செக்கரியா எனும் பெயருக்கு “கடவுள் நினைவுகூர்ந்தார்” என்பது பொருள். பாபிலோனியர்களின் அடிமைத்தளையின் காலத்தில் வளர்ந்தவர் செக்கரியா. கி.மு 538ல் யூத மக்களுக்கு சைரஸ் மன்னன் விடுதலையளித்தான், அப்போது பாபிலோனை விட்டு வெளியேறிய முதல் கூட்டத்தினரில் செக்கரியா இறைவாக்கினரும் இருந்தார்.
கடவுளின் ஆலயம் கட்டும் பணியை ஊக்குவித்தார். ஆனால் அந்த பணி பத்து ஆண்டுகள் தடைபட்டுக் கிடந்தது. கோவில் குறித்த அக்கறையின்மை மக்களிடையே நிரம்பியிருந்த காலகட்டத்தில் இவருக்கு கடவுளின் எட்டு காட்சிகள் அருளப்பட்டன.
முதல் காட்சியில், “சிவப்புக் குதிரையில் ஒருவர் வருவதைக் கண்டார் செக்கரியா. சிவப்பும் மங்கிய நிறமும் உடைய குதிரைகள் பின்னால் நின்றன.”
குதிரைகள் தேவதூதரிடம், “உலகமெங்கும் அமைதி நிலவுகிறது ” என்றன.
தூதன் , “கடவுளே. இஸ்ரேல் யூதா மீது எழுபது ஆண்டுகள் காட்டிய கோபம் போதும், எப்போது இவைகளை ஆறுதல் படுத்துவீர்” என்று கேட்டார்.
“எருசலேமுக்குத் திரும்பி வருவேன். ஆறுதல் படுத்துவேன்.” பதிலளித்தார் கடவுள்.
கடவுளின் ஆலயம் கட்டி முடிக்கப்படும், யூதா ஆசீர்வதிக்கப்படும் எனும் உத்தரவாதங்கள் இந்தக் காட்சியின் மூலம் விளக்கப்பட்டன.
இரண்டாவது காட்சியில் செக்கரியா நான்கு கொம்புகளைக் கண்டார்.
“இவை இஸ்ரயேல், யூதா மக்களை அன்னிய நாடுகளுக்குத் துரத்திய கொம்புகள்” என்றார் தூதன்.
அப்போது அங்கே நான்கு தொழிலாளர்கள் வந்தார்கள். “இவர்கள் யார் ?” என்றார் செக்கரியா. “இவர்கள் இந்த கொம்புகளை வெளியேற்ற வந்திருக்கிறார்கள்” என்றார் தூதர்.
எதிரிகளைக் கடவுள் தனது எல்லையிலிருந்து துரத்திவிடுவார் என்று அந்த காட்சி விளக்கியது.
மூன்றாவது காட்சியில் ஒரு மனிதர் அளவு நூலைக் கையில் பிடித்துக் கொண்டு நின்றார்.
“எருசலேமின் அளந்து நீள அகலம் எல்லாம் பார்க்கப் போகிறேன்” என்றார் அந்த மனிதர்.
“எருசலேம் அளக்க முடியாத வகையில் பெரிதாக உள்ளது. அது சுவர்களில்லாத நகரம். கர்த்தர் நெருப்புச் சுவராக நின்று அதைக் காப்பார்” என்றார் தூதன்
எருசலேம் என்பது நாடுகளைக் கடந்து இறைமக்கள் வாழும் கூட்டமாகும் எனும் புதிய ஏற்பாட்டு உண்மையின் தீர்க்கத்தரிசனமாய் அது இருக்கிறது.
நான்காவது காட்சியில் இஸ்ரவேலின் பழைய தலைவரான யோசுவா அழுக்கு ஆடையுடன் நிற்பதைப் பார்த்தார் செக்கரியா. அருகில் சாத்தான்.
“சாத்தானே கர்த்தன் உன்னை தொடர்ந்து குற்றம் சாட்டுவார். எருசலேமையோ ஆசீர்வதிப்பார்” யோசுவா சொன்னார்.
“யோசுவாவின் ஆடைகளை மாற்றுங்கள்.” என்றார் தூதன். அப்படியே செய்தனர்.
“உன்னுடைய குற்றங்கள் நீங்கிவிட்டன, உனக்கு புதிய ஆடை தந்திருக்கிறேன்” என்றார் தூதன்.
“நீ என் வழிகளில் நடந்து, என் திருமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகினால், நீ என் இல்லத்தை ஆள்வாய்” என்ற கடவுளின் வார்த்தையையும் யோசுவாவிடம் சொன்னார் தூதன்.
சாத்தான் இறை பணிகளை எதிர்ப்பதையும், யோசுவாவின் குற்றங்கள் நீக்கப்பட்டதையும் இந்தக் காட்சி விளக்கியது.
ஐந்தாவது காட்சியில் பொன்னாலான ஒரு விளக்குத் தண்டைப் பார்த்தார் செக்கரியா. அதன் மேல் ஏழு விளக்குகள் இருந்தன. உச்சியிலிருந்த அகலில் இருந்து தனித் தனி குழாய்களில் எண்ணை விளக்குகளுக்குப் போய்க்கொண்டிருந்தன. அகலின் இருபுறமும் இரண்டு ஒலிவமரங்கள் இருக்கின்றன. இந்த மரங்கள் அகல் விளக்குகளுக்கு வேண்டிய எண்ணெயைக் கொடுக்கின்றன” இதுவே அவர் கண்ட காட்சி.
“உனது ஆற்றலாலும் அல்ல, வலிமையாலும் அல்ல. எனது ஆவியாலே ஆகும். அந்த அகல்கள் ஏழும் நிலவுலகெங்கும் சுற்றிப் பார்க்கும் ஆண்டவரின் கண்கள்.” என்றார் கடவுள்.
ஆலயம் கட்டும் பணிக்கு எதிராக நின்ற மலைபோன்ற தடைகள் தகர்க்கப்படும் என்றும், அவருடைய ஆற்றலினால் எல்லாம் நிறைவேறும் என்றும் அந்த காட்சி விளக்கியது.
ஆறாவது காட்சியில் இருபது முழம் நீளம், பத்து முழம் அகலமான பறக்கும் ஏட்டுச் சுருளைக் கண்டார். அது மண்ணுலகிலுள்ள தீயவர் மீதான சாபம் என்றார் கடவுள்.
ஏழாவது காட்சியில் ஒரு மரக்காலும், அதனுள் ஒரு பெண்ணும் இருக்கும் காட்சி காண்பிக்கப்பட்டது. பின் சிறகுகள் கொண்ட இரண்டு பெண்கள் வந்து அதைத் தூக்கிக் கொண்டு போனார்கள். தீமையின் அழிவை அது காட்டியது.
எட்டாவது காட்சியில் கடவுளின் தேர்களும், குதிரைகளும் மக்களைப் பாதுகாக்கும் காட்சி விளக்கப்பட்டது. இந்தக் காட்சிகளின் மூலம் கடவுளின் செய்திகளை செக்கரியா மக்களுக்கு விளக்கினார்.
“உன் அரசர் உன்னிடம் வருகிறார். அவர் நீதியுள்ளவர். வெற்றிவேந்தர். எளிமையுள்ளவர். கழுதையின்மேல், கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறி வருகிறவர்” என்றும் “தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்று நோக்குவர்” என்றும் இவர் இயேசுவைக் குறித்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உரைத்த தீர்க்கத்தரிசனங்கள் இவருடைய இறைவாக்குகளின் வலிமையை உரைக்கின்றன.
அனைத்தையும் இறைவனில் அர்ப்பணித்து விட்டால் நம்மை அவர் வியத்தகு வகையில் பாதுகாப்பார் என்பதை செக்கரியாவின் இறைவார்த்தைகள் விளக்குகின்றன.