“அத்திமரம் துளிர்த்து அரும்பாமல் போயினும்,
திராட்சைக் கொடிகள் கனி தராவிடினும்,
ஒலிவ மரங்கள் பயன் அற்றுப் போயினும்,
வயல்களில் தானியம் விளையாவிடினும்,
கிடையில் ஆடுகள் யாவும் அழிந்து போயினும்,
தொழுவங்களில் மாடுகள் இல்லாது போயினும்,
நான் ஆண்டவரில் களிகூர்வேன்;
என் மீட்பரான கடவுளில் மகிழ்ச்சியுறுவேன்.”
எனும் மிகப் பிரபலமான நம்பிக்கையின் பாடலைப் பாடியவர் அபக்கூக்கு.
அபக்கூக்கு என்றும் ஆபகூக் என்றும் அழைக்கப்படும் இந்த இறைவாக்கினர், கிமு ஏழாம் நூற்றாண்டுகளின் இறுதியில் வாழ்ந்தவர்.
நாட்டில் பாபிலோனியர்களின் படையெடுப்பு ! கடவுளின் மக்களுக்கு சவால் விடுக்கும் பாபிலோனிய அச்சுறுத்தல். அவர்களுடைய கொள்ளையினால் நாட்டின் வளங்களெல்லாம் மறைந்து போகின்றன. அவர்களுடைய கொடுமையினால் நிம்மதியெல்லாம் கரைந்து போகின்றன.
“கடவுளே, பொல்லாதவர்களெல்லாம் நல்லவர்களை அழிக்கிறார்களே. ஏன் பேசாமல் மௌனமாய் இருக்கிறீர் ?” என கேட்கிறார் இறைவாக்கினர். அதற்கு கடவுள் “நேர்மையுடையோர் நம்பிக்கையில் நிலைத்திருக்கட்டும், தண்டனை குறித்த காலத்தில் நிகழும்” என பதில் கொடுக்கிறார்.
இறைவனின் பிரம்மாண்டத்தையும், அவரது வியத்தகு ஆற்றலையும் பேசும் அபக்கூக்கு, நேர்மையாளன் ஏன் துன்புறுகிறான் எனும் வினாவையும் கடவுளிடம் தைரியமாய் வைக்கிறார்.
“ஆண்டவரே, உம் செயலைக் கண்டு அச்சமடைகிறேன், உமது மாட்சி விண்ணுலகை மூடியிருக்கின்றது; உமது புகழால் மண்ணுலகம் நிறைந்திருக்கின்றது. உமது பேரொலி கதிரவன் ஒளிபோல் இருக்கின்றது. நீர் நின்றால், நிலம் அதிர்கின்றது, நீர் நோக்கினால் வேற்றினத்தார் நடுங்குகின்றனர்; தொன்றுதொட்டு இருக்கும் மலைகள் பிளவுண்டு போகின்றன” என கடவுளின் இருப்பையும், அவரது மகிமையையும் விளக்குகின்றார் அபகூக்கு.
அவருக்கு நேர்மையாளர்கள் துன்புறுவது வருத்தத்தைக் கொடுக்கிறது. அவர் தனது துயரத்தை
“ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்பவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன; வழக்கும் வாதும் எழும்புகின்றன. நீதி ஒருபோதும் வெளிப்படுவதில்லை. கொடியோர் நேர்மையுள்ளோரை வளைத்துக் கொள்கின்றனர். ஆகவே நீதி தடம்புரண்டு காணப்படுகின்றது.” என கண்ணீரோடு பதிவு செய்கிறார்.
அவரது குரலைக் கேட்கும் கடவுள் அவருக்கு உடனடியாகப் பதில் கொடுக்கிறார்.
“நான் கல்தேயரை அனுப்புவேன். அவர்கள் கொடுமையானவர்கள். அச்சத்தையும் திகிலையும் உருவாக்குபவர்கள். அவர்களுடைய குதிரைகள் வேங்கையை விட வேகமாய்ப் பாய்பவை. மாலை நேர ஓநாய்களை விடக் கொடியவை. இரைமேல் பாயும் கழுகென அவர்கள் படைகள் வருகின்றன.” என்றார்.
அபகூக்கு மறுமொழியாக, ” ஆண்டவரே, தொன்று தொட்டே இருப்பவர் நீர். தீமையைக் காண நாணுகின்ற கண்கள் உம்முடையவை. கொடுமையைப் பார்க்கத் தாங்காதவர் நீர். பொல்லாதவர்கள் நேர்மையாளரை விழுங்குகையில் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமோ?” என்றார்.
கடவுள் அவரிடம், ” காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த காலத்தில் நிறைவேறுவதற்கான காட்சி உண்டு. அது தாமதமாய் வருவது போல தோன்றும். ஆனால் நடந்தே தீரும். நம்பாதவர்கள் உள்ளத்தில் நேர்மையற்றவர்கள். நேர்மையுடையவரோ, நம்பிக்கையினால் வாழ்வடைவார்கள்” என்றார்.
அபகூக் மூலமாக இறைவன் பேசிய வார்த்தைகள் காலங்கள் கடந்து வாழ்பவை. நேர்மையின் மீதான கடவுளின் தாகமும், மக்கள் எளிமையாக அன்பாக வாழவேண்டும் எனும் அவருடைய ஆதங்கமும் அவருடைய குரலில் எதிரொலிக்கிறது.
“செல்வம் ஏமாற்றிவிடும். பேராசை பாதாளத்தைப் போல பரந்து விரிந்தது. சாவைப் போல அவைகளும் நிறைவடைவதில்லை. பிறருடைய பொருட்களைக் கவர்ந்து கொள்பவர்களுக்கு அழிவு நிச்சயம். தன் குடும்பத்துக்கு தீய வழியில் பணம் சேர்ப்பவனுக்கு அழிவு நிச்சயம். குடும்பத்துக்கே அழிவைக் கொண்டுவருகிறான் அவன். வன்முறையால் நகரைக் கட்டியெழுப்புபவர்கள் அழிவார்கள்”
என கடவுள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் தன்னலம் வெறுத்து சகமனித கரிசனை கொண்டிருக்க வேண்டும் என்பதைப் போதிக்கிறது.
“சிற்பி செதுக்கிய சிலையாலும், வார்ப்படத்தில் வடித்தெடுத்த படிமத்தாலும் பயன் என்ன? அவை பொய்களின் பிறப்பிடமே!பொன் வெள்ளியால் பொதியப்பட்டிருப்பினும் உள்ளே சிறிதளவும் உயிரில்லையே!” என சிலை வழிபாட்டையும் கடவுள் அபகூக்கு மூலம் எதிர்க்கிறார்.
சிறிய இறைவாக்கினர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் அபகூக்கின் வார்த்தைகள் மிகப்பெரிய போதனையை மனுக்குலத்துக்கு எடுத்துச் சொல்கின்றன.
- பேராசை கொள்வது கடவுளுக்கு எதிரான செயல்
- ஆணவம் கொள்பவர்களை கடவுள் எதிர்க்கிறார்.
- படைத்தவரை விட்டு விட்டு படைப்புகளை வழிபடுவது தவறானது.
- தீயோருக்கான அழிவு தாமதமானாலும், வந்தே தீரும்.
- குடும்பத்துக்காக செய்கிறேன் என தீமை செய்பவர்கள் குடும்பத்தையே அழிக்கிறார்கள்.
எனும் சில முக்கிய பாடங்களை இவருடைய நூலில் இருந்து கற்றுக் கொள்வோம்.
தண்ணீரால் கடல் நிரம்பியிருப்பது போல ஆண்டவரின் மாட்சியைப் பற்றிய அறிவால் மண்ணுலகு நிறைந்திருக்கும் எனும் இறை வார்த்தையில் நம்பிக்கை வைப்போம்.