்கள் அழிவார்கள்.
- ஒரு முறை கடவுளின் அன்புக்குள் வந்தவர்கள் தொடர்ந்து அதைக் காத்துக் கொள்ள வேண்டும். மீட்பின் அனுபவத்தைப் பெற்றுவிட்டோம் எனும் நினைப்புடன் ஓய்ந்துவிட்டால் பாவம் நம்மை மூழ்கடித்துவிடும்.
இந்த பாடங்களைக் கற்றுக் கொள்வோம். இறைவனின் அன்பைப் பெற்றுக் கொள்வோம்.